Skip to Content

லைப் டிவைன் - கருத்து

P.84 Understanding the wider purpose of Nature, there is no waste

இயற்கையில் விரயம் என்பதில்லை

விரயம் என்பதை நாம் அறிவோம். தேவைக்கு மேல் திறமையற்றவர் செய்யும் செலவு விரயமாகும். 5ஆம் வகுப்பு படிக்க கிராமத்து பணக்காரர் மகனுக்கு மாதம் 4000ரூபாய் செலவு செய்து டவுனில் வீடு எடுத்து சமையல்காரனை வைக்கிறார் எனில் அது விரயம். அது போன்ற எல்லா விரயங்களையும் நாம் அறிவோம்.

பல்வேறு காரியங்கள் விரயம்போல் தோன்றினாலும் உண்மையில் அது விரயமாகாது. நேரடிப் பலனை மட்டும் கருதுபவர்கள், அது போன்றவற்றை விரயம் எனக் கருதுவார்கள். வருமானம் குறைவான வீட்டில் பெரு முயற்சி எடுத்துப் பெரும்செலவு செய்து குழந்தைக்குச் சங்கீதம் கற்பிப்பதை அனைவரும் விரயம் என்பர். குழந்தையின் திறமையை அறிந்தவர்கட்கு அது விரயமாகத் தெரியாது. பிற்காலத்தில் குழந்தை பாடகியானால் அது விரயமில்லை எனப் புரியும். அடுப்பூதும் பெண்ணானால் விரயமாகத் தெரியும்.

நேரடியான விரயமானாலும், மறைமுகமான விரயமானாலும் இயற்கையில் விரயம் என்பதேயில்லை என்ற பகவான் மேலும் கூறுவதாவது:- பல்வேறு காரியங்களை ஒரு செயல்மூலம் சாதிப்பதில் இயற்கைக்கு நிகரில்லை.

அதாவது, நாம் இயற்கையில் விரயம் எனக் காண்பவை உண்மையில் அதிகத் திறமைக்குரிய முறைகள் என்றாகிறது. மழைபெய்து நீரெல்லாம் கடலுக்குப்போவது, புயலடித்து நாசம் செய்வது, காட்டில் பெய்யும் மழை போன்ற ஆயிரம் செயல்களை நாம் அனைத்தும் விரயம் எனக் கருதுகிறோம்.

அன்னை பக்தர்கள் தங்கள் கடந்த வாழ்வைக் கருதினால் "இப்படி விரயமாக்குவது பொறுக்குமா?'' எனச் சலித்துக்கொண்ட நிகழ்ச்சிகள், பிற்காலத்தில் பெரு இலாபத்தில் முடிந்ததைக் காணலாம். விரயமே கூடாது என்று அன்னை கூறுவதை எப்படி இத்துடன் சேர்ந்து புரிந்து கொள்வது?

  • திறமையற்றவர்க்கு விரயம் ஏற்படும்.
  • அதனால் திறமையை நாடுபவர் விரயத்தைத் தவிர்க்க வேண்டும்.
  • திறமை பெருந்திறமையானால் நம் நிலைக்கு மீறிய கட்டத்தில் சாதிக்க முடியுமானால், நம் நிலையிலுள்ளவர்க்கு நம் செயல் பெரு விரயம் செய்வதாகத் தெரியும்.
  • நாம் சாதிக்கும் காரியத்தைக் கருதும்பொழுது, விரயமில்லை என்பதுடன் அளவுகடந்து சிறிய முயற்சியால் அளவு கடந்த பெரிய காரியத்தைச் சாதித்துவிட்டோம் எனப் புரியும்.

ஹாஸ்டலில் இரவு பகலாய் அனைவரும் பரீட்சைக்குப் படிக்கும் பொழுது ஒரு கெட்டிக்கார மாணவன் லைப்ரரியில் படிப்பதை விரயமாகக் கருதும் நண்பன், "படித்தால் I Class வரும்! ஏன் நேரத்தை விரயமாக்குகிறார்?''" என்கிறார்.I Class வாங்க வேண்டியவன் II Classவாங்குகிறான். இதை விரயம் என நாம் ஏற்கிறோம். திறமையும், நேரமும் விரயமாகிவிட்டன.

II Class வாங்கி I.A.S.எழுதி, லைப்ரரி படிப்பால் பாஸ் செய்தால் அன்றைய விரயம் இன்று பலன் கொடுத்ததைக் காண்கிறோம்.

இதனுள் உள்ள கருத்துகள்:

  • சிறியவன் பெரிய காரியம் செய்ய அதிக முயற்சி வேண்டும்.
  • இயற்கையில் விரயமில்லை என்பதைப்போல், வாழ்விலும் விரயமேயில்லை.
  • பணம் விரயமானால் அறிவு வளரும், முயற்சி விரயமானால் திறமை வளரும்.
  • எது விரயமாகத் தோன்றினாலும், அடுத்த உயர்ந்த நிலையில் உரிய பலனிருக்கும்.

***********



book | by Dr. Radut