Skip to Content

03. மதர்ஸ் சர்வீஸ் சொஸைட்டியின் 40ஆம் ஆண்டு நிறைவு விழா

மதர்ஸ் சர்வீஸ் சொஸைட்டியின் 40ஆம் ஆண்டு நிறைவு விழா

N. அசோகன்

மதர்ஸ் சர்வீஸ் சொஸைட்டி 40 ஆண்டுகளை நிறைவு செய்கின்ற இந்நன்நாளில் மதர்ஸ் சர்வீஸ் சொஸைட்டியின் இந்த 40வருட சாதனைகளைப் பற்றி உங்களோடு பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது பற்றி மிக்க மகிழ்ச்சி. ஸ்ரீஅப்பாதான் MSS, MSSதான் அப்பா என்றும் நாம் சொல்லலாம். ஸ்ரீ அப்பாவினுடைய செயல்பாடுகளுக்கு ஒரு ஸ்தாபன வடிவம் கொடுக்கப்பட்டது தான் MSS என்று சொன்னால் அது மிகவும் பொருத்தமாக இருக்கும். MSS தியான மையங்களை நடத்துகிறது. அன்னை மற்றும் பகவான் ஸ்ரீஅரவிந்தருடைய கருத்துகளைப் பற்றிய புத்தகங்களை வெளியிடுகிறது என்று தான் பெரும்பாலான அன்பர்களுக்குத் தெரியும். ஆனால் MSSனுடைய செயல்பாடுகளில் அது ஒரு அம்சம்தான். இதுபோக MSSக்கு விவசாயம், ஆராய்ச்சி மற்றும் பள்ளிக்கூடம் என்று கூடுதல் அம்சங்கள் இருக்கின்றன. இந்த கூடுதல் துறைகளில் எல்லாம் MSS என்ன சாதனை புரிந்திருக்கிறது என்று உங்களோடு செய்திகளை இந்நேரம் பகிர்ந்து கொண்டால் இந்த ஆண்டு விழா வைபவத்திற்குப் பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

அன்னை மற்றும் பகவானுடைய லட்சியங்கள் மற்றும் கனவுகளோடு ஸ்ரீஅப்பா தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதால் இந்த லட்சியங்களுக்கு உயிர் கொடுக்கும் வகையில் தன்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அந்தச் சேவையை செய்வதற்காகத்தான் 1970ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17ஆம் தேதி ஸ்ரீ அப்பா MSSஐ நிறுவினார்.

பகவானுடைய லட்சியங்களில் இந்தியா சுதந்தரம் பெற வேண்டும் மற்றும் ஆசிய நாடுகளுக்கும் விடுதலை கிடைக்க வேண்டும் என்ற இரண்டு கனவுகள் நினைவாகிவிட்டன. மேலும் மூன்று கனவுகள், அதாவது உலக ஒற்றுமை மற்றும் உலகத்திற்கு இந்தியா ஆன்மீகத் தலைமை தாங்குதல், சத்தியஜீவிய மனிதனின் பிறப்பு, மற்றும் சத்தியஜீவிய வெளிப்பாடு ஆகிய மீதி மூன்று கனவுகளும் முழுமை பெறாமல் உள்ளன. இந்த இலட்சியங்கள் நடைமுறையில் நிஜமாவதற்கு ஸ்ரீ அப்பா தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். இந்த இலட்சியங்களை விரைவுபடுத்த தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வதைத் தான் அன்னைக்குச் செய்யும் சேவையாக எடுத்துக் கொண்டுள்ளார் என்றும் கூறலாம்.

உலக ஒற்றுமையோ, இந்தியாவின் ஆன்மீகத் தலைமையோ அல்லது சுபிட்சமோ வெறும் ஜீவன் இல்லாத திட்டங்கள் இல்லை. உயிருள்ள திட்டங்கள்தான். உலக ஒற்றுமையை வலுப்படுத்தும் திசையில்தான் இன்று உலகமும் போய்க் கொண்டிருக்கிறது. ஆகவே உலகத்தின் போக்கை சரியாக புரிந்து கொள்பவர்களுக்கு இது ஒரு முடியாத காரியம், நடைமுறைக்கு ஒத்து வராத கனவு என்று தோன்றாது. அன்னையின் அருளை நம்பி இந்த இலட்சியத்திற்காகப் பாடுபடுபவர்களுக்கு இது பலிக்கக்கூடிய விஷயம்தான் என்று நாம் உறுதியாக நம்பலாம். இது பலிக்கக்கூடிய விஷயம் என்று நான் ஏன் சொல்கிறேன் என்றால் அதற்குத் தகுந்த காரணங்கள் இருக்கின்றன. உலக ஒற்றுமைக்குப் பெரிய தடையாக விளங்கிய 45 வருட கால அமெரிக்க, ரஷ்ய Cold War என்று சொல்லப்படுகின்ற ஜனநாயக நாடுகளுக்கும், கம்யூனிச நாடுகளுக்கும் இடையே இருந்த பனிப்போர் யாரும் எதிர்பார்க்காத வகையில் 1990இல் முடிவுக்கு வந்தது. இதன் விளைவாக கம்யூனிச ஆதிக்கத்தில் இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அதிலிருந்து விடுபட்டு, ஜனநாயக ரீதியாக செயல்படுகின்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளை நெருங்கி வந்துள்ளன. இதனால் ஐரோப்பிய ஒற்றுமை பல மடங்கு தீவிரம் அடைந்துள்ளது. மேலும் 1995ஆம் ஆண்டுக்கு மேல் Internet என்ற ஒரு புதிய விஷயம் உலகத்தில் பிறந்துள்ளது. இந்த Internet புரட்சி உலக வரலாற்றில் இதுவரை பார்க்காத அளவிற்கு உலக நாடுகளைத் தகவல் தொடர்பு, தொழில் மற்றும் வியாபாரத் தொடர்பு, பயணத் தொடர்பு, அரசியல் தொடர்பு என்று எல்லா வகையிலும் ஒன்றுபடுத்தியுள்ளது. இம்மாதிரியான முன்னேற்றங்களை மனதில் வைத்துப் பார்க்கும் பொழுது அன்னை அன்பர்கள் உலக ஒற்றுமைக்கு ஆர்வமாக உழைத்தார்கள் என்றால் உலகம் எதிர்பார்ப்பதைவிட மேலும் விரைவாகவே உலக ஒற்றுமை நிஜமாகிவிடலாம் என்று நம்பலாம்.

இந்தியா உலகத்தின் ஆன்மீக குருவாகத் தலையெடுப்பதற்கு முன்னால் இந்நாடு சுபிட்சம் பெற வேண்டும். அப்படி இந்நாடு வளம் பெறுவது என்பது நாம் பாரதமாதாவிற்குச் செய்கின்ற தலைசிறந்த சேவையாகும். பல வருடங்களுக்கு முன்னால் ஸ்ரீ அப்பாவிற்கு நெருக்கமான ஒரு அன்னை அன்பர் அவருடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது ஸ்ரீ அப்பா அவர்கள் அவரிடம், "இந்த நாட்டைப் பற்றிய சிந்தனைதான் என் மனதில் மேலோங்கி இருக்கிறது. நான் எதிர்பார்க்கும் சுபிட்சம் இந்த நாட்டிற்கு வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்'' என்று சொன்னாராம். இப்படி அவர் மனதில் இடம் பெற்றுள்ள இந்த நாட்டின் சுபிட்சத்திற்குச் சேவை செய்வதை அவர் தமது தலையாய கடமையாக எடுத்துக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவிற்கு இணையாக வளமையையும், சுபிட்சத்தையும் இன்னும் 20 வருடங்களில் இந்தியாவில் நாம் பார்க்கலாம் என்று ஸ்ரீஅப்பா அவர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. அதற்காக நம்முடைய பழைய கலாச்சாரத்தையும், அதனுடைய சிறப்பம்சங்களையும் இப்படியே ஒதுக்கிவிட்டு, மேலை நாட்டு ஐஸ்வரியத்தோடு மேலை நாட்டு கலாச்சாரத்தையும் நாம் கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டும் என்று அவசியமில்லை. நம் நாட்டு ஆன்மீக மற்றும் கலாச்சார சிறப்புகள் கெடாதவாறும், அதே சமயத்தில் அவை மேலும் மிளிரும் வண்ணம் மேலை நாட்டு ஐஸ்வரியத்தை எப்படி நம் நாட்டிற்குள் கொண்டு வருவது என்றும் ஸ்ரீ அப்பா அவர்கள் நிறைய சிந்தித்துள்ளார்.

அன்னையிடம் வந்த எண்ணற்ற பக்தர்களில் அவருடைய ஆசிகளைப் பெற்று, அவருடைய அருளின் பலனாக தமக்குள்ள பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று வந்தவர்கள்தான் அதிகம். ஏதோ ஒரு சிலர்தான் அன்னையிடம் பெற்றுக் கொண்ட பலன்களுக்கு கைம்மாறாக அன்னைக்குச் சேவை செய்ய வேண்டும் என்று விரும்பினார்கள். இப்படி விரும்பிய ஒரு சிலருள் ஸ்ரீ அப்பா அவர்களும் ஒருவர்.

1970இல் MSSஐ நிறுவிய பின்பு விவசாயத்தின் மூலம்தான் அவர் அன்னைக்குச் சேவை செய்ய விரும்பினார். மதர் எஸ்டேட் மற்றும் Beauty Land என்ற இரண்டு முந்திரி தோப்புகளை கடலூருக்கு அருகேயுள்ள இராமாபுரம் கிராமத்தில் வாங்கினார். முந்திரி விளைச்சலில் நல்ல வருமானத்தைப் பார்த்து, அதை அன்னைக்குக் காணிக்கையாக கொடுக்க வேண்டும் என்று விரும்பினார். தோப்பில் வேலை செய்ய வந்த கிராமத்து மக்களின் ஏழ்மையைக் கண்டு, அவர்கள் மேல் ஒரு பரிவு கொண்டு, அவர்களுக்கும் பயிர் செய்வதற்கும், கிணறு வெட்டுவதற்கும், Crop Loan மற்றும் Borewell Loan எல்லாம் ஸ்டேட் பாங்க் மூலம் கிடைக்க ஏற்பாடு செய்தார். அந்த முயற்சி பெருவெற்றி பெற்று, அந்த கிராமத்து மக்களுடைய வருமானம் பல மடங்கு பெருகியது. இவர்களுக்கு வந்த முன்னேற்றத்தைக் கண்டு சுற்று வட்டாரத்தில் உள்ள மற்ற கிராமத்திலுள்ள விவசாயிகளும் அவர்கள் சொந்த செலவிலேயே borewell எல்லாம் போட்டுக் கொண்டு கம்பு, கேழ்வரகு என்று மழைக் காலப் பயிர்களைக் கைவிட்டுவிட்டு ஸ்ரீ அப்பா அவர்களைப் போலவே வாழை, கரும்பு என்று பணப்பயிர்களுக்கு மாறினார்கள். இராமாபுரத்தில் செய்தது வெற்றிகரமாக அமைந்ததால் ஸ்டேட் பாங்கு அதோடு நிற்காமல் அடுத்த 10 வருடங்களில் இந்தியாவில் எண்ணற்ற கிராமங்களில் Village Adoption Schemeஐ கொண்டு வந்து இந்தியாவின் விவசாய வளர்ச்சியையும், விவசாயிகளின் வருமானத்தையும் பல மடங்கு மேம்படுத்தியது. இன்று கடலூர் மாவட்டத்தில் இராமாபுரம் கிராமம் விவசாயத்தில் முன்னிலையில் இருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் ஸ்ரீ அப்பா அவர்கள் 1970இல் அவர்களுக்கு காட்டிய வழிதான்.

அடுத்ததாக ஸ்ரீ அப்பா அவர்களின் கவனம் Business Management என்ற துறையின் பக்கம் திரும்பியது. அன்னை ஸ்ரீ அரவிந்தருடைய ஆன்மீக தத்துவங்களிலிருந்து நம் நடைமுறை வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்கு நிறைய கருத்துகளை நாம் எடுத்துக் கொள்ள முடியும் என்று ஸ்ரீ அப்பா அவர்கள் திடமாக நம்பினார். அதாவது உயர்ந்த ஆன்மீக உண்மைகளை நடைமுறை வாழ்க்கைக்கு உதவக்கூடிய guidelinesஆக மாற்றிக்கொள்ள முடியும் என்று அவருக்குத் தெரிந்தது. சமூகம் எப்படி முன்னேறுகிறது, பரிணாம வளர்ச்சி எப்படி நிகழ்கிறது, ஆன்மீக கருத்துக்களை பொருளாதாரத் துறையோடு இணைத்து பொருளாதார வளர்ச்சியை எப்படி மேம்படுத்தலாம் என்றெல்லாம் ஸ்ரீ அப்பா அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தார்.

அப்படிச் சிந்திக்க ஆரம்பித்தவர் Consciousness Approach to Management என்ற ஒரு புதிய Management Theory மற்றும் அணுகுமுறையை உருவாக்கினார். ஸ்ரீ அப்பா அவர்களிடமிருந்து Mr. Garry Jacobs அவர்கள் இதைக் கற்றுக் கொண்டு அமெரிக்க Management Association உடைய Vice-Presidentஆக பணியாற்றிக் கொண்டிருந்த Mr. Fred Harmon என்ற Management நிபுணரிடம் இந்தப் புதிய அணுகுமுறைகளைப் பற்றி எடுத்துரைத்தார். In Search of Excellence என்ற தலைப்பில் Tom Peters என்பவர் Management பற்றி எழுதிய புத்தகம் வெளிவந்த நேரம் அது. 1980ஆம் ஆண்டு அளவாக இருக்கலாம். இந்த புத்தகம் மிகவும் பிரபலமாகி எல்லோருடைய கவனத்தையும் அது ஈர்த்திருந்தது. அந்த நேரத்தில் Mr. Garry Jacobs அவர்கள் Consciousness Approach என்ற புதிய கருத்தை Mr. Fred Harmon அவர்களிடம் பேசிய பொழுது அவரும் இந்தக் கருத்துக்களை மிகவும் பாராட்டி இந்த கருத்துகளின் அடிப்படையில் Management புத்தகம் எழுதினால் அதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று யோசனை தெரிவித்தார். உடனே Mr. Garry Jacobs அவர்களும் Mr. Fred Harmon அவர்களும் Coca Cola, IBM, Federal Express, Apple Computers போன்ற பல பெரிய Corporationகள் எப்படி வளர்ச்சி அடைந்துள்ளன என்பதை Consciousness Approach to Management என்ற Theoryயின் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து Vital Difference மற்றும் Vital Corporation என்ற இரண்டு புத்தகங்கள் எழுதினார்கள். இந்த புத்தகங்களில் Business நிறுவனங்கள் எப்படி தம்முடைய லாபத்தை 5 வருடங்களில் இரட்டிப்பு ஆக்கிக் கொள்ளலாம் என்று விரிவாக எடுத்துரைத்துள்ளார்கள். இந்த புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து, Mr. Garry Jacobs and Mr. Fred Harmon இருவருக்கும் நல்ல Consultancy வாய்ப்புகளும் கிடைத்தன.

Business எப்படி வளர்கிறது என்று சிந்திக்க ஆரம்பித்த ஸ்ரீஅப்பா அவர்கள் அடுத்த கட்டமாக சமூகம் எப்படி வளர்கிறது, சமூகத்தில் பொருளாதார வளர்ச்சியை எப்படி மேம்படுத்தலாம், சமூகத்தின் முன்னேற்றத்தில் முன்னோடிகளின் பங்கு என்ன? சமூக வளர்ச்சியினுடைய பல்வேறு கட்டங்கள் என்னென்ன என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்தார். இப்படிச் சிந்தித்ததின் பலனாக Theory of Social Development and its Principles என்ற ஒரு புதிய Theory Systemஐ கண்டுபிடித்தார். உலகப் பொருளாதார நிபுணர்களிடம் இந்த புதிய Development Theoryஐப் பற்றி எடுத்துரைப்பதற்கு வாய்ப்புகளை சொஸைட்டியில் நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம். நம் நாட்டில் இந்த Theoryயின் சிறப்புகளை பற்றி M.S. Swaminathan, கோவையில் உள்ள TNAU விவசாய பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் Dr.G.ரங்கசாமி, காலஞ்சென்ற மத்திய நிதியமைச்சர் சி.சுப்ரமணியம், காலஞ்சென்ற இந்திரா காந்தி அம்மையார் மற்றும் நரசிம்மராவ் ஆகியோர்களிடம் எல்லாம் பேசியிருக்கின்றோம். இந்திரா அவர்கள் பிரதமராக இருந்தபொழுது இந்தியப் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக 137 திட்டங்களைப் பட்டியலிட்டு வழங்கினோம். இப்படி வழங்கிய திட்டங்களில் பலவற்றை மத்திய அரசு உடனடியாக ஏற்றுக் கொண்டு அமுல்படுத்தியது.

இப்படி இந்திய தலைவர்களிடம் எடுத்துச் சொல்ல வாய்ப்பு கிடைத்தது போல் வெளிநாட்டு விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோர்களிடம் எல்லாம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த நேரத்தில்தான் World Academy of Arts and Science என்ற சர்வதேச ஸ்தாபனத்தினுடைய Presidentஆக பணியாற்றிக் கொண்டிருந்த Mr. Harlan Cleveland என்ற ஒரு அமெரிக்க பிரமுகரின் அறிமுகம் Mr. Garry Jacobs அவர்களுக்கு கிடைத்தது. இந்த Development Theory பற்றி Mr. Garry Jacobs அவர்களிடம் கேட்டு, அவர் அதனால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, 1998ஆம் ஆண்டு Canadaவிலுள்ள Vancouver மாநகரத்தில் நடந்த அவர்களுடைய ஸ்தாபனத்தினுடைய மாநாட்டில் Development Theory உடைய சிறப்பம்சங்களைப் பேசுவதற்கு ஒரு தனி Sessionஐ ஏற்படுத்தி வாய்ப்பளித்தார். அன்று World Academyயுடன் ஏற்பட்ட உறவு இன்றுவரை படிப்படியாக வளர்ந்திருக்கிறது. இந்தக் கடந்த 12 வருடங்களில் நியூயார்க் நகரம், வாஷிங்டன் டி.சி., புதுடில்லி மற்றும் ஐரோப்பாவிலுள்ள Croatia நாட்டின் தலைநகரமான Zagreb என்ற பெருநகரங்களில் MSSஉடன் இணைந்து உலக அமைதி, போர் நிறுத்தம், அணு ஆயுத ஒழிப்பு, உலகத்தின் வருங்கால முன்னேற்றம் என்ற தலைப்புகளிலெல்லாம் கருத்தரங்குகளை நிகழ்த்தியுள்ளனர். இந்த கருத்தரங்குகளின் பலனாக சர்வதேச அளவில் MSSனுடைய செயல்பாடுகளைப் பற்றி தகவல்கள் பரவி இருக்கின்றன.

இதற்கிடையே 1989ஆம் ஆண்டு உலகத்தில் அமைதியை நிலைநாட்டவும், பஞ்சம், பட்டினியை ஒழிக்கவும் International Commission of Peace and Food என்ற ஒரு சர்வதேச Commissionஐ ஸ்ரீஅப்பா அவர்கள் நிறுவ விரும்பினார். பிரபல இந்திய விவசாய விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனை இந்தக் குழுவிற்குத் தலைமை ஏற்கும்படி Mr. Garry Jacobs அவர்கள் கேட்டுக் கொண்டார். அவரும் ஆர்வமுடன் சம்மதித்தார். பல்வேறு நாட்டிலிருந்து பல பெரிய விஞ்ஞானிகளும், நிபுணர்களும் இதில் உறுப்பினர்களாக பங்கேற்றார்கள். இந்தக் குழுவினுடைய ஒரு கருத்தரங்கு USSRஇல் கோர்பச்சேவ் அவர்கள் அதிபராக இருந்த பொழுது மாஸ்கோவிலேயே நடந்தது. கமிஷன் உறுப்பினர்கள் அவர் பதவியிலிருந்து விலகியபின் அவரையே நேரடியாகச் சந்தித்து கருத்தரங்கில் என்னவெல்லாம் பேசினார்கள் என்று ஒரு நேரடி Report வழங்கினர். 1994ஆம் ஆண்டு கமிஷனுடைய Reportஐ Uncommon Opportunities என்ற தலைப்பிட்ட புத்தகமாகவே வெளியிட்டு, அந்நேரம் யுனைட்டட் நேஷனில் செகரட்டரி ஜெனரலாக பணியாற்றிக் கொண்டிருந்த Mr. Boutros Ghali என்பவரிடம் குழு உறுப்பினர்கள் ஒரு பிரதியை வழங்கி, Report release செய்தார்கள்.

Business Management மற்றும் Development Studies ஆகிய இரண்டு துறைகளையும் தவிர ஸ்ரீ அப்பாவிற்கு என்றுமே கல்வித் துறையின் மேல் தனி ஈடுபாடு ஒன்றுண்டு. ஆரம்பக் கல்வியிலிருந்து கல்லூரிக் கல்வி வரை இந்நாட்டு கல்வி முறைகளைச் சீர்திருத்தி அமைத்தால் நாட்டின் வளர்ச்சிக்கு அது பெரிதும் உதவியாகவிருக்கும் என்று அவர் நம்புகிறார். குறிப்பாக மாணவ, மாணவியருடைய சிந்திக்கும் திறனைத் தூண்டும்படியும், அவர்களுடைய creative திறனை வளர்க்கும்படியும் அவர்களுடைய தன்னம்பிக்கை, பர்சனாலிட்டி, சுதந்தரமான செயல்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும்படியும் கல்வி திட்டங்களைச் சீர்திருத்த வேண்டும் என்று நெடுங்காலமாக வலியுறுத்தி வருகிறார். குறிப்பாக மழலையர் கல்வியைச் சீர்திருத்தி அமைத்தாலே நல்ல பலன் இருக்கும் என்றும் நம்பினார்.

அவருடைய நம்பிக்கைக்கு வடிவம் கொடுக்கும் வகையில் 2000 வருடத்தில் பிரிம்ரோஸ் என்ற பெயரில் மதர்ஸ் சர்வீஸ் சொஸைட்டியிலேயே ஒரு பள்ளியை நிறுவினார். இங்கு Flash Cards Systemஐ பயன்படுத்தி Pre-K.G. level உள்ள மழலையர்களுக்கே அவர்கள் சிந்தனையைத் தூண்டும் வகையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பிரிம்ரோஸ் பள்ளி கடந்த 10 வருடத்தில் பத்தாவது வரையிலும் வளர்ந்து, புதுவை நகரத்தில் ஒரு தலைசிறந்த பள்ளி என்று பெயர் பெற்றுள்ளது. சென்னை அன்னை அன்பர் ஒருவர் இந்தப் பெயரில் சென்னையில் பிரிம்ரோஸ் என்ற ஒரு பள்ளியை நிறுவியிருக்கிறார். அம்பத்தூர் தியான மையத்தைச் சேர்ந்த அன்பர் ஒருவர் இதே Flash Card Systemஐ பின்பற்றி Buds and Blossoms என்ற ஒரு பள்ளியை நிறுவி, சிறப்பாக நடத்தி வருகிறார். இப்படி ஓரிரு இடங்களில் பிரிம்ரோஸைப் பின்பற்றி மற்ற பள்ளிகள் எழும்பியுள்ளன. இருந்தாலும் அகில இந்திய அளவில் Flash Card System of Education பரவ வேண்டும், எண்ணற்ற பிரிம்ரோஸ் பள்ளிகள் இந்தியாவில் எழும்ப வேண்டும் என்பது ஸ்ரீ அப்பா அவர்களின் விருப்பம். இப்படி எண்ணற்ற பள்ளிகளை நிறுவுவதற்குப் போதுமான நிதி வசதி MSSஇல் இருந்தால் ஸ்ரீ அப்பா அவர்கள் உடனே செயல்படுவார். அன்னைதான் ஸ்ரீ அப்பாவினுடைய திட்டங்களை விரிவாக செயல்படுத்துவதற்குப் போதுமான நிதி வசதி MSSற்கு கிடைக்குமாறு செய்ய வேண்டும்.

MSSனுடைய விவசாய செயல்பாடுகள், Development செயல்பாடுகள், ஆராய்ச்சி நடவடிக்கைகள் மற்றும் கல்வித் துறையின் செயல்பாடுகளைப் பற்றி நான் இதுவரையிலும் பேசிவிட்டேன். மீதமிருப்பது MSSன் அன்னை பகவானைப் பற்றிய புத்தக வெளியீடுகளும், தியான மையச் செயல்பாடுகளும்தான். நீங்கள் எல்லோரும் அன்பர்களாக இருப்பதால் நான் இது பற்றி விவரமாகப் பேச வேண்டிய அவசியம் இல்லை. பேச வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், தியான மையங்களுடைய முக்கியத்துவம் எந்த வகையிலும் குறையவில்லை. MSS ஒரு பெரிய ஆலமரமாக வளர வேண்டுமென்றால் அந்த ஆலமரத்தைத் தாங்கிப் பிடிக்கும் விழுதுகளாக தியான மையங்களும் வளர வேண்டும். ஆலமரத்தின் பலம் என்பது அதன் விழுதுகளின் பலத்தைப் பொருத்தது. ஆகவே MSSன் ஆண்டு விழா நாளான இந்நன்னாளில் MSSஐ இன்னும் பெரிய ஆலமரமாக ஆக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு என் சொற்பொழிவை முடித்துக் கொள்கிறேன்.

 

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஒவ்வொரு கருவியும் பல பகுதிகளாலானது.
 

******



book | by Dr. Radut