Skip to Content

9. செல்வம்

வளமான வாழ்வுக்குத் தேவையானவை ஆரோக்கியம், கல்வி, செல்வம் ஆகியவை. அவற்றுள் செல்வம் மற்ற இரண்டையும் பெற்றுத் தரக் கூடியது. மேலும் வாழ்வில் செல்வத்தைப் பெற்றால், அதன் மூலம் எதையும் பெறலாம் என்ற நிலையுள்ளது. செல்வத்தை இரு வகைகளில் பெறலாம். தவறான முறையில் பெறும் செல்வம் வாழ்வைச் சீர்படுத்தாது. சீர் குலையச் செய்யும். நேர்மையான முறையில் பெறும் செல்வம் எதையும் பெற்றுத்தரும். அத்துடன் அருளையும் பெற்றுத் தரும்.

செல்வம் ஆன்மிகத்திற்கெதிரானது என்ற பரம்பரையான கருத்திற்கு எதிரான கருத்து இது. எல்லாச் சக்திகளையும் போல ஆதியில் செல்வம் இறைவனுடைய சக்தி. இன்று அசுரன் பிடியில் உள்ளது. அதை அசுரனிடமிருந்து மீட்டு அன்னையின் திருவடியில் வைப்பது நம் கடமை என்று பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

செல்வத்தைத் தவறாகப் பெற்றால்தான் பெருஞ் செல்வம் அடைய முடியும் என்ற பொதுவான கருத்து உண்மையன்று. தவறான முறையில் பெறும் செல்வம் அளவு கடந்து பெருகும் என்பது உண்மை. ஆனால் அது குறுகிய காலத்தில் அழிந்து போகும் என்ற உண்மையின் ஒரு பகுதியைச் சகடக்கால் போல் வரும் என்ற வழக்கு குறிக்கின்றது. இந்த அனுபவத்தை மட்டுமே

கண்டவர்கள் செல்வத்தைத் தவறாக நினைக் கின்றார்கள். 30 வருஷம் வாழ்ந்தவருமில்லை, 30 வருஷம் கெட்டவருமில்லை என்ற பழமொழியும் ஒருவகையில் இதே கருத்தை வலியுறுத்துகிறது. கடந்த இருநூறு ஆண்டுகளாகத் தொழில், வணிகம், கம்பெனிகள் பெருகி வருகின்றன. அவற்றுள் சிலர் மட்டுமே செல்வத்தை முறையாகச் சம்பாதித்தார்கள். அவர்கள் செல்வம் நூறு ஆண்டுகளாக நிலைத்துள்ளது, தொடர்ந்து பெருகியுள்ளது.

இக் கட்டுரையில் அன்னைக்கும் செல்வத்திற்கும் உள்ள தொடர்பை விளக்க முற்படுகிறேன். அத் தொடர்பு வாழ்வுக்குரிய நிலையிலும், யோகத்திற்குரிய நிலையிலும் அமைந்துள்ளது. வாழ்வுக்குரிய நிலையில் பல கட்டங்கள் உள்ளன. அரசியல் போன்ற பொது வாழ்வுக்குரிய நிலை ஒன்று. தொழிலுக்குரிய (industry) நிலை மற்றொன்று. நாட்டின் வளத்தை வளர்க்கும் வாழ்வு நிலை வேறொன்று. தேசிய பால் வளர்ச்சிக் கழகம் பொதுச் சேவையில் ஈடுபட்டு 700 கோடி மூலதனம் சேகரம் செய்துள்ளது. தொழிலில் ஈடுபட்ட அதிபர்களின் குடும்பவாழ்வு செல்வாக்குடன் உள்ள உயர்ந்த நிலையில் செல்வம் பெற்றது. இப்படி தொழிலால் பெருஞ்செல்வம் பெற்றவரும் உண்டு. இவையெல்லாம் போக சாதாரணமாகக் குடும்பம் நடத்தும் மக்களுடைய வாழ்வில் சிலருக்குச் செல்வம் பெருகுவதும் உண்டு. பெரும்பாலான மக்களின் குடும்ப வாழ்க்கைக்குப் பொருத்தமான கருத்துகளை மட்டும், அன்னையின் அருள் வழியில் விளக்க முற்படும் முயற்சி

இக்கட்டுரை. இதில் கண்டுள்ள அடிப்படை உண்மைகள் எல்லா நிலைகளிலுள்ளவர்களுக்கும் பொருந்தும் என்றாலும், அதை நான் விளக்க முயலவில்லை. குடும்ப வாழ்வில் நேர்மையாக அதிகச் செல்வ வளம் பெறுதல், அதன் மூலம் அன்னையின் அருளைப் பெறுதல், அருள் மூலம் செல்வத்தையும், செல்வத்தால் அருளையும் வளரச் செய்யும் முறைகளையே இங்கு எழுதுகிறேன்.

அன்னையை நெருங்கி வந்தால், அருள் பெருகிவரும். அருள் பெருகினால் அனைத்தும் பெருகும். அவற்றுள் பொருள் ஒன்று. இடையறாத நினைவு, ஆத்ம சமர்ப்பணம், தியானம், நம்பிக்கை, பக்தி, நேர்மை, உண்மை, சேவை, காணிக்கை, ஞானம், சுத்தம், மௌனம், ஒழுங்கு போன்ற எல்லா உயர்ந்த ஆன்மிக முறைகளும் நம்மை அன்னையின்பால் கொண்டு செல்லும். இவற்றுள் உயர்ந்தவற்றை உடனே பெற முடியாது. முயன்று, பயிற்சி மூலம், நாள் கடந்து பெற வேண்டும். சிலவற்றை நாம் பெற முடியாது என்றும் நினைப்போம். ஞானமும், மௌனமும் பிறப்பிலேயே இருக்க வேண்டும். இப்பொழுது நம்மால் எப்படிப் பெற முடியும் என்று மனம் சொல்லும். நேர்மையையும், உண்மையையும் நாளைக்கே பயில முடிவு செய்வது இயலாத காரியம். அதற்கு நாளாகும். உடனே பயிற்சியை மேற்கொள்ளக் கூடியதை, அனைவரும் ஆரம்பிக்கலாம். அதிக சுத்தம், குறைந்த சத்தம், ஒழுங்கு ஆகியவை நம்மால் முயற்சியால் பெறக் கூடியவை. அவற்றிற்கும் அன்னையின் அருளுக்கும், அதன் மூலம் பொருளுக்கும் உள்ள தொடர்பை மட்டும் விளக்குகின்றேன்.

சுத்தம்: பொதுவாகச் செல்வமுள்ள இடத்தில் சுத்தம் இருப்பதைக் காணலாம். சுத்தம் செல்வத்தைக் கொண்டுவரும் என்பது ஆன்மிக உண்மை. பொருள் களுக்கு ஜீவன் உண்டு. அவற்றை நாம் கவனிப்பதை அவை விரும்புகின்றன. சுத்தமாக இருப்பதை அவை போற்றுகின்றன. அழகாக அடுக்கி வைத்தால் அவை பெருமைப்படுகின்றன. அழகான கம்பளம். அதன் மீது அன்னை நடக்கும்போது அவரை நிறுத்தி நான் எப்படியிருக்கின்றேன் என்று கேட்கிறது. அதன் அழகை நாம் கவனித்தால் அது சந்தோஷப்படுகிறது. பொருள்களை அலங்கோலமாக வைத்திருந்தால் அவை அன்னையிடம் எங்களை எப்படி வைத்திருக்கின்றார்கள் பாருங்கள் என்று குறை சொல்கின்றன. சுத்தமாகவும், ஒழுங்காகவும் இருக்க அவை பிரியப்படுவதால், நாம் அவற்றைச் சுத்தம் செய்யும்பொழுது அவற்றைச் சார்ந்த மற்ற பொருள்கள் நம்மை நாடி வருகின்றன. அவற்றைப் பெறத் தேவையான பொருள் பணம் நம்மை நாடி வருகின்றன. இதுவே சுத்தத்தின் ஆன்மிக உண்மை. பொருள்களைத் தெய்வமாகக் கருதி அதன் தெய்விகத்தைப் போற்றும் வகையில் சுத்தமாகவும், ஒழுங்காகவும் அவற்றை வைத்தால், அவற்றுள் உள்ள தெய்விகம் வெளிப்பட்டு அருள் செயல்படுகிறது. அருளால் பொருள் பெருகுகின்றது.

சுத்தம் பல நிலைகளில் உள்ளது. சுமார் 5 நிலைகளிலும் சொல்லலாம். பத்து நிலைகளாகப்

பிரித்தும் சொல்லலாம். எத்தனை நிலைகளானாலும், சுத்தம் என்பதை உயர்த்த முடியும் என்பது தெரிகிறது.

  1. வீட்டைத் தினமும் பெருக்கிச் சுத்தம் செய்வது முதல் நிலைச் சுத்தமாகும்.
  2. மாதந்தோறும் வீட்டை ஒட்டடை அடித்து சுத்தம் செய்வது அடுத்தது.
  3. தரையைப் பெருக்குவது, ஒட்டடை அடிப்பதுபோல், மேஜை, நாற்காலி, அலமாரி, மற்ற பொருள்களை அடிக்கடி துடைத்துச் சுத்தம் செய்வது ஒரு நிலை.
  4. அலமாரிக்குப் பின்னால், அதன் அடியில், மேஜைக்குக் கீழ் துடைத்துச் சுத்தம் செய்வது அடுத்த கட்டம்.
  5. மாதம் ஒருமுறை செய்வதை வாரம் ஒருமுறை செய்வதும், வாரம் ஒரு முறை செய்வதை வாரம் இருமுறை செய்வதும் சுத்தத்தை உயர்த்துவது.
  6. சுவர்களில் அழுக்கில்லாமல் வெள்ளையடிப் பதும், பர்னிச்சர்களுக்கு வார்னிஷ் அடிப்பதும் அவற்றை அடிக்கடி மேற்கொள்வதும் அடுத்த நிலைச் சுத்தத்தை வரவழைக்கும்.
  7. மேஜை டிராயர், பெட்டிகள், அலமாரி இவற்றை மேல்புறம் சுத்தம் செய்வதுபோல் உள்ளே சுத்தம் செய்வது சிரமம். அவற்றை அடுத்த நிலையில் மேற்கொள்கிறோம். 
  8. பாத்திரங்களைச் சுத்தம் செய்வதிலும், துணிகளை வெளுப்பதிலும், காலதாமதமின்றி உடனே அவற்றை மேற்கொள்வது உயர்ந்த நிலைச் சுத்தம்.
  9. மேற்சொன்னவற்றிலெல்லாம் சுத்தத்தின் தரத்தை உயர்த்துவது அடுத்த கட்டம்.
  10. சுத்தத்தை அதன் தெய்விகத்திற்காக நாடும் மனநிலையுடன் மேற்கொள்வது கடைசிக் கட்டம்.

குறைந்த சத்தம்: பேச்சு சக்தியாகும். பேசினால் சக்தி செலவாகும். சக்தியை அதிகமாகச் செலவு செய்தால் அது பொருள் ஈட்டும். பேசுவதையே தொழிலாகக் கொண்டவர்கள் எவ்வளவு அதிகமாகப் பேசுகிறார்களோ, அவ்வளவு அதிகமாகச் சம்பாதிப்பார்கள். அதற்கும் எல்லையுண்டு. அவர்களும் அளவு மீறிப் பேசும்பொழுது சக்தி விரயமாகும். சக்தி விரயமானால், பொருள் சேர்வது குறையும்.

பேசினால் சக்தி செலவாகும் என்பதால் அதிகப் பேச்சு பொருள் வரவைக் குறைக்கும். பேசாமலிருந்தால் சக்தி சேகரமாகும். அதனால் பொருள் வரவு அதிகமாகும்.

பேச்சில் இரு அம்சங்களுண்டு. சத்தம், அளவு. அதிக சத்தம் விரயம். அதிக நேரம் பேசுவது விரயம். அளவோடு குறைந்த தொனியில் பேசுவது பொருள் சேர்வதற்குரிய முறை.

நாம் பேசியபின், பேசியவற்றை நினைத்துப் பார்த்து அதைச் சுருக்கமாக எப்படிச்சொல்லி யிருக்கலாம் என்று கண்டால், 300 வார்த்தைகளில் சொல்லியதை, 30 வார்த்தைகளில் சொல்லியிருக்க முடியும் என்பது தெரியும். எதிரேயிருப்பவரிடம் பேசும்பொழுது நாம் அடுத்த அறையிலிருப்பவர்களுக்குக் கேட்பதுபோல் பேசுகிறோம். சில சமயங்களில் அடுத்த வீட்டிலிருப்பவர்களுக்குக் கேட்பது போல் பேசுகிறோம். எதிரேயுள்ளவருக்குக் கேட்கும் அளவு பேசப் பழகிக் கொள்ளுதல் சக்தி விரயமாவதைத் தடுக்கும்.

இதற்குரிய பயிற்சியில் பல கட்டங்கள் உள்ளன.

  1. நாம் எப்படிப் பேசுகிறோம் என்று கவனித்து எத்தனை நிலை இறங்கி வர வேண்டும் என்று கணக்கிட வேண்டும்.
  2. நாம் ஏன் சத்தமாகப் பேசுகிறோம், வளவள எனப் பேசுகிறோம் என்று பார்த்து அதன் ஆதியைக் கண்டு கொண்டால் பேச்சைக் குறைக்க உதவும். நாம் பேசுவது நமக்குப் புரியவில்லை என்றால் சத்தம் அதிகமாகும். புரிந்தால் சத்தம் குறையும். திரும்பத் திரும்பச் சொல்வதும். நமக்கே புரியவில்லை என்பதால்தான்
  3. நம் பெற்றோர் சத்தமாகப் பேசுவதால் நாம் சத்தமாகப் பேசுகிறோம் என்றால், அதை முயற்சியால் மாற்றிக் கொள்ளலாம்.
  1. யோசனையேயில்லாமல் பேசுகிறோம். சத்தத்தைப் பற்றி நினைக்கவேயில்லை என்றால் எளிதில் மாற்றிக் கொள்ளலாம்.
  1. சத்தத்தைக் குறைக்க முக்கியமாகத் தேவைப்படுவது மனத்தின் தீர்மானம், உள்ளுறை முயற்சி. ஆழ்ந்த தீர்மானம் இருந்தால் சத்தம் குறையும். பெருமுயற்சி யிருந்தால் பேச்சு குறையும். முயற்சியுள்ள வருக்கே இதில் பலன் கிடைக்கும்.
  2. பேச வேண்டும் என்ற ஆசை மனதிலி ருக்கும்வரை பேச்சும் குறையாது, சத்தமும் குறையாது, மனத்தினுள் பேச்சு குறைய வேண்டும் என்ற முடிவு ஏற்பட்டால் அம் முடிவு வெளிப்படும்பொழுது சத்தமும் பேச்சும் குறைவதைக் காணலாம். அவற்றோடு பொருள் பெருகுவதும் தெரியும்.

ஒழுங்கு: சுத்தமும், குறைந்த சப்தமும் எளிதில் சாதிக்கக் கூடியவை. ஒழுங்கை அனைவரும் உடனே ஆரம்பிக் கலாம். ஆனால் எளிதில் நமக்குக் கட்டுப்படாது. புற ஒழுங்கு என்பது, அக ஒழுங்கைப் பிரதிபலிப்பதால், ஒரு முயற்சியால் மட்டும் ஒழுங்கை நிலைநிறுத்த முடியாது. மனம் கட்டுப்பட்டாலன்றி ஒழுங்கு கட்டுப்படாது. அதே காரணத்தால் பொருள் ஈட்டும் விஷயத்தில் ஒழுங்கிற்குப் பலன் அதிகம். ஒழுங்கைப்

பின்பற்றுதலும் பல நிலைகளில் உள்ளன. அவை யாவன:

  1. பொருள்களை ஒழுங்காக அடுக்கி வைத்தல்.
  2. பொருள்களை ஒழுங்காகச் செலவு செய்தல்.
  3. Regularity பொருள்களைப் பெறுவதில் காலதாமத மின்றி ஒழுங்காகப் பெற்று, செலவு செய்தல் அதைவிடச் சிறந்தது.
  4. குறித்த நேரத்தில் செயல்படுதல் (punctuality).
  5. சொல்லியபடி நடத்தல்.
  6. முறையாக நடப்பது.

இவற்றுள் குறித்த நேரத்தில் செயல்படுவதை அனைவரும் மேற்கொள்ள முடியும். அதை மட்டும் மேற்கொண்டு அதிகபட்சம் கவனம் செலுத்தினால், அதற்குரிய பலனே அதிகமாக இருப்பதைக் காணலாம்.

*******



book | by Dr. Radut