Skip to Content

08. அஜெண்டா

அஜெண்டா

 

Disciples never understood the Master

சிஷ்யர்கட்கு குரு புரிவதில்லை

நாலு பேர் உள்ள இடத்தில் அதிகாரமில்லாத நேரமானால், ஆர்வமான செய்தி எதுவுமில்லாவிட்டால் அவரவர் தங்கள் எண்ணத்திலேயே திளைத்திருப்பார்கள்.

அதுவும் சிந்திப்பவர் சிந்தனையில் மூழ்கியிருப்பார்கள். காதல் மையலில் உள்ளவர்க்குக் கண்டதெல்லாம் காதலுக்குரியவராகத் தெரியும்.

மேரி என்ற பெண் அனாதை. திருமணமாகாத ஏழைத் தாயாரை ஒரு பிரபு திருமணம் செய்வதாகப் பொய் உறுதியளித்து, போதை கொடுத்து கர்ப்பவதியாக்கிவிட்டார். பெண்ணின் அண்ணன் விஷயமறிந்து அளவு கடந்து குடித்துவிட்டு பிரபுவைத் தேடி வந்து தடியால் அடித்துக் கொலை செய்தார். கொலை செய்தவன் ஜெயிலுக்குப் போனான். பெண்ணுக்குப் பெண் பிறந்தது. பெண் பேரழகி. மேலும் பவித்திரமான புனிதவதி. அவளை விரும்பிய ஒருவன் இந்த நிலையிலும் அவளிடம் வந்து, அவளை மணந்து அமெரிக்காவுக்கு அழைத்துப் போவதாகக் கூறினான். ஆனால் அவள் கைக்குழந்தையை ஏற்கத் தயாரில்லை. பிரபுவின் சகோதரன் டாக்டர். நடந்தது தெரியுமாதலால், கொலை செய்தவன் நேர்மையை ஏற்று அவன் சார்பாக வழக்காடினார். அவர் மென்மை நிறைந்த சத்தியவான். டாக்டர், பெண் நிலையறிந்து அவளிடம் வந்து குழந்தையைத் தான் காப்பாற்றுவதாகவும், அதற்காகத் திருமணம் செய்யாமலிருப்பதாகவும் உறுதி கூறினார். பெண் இலண்டனில் பள்ளியில் வளர்ந்தாள். கொலை செய்தவன் விடுதலையாகி உழைப்பால் உயர்ந்து பெரும் சொத்து பெற்று, பெற்ற செல்வத்தை மேரிக்கு உயில் மூலமாக அளித்து, அந்த சொத்துக்கு டாக்டரை டிரஸ்டியாக நியமித்தான்.

மேரிக்குத் தகப்பனார் இறந்த விவரம், மாமா யார், எப்படி சம்பாதித்தார் எதுவுமறியாமல் இலண்டனில் வளர்ந்து நாகரிகமான பெண்ணாக வந்து சேர்ந்தாள். உள்ளூர் பிரபு மகன் பிரான்க். பிரபுவுக்குப் பெரும் சொத்து. கடன் அதைவிடப் பெரியது. மேரி அந்த வீட்டில் டாக்டரால் பல ஆண்டு பிரபுவின் பெண்களுடன் வாழ்ந்தவள். பிரான்க் மேரி மீது ஆசைப்பட்டதால் பிரான்க் தாயார் மேரியை வீட்டிலிருந்து விலக்கினார். மேரி சோகமானாள். பிரான்க் பிடிவாதமாக இருக்கிறான். அவள் தாயார் கோபமாக இருக்கிறாள். டாக்டருக்கு உயில் விஷயம் தெரியுமாதலால் பணம் மேரிக்கு வந்தால், கோபம் மறையும், திருமணம் நடக்கும் என அறிவார். அவரால் பேச முடியவில்லை.

நேரம் வந்தது. சொத்து மேரிக்கு வந்துவிட்டது. சம்பந்தப்பட்ட எவருக்கும் மேரிக்குச் சொத்து போகும் என நினைக்கவும் முடியவில்லை. சட்டப்படி விஷயங்கள் பூர்த்தியானபொழுது டாக்டர் மேரியிடம் வந்தார். மேரிக்கு இப்பெரிய சொத்துக்குரியவரைத் தெரியும். பெண்ணுக்கு அதிர்ச்சி தரக்கூடாது என டாக்டர் பேச்சைப் பக்குவமாக எழுப்புகிறார்.

டாக்டர்: மேரி, செல்வந்தர் உயில் வெளிவந்துவிட்டது. இந்தச் சொத்து யாருக்குப் போகிறது என உன்னால் நினைக்க முடியுமா?

மேரிக்குத் தனக்கு வரும் என நினைக்க முடியாது. இறந்தவரைப் பற்றிப் பொதுவாகத் தெரியுமே தவிர அவர் உறவு தெரியாது. எதுவும் தெரியாது. சற்றும் யோசிக்காமல்

மேரி: பிரான்க்குக்குப் போகிறது,

என்றாள். சொத்து பெரியது. அவளுக்குச் சம்பந்தமில்லாதது. நினைக்க விவரம் தெரியாதவள். அவள் திகைப்பது சரி. அவள் மனம் பிரான்க்கால் நிரம்பியிருக்கிறது. எதையும் பிரான்க்குடன் சேர்த்தே பார்க்க முடியும். அதனால் அப்படிக் கூறினாள்.

இது மனம் செயல்படும் வகை.
இருவர் பேசும்பொழுது இருவர் மனமும்
தங்கள் காரியங்களையே நினைத்துக்
கொண்டிருக்கும்.

ரங்கநாதன் என்று ஒருவர் கூறினால் அவர் தன் தம்பியைப் பற்றிப் பேசுவார். கேட்பவர் அவர் நண்பன் ரங்கநாதனை நினைத்துக் கொண்டிருப்பார். ஒருவர் கவனத்தை ஈர்த்து நாம் கூறுவதைக் கேட்கச் செய்வது எளிய காரியமில்லை.

  • குருவை அறிந்த சிஷ்யனுமில்லை.
  • சிஷ்யனை அறிந்த குருவில்லை.

பகவானை பலரும் ரிஷி என்றனர். வேறு சிலர் அவதாரம் என்றனர். ராம அவதாரம் மனித சுபாவத்திற்குட்பட்டு சீதையை சந்தேகப்பட்டது. போர்க்களத்தில் ஆயுதம் தாங்கிப் போரிட்டது. போர்க்களம் போகாமல் போரை வெல்ல அவதாரத்தால் முடியுமா? ரிஷியால் முடியுமா? விஸ்வாமித்திரர் அசுரரிடமிருந்து தன்னைப் பாதுகாக்க ராமனை அழைத்துச் சென்றார். பகவான் ரிஷியில்லை, அவதாரமில்லை எனில் வேறென்ன? இதுவரை நாம் சிந்தித்தோமா?

  • குருவை அறியும் சிஷ்யன் குருவுக்குச் சமமானவன்.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
5 வருஷத்தில் முடியாததை முடிக்க முயலும் திட்டத்தை 5 வாரத்தில் முடிக்க, ஆழத்தைத் தொடும் சமர்ப்பணம் உதவும்.
 
ஆழ்ந்த சமர்ப்பணம் வருஷத்தை நாளாக்கும்.

*****



book | by Dr. Radut