Skip to Content

07. நற்றிணையில் ஒரு நற்செய்தி

நற்றிணையில் ஒரு நற்செய்தி

M. மணிவேல்

சங்க இலக்கியங்கள் பண்டைத் தமிழரின் பண்பாடு, நாகரிகம், ஒழுக்கம், நெறியான வாழ்க்கை முறையைப் பற்றி விவரிக்கின்றன. தலைவனும் தலைவியும் மணம் முடிப்பதற்கு முன் கூடிப் பழகுவர். இதனை "களவொழுக்கம்'' என்பர். தலைவி தான் விரும்பும் தலைவனை, தான் விரும்பியவாறு மணம் முடித்துக் கற்பொழுக்கத்தில் இல்லற வாழ்வில் இணைந்து ஈடுபடுதல் என்பது "அறத்தொடு நிற்றல்'' என்பர்.

பொருள் செல்வத்தை நாடி காதலன் பொருளீட்ட வெளியூர்ச் செல்வான். பொருள் வழியிற் பிரிந்து செல்வதற்குக் காதலியைப் பிரிதல் என்பது இயற்கை. அப்படி ஒரு தலைவன் (மலைநாடன்) தலைவியைப் பிரிந்து இருக்கிறான். பொருள் ஈட்டப் பிரிந்து சென்ற தலைவன், குறித்த நாளில் வருவதாகச் சொன்னபடி வராததினால் தலைவி பெரிதும் வருந்தினாள். பிரிவாற்றாமையால் தலைவனை எண்ணி ஆற்றாத் துயரத்தில் ஆழ்கிறாள் தலைவி. அவளது அழகிய கண்கள் ஒளி மங்கின. வளையல்கள் நெகிழ்ந்தன. ஒளி பொருந்திய நெற்றி பசலையுற்றது.

குறித்த காலத்தில் வராதிருந்த தலைவனை எண்ணி, நெஞ்சம் வருந்திய தலைமகளுக்கு, அவளது தோழி ஆறுதல் கூறும் வகையில், தலைவி மகிழும் வண்ணம் தான் அறிந்த ஒரு நற்செய்தியைக் கூறுகிறாள். அந்த நற்செய்தியில் பொதிந்துள்ள ஆன்மீக விழிப்புணர்வைப் பற்றிய ஒரு மறைமுகமான குறிப்பினை நற்றிணையில் காண முடிகிறது.

நலிவுற்ற தலைவியை நோக்கிக் கூறும் தோழியின் கூற்று: "என் அன்புத் தலைவியே! நான் சொல்வதைக் கேள். நம் மலை நாட்டில் காட்டாறு ஓடுகிறது. பாயும் நீரில் பாசி எங்கும் பரவியிருக்கும். கரையைக் கரைத்து செல்லும் வெள்ள நீர், பாசியை அங்குமிங்கும் அலைக்கும். வெண்மையான அருவி நீர் பாயும் நீர்த்துறையிடத்தே யானை, புலியோடு சண்டையிட்டது. சண்டையிட்டதில் யானை புண்பட்டது. புண்பட்ட யானையின் தந்தத்தைக் கவர விரும்பிய வேடுவர், வில்லில் அம்பைத் தொடுத்தனர். அம்பு பட்டதால் யானை பிளிறிற்று. அந்த ஒலி காட்டில் இடி முழக்கம் போல் கேட்டது. அவ்வாறு ஒலிக்கும் மலையை உடைய நம் தலைவன் இப்பொழுதே வருவான் என்று நம் அடுத்த வீட்டுப் பெண் ஒருத்தி மற்றொருத்தியுடன் பேசும்போது கூறினாள். அந்தச் சொற்கள் இனிமையாக இருந்தன. அயலாள் ஒருத்தி தற்செயலாகக் கூறிய சொற்கள் நமக்கு நன்னிமித்தமாகத் தோன்றிற்று. அதனால் நம் பெருமலைநாடன் இப்பொழுதே வருவான் என்று நான் கருதுகிறேன்'' என்றாள். "அமுதமான வார்த்தைகளைச் சொன்ன அடுத்த வீட்டுப் பெண் அமுதத்தை உண்டு இன்புற்று வாழ்வாளாக'' என்று தோழி வாழ்த்துகிறாள். நல்ல சகுனமான வார்த்தையை மொழிந்த நற்செய்திக்கு, நன்றியினைத் தெரிவிக்கும் வகையில், அடுத்த வீட்டுப் பெண்ணை வாழ்த்தியது, தோழியின் நற்பண்பினைக் காட்டுவதாக, நற்றிணைப் பாடல் அமைந்துள்ளது.

நற்றிணையில் வரும், இக்காட்சியில் இடம் பெற்றுள்ள ஒரு நற்செய்தியைப் போல், "ஆன்மீகமும் ஐஸ்வர்யமும் பாகம் ஒல், கட்டுரை வரிசை எண் 31ல்'' ஒரு விளக்கம் உள்ளது. அந்த விளக்கத்தை ஒப்பு நோக்குகையில், அந்தக் காலத்து தமிழ் மக்களிடத்தில் ஆன்மீக விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தது என்று தெரிகிறது. அயல்வீட்டுப் பெண்ணின் வாயினின்றும் வெளிப்பட்ட சொல் "நம் தலைவன் வருவான்'' என்ற நற்செய்தி அடுத்து நிகழவிருக்கும் நிகழ்ச்சியை முன்கூட்டியே அறிந்து அறிவித்தாற் போன்று அமைந்துள்ளதால், அக்காலத்து தமிழ் மக்கள் ஆன்மீக விழிப்புணர்வு பெற்றவர்களாக இருந்தார்கள் என்பதனை யூகிக்கலாம்.

"ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்'' கட்டுரையில் வரும் ஒரு கருத்து: "ஆன்ம விழிப்பு உணர்வு உள்ளவர்களுக்கு, அவர்கள் காண்பது மற்றும் கேட்பது யாவும் சகுனங்களாக அமையும். நாம் வீட்டை விட்டுக் கிளம்பும்போது தெருவில் யாராவது ஒருவர் மற்றவரிடம் பேசும்போது "இன்று உனக்கு அதிர்ஷ்டம்"' என்ற சொல் காதில் விழும்போது அது நமக்கு நல்ல சகுனமாகும்''.

நற்றிணையில் அதுபோல் அடுத்த வீட்டுப் பெண் ஒருத்தி மற்றொருத்தியுடன் பேசும்போது உரைத்த நல்வாக்கு, தோழிக்கு நல்ல சகுனமாகத் தோன்றிற்று.

ஆன்மீக விழிப்புணர்வு உள்ளவர்கள், எதிர்காலத்தில் நிகழவிருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே நன்னிமித்தமாக (சகுனமாக) உணர்வார்கள் என்ற சிறந்த கருத்தினை, "ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்'' கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்தும் மற்றும் நற்றிணையில் கண்டுள்ள நற்செய்தியும் நமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டுவதாக இந்த விளக்கங்கள் அமைந்துள்ளன.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
வாழ்வின் சிறுமையை நிந்திப்பதும், பெருமையைப் போற்றுவதும் நாம் பழைய வாழ்வை விட்டகலவில்லை என அறிவிக்கும்.
 
 
 
******
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நமது சிறிய - பெரிய பிரச்சினைகளை எல்லாம் தீர்க்கப் பயன்படும் சக்தி, யோகத்தில் ஒரு செயலைப் பூர்த்தி செய்யத் தேவை.
 
அர்ப்பணமாக எழும் அசைவு யோக சாதனை.
 
 
 
 ******



book | by Dr. Radut