Skip to Content

07. பெண்ணின் பெருமை

பெண்ணின் பெருமை

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

கோமாளி காலின்ஸை ஒருத்தி விரும்பி மணந்தாள். அது அவள் 2000 பவுனை மணந்ததாகும். டார்சி பணக்காரன். அவன் கர்வமாகப் பேசுவான். கர்வமாகப் பேசும் உரிமை அவனுக்குண்டு என சார்லெட் எலிசபெத்திடம் கூறுகிறாள். அது உலக நியாயம். எலிசபெத் அழகிற்குப் பேர் போனவளில்லை, பணமுமில்லை. 50 பவுன் ஆண்டு வருமானம், உடலும் உயிரும் சேர்ந்திருக்கப் போதுமானதில்லை. டார்சி அவளை அலட்சியம் செய்தான். பொதுவாகக் கர்வமானவன், சுயநலமானவன், பிறரை மட்டமாக நினைப்பவன். அவன் அவளை நெருங்கியதுபோல் மெரிடன் கிராமத்தில் எந்தப் பெண்ணை நெருங்கியிருந்தாலும் எந்தத் தடையுமின்றி முகமலர்ச்சியுடன் பேரதிர்ஷ்டமாகப் பெற்றிருப்பாள். நான் அன்பு செலுத்தாத ஒருவனை, நான் மணக்க மாட்டேன் என்ற காலத்திலும் பணத்திற்கும், அந்தஸ்திற்கும் முழு மரியாதையுண்டு. அவள் மனநிலை அப்படியில்லை. "என் தமக்கைத் திருமணத்திற்குத் தடையாக இருந்தாய். விக்காமுக்கு துரோகம் செய்தாய். கர்வி உன்னை மணப்பதை என்னால் கனவிலும் கருத முடியாது'' என அவனையும், அவன் பெற்ற 10,000 பவுனையும் அவளால் மறுக்க முடிகிறது. கோமாளி என்பதால் 2000 பவுனை மறுக்க முடிகிறது எனில், அவள் மனம் உயர்ந்தது என்பது மட்டுமல்ல, உன்னதமானது; இது இலட்சியம் மட்டுமல்ல, உறுதியும்கூட. இலக்கியத்திலும் எளிதில் காண முடியாதது. வாழ்விலில்லை என்றே அனைவரும் கூற முயல்வர். இந்த தைரியம், தெளிவு, உறுதி அவள் எப்படிப் பெற்றாள்? அன்பாக, அதுவும் சுதந்திரமாகப் பிள்ளைகள் வளர்க்கப்பட்டால், அவர்கட்கு உயர்ந்த இலட்சியம் இயல்பாக எழும் என்பது தத்துவம். அக்குடும்பத்தில் பொதுவாகவுள்ள எந்தக் கட்டுப்பாடுமில்லை. "இதைச் செய்யாதே, அதைச் செய்'' எனக் கூறும் பெரியவர் குடும்பத்திலில்லை. சுதந்திரம் பூரணமானது. தகப்பனார் எலிசபெத்தைத் தனியாகச் செல்லமாக வளர்த்தார். வளரும் சுதந்திரம், வாழும் சுதந்திரமாயிற்று. அவளால் அந்த உயர்ந்த இலட்சியத்தை எட்ட முடிந்தது. அதுவே அவன் மனம் மாறி இலட்சிய புருஷனாக, ஆதர்ச கணவனாக அவனுக்கு உதவியது. அவனை அவள் திட்டியது அன்றைய சமூகத்தில் இடம் பெறவில்லை. அது எலிசபெத்திற்கே உரியது. அவனை அவள் திட்டிய பொழுது கோபத்தின் மேதாவிலாசம் வெளிவந்து, இல்லாததை எல்லாம் கூறும் பொழுதும் ஆனந்தப்பட்டதாக எலிசபெத், ஜேனிடம் கூறுகிறாள். அவள் உயர்ந்த பெண். துரதிர்ஷ்டவசமாகப் போக்கிரியிடம் மனத்தை முதலில் கொடுத்துவிட்டாள்.

மனம் எவருக்கும் கட்டுப்படாது. முக்கிய நேரங்களில், முக்கிய விஷயத்தில் மனத்திடம் கட்டுப்பாட்டை எவரும் எதிர்பார்ப்பதில்லை. வதந்தியை அறிய ஆவல் கொள்ளாதவரில்லை. வதந்திகளில் இன்றுவரை தலையானது ஆண்-பெண் காதல் உறவு. ஆயிரம் ஆண்களும், பெண்களும் வேலை செய்யுமிடத்தில் கலந்து உறவாடும் பண்பாட்டில் ஒரு பெண் ஒரு ஆணிடம் அன்பாகப் பேசிவிட்டால், அரை மணி நேரத்தில் ஆபீஸ் முழுவதும் அறியும். அந்தச் செய்தியை, அறிய பெண்ணிற்கு அந்த ஆவல் ஆணைவிட சற்று அதிகம். அந்த விஷயத்தில் தன் மனத்தை எவரும் கட்டுப்படுத்த நினைப்பதில்லை. டார்சியைப் பற்றி Mrs.கார்டினர் அனைவரும் அறிந்ததை கேட்டிருக்கிறாள், உண்மையென நம்பியிருக்கிறாள். பெம்பர்லியில் டார்சி எலிசபெத்திடம் இதமாகப் பேசியதை அவள் கண்டதும் எழுந்த முதல் எண்ணம் இவனுக்கு இவள்மீது அபிப்பிராயமுண்டு என்பதே. சிறிது நேரம் கழித்து அவன் திரும்ப வந்து அவர்களை அறிமுகப்படுத்தக் கேட்டுக் கொண்டது, இனிமையாகப் பேசியது, வீட்டிற்கு அழைத்தது, மீன்பிடிக்க கார்டினரை அழைத்தது ஆகியவை டார்சிக்கு எலிசபெத் மீது காதல் என்ற கருத்தை உறுதி செய்தது. அவர்களுடன் நடந்து வந்த பொழுது லாங்பர்னைப்பற்றி சகஜமாகப் பேசியது, வண்டிவரை வந்து வழியனுப்பியது, மீண்டும் தளர்ந்து, பிரியாவிடை பெற்று வீடு திரும்பியது ஆகியவை முதல் எண்ணத்தை ஐயம் திரிபு அற ஆழ்ந்து உறுதிப்படுத்தியது. மறுநாள் லாம்டனுக்கு வந்து ஜார்ஜியானாவை அறிமுகப்படுத்தியது, விருந்திற்கு அழைத்தது, உணர்ச்சியே உருவாக உருகி நின்றது ஆகியவற்றைப் பார்த்தபின் எவராலும் என்ன விஷயம் எனக் கேட்காமலிருக்க முடியாது. அப்படி முடிந்தாலும், அவரையறியாமல் பேச்சு வாயை மீறி வெளிவரும். ஆங்கில நாவல்களில் அனைத்திடங்களிலும் காணும் செய்தியிது. காதல் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கணமும் காப்பாற்ற முடியாது. Mrs.கார்டினர் பெண். இது மைத்துனர் பெண் எலிசபெத் விஷயம். டார்சி பெரும்நிலச்சுவான்தார். ஊரெல்லாம் பரவியுள்ள அபிப்பிராயத்திற்கு நேர்மாறாக நடக்கிறான். ஏற்கனவே பரவாயில்லை என்று கூறியதும் Mrs.கார்டினர் அறிந்ததே. அவள் கேட்டு அறிய வேண்டியது எதுவுமில்லை. வெளிப்படையாகத் தெரியும் விஷயம். இதுவரை தான் அறிந்தவற்றிற்கு நேரெதிராக இருப்பதில் புதிர். பெரும் அளவுக்குப் பிரியமாக ஏற்கனவே பழகாமல் டார்சி இப்படியிருக்க முடியாது என கார்டினர் நினைப்பது சரியெனினும், அது உண்மையில்லை என நாமும், எலிசபெத்தும் அறிவோம். என்ன விஷயம் என Mrs.கார்டினர் கேட்டிருந்தால் அதில் எந்தத் தவறுமில்லை. அதைக் கேட்காமலிருக்க முடியாது. கேட்காமலிருந்தது எலிசபெத்திற்குப் பெரும் நிம்மதி. பிறர் நிம்மதியைக் குலைக்கக் கூடாது, தர்ம சங்கடம் தரக் கூடாது என்று அவ்வளவு ஆர்வத்தையும், ஆவலையும் அடக்க எவராலும் முடியாது. பெண் கஷ்டப்படுமிடம். கார்டினர் அப்பரீட்சையில் தேறினார். அது பெண் பெற்ற பேறு. முடியாததை முடியும் எனச் செய்வது பண்பு, நிதானம், பொறுமை, இம்மியளவுமில்லாத தாயாருக்குப் பிறந்த எலிசபெத் கண்ட அற்புதம். ஆச்சரியம் அது. டார்சி போனவுடன் ஏதாவது கேட்டுவிடப் போகிறார்கள் என்று அவசரமாக எலிசபெத் தன் அறைக்கு ஓடிவிடுகிறாள். அவர்கள் கேட்டு, அவள் உண்மையைக் கூறியிருந்தால் அது நம்பிக்கைக்குரியதல்ல. அவர்கள் நினைத்தது சரி. அவளுக்கு எதுவும் தெரியாது என்பது உண்மை. அவன் நடந்து கொண்டது புதுமை. நிலைமை இக்கட்டானது. இக்கட்டான நேரம் இங்கிதமாக நடப்பதை இயல்பாகப் பெற்றவள் உயர்ந்த பெண்.

முற்றும்

********



book | by Dr. Radut