Skip to Content

பகுதி 2

ஆன்மாவுடன் இணைக்க முயல்கிறோம். சமர்ப்பணம் பூர்த்தியான நிலை சரணாகதி.

 1. தான் கட்டுப்பட நிர்ப்பந்தமில்லாத இடத்தில் தன்னை அழித்து அன்பாலும், அடக்கத்தாலும் அடுத்தவருக்குப் பணிந்து போகும் பண்பே வாழ்வில் சரணாகதிக்குச் சமமானது.

*******

 1. தனிப்பட்ட வாழ்வின் முடிவு அல்லது பொதுநலத் திட்டம் போடும் பொழுது உள்ள நிபந்தனைகள் பல. சம்பந்தப்பட்டவருக்கு மட்டுமே தெரியும். வெளியிலிருப்பவர் முடிவைப் பற்றி நினைப்பது முடிவுக்குள்ள அம்சங்களுடன் தொடர்பில்லாமருக்கும். உண்மை என்ன என்பது நாள் கடந்த பின்னரே வெளிவரும்.

*******

ஒரு காரியத்தைப் பற்றிப் பல அபிப்பிராயங்கள் ஏற்படுகின்றன. காரியத்திற்குப் பொருந்தாத ஓர் அம்சத்திருந்து ஓர் அபிப்பிராயம் ஏற்படுகிறது. எல்லா அபிப்பிராயங்களும் அப்படி ஏற்பட்டவையேயாகும்.

சில அபிப்பிராயங்கள்:

 • தந்திக் கம்பத்திலுள்ள கம்பியாலும், ரயில்வே தண்டவாளத்தாலும் இந்தியாவை வெள்ளையர் கட்டித் தூக்கிக் கொண்டு போக முயல்கின்றனர்.
 • செல்லாத நோட்டைக் கொடுத்தவருக்கு மணியார்டர் மூலம் அந்த நோட்டைத் திரும்ப அனுப்பு. அவரே பெற்றுக் கொள்ளட்டும்.
 • 'ரேடியோ பெட்டிக்'குள் மனிதன் ஒளிந்து கொண்டு பேசுகிறான்.

 • பணம் தேவையானால், சர்க்கார் எவ்வளவு வேண்டுமானாலும் நோட் அடித்துக் கொள்ளும்.
 • உயர்ந்த சமூக நிலையிலுள்ளவரிடம் உயர்ந்த குணங்கள் உண்டு.
 • தாழ்ந்த நிலையிலுள்ளவர்களுக்குத் தாழ்ந்த குணங்கள் மட்டும் உண்டு.
 • செல்வம் பெற்றால் செல்வாக்கு வரும்.
 • இலாபகரமாக முடியும் காரியம் நல்ல காரியம்.
 • அழகான பெண் சிறந்த மனைவியாக இருப்பாள்.
 • மல்யுத்தத்தில் ஜெயித்தவன் நியாயஸ்தன்.
 • படிப்பால் நடத்தை உயரும்.
 • படித்துப் பட்டம் பெற பிறவியிலேயே புத்திசாத்தனம் தேவை.
 • இளமையில் படிக்காவிட்டால், பிறகு படிப்பே வாராது.
 • U.P.யிலிருந்துதான் நாட்டின் பிரதமர் உற்பத்தியாவார்.
 • நாத்திகனுக்குத் தெய்வ நம்பிக்கையில்லை.
 • பூஜை செய்தால் பக்தி ஏற்படும்.
 • கலப்புத் திருமணம் சிறப்புத் திருமணம்.
 • நம் உயர்ந்த ஜாதியை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
 • உயர்வு ஜாதியைப் பொருத்தது.
 • உயர்வு படிப்பைப் பொருத்தது.
 • உயர்வு பணத்தைப் பொருத்தது.
 • உயர்வு அந்தஸ்தைப் பொருத்தது.
 • உயர்வு பக்தியைப் பொருத்தது.
 • உயர்வு சித்தியைப் பொருத்தது.

குறி சொல்பவர்கள், சித்து விளையாடுபவர்கள், தேவி உபாசனையில் ஈடுபடுபவர்களுக்குத் தெய்வ நம்பிக்கையுண்டு. அன்னையிடம் நெருங்கி (physcially near) இருந்தால் அருள் அதிகமாகக் கிடைக்கும். பணம் வந்தால் மனிதன் கெட்டுப் போய் விடுவான்.

 1. காலம் மனத்தில் ஏற்பட்டது. எனவே சுப முகூர்த்தத்தில் மனத்திற்குள்ள நம்பிக்கை நம் வாழ்க்கையை நிர்ணயிப்பது இயல்பே.

******

காலம் பலவகைப்பட்டது. பல நிலைகளில் உள்ளது. உடலுக்குரிய காலம், உணர்வுக்குரிய காலம், மனத்திற்குரிய காலம், ஆன்மாவுக்குரிய காலம் என அவை பிரியும். உடலுக்குரிய காலம் 1 நிமிஷம் 1 மணியாக இருக்கும். தலைவிதியே என்று செய்யும் காரியங்களிலிருந்து மனமும், உணர்வும் விலகுவதால், கையால் மட்டும் அதைச் செய்கிறோம். எனவே உடலுக்குரிய காலம் செயல்படுகிறது. பாரமாக இருக்கிறது.

ஆசை பூர்த்தியாகும் பொழுது நேரம் போவதே தெரியாது. 1 மணி 1 நிமிஷமாகப் போகும். ஆசை பூர்த்தியாகும் பொழுது அங்கு சிந்தனையில்லை, தன்னையும் தன் உடலையும் மறந்துவிடுகிறான். ஆசையே மேலோங்கியிருக்கிறது. எனவே உணர்வுக்குரிய காலம் செயல்படுகிறது. வேகமாக நகர்கிறது காலம்.

காலம் என்பதே மனத்தால் ஏற்பட்டது. எனவே நல்ல நேரம், கெட்ட நேரம் என்பது மனத்தின் நம்பிக்கையைப் பொருத்தது. நம்பினால் காலம் அதன் குணத்தைத் தவறாது காட்டும். காலம் பலிக்கும். நம்பாவிட்டால், நம் விஷயத்தில் காலத்தின் குணம் பலிக்காது. கெட்ட நேரத்திற்கு அதன் குணம் இருக்காது. நல்ல நேரத்தின் குணத்தால் நாம் பயன்படுவது அளவோடிருக்கும்.

 1. தாழ்ந்த குணங்களை விடுவதற்கு எடுக்கும் முயற்சியை விட, உயர்ந்த குணங்களைத் தீவிரமாக நாடுதல் நல்லது.

*******

நாம் பிள்ளைகளை வளர்க்கும் பொழுது "திருடனாகாதே'' "பொய்யனாகாதே'' என்றெல்லாம் சொல்லி வளர்ப்பதில்லை. நல்ல குணங்களை மட்டும் வற்புறுத்திச் சொல்லிக் கொடுக்கின்றோம். குறுக்கே கெட்டவை தென்பட்டால், அவற்றை விலக்குகிறோம். நல்லதை நாள் முழுவதும் வயுறுத்துகிறோம்.

நம் சிறு வயதை நினைத்துப் பார்த்தால், கெட்டதைச் செய்யாதே என்று சொல்லிக் கொடுத்தது குறைவு. பல கெட்ட விஷயங்களைப் பற்றிக் கேள்விப்பட்டதேயில்லை. இன்று வரை அப்படிப்பட்ட கெட்ட வழக்கங்களிருப்பதே நமக்குத் தெரியாது என்று தெரியவரும்.

எதை நினைக்கின்றோமோ அது வலுப்படும். விலக்குவதற்காக நினைத்தாலும் அவை வலுப்படும் என்பதால், தாழ்ந்த குணங்களை நினைப்பதை விட்டு விட்டு, உயர்ந்த குணங்களை வலுப்படுத்துவதை மட்டும் மேற்கொள்வது சிறந்தது.

 1. அன்னை பக்தர் ஒரு காரியத்தைச் செய்வதால் அந்த நேரம் சுபமுகூர்த்தமாகிறது. பக்தரின் செயல் நேரத்தைப் புனிதப் படுத்துகிறது.

*******

 1. மனம் அழிந்து விட்டால் 10இல் 9 பேர் இறந்து விடுவார்கள்.

********

பழைய துணியை அடித்துத் துவைத்தால் கிழிந்து போகும். கறை பலமாக இருந்தால், புதுத் துணியானாலும், கறையை எப்படியும் எடுக்க வேண்டும் என்று முயன்றால் கிழிந்து விடும். மனமும் உடலும் இரண்டறக் கலந்துள்ளன. மனத்தை அழிக்க முற்பட்டால், அத்துடன் கலந்துள்ள உடல் கிழிந்துவிடும். மனம் அழிவது என்பது இதுவரை உலகில் இல்லாத ஒன்று. யோகிகளுக்கு மனம் தூய்மையாக இருக்கும். ஜோதி நிறைந்ததாக இருக்கும். ஆனால் மனம் என்ற கருவியுண்டு. இல்லாமலிருக்க முடியாது.

மௌனத்தை மேற்கொள்பவன் எண்ணமில்லாமலிருக்கின்றான். அதுவே மௌனம். மனத்தில் எண்ணமில்லை என்றால், எண்ணம் இனி வாராது என்று பொருளில்லை. எண்ணத்தை உள்ளே அனுமதித்தால் வரும். அடுத்த நிலையில் எண்ணம் அழிந்து, இனி எண்ணமே ஏற்பட முடியாது என்பது ஏற்படும். அது உயர்ந்த நிலை. அதன் பின் எண்ணம் மனதில் உதித்தால் அது அசரீரியாக இருக்கும். எண்ணத்தை உற்பத்தி செய்யும் திறனே அழிவதற்கு அடுத்த நிலை மனம் அழிவது. மனம் என்ற கருவி, தன் உருவை இழந்து, திறனை இழந்து, செயலை இழந்து, உயிரை இழந்து, உடலையும் இழந்து, தானிருந்த இடம் தெரியாமல் அழிவதே மனம் அழிவதாகும். ஓர் ஆபீஸ் உள்ள கட்டிடத்தை ஆபீஸ் என்கிறோம். அந்த ஆபீஸுக்கு லீவு விடுவதுண்டு. அந்த ஆபீஸை abolish எடுத்து விடுவதுண்டு. ஆபீஸை எடுத்துவிட்டு அது இருந்த கட்டிடத்தையும் இடித்து எடுத்து இடத்தை மனையாக்குவதுண்டு. மௌனம் லீவு போன்றது. மனத்தை அழிப்பதன் முதன் நிலை ஆபீஸை எடுப்பது போன்றது. அந்த டிபார்ட்மெண்டை எடுத்துவிட்டு, கட்டிடத்தையும் இடித்து விலக்குவது மனத்தை அழித்து அதன் அஸ்திவாரத்தை விலக்குவது போன்றது. இது உயர்ந்த யோகநிலை. இதுவரை இதை எய்தியவர்கள் பகவானும் அன்னையுமே.

 1. பூரணயோக முறைகளைப் பலவாறு விளக்கலாம். வரிசைப் படுத்தலாம். எப்படிச் சொன்னாலும் பலன் ஒன்றே. சொல்லும் முறை வேறானால் அதிகமாகப் புரிய உதவும். யோகத்திற்குரிய முதற் கட்டம் என்ற கட்டுரை இப்பகுதிக்குத் தேவையான எல்லா விளக்கங்களையும் அளிக்கும்.

********

பன்னிரண்டு முறைகளை, முறைகளின் பகுதிகளை வரிசைப்படுத்தி எழுதுகிறேன்.

1. சைத்திய புருஷன் வெளிப்படுதல்,

ஆன்மீகத் திருவுருமாற்றம்,

சத்திய ஜீவனின் பிறப்பு.

2. அகந்தை அழிந்து ஆன்மா விடுதலை பெறும் முதற் கட்டம், ஜீவாத்மா பிரபஞ்சத்தின் ஆன்மாவாக மாறுதல், ஜீவாத்மா பரமாத்மாவாக மாறுதல்.

3. அகந்தை கரைதல்,

சைத்திய புருஷனின் வெளிப்பாடு,

மனித சுபாவம் தெய்வ சுபாவமாக மாறுதல்,

ஞானம், பக்தி, கர்மம் இணைந்து பூரணம் பெறுவது.

4. மனோமய புருஷனின் தூய்மை,

ஆன்மாவுக்கு அகந்தையிலிருந்து விடுதலை,

சுபாவத்தைக் குணங்களினின்று விடுவிப்பது,

சமத்துவம் நிலைப்பது,

நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுவது,

சத்தியஜீவியத்தை எட்டித் தொடுவது.

5. அறியாமையிருந்து மனத்தை ஞானத்திற்கு அழைத்துச் செல்லும் 3 நிலைகள்:

அறியாமை மனம்,

தன்னை மறந்த ஞானம்,

தெய்வீக மனம்.

6. ஞானம் பெற்று பூரணம் அடைதல்,

பிரபஞ்சத்தோடு இணைந்த பூரணம்,

ஆனந்தத்தால் நிரம்பிய பூரணம்,

அந்தராத்மாவில் அனைத்தும் பூரணமாதல்,

ஜடம் ஆன்மாவின் ஆதிக்கத்திற்குட்படுதல்.

7. சமர்ப்பணம்,

பற்றறுத்தல்,

அகந்தை கரைதல்,

மனோமய புருஷன் சித்திப்பது,

பிரபஞ்சத்தின் ஆத்மாவாக மாறுவது,

பரமாத்மாவை அடைவது,

மனித சுபாவத்தைத் தெய்வ சுபாவமாக மாற்றுவது.

8. ஆசை, அகந்தை, மனம் ஆகியவற்றைப் படிப்படியாக அழித்து சத்தியஜீவியத்தை அடைவது.

9. ஆசை அழிவது,

பிராணமயபுருஷன் விடுதலை பெறுதல்,

அகந்தை அழிதல்,

சைத்தியபுருஷன் வெளிவருதல்,

மனத்தையும், பிராணனையும் அழித்து சைத்தியபுருஷனை சத்தியஜீவனாக மாற்றுவது.

 

10. மனத்தில் மேலெழுந்த நிலையிருந்து ஆழத்திற்குச் சென்று சைத்தியபுருஷனைக் கண்டு, ஆன்மீக மனத்தின் மூலம் சத்திய ஜீவனை அடைதல்

11. சுதர்மம், சுபாவம், சொரூபம் ஆகியவற்றைக் கடந்து பரமனை அடைவது

12. அறியாமையின் ஏழு நிலைகளைக் கடந்து, ஞானம் பெறுதல்.

 1. செயலிலுள்ள அறியாமை,
 2. ஜீவனின் அமைப்பிலுள்ள அறியாமை,
 3. உள்ளத்தின் அறியாமை,
 4. காலத்தால் ஏற்படும் அறியாமை,
 5. அகந்தையின் அறியாமை,
 6. பிரபஞ்சத்தை அறியாத நிலை,
 7. ஆதியை உணராத அறியாமை.

 1. மனிதன் தன்னைக் கொண்டு உலகத்தை அறிய முயல்கிறான். அது சுயநலத்தால் வரும் அறிவு. விலக்கான மனிதர்களும், விலக்கான நேரங்களிலும் தவிர மனிதன் "நான் சரி, மற்றவர்கள் தவறு'' என்ற கண்ணோட்டத்தையே மேற்கொள்கிறான்.

*********

இது அனைவரும் அறிந்த உண்மை. சுயநலம் என்பது சிறியது. சிறியதன் மூலம் சிறிய அறிவையே பெற முடியும். உலகம் பெரியது. பெரியதை மனிதனுக்குக் கொடுக்கக் கூடியது. உலகம் மனிதனுக்குக் கொடுப்பதற்கு அளவேயில்லை. உலகம் கொடுப்பதை மனிதன் அதிகமாகப் பெற வேண்டுமானால், பெறும் பாத்திரம் பெரியதாக இருக்க வேண்டும். சுயநலம் சிறிய பாத்திரம். பிறர் நலம், நாட்டு நலம், உலக நலம் பெரிய பாத்திரங்கள். அவற்றிற்குரிய சட்டங்கள் வேறு.

சிறிய சுயநலத்தை, சுயநலத்தின் சட்டங்கள் மூலம் உலகத்திற்கு எடுத்துச் சென்றால், உலகம் நீ எடுத்து வரும் பாத்திரத்தின் அளவுக்கேற்ப உனக்குக் கொடுக்கிறது. பெரிய இலட்சியங்களுடன் உலகத்தை நாடும்பொழுது அதற்குரிய பெரிய சட்டங்களைப் பின்பற்ற வேண்டும். அப்பொழுது உலகம் பெரிய அளவில் கொடுக்கும்.

சுயநலம் பாராட்டுபவன் எழுதப் படிக்க அறியாதவன்போல். எனக்கு எல்லாம் தெரியும், இதற்குரியது வந்தால் போதும் என்பான். அவன் மாடு மேய்க்கின்றான். தன்னலம் பாராட்டாதவன் படித்தவனைப்போல. படிப்பில் பல நிலைகள் இருப்பதைப் போல் பரநலத்திலும் பல நிலைகளுண்டு. படிப்பு எந்த அளவுக்குக் கொடுக்க முடியுமோ, அது படிக்காதவனை விட எப்படி ஒருவனை உயர்த்த முடியுமோ அதுபோல் பரநலம் உயர்த்தும்.

படிக்காதவன் கூலி வேலை செய்கிறான். அது அடிமட்டம். படித்தவன் உத்தியோகம் செய்கிறான். வாழ்வு அவனுக்கேற்ப அளிக்கிறது. வாழ்வில் அதிர்ஷ்டம் என்றுண்டு. அது படிப்பால் வருவதில்லை. படிக்காமலிருப்பதால் வருவதில்லை. இவரிருவருக்கும் ஏற்படக்கூடியது. அது ஒருவன் வாழ்வில் நுழைந்தால் உயர்வதற்கு அளவு கிடையாது. தன்னலம், பரநலத்தைத் தாண்டி அதிர்ஷ்டமிருப்பதைப்போல், அவற்றைத் தாண்டி அன்னை இருக்கிறார். அன்னையை ஏற்றுக் கொண்டால் அதிர்ஷ்டம் வருவதைப்போல் வாழ்வு செயல்படும். வாழ்வு அளவோடு அளிக்கிறது. அன்னை அளவுகடந்து அளிப்பார். தன்னலமுள்ளவனுக்கு அவனளவில் அதிகமாகவும், பரநலம் பாராட்டுபவனுக்கு அவனளவில் அதிகமாகவும் அளிப்பார். அதைத் தாண்டிய நிலையில் ஆன்மநலம் பாராட்டுபவனிருக்கிறான். அவன் அன்னையை ஏற்றுக் கொண்டால், அவனுக்குக் கிடைப்பன ஆன்மீகப் பலன்கள்; வாழ்வுக்குரியவையல்ல.

 1. பிரபஞ்சம் மனிதனாக உருவாகிறது. முதலில் உடலாகவும், பிறகு உணர்வாகவும், மனமாகவும் உருவெடுத்து முடிவில் ஆன்மாவாகிறது. அதையும் தாண்டிய நிலையில் ஆன்மா பிரகிருதியில் வெளிப்பட்டு பரமாத்மாவை அடையும் வழியைக் கோலுகிறது.

********

கிருஷ்ண பரமாத்மாவின் விஸ்வரூபத்தில் உலகமே அடங்கி யிருந்தது. யோகம் செய்து அகந்தையை அழித்த பின், அவனது ஜீவன் விஸ்வரூபம் எடுத்து பிரபஞ்சம் முழுவதும் பரவி பிரபஞ்சமாகிறது. ஏனெனில் பிரபஞ்சம் தன்னைப் பூர்த்தி செய்துகொள்ள ஒரு மையத்தை ஏற்படுத்த முனைந்து தன்னைச் சுருக்கி ஒளிமயமாக்கி ஒரு புள்ளியாக்கி மனிதனாக உருவாகிறது. அப்படி ஏற்பட்ட மனிதன் முதிர்ச்சியடைந்த பின் மீண்டும் பரந்து விரிந்து பிரபஞ்சத்தோடு ஐக்யமாகிறான். இந்த இரு தத்துவங்களையும் பகவான் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.

பிரபஞ்சம் தன்னைப் பூர்த்தி செய்ய மனிதனாகிறது. மனிதன் தன்னைப் பூரணப்படுத்த பிரபஞ்சமாகிறான்.

பிரபஞ்சம் சுருங்கி ஒளிமயமாகி ஆன்மாவாவது முடிவானால், முதல் நிலையில் பிரபஞ்சம் உடலாகிறது. பிறகு அதற்கு உயிர் ஏற்பட்டு உணர்வு எனும் பிராணனாகிறது. அடுத்த நிலையில் உணர்வுக்குத் தெளிவேற்பட்டு புத்தியாகிறது. கடைசி நிலையில் புத்தி ஒளி பெற்று ஜோதியாகி ஆன்மாவாகிறது. உடல் ஆன்மாவாக மாறும் நிலைகளில் நடுவே அகந்தை உற்பத்தியாகி ஆன்மாவை இருளாக மறைக்கின்றது. அகந்தை கரைந்த பின் ஆன்மா மலர்ந்து, பிரபஞ்சம் முழுவதும் பரந்து, முதலிலிருந்ததைவிட உயர்ந்து, ஆன்மாவுக்கு மட்டும் இருந்த செறிவை, பிரபஞ்சம் அனைத்திற்கும் அளித்து தன்னைப் பூரணப்படுத்திக் கொள்கிறது.

 1. சைத்தியபுருஷனை அடைந்தால் பிரகிருதியை விட்டு அகன்றதாக அர்த்தம். அதுவே மேலெழுந்த மனதைத் தாண்டியதாகும்.

*********

மனம் இரு நிலைகளிலுள்ளது. மேல்மனம், ஆழ்ந்த மனம் (surface, subliminal). சைத்திய புருஷன் ஆழ்ந்த மனத்திலிருக்கிறான். எனவே சைத்திய புருஷனை அடைந்தால் ஆழ் மனத்தை அடைகிறோம். பிரகிருதி மேல் மனத்திலிருக்கிறது. அதனால் பிரகிருதியைத் தாண்டாமல், சைத்திய புருஷனை அடையமுடியாது.

 1. மேலெழுந்த நிலை பிரகிருதி

ஆழ்ந்த நிலை புருஷன்.

*******

ஆழ்ந்த மனத்தில் சைத்திய புருஷன் உறைவதைப்போல் மனோமய புருஷனும் உறைகிறான்.

 1. அகந்தைக்கு ஆயிரம் நோக்கங்களுண்டு. இறைவனை நாடுவதைத் தவிர சைத்திய புருஷனுக்கு வேறெந்த நோக்கமுமில்லை.

********

 1. இடையறாத தரிசனம் நாடுபவர் மனித வாழ்வில் சிறப்புற வேண்டும். அதைப் பெற மனிதன் தன் திறமைகளைப் பூரணமாகத் தாண்டி வரவேண்டும். தாண்டிவர அதுபோல முனைந்தால் அகந்தை அழியும். பூரணமான முயற்சியை நல்ல முறையில் மேற்கொள்ளவேண்டும்.

********

அப்படியானால்,

மனம் நேர்மையாகவும் உணர்வு முழுமையாகப் பயன்பட்டும் உடல் சிறப்பான முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.

அது இடையறாத தரிசனத்தைக் கொடுக்கும்.

 1. தோற்றத்திற்குரிய உருவத்தை தோற்றுவிப்பதன் மூலம் ஜீவியம் முன்னேறுகிறது. முன்னேற்றம் உருவத்தைப் புறக்கணித்து உள்ளுறை ஜீவனை மட்டும் ஏற்றுக் கொள்கிறது. உடருந்து தோற்றத்தை நீக்கி உள்ளுறை ஜீவனை மட்டும் ஏற்றுக் கொள்கிறது. உடலிலிருந்து தோற்றத்தை நீக்கி உள்ளுறை ஜீவனை மட்டும் நிறுத்த முயல்வது பூரணயோகம்.

புதிய ஸ்தாபனங்களை உற்பத்தி செய்வதன் மூலம் நாகரீகம் முன்னேறுகிறது. நாடோடியாகத் திரிந்த மனிதன் முன்னேற வேண்டி ஓரிடமாகத் தங்கி ஊர் என்பதை ஏற்படுத்தினான். விலங்கான மனிதன், கூட்டம், ஊர், ஸ்தாபனம், ஜாதி என்பவற்றை உற்பத்தி செய்தான்.

சுதந்திரம் பெற்ற இந்தியா முன்னேற அதுவரை இல்லாத ஸ்தாபனமான திட்டக் கமிஷனை ஏற்படுத்தியது. Food Corporation உணவு கார்ப்பொரேஷனை ஏற்படுத்தி, பஞ்சத்தைப் போக்கியது. ஒவ்வொரு முன்னேற்றத்திற்குரிய புதிய ஸ்தாபனம் ஏற்பட்டால்தான் முன்னேற்றம் வரும்.

குடும்பம் முன்னேறும் போது அதுவரை இல்லாத பழக்கங்கள் ஏற்படும். பல பழக்கங்கள் சேர்ந்து ஒரு ஸ்தாபனம் அளவில் உருவானபின் முன்னேற்றம் நிலை பெறும். பழைய நிலையில் குடும்பத்தைப் பார்த்து, பிறகு இதுவரை வாராதவர்கள் இன்று புது ஸ்தாபன முறைகள் நிலைத்த பின் வந்து பார்த்தால் இது நானறிந்த வீடில்லை. எல்லாமே மாறிவிட்டது. புது வீட்டிற்கு வந்தது போலிருக்கிறது, என்று சொல்லி, பழைய பழக்கங்களை வரிசையாகச் சொல்லி எங்கே அதில் ஒன்றையுமே காணோம், புதிய பழக்கங்களை வரிசையாகச் சொல்லி, இவையெல்லாம் எப்பொழுது வந்தன என்று கேட்பார்கள். அதற்கு, முன்னேற்றம் வந்தது, நிலைத்துவிட்டது, அதற்குரிய systems அமைப்புகள் ஏற்பட்டுவிட்டன, இனி அவை மாறா, மனிதர்கள் அவற்றை ஏற்றுக் கொண்டார்கள், மனம் புதியவற்றை ஏற்றுக் கொண்டது என்று பொருள்.

குடும்பத்திற்குப் புதிய தோற்றம் ஏற்பட்டுவிட்டது. புதிய தோற்றத்திற்குரிய உருவம் உண்டாகிவிட்டது. அதனால் குடும்பத்தின் ஜீவியம் நிலை உயர்ந்துவிட்டது என்று பொருள்.

சமூகத்தில் தோற்றத்திற்கே முக்கியத்துவம் உண்டு. முன்னேற்றத்தில் தோற்றத்திற்கு முக்கியத்துவமில்லை. உள்ளுறை ஜீவனுக்கு மட்டுமே அர்த்தமுண்டு. தோற்றத்தை நீக்கி ஜீவனை மனதில் உற்பத்தி செய்தால், அது மனத்தின் முன்னேற்றமாகும். திருவுருமாற்றமாகும். உடல் அதுபோல் தோற்றத்தை நீக்கி ஜீவனை நிறுத்தினால் அது உடலின் திருவுருமாற்றமாகும். அது பூரணயோகம். உடலின் தோற்றம் பழக்கத்தாலானது. ஒரு காரியத்தைப் பழக்கத்தால் மட்டுமே நம்மால் செய்யமுடியும். பழக்கமில்லாத புது காரியத்தைப் பார்த்தவுடன் செய்வதே ஜீவனுடையதாகும். அதையே வாழ்வாக்கினால் அது தெய்வீக வாழ்வாகும்.

 

 1. உடலிலிருந்து மனம், உணர்வுக்குரிய தோற்றத்தையும் அதற்குரிய உருவத்தையும் விலக்கி அவற்றால் ஏற்பட்ட உள்ளுறை ஜீவியத்தை மட்டும் உடலில் நிறுத்துவது யோகம். கிருஷ்ண பரமாத்மா வேண்டும், அவனது படை வேண்டாம் என்பதைப் போன்றது.

*******

 1. சிறு முயற்சி பெரும் பலனைத் தரும் என்கிறார் அன்னை. முன்னேற்றச் சூழல் முதிர்ந்த நிலையில் (catalyst) எடுக்கும் சூட்சுமச் செயலுக்குரிய பலன் இது போன்றது.

*******

ஒரு சர்க்கார் பெரிய திட்டங்களைத் தீட்டி நடைமுறையில் கொண்டுவரும் நேரத்தில் சில சமயங்களில் தோற்றுவிடும். அடுத்த சர்க்கார் அத்திட்டங்களை அமுல்படுத்த ஒத்துக் கொள்ளும் செயலை மட்டும் செய்தாலும், திட்டத்திற்குரிய முழுப் பலனும் அவர்களைச் சேரும். ஒரு தலைமுறையில் ஏற்பட்ட செல்வாக்கு, நாணயம் போன்றவை அடுத்த தலைமுறையிலுள்ளவர்க்கு, அவர்களை அறியாமல், அவர்கள் எடுக்கும் சிறு முயற்சிக்குப் பெரும் பலன் தரும். 4, 5 பெரிய கம்பனிகள் ஒரு சரக்கை மார்க்கெட்டில் கொண்டு வர 10 வருஷம் பாடுபட்டு அதற்கான ஆராய்ச்சி, விளம்பரம், சர்க்கார் பர்மிஷன், புதிய சட்டங்கள் எல்லாவற்றையும் உயிரைவிட்டுத் தயார் செய்த பின் ஏதோ காரணத்தால் அவர்கள் அனைவரும் அதைக் கைவிட்டிருப்பார்கள். ஓரிரு ஆண்டு கழித்து ஒரு சிறு கம்பனி அதே சரக்கை மார்க்கெட்டில் புகுத்த பிரம்மப் பிரயத்தனம் செய்ய முடிவு செய்து, செய்த முதல் சிறு காரியத்திலேயே முழுப் பலனும் வந்து சிறு கம்பனி திடீரென பெரிய கம்பனியாகிவிடும்.

Indian economy இந்திய மார்க்கெட்டை வளப்படுத்த நேருவும், இந்திராவும் எடுத்த முயற்சிகள் சிறு பலனை அளித்தன. ராஜீவ் வந்த பொழுது மார்க்கெட் தயாராக இருந்தது. அவர் எடுத்த நடவடிக்கைகளில் அதற்கு முன் 30 வருஷமாக தயார் செய்ததின் பலனும், பெயரும் அவருக்குக் கிடைத்தன.

பகவான் ஸ்ரீஅரவிந்தரும், அன்னையும் 1904ஆம் வருஷத்திலிருந்து செய்த யோகத்தின் பலனாக 1956இல் சத்திய ஜீவியம் வந்தது. 1967இல் அது உலகில் நிலை பெற்றது. 1969இல் சத்திய ஜீவன் வந்தான். இன்று எளிய பக்தர்கள் எடுக்கும் சிறு முயற்சிக்கு அளவுகடந்த பெரும்பலன் தர இவை உலகின் சூழலில் காத்திருக்கின்றன. ஆனால் அந்தச் சிறு முயற்சி, சத்திய ஜீவிய இலட்சணத்தோடு கூடியதாக இருக்க வேண்டும்.

 1. குருடு

*******

 1. உலகத்தில் நாம் முன்னேறக் கிடைக்கும் வாய்ப்புகள் காண முடியாதன.
 2. எதைக் குறையென உலகம் அறிகிறதோ, அதைச் சந்தோஷமாக அனுபவித்துக் குறையென உணர முடியாத குருட்டுத் தனம்.
 3. உலகத்தின் பெருமையை உணருபவனும், தன் சந்தோஷத்தை அறிபவனும் ஆன்ம விழிப்புப் பெறுவதில்லை.

 1. மேல் மனத்திருந்து ஆழ்ந்த மனத்திற்கு போகக் கூடிய திறன் ஒன்றே. அதைப் பலவகைகளில் விளக்கலாம்.

*********

 1. சமாதி நிலையை நோக்கிப் போகும் நிஷ்டை.
 2. எண்ணத்தையும், உணர்வையும், செயலாற்றும் திறனையும் விட்டுவிட முடிவு செய்வது.
 3. எண்ணத்தையோ, உணர்வையோ, உடலசைவையோ ஒருமுகப்படுத்தி, ஒரு நிலைப்படுத்துவது.
 4. மௌனம்.
 5. மனஉறுதியை அதிகபட்ச நிலைக்குக் கொண்டு போவது அல்லது கரைப்பது.
 6. எண்ணம், உணர்வு, உடல் அசைவை, சமர்ப்பணம் செய்வது.
 7. சமர்ப்பணத்தை விட அன்னையை நாடுவது.
 8. பொய்யை அறவே விட்டு மெய்யை முழுவதும் ஏற்றுக் கொள்வது.
 9. உண்மையான மனநிலை sincerity.
 10. அகந்தையைக் கரைப்பது.
 1. நெடுநாளாகத் தடையான காரியத்தைப் பிரார்த்தனையும் பூர்த்தி செய்யாவிட்டால், அதை ஆராய்வது நல்லது. திறமை, விழிப்பு, நோக்கம், பண்பு ஆகியவற்றின் கண்ணோட்டத்தில் பூர்த்தியான ஒரு காரியத்தோடு இதை ஒப்பிட்டுப் பார்த்தால், எது தடை என விளங்கும்.

*********

 1. எதிரெதிரானவை ஒன்றைவிட்டு மற்றது விலகுவதற்குப் பதிலாக நெருங்கி வந்து சந்தித்தால் நடைமுறையில் பலன் கிடைக்கும்.

********

இரண்டு பார்ட்னர்கள் அபிப்பிராயப் பேதத்தால் பிரிந்தால் தொழில் கெட்டுப் போகிறது, அல்லது சுருங்குகிறது. அதற்குப் பதிலாக அவர்கள் நெருங்கி வந்து compromise சமாதானமானால் தொழில் தொடரும். சமாதானமாவதற்குப் பதிலாக, ஒருவர் பிறர் நோக்கைப் புரிந்து கொள்ள முயன்று அதன்படி தன்னை மாற்றிக் கொண்டால், பெரும்பலன் கிடைக்கும். அதேபோல் நமக்குச் சில விஷயங்களில் பெருந்தன்மையும், சில விஷயங்களில் சின்ன புத்தியும் இருக்கிறது. பொறுமையும், அவசரமும் வேறுவேறு விஷயங்களிலிருக்கின்றன. ஒரு முக்கியமான காரியத்தை நல்ல குணம் சில சமயங்களில் பூர்த்தி செய்கிறது, கெட்ட குணம் சில சமயங்களில் கெடுக்கிறது. அதுபோன்ற சமயங்களில் நாம் முயன்று கெட்டதை விலக்குகிறோம். அதனால் பலன் கிடைக்கிறது.

அதைவிட உயர்ந்த முறையுண்டு. நம் நல்ல குணங்களையும், கெட்ட குணங்களையும் ஆராய்ந்து அவற்றைப் பகுத்து அதன் பகுதிகளை ஒன்றோடு ஒன்று பொருத்திப் பார்த்தால் நாம் ஒரு நிலையிலிருந்து அடுத்த உயர்ந்த நிலைக்குப் போகும் பொழுது இப்பிளவு ஏற்படுகிறது என்று தெரியும். பழைய குணமும், புது இலட்சியமும் சேருவதால் இப்பிளவு ஏற்படுகிறது. புது இலட்சியத்திற்குரிய புதுக் குணத்தை ஏற்றுக் கொண்டவுடன் இப்பிளவு மறைந்து, கெட்டது நல்லதாக மாறும். அவசரமும், பொறுமையாக மாறும்.

என் பிள்ளை மீது எனக்கு அளவு கடந்த பாசம். அவன் மீது குறையே எனக்குத் தெரியாது. அவனும் என் மீது அளவுகடந்த பாசத்தோடு இருந்தான். இவன் S.S.L.C பாஸ் பண்ணும் அறிவில்லாதவன். எனக்காகப் படித்தான். நான் அவனுக்காக உயிரைவிட்டேன், எனக்காக அவன் செய்த முயற்சியாலும், அவன் மீது நான் வைத்துள்ள அளவுகடந்த பாசத்தாலும் அவன் Ph.D. பட்டம் பெற்றுவிட்டான். பேராசிரியராக வேலை செய்கிறான். என் வாழ்விலும், அவன் வாழ்விலும் இது பெரிய வெற்றி. எதிர்பாராதது, எங்கள் வாழ்வு மாறியது. பையனுக்கு வைஸ் சான்ஸ்சலர் பதவி பெறும் அளவுக்கு என் அந்தஸ்து உயர்ந்து விட்டது. அவனை வைஸ் சான்ஸ்சலராக்கும் அத்தனைச் சந்தர்ப்பங்களும் என்னைச் சூழ்ந்துள்ளன.

இவனுக்குப் பழக்கம் சரியில்லை. பேராசிரியர் நிலையிலேயே இவனுடைய பழக்கம் மற்றவர்களை விட மட்டமானது. தானே புத்திசாலி என்று நினைப்பதே தவறு.

இவனுக்குப் புத்தியேயில்லை. மற்றவரிடம் தன் புத்திசாலித்தனத்தை விளக்கி வெட்கமில்லாமல் பேசுகிறான். நான் எதையும் யாரிடமும் வாங்கிக் கொள்ள மாட்டேன். என்னால் கேட்க முடியாது. இவன் எதை வேண்டுமானாலும், யாரிடமும் வெட்கமில்லாமல் தான் பேராசிரியர் என்பதையும் மறந்து கேட்கிறான். என் மானம் போகிறது. இதுபோல் S.S.L.C பாஸ் பண்ணமுடியாத பையனுடைய மட்டமான குணங்கள் இவனிடம் ஏராளமாக உள்ளன. எதிர்த்துப் பேசுகிறான். இவையெல்லாம் எனக்குத் தெரியும். அதனால் இவன் மீது பாசம் குறையவில்லை. இவனை வைஸ் சான்ஸ்சலராக்க வேண்டும் என்று நண்பர் பேசும் பொழுது இவன் குறைகள் எனக்கு மனதில் தோன்றுவதில்லை. அந்தச் சந்தர்ப்பம் பல முறை வந்துவிட்டது. முதல் சந்தர்ப்பத்திலேயே இவனுடைய மட்டமான பழக்கம் அதை ரத்து செய்கிறது. எனக்கு அது தெரிந்தாலும் பாசம் கண்ணை மறைக்கிறது. அவன் மாற வேண்டும் என்று என்னால் நினைக்க முடியவில்லை. வைஸ் சான்ஸ்சலர் உத்தியோகம் வந்தால் கற்றுக் கொள்வான் என்றுதான் நினைக்கிறேன். இவனைப் போன்று எத்தனை பேர் இல்லை என்று தோன்றுகிறதே தவிர அவர்களுக்குள்ள மற்ற அம்சங்கள் இவனுக்கில்லை என்று தோன்றவில்லை. பல ஆண்டுகள் கழித்து, இவன் மீது எனக்குள்ள குருட்டுத்தனமான பாசம்தான் இவன் மட்ட புத்திக்குக் காரணம். நான் பாசத்தை விட்டு, இவனைக் கடிந்து கொண்டால் நிச்சயம் மாறுவான் என்று என் அறிவுக்குப்பட்டவுடனே, பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன, தென்பட்டன. பையன் அதுபோல் மாறுவதற்குப் படும் அவதியை என்னால் பார்க்க முடியவில்லை. அது பையனுடைய அவதியில்லை. அவன் மட்டமான பழக்கங்கள் படும் அவதி என்று தெரிந்தாலும், இவனுக்கு வைஸ் சான்ஸ்சலர் பதவி வேண்டாம், அவதியும் வேண்டாம் என்றே மீண்டும் மீண்டும் தோன்றுகிறது.

என் பாசமும், அவன் அவதியும் எதிரானவை. அவதியை விலக்கி, பாசத்தை நிலைநிறுத்தினால் பேராசிரியராக ரிடையர் ஆகலாம். அவதியை ஆராய்ந்து, அதன் அடிப்படைப் பழக்கங்களை இவன் விட்டு விட வேண்டும் என நான் விரும்ப, பாசத்தை குருட்டுப் பாசத்தை நான் மாற்றிக் கொள்ள வேண்டும். பிள்ளை மீதுள்ள பாசம் வேறு. அவன் மட்ட புத்தி மேலுள்ள பாசம் வேறு. பிள்ளையையும், மட்டபுத்தியையும் பிரித்துப் பார்க்க என்னால் முடியவில்லை. இதுவே என் மனப் போராட்டம் என்ற நிலையிலுள்ளவருண்டு.

அளவுகடந்து உயர்ந்த சந்தர்ப்பம் வந்த பொழுது அளவுகடந்து உயர்ந்த பழக்கம் வேண்டும். நம் இன்றைய பழக்கத்திற்கு உயர்ந்த பலன் வாராது. ஆனால் என் குறை எனக்குத் தெரிவதில்லை. இந்நிலையில் rational அறிவுள்ள நிலையைச் சோதித்துப் பார்த்துத் தம்மை மாற்றிக் கொள்ள முன் வருபவர் குறைவு. தன் பிள்ளையைக் கடிந்து கொள்பவர் குறைவு.

பாசமும் குறையும் எதிரானவை. அவற்றைப் பிரித்து வைத்தால் பலனில்லை. அவற்றை ஆராய்ந்து குறையை நீக்கி அவற்றை நெருங்கக் கொண்டு வந்தால் உயர்ந்த பலன் கிடைக்கும்.

 1. பிரார்த்தனையும் காணிக்கையும் சேர்ந்து சேவையாகிறது.

**********

மனிதன் தெய்வத்தை நாட எடுக்கும் ஆன்மிக முயற்சிக்கு ஆர்வம் எனவும் அதன் பகுதிகளுக்கு ஞானம், பக்தி, கர்மம், சேவை எனவும் பெயர். தன் முயற்சி முழுப் பலன் தாராத பொழுது மனிதன் தெய்வத்தை அழைத்து, தன் முயற்சியைப் பூர்த்தி செய்யும்படிக் கேட்பது பிரார்த்தனை. இறைவனின் திருவுள்ளத்தைத் தன் ஜீவனில் பூர்த்தி செய்யும்படி மனிதன் தன்னை இறைவனுக்கே சரணம் செய்து எழுப்பும் குரல் பிரார்த்தனை.

தன் மனத்தின் தெளிவு, இதயத்தின் உணர்வு, உடலின் சேவை போதுமான அளவு இல்லாத பொழுது அதை ஈடுகட்ட பிரார்த்தனையை நாடுகிறான். அதேபோல் தன் உடல் உழைப்பால் சேகரம் செய்த பொருளைக் காணிக்கையாக்கி உடன் ஆர்வத்தைப் பூர்த்தி செய்ய முனைகிறான்.

சேவை ஒரு வகையில் இவையிரண்டும் கொடுக்கும் பலனைச் சேர்த்துக் கொடுக்கும். உடலால் செய்யும் சேவையில் காணிக்கை உட்பட்டது போல் உடலால் செய்யும் காரியம் உடலின் பிரார்த்தனையாக, உடலின் குரலாக அமையும். இதுவே சேவையின் முதல் நிலை.

நம் சொந்த மனித உணர்வை, தெய்வீக உணர்வாக மாற்றுவதும், நம் சொந்தக் கருத்தை மாற்றி அன்னையின் கருத்தில் நிற்பதும் உணர்வாலும் மனதாலும் செய்யும் சேவையாகும்.

 1. Sensitivity சொரணை என்பதே உடல் பெற்ற அறிவு.

*******

மனம் பல நிலைகளில் செயல்படுகிறது. இன்று ஒரு விஷயத்தை நாம் இலட்சியமாகக் கருதுகிறோம். பொன்போலப் போற்றுகிறோம், அதைப் பற்றி எவரும் தவறாகப் பேசுவதைத் தாங்கிக் கொள்ள முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டோம் என்றால் அந்நிலைக்கு வருவதற்கு முன் பல நிலைகளுள. பாசத்தால் குழந்தைகளைப் பற்றி மற்றவர் ஒரு வார்த்தை குறைவாகப் பேசினால் துடித்து விடுகிறோம். பக்தியால் அன்னையைப் பற்றிப் புரியாமல் பேசினால் உயிர் போவது போருக்கிறது. நம் குடும்பம், நம் ஜாதி, ஊர், படிப்பு, தொழில் ஆகியவற்றுடன் உணர்வால் இணைந்துவிட்டால் இந்நிலை ஏற்படுகிறது. இதை sensitivity, அது விஷயம் அவருக்கு தாங்காது, இந்த விஷயத்தில் அதிக சொரணையுடையவர் என்கிறோம். தமிழில் சொரணை என்ற சொல் மட்டமானதைக் குறிக்கும். உயர்ந்த உணர்ச்சிக்கு அதுபோன்று எந்தச் சொல் சரி என்று எனக்குத் தெரியவில்லை. கவரிமான் மயிரிழந்த நிலையை எப்படிக் குறிப்பது?

இதற்குமுந்தையநிலைகள ஆங்கிலத்தில், sentiment,idealism,attachment,commitment,will,

acceptance,understanding என்பார்கள். இவைகளைச் சரியான தமிழில் விளக்க பாண்டித்யம் தேவை. கூடியவரை எழுதுகிறேன்.

குடும்பம்தான் முக்கியம் என்று புரியாத நிலையிலிருந்து, அதுவே தலையானது என்று புரிந்தபின், செயல் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடப்பது (acceptance) அடுத்த நிலை. நம் சௌகரியம், உரிமையை விட்டுக்கொடுத்து, குடும்பத்தின் சௌகரியத்தையும், உரிமையையும் காக்க முன் வரும் நிலையது. ஏற்றுக் கொண்டதை செயல்படுத்த will உறுதி தேவை. நாளாவட்டத்தில் உறுதி commitment உள்ளூர ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறது. அதன்மீது குடும்பப்பற்று ஏற்பட்டு அதுவே இலட்சியமாக அடுத்த நிலையில் "என் குடும்பத்தைப்பற்றி நல்லது கெட்டது என்னால் பார்க்க முடியாது. குடும்பம் என்றால் அதை நான் முடிவாக ஏற்றுக் கொள்வேன்'' என்ற உணர்வு sentiment ஏற்படும். அதன்பின் அது sensitivity யாக மாறுகிறது. உயர்ந்த தன்மான உணர்வை ஒரு விஷயத்தில் சுருக்கெனப்படும் சொரணை போல் வளர்ந்த நிலையில் sensitivity என்கிறோம். மனத்திற்கு இவ்வுணர்வு எதில் ஏற்படுகிறதோ அதில் அறிவு முன்னேற்றமும், ஆசையில் இவ்வுணர்வு எதில் ஏற்படுகிறதோ அதில் வாழ்வு முன்னேற்றமும், செயலில் இவ்வுணர்வு எங்குத் தென்படுகிறதோ, அங்குக் காரியம் கூடிவருவதும் நிகழும். அதுவே உடல்பெற்ற அறிவு.

 1. பிரார்த்தனை பலிப்பதை நாம் கண்டாலும், பலிக்கும் வகையை நாம் அறியோம். வகையை அறிவது ஞானம்.

*********

மனத்தின் உறுதி (will) அன்னை மூலமாக நிறைவேறுவதே பிரார்த்தனை பலிப்பதாகும். உறுதியின் அளவு பலித்ததின் அளவை நிர்ணயிக்கும். சூழலின் உறுதி (the universal will in the atmosphere) இதைவிடப் பெரியது. மன உறுதி அதில் ஓர் இழையே. மன உறுதியைவிட, மற்றொரு வகையில் பார்த்தால், உணர்வின் உறுதி வலிமையானது. அதனுடைய சூழலின் உறுதி பிரம்மாண்டமானது.

உடல் உறுதி உணர்வின் உறுதியைவிட அதிக வலுவுள்ளது. அதற்கும் ஆதியான சூழலில் உறுதியுண்டு.

உடலில் ஆன்மீக உறுதியை முடிவாகச் சொல்லலாம். அதை வெளிப்படுத்துவதே பூரணயோகம்.

மனம், உணர்வு, உடல் ஆகியவற்றில் ஒவ்வொன்றுக்கும் அறிவு, உறுதி என இரு பிரிவுகளுண்டு. புரிந்துகொள்வது அறிவு. செயல்படுவது உறுதி. இவற்றுள் மனம் முதல் நிலை. உடல் மூன்றாம் நிலை. எனவே உடல் உறுதி இருப்பவற்றுள் அதிக வலுவுடையது.

இம்மூன்று கரணங்களுக்கும் soul ஆன்ம நிலையுண்டு. அவற்றை முறையே மனோமய புருஷன், பிராணமய புருஷன், அன்னமய புருஷன் என்கிறோம். அவை ஆன்மீக ஞானத்திற்குரியவை. செயலுக்குரியவையல்ல. ஜீவாத்மாவின் பகுதிகள் இவை.

சைத்தியபுருஷன் என்பது பிரகிருதியில் உள்ள ஆன்மா. மனம், உணர்வு, உடல் பகுதிகளில் உள்ள பிரகிருதியின் உள்ளே மறைந்துள்ள ஆன்மிக அம்சத்திற்கு, சைத்திய புருஷன் எனப் பெயர். ஒரு கரணத்திலுள்ள புருஷன் வழியாக மோட்சம் அடையலாம். அக்கரணத்திலுள்ள சைத்தியபுருஷன் மூலம் அக்கரணத்தை திருவுருமாற்றம்

செய்யலாம். அதுபோல் உடல் திருவுருமாற்றமடைவது, பூரணயோகத்தின் கடைசி நிலை. அதை முடிக்க உடலில் உள்ள சைத்தியபுருஷன் வெளி வரவேண்டும்.

பிரார்த்தனை பலிப்பது மனத்தின் உறுதியால் நடப்பது. இது முதல் நிலை. உடன் சைத்திய புருஷனால் நடக்கும் செயல் உடலின் ஆன்மீக உறுதியால் நடப்பது. இது ஆகும் நிலை முடிவான நிலை.

 1. குழந்தைக்கு நாம் கொடுக்கும் பொருன் மதிப்பு தெரியாததுபோல், மனிதனுக்கு இறைவன் கொடுப்பதின் மதிப்பு தெரிவதில்லை. அதனால் அவனால் நன்றி சொல்லமுடியவில்லை.

********

 1. ஆசையைக் கடந்து சென்ற பின் அது பூர்த்தியாவதும் உண்டு.

*******

 1. எதை நம்மால் சாதிக்க முடியவில்லையோ, அது நம் மனத்தை ஆட்கொள்ளக்கூடியது.

*******

 1. முழு மனதுடன் வெறுப்பதை முழு மனதுடன் விரும்பும் குணம் மனிதருக்குண்டு.

********

 1. கடந்ததை விட்டகன்ற பின்னரே மனிதன் சாதிக்கின்றான். இருப்பினும் எதிர்காலச் சாதனையைக் கடந்த காலத்திற்கேற்ப அமைக்க முயல்வதும் மனித இயல்பே.

********

கல்லூரியில் படிப்பவனுக்குப் பொழுதுபோக்கு இரண்டாம் பட்சம். தவறான பொழுது போக்கு அவனுக்குத் தடையாகும். அதை அனுபவிப்பதற்காகவே கல்லூரிக்குப் போகவிரும்புவதும், போனபின் அதைப் பூரணமாக அனுபவிக்கப் பெற்றோர் உதவ வேண்டும் என்ற மனப்பான்மையும் உள்ளவர்கள் சிலர். பாங்க் லோனில் கம்பனிச் செலவு தவிர வேறு செலவு செய்வது தவறு. அரசியல் பதவியிலிருப்பவர்கள் சொந்தக் காரியங்களுக்காகச் செல்வாக்கைப் பயன்படுத்துவது தவறு. பெரிய இடத்திலுள்ளவர்கள் சிறிய காரியங்களுக்கு ஆசைப்படுதல் முறையன்று.

ஆனால் சொந்தச் செலவுக்காகவே கம்பனிப் பெயரில் கடன் வாங்குவதும், சொந்தக்காரர்களுக்குப் பயன்பட மட்டும் அரசியலை நாடுவதும், சிறிய ஆசைகளைப் பெரிய அளவில் பூர்த்தி செய்ய பெரிய இடத்தைத் தேடுவதும் மனித இயல்பு.

கடந்ததைப் புறக்கணித்தால்தான் நல்லது நடக்கும் என்றால், கடந்த கால அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யவே எதிர்காலத்தில் சாதிக்க விரும்புவதும் மனித இயல்பு.

 1. தர்க்கமும், குதர்க்கமும் மனிதனுக்கு இன்றியமையாதவை. இடைவிடாமல் தன்னை அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அவன் உணர்வுக்குரிய பழக்கம். அதனால் அவனால் அவர்களுடைய நிலையை விட உயர முடிவதில்லை. உடலால் வாழ்பவன் எதையாவது செய்தபடி இருக்கிறான். மனமும், உணர்வும், உடலும் இதுபோல் தங்கள் வாழ்வைக் காப்பாற்றிக் கொள்கின்றன.

********

முன்னேற்றம் வேண்டும். அடுத்த நிலைக்குப் போக வேண்டும், உயர வேண்டும் என்றால் இருக்கும் நிலை சலிக்க வேண்டும். அதை எப்பொழுது விடலாம் எனத் தயாராக இருக்க வேண்டும். இருக்கும் நிலை சந்தோஷமாக இருந்தால், அடுத்த நிலைக்குப் போக முடியாது. இருக்கும் நிலையை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருந்தால், நாம் நினைப்பதாலேயே அது உறுதிப்படும். நண்பர்கள் நம் நிலையில் உள்ளவர்கள். அவர்களோடு இடைவிடாதபடி நம்மை ஒப்பிட்டுப் பார்த்தால், அவர்கள் நிலையை நாம் இலட்சியமாகக் கொள்வதாகும். எனவே உயர்வு என்று வந்தாலும், அதிகபட்சம் அவர்கள் நிலைக்கே உயரமுடியும். செய்வதை ஏன் திரும்பத்திரும்பச் செய்கிறோம்? அதைச்

செய்வதில் திருப்தி ஏற்படுவதால் செய்கிறோம். இருப்பதே திருப்தியானால், எப்படி மேலே போக முடியும்?

மனம் ஏன் தர்க்கம் செய்கிறது? ஏன் குதர்க்கமாகப் பேசுகிறது? நாமிருக்கும் நிலை சரி எனத் தர்க்கம் செய்கிறது. நம் நிலையைக் குறைத்துப் பேசுபவர்களைக் குதர்க்கமாகத் திட்டுகிறது. இதன் பலன் என்ன? நம் நிலையை உறுதிப்படுத்திக் கொள்கிறோம்.

தர்க்கம், குதர்க்கம், நண்பர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தல், செய்ததையே திரும்பத் திரும்பச் செய்வது ஆகியவை நாம் நம் இன்றைய நிலையை விரும்புகிறோம் என்று அறிவிக்கின்றது. இன்றைய நிலையை விரும்புபவனுக்கும், அதிலேயே திருப்தி அடைபவனுக்கும் முன்னேற்ற மில்லை.

 1. பெரிய திட்டங்களை மனதிலிருந்து அகற்றினால்தான் பெரும் ஆன்மீக அனுபவங்கள் கிட்டும் என்கிறார் அன்னை. வளர்ந்த மனமுடைய மனிதன் எதையாவது செய்தபடி இருக்கும் மனநிலையையே அன்னை இங்குக் குறிக்கின்றார்.

**********

கங்கையையும், காவேரியையும் இணைக்க வேண்டும், உலகில் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும், சந்திரமண்டலத்தை எட்டவேண்டும், நாடெங்கும் அன்னையின் புகழ் பரப்ப வேண்டும், ஐரோப்பிய நாடுகளை ஒன்று சேர்க்க வேண்டும், ஆப்பிரிக்கப் பஞ்சத்தை அழிக்க வேண்டும், சூரிய சக்தியை உலகம் பயன்படுத்தவேண்டும், இந்தியா ஜகத்குருவாக வேண்டும், நாட்டில் அனைவரும் பட்டதாரியாக வேண்டும் என்பன போன்ற அரசியல், பொருளாதார, விஞ்ஞானத் திட்டங்கள் சில இலட்சியவாதிகள் மனதில் புகுந்து இரவு பகலாய் அவர்களை ஆட்கொள்வதுண்டு. எந்தத் திட்டங்களானாலும், திட்டங்கள் மனதில் உதிப்பவை. உலகத் தலைவர்களுக்கு இதுபோன்ற திட்டங்கள் உயர்ந்த இலட்சியமாகும். யோகம் செய்பவர்கட்கு, இலட்சியம் மனத்தைத் தாண்டி ஆன்மாவை எட்டுவது. யோகத்தை மேற்கொண்டபின், எவ்வளவு உன்னதமான திட்டத்தை மனம் நாடினாலும், நாம் மனத்தின் எல்லைக்குள் இருக்கிறோம். மனத்தின் எல்லைக்குள் இருந்து கொண்டு ஆன்மீகத்தை நாடுதல் இயலாத காரியம். திட்டங்கள் உயர்ந்தவை. அது தலைவர்களுக்குப் பொருந்தும். யோகத்தை மேற்கொண்ட சாதகருக்குப் பொருந்தாது. திட்டத்தைக் கைவிட்ட பின்தான் ஆன்மீக அனுபவம் பிறக்கும் என்று அன்னை விளக்குகிறார்.

பூர்வஜென்மப் புண்ணியத்தால் பெரிய ஆத்மாக்களுக்கு இதுபோன்ற திட்டங்கள் எளிமையாகத் தோன்றும். உடனே பூர்த்தியாவதாகத் தெரியும். அதற்குரிய சந்தர்ப்பம் இல்லாததால் எதுவும் நிறைவேறாது. எதுவும் கூடிவாராவிட்டாலும் இவர்கள் மனம் திட்டத்தை அப்படியே பற்றி நிற்கும். அடுத்த ஜன்மத்திலோ அல்லது இந்த ஜன்மத்தில் பிற்காலத்திலோ தகுந்த சந்தர்ப்பம் வந்தவுடனே இவர்கள் திட்டம் பலித்துவிடும். எனவே இவர்கள் மனதிருந்து திட்டத்தை எடுக்க இயலாது.

 1. பூரணயோகத்தில் வறண்ட தத்துவங்களில்லை. நம்முள் உணர்வாகவாவது அல்லது வாழ்வில் செயலாகவாவது நாம் அவற்றைக் காண முடியும்.

*******

 1. குறி, ஜோஸ்யம், சகுனம் போன்றவை அன்னை பக்தர்களுக்கு முடிவானவையில்லை. அவை ஓர் உண்மையைக் குறிக்கின்றன. என்றாலும் நம்மை அவை கட்டுப்படுத்தாது. அன்னையை அழைத்தவுடன் நிலைமை மாறி எதிரான சகுனம், குறி, தோன்றுவதும் உண்டு. அவற்றை நம்புபவர்களையே அவை கட்டுப்படுத்தும்.

*******

 1. முன்னேற்றப் பாதையில் ஒரு மனிதன் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குத் தொடர்ந்து போகிறான். கடைசி நேரத்தில் ஒரு நிகழ்ச்சியோ, குணமோ, பழக்கமோ அவனை முந்தைய நிலைக்குக் கொண்டுபோய் அங்கேயே நிலைநிறுத்த முயலும்.

*******

தனக்கு எது பெரிய தடையோ, அதையே இலட்சியமாகக் கருதும் மனப்பான்மை மனிதருக்குண்டு என்பதால், தன்னைக் கவிழ்க்கவரும் நிகழ்ச்சியை மனிதன் விரும்பி நாடுவதும் உண்டு, விலக்க மறுப்பதும் உண்டு. ராஜீவ் கடைசி நாளில் இதுபோல் நடந்தார்.

 1. ஒரு பலனைப் பெற உடல் உழைக்கின்றது. வேலைக்குரிய சக்தியை உணர்வு அளிக்கின்றது.

மனம் புரிந்துகொள்ள சிந்தனையை நாடுகிறது.

ஜீவியம் அதே பலனைப் பெற விழிப்புடன் இருந்தால் போதும்.

********

 

மனம் முயன்று பெறுவது அறிவு,

உணர்வு சாதிப்பது சக்தி,

உடல் பலனைச் சாதிக்கின்றது,

ஜீவனுக்குரிய பலன் ஆன்மீக வளர்ச்சி.

இரு உண்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். 1) எவ்வளவு முயன்றாலும் ஒரு நிலையில் பெறக்கூடிய அதிகபட்சப்பலன் அந்நிலையைத் தாண்டாது. 2) அனைத்தையும் தன்னுட்கொண்ட ஜீவியம் அதன் பகுதிகள் முயன்று பெறுவதை, விழிப்புடனிருப்பதால் மட்டுமே பெறமுடியும். உடலால் உழைக்க மட்டுமே முடியும். உயர்ந்த உழைப்பானாலும், அதன் மூலம் அடுத்த கரணங்களாகிய உணர்வு, மனத்திற்குரிய பலன் கிடைக்காது. உழைப்பால் அறிவைப் பெற முடியாது. அதே போல் உடலால் கிடைக்கக் கூடிய பலனை எவ்வளவு பெருமுயற்சியானாலும் மனம் பெற முடியாது. ஆனால் ஜீவியம் (consciousness) நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் எதை அடைய விரும்புகிறதோ, அவ்விஷயத்தில் விழிப்புடனிருந்தால் போதும், அதற்குரியது கிடைத்துவிடும், ஏனெனில் மற்ற பகுதிகளைத் தன்னுட்கொண்டது ஜீவியம். நாற்காயில் அமர்ந்து நீ படிக்கும் பெரிய புத்தகங்கள் உனக்கு அறிவை வாரி வழங்கலாம். நான் படிப்பேன். வேலை செய்ய மாட்டேன் என்பவனுக்கு 1000ரூ வாராது. படிப்புக்குப் பலனைப் பெறும் திறனில்லை. அதே போல் எவ்வளவு பெரிய உழைப்பாளிக்கும், அறிவு உழைப்பால் வளராது. அதே சமயத்தில் நீ படிக்கும் புத்தகங்கள் உன் ஜீவியத்தை விழிப்புடன் வைத்துக் கொள்ள முடியுமானால், உன் தேவைகள் உன்னை நாடி வருவதைக் காணலாம்.book | by Dr. Radut