Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

78. மேலும் மேலும் உள்ளே போகும் திறமை

  • மனித வாழ்க்கை புறத்திற்குரியது, புலன்களால் செயல்படுவது.
  • ஆன்மீக பாஷையில் புறம் என்பது புலன் - இடம் - எனப்படும்.
  • அகம் என்பது காலம், எண்ணத்திற்குரியது, மனத்தால் அறியப்படுவது, புலன்களால் அறிய முடியாதது. எண்ணம் எந்த புலனுணர்விற்கும் புலப்படாதல்லவா?
  • ஆத்மா அகம், புலனாகப் பிரிகிறது என்பது தத்துவம்.
  • உள்ளே போவது என்றால் புலனைக் கடந்து மனத்தை அடைவது. மேலும் தொடர்ந்து உள்ளே போனால் மனத்தைக் கடந்து ஆத்மாவை அடைவது. அதனால் உள்ளே போக முடிந்தால் யோகம் பலிக்கும்.
  • சாதாரண மனிதன் உள்ளே போக விரும்பினால், அது முடியுமா என அறிய முற்பட்டால், முதற்காரியமாக அவன் பேச்சை நிறுத்த வேண்டும், வாய் மூடி மௌனியாக வேண்டும்.
  • அது பெரிய முதற்கட்டம். அடுத்தது மனத்தில் எண்ணம் நின்று மௌனம் வர வேண்டும்.
  • இவை யோக சித்திகள். சிலருக்குத் தானே அமையும்.
  • ஏதோ ஒரு நேரம் இவை எழுவது யோகப் பக்குவத்தைக் குறிக்கும்.
  • நீடிப்பது, நிரந்தரமாவது மௌனம் காக்கும் முனிவர் பெறும் சித்தி.
  • எல்லா யோகங்கட்கும் மௌனம் உரியதுபோல் பூரண யோகத்திற்கும் மௌனம் முக்கியமானது.
  • இந்த யோகத்தில் மௌனம் செயல்படுவது சற்று மாற்றமாக இருக்கும்.
  • வாழ்வை ஏற்கும் யோகம் என்பதால் இந்த யோகம் செயலை விலக்காது, ஏற்கும்.
  • செயலும், பேச்சும் இந்த யோகத்தில் மௌனத்தை வெளிப்படுத்த வேண்டும்.
  • தண்டனை அன்பை வெளிப்படுத்துவதுபோல் மௌனம் பேச்சை வெளிப்படுத்தும்.
  • ஆன்மீக அருள் உயரும் நிலையில் தண்டனை அருளாகும் என்பது தத்துவம்.
  • "அவனே தண்டித்தால் ஜெயமன்றோ வானவர்க்கு'' என்பது பாடல்.
  • போலீஸ் தடியடிப் பிரயோகமும், சுட்டு வீழ்த்துவதும் அமைதியை நிலைநாட்டுவதற்கு.
  • தாயின் கண்டிப்பு அன்பால் கண்டிப்பதாகும். நல்லது செய்யும் கண்டிப்பு அது.
  • பேச்சற்ற மௌனம் முதல் நிலை. பேசினால் அந்த மௌனம் கலையும். உயர்ந்த மௌனம் பேசினால் கலையாது, வளரும்.
  • செலவு செய்தால் பணம் குறையும். செலவு கம்பனியில் செய்தால், கடையில் செலவு செய்தால் பணம் வளரும். அது செலவால் வளரும் பணம்.
  • வேலை செய்தால் களைப்பது இயல்பு. உற்சாகமாக வேலை செய்தால் களைப்புத் தெரியாது. படைப்பாளி உற்சாகமாக ஓவியம் எழுதினாலும், கதை எழுதினாலும், சிற்பம் செய்தாலும், தெம்பு அபரிமிதமாக வளர்ந்தபடியிருப்பது அனுபவம்.
  • இது மௌனத்தின் உயர்ந்த நிலை.
  • பேசாத நிலையில் இம்மௌனத்தில் சொல் அழியும். மனம் லயிக்கும்.
  • மனம் லயிப்பது பெரு நிலை, ஆத்மா லயிப்பது சித்தி.
  • ஆத்மா அகத்தில் லயிப்பது யோகம். ஆத்மா புறத்தில், செயலில் லயிப்பது பூரண யோகம்.
  • பூரண யோக சமாதி, விழிப்பில் ஏற்படும் சமாதி.
  • செயல் அமைதியாகி, அதனால் வேகம் பெறுவது யோகி வாழ்வை ஏற்பது.
  • உள்ளே போனால் படிப்படியான நிலைகள் உண்டு. மேற்சொன்னவை சில.
  • ஒரு அன்பருக்கு முதற்கட்டம் தானே எழுமானால், அவருக்கு பூரண யோகப் பக்குவம் உண்டு என்று தெரிகிறது.

******

79. உண்மை (Sincerity)

  • Reality, Sincerity, Truth என்பவற்றை சத்தியம், உண்மை எனக் கூறலாம்.
  • சத்தியம் என்றால் சத்திலிருந்து எழுவது. உள்ளது உண்மை. அது உள்ளேயுள்ளது.
  • Sincerity என்ற சொல் எல்லா இடத்து உண்மைக்கும் பொருந்தும்.
  • குடும்பம், நட்பு, தம்பதிகள், நாணயம், தர்ம நியாயம், தர்ம சங்கடம், தொழில், மனிதன், மனிதாபிமானம், உறவு அனைத்திலும் உள்ள உண்மையை Sincerity குறிக்கும்.
  • தலைப்பில் கூறும் உண்மை ஆத்மாவுக்குரியது. மனம், உயிர், உடல், ஜீவன், ஆத்மாவுக்கு உண்மையாயிருப்பதைத் தலைப்பு குறிக்கிறது.
  • அந்த உண்மையுள்ளவரை நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்கிறோம்.

    யோகத்திற்கு Sincerity அஸ்திவாரம்.
    எது தவறினாலும் Sincerity தவறாது.

  • பொய்யின் வாடையுள்ள இடத்தில் Sincerity எழாது.
  • மாற்றாந்தாய், முதல் மனைவியின் குழந்தைகட்கு அன்பு செலுத்துவது அதைச் சேரும்.
  • மாமியார், மருமகள் உறவில் உள்ள அன்பு அதற்குரியது.
  • விலகிய நண்பர், எதிரியானவருக்கு நியாயம் செலுத்துவது அரிது. அவர்கட்கும் நம் அன்பு உரிய இடம் உண்டு.
    அது Sincerity சின்சியரிட்டிக்கு உரியது - "இன்று போய் நாளை வா''.
  • பக்திக்கு சின்சியரிட்டி உண்டு. ஆனால் இரண்டும் வேறு.
  • தொழிலில் இயல்பாக மார்க்கட்டிற்கு உண்மையானவர்க்கு மார்க்கட் செலவு செய்ய வேண்டிய இடத்தில் வருமானம் தரும்.
  • டெக்னாலஜிக்கு கோடிக்கணக்கான செலவு செய்ய வேண்டும். மனிதனுக்கு டெக்னாலஜி விஷயத்தில் எது உண்மை என புரிந்தால் பல கோடி செலவுள்ள இடத்தில் பல நூறு கோடி வருமானம் வரும்.
  • Chit சீட்டுக் கம்பனியில் சீட்டு எடுத்தவரிடம் அதன்பின் பணம் வசூல் செய்வது கடினம்.
    கம்பனிக்கு சட்டம் உண்டு, பணம் உண்டு, வசூல் உண்டு, நியாயம் உண்டு.
    இவற்றிற்கெல்லாம் உரிய உண்மையுண்டு. அந்த உண்மையைப் பாராட்டினால் சிரமம் திருவுருமாறி வசதியாகும்.
  • நஷ்டம் வந்த தொழிலை நிமிர்த்த 30 இலட்ச ரூபாய் வேண்டும் என்ற இடத்தில் தொழிலுக்குரிய உண்மை முதலிலிருந்தே செலவை வருமானமாக மாற்றும்.
  • ஆத்மாவுக்கு எது உண்மை என அறிந்து, அதை ஏற்றால் வாழ்வு ஆன்மீக வளம் பெறும். அது உள்ளதைக் குறிப்பது கலகலப்பான குணம் (cheerfulness).
  • சிடுமூஞ்சி, உம்மணாமூஞ்சி, எண்ணெய் வழியும் முகம், கடுகடு என்று பேசுபவர், சிரித்தறியாதவர்கட்கு எதிராக மலர்ந்த முகம், சிரித்த முகம், பிரியமான பழக்கம், மிருதுவான பேச்சு, இனிமையான மனப்போக்கு அவற்றைக் குறிக்கும்.

    விரதங்களைவிட கலகலப்பான குணம்
    யோகத்திற்குரிய மன நிலை என அன்னை கூறுகிறார்.

  • இந்த உண்மையில்லாத இடமில்லை.
    • மேஜையைத் துடைப்பதை நாள் தவறாமல், நேரம் தவறாமல், பளிங்கு போல் துடைப்பது சுத்தத்திற்குரிய உண்மை.
    • பாட்டு என்பது சங்கீதம். அதில் சாகித்தியம் உண்டு, பாடுபவர் திறமை உண்டு, குரல் முக்கியம், ஸ்தாயி, உச்ச ஸ்தாயியை எட்டும் திறன் உண்டு. தனியே பாடும்பொழுது உள்ள ஸ்தாயி, சபையில் பாடும் பொழுது எழும் ஸ்தாயியிலிருந்து வேறுபட்டது. சபைக்கு உண்மையுண்டு, பாட்டுக்கும் உண்மையுண்டு, பாடுபவர்க்கும் உண்டு, அதே நாள், அதே நேரம் போன்றவற்றிற்கும் அததற்குரிய உண்மையுண்டு. இவை பகுதியான உண்மைகள்.

      இவை அனைத்தும் இணைந்து இழையும்
      முழுமைக்குரிய உண்மை பிரம்மத்திற்குரிய
      உண்மை.

    • அது வாழ்வில் இல்லாத இடமில்லை.
    • மன நிலையைக் கடந்த ஆத்ம நிலையில் அதற்குரிய இடம் உருவாகி சபையை நோக்கி அதன் முழுமையுடன் கலக்கும் நேரம் தெய்வம் வாழ்வில் ஜனிக்கும் நேரம் - பிரம்ம ஜனனம் - எனலாம். Defining Moment, Divine Hour, Hour of Life எனவும் கூறலாம்.

********

ஜீவிய மணி
 
உலகம் நம்மை பாராட்ட வேண்டியது நமக்கு அவசியமில்லை.
 
நாம் திறமையை பெறுவது அவசியம்.
பெற்றதை முழுமைப்படுத்தினால் அதை பெறலாம்.
அம்முயற்சி பெருவெற்றி பெறும்.
 
 
*******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நாம் நல்லெண்ணத்தை அளவு கடந்து உயர்த்தினால்
மனத்தை கடக்கிறோம்.
 
 
*******



book | by Dr. Radut