Skip to Content

10. அதிர்ஷ்டம்

பஸ் கண்டக்டராக வேலை செய்தவர், ஒரு பஸ் முதலாளியாகி, பல பஸ்களுக்கு முதலாளியாவதையும் அதைப் போன்ற மாற்றம் எந்தத் துறையில் நிகழ்ந்தாலும் அதை நாம் அதிர்ஷ்டம் என்று அறிவோம். போன ஜென்மப் புண்ணியம் இந்த ஜென்மத்தில் எதிர்பாராத நிலையில் கொடுக்கும் அளவுகடந்த பலனை அதிர்ஷ்டம் என்று விவரிக்கின்றோம்.

ஒரு காரியம் பூர்த்தியாகப் பல பகுதிகள் நிறைவு பெறவேண்டும். சில பகுதிகள் மட்டும் நிறைவு பெற்றால் பலன் வருவதில்லை. மற்ற பகுதிகள் நிறைவு பெறும் வரை பலன் காத்திருக்கும். கடைசிப் பகுதியும் நிறைவு பெற்றவுடன் பலன் முழுவதுமாகக் கிடைக்கும். அரசனாவதற்கு மனத் திட்பம், தலைமையை ஏற்கும் வலிமை, மற்றவர்களுடைய உணர்வை அறியும் நுட்பம், வீரம், தைரியம், நிதானம் போன்ற குணங்களும் திறமைகளும் தேவை. சிருஷ்டியின் அமைப்பில் ஒரு பிறப்பில் ஒரு திறமையை ஆன்மா பெறுகிறது. கடைசிக் கட்டத்தில் அந்த ஆன்மா, அரச குடும்பத்தில் பிறந்தி ருந்தால், அரச பதவியைப் பெறும் பொழுது எவருக்கும் அது ஆச்சரியத்தைக் கொடுக்காது. ஓர் ஏழைக் குடும்பத்தில் அதே ஆன்மா பிறந்திருந்தால், கடைசித் திறமையை அங்குதான் பெற வேண்டியிருந்ததால், அதைப் பெற்றவுடன் வாழ்க்கை தானாக மாறி, அவனை அரச பீடத்திலிருத்தும் சந்தர்ப்பங்களை அவன்மீது திணிப்பதை உலகம் அதிர்ஷ்டம் என்று புரிந்து கொள்கிறது. இவற்றையெல்லாம் ஒருவர் விவரமாக அறிந்துகொண்டால், "சரி, நமக்கு அது இல்லை, விடு'' என்று ஆயாசமாக எழுந்திருப்பார். அன்னையை வந்து தரிசனம் செய்த வயது முதிர்ந்த பெண்மணி நாம் அந்த அம்சத்திற்குப் பிறக்கவில்லை என்று பெருமூச் செறிந்ததை அருகில் உள்ளவர்கள் கேட்டுச் சிரித்தனர். மனிதன் எந்த உயர்வையும் தன் நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் மனம் உடையவன்.

அதிர்ஷ்டம் என்றால் என்ன என்று சில சமயங்கள் விவாதம் நடக்கும் இடங்களில் தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும்', அதிர்ஷ்டமிருந்தாலும், முயற்சி முழுமையாக வேண்டும்', முயற்சி செய்து பெற்றால் அது எப்படி அதிர்ஷ்டமாகும்?', முயற்சியை முழுமையாகச் செய்ய ஆயிரம் பேர் தயார், கூடிவருவது நம் கையில் இல்லை', நாம் என்ன முயற்சி செய்தாலும் காரியம் கூடிவருவதே அதிர்ஷ்டம்' என்றெல்லாம் கூறுவார்கள். திறமை, உழைப்பு, நேர்மை, சுறுசுறுப் புடன் செய்த வேலைகள் கூடிவரும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. சந்தர்ப்பங்களின் மாற்றத்தால் அவை கெட்டுப் போவதுண்டு. நமக்குத் திறமை யிருக்கலாம். அதற்குரிய சந்தர்ப்பம் வேண்டும். நாட்டையே ஆளக்கூடிய திறமையுள்ளவர்கள் நாட்டாண்மைக்காரராக இருப்பதுண்டு. ஒன்றரைக் கோடி ரூபாய் பெறும் வைர முடியையும் முதலாளி முழு நம்பிக்கையுடன் கொடுக்கும் அளவுக்கு நாணயமுள்ள நகைக்கடை குமாஸ்தாவுக்கு முழுசாக

ஆயிரம் ரூபாய் சம்பளமாகக் கிடைப்பதில்லை. அயராது உழைப்பவர்கள் எல்லா நிலைகளிலும் உண்டு. ஆனால் இவற்றில் எந்த ஓர் அம்சமும் குறைவாக இருந்து காரியம் வெற்றி பெறுவதில்லை. 9 ஆம் வகுப்பு படித்த வி.பி. மேனன் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் எப்படி சர்க்கார் குமாஸ்தா ஆனார் என்று தெரியாது. அவரது திறமை ஓர் அதிகாரியின் கண்ணில் பட்டது. படிப்பின் குறையைப் புறக்கணித்து சர்க்காரில் உத்தியோகம் வந்தது. மத்திய சர்க்காரில் உள்துறைக் காரியதரிசியாகி, கவர்னராகவும் பதவி வகித்தார். அவருக்கு நிகரான திறமை, உழைப்பு, நேர்மையுடைய பலர் ஆரம்ப கட்டத்திலேயே நின்றுவிட்டனர்.

1947இல் வி.பி. மேனன் லார்ட் மௌண்ட் பேட்டனின் கவனத்திற்கு வந்து பெரும் புகழ் பெற்றார். ஒரு தொழிலதிபரானவரைச் சந்தித்து விவரம் கேட்டால், எல்லா விவரங்களும் சொல்லிய பிறகு, "இதெல்லாம் சரி, முடிவு நம் கையில் இல்லை'' என்பார். ஒரு பெரிய காரியத்தைப் பூர்த்தி செய்ய அதற்குத் தேவையான எல்லாத் திறமைகளும், எல்லாச் சாதனங்களும், எல்லாப் பகுதிகளும் தவறாமல் தேவை. எந்த ஒரு சிறு விஷயமும் முக்கியமான பகுதியில் குறைவாகி விட்டால் காரியம் பூர்த்தியாகாது. அவ்வளவும் இருந்தாலும், எதிராக வேலை செய்யும் எந்த ஒரு சந்தர்ப்பமும் அத்தனைக் காரியங்களையும் கெடுத்துவிட முடியும். முதற்பகுதி நம் முயற்சியைச் சேர்ந்தது. அடுத்தது நம் கையில் இல்லை. தானாகக் கூடிவர வேண்டியது. நம் பங்கு பூரணமாக இருந்து, அடுத்ததும் சேர்ந்து வந்து காரியம் பூர்த்தி

யானால், அதனால் அடுத்த காரியம் பூர்த்தியாகும் என்று சொல்ல முடியாது. எத்தனையோ பேர், "என் அதிர்ஷ்டம் உத்தியோகத்துடன் முடிந்துவிட்டது. படிப்போடு முடிந்துவிட்டது, ஆரம்பத்தில் எல்லாம் கூடிவந்தது, பிறகு விஷயம் கிணற்றில் கல்போட்டது போலாகி விட்டது'' என்று கூறுவதைக் கேட்கலாம். ஒரு சிலருக்குத் தொடர்ந்து காரியம் கூடிவருகிறது. மற்ற தொந்தரவுகள் வருவதில்லை. இலட்சம் கோடியாகத் தொடர்ந்து பெருகிவருகிறது. அதையே அதிர்ஷ்டம் என்று நாம் பேசுகிறோம்.

அதிர்ஷ்டத்தின் தத்துவம் என்ன? நம்மால் அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்ய முடியுமா? அன்னைக்கும் அதிர்ஷ்டத்திற்கும் தொடர்புண்டா?

நமக்குச் சிறந்த திறமையுள்ள இடம் நமக்குத் தெரியும். அதில் பலன் வந்திருக்கும். ஆனால் பெரும் பலன் வந்திருக்காது. அன்னையை ஏற்றுக்கொண்டபின், அந்த விஷயத்தில் மீண்டும் திறமை, உழைப்பு, நேர்மையுடன் ஒரு காரியத்தைச் செய்ய முன்வந்து அவற்றை எல்லாம் அன்னை நினைவுடன் செய்தால், நம் பங்கு குறைவில்லாமல் இருப்பதால் தாமே கூடிவர வேண்டியவற்றை அன்னை குறைவற நிறைவேற்றி, அக்காரியத்தில் அதிர்ஷ்டம் வெளிப்படும்படிச் செய்வதைத் தவறாமல் காணலாம். ஐந்து ரூபாய் சம்பளத்தில் வாழ்க்கையை ஆரம்பித்து, வாழ்க்கையையே ஒரு போராட்டமாக நடத்தி மற்றவர்களுக்கு எளிதில் கூடிவரும் வேலையை, பலமுறை தோல்வியுற்றுப் பிறகு முடித்து ஓரளவு செல்வம் பெற்ற ஒருவர், தம் நிலத்தில்

(போர்) துளைக்கிணறு போட முன்வந்தார். அவர் நிலம் உள்ள பகுதி நீருற்றில்லாத பகுதி. எனவே கிணறு போடுபவர்களுக்குச் சிரமம். இவருக்கு அடுத்த நிலத்துக்காரர் பத்து இடங்களில் கிணறு தோண்டித் தண்ணீர் கிடைக்காமல், பதினோராம் இடத்தைச் சோதனை பார்க்கும் நேரம், இவர் பங்குக்கான உழைப்பு, திறமை, நேர்மைக்குக் குறைவில்லை. இந்த 45 வயதுவரை ஒரு முறைகூடக் காரியம் எளிதில் கூடிவந்ததில்லை. போர்' கிணறு எவருக்கும் சிரமத்தைக் கொடுக்கக் கூடியது என்ற யோசனையுடன் என்னிடம் வந்தார். நான் அன்னைக்கு வேண்டிக் கொள்ளச் சொன்னேன். முதல் முயற்சியிலேயே அவர் போர்' கிணறு வெற்றியடைந்தது. தண்ணீர் கிடைத்ததைவிட அவருக்குத் தம் முயற்சி முதலேயே வெற்றி பெற்றதில் அளவு கடந்த திருப்தி. அதைத் தொடர்ந்து அவர் தம் வாழ்வில் கூட்டாளி விஷயத்திலும், கடை வியாபாரத்திலும், பிள்ளையின் படிப்பிலும், அதிர்ஷ்டம் தென்படுவதைக் கண்டார்.

முப்பது வருஷ யோக முயற்சி பலன் தருவதைப் போல் அன்னையை ஏற்றுக் கொண்டவர்க்கு அதே பலன் இரண்டு, மூன்று மாதங்களில் கிடைக்கும் என்கிறார் அன்னை. மனித முயற்சி, தவம் உள்பட, காலத்திற்குட் பட்டது. அன்னை காலத்தைக் கடந்தவர், முப்பதாயிரம் ஆண்டுக்குப் பின் பிறக்க இருக்கும் சத்திய ஜீவனை இன்று உற்பத்தி செய்ய முயற்சி செய்யும் யோகம் அன்னையினுடையது. அதாவது காலத்தைச் சுருக்கும் திறன் உடையது. தவம் செய்யும் முனிவர் தெய்வத்தை

அடையத் தாம் முயல்வதால் அது மனித முயற்சியாகிறது. அன்னை பக்தர்கள் அன்னையை ஏற்றுக்கொண்டு, அன்னையைச் சரண் அடைந்து, தங்கள் காரியங்களை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தபின், ஆரம்பித்தால் அது அன்னையின் வெளிப்பாடாக, காலத்தைக் கடந்த சக்தியின் செயலாக இருப்பதால் பல ஆண்டுகளில் நடக்க வேண்டியது சில நாள்களில் நடைபெறுகிறது. ஒரு தந்திர யோகி அன்னையைச் சிலமுறை சந்தித்தார். அன்னை அவருடன் தியானம் செய்தார். அவருக்கு ஆசீர்வாதம் செய்தார், அருள் வழங்கினார். அவர் தம்மை ஸ்ரீ அரவிந்தர் உருவத்துடன் அன்னை முன் நிற்கச் செய்தார். தந்திரயோகி அவரையே ஸ்ரீ அரவிந்தராக அன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கருதுகிறார் என்று தெரிந்து அன்னை வருத்தப்பட்டார். பல ஜென்மங்களில் பெறும் தவப்பலனை அன்னை அவருக்குச் சில நாள்களில் கொடுத்ததாகக் கூறியிருக்கிறார். காலத்தைச் சுருக்குபவர் அன்னை.

அத்துடன் நாம் ஒரு சமயத்தில் ஒன்றைத்தான் பெற முடியும். அதனால்தான் திறமையை ஒரு பிறவியிலும், அறிவை அடுத்த பிறவியிலும் மனிதன் பெறுகிறான். ஒன்றன்பின் ஒன்றாகப் பெறும் அம்சங்களை, அன்னையை ஏற்றுக் கொண்டபின் ஒரே சமயத்தில் பெற முடியும், ஒரு திட்டத்தில் வேலை செய்வதன் மூலம் திறமையையும், வலிமையையும், அறிவையும் பெற அன்னை பக்தர்களால் முடியும். இடையறாத அன்னை நினைவிருந்தால், செய்பவற்றைச்

சமர்ப்பணம் செய்தால், அன்னை சக்தி வெளிப்பட்டு, ஒவ்வொன்றாய்ப் பெறவேண்டியவற்றை ஒரே சமயத்தில் நமக்கு அளிக்கும்.

பெரிய அந்தஸ்தில் உள்ளவருக்கு அவர் செய்யும் காரியங்களை, அனைவரும் ஒத்துழைப்புடன் நிறை வேற்றிக் கொடுப்பார்கள். எளியவன் செய்யும் காரியத்திற்கு அனைவரும் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். ஒத்துழைக்க மாட்டார்கள். பெரியவருக்கு உதவி செய்வதில் பெருமையடைவதால் அனைவரும் ஒத்துழைக்கப் போட்டி போடுவார்கள். அதிர்ஷ்டமுள்ள வனுக்கு அவனைவிடப் பெரிய சக்திகள் அனைத்தும் போட்டியிட்டுக் கொண்டு சேவை செய்து அவன், சிறியதாக ஆரம்பித்ததைப் பெரியதாகப் பூர்த்தி செய்கின்றன. 50 ஆண்டுகளில் நிறைவேறக் கூடியதை 5 ஆண்டுகளில் நிறைவேற்றித் தருகின்றன.

ஒருவனுடைய முயற்சிக்குக் குடும்பம் உறுதுணை யாக நின்றால், அக்குடும்பம் உயர்ந்ததானால், நாம் அவனைப் பெரிய இடத்துப் பிள்ளை என்கிறோம். செல்வாக்குள்ள ஒருவர், மற்றவர் முயற்சிக்குத் துணை நின்றால் அதை, சிபாரிசு, செல்வாக்கு என்று அறிகிறோம். வாழ்க்கையே ஒருவனைத் தூக்கிவிடக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதைப் போல் செயல்பட்டால், அதை அதிர்ஷ்டம் என்று நாம் உணர்ந்து பலரிடம் பறை சாற்றுகிறோம்.

அன்னையை நம் வாழ்வில், வாழ்வைவிட முக்கியமாக ஏற்றுக்கொண்டால், நம் வாழ்வை அன்னை மீதுள்ள நம்பிக்கைக்குக் கட்டுப்படுத்தினால், உலக

வாழ்வு நம்மில் செயல்படும். அன்னைக்குக் கட்டுப்படும். நமக்கு நம் வாழ்வைவிட, அன்னை முக்கியம் என்று கருதினால், அன்னை நம் குடும்பத்தார் அனைவரையும் நம் முயற்சிக்குத் துணையாக்குகிறார். செல்வாக்குள்ள மனிதர்களை நம் முயற்சியைப் பூர்த்தி செய்யச் சொல்கிறார். நம் சொந்த வாழ்வை அன்னைக்கு அடிமைப்படுத்திவிட்டதால், அன்னை தமக்குக் கட்டுப்பட்ட உலக வாழ்வை நம் செயலைப் பூர்த்தி செய்யும்படிப் பணிக்கின்றார். நம் காரியம் பேர் அளவில் பூர்த்தியாகிறது. இதை அதிர்ஷ்டம் எனப் பலரும் கருதுகிறார்கள். நாம் நம் வாழ்வில் ஜாதகத்திலில் லாத அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்துவிட்டோம்.

ஒரு சோதனை செய்து பார்க்கலாம். நமக்கு அதிகத் திறமையுள்ள காரியம் எது என்று நமக்குத் தெரியும். திறமையுள்ள இடம் எது, பிரியம் உள்ள இடம் எது என்று வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். பிரியமுள்ள வேலை இந்தச் சோதனைக்குப் பயன்படவேண்டுமாயின் அங்குத் திறமையும் உயர்ந்த நிலையிலிருக்க வேண்டும். திறமை, உழைப்பு, நேர்மை நிறைந்த வாழ்வின் பகுதியில் ஒரு காரியத்தைத் தேர்ந்தெடுத்து, பூரணச் சமர்ப்பணத்தை மேற்கொண்டு, அதன் பகுதிகளை இடைவிடாத நினைவுக்குட்படுத்திக் காரியம் செய்தால் அந்தக் காரியம் அதிர்ஷ்டமாகப் பூர்த்தியாவதைப் பார்க்கலாம்.

பாஸ் செய்ய முடியாதவன் 45 நாளில் முதல் மார்க் வாங்கியதும், நன்கொடை திரட்டியவர் தாம் எதிர் பார்த்ததைப் போல் 24 மடங்கு பணம் திரட்டியதும்,

100 ரூபாய் சம்பளக்காரர் 18 ஆண்டுகளில் 500 கோடி நிறுவனத்தின் சொந்தக்காரராக இருப்பதும், சிறு விவசாயியினுடைய வருமானம் 100, 120 மடங்குகள் பெருகியதும், கடன் சுமை தாங்காமல் இறந்தவருடைய பிள்ளை சில வருஷங்களில் பலகோடி வியாபாரம் செய்ததும், மைனாரிட்டி அரசியல் கட்சி மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி பெற்றதும் அன்னை பக்தர்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்த சம்பவங்கள்.

அன்னையை ஏற்றுக்கொள்வதே அதிர்ஷ்டம். அவர் முறைகளை அறிந்து செயல்பட்டால் எந்தக் காரியத்திலும் அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்யலாம்.

  • திருஷ்டியில் இல்லாதது அதிர்ஷ்டம்.
  • இன்று அதிர்ஷ்டமாக நமக்குப் பலன் தருவது நம்மிடம் இல்லாததில்லை. நம் பார்வையில் இல்லாதது. அதைத் தமிழிலும் சம்ஸ்கிருதத் திலும் சேர்த்து குருட்டு அதிர்ஷ்டம் என்பார்கள்.
  • ஒரு ஜென்மத்தில் ஏற்பட்ட திறமை அப்பொழுது பலனளிக்கும் சந்தர்ப்பம் இல்லை என்றால், அடுத்த ஒரு ஜென்மத்தில் சரியான சந்தர்ப்பம் வரும்பொழுது அதே திறமை பலன் அளிக்கிறது. அத்திறமை இருந்து தெரிவதில்லை என்பதால் அதை அதிர்ஷ்டம் என்கிறோம்.
  • ஆன்மா ஒவ்வொரு பிறவியிலும் ஒரு திறமை யைப் பெறுகிறது.
  • எல்லாத் திறமைகளும் ஒன்று சேர்ந்த பின்னரே பலன் வரும்.
  • பல்வேறு பிறவிகளில் ஒன்றன்பின் ஒன்றாய், திறமை சேருவதே காலத்தின் அமைப்பு.
  • அன்னையின் சக்தி காலத்தைக் கடந்தது.
  • ஒவ்வொன்றாய்ச் சேரும் திறமைகளை அன்னை யின் அருளால் ஒரே பிறவியில் பெற முடியும்.
  • எல்லாத் திறமைகளும் இருந்து ஒன்று குறைந்தால் அன்னையின் அருள் அதைப் பூர்த்தி செய்யும்.
  • மனித முயற்சியால் பெறுபவை உழைப்பு, திறமை, நேர்மை.
  • தெய்வத்தால் நடக்கக் கூடியது புற நிகழ்ச்சி களின் ஒத்துழைப்புடன் கூடிவருகிறது.
  • நம் வாழ்வில் பூரண மனித முயற்சி 10 இல் ஒன்றே கூடி வந்து பூர்த்தியாகும்.
  • அன்னை வாழ்வில் பூரண மனித முயற்சி ஒன்றுகூடத் தவறுவதில்லை.
  • மனித முயற்சியால் குறையில்லாத அன்பருக்குத் தெய்வத்தின் பங்கை கூடிவருதல் அன்னை கேட்காமல் நிறைவேற்றுகிறார்.
  • பூரண மனித முயற்சியும், சமர்ப்பணம் நிறைந்த அன்னை நினைவும் சேர்ந்தால் அதிர்ஷ்டம் ஏற்படுகிறது.

பூரண மனித முயற்சி + சமர்ப்பணம் = அதிர்ஷ்டம்.

மனித வாழ்வு + அன்னை பக்தி = அதிர்ஷ்டம்.

மறைந்துள்ள திறமை வெளிவந்து இன்றைய முயற்சியை அதிர்ஷ்டமாகப் பூர்த்தி செய்வது போல், இன்றைய மனித முயற்சியில் உள்ளவற்றை இடையறாத அன்னை நினைவு பூர்த்தி செய்து செயலை அதிர்ஷ்டமாக்கும்.

போன ஜென்மத்தில் செய்தவை இந்த ஜென்மத்தில் அதிர்ஷ்டமாக வருவது நாம் அறிந்தது. இந்த ஜென்ம முயற்சியை இதே ஜென்மத் தில் அதிர்ஷ்டமாக அனுபவிக்கச் செய்வது அன்னையின் சக்தி. அடுத்த ஜென்மத்தில் வாழ்வில் கிடைப்பது, அன்னையிடம் முயற்சி முடிந்தவுடன் கிடைக்கும். அன்னையை ஏற்றுக்கொண்டபின் மனித முயற்சி, புண்ணியமாகவும், அதிர்ஷ்டமாகவும் மாறுகிறது. அன்னை பக்தர்கள் தங்கள் வாழ்வில் பூரண முயற்சியால் அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்து கொள்ள முடியும். உழைப்பு, திறமை, நேர்மை நிறைந்த முயற்சியே பூரணமுயற்சி.

*******



book | by Dr. Radut