Skip to Content

1. குடும்பம்

பூசலார் மனதில் சிவபிரானுக்குக் கோயில் கட்டியது போல், வீடு என்ற கட்டடத்திற்குள் மனத்தாலும், உணர்வாலும், பண்பாலும், பாசத்தாலும் நாம் கட்டும் மானஸீகக் கோயில் குடும்பம் என்பது.

விலங்குகளில் தாழ்ந்தவை தம் குட்டிகளைப் பராமரிப்பதில்லை; உயர்ந்தவை கொஞ்சநாள்வரை பாதுகாக்கும். எவ்வளவு நாள் குட்டிகளைத் தாய் பராமரிக்கின்றதோ அது விலங்கின் நிலையைக் குறிக்கும். அவ்வகையில் எல்லா விலங்குகளையும்விட அதிகமாகக் குழந்தைகளைப் பராமரிப்பவன் மனிதன். மனிதன் சிருஷ்டியின் சிகரம் என்பதற்கு இதுவும் ஒருவகைச் சான்று.

ஒரு மனிதனுடைய திறமை எப்படிச் சேர்கிறது என்று பார்த்தால் அது சமூகத்திருலிந்தும், பள்ளியி லிருந்தும், குடும்பத்திலிருந்தும், முன் பிறவிகளிலிருந்தும், சொந்தமாகவும் சேகரிக்கப்படுகிறது என்று தெரியும். பூர்வ ஜன்ம அனுபவங்கள் ஆத்மா மூலம் பிறவியில் நமக்குக் கிடைத்து வாழ்க்கையின் ஒளி விளக்காகத் திகழ்கிறது. இந்த அனுபவங்களின் உறைவிடம் ஆன்மா எனப்படும் சைத்திய புருஷனாகும். அப்படிக் கிடைக்கும் பலவற்றுள் முக்கியமானவை பூர்வஜென்மப் புண்ணியம், அதிர்ஷ்டம் ஆகியவை. பெற்றோரிடமிருந்தும், மூதாதையரிடமிருந்தும் கிடைப்பதில் முக்கிய பகுதி சுபாவம் (Character). உடல் அமைப்பு, குரல், தைரியம், தெளிவு போன்றவை ஒரு தலைமுறையிருந்து அடுத்த

தலைமுறைக்கு வருகின்றன. இவை உறையும் இடம் (subconscient) உடல். படிப்பு மூலமாகப் பெறுவது அறிவு, பயிற்சி ஆகும். தானே மனிதனாகி சமூகத்தில் பழக ஆரம்பிக்கும்பொழுது அவனுடைய பழக்கங்கள் (manners) அவன் சிறுவயதிலிருந்து சமூகத்திலிருந்து பெற்றவையாகும். ஒரு மனிதனுக்குரிய திறமைகளில் மேற்சொன்னவை போக உள்ள பகுதியில் குணங்கள், பண்புகள் உள்ளன (values). அவையே அவனை நல்லவனா, கெட்டவனா என நிர்ணயிப்பவை. அவற்றை அவனுக்குத் தருவது அவனது குடும்பம்.

சோழ மஹாராஜா தமக்கு நாணயமான மந்திரி தேவை என்றுணர்ந்தபோது, எட்டுத் திக்கும் ஆள் அனுப்பி, 3 தலைமுறைகளாகத் தாய்வழி, தந்தைவழியில் மாசில்லாத ஒரு குடும்பத்தைத் தேடச் சொன்னார். அப்படிக் கிடைத்தவரே சேக்கிழார். அவர் மந்திரி வேலை செய்ததுடனில்லாமல், நாயன்மார்களுடைய சரிதத்தைக் காவியமாகவும் பாடினார்.

பள்ளியிலும், கல்லூரிகளிலும் பாடமே நம் தொழிலை நிர்ணயிக்கிறது. உள்ளூரில் கடை வியாபாரம் செய்கிறானா, சர்க்காரில் உத்தியோகம் செய்கிறானா என்பதை அவன் பெற்ற பட்டமே நிர்ணயிக்கிறது. சமூகத்தில் ஒருவரை விரும்பி நாடுகிறார்களா, வெறுத்து ஒதுக்குகின்றார்களா என்பதை அவர்தம் வாழ்நாளில் கற்றுக்கொண்ட பழக்க வழக்கங்கள் நிர்ணயிக்கின்றன. தாம் ஏற்றுக்கொண்ட தொழிலில் எந்த அளவு உயர முடிகிறது என்பது அவர் குடும்பம் அவருக்கு அளித்த பண்புகளால் நிர்ணயிக்கப்

படுகிறது. ஒரே தொழில் ஒன்றாகச் சேர்ந்த பலர், பல நிலைகளுக்கு உயர்வது அவரவர் குடும்பத்தைப் பொருத்தது. D.E.O.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பலர். அனைவரும் டைரக்டராக ஓய்வு பெறுவதில்லை. ஒரு சிலரே அந்த உயர் பதவியை எட்டுகின்றார்கள். படிப்பு முடிந்தவுடன் D.E.O..வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் தாம் படித்த பள்ளியைத் தணிக்கை செய்ய வந்தபொழுது, அவர் மாணவராக இருந்த காலத்தில் அவருக்கு இரத்தக்காயம் பட அடித்த ஆசிரியர் தலைமை யாசிரியராக இருந்தார். தலைமையாசிரியரின் நிலையைக் கண்டு அனைவரும் பரிதாபப்பட்டனர். தணிக்கை அன்று காலை D.E.O..தலைமை ஆசிரியர் வீட்டிற்குச் சென்று அவர் காலில் வீழ்ந்து நமஸ்காரம் செய்து ஆசிபெற்றார். அவர் துணைவேந்தராக ஓய்வு பெற்றார். அந்தக் குணத்தை அவருக்குக் கல்லூரியோ, சமூகமோ கொடுக்க முடியாது, குடும்பம் கொடுத்த சொத்து அது.

நாட்டில் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் உண்டு. 25 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர் பலர் அங்கு கூடுவதுண்டு. அவர்களில் பலர் எம்.பி.ஆகவும், ஐ.ஏ.எஸ். ஆபீசராகவும், உயர் அதிகாரிகளாகவும், தனவந்தர்களாகவும், தொழில் அதிபர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்கள் நல்ல நிலைமையில் இருப்பார்கள். ஒருவர் கூட டிரைவராகவோ, குமாஸ்தா வாகவோ இருப்பதில்லை.

சிற்றூர் பள்ளிளிலும் அதே போன்ற விழாவில் கூடுபவர்கள் ஒருவர் உயர்ந்த நிலைமையில் இருப்பது அரிது.

வக்கீல் குமாஸ்தா, சர்க்கார் குமாஸ்தா, பள்ளி ஆசிரியர், வியாபாரிகள் நிறைந்த கூட்டமாக இருக்கும் அவ்விழா.

பள்ளியின் தரம் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிப்ப தால்தான் உயர்ந்த பள்ளிகளை நாம் விரும்புகிறோம். இராணுவத்தில் உயர் அதிகாரிகளைத் தயார் செய்ய அவர்கள் மற்றவர்களை நம்புவதில்லை. சொந்த மாகவே உயர்ரகப் பள்ளிகளைத் தொடங்கி நடத்துகிறார்கள்.

பள்ளியின் தரம், வாழ்க்கைத் தரத்தை நிர்ண யிப்பது போல், குடும்பத்தின் பண்பும், உயர்வும், வாழ்க்கையின் சிறப்பை நிர்ணயிக்கின்றன. எனவே குடும்பம் முக்கியம். அதனால் குடும்பத்தைப் போற்றி வளர்க்க வேண்டும். அவரவர்களுக்கு ஏற்பட்ட குடும்பத்தை மாற்ற முடியாது. என்றாலும், இருக்கும் நிலையைப் பாதுகாத்து, நல்லனவற்றைச் சேர்த்து பண்பை உயர்த்தும் முயற்சியை ஒவ்வொரு தலைமுறையிலும் செய்வதால்தான் ஒரு குடும்பம் உயர்வடைகிறது.

சுதந்திரம் வருமுன் வீடு கட்டுவது என்பது குறைவு. உத்தியோகஸ்தர்கள் வீடு கட்டினால் பொதுவாக ஓய்வு பெற்றபின் பெருந் தொகை கிடைப்பதால் கட்டுவ துண்டு. நாட்டில் புதிய நிலைகள் ஏற்பட்டிருப்பதால் வீடு கட்டப் பல்வேறு வசதிகள் உற்பத்தியாகிவிட்டதால் அனைவரும் அந்த வசதிகளை ஒழுங்காகப் பயன்படுத்திப் பெருவாரியாக வீடுகளைக் கட்டுகின்றனர். புதிய சந்தர்ப்பம் ஏற்பட்டதால் புதிய வசதியைத் தேடு கிறார்கள்.

நாட்டில் குடும்பத்தைப் பொருத்தவரை, அது சுருங்கும் நிலையே ஏற்பட்டுள்ளது. என்றாலும், படிப்பு, அறிவு, தெளிவு, பழக்கம், விஷய ஞானம், வெளிநாட்டைப் பற்றிய அறிவு ஆகியவற்றைப் பொருத்தவரை அதிகமாகப் பெறும் வாய்ப்புகள் உற்பத்தியானபடி இருக்கின்றன. குடும்பங்கள் சீரழிய உதவக்கூடிய சில வாய்ப்புகளும் உற்பத்தியாகிக் கொண்டேயிருந்தாலும், குடும்பப் பண்பை உயர்த்த முயல்பவர்களுக்கு உதவியாகப் பல புதிய சூழ்நிலைகள் அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அத்துடன் அன்னை பக்தர்களுக்கு அவர்களுடைய பக்தியே பெரிய வாய்ப்பு. பள்ளியின் தரம் நம் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிப்பதுபோல் அன்னையை ஏற்றுக்கொண்டவர்கள் செய்யும் காரியங்கன் உயர்வும் வெற்றியும், அவருடைய பக்தியின் உயர்வால் நிர்ணயிக்கப்படும். குமாஸ்தாவாகப் போய், என்.ஜி.ஓ.வாக ரிடையர் ஆகிறவரும், கலெக்டராக ரிடையர் ஆகிறவரும் பெற்ற பட்டம் ஒன்றே. தரம் வேறு. வாழ்வு அனைவருக்கும் ஒன்றே என்றாலும், அன்னை பக்தர்களுக்கு அவர்கள் பக்தி வாழ்வின் தரத்தை உயர்த்திக் கொடுப்பதால், அவர்கள் குடும்பத்தின் பண்பை உயர்த்த முயன்றால், பலன் எதிர்பாராத அளவில் கிடைக்கும். குடும்பத்தின் தரத்தை உயர்த்துவது எப்படி? அதன் தரத்தை உயர்த்தும் குணங்களைக் குறிப்பிடு கிறேன்.

  • பொதுவான பொறுப்புகளைத் தானே முன் வந்து ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை.
  • ஒரு வசதியை ஏற்படுத்தும் பொழுது மற்றவர் களுக்கெல்லாம் கிடைத்த பின்னரே தாம் பெறலாம் என்ற நோக்கம்.
  • குடும்பத்தில் எவருடைய குறையையும், மற்றவர்கள் பொருட்படுத்தாத நிலை.
  • பலருடைய சந்தோஷத்திற்காக அவர் விரும்பும் நல்ல காரியங்களை அவர் எவ்வளவு ஆர்வமாக நாடுவாரோ, அவ்வளவு உற்சாகத்தோட அவருக்காக அதைப் பெற்றுத் தரும் மனநிலை.
  • ஒரு காரியம் செய்யலாமா எனும் பொழுது மற்றவர்களை எப்படிப் பாதிக்கும் என்று யோசனை செய்த பிறகு செய்வது.
  • குடும்பத்திற்காக நான் உழைக்கின்றேன் என்ற எண்ணம் தோன்றாமலிருப்பது.
  • நஷ்டத்தை ஒருவர் ஏற்படுத்திவிட்டால், அவர் மனம் புண்படக்கூடாது என்பதற்காக அதை நஷ்டமாகக் கருதாதது.

நாம் செய்யும் முயற்சிகள் நல்ல முறையில் உள்ளன என்பதற்குச் சில அடையாளங்களுண்டு. வாழ்க்கையில் எங்குத் தோற்றாலும், சலிப்படைந்தாலும், வீட்டிற்குள் வந்தவுடன் அவற்றை மறந்து சந்தோஷம் அடைந்தால், குடும்பம் நல்ல முறையில் இருக்கிறது என்று பொருள். வீட்டில் உள்ள சந்தோஷம் அங்குள்ள வசதியைப் பொருத்தில்லாமல் மனிதர்களைக் பொருத்து மட்டும் இருந்தால் வீடு, குடும்பமாகிவிட்டது என்று பொருள்.

பக்தர்கள் முயற்சி முழுப் பலன் பெற, ஒரு நல்ல குடும்பம் உருவாகி, உயர்நிலையை அடைய உதவும் 31 மலர்களைப் பற்றி நீண்ட கட்டுரை ஒன்றை புஷ்பாஞ்சலி என்ற தலைப்பில் மலர்களைப் பற்றி விளக்கியும், அவற்றின் தமிழ்ப் பெயர், ஆங்கிலப் பெயர், அன்னை பெயர், தாவர இயல் பெயர்களைப் பட்டியலாகக் கொடுத்தும் ஏற்கனவே அன்னையின் அருள் எனும் நூலில் வெளியிட்டேன். அம்மலர்களை மட்டும் இங்கு குறிக்கின்றேன்.

அல்லி, நாகலிங்கப்பூ, பூவரசம்பூ, வாடாமல்லிகை, கொய்யாப்பூ, பூசணிப்பூ, சாமந்தி, நித்ய கல்யாணி, கொடிரோஸ், மயிற் கொன்றை, குரோட்டன்ஸ், காசாம்பூ, அலரிப்பூ, பெட்டூனியா, பாக்குமரப்பூ, மனோரஞ்சிதம், நந்தியாவட்டை, குவளை, சூரியகாந்தி, புகையிலைப்பூ, மகிழம்பூ, செம்பருத்தி, பவழமல்லிகை, வெண்தாமரை, செந்தாமரை, தூங்குமூஞ்சி மரப்பூ, காகிதப்பூ, வேப்பம்பூ, எருக்கம்பூ, பன்னீர்ப்பூ, விருட்சிப்பூ, மாதுளம்பூ.

இம்மலர்களை அன்னைக்குச் சமர்ப்பித்தால் அவற்றிற்குரிய குணவிசேஷங்கள் குடும்பத்தில் நிறையும். நாம் அக்குணங்களைப் பெற முயன்றால் இம்மலர்கள் அந்த அபிலாஷையைப் பூர்த்தி செய்யும். மேற்சொன்ன மலர்களுடைய குணவிசேஷங்களில் குறிப்பிடத்தக்கவை: செல்வம், உடல்நலம், ஆயுள், சுமுகம், அற்புதம், பாதுகாப்பு, ஆன்மிகம், தைரியம், சாந்தம், அன்பு, பொறுமை, அறிவு ஆகியவை.

********



book | by Dr. Radut