Skip to Content

3. மேற்படிப்பு

அன்னையைத் தெய்வமாக ஏற்றுக் கொண்ட பின் அன்பர்கள் தங்கள் வாழ்வின் முக்கிய அம்சங்களில் அன்னையைக் காண்பது எப்படி என்று கருதுவதுண்டு. குழந்தைகளின் மேற்படிப்பு அப்படிப்பட்ட ஓர் அம்சமாகும். பள்ளியில் படிக்கும்வரை பொதுவாகக் குழந்தைகள் வீட்டில் இருப்பதாலும், அவர்களுக்காகச் சொந்தமான யோசனைகள் இன்னும் உற்பத்தி யாகவில்லை என்பதாலும், வளரும் பருவம் தொடங்கவில்லை என்பதாலும், பல பிரச்னைகள் ஏற்படுவதில்லை. அத்துடன் 15 வயதிற்கு மேல் தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படும்பொழுது அப்படிப்பின் தரம் உயர்வாக அமைவதால் பள்ளியில் படித்ததுபோல், மாணவன் கல்லூரியில் இருக்க முடியாது. அறிவால் எடுக்கும் முயற்சியின் அளவு இந் நிலையில் அதிகம். அது அனைவராலும் முடிவதில்லை. முதல் தலைமுறையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்குரிய சிரமம், அநேக குழந்தைகளுக்கு மேற்படிப்பில் காணப் படுவதால், மேற்படிப்புக்கு முக்கியத்துவம் உண்டாகிறது.

எங்கள் பிள்ளை, படிப்பு விஷயத்தில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் தரவில்லை. ஆண்டவனுடைய கிருபையால் தேவைப்பட்ட பணம் நேரத்தில் கிடைத்தது' என்று சொல்லக்கூடிய அதிர்ஷ்டசாலிகள்

உண்டு. அவர்கள் நூறில் பத்து நபர்களாக இருப்பார்கள். வேறு வகையினர் உண்டு. அவர்கள் 10 சதவிகிதம் அல்லது 20 சதவிகிதம் இருக்கலாம். அது பல வகைப்பட்டது.

"எங்கள் மகனுக்குப் படிப்பு சிரமமில்லை. வேறு கெட்ட பழக்கம் இல்லை. எந்தப் பிரச்னையுமில்லை. வருஷம் தவறாது பாஸ் செய்வான். அதிக மார்க் வாராது. எங்களால் தடையின்றிப் பணம் அனுப்ப முடிவதில்லை. அதனால் ஒரு வருஷம் வீணாகிப் போயிற்று'' என்பவருண்டு.

"பையன் கெட்டிக்காரன். படித்தால் முதல் வகுப்பில் வருவான். பணம் தடையில்லாமல் வரும். பிரம்மாதான் அவன் மனதில் புகுந்து படிக்க வைக்க வேண்டும். காலேஜ் சரியாகப் போகாவிட்டாலும், எப்படியோ பாஸ் செய்து விடுகிறான். இனி எப்படியோ, ஏதாவது கேட்டால் வீட்டிலேயே இருந்துவிடுவான் போலிருக்கிறது. ஆண்டவன் விட்ட வழி. ஒரு வழியாக டிகிரியுடன் வந்தால் சரி. அவன் மனதிலிருப்பதை ஒருவரிடமும் சொல்லமாட்டான்''.

"கிரிக்கெட்டே கதி என்றிருக்கிறான். இதுவரை எப்படியோ வருஷா வருஷம் பாஸ் போடுகிறார்கள். கடைசி வருஷம் யூனிவர்ஸிட்டி பரீட்சை, அங்கு என்ன செய்வது? இத்தனை வருஷம் விளையாட்டில் இருந்தவன், இந்த வருஷம் எதை எதையோ சாப்பிடுகிறான். பழக்கம் முற்றிப் போவதற்குள் வீட்டிற்கு வந்தால் போதும் என இருக்கிறது. டிகிரிகூடத் தேவையில்லை என்று தோன்றுகிறது''.

"இரவு பகலாய்ப் படிக்கிறான், பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. மார்க் மட்டும் வரமாட்டேன் என்கிறது. அத்தோடு கல்யாண ஏற்பாட்டையும் தானே முடித்துக் கொள்ள இந்த வயதில் அவன் மனம் நினைக்கிறது. வீட்டில் பூனை மாதிரியிருக்கிறான். பாடம் வருமா? டிகிரி வருமா? மருமகள் வருவாளா? தெரியவில்லை. தூங்கிப் பல மாதங்கள் ஆயின''.

"இந்தக் காலத்திலே ஒரு பி.எ. (B.A.) கூட இல்லாமல் யார் இந்தப் பெண்ணைக் கட்டிக் கொள்வார்கள்? "ஹாஸ்டல் பிடிக்கலை, படித்தது போதும். வீட்டிற்கு வந்துவிடுகிறேன்'' என வாரம் ஒரு தபால் வருகிறது. எப்படி முடியுமோ? எதுவும் நம் கையில் இருப்பதாகத் தெரியவில்லை''.

"மெடிகல் சீட்டிற்கு என்று பெரிய இடத்து மனிதர்கள் எல்லாம் சிரமப்படும்பொழுது, நம் பெண்ணுக்கு மார்க்கால் தானே கிடைத்தது! இரண்டு வருஷம் முடிந்தபின், "எனக்குப் பிடிக்கவில்லை. ஆங்கில இலக்கியம் படிக்கப் போகிறேன்'' என்று அடம் பிடிக்கின்றாள். முன்னும் போக முடியவில்லை; பின்னும் போக முடியவில்லை. ஆரம்பத்திலேயே அவள் சொன்னதைப் புறக்கணித்தேன். இப்பொழுது எனக்கே சஞ்சலமாக இருக்கிறது'' என்று கூறும் தகப்பனார் உண்டு.

"உள்ளுர் கிறிஸ்துவப் பள்ளியில் வருஷம் தோறும் 80% வாங்கிய பையன் இன்ஜினீயரிங் கல்லூரியில் வருஷம் தவறாமல் பெயிலாகிறான். 4 வருஷம் முடிந்துவிட்டது. மொத்தம் 4 பேப்பர் பாஸ் ஆக

வில்லை. அவனைத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது'' என்பார் மற்றொருவர்.

யாரும் படிப்பை விட்டுவிட்டு ஓடிவருவதில்லை. பரீட்சை சிம்ம சொப்பனமாகி, வீடு ரகளைக்கூடமாகி, பெற்றோருக்குப் பைத்தியம் பிடிக்கும் நிலை வந்து, பிள்ளைக்குத் தூக்குப் போட்டுக்கொள்ளும் எண்ணம் தோன்றி, அதிகப் பணம் விரயமாகி, மனம் புண்பட்டு கடைசியில் அனைவரும் ஏதோ ஒருவழியில் நாள் தள்ளி தங்கள் பிரச்னைகளை ஒருவாறாகத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

மேற்படிப்புக்குக் குழந்தைகளை அனுப்புவோர் அனைவரும் முதல் வகையினரைப் போல் நிம்மதியாகப் பலன்பெற முடியும். அதற்கான அறிவுக்குரிய முறைகள் சில, அன்பர்களுக்கு அன்னை கொடுக்கும் அருள் பல.

எல்லாப் பெற்றோருக்கும் படிப்பில் ஏற்படும் பிரச்னைகள் தெரிய முடிவதில்லை. ஆனால் தம் மகனையோ, மகளையோ பொருத்தவரை படிப்புக்குத் தேவையான அம்சங்களைப் பெற்றோர் அறிந் திருப்பார்கள். உடல் நலம், புத்திசாலித்தனம், படிக்கும் பழக்கம், பொறுப்பு, தன்னைக் கவனித்துக் கொள்ளும் திறமை, குணவிசேஷங்கள் ஆகியவை முக்கியமானவை. பெற்றோர் இவற்றை அறிவார்கள்.

உள்ளுர்ப் பள்ளியில் 80% மார்க் பெற்ற பையனின் தகப்பனார், "இப்பள்ளியில் சிறந்த முறையில் பிள்ளைகளைப் பரீட்சைக்குத் தயார் செய்கிறார்கள். தம் பையன் முனிசிபல் பள்ளியில் இருந்தால் 30 மார்க்தான் வாங்குவான்'' என்பதை அறிவார். அநேக

மாக அடிக்கடி சொல்வார். எப்படியாவது பையன் பி.ஈ. பட்டம் எடுக்க வேண்டும் என்பது நல்லெண்ணம் என்றாலும், அவனால் முடியாத ஒன்றை நடக்காத ஒன்றை மனம் நாடுவது யதார்த்த நிலைமையைத் தாண்ட முயல்வதாகும். ஹாஸ்டலுக்கு மாதம் அனுப்பவேண்டிய பணம் அளவுக்குச் சம்பளம் வாங்குபவர், நகை நட்டை வைத்து காலேஜில் பையனைச் சேர்த்துவிட்டு, அவன் வாழ்க்கையையும் அவர் வாழ்க்கையையும் சேர்த்து நாசமாக்கிக் கொள்வதற்கு, பெருமுயற்சி என்று பெயரில்லை. அறிவில்லாத பேராசையால் எல்லை தாண்டிச் செயல்படுவது என்று பெயர்.

மேற்படிப்பு திடீரென்று வருவதில்லை. முன்கூட்டி நாம் அறியக்கூடியது. தம் குழந்தையின் திறமையை, தாம் அறிந்து செயல்படுதல் குழந்தைக்கும், தமக்கும் நல்லது. படிப்பு விஷயங்களில் அனுபவமில்லாத வர்கள், அவை சம்பந்தமான அனுபவம் உள்ளவர்களைக் கலந்து ஆலோசனை செய்ய அவகாசம் இருப்பதால், அவைபோன்ற யோசனைகளைக் கேட்பது நல்லது.

பெரும்பாலான பெற்றோர்கள் படிக்காதவர்களாக இருந்தாலும், தம் மகனைப் பற்றிச் சரியான முடிவெடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு மேற்படிப்பிலுள்ள விவரங்களைத் தெளிவாகச் சொன்னபிறகு, படிப்பில்லாத பெற்றோர் அனுபவ முள்ளவர்கள் எடுக்கும் அதே முடிவுக்கு வருவது பலமுறை எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கிறது.

தம்முடைய மகன் என்பதால் அக்கறையால் அனுபவசாலியின் சரியான யோசனையாகத் தோன்றுகிறது. ஆனால் பிரச்னை வந்தபிறகு பிரச்னைக்குரிய காரணத்தைத் தெரிந்து கொண்ட பெற்றோர் "இது போலிருக்கும் என்று தெரிந்திருந்தால் நான் இதை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன்'' என்று சொல்வதைக் கேட்டிருக்கின்றேன். நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் வாழ்வில் மேற்படிப்பில் நான் நேரடியான அக்கறை கொண்டபொழுது, பெற்றோர் களுடைய சூட்சும அறிவைக் கண்டு நான் வியந்துள்ளேன். மேற்படிப்பில் பிரச்னை ஏற்பட்ட அநேகரை நான் சந்தித்ததுண்டு. அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் 95%க்கு மேல் கீழ்க்காணும் காரணங்களால் ஏற்பட்டவையேயாகும். விதிவிலக்காக 5% உண்டு.

  1. தமக்கும் தெரியாமல், எவரையும் விசாரிக் காமல், ரகசியமாக மகனை அவனால் முடியாத படிப்பில் சேர்ப்பது.
  2. பள்ளியில் மந்தமாக இருந்ததால், மேற்படிப்பு வாராது என்று கருதி நல்ல கோர்ஸில் கிடைத்த இடத்தை விட்டுவிடுவது.
  3. வசதியில்லாத பெற்றோர், முடியாது என்றறிந்தும் அதிகச் செலவாகும் படிப்பை மேற்கொள்வது.
  4. பெற்றோர் பிள்ளைகள் விஷயத்தில் படிப்பில் பாரபட்சமாக இருப்பது.
  1. சிறப்பான பள்ளி பெற்றுக் கொடுத்த மார்க்கை நம்பிச் சிறப்பான படிப்பில் சேர்த்து அவதிப்படுவது.
  2. பையன் ஆசைப்படுகிறான் என்று அவனால் முடியாததை அவனுக்குப் பெற்றுக் கொடுப்பது.
  3. பெரிய படிப்பை நாடும் பையனுக்கு முன்கூட்டியே அதற்குத் தகுந்த பழக்கங்களை ஏற்படுத்தத் தவறுவது.
  4. கட்டாயத்தின் பேரில் மகனிடம் காரியத்தைச் சாதிக்கலாம் எனத் தப்புக் கணக்குப் போடுவது.
  5. மகன் சொல்லும் அத்தனைப் பொய்களையும் நம்பி அவன் வாழ்வைச் சிதறடிப்பது.
  6. கெட்ட பழக்கம் இருப்பது தெரிந்தும் நிறையப் பணம் கொடுப்பதை நிறுத்த முடியாதது.

மேற்கூறிய காரணங்களையும், அவைபோன்ற மற்ற தொந்தரவை உற்பத்தி செய்யும் காரணங்களையும் முனைந்தால் தடுக்க முடியும். பள்ளியில் மந்தமான பிள்ளைகள் கல்லூரியில் சிறப்பாக இருப்பதுண்டு. இவர்களுக்குக் காலம் கடந்து மலர்பவர்கள் (latebloomers) எனப் பெயர். பெற்றோர் சிறப்பான எதிர்காலத்தை இக்குழந்தைகட்குக் கொடுக்க முடியாமல் போவதைத் தடுக்க வேண்டுமானால் படிப்பு சம்பந்தமான அனுபவம் உள்ளவர்களையோ அல்லது அவனுடைய பழைய ஆசிரியர்களையோ கலந்தாலோசிக்க வேண்டும்.

பையன் மேற்படிப்புக்குப் போவதற்கு ஓரிரு ஆண்டுகள் முன்பே யோசிக்கத் தொடங்கி கீழ்க்காண் பனவற்றைக் கடைப்பிடித்தால் 90, 95 பங்கு பிரச்னை விலகுவதைக் காணலாம்.

அறிவில்லாத பேராசையைப் பூர்த்தி செய்வதைப் பெருமுயற்சி என்று தவறாகக் கருதாமல் வரையறை எது, பையனுடைய புத்திசாலித்தனம், நம் வசதி, அவன் உடல்நிலை, அவனுக்குரிய இன்றையப் பழக்கம், எதை அவனால் சமாளிக்க முடியும், எது முடியாது என்று ஆராய்ந்து, நாம் அறியும் எல்லையைத் தாண்டக்கூடாது.

"இந்தத் தெருப் பிள்ளைகள் எல்லாரும் செய்வதை நம் பையனும் செய்யப் பிரியப்படுகிறான். அவனால் முடியாது. இருந்தாலும் நான் ஒப்புக்கொண்டேன்'' என்று சொல்வது போன்றவற்றை ஆயிரம் காலத்துப் பயிரான படிப்பு விஷயத்தில் சொல்லக்கூடாது.

  • நமக்கு அனுபவமில்லை என்றால் நாம் விரும்பும் கோர்ஸில் அனுபவமுள்ளவர்களை அணுகி யோசனை கேட்கத் தயங்கக் கூடாது.
  • நம் பிள்ளையைப் பொருத்தும், அவனுக்கு நாம் கருதும் கோர்ஸைப் பொருத்தும் ஏதேனும் (special) விசேஷமான முக்கியத்துவம் உள்ளவை இருக்கின்றனவா, அதை நாம் புறக்கணிக்கின் றோமா என்று தக்கவரை நாடி யோசனை கேட்க வேண்டும்.

இவை பெரும்பாலான பிரச்னைகளை அறவே விலக்கும். விலக்கமுடியாத பிரச்னைக்குரியவர்கள்

உண்டு. தற்சமயம் பிரச்னை ஏற்பட்டுவிட்டது. இனி என்ன செய்வது என்பவருண்டு. அவர்கள் அன்னை பக்தர்களானால் அவர்களுக்கு அதற்கும் வழியுண்டு. எந்தத் தவற்றைச் செய்ததால் பிரச்னை ஏற்பட்டது என்று புரிந்தவுடன், மனத்தில் உண்மையாகவும் பூரணமாகவும் அத்தவற்றை ஏற்றுக்கொண்டு, உணர்ந்துவிட்டால், பிறகு அன்னையிடம் பிரார்த்தனை செய்தால் நிலைமை மாறி பிரச்னை தவறாது விலகும். விலக்க முடியாத பிரச்னையுள்ளவர் நம்பிக்கையைப் பூரணமாக அன்னைமீது வைத்துப் பிரார்த்தித்தால் எதில் அது விலகும்.

*******



book | by Dr. Radut