Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/90) அகண்டம் தானே விரும்பி கண்டமாகக் காட்சியளிக்கிறது.

  • இது சிருஷ்டியின் இரகஸ்யம்.
  • கையிலுள்ள ரொக்கத்தை பிஸினஸில் போட்டு மீண்டும் எடுக்கத் திணறும் முதலாளி ஒரு கோடி மூலதனத்திலாரம்பித்து ஓர் ஆயிரம் கோடிக்கு வருவதை நாம் காண்கிறோம்.
  • பெட்டியிலேயே ரொக்கமிருந்தால் பத்திரமாக ஒரு கோடியாகவேயிருக்கும்.
  • பாங்கில் போட்டிருந்தால் அவர் 1000 கோடி சம்பாதித்த காலத்தில் 5 கோடியாகியிருக்கும்.
  • ரேஸ், லாட்டரியில் ஈடுபட்டிருந்தால் அழிந்து போயிருக்கும்.
  • ஒரு கோடியும் முதலில்லாமல் ஒரு இலட்சம் முதல் போட்டவரும் பிஸினஸில் 1000 கோடியைத் தாண்டியதையும் நாம் அறிவோம்.
  • பணத்தை மார்க்கட்டில் போட்டவருக்கு வெற்றியுடன் தோல்வியும் உண்டு.
  • பிரம்மம் தோல்வியை அறியாது.
  • இருள் என்ற தோல்வியை - தோல்வியின் தோற்றத்தை - பிரம்மம் ஏற்படுத்தி, அதனுள் தன்னை இழந்து மீண்டு வருவது சிருஷ்டி. அது அனந்தமான ஆனந்தம்.
  • டென்னீஸ் மட்டையும், பந்தும் சொந்தமாக இருப்பது ஆனந்தமல்ல.
  • சுவற்றில் அடித்து விளையாடுவது ஆனந்தம்.
  • எதிர்க்கட்சியுடன் விளையாடுவது பேரானந்தம்.
  • பிரம்மம் எதிர்க்கட்சி - இருளை - ஏற்படுத்தி, விளையாடி, ஆனந்தத்தைப் பேரானந்தமாக மாற்ற சிருஷ்டியை நாடியது.
  • மாடு கொல்லையில் நுழைந்து நெல்லைச் சாப்பிடும்.
  • மனிதனுக்கு நெல் ஒத்து வராது, அரிசியே தேவை.
  • அரிசியை மனிதன் அரிசியாகச் சாப்பிடுவதில்லை. சோறாகச் சமைத்துச் சாப்பிடுகிறான்.
  • சோறு பொங்கலானால், சர்க்கரைப் பொங்கலானால் சுவை கூடிக்கொண்டே போகும்.
  • பிரம்மம் அரிசிபோல், சொல்லப்போனால், நெல்போல.
  • பிரம்மம் சச்சிதானந்தத்தைச் சிருஷ்டித்து, அதன் புறமாக சத்திய ஜீவியத்தை இருகூறாகப் பிளந்து மனத்தை சிருஷ்டித்தும், மனத்தால் வாழ்வையும், ஜடத்தையும் சிருஷ்டித்தது. ஜடம் பிரம்மம் என்ற நெல்லுக்கு சர்க்கரைப் பொங்கலைப்போல்.
  • நம் கண்ணுக்கு ஜடமாகக் காட்சியளிப்பது ஆத்மாவுக்கு, வளரும் ஆத்மாவுக்கு சர்க்கரைப் பொங்கலான விருந்தாகும்.
  • நாம் சர்க்கரைப் பொங்கலை நெல் என நினைக்கிறோம்.
  • அது உள்ளபடி பார்க்கும் திறனுக்கு வழியில்லை.
  • எப்படிச் செய்யப்பட்டது எனக் கேட்டால் அரிசியிலிருந்து எனப் பதில் வருகிறது.
  • நாம் அரிசியை எப்படிச் சாப்பிடுவது என்றும், அரிசி நெல்லிலிருந்து வருவதால் நெல் நமக்கு வேண்டாம் எனவும் கூறுகிறோம்.
  • இறைவன் அனுபவிக்கும் பேரானந்தத்தை நமக்களிக்கிறான்.
  • நாம் அதை ஆனந்தமாகவும் அறிவதில்லை.
  • நாம் அதை வலியாக, வேதனையாக, மரணமாக ஏற்கிறோம்.
  • வலியை ஆனந்தமாக மாற்றும் பாதையே பேரானந்தம் தருவது என நாம் அறியவில்லை.
  • அளவு கடந்து சிரமத்தை ஏற்று, மகனைப் படிக்க வைத்து, பெரிய வேலைக்கு வந்தபின் அனுபவிப்பது பேரானந்தம்.
  • தான் பட்ட அவதி வரப் போகும் ஆனந்தத்திற்குரியது.
  • அன்னையை ஏற்றவர்க்கு அந்த அவதியுமில்லை.
  • அவதி ஆனந்தமாகிறது. ஆனந்தம் பேரானந்தமாகும்.
  • அகண்டமான பிரம்மம் விரும்பிக் கண்டமான சிருஷ்டியானது சிருஷ்டியின் இரகஸ்யம்.
  • உலகில் முதலில் இதைக் கூறியது பகவான் ஸ்ரீ அரவிந்தர்.
  • எவர் இதை வாழ்வில் அனுபவிக்கிறாரோ, அவரே முதலில் இதைக் கண்டவராவார்.

********

ஜீவிய மணி
 
எது முக்கியம்
நாம் பேசும் பொழுது, நினைக்கும் பொழுது, உணரும் பொழுது, உணர்வை கடந்து செல்லும் பொழுது, எந்த நிலையிலும் மனம் எது உண்மை, எது பொய் என அறியும். நாம் அறிந்த உண்மையை அகத்திலிருந்து புறத்தில் பேசுவது யோகம்.
அது எளிதன்று.
எளிதாக இல்லாதது ஏழு நிலைகளைக் கடக்க உதவும்.
 

*******



book | by Dr. Radut