Skip to Content

8. எதிர்காலம்

எதிர்காலத்தைப் பொருத்தவரை மனிதர்களை மூன்று வகையினராகப் பிரிக்கலாம். 1. எல்லாம் இருப்பதால் கவலையில்லாதவர்கள். 2. எதுவும் இல்லாததால் நம்பிக்கையற்றவர்கள். 3. ஏதோ கொஞ்சமோ, எல்லாமோ இருந்தும் இவை நிலைக்கா என்ற பயத்தாலும், சந்தேகத்தாலும் பீடிக்கப் பட்டவர்கள். இக்கட்டுரை மூன்றாம் வகையைச் சேர்ந்தவர்களைப் பற்றியது.

முதல் வகையைச் சேர்ந்தவர் பல விதத்தினர். எதிர்காலம் ஏற்றமிகுந்ததென அறிந்து தொடர்ந்து முன்னேற்றம் பெறுபவர். கல்லூரியில் படிக்கும்பொழுது 18 கம்பெனியில் டைரக்டராகப் போட்டுவிட்டதால் வாரத்தில், இரண்டு நாளைக்கு மேல் கல்லூரிக்கு வரமுடியவில்லை என்ற நிலையில் ஆரம்பித்து இன்று ரூபாய் 800 கோடி மூலதனமுள்ள ஸ்தாபனத்தின் தலைவராகத் தமது 53 ஆம் வயதில் உள்ள, செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். உச்சகட்ட நிலையில் இருப்பவர். தமக்கு எல்லாம் உண்டு என்று தெரிந்தவர். அவர் நம்புவது உண்மை. பின்னால் நடந்தது.

இதே வகையில் கடைசி கட்டத்திலுள்ளவர் உண்டு. குமாஸ்தாவின் மகன் கெட்டிக்கார மாணவன். முதல் மாணவனாக இருக்கிறான். எந்தக் காலேஜிலும் இடம் கிடைக்கும். எந்த ஸ்காலர்ஷிப்பும் உண்டு. பாஸ் செய்வது நிச்சயம். பாஸ் செய்தால் உத்தியோகம் நிச்சயம்

என்று அவனுக்குத் தெரியும். தொடர்ந்து பாஸ் செய்து நல்ல உத்தியோகத்தில் அமர்ந்து இன்று அமெரிக்கா போயிருக்கிறான். அவனுக்கு எதிர்காலத்தைப் பற்றி எப்பொழுதும் கவலையிருந்ததில்லை. இவையிரண்டும் உச்சியும், மட்டமுமானால், இடையே 10 அல்லது 15 நிலைகள் உள்ளன. ஆனால் இந்த வகையைச் சேர்ந்தவர் அனைவருக்கும் எதிர்காலம் ஏற்ற மிகுந்தது எனத் தெரியும். அதனால் அவர்களைக் கவலை இவ்விஷயத்தில் தீண்டுவதில்லை.

அடுத்த வகையினர் பல விதத்தினர். இளம் வயதில் வேலை கிடைக்காமல், இனி கிடைக்காது என முடிவு செய்து எதிர்காலம் இருள் நிறைந்தது என முடிவு செய்தவர்கள். அதனால் வாழ்வில் நம்பிக்கையை முழுவதும் இழந்தவர்கள். பல்வேறு காரணங்களால் இவர்கள் நம்பிக்கை போயிருக்கும். மற்றவர்கள் இவர்களுக்கு உற்சாகமோ நம்பிக்கையோ கொடுக்க முயல்வதில்லை. ஏதோ ஒரு சமயம் ஒருவர் முயன்றாலும், அதனால் இவர்களுக்கு நம்பிக்கை வருவதில்லை. திருமணமாகாமல் வயதானபின், இனி எனக்கும் திருமணத்திற்கும் கனவிலும் தொடர்பில்லை என்று மனம் தீர்க்கமாக நம்புபவர்கள்; தீராத வியாதி வந்து நிலையாக உடலில் ஏற்றவர்கள்; தகப்பனாரால் ஒதுக்கி வைத்த பிள்ளை, சொத்து முழுவதையும் அண்ணன் நிர்வாகத்தில் வந்து தாமும், தம் குடும்பமும் அண்ணியின் அதிகாரத்திற்குள் நெடுநாள் முன்னதாக வந்த குடும்பம்; சொத்து, அந்தஸ்து, உத்தியோகம் தீராத பிரச்னையாகப் போய் இனி இல்லை என்று முடிவு

செய்தவர்கள்; சர்க்கார் சட்டம் மாறி, இருந்த தொழில் போய்விட்டது, ஓடிய பஸ்களெல்லாம் இப்பொழுதில்லை, இனி வரப்போவதில்லை என்று நம்புபவர்கள்; இருப்பதை அனுபவிக்க முடியவில்லை, தடையாக ஒருவன் வந்துவிட்டான், இனி நீங்காது என்ற நிலையில் பல காரணங்களுக்காக வந்து சேர்ந்தவர்கள், இந்த வகையைச் சேர்ந்தவர்கள்.

அன்னையிடம் இவர்கள் வந்து நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தால், அடிப்படையான தடை உடனே விலகும். வேலை கிடைக்கும், திருமணமாகும், வியாதி தீர வழி உற்பத்தியாகும், தகப்பனார் பிள்ளையுடன் சேர்ந்து கொள்வார், அண்ணன் அதிகாரம் விலகும். இல்லை என்று முடிவு செய்தது உண்டு என்றாகும், போன தொழில் மீண்டும் வரும். தடையாக உள்ளவன் தானே விலகுவான். இவை அன்பர்கள் அனுபவம். பிரார்த்தனை பலிக்கும். கட்டுரை அடுத்த வகை யினரைப் பற்றியது என்பதால் இவர்களைப்பற்றி இங்கு விவரிக்கவில்லை.

மூன்றாம் வகையினருக்கு இல்லை என்பது குறையில்லை. இருப்பது போய்விடுமோ என்ற பயம். இருப்பது கொஞ்சமாக இருக்கலாம், அல்லது ஏராளமாக இருக்கலாம். ஆனால் பயம் முழுமையாக நிரந்தரமாகப் பிடித்துக் கொண்டிருக்கும். நிலைமை நித்திய கண்டம், பூர்ணாயுசாக இருந்து பயம் இருப்பதுண்டு. நிலைமையில் கோளாறு, குறையில்லாவிட்டாலும், பயம் மனத்திலிருந்து தொடர்ந்து in ever increasing measure வளர்ந்து அதிகமாகிக் கொண்டிருக்கும். இவர்களைப்

பார்ப்பவர்கள் அனாவசியமாகப் பயப்படுகிறார்கள் என்பார்கள். அதுவும் சரி. ஆனால் அவர்களைப் பொருத்தவரை பயம் நிஜமாக இருக்கிறது. அடுத்தவருக்கு அநாவசியமாகப் படும் பயம், இவர்களுக்கு நிஜமாகப் படுகிறது. பயம் இருப்பது உண்மையானால் சம்பந்தப்பட்டவருக்குப் பிரச்னை கற்பனையில்லை. பிரச்னை இருப்பது உண்மை.

இதுபோன்ற நிலையில் பலவிதமான மனிதர்கள் இருப்பார்கள். திருமணமாகிக் குழந்தைகள் பிறந்து நல்ல குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும்பொழுது மனத்தில் கணவன் கைவிட்டு விடுவானோ என்ற பயம் அதிகமாக இருக்கும். மனிதன் அப்படிப்பட்டவனா என்றால் இல்லை என்பார்கள். ஒன்றுமில்லாதபோது ஏன் பயம் ஏற்படுகிறது? அதுபோல் நடக்கக்கூடிய சூழ்நிலை யிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை என்பார்கள். பின் ஏன் பயம் இருக்கிறது என்றால், அது ஏனோ இருக்கிறது, தெரியவில்லை என்பார்கள். எது உண்மை யானாலும், பொய்யானாலும், பயம் இருப்பது உண்மை. எந்த நேரமும் மனம் பீதியடைகிறது. ஒரு கதையில் கணவன் மனைவியை விட்டுவிட்டான் என்றால் அதைப் படித்த பிறகு ஒரு வாரம் தினமும் இரவில் தூக்கத்தில் திடீர் திடீர் எனத் தூக்கிப் போடும். எதுவும் இல்லாவிட்டாலும், இந்த நினைவு வந்தால் பீதி பற்றிக் கொள்ளும். நிலைமையில் முக்கிய குறையிருக்கும். எந்த நிமிஷமும் மனைவியை மறந்துவிடக் கூடிய பொறுப்பற்ற கணவனாக இருந்தும் இந்தப் பயம் இருப்பதுண்டு.

இன்று நல்ல வேலையிலிருக்கின்றேன். எவ்வளவு நாள் நீடிக்குமோ தெரியாது. மனைவி அடங்காப்பிடாரி. என்றைக்கு நான் வீடு திரும்பியபோது அவள் இல்லை என்று காண்பேன் எனத் தெரியாது. தினமும் வீடு வந்து அவளைக் கண்டால்தான் நிச்சயம். பையன் படிக்கிறான். எப்பொழுது பள்ளியிலிருந்து நிற்பான் என்று சொல்ல முடியாது. தினமும் அவன் வாயில் வரும் முதல் சொல் அதுதான். மருமகன் மகளுடன் 12 வருஷமாக நல்ல குடித்தனம் செய்கிறான். ஆனால் எதுவரை இந்த நிலை? தபால் வந்தால் வயிற்றைப் பிசைகிறது. பிரித்துப் படித்து ஆபத்தில்லை என்றால்தான் நிம்மதி. என் தகப்பனார் எலும்புருக்கி நோயால் இறந்தார். அது பரம்பரையாக வரும் என்கிறார்கள், வாராது என்கிறார்கள். எனக்கும் 40 வயதாகிவிட்டது. இதுவரை ஒன்றுமில்லை. இருமல் என்று வந்தால் பயம் வந்துவிடும்.

என் கணவர் எந்த எந்தச் சாமியாரையோ போய்ப் பார்க்கிறார். இப்பொழுது ஆசிரமம் போகிறார். போனவர் வந்தால்தான் நிலை. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறேன். பெண்ணுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. பயம் விட்டபாடில்லை.

வயதான காலத்தில் பிறர் உதவி வேண்டி யிருக்குமோ என்ற பயம். யாருக்கும் தொந்தரவு இல்லாமல் போய்விட வேண்டும். படுத்துவிட்டால் என்ன செய்வது? யார் இருக்கிறார்கள் உதவி செய்ய? நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது. எல்லாருக்கும் உள்ளதுதானே, எனக்கு மட்டுமா, என்றாலும்,

வந்துவிட்டால் பட வேண்டாமா? என்பவருண்டு. நல்ல வீடு கிடைத்திருக்கிறது, நிலைக்குமா என்று தெரியவில்லை. எவ்வளவு நாளைக்கு என்று சொல்ல முடியாது என்பது ஒன்று. பழைய நண்பன். இன்று கோடீஸ்வரனாகி விட்டான்; பழைய மாதிரியே இருக்கிறான். நீடிக்குமா என்பது தினசரி கேள்வி. என் பிரபலம் வளர்கிறது. ஆனால் எதுவும் நிலையில்லை. நல்ல பெரிய வருமானம் தொடர்ந்து நெடு நாளாக வருகிறது. ஆனால் இது நிலையில்லாதது. உலகம் இன்று இருக்கும் நிலையில் என்றும் அழிவு வரலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அது உண்மையோ என்ற பயமிருக்கிறது. இப்பொழுது நீர் மட்டம் 120 அடிக்குப் போய்விட்டது. 40 அடியிருந்து 120 அடிக்குப் போய்விட்டது. எதிர்காலம் எப்படியோ? தொழில் நன்றாக இருக்கிறது. மார்க்கெட்தான் நிலையில்லை. ஃபேஷன் மாறினால் நான் தொழிலை மூடவேண்டியதுதான்.

இந்த நிலையில் பிறர் நமக்குச் சொல்வதென்ன? நமக்கு நாமே என்ன சொல்லிக் கொள்கிறோம் என்றால், தைரியமாக இருக்க வேண்டுமன்றோ? ஒரேயடியாகப் புரளி செய்யாதே என்பது ஒருவகை புத்திமதி. அனுபவசாலிகள் சொல்வது வேறு. வந்தால் அனுபவித்தாக வேண்டும், வேறு வழியில்லை. இவையெல்லாம் வரக்கூடாதன, வந்தால் வாயை மூடிக்கொண்டு படவேண்டியதுதான் என்பார்கள்.

ஒரு வதந்தி வந்தால் இவர்கள்தான் முதல் பலி. கம்பெனியை மூடப்போவதாக ஒரு வதந்தி. ஸ்காலர்ஷிப்

இந்த வருஷத்தோடு கடைசி, பென்ஷனை இந்த டிபார்ட்மெண்டுக்கு எடுத்து விடப்போகிறார்கள், சர்க்கார் இந்தத் தொழிலைத் தானே நடத்தப் போகிறது, இனி பாங்க் லோன் கிடையாதாம் என்பன போன்ற வதந்திகள் எழுந்தால் இவர்களால் எது உண்மை, எது பொய், இதுவும் உண்மையாக இருக்க முடியுமா என்றெல்லாம் யோசிக்க முடியாது. இதுவரை இருந்த பயம் மலைபோல் வளர்ந்து வரும். வளர்ந்து கொண்டேயிருக்கும். அதற்கு முடிவில்லை.

புதியதாக ஏதாவது ஒன்றைக் கேள்விப்பட்டால் பயப்படுவார்கள். இந்த ஊருக்குக் காலேஜ் வரப் போகிறது என்றவுடன், என் வியாபாரம் என்ன ஆகும் என்று நினைப்பார்கள். கடைத் தெருவே காலேஜ் இருக்குமிடத்திற்குப் போய்விட்டால் என்ன செய்வது என்று தோன்றும். ஏதாவது புதிய திட்டத்தைப் பற்றி யாராவது பேசினால் இவர்களுக்கு அளவு கடந்த கோபம் வரும். புதியது என்றால் இவர்களைப் பொருத்தவரை மரணம், அழிவு என்று பொருள்.

செயலும், நிகழ்ச்சியும், விஷயமும் சரியாக இருந்தும் மனநிலை சரியில்லாதவர்கள் இவர்கள். பயம், பீதி இவர்களுக்குச் சொந்தம்.

Phobia பீதிக்கு உறைவிடமானவர்கள் என்ற வகையினரை நான் குறிப்பிடவில்லை. பிள்ளை கண்முன் இருந்தால் சரி. வெளியில் போய் திரும்பிவரும் வரை உயிரோடு வருவானா என்று உண்மையில் சந்தேகப்படுபவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். அது மன நோயாளியின் நிலைக்குச் சமமானது. நான்

சொல்வது அது இல்லை. சாதாரண மனிதர்கள் கேட்ட கதைகளாலோ, வளர்ப்பு முறையாலோ, பயத்தால் பீடிக்கப்படுவதுண்டு. அவர்களை ஒரு டாக்டர் பார்த்தால் இவருக்கு உடம்பில் ஒன்றுமில்லை. மனத்திலும் கோளாறில்லை. வெறும் பயம் என்பார். மூட நம்பிக்கைகளில் வளர்க்கப்பட்டவரும் இப்படியே இருப்பார்கள். இவர்கள் சுமார் 5% இருப்பார்கள்.

அன்னையின் சக்தி ஒளிமயமானது, அன்பு நிறைந்தது. சந்தோஷமானது, உடலைத் திறம்படச் செய்வது, புற நிகழ்ச்சிகளை மாற்றுவது, மற்றவர் களுடைய போக்கை மாற்றிச் செயல்படச் செய்வது, நம் மனத்தையும் மாற்றவல்லது. அன்னையை இவர்கள் ஏற்றுக் கொண்டால் வாழ்க்கை மாறும், இவர்களுக்கே ஆச்சரியம் ஏற்படும் அளவு முக்கியமான இடங்களில் சிறு மாறுதல்கள் ஏற்பட்டுப் பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கும்.

இவர்கள் அன்னையை ஏற்றுக் கொண்ட கொஞ்ச நாளில் மற்றவர் கண்ணுக்குப் புலப்படும் மாறுதல் இவர்களிடம் தெரியலாம். மற்றவர்கள் சொல்வது பலவிதமானவை. அவை யாவன:

நீ இப்பொழுது அமைதியாகிவிட்டாய்; இந்த மாற்றம் உனக்கேற்படும் என நான் எதிர்பார்க்கவில்லை; யாரால் இது ஏற்பட்டது? உனக்கு என்ன நடந்து, நீ இப்படி மாறினாய்? இந்தவித மாற்றத்தையும் மற்றவரால் ஏற்படுத்த முடியுமா? ஒரு விஷயம் மனிதனை இதுபோல் மாற்ற முடியும் என்றால், அது என்ன? இது என் அறிவுக்கெட்டவில்லை; இப்பொழுதெல்லாம் நீ அடிக்கடி

சிரிக்கிறாய்; கண்கள் பளபளப்பாக இருக்கின்றன; முகத்தில் தெளிவு இருக்கிறது; உன்னுடன் பேசச் சந்தோஷமாக இருக்கிறது; எல்லாரும் உன்னைப் பற்றி இப்படித்தான் பேசுகிறார்கள்; நீ இருக்கும் இடம் சந்தோஷமாக இருக்கிறது, அங்கு வேலை கூடிவிடுகிறது; உன்னுடன் பேசினால் மனம் தெம்பாக இருக்கிறது; எனக்கு மிகவும் சந்தோஷமான ஒருவரைத் தெரியும், நீ அவரையும் மிஞ்சிவிட்டாய் என்ற சொற்கள் காதில் விழும்.

அன்னையை ஏற்றுக்கொண்டு நிரந்தரப் பயம் முக்கியமான இடத்தில் போனபின் அவர்கள் தங்களைப் பற்றிக் கீழ்வருமாறு சொல்வதை நான் அறிவேன்:

மனம் இப்பொழுது நிம்மதியாக இருக்கிறது; என் பயம் என்னவாயிற்று என்று தெரியவில்லை; இதை ஒருவர் எனக்குக் கொடுக்க முடியும் என்று நினைக்கிறாயா? இந்த மாற்றத்தை எதனால் செய்ய முடியும் என்று சொல்கிறாய்; என்ன நடந்தது என்று எனக்குப் புரியவில்லை, நான் நன்றாக இருக்கிறேன்; நானே மாறிவிட்டேன்; கெட்ட சொப்பனம் இப்பொழுது வருவதில்லை; சோகம் இப்பொழுது கவ்விக் கொள்வதில்லை; நானும் சந்தோஷமாக இருக்க முடியும் என்று என்னாலும் நம்ப முடிகிறது; எனக்கும் எதிர்காலமுண்டு; இது என் வாழ்வில் நடக்கும் என்று நான் நினைத்ததில்லை; இப்படி நடக்கும் என யாராவது சொல்லியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன்; என்னிடமும் மற்றவர்கள் இப்பொழுது பேசுகிறார்கள்.

அன்னை அவர்கள், மனத்திலிருந்த பயத்தை நீக்கிச் சந்தோஷத்தை நிரப்பிவிட்டார்கள். அன்னையை ஏற்றுக்கொண்ட பின் காலம் மாறியது. எதிர்காலத்தை எதிர் நோக்கும் திறமை ஏற்பட்டுள்ளது.

*******book | by Dr. Radut