Skip to Content

09. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

42. எதிர்பார்க்காத மனம்.

மனிதனுக்குக் கட்டுப்படாதவை ஏராளம். மனத்திற்குக் கட்டுப்படாதவை மனிதனுக்கும் கட்டுப்படாது. கட்டுப்படுவது என்றால் என்ன? எவை கட்டுப்படா?

ஆசை, ஆர்வம், பயம், எதிர்பார்ப்பது, அவசரம் போன்றவை நமக்குக் கட்டுப்படா.

நாலு பேர் பேசும்பொழுது அந்த விஷயம் நமக்குத் தெரியும் என்றால், நம்மை எவரும் அழைக்காவிட்டாலும், நாமே முனைந்து பேசத் தோன்றும்.

  • அனைவரும் நம் போன்றவரானால் பேச்சுக் கட்டுப்பாட்டிலிருக்காது.
  • அனைவரும் நமக்கு உட்பட்டவரானால் பேச்சைக் கட்டுப்படுத்தவே முடியாது.
  • அதாவது முடியும் என்பதைச் செய்யாமலிருக்க முடியாது.

மனைவியோ கணவனோ ஊருக்குப் போனவர் 10 மணிக்கு வருவாரெனில் அதற்கு முன்பே மனம் இடைவிடாது எதிர்பார்க்கும்.

அம்மனநிலை மனிதனுக்குக் கட்டுப்படாது.

ஏன் அப்படி எதிர்பார்ப்பு எழுகிறது?

நமக்குப் பாசம், பற்று அதிகம் அதனால் எதிர்பார்க்கிறோம் என்பது நம் மனநிலை.

பாசமும் பற்றும் பூரணப்படாத நிலையில் மனம் எதிர்பார்க்கும் என்பது ஆன்மீக உண்மை.

  பரீட்சை எழுதினால் ரிஸல்ட் எதிர்பார்க்கிறோம், கேஸ் நடத்தினால் தீர்ப்பை எதிர்பார்க்கிறோம். அப்படி எதிர்பார்ப்பவை ஏராளம்.

  • பரீட்சையென முதல் வகுப்பு முதல் ங.ஆ.வரை 20 அல்லது 25 பரீட்சை எழுதியிருந்தாலும் ரிஸல்ட் எதிர்பார்க்கும் பழக்கமில்லாதவருண்டு. ஏனெனில்

    பாஸாகுமா என்ற கேள்வி அவர் மனத்தில் இல்லை.
    விஷயம் குறைவானால் மனம் எதிர்பார்க்கும்.
    எதிர்பார்ப்பது மனத்தின் பலஹீனத்தைக் காட்டும்.

  • எலக்ஷனில் யார் நின்றால் நிச்சயமாக வெற்றி பெறுவார் என அனைவரும் அறிவார்களோ அவருக்கு அந்த நினைவு இருப்பதில்லை.
  • ஒரு பெரிய சொத்து சுவீகாரமாக பலரும் எதிர்பார்க்கும் நிலையில் எவருக்குப் போகப்போகிறதோ அதை அனைவரும் அறிவார்கள். அவர் மனத்தில் அந்த நினைவு இல்லாமலிருப்பதுண்டு.
    • இது போன்ற நபர்கட்கு மற்றவர் போல் எதிர்பார்ப்பு எழுவதில்லை.
    • இவர்கட்கு வேறு விஷயத்தில் எதிர்பார்ப்பு எழும். அது எளிதில் கட்டுப்படாது.
    • இம்மன நிலையுள்ளவர்க்கு பூரண யோகம் செய்யும் தகுதியுண்டு.
    • அனைவரும் விரும்பும் பெண் தன்னை விரும்புகிறாள் என்பதை அவளுடன் பழகியும் அறிந்து கொள்ள முடியாத மனநிலையிது.

ஆசை எழாத நெஞ்சம், பயம் நுழையாத உயிர், அவசரப்பட முடியாத பொறுமை, எதிர்பார்க்காத மனநிலை பகவான் ஸ்ரீ அரவிந்தருக்குரியது.

அவர்கட்கு யோகம் பலிக்கும்.

எதிர்பார்ப்பது என்றால் என்ன?

The Mother என்ற நூலில் நாம் விலக்க வேண்டியவற்றுள் ஆசை, அதிகாரம் desire, demand என்ற இரு குணங்களைக் குறிப்பிடுகிறார். அதிகாரம் என்பது தனக்கு உரிமையற்றதை, ஆசை காரணமாகக் கேட்பது.

  • எதிர்வீட்டுக்காரன் அவன் கடனை நம்மை அடைக்கச் சொல்லிக் கேட்பது.
  • நமக்கு அறிமுகமற்றவர், நம் வீட்டு விசேஷத்திற்குத் தன்னை அழைக்க வேண்டுமென வற்புறுத்துவது.
  • நாம் கடையில் ஒரு பொருள் வாங்கப் போனால், கடைக்காரன் வேறொரு பொருளை வாங்கும்படிச் சொல்வது.
  • நமக்குத் தொடர்பில்லாதவர், அவர் மகனுக்கு அட்மிஷன் வாங்கித் தரும்படி கேட்பது.
  • மைத்துனன் தன் பெண்ணுக்கு நம்மைத் திருமணம் செய்யச் சொல்வது.
  • எந்தக் காரணமுமின்றி சலுகை பெற அதிகாரமாக, உரிமையாகக் கேட்பது சமூகம் அறிந்தது.
  • ஏதாவது ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு அது போல் கேட்பது.
  • "எங்கள் தெருவில் நீங்கள் குடியிருப்பதால், எனக்கு இந்த உதவி செய்ய வேண்டும்'' என்பது.
  • உதவி செய்யாவிட்டால், உபத்திரவம் செய்வேன் எனப் பயமுறுத்துவது.
  • "நான் லைன்மேன், உங்கள் வீட்டு விருந்திற்கு என்னை அழைக்காவிட்டால் விசேஷத்தின்போது கரண்ட் நின்றுவிடும்'' என்பது.

    சமூகத்தில் நாம் திறம்படச் செயல்பட வேண்டுமானால், இப்படிப்பட்ட கோரிக்கை, பயமுறுத்தல் எழக்கூடாது.

    லைன்மேன், நம் வீட்டு விசேஷத்தின்பொழுது கரண்ட் எக்காரணத்தாலாவது நின்றுவிட்டால், தன்னைச் சந்தேகப்படுவார்கள் எனப் பயந்து வேலை செய்வது நாம் செயல்பட அவசியம்.

    இங்கெல்லாம் சட்டம் செல்லுபடியாகாது. லைன்மேன் அடி விழும் எனப் பயப்பட்டால் பயமுறுத்தமாட்டான். ரௌடியின் பலமில்லாமல் சமூகத்தில் திறம்பட வாழ முடியாது.

  • அதிகாரம் செய்யாதவனுக்கு ஆசையிருக்கும்.
  • ஆசைப்படக்கூடாது என நினைப்பவனுக்கு எதிர்பார்ப்பிருக்கும்.
  • ஒருவன் நம்மை உரிமையில்லாமல் அதிகாரமாக உதவி கேட்கிறான் எனில் நம் மனத்தில் எதிர்பார்ப்பிருக்கிறது எனப் பொருள்.

    எதிர்பார்ப்பை மனத்தை விட்டு அகற்ற, அது சொல்லாக மாறுவதைத் தடுக்க வேண்டும். அதாவது உள்ளே சொல் எழக்கூடாது.

  • சொல் உள்ளே எழுந்தால் உரிமையற்றவற்றை அதிகாரமாகக் கேட்கும் குணம் நம்முடையது எனப் பொருள்.
  • மௌனம் சொல்லைக் கடந்து மனத்தை ஆட்கொண்டால் நமக்கு நாகரிகம் (good manners) வந்ததாகக் கொள்ளலாம்.
  • அதற்குப் பக்குவம் எனப் பெயர்.

தொடரும்.....

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அப்படித் திருப்திப்படுத்திவிட்டால், முயற்சி முழுமையாக வீணாகும்.
 

*****



book | by Dr. Radut