Skip to Content

4. வேலைக்குப் போகும் பெண்கள்

சமூகம் பெண்களுக்குப் படிப்பு அளிப்பதை ஏற்றுக் கொண்ட பின்னர், கூடவே பெண்கள் வேலைக்குப் போவதையும் ஏற்றுக்கொண்டது. இருநூறு ஆண்டுகட்கு முன் அமெரிக்காவில் நீக்ரோக்களை அடிமையாக வைத்திருந்ததை, சமூகம் தடை செய்ததைப் போன்ற மாற்றம் இது. இன்று வேலை செய்யும் பெண்களுக்குப் பொருளாதார விடுதலையும், அத்துடன் இணைந்துவரும் மற்ற சமூகச் சுதந்திரங்களும், பெண்ணுக்கு எதிர்காலம் உண்டு, சொந்தக் காலில் உரிமையுடன் வாழ முடியும் என்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி ஆசிரியரான கணவன் இறந்த பின் குழந்தைகளைப் பராமரிக்கச் சமையல் வேலையை மேற்கொண்டவரைப் போன்ற பெண்கள் நிறைந்த நம் சமூகத்தில் படிப்பும், வேலையும் பெற்ற பெண்கள் நிறைந்துள்ளது ஒரு புரட்சிகரமான மாறுதல்.

கடந்த 100 ஆண்டுகளில் உலகில் ஏற்பட்ட நல்ல மாறுதல்கள் அனந்தம். அவை போன்ற மாறுதல்கள் நம் நாட்டிற்குச் சமீப காலத்தில் வர ஆரம்பித்துள்ளன. அம்மாறுதல்களால் நாம் அடையும் பயன் ஏராளம். அவற்றுள் தலையாயதாகக் கருதக்கூடியவை படிப்பு, வேலைவாய்ப்பு ஆகிய இரண்டும்.

சுதந்திரம் பெற்றபின், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடுதலை கிடைத்தது. கிராமப் புறங்களில் செழிப் பேற்பட்டது. பெண்களுக்கு முன்னேற்றம் வந்தது.

வீட்டுவசதி அதிகமாயிற்று. தொழிலாளர்களுக்கு உரிமை ஏற்பட்டது. மக்கள் குரலுக்கு வலிமை வந்து அதனால் வளம் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

இவற்றுடன் வந்த விரும்பத்தகாதவையும் உண்டு. செழிப்பு வந்த நிலங்களின் தரம் குறைந்தது. நம் நாட்டுப் பண்பிற்குரிய கௌரவம், மரியாதை, விசுவாசம் ஆகியவற்றுக்கு ஆபத்து வந்தது. படிப்பின் தரம் அதிகமாகக் குறைந்தது. அடக்கம் குறைந்து ஆர்ப்பாட்டம் ஏற்பட்டு, குடும்பங்களின் அளவு குறைந்து குடும்ப உயர்வும் பல வகைகளில் குறையும் நிலை ஏற்பட்டது.

நாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டு விரும்பத்தக்க மாறுதல் வந்து அனைவரும் விரைந்து ஏற்றுக் கொள்ளும் பொழுது, விரும்பத் தகாதவை சேர்ந்திருப்பதும், சில சமயங்களில் மலிந்து போவது அதனால் சமூகத்திற்கே ஆபத்து வருமா என அனைவரும் பயப்படுவதும், ஒவ்வொரு பெரிய மாறுதல் ஏற்படும் பொழுதும் நிகழக்கூடியவையே.

பெண்கள் வேலைக்குப் போவதால் ஏற்பட்ட புதிய நிலைமையிலும், இந்த இரு அம்சங்களும் கலந்திருப்பது இயற்கை. நல்ல பயன்களை அதிகபட்சம் பெறவும், தவறான அம்சங்களால் குறைந்தபட்சம் பாதிக்கப் படுவதும் எப்படி என்பதை மட்டும் இக்கட்டுரையில் கூறுகிறேன். அத்துடன் அன்னை பக்தர்களாக இருப்பதால் இந்நிலையில் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய அருள் வெளிப்பாட்டின் நன்மையையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பெண்கள் வேலைக்குப் போவதால் ஏற்படும் முதல் நன்மை வருமானம். அடுத்தது சுதந்திரம், தெளிவு, தைரியம், தன்னம்பிக்கை, படித்து வேலைக்குப் போகும் பெண்ணுக்கும், படிக்காமல் வேலைக்குப் போக முடியாத நிலையிலுள்ள பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம், நகர்ப்புறத்திலுள்ள படித்த இளைஞனுக்கும் கிராமப் புறத்திலுள்ள படிக்காத இளைஞனுக்கும் உள்ள வித்தியாசத்திற்கு நிகரானது. வாழ்க்கைக்கு அத்தியாவசியமான தெளிவையும், திறமையையும் பெண்கள் வேலைக்குப் போவதால் பெறுகிறார்கள். பெண்கள் வேலைக்குப் போவதால் ஏற்படும் சிரமங்களில் முக்கியமானது பகல் முழுவதும் குழந்தையை விட்டுத் தாய் பிரிந்திருப்பது. சிறு வயதில் தாயாரை விட்டுக் குழந்தைகள் பிரிக்கப்பட்டால் பின்னர் அவர்கள் வாழ்க்கை தடம்மாறிப் போவதுண்டு. கல்லூரி முதல்வராக இருந்து ரிடையரான பெண்ணின் கணவன் பல்கலைக் கழகப் பேராசிரியர், குழந்தையை ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைத்தார். படிப்பு, பழக்கம் ஆகியவை சிறப்பாக அமைந்தன. குழந்தைக்குப் பாசம் என்பதே இல்லை. ஓர் அழகான பொம்மைபோல ஜீவனற்ற சடலமாகிவிட்டாள். எந்தக் குறையுமில்லை. ஆனால் முகத்தில் களையில்லை. மனதில் சந்தோஷமில்லை. மெஷினுக்குச் சாவி கொடுத்தால் இயங்குவது போலி ருந்தது அவள் நிலை. வலிமை குறைந்த குழந்தைகள் தாயைவிட்டுப் பிரிக்கப்பட்டால், ஜீவனிழந்து விடும்.

புருஷனும், மனைவியும் எம்.ஏ. பட்டம் பெற்று இருவரும் உத்தியோகத்தில் இருந்தார்கள். ஐந்து

குழந்தைகள். குழந்தைகளை வீட்டில் பாட்டி அன்புடன் பராமரித்து வந்தாலும் நாள் முழுவதும் தாயாரைப் பிரிந்திருப்பதில் குழந்தைகள் கலகலத்துவிட்டன. மாலை 5.30 மணிக்கு, தாயாரைக் கண்டவுடன் குழந்தைகள் அவரைச் சூழ்ந்து கொள்ளும். உள்ளே சென்று கைகால் அலம்பக்கூட விடமாட்டார்கள். குழந்தைகளை மீறி உள்ளே சென்றால் ஒரே ஓலம். 4 குழந்தைகள் ஓரளவு சமாளித்துக் கொண்டார்கள். ஒரு குழந்தை வீரியமானவன். தாயாரை விடமாட்டான். இடுப்பி லிருந்து இறங்கவே மாட்டான். தாயாரும், தகப்பனும் எம்.ஏ. படித்ததுடன் மனநூல் அதிகமாக அறிந்தவர்கள். குழந்தையின் நிலையை அவர்கள் அறிந்திருந்தாலும், வேலையை விட முடியுமா? பாட்டி பார்த்துக் கொண்டாலும், மாலையில் தாயார் வந்தவுடன் இந்த ஒரு குழந்தை செய்யும் ஆரவாரம், ஆர்ப்பாட்டம் மணிக்கணக்காக நீடிக்கும். அவன் வளர்ந்த பின்னும் பிரச்னை வேறு ரூபங்களில் வளர்ந்ததே தவிர, குறையவில்லை. எல்லாக் குழந்தைகளும் பெரிய பட்டங்களைப் பெற்றார்கள். இவன் மட்டும் பெற்றோரைப் பழிவாங்கத் தீர்மானித்ததுபோல் நடந்து கொண்டிருந்தான். புத்திசாலி, படிப்பு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் தகராறு. பி.எஸ்.ஸி முடித்தபின் பரீட்சைக்குப் போக மறுத்தான். கடைசிவரை போகவில்லை. அத்துடன் வீட்டிலும் இருப்பதில்லை. எல்லா வகைகளிலும் எந்தக் குறையுமில்லாத உயர் குடும்பத்தில் பிறந்த அவன் எல்லாக் கெட்ட பழக்கங்களுக்கும் தன்னை ஆளாக்கிக் கொள்வேன் என்று

பயமுறுத்தினான். என்ன நடந்தது என்று தெரியாது. இரண்டு டாக்டர், ஓர் எஞ்ஜினியர், கல்லூரி முதல்வர், தலைமை ஆசிரியர் ஆகியவர் நிறைந்த குடும்பத்தில் இவன் படிப்பும் இல்லாமல், தொழிலும் இல்லாமல், திருமணமும் செய்ய மறுத்து 6 ஆண்டுகள் பெற்றோர்க்குச் சிம்ம சொப்பனமாக இருந்து, கடைசியில் வியாபாரத்தை ஏற்று, திருமணமும் செய்து கொண்டான்.

லிமையற்ற குழந்தை தாயிடமிருந்து பிரிக்கப்பட்டால் ஜீவனற்று விடுகிறது. வீரியமான குழந்தை பகல் தாயை விட்டுப் பிரிந்திருந்தால் அந்த 4, 5 ஆண்டுகள் பிரிவால் போக்கிரியாகி விடுகிறது. பகல் தாயின் பிரிவு சிறு குழந்தையின் மனத்தைப் புண்படுத்தி அதன் எதிர்கால வாழ்க்கையைக் கடுமை நிறைந்ததாகச் செய்துவிடும். நமக்குப் பரிச்சயமுள்ள குடும்பங்களில் 15 வருடங்களாகப் பெண்கள் வேலைக்குப் போகும் குடும்பங்களிலுள்ள குழந்தைகளையும், மற்ற பிரச்னைகளையும் ஆராய்ந்தால் இந்த உண்மை விளங்கும். உலகம் முழுவதும் உள்ள பிரச்னை இது. அறிவால் பாதிக்கு மேல் சரிசெய்யலாம். முக்கால் வாசியும் சரிசெய்யலாம். அருளால் முழுவதையும் நேர்செய்யலாம்.

முதலில் குழந்தைகளுடைய பிரச்னையை, குழந்தைகள் உணருவதைப் போல் தெளிவாக உணர்ந்தவரே இக்குறையைப் போக்க முடியும். அறிவுக்குரிய முறைகள் அநேகம். அவற்றால் பிரச்னையின் கடுமை பேர் அளவு குறையும். அருளால் நீங்கும்பொழுது பிரச்னை துடைத்து எடுத்தது போல்

தற்காலிகமாக நீங்கும். அருளை அழைக்கும்தோறும் நீங்கும். அறிவால் செய்யக்கூடியவற்றை அஸ்திவார மாக்கி, அருளை நாடினால், பிரச்னை நிரந்தரமாக மறைந்துவிடும். குழந்தைகளுக்கே அருளை அழைக்கும் மனப்பான்மை வந்தாலும், அருளை அனுதினமும் நாடினாலும், பிரச்னையை ஏற்படுத்திய சந்தர்ப்பம், தன் உள்ளுறை உருவை மாற்றிக்கொண்டு, புதிய நல்லதைக் கொண்டுவரும் சூழ்நிலையாக மாறும்.

பகல் முழுவதும் குழந்தையைப் பிரிந்துள்ள தாயார், மாலை வீடு திரும்பியவுடன் குழந்தையை அதிகமாகக் கவனித்தால் இப்பிரச்னை விலகும். நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வரும் தாயாருக்கு, தம்மை மற்றவர் கவனித்தால் தேவலை என்றிருக்கும் பொழுது இது எப்படி முடியும்? அவளால் அதிகமாகக் கவனிப்பது முடியாது. தரத்தால் அதிகமாக கவனிக்க முடியும். (Make up by higher quality attention) இதை மனம் ஏற்றுக் கொண்டால், குழந்தையைக் கவனிக்கத் தொடங்கியவுடன் தம் சோர்வு குறைவதைத் தாயார் காணலாம். தரத்தை உயர்த்தும் வகை எது?

குழந்தை பிரிவால் வாடுகிறான். அதை ஈடுகட்ட வேண்டும் என்ற அபிமானம் ஏற்பட்டவுடன் தாயின் கவனிப்பு தரத்தில் உயர்ந்துவிடும். பலன் அதிகமாகத் தெரியும். தனக்கும் உற்சாகம் வரும். ஆபீஸிருக்கும் பொழுது குழந்தை நினைவு வரும் பொழுதெல்லாம் அன்னையிடம் முறையிட்டால், மாலை வந்தவுடன் அன்னையின் அன்பினைப் பெற்ற குழந்தை முகமலர்ச்சி யுடன் பிரச்னையின்றித் தாயை வரவேற்கும்.

அன்பர்கள் பல விஷயங்களில் நடக்காதது நடந்தது என்பதைக் காண்கிறார்கள். நடக்கவே முடியாதது நடந்தது என்பதையும் கண்டிருக்கிறார்கள். குழந்தையின் மனநிலையை அறிந்து, அதன் வாட்டத்தைப் போக்க வேண்டும் என்று அறிவு ஏற்றுக்கொண்டு, குழந்தை நினைவு வரும் பொழுதெல்லாம் அன்னையை நினைவு கூர்ந்தால், குழந்தையின் சூழ்நிலை மாறி, பிரச்னையாக வேண்டியவை, நல்ல வாய்ப்பாக மாறியதைக் காணலாம்.

அடுத்த தொந்தரவு கணவன் மனைவிக்குள் ஏற்படும் குழப்பம், சலசலப்பு, சலிப்பு, சந்தேகம், எரிச்சல், வாக்குவாதம் ஆகியவை. இரட்டிப்பு வருமானம் வந்து இரட்டிப்பு மனக்கஷ்டம் ஏற்பட்டு விட்டது என்ற நிலை ஏற்படுகிறது.

சமூகத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வது இன்னும் புதுமையானது என்பதாலும், சம்பாதிக்கும் பெண்ணுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் இருக்கிறது என்பதாலும், புதிய மனநிலைகளை ஏற்றுக்கொள்ள அனைவருக்கும் மன வமையிருப்பதில்லை என்பதாலும், வீட்டிலேயே இருந்த பெண்கள் நாள் முழுவதும் வெளியில் போய்வருவதால் பல பிரச்னைகள் ஏற்படுவது இயல்பு என்பதாலும், வீடு சுடுகாடாக மாறுவதுண்டு. சுடுகாடாக வீடு மாறாவிட்டால் சுமுகமான நந்தவனமாக இருக்க முடியாமற்போய் விடுகிறது.

அறிவாலும், செயலாலும், மனப்பக்குவத்தாலும் இதை மாற்றும் வழிகள் உண்டு. அருளால் செய்யக்

கூடியது அதிகம். இரண்டையும் செய்வதே நல்லது. தவறான பாதையை விரும்பி நாடுபவர்களை ஒதுக்கிவிட்டு, எந்தத் தவறும் இல்லாமல் வாழ்க்கை சீரழியக் கூடிய நிலையிருப்பவர்களுக்குப் பொருந்தும் யோசனைகள் சிலவற்றைச் சொல்கிறேன்.

முதலாவதாகக் குடும்பத்தைக் கட்டி வளர்த்து உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர முயலும் குடும்பங்களில் அவர்கள் திறனெல்லாம் அதற்கே செலவிடப்படுவதால், மேற் சொன்ன செயல்களுக்கு இடமில்லாமல் போய்விடும். இப்பொழுது வீட்டில் சண்டை குறைந்திருப்பதைக் கவனிக்கலாம். குழந்தை களின் படிப்பின் தரத்தை உயர்த்துவது, உயர்ந்த பழக்கங்களைக் கற்றுக் கொடுக்க முயல்வது, பிரமோஷனுக்காகப் படிப்பது, அடுத்து பட்டம் பெற முயல்வது, வீடு கட்டுவது, வருமானத்தை உயர்த்த வழி ஏற்பட்டால் அதைப் பின்பற்றுவது, வீட்டில் ஒரு தியான மையம் ஏற்படுத்துவது போன்றவை சண்டை சச்சரவு, சந்தேகங்களைக் குறைத்து நாளாவட்டத்தில் விலக்கிவிடும்.

நம் பழக்கங்களை உயர்த்த முற்பட்டாலும், எண்ணத்தின் நிலையை உயர்த்த முற்பட்டாலும், அருள் அதிகமாகச் செயல்படும் என்பதால் அவை முழுப் பலனளிக்கும். தன் மனநிலையையும், பழக்கத்தின் தரத்தையும் உயர்த்த முன்வரும் குடும்பங்களில் சந்தேகம், சச்சரவு அற்றுப் போவதுடன், சந்தோஷம் உற்பத்தியாவதை நிதர்சனமாகக் காணலாம்.

*******book | by Dr. Radut