Skip to Content

6. ஏமாற்றம்

பலர் வாழ்வில் ஏமாற்றம் ஏற்படுவதுண்டு. வாழ்க்கையில் இதற்குப் பரிகாரம் கிடைப்பது குறைவு, மிகவும் அரிது எனலாம். அப்படிப்பட்ட ஒருவர் இன்று அன்னை பக்தரானால் அந்த ஏமாற்றத்திற்கு மாற்று உண்டு. பிறர் நம்மை ஏமாற்றியிருந்தாலும், சந்தர்ப்பம் நம்மை ஏமாற்றியிருந்தாலும், நாமே ஏதோ ஒரு காரணத்தால் ஏமாந்திருந்தாலும், அது நடந்ததற்கு ஒரு காரணம் நம்மிடம் அன்று இருந்திருக்கும். அக்காரணம் எத்தனை ஆண்டுகளானாலும் இன்றும் நம்மிடையே ஏதோ ஒரு ரூபத்திலிருக்கும். அதைக் காண முயன்று, கண்டுபிடித்த பின் உண்மையாக ஏற்றுக்கொண்டு, அதைக் களைந்துவிட்டால், அன்றைய ஏமாற்றத்தின் பலனை இன்று ஏற்படும் ஏற்றத்தால் மாற்றலாம்.

"என்னுடைய சொத்தை, என் சித்தப்பாவின் பேச்சை நம்பிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன். 20 வருஷங்களாக என் தியேட்டரை அவர் அனுபவிக் கின்றார். இன்று நான் இப்படி ஆபீஸ் குமாஸ்தாவாக இருக்கிறேன்'' என்பவர் அன்னையிடம் வந்தபின் அன்று எப்படி மோசம் போனோம் என்று ஆராய்ச்சி செய்தால், அவ்வாறு ஏமாந்து போனது உண்மையானாலும் தியேட்டர் நிர்வாகம் செய்ய தமக்குத் திறமையில்லாத தால், தாம் அப்படிச் செய்தார் என்பது விளங்கும். அத்துடன், இன்றும் தியேட்டரை தம் நிர்வாகத்தில் ஒப்படைத்தால், தம்மால் சரிவர நிர்வாகம் செய்ய

முடியாது என்று விளங்கும். அந்த இரு உண்மை களையும் மனம் ஏற்றுக்கொண்டு இன்றுவரை நடந்தவற்றை அன்னையிடம் சொன்னால், திடீரென்று புதிய நிலை ஏற்பட்டு, தியேட்டர் வருமானத்தில் தமக்கும் ஒரு பங்கு கிடைக்கும். திறமையில்லை என்பதை உணர்ந்து, அத்திறமையைப் பெற முழு முயற்சி செய்து வெற்றி பெற்றால், குடும்பத்தில் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்பட்டு தியேட்டர் தம் கைக்கு வரும். தமக்குத் திறமை வந்தது உண்மையானால், சிற்றப்பா தமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தது உண்மை யானால், அடுத்த ஈர் ஆண்டுகளில் மார்க்கெட்டில் புதிய சூழ்நிலை எற்பட்டு தியேட்டர் அமோகமாக சம்பாதித்து கடந்த 20 ஆண்டுகளில் இழந்த மொத்தத்தை அவருக்களிக்கும்.

எந்தவிதமான திறமையும் இல்லாத நல்லவர் ஒருவர் பொதுவாழ்வில் ஈடுபட்டு 20 ஆண்டுகள் கழித்து, தம் நண்பர்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும், தாம் எடுத்த முடிவு தமக்கு ஏமாற்றம் அளித்ததாகவும், மீண்டும் வாழ்க்கைக்குத் திரும்பினால் அடிமட்டத்திலிருந்து தொடங்க வேண்டும் என்றும் மனம் கசந்து போனார். அவர் அன்னையையும் ஏற்றுக் கொண்டவர் என்பதால் அவருடன் மேற்சொன்ன கருத்தை விவாதிக்கும்படி வந்தபொழுது அவரால் அதைக் கேட்டுக் கொள்ளவும் முடியவில்லை. ஓரிரு ஆண்டுகளுக்குப் பின்னால் இந்தக் கருத்தை நம்பும்படியான சில நிகழ்ச்சிகள் நடந்தன. அத்துடன் இவருடைய நிலையும் இவர் முயற்சியில்லாமல் மாறியது. தமக்குள்ள அறிவைப் பயன்படுத்த வந்த

சந்தர்ப்பம் ஒன்றை ஏற்றுக் கொண்டார். ஒரு வருஷம் முடிவதற்குள் திறமைசாலிகளுக்கு உதவி செய்யும் நிலையும், நிலையாக உயர்ந்த வருமானமும் ஏற்பட்டன. ஓராண்டு முடிவில் தாம் 2 ஆண்டுகளில் கிடைக்கக் கூடியதைச் சம்பாதித்ததைக் கண்டு, இவ்வளவு சம்பாதிக்க மனம் ஒப்பவில்லை என்று சொல்லத் தொடங்கினார்.

அன்னையின் சக்தி காலத்தைக் கடந்தது. அந்தச் சக்தியை நம் வாழ்வில் செயல்பட அனுமதிப்பது நம் எண்ணம், நோக்கம் ஆகியவை. எண்ணத்தை மாற்ற முயல்வது பெருமுயற்சி. நோக்கத்தை மாற்றுவது தவமுயற்சி. அம் முயற்சியை மேற்கொள்பவருடைய வாழ்வில் அன்னை சக்தி செயல்படும். காலத்தால் ஏற்பட்ட வடுவை மாற்றும், கடந்த காலத்தில் இழந்ததை இன்று பெற்றுக் கொடுக்கும்.

தம் குறையை உணர்ந்து அது இன்று இருக்கும் ரூபத்தை அறிந்து களைய முன்வருவதே இதன் ரகசியம். அதை மட்டும் செய்ய மனமில்லாமல், அன்னை செய்வார் என்று காத்திருக்கும் மனப்பான்மைக்கு முழுப் பலனிருக்காது. ஏதோ ஒரு சிறு பலன் இருக்கும்.

இதுபோன்ற மனமாற்றம் அடுத்த தலைமுறையில் தான் வரும். அரியபொருளாக அதே தலைமுறையிலும் வருவதுண்டு. 1960இல் சிறு கொள்முதலுடன் தொழிலும் ஆரம்பித்து, குறுக்கு வழியில் அதிகமாகச் சம்பாதித்தவர், இரண்டு ஆண்டுகளில் வருமானத்தை இழந்தார். சுமார் ஆறு தொழில்களை நாடினார். தொடர்ந்து தோல்வி, தொடக்க காலத்திலேயே அவருக்கு

நல்ல யோசனை சொல்ல ஒருவர் இருந்தார். "தொழில் என்றால் ஒரு பொருளை உற்பத்தி செய்ய வேண்டும். அது மக்களுக்குப் பயன்பட வேண்டும். அவர்கள் விரும்பி அதை வாங்க வேண்டும். பொருளின் தரத்தால் அது விற்பனையாக வேண்டும், அதனால் வருவதே இலாபம். இலாபத்தின் அளவு தொழில் நாம் காட்டும் சிரத்தையைப் பொருத்தது'' என்ற அறிவுரை அவருக்குக் கசப்பாக இருந்தது. ஆனால் ஒவ்வொருமுறை தோல்வியடையும் பொழுதும் மீண்டும் மீண்டும் நினைவு வந்தது. 18 ஆம் ஆண்டு தம் குறுக்கு வழிகளை எல்லாம் விட்டுவிட்டு, முறையாக ஒரு தொழிலுக்கு வர முடிவு செய்தார். எல்லா வகைகளிலும் சரியான முறைகளை மேற்கொண்டார். புதிய சரக்குச் சிறப்பானது. கடை கடையாக ஏறி இறங்கினார். எவரும் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. இரண்டு ஆண்டுகள் கடுமையாக வேலை செய்தார்.

குடும்பத்தில் எல்லா மகன்களுக்கும் புதிய சரக்கில் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. தகப்பனார் அகால மரணமடைந்தார். பிள்ளைகள் முயற்சியைத் தொடர்ந்தனர். வெற்றி கிட்டியது. சரக்கு ஒருகோடி வரை விற்றது. இன்று ஆறு கோடி விற்பனையாகிறது. அவரது சிறிய மனப்பான்மை அவரை ஏமாற்றியது. சிறிய மனப்பான்மையை விட்டொழித்தவுடன், பலன் கிடைக்கிறது. இது வாழ்வில் நடந்த நிகழ்ச்சி. அன்னை பக்தர்களுக்குப் பதினெட்டு ஆண்டுகள் ஆகா, அகால மரணம் வாராது, மனம் மாறினால் பலன் திரண்டு வரும். மனம் மாறுவதே முக்கியம்.

"சிறுவயதில் நான் பெற்றோரை இழந்தேன். மாற்றாந்தாயின் கொடுமைக்கு ஆளானேன். ஒரு பெரியவர் பேச்சைக் கேட்டுக் கணித பாடம் எடுத்ததால், பிற்காலத்தில் மெடிகல் காலேஜில் சேரும் வாய்ப்பை இழக்க நேரிட்டது. எம்.எல்.ஏ. ஆக நிற்பதா எம்.பி. ஆக நிற்பதா என்று யோசனை செய்து எம்.பி. ஆக நின்றேன். என் கட்சி மாநிலத்தில் வென்றது. நான் பார்மெண்டில் இருந்ததால், மந்திரி பதவி போயிற்று'' "ஆசிரியர் தொழில் வந்ததால் முன்னேற்றமில்லாமல் போய்விட்டது''. "தாய் மாமனைக் கட்டிக் கொண்டதால் கிராமவாசியாகிக் குட்டிச்சுவராகப் போய்விட்டேன்'' என்பன போன்ற ஏமாற்றங்கள் ஏராளம். நாமே ஏமாந்தாலும், சந்தர்ப்பத்தால் ஏமாந்தாலும், பிறரால் ஏமாற்றப்பட்டாலும், அன்றைய மனநிலையை இன்று பரிசோதனை செய்தால் ஏன் நாம் அதை ஏற்றுக் கொண்டோம் என்பது விளங்கும். அந்த மனநிலையை மாற்ற முன்வருபவர்களுக்கே முழுப் பலன் உண்டு.

இன்ஜினீயரிங் காலேஜில் செலவு அதிகம் என்று பி.ஏ. படிக்க முடிவு செய்தது நினைவு வரும். ஆரம்ப காலத்தில் அதிகம் செலவு செய்தால் பிற்காலத்தில் அதிகப் பலன் பெறலாம் என்பதை இன்றும் மனம் ஏற்காதது தெரியும். இன்றைய நிகழ்ச்சிகளிலும் அதே மனப்பான்மையிருப்பது தெரியவரும். இன்று மனதை மாற்றிக் கொண்டு பின்னால் வரும் பெரும்பலனுக்கு இன்று அதிக முயற்சி, அதிகச் செலவு செய்ய மனம் தயாரானால், நான் சொல்லும் பலனை அன்னை கொடுப்பார்கள்.

"எனக்கு ஒன்றுமே தெரியாது, சிறுவயது, யாரோ சொன்னதன் பேரில் இந்த வேலைக்கு வந்தேன். என் நண்பர்கள் அனைவரும் ஐயாயிரம், பத்தாயிரம் என்று சம்பாதிக்கின்றார்கள். நான் இந்த ஆபீசில் உழல்கிறேன்'' என்றால், "உன் நண்பர்கள் அன்று மேற்கொண்ட சிரமங்களை இன்று நீ மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றாயா?'' என்று கேட்டால், "நான் இன்றும் அதையோ, அது போன்ற புது முயற்சிகளையோ செய்யத் தயாராக இல்லை'' என்று உன் மனம் பதில் சொல்லும். ஒரு நண்பன் பம்பாய் போனான். நீ இன்றுகூட உன் ஊரை விட்டுக் கிளம்பமாட்டாய். மற்றொருவன் தனியார் கம்பெனியில் சேர்ந்தான். "நம்மால் அங்கெல்லாம் வேலை செய்ய முடியாது. இது சர்க்கார் உத்தியோகம்'' என்று நீ அன்று சொல்லிக் கொண்டது நினைவு வரும்.

இன்றும் அவர்களைப் போல் உன்னால் செயல்பட முடியாது என்பது உனக்கு விளங்கிய பின், மனத்தை மாற்றிக்கொண்டு "நானும் அதிக வருமானத்திற்கு ஆனவற்றைச் செய்ய இன்று முற்படுவேன்'' என்றால் நிலைமை வேறு. உன் மனத்துடன் நீ அதன் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொண்டால் அது பல்வேறு பதிலளிக்கும்.

  • எதுவும் தேவையில்லை சும்மா இரு, இருப்பது போதும்.
  • அவன் தவறாகச் சம்பாதிக்கின்றான், அது எனக்கு வேண்டாம்.
  • பணத்தை நாடுவது சரியில்லை.
  • அவன் இருக்கும் உத்தியோகத்தில் இன்றும் என்னால் பேர் வாங்க முடியாது.
  • நமக்கு இவ்வளவுதான்.
  • பிறரைப் பார்த்துப் பொறாமைப்படக்கூடாது போன்ற பதில்கள் உள்ளிருந்து வரும். அவை உனக்கு இதமாக இருக்கும். உன் மனம் நீ ஏற்றுக்கொள்வதைச் சொல்கிறதே தவிர, உண்மையைச் சொல்லவில்லை. உன் குறையை மாற்றி மனத்திற்கு இதமான சொற்களால் உன்னைத் திருப்திப் படுத்துகிறது. உனக்கு அதுவே திருப்தியானால் நல்லது.

அதற்குப் பதிலாக அன்று நம்மால் முடியாததை நண்பர்கள் செய்தார்கள். இன்று பலன் அடைந்தார்கள். நான் இன்றும் அன்று போலவே பயந்து பயந்து வாழ்கிறேன். என் திறமைக் குறைவை நான் என்னிடமிருந்தே மறைத்து அதை நல்ல இலட்சியமாக நினைக்கின்றேன். இது தவறு, என் குறையை நான் உணரவேண்டும். அதுவே உண்மை என்று மனம் ஏற்றுக்கொண்டால், அன்னை பக்தனுக்கு அதற்குரிய சிறிய பலன் வரும், அதுவும் நம் இன்றைய நிலைமைக்குப் பெரியதாகத் தெரியும். இதனால் ஏற்படும் மாற்றம் சுமார் இரு பங்கு வருமானமாக இருக்கும். வருமானம் தவிர மற்ற வசதிகள் ஏற்படும்.

அன்று மேற்கொள்ளாத முயற்சியை இன்று மேற்கொள்ள முன்வந்தால், நான் முதல் சொன்ன

பலன் கிடைக்கும். எவரும் நம்மைக் கட்டாயப்படுத்தப் போவதில்லை. வாழ்வில் இல்லாத ஒரு வாய்ப்பை அன்னை தம் பக்தர்களுக்கு அளிக்கின்றார், மனத்தை மாற்றிக்கொண்டு, உண்மையை உளமார ஏற்றுக் கொண்டு, அதற்குரிய முயற்சியை முழு முயற்சியாகச் செய்து முன்வருபவர்களுக்குக் காலம் எதிரியில்லை, வாழ்க்கை சதி செய்யாது, நண்பன் துரோகம் செய்ய முடியாது, எவருடைய பொறாமையும் பாதிக்காது, உற்றார் உறவினர் சரியில்லை என்றெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை.

உன் மனத்தில் உள்ள உண்மை, அதன் திண்மைக் குரிய பலனை எத்தனை ஆண்டுகளானாலும் சேர்த்துக் கொடுத்துவிடும். அம் மனநிலை அன்னை செயல்பட உகந்த மனித மனநிலையாகும்.

******book | by Dr. Radut