Skip to Content

09. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

அன்றும் வாழ்ந்தோம். இன்றும் வாழ்கிறோம். வாழும் வாழ்க்கையிலும், வாழும் விதத்திலும் எத்தனை வித்தியாசம். காதில் விழுந்தபோதும், கண்ணில் கண்டபோதும் வராத நம்பிக்கை உணர்ந்த வினாடியிலேயே வந்தது. "நான் உன் வாழ்வில் வரத்தான் போகிறேன்" எனத் தலையிலடித்து உணர்த்தி, எம் வாழ்வில் புகுந்த அன்னை இன்று எங்கள் வாழ்க்கையாகி, கருணையினால் எம்மை சிலிர்க்க வைத்த சம்பவங்கள் பல. உணர்ந்தவை எல்லாவற்றையும் எழுத முடியாது. எழுதியவை கூடி உணர்த்தியவை ஆகாது. நாங்கள் உணர்ந்த அந்த எல்லையில்லாத கருணையை எங்ஙனம் விளக்கி எழுதுவது என்பதே குழப்பமாக உள்ளது.

B.Ed. சேருவதற்காக விண்ணப்பித்திருந்தேன். நான், விண்ணப்பம் செய்யும்போது மனதில் நம்பிக்கையில்லை. சேர்ந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்ற அலட்சியம். நம்பவே முடியவில்லை. நடந்தவை எதுவும் மனித சக்திக்கு உட்பட்டதாக இல்லை. இரண்டு நாட்கள் கெடு கொடுத்து ரூ.4,000/- கட்டச் சொல்லி கடிதம் வந்தது. பணம் கட்டினால் B.Ed. சேரலாம் என்று எழுதியிருந்தது அந்த கடிதத்தில். என் கணவரின் வேலையோ பீஹார் மாநிலத்தில் ஒரு காட்டின் மலைப் பகுதியில். வீட்டிற்கு நிலையை விளக்கி கடிதம் எழுதக்கூட நேரமில்லை. மாதக் கடைசியில் ஒவ்வொரு நாணயத்தையும் யோசித்து செலவழிக்க வேண்டிய நிலையில் ரூ.4,000/- எப்படி முடியுமென தளர்ந்து போய்விட்டோம். வங்கியில் இருந்த பணம் ரூ.100/-. என் கணவரோ சோர்ந்துபோய், இயலாமையை எண்ணி நொந்துபோய் முடங்கிவிட்டார். நானும்தான். விரக்தியில் சிரிப்பதா, அழுவதா எனத் தெரியவில்லை. முகம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பணம் எங்கிருந்தோ வந்தது. எப்படியோ உரியவரிடம் போய் சேர்ந்தது. எப்படியென யோசித்ததில் ஒன்று புரிந்தது. நான் ஒரு ரூபாய் மட்டும் வைத்து, "தாயே, நான் தகுதியானவளானால் எனக்கு இந்த பட்டம் கிடைக்கட்டும். நாங்கள் எந்த நிலையிலும் யாரிடமும் கடன் வாங்கத் தயாரில்லை" என்று மட்டும் கூறினேன். நாங்கள் அந்த பட்டத்திற்காக செலவழித்த பணம் ரூ.7,000/-. அதற்கு எங்கிருந்து பணம் எப்படி வந்ததென புரியாத புதிர்தான். அது புரிந்துவிட்டால் அந்த அருளுக்கு அர்த்தமேது! மௌனமாகவே அது உணரப்பட்டு வந்தது இந்நாள் வரையில் - இன்றுதான் அதற்கு ஓசை வடிவம் கொடுத்துள்ளேன். அந்த படிப்பிற்காக எட்டு நாட்கள் கண்டிப்பாக வகுப்புகள் செல்ல வேண்டிய நிலை. அந்த விபரமும் எங்களுக்கு கிடைக்க கடைசி நாளாகிவிட்டது. என் கணவரோ வேலைகளின் கெடுபிடியில். அந்த ஊரில் ஆண் துணை இருந்தாலே நடமாடுவது கடினம். அவரை வேலை விஷயமாக டெல்லி போகுமாறு அவருடைய மேலதிகாரியும் அதே தேதியைக் கொடுத்திருந்தார். மீண்டும், மீண்டும் அவர்தான்! அவரேதான்! தானாக எல்லாம் நடந்தது. ராஜ மரியாதையோடு நாங்கள் கல்கத்தா அனுப்பி வைக்கப்பட்டோம். மீண்டும் கவலை! எட்டு நாட்கள் எங்கே தங்குவது? செலவுகளை எப்படி சமாளிப்பது? மூன்று வயது குழந்தையை வைத்துக் கொண்டு சாப்பாட்டிற்கு என்ன செய்வது?

"எண்ணியெண்ணி பார்க்கும் வேலை இல்லை இனி அம்மா! எந்தன் பாதை என்னவென்று எழுதி வைத்தாய் அம்மா!", இதை நினைத்துக்கொண்டே ரயிலை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்த நேரத்தில் ஒருவர் வந்தார். வந்து தன்னைத் தானே அறிமுகம் செய்து கொண்டார். தானே எல்லாம் செய்வதாக அவரே முன்வந்தார். அவரோ கல்கத்தாவில் செல்வாக்குள்ள விமானப் படையை சேர்ந்த காவல் துறை அதிகாரி. அவரை அழைத்துச் செல்ல வந்திருந்த வண்டியில் அவர் எங்களை முதலில் ஏற்றி, எங்களை கவனித்த விதம் - இன்று நினைத்தாலும் தலை முதல் பாதம் வரை சிலிர்க்கிறது. அவருடைய அலுவலகத்திலேயே எங்களைத் தங்க வைத்தார். ஒருவர் கட்டில் எடுத்து வந்து கொடுத்தார். ஒருவர் கொசுவத்தி கொடுத்தார். ஒருவர் உணவு கொண்டு வந்தார்.

எல்லோரையுமே அன்னையாகதான் பார்த்தேன்! "எங்கும் உன் அருளமுதம் தா!" என பாடிக் கொண்டேயிருந்தேன்.

அங்கேயிருந்த ஒரு வயதான தாத்தா என் குழந்தையை ஈன்றெடுத்தவர் போல நேரம் தவறாது குழந்தைக்கு உணவளித்தார். அங்கேயிருந்த பல சகோதரர்கள் என் குழந்தையை மிகவும் பாசமாக பார்த்துக் கொண்டார்கள். மனிதர்கள்தானே! இவர்களின் இத்தனை நேயம் வந்தது எங்ஙனம்! முகம் வாடாமல், சிறிதும் கோணாமல் உதவியது எங்ஙனம்! அவர்தான்! மீண்டும் அவரேதான்!

இதற்கிடையில் அலுப்பு தாங்காமல் குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அதிகமாகியது. அங்கேயிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது குழந்தையின் தந்தை என் கணவர்தானென்பதற்கு ஆதாரமாக அடையாள அட்டை வேண்டுமென்றார்கள்! மீண்டும் அழைத்தேன்! "அம்மா! இது என்ன தாயே! சாட்சி வைத்துக்கொண்டா வம்சத்தை விருத்தி செய்ய!" எதுவுமே தேவையில்லையென காய்ச்சல் தானாகக் குறைந்தது.

அதன் பிறகு தேர்வுகள் எழுதி, வெற்றி பெற்று, சந்தோஷம் கிடைத்தது உண்மை. என் கைகளில் அந்த சான்றிதழை கொடுக்கும் வரை ஓயமாட்டார் என்பதும் தெரியும். "என்னிடம் இதை நீ கேட்டுவிட்டாய். அதனால் உனக்கு இதை சார்ந்தவற்றையும் நானே கொடுக்கிறேன்" என அவர் சொல்வது போலத் தோற்றம். ஏனெனில் இந்த சான்றிதழ் கைகளில் கிடைக்குமுன்னே வேலைக்கான அழைப்புகள் வந்தவண்ணமுள்ளன. நாங்கள் யோசிப்பதை நிறுத்தி வெகுநாட்களாகின்றன. அவராக எது கொடுக்கிறாரோ அதுதான் வாழ்க்கை. எங்கே காட்டுகின்றாரோ அதுதான் பாதை.

*******



book | by Dr. Radut