Skip to Content

பகுதி 3

 1. ஆபத்தைச் சமர்ப்பணம் செய்வது சிரமம்.

ஆசையைச் சமர்ப்பணம் செய்யத் தோன்றுவதில்லை.

மனத்தளவிலாவது செயலளவிலாவது ஆசையை அனுபவிக்கவே மனிதன் விழைகிறான்.

ஆசையைச் சமர்ப்பணம் செய்வது சிரமமானாலும், அவசியம்.

********

 1. அகந்தையின் சமூக உறவை விடமுடியாதவர்களுக்கு பரோபகாரம் முக்கியம்.

*********

பரோபகாரம் நமக்குத் தேவையில்லை. நம் அகந்தைக்கே தேவைப்படுகிறது. பிறர்க்கு உதவி செய்தால் உலகம் நம்மை ஏற்றுக்கொள்ளும், போற்றும் என்ற நினைவிருப்பதாலேயே மனம் பரோபகாரத்தை நாடுகிறது. அதனால் பிறருக்கு உதவி செய்வது தவறு என்றோ அகந்தை என்றோ கூறமுடியாது. யாருக்கு உதவி செய்ய வேண்டும், எந்த அளவில் செய்ய வேண்டும் என்ற நியதி நமக்குண்டு. அதைச் செய்யாதவர் கடமையில் தவறுபவர், சுயநலமி. பொதுவாக நாமனைவரும் இதுபோன்ற இடங்களில் குறையின்றிச் செயல்பட்டு விடுகிறோம். வலிய பிறருக்கு உதவி செய்யப் போவது, தனக்கில்லாத கடமையை நிறைவேற்ற முயல்வது, பரோபகாரத்தை இலட்சியமாக ஏற்றுக் கொள்வது போன்ற செயல்களே அகந்தையின் வடிவம்.

 1. மனத்தின் ஆழத்திற்கு அழைத்துச் செல்வது ஒரு நிலைப்படும் மனம். மீதி அனைத்தும் தியானம், மந்திரம், படிப்பு அந்நிலைக்கு நம்மைத் தயார் செய்து கொள்வதேயாகும்.

********

 1. இறைவனை நோக்கிச் செல்லும் பாதையில் உன் அனைத்துச் சக்தியும் செயலாகிவிட்ட நிலையே முதற்படி.

********

90 பாகம், 97 பாகம் நாம் முயன்றாலும் முதற்படியைத் தாண்டமுடியாது. 100 பாகமும் நம் சக்தி செலவாகி இனி கை, கால் அசைக்கவும் சக்தியில்லை என்ற அளவுக்கு முதற்கட்ட முயற்சியால் வந்தால், இனி எதுவும் முடியாது என்ற நிலையில் முதற்கட்டம் முடிந்து, அடுத்தது ஆரம்பிக்கும். முதற்படியாகச் செய்யக்கூடியது பல என்றாலும், மேல் மனத்திருந்து ஆழ்மனதிற்குச் செல்லும் நிலையை உதாரணமாகச் சொல்லலாம்.

 1. பெரிய திட்டத்தைச் செயலாற்றும் பொழுது அவிழ்க்கமுடியாத சிக்கல் எழுமானால், அதன் பிம்பம் உன் மனதில் உணர்வின் சிக்கலாக இருக்கும்.

******

ஓர் அமெரிக்கக் கம்பனியைக் கணவன், மனைவி, மகன் சேர்ந்து 20 வருஷமாக நடத்தினர். ஆண்டுக்கு 1 கோடி வியாபாரம் ஆகும் நிலை. தாய்க்கும், மகனுக்கும் கம்பனி நிர்வாகத்தில் ஒத்துப்போகவில்லை. மகன் விலகிக்கொள்ள முன்வந்தான். தாய் அதை மறுத்துத் தாம் விலகிக் கொண்டார். அதே ஆண்டு வியாபாரம் 30 கோடியாகப் பெருகியது. 30 கோடி ஆர்டர் கிடைத்தது. கிடைத்த ஆர்டருக்கு further higher confirmation  மேலும் ஓர் உத்தரவு தேவை. நடைமுறையில் ஆர்டர் வந்துவிட்டது. எல்லா வேலைகளையும் முடித்து வீடு திரும்பிய கணவனை அழைக்க மனைவி விமான நிலையத்திற்குப் போனார். கணவனுக்கு ஆர்டர்பற்றிப் பெரிய சந்தோஷம். வீடு திரும்பும்பொழுது மனைவியிடம் இந்த நேரம் நீ கம்பனியில் இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது என்றார்.

திடீரென அவருக்கு வேகம் வந்தது. இது என் கம்பனி. இங்கு நான் முதலாளி. மகனில்லை. யார் பேச்சு செல்லும் என்று நாளைக்குக் காண்பிக்கின்றேன் என்றவர், திரும்பி ஏன் நாளைக்கு? இப்பொழுதே கம்பனிக்குப் போவோம் என்றார். இரவு 8 மணி. கம்பனிக்குப் போய் மனைவியை மீண்டும் கம்பனியில் சேர்த்து ஆர்டர் எழுதி கையெழுத் திட்டார். கணவனும், மனைவியும் திருப்தியாக வீடு திரும்பினர்.

மறுநாள் காலை ரேடியோ செய்தியில் இவருக்கு ஆர்டர் கொடுத்த திட்டத்தை அமுல்படுத்தும் சட்டத்தை ஜனாதிபதி தன் விசேஷ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்துவிட்டார் என்று சொல்லிற்று. ஆர்டர் போய்விட்டது.

கணவனுக்கு மனதில் தொழிலைவிட மனைவியைத் திருப்தி படுத்துவதே முக்கியம். மனைவி போனபிறகு 30 ஆண்டு வியாபாரம் 1 ஆண்டில் வந்தது அவர் மனதில் படவில்லை. மனைவி கம்பனியிருந்து விலகியபின் வியாபாரம் பெருகியது. மனைவிக்குச் சந்தோஷம் வரவேண்டும் என அவர் நினைப்பது அவர் மனத்தின் அபிலாஷை. வியாபாரத்திற்குப் பொருத்தமில்லாதவர் மீதுள்ள பிரியம் தொழிலை நாசப்படுத்துவது அவர் அறியாதது. சிக்கல் ஜனாதிபதி உத்தரவில் இல்லை. முதலாளி மனத்திலுள்ளது.

 1. அதே உணர்வின் பெரிய சிக்கல் சின்னஞ் சிறு காரியங்களிலும் தெரியும்.

*********

தடங்கல் ஏற்படுகிறது என்றவுடன் 'தவறு என்னிடம் தானிருக்கிறது' என்று சொல்லும் மனப்பான்மையிருந்தால், மனத்தை ஆராயும் பொழுது தடங்கலுக்கும் மனஉணர்வுக்கும் உள்ள தொடர்பு தெரியும். இதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆராய்ச்சி மனப்பான்மையுடன் கவனித்தால் மனத்தில் சிக்கலின் தடயம் சிறுசிறு காரியங்களிலும் தெரியும். புரிந்த பின் வெகு எளிமையாகத் தோன்றும். பிறகு சிக்கலை அவிழ்ப்பது சுலபம்.

எனக்கு உதவி செய்ய ஒருவரும் இல்லை என்ற உணர்வை மையமாகக் கருதி வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் அன்னையிடம் வந்தபின், அனைவரும் தமக்கு உதவுகிறார்கள் எனக் காண்பார். வாழ்க்கை புதிய பாதையில் போகும். மனம் பழைய மனப்பான்மையை மறந்திருக்கும். இதுவரை மாவட்ட பந்தயத்திற்காகப் போனவருக்கு மாநிலப் பந்தயம் விளையாடி வென்று, அகில இந்தியப் பந்தயத்தில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வந்தபின், அவர் பாராட்ட வேண்டியது அருள் மட்டுமே. சில

சமயங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பழைய நினைவு எனக்கு யாரும் இல்லை என்பது வரும். அதுவந்த அடுத்த நிமிஷம் செய்யும் வேலை எதுவானாலும் அதில் குறையாகக் காட்டும். போன் பேசிக் கொண்டிருந்தால் திடீரென போன் வேலை செய்யாது. காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் சிந்தும். இவையெல்லாம் சிறிய விஷயங்கள் எப்படிப் பெரிசு படுத்துவது எனலாம். சாதாரணமாக விஷயங்கள் பல கெட்டுப்போவது பழக்கமானவர்களுக்குச் இது சிறு விஷயம் மாவட்டத்திருந்து அகில இந்திய அளவுக்கு உயர்ந்த நேரம் இவை சிறு விஷயமல்ல. இவை ஒன்றைக் குறிக்கின்றன. மனத்திலுள்ள குறை மனத்தில் தட்டுப்பட்டவுடன் செயல் அது குறையாகத் தென்படுகிறது. போன் லைன் கட் ஆனவுடன் நாம் நம் மனதில் எழுந்த எண்ணம் தவறு என்றறிந்தால் அறிந்த குறையைப் போக்கினால், அகில இந்திய போட்டிக்கு வந்த வாய்ப்பு மெய்யாகும். இல்லாவிட்டால் வாய்ப்புடன் நின்றுவிடும்.

சமையல் வேலை செய்பவர்கள் கையை அடிக்கடி தம் வேஷ்டியில் துடைத்துக் கொள்வார்கள். அவர்களுடைய உடைக்கும், வேலைக்கும் அது சரி. கையில் இங்க் பட்டவுடன் கையை அலம்பித் துடைத்தால், சிறிய விஷயத்தை ஏன் பெரிது செய்கிறீர்கள் என்றால் நாம் நம் ஷர்ட்டில் அவர்களைப் போல் இங்க்கைத் துடைத்துக்கொண்டு ஆபீஸ் போக முடியாது. இன்று ஓர் இண்டர்வியூவுக்குப் போகும் பையன் நிலையில் நாமிருக்கின்றோம். நமக்கு அது சரி வாராது.

சின்னஞ் சிறு காரியங்களிலும், மனத்தின் பிரதிபலிப்பைக் காண முயன்றால், நாம் செய்யும் பெரிய காரியங்களின் போக்கு நமக்குப் பிடிபடும்.

 1. எவ்வளவு சிறு வேலையானாலும் அந்தச் சிக்கல் இருக்கும். எந்த வேலையில்லை என்றாலும் சிக்கல் மனத்திருக்கும்.

********

சிக்கலின் சின்னங்களை வேலையில் பார்ப்பது எளிது. மனத்தில் பார்ப்பது சிரமம். மனத்தில் எப்பொழுதும் எண்ணங்கள் நிறைந்திருப்பதால், சிக்கலை எது பிரதிபலி க்கிறது என்று குறிப்பிடுவது கஷ்டம். அதையும் தெரிந்து கொள்ள முயன்றால் நல்லது.

 1. தீர்க்க முடியாத சிக்கல்கள் வேலையின் அளவைப் பொருத்ததல்ல. வேலை பெரியதானாலும், சிறியதானாலும், மனத்தின் அந்தரங்கங்கள் வெளிப்படுவதால் நாம் காண்பதே அச்சிக்கல்கள். வேலையிருந்தாலும் இல்லாவிட்டாலும் மனத்தின் சிக்கல்கள் மனத்திலிருக்கும்.

*******

 1. தாழ்ந்த வாழ்வைவிட்டு மனிதன் உயர்ந்த வாழ்வை நாடினால், எதையெல்லாம் விட்டுவிட்டு உயர்ந்ததைத் தேடினானோ, அவையெல்லாம் இந்த வாழ்விலும் பெரிய அளவிருக்கும்.

********

கடன் வாங்கும் பழக்கமுள்ளவர், அப்பழக்கத்தை விட்டுவிட்டு தாம் செய்த வேலையை ராஜினாமா செய்து தொழில் செய்தால், தொழிலுக்காக ஏராளமாகப் பாங்கில் கடன் வாங்கும் நிலை ஏற்படும். தவறான முறையில் கடன் வாங்கியவர் அதை விட்டபின்னும், சரியான முறையில் அதே பழக்கத்தை அதிக அளவில் கடைப்பிடிக்க வேண்டிவரும்.

பழக்கம், அதன் குணம் என்று இரண்டுண்டு. கடன் வாங்குவது பழக்கம். அளவுக்கு மீறிச் செலவு செய்வது, கடன் வாங்கி, கொடுக்க முடியாமல் கொடுக்காமல் இருப்பது தவறான பழக்கம்.

பழக்கத்திலுள்ள தவற்றை கட்டுப்பாடாக விட்ட பின்னரும், பழக்கம் விடாது. தவறுபோய், அது நல்லதாக மாறி, அளவில் பெருகி, இன்னும் நம்முடன் இருக்கும்.

 1. அன்பர்களைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்.
 1. பலனுக்காகப் பிரார்த்திப்பவர்கள்,
 2. தங்கள் அந்தஸ்தை உயர்த்த முயல்பவர்கள்,
 3. மனச்சாட்சிக்கு உகந்த முறையில் வாழ்க்கையின் உயர்வை நாடுபவர்கள்,
 4. சத்தியத்தின் தாஸர்கள்

******

இந்நான்கு வகையைச் சேர்ந்தவர்கள் பெறுவன கீழ்க்கண்ட முறையில் அமையும்.

 1. பலனை நாடுபவர்க்குப் பெரும்பாலும் பலன் கிடைக்கும்.
 2. அந்தஸ்தை நாடுபவர்க்கு அது கிடைக்கும். கிடைத்தது திறமைக்கேற்ப பலிக்கும்.
 3. மனச்சாட்சி சிறப்புறும்.
 4. பிரார்த்திக்க வேண்டிய அவசியமில்லாமற் போகும்.

அன்னையில் நிலை பெறுவர்.

அனைவர்க்கும் சுபீட்சமும், மனநிம்மதியும், அந்தஸ்தும் வழங்கும் நிலை அவர்க்கேற்படும்.

 1. பல சமயங்களில் பலன் உடனே கிடைக்கின்றது. மற்ற சமயங்களில் பலன் தடைப்படுகிறது. நம் மனத்தின் உண்மைக்குப் பலனும், பொய்க்குத் தடையும் வருவதை நாம் காண்பதில்லை. தன் மனத்தின் பொய், பெரும்பலன் பெற விழையும் பழக்கம் பரவலாக உள்ளது.
 1. தன் பிரச்னையைத் தானே தீர்க்க முயல்வது உயர்ந்தது. அனுபவமோ அறிவோ இல்லாமல் அம்முயற்சியை மேற் கொள்வது ஆபத்து.

*******

 1. அன்னைக்கு, பக்தன் கடிதம் எழுதுவதால் அன்னை பக்தனில் தன்னை அதிகமாக இருத்திக் கொள்கிறார்.

********

நம் எண்ணத்திற்கு வரி வடிவம் கொடுத்து பேப்பரில் எழுதுவதாலேயே நம் எண்ணம் வலிமை பெறும். அதை அன்னைக்கு அனுப்புவதால், அவரிடம் போய்ச் சேர்ந்தவுடன், அவர் சூழல் உள்ள ஜீவியம், அன்பு, திறமை அக்கடிதம் மூலம் பக்தரை வந்து சேரும். கடிதம் அன்னையையும், பக்தரையும் இணைக்கும் பாலமாகிறது.

 1. மனத்தின் எழுச்சியைப் பூர்த்தி செய்வதை விட்டொழித்தால் மனிதன் தெய்வமாகலாம்.

********

 1. நீ மறந்த போதும் உன்னையே நம்பியிருப்பது மனித உறவில் நிலையான தொடர்பு. அப்படிப்பட்ட மனிதனை முழுவதும் நம்பியிருப்பதுபோல் அவனிடம் நடந்து கொண்டால், அது தெய்வீகத் தொடர்பாகும். மனித சுபாவத்தின் இருள் நிறைந்த சாகஸங்களை அறிய அது உதவும்.

********

செல்வர்கள், தங்கள் நிலையுயர்ந்த பொழுது பழைய நண்பர்களையும், உறவினர்களையும் விட்டு ஒதுங்குவது பொதுவான பழக்கம். நாள் கடந்த போது சிலரை அடையாளம் கண்டு கொள்ளமுடியாத அளவுக்கு மறந்து விடுவார்கள். மற்றவர்களைப் பார்த்தால் நினைவு வரும். பார்க்காத சமயத்தில் ஒரே ஒரு முறைகூட அவர்கள் நினைவு வந்திருக்காது. செல்வன் அடியோடு மறந்தபின்னரும், உறவினர் தாமே வந்து சேர்ந்து கொள்வார். அப்பொழுதும் சிலரை வந்து ஒதுக்குவார்கள். உறவினர் மனதில் இடையறாது செல்வன் இருப்பான். அவனால் இவனுக்கு இம்மிப் பலன் கிடைத்து 25 வருஷமானாலும், உறவினர் அவனையே மனதில் முழுவதும் நம்பியிருப்பார். அவரால் மட்டுமே தம் வாழ்வு இயங்குவதாக நினைப்பார். நடந்து கொள்வார்.

மனித உறவில் இது நிலையான தொடர்பு. ஏனெனில் உறவினர் செல்வரை மறக்கத் தயாராக இல்லை. இந்நிலையில் செல்வன் தன் மனதை மாற்றிக்கொண்டு

உறவினரை அழைத்து நெருங்கிப் பழகினால் ஒரு புது உலகம் உற்பத்தியாகிறது. எதிர்பாராத செயல். இயற்கைக்கு மாறானது. மேலும் தான் உறவினரை நம்பியிருப்பதாக, உறவினர் உதவி தனக்குத் தேவைப்படுவதாகச் செல்வன் நடந்து கொண்டால், உறவினர் மனம் பிடிபடாது. அவருக்குப் புதிய உலகம் பிறந்ததுடன், புதிய யோசனைகள் தோன்றும். அடுத்த கட்டமும் சென்று இந்த உறவினரையே முழுவதும் நம்பியிருக்கும் வகையில் செல்வன் நடந்து கொண்டால், இந்த உறவினரே எல்லாம், அவர் இன்றி எதுவும் இல்லை என்ற உணர்வு எழ செல்வன் நடந்துகொண்டால், உறவினர் மனம் மனோ வேகத்தில் வேலை செய்யும்.

உறவு கிடைக்காதது. செல்வர் தம்மை முழுவதும் நம்புவதால் தான் எதையும் செய்யலாம். எதைச் செய்தாலும், என்ன ஆகுமோ என்ற பயம் மீறியிருக்கும். பயத்தை மீறி ஆசை செயல்படும். அறிவு நிதானத்தைக் கொடுக்க முனைந்து பலமுறை ஜெயிக்கும். பலமுறை தோற்கும். என்ன செய்வது என்று தெரியாது. எதையும் செய்ய மனம் விழையும். இந்நிலையில் சாமர்த்தியம், சாதுர்யம், சாகஸம் உற்பத்தியாகும். எதுவும் ஒளிமயமாக இருக்காது. இருள் நிறைந்ததாக இருக்கும். மனித சுபாவத்தின் ஆழ்ந்த அற்புதத்திறன்கள் தவறான உருவில் ஏராளமாக வெளிவந்து லீலைகள் புரிய முயன்று, தன்னடக்கம் பயின்று, தவறி விழுந்து, இறைவனின் சிருஷ்டியிலுள்ள அத்தனை விநோதங்களையும் மட்டமான வகையில் மட்டுமே வெளிப்படுத்துவார்கள். உலகப் பேரிலக்கியம் எழுதியவர்கள் வியக்கும் செயல்களாக அவை அமையும்.

மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு இது போன்றது. மனிதன் இறைவனை அறிவிலி எனக் கருதி தன் ஆழ்ந்த திறமையின் சாகஸங்களை உலகில் செயல்படுத்த முனைகிறான். இதையுணர்ந்து மனிதன் மாறினால் அவன் பூரணயோகியாகி விடுவான். இறைவனை ஏமாற்றுகிறோம் என்று நினைக்கும் மனிதன் தன்னையே ஏமாற்றிக்கொள்கிறேன் என்று உணர்ந்தால் காரிருள் பேரொளியாய் மாறும்.

 1. வாழ்வில் பொய்யும் மெய்யும் ஒரே திறனுடையவை. நோக்கம்தான் வேறு. காரியம் முடியும் என்று மனிதன் நம்பினால் மனிதன் எந்தத் திறமையையும் ஏற்றுக் கொள்வான். ஓரளவுக்கு அது ஆதாயமாக முடியும். எல்லையைத் தாண்டினால், பலன் எதிராக அமையும்.

******

பொய்யின் சாகஸத்தால் சத்திய சேவை செய்ய முடியாது. பொய்யின் சாகஸம் பூரணமாக வெல்லும் இடம் உண்டு. விபரம் தெரியாதவர்கள் அதற்குப் பூரண பலி. கேட்பதை எல்லாம் நம்புபவர்கள் இவர்களுக்கு விருந்து. தாழ்ந்த பழக்கத்தை மேற்கொள்ள முடியாத பண்பாளர்களுக்கு இந்தச் சாகஸத்தின் அஸ்திவாரமும், அந்தரங்கமும் முழுவதும் புரியும் என்றாலும், இவர்களிடம் எதுவும் புரியாததைப்போல் நடந்து கொண்டு மற்றவர்களைப் போலவே சிரமப்படுவார்கள். சாகஸம் இவர்களைப் பிழிந்தெடுக்கும்.

இன்றைய உலகில் பொய்யைக் கருவியாகப் பயன்படுத்து பவர்களுக்கு அதிகமான வசதியுண்டு. இதற்கெதிரான அறிவை உலகம் பெற்றால் ஆயிரம் ஆண்டு முன்னேற்றம் ஏற்படும் சாதுர்யங்கள் அனைத்தையும் மனிதன் அறிவான். பொய்யைக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக, மாறி, மெய்யைக் கடைப்பிடித்தால் போதும். தனி மனிதனுக்கும், உலகத்திற்கும் இந்த அறிவைக் கொடுப்பது அன்னைக்குச் செய்யும் அரிய சேவை.

 1. எல்லாம் இறைவன் செயலென நாம் அறிவோம். நமக்கு முக்கியமான விஷயங்களில், இறைவனிடம் செயலை ஒப்படைப்பதற்குப் பதிலாக, நாமே பெரிய பொறுப்பை ஏற்றுப் பெரிய ஆர்வத்துடன் செயல்படுகிறோம். நம்மால் எதுவும் முடியவில்லை என்ற பின்னரேதான் இனி நடப்பது நடக்கட்டும், எல்லாம் அவன் செயல் என்போம். முடியாது என்ற பொழுது அவன் செயல் என்று சொல்வதைப்போல் எல்லாம் என்னால் முடியும் என்ற பொழுது எல்லாம் அவன் செயல் என்று அவனிடம் நம் பொறுப்பை ஒப்படைத்து, செயலில் ஆர்வம் காண்பிப்பதற்குப் பதிலாக, அவனிடம் காரியத்தை ஒப்படைக்க ஆர்வம் காண்பிப்பது நல்லது.

********

 1. பண்புகள் மூலமே பிரபஞ்சத்தை நாம் அறிகிறோம் என்கிறார் பகவான். இன்று நம் உலகம் என நாம் அறிவது நம் பண்புகளால் நிர்ணயிக்கப்படுபவை, முழுப் பிரபஞ்சத்தை நாம் இன்று அறிவதில்லை. முழுப் பிரபஞ்சத்தை அறிய அதற்குரிய பண்புகளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். முதற்படியாக இன்றுள்ள பண்புகளுக்கு அடுத்த நிலை பண்புகளை ஏற்றுக் கொண்டால் நம் உலகம் சற்று விரிவடையும்.

*********

தன்னலமே முக்கியம் என்ற பண்பை முழுவதும் ஒரு எல்லைக்குள் மாற்றி பிறர் நலமே முக்கியம் என்ற பணியை மேற்கொண்டால், உதாரணமாக தன் சௌகரியங்களை மட்டுமே இன்று வரை கருதியவர், நாளையிருந்து தலைகீழாக மாறி, குடும்பத்தின் தேவைகளே முக்கியம், அதெல்லாம் முடிந்த பிறகுதான் எனக்கு என்று முடிவெடுத்தால் அவர் உலகம் ஆயிரமடங்கு விரிவடையும்.

மனைவியும், குழந்தைகளும், என்னைத் தெய்வமாகவும், குருவாகவும், தலைவனாகவும், உலகிலேயே முக்கியமானவனாகவும் கொண்டாடவில்லை என்று தினமும் நூறு முறை எரிச்சல் மேலிடுபவர், அவர்களை இவர் பிரம்மமாகவும், மனிதர்களாகவும், அன்பாகவும் கொண்டாடினால், இன்று வரை கிடைக்காத சந்தோஷம் இவருக்குக் கிடைத்து, இவர் உலகம் பரந்து விரியும்.

 1. .நமக்குரிய யோக முறை எது என்று அறிந்து அதைப் பெற முனைய வேண்டும். அதுபோன்ற முறைகள் பல:-
 1. தீவிர பிரார்த்தனை.
 2. உணர்வின் ஏக்கம் உச்சகட்டத்தை அடைவது.
 3. [That  'அது'] அது உன்னை வந்தடையும் முறையை பூரணமாக அறிவது. That 'அது' என்பது முடிவானது, பிரம்மம். நமக்குகந்த முறையை நாம் கண்டு பிடித்து விட்டால், அம்முறைக்கு நம் வாழ்வில் இருக்கும் பலன் That 'அது ' செயல்படுவது போலிருக்கும்.
 4. பற்றற்றிருத்தல்.
 5. சமர்ப்பணம்.
 6. ஆன்மாவின் அக்கறையை அதிலிருந்து திருப்புவது.

********

 1. பிரச்சினை ஆழத்திலும், பிரார்த்தனை மேலெழுந்த வாரியாகவுமிருந்தால் நெடுநாள் பிரார்த்தனை செய்தாலும் பலனிருப்பதில்லை.

********

 1. அன்னையின் உடல் முழுமையான ஞானம் உடையது. அதேபோல் அன்னையின் மனமும், உணர்வும் முன்பு முழுமையான ஞானம் பெற்றிருந்தன. முடியாது என்பது அவற்றிற்கில்லை. முழுமையான ஞானம் என்றால் முடியாததில்லை என்று பொருள்.

*******

 1. நமக்கு எங்கு முழுமையான ஞானம் இருக்கிறது, எந்த நிலையில் முடியாததில்லை என்று நாம் அறிவோம். அங்கு நாம் யோகத்தை ஆரம்பித்தால் பலிக்கும்.

**********

 1. நம் அன்றாட வேலைகளில் நமக்கு முழு ஞானம் உண்டா? அதில் முடியாததில்லை என்று சொல்ல முடியுமன்றோ? ஆனால் அது கண்மூடித்தனமான ஞானம், Unconscious Possession 

  **********

 2. கண்மூடித்தனமான திறமையை, தெளிவான ஞானமாக மாற்றினால் அதுவே முதற்கட்டம். இன்று அன்றாட வேலைகளை 'எதுவும் முடியாததில்லை' என்ற நிலையில் கண்மூடித்தனமாகச் செய்வதற்குப் பதிலாக, அவற்றை எதுவும் முடியும் என்று தெளிவாகச் செய்ய முடியுமானால் அதுவே முதற்கட்டம்.

*********

 1. உணர்வில் நாம் கண் மூடித்தனமான முழு ஞானம் பெற்றுள்ளோம். உணர்வில் பெற்ற முழு ஞானத்தைத் தெளிவாகப் பெறுதல் முதற்படி, அதைப் பெற பிராணமய புருஷன் வெளிப்பட வேண்டும். ஆசை அழிந்தால் பிராணமய புருஷன் வெளிப்படுவான்.

*******

 1. எப்படிப் பார்த்தாலும், முதற்படி ஆசையை அழிப்பதாகும். ஆசையை முழுவதும் அழிக்க முடியவில்லை என்றால், ஒரு செயல் ஆசையை அழித்து, தெளிவு பெற்று, சைத்திய புருஷனை அச்செயல் வெளிப்படுத்த வேண்டும்.

**********

 

 1. செயல் ஜீவன் பெற்று, ஒளிமயமாகி, சக்தியால் நிரம்பினால் சைத்திய புருஷன் வெளிப்படும். அதுவே 4th dimension ஆன்மிக அம்சம் பெறுவதாகும்.

********

 1. சைத்தியபுருஷன் வெளிப்படும்வரை, ஒரு செயல் நம்மை நிலைப்படுத்துவதே முக்கியமான முதற்படி. அதாவது செயல் தன்னலமற்ற உதார குணத்தால் பெருநிறைவு பெற வேண்டும்.

******

 1. மனத்தின் தியானம் பெற்ற ஆழ்ந்த நிலையை உன்னை நோக்கி வரும் உலகச் சக்திகளின் அளவு நிர்ணயிக்கும். உன்னைச் சந்திக்க விரும்பும் மனிதர்களைக் கொண்டு நீ அதை அறியலாம்.

******

 1. இலட்சியத்தை சுயநலம் பெறும் பலனின் அளவால் நிர்ணயிப்பது சரியில்லை என்றாலும், அதுவும் அளவை நிர்ணயிக்கும் முறையில் ஒன்று.

*******

 1. ஆன்மா தன் கவலைகளை மறக்க வேண்டும்.

ஆன்மா தன் சந்தோஷத்தை மறக்க வேண்டும்.

ஆன்மாவுக்குச் சந்தோஷமோ, கவலையோ இல்லை யன்றோ?

அவற்றை ஏற்பதே ஆன்மாவுக்குக் கவலையாக முடிகிறது.

ஆன்மா சுதந்திரமாக இருக்க வேண்டுமானால், எதையும் ஏற்கக்கூடாது, சந்தோஷத்தையும் ஏற்கக் கூடாது.

*******

 1. அருளைப் பெறும் ஆன்மீக விழிப்புணர்வின் மீது சுயநலமான வக்கிரம் பொய்யாகப் படர்ந்திருப்பதுண்டு.

*********

 1. கொசுவும் கடிக்காத அளவுக்கு உயர்ந்த ஜீவியம் தாழ்ந்த உணர்வில் திளைப்பதுண்டு.

*********

 1. சரணாகதியின் பேரில் மனிதன் தெரிந்த பாவத்தை விட்டு, தெரியாத பாவத்திடம் புகலிடம் தேடுகிறான்.

*******

 1. உயர்ந்தது உனக்கு இனிமையானது என்று புரிந்து விட்டால், இதுவரை நீ ஆர்வமாகத் தேடியவற்றைத் தேடியதுபோல், இன்று உயர்ந்ததைத் தேடினால் உன் மனம் இறைவனை அடையும்.

*********

 1. நம்முடைய பலனுக்காகத் தவறான முறையில் ஒருவரை ஆதரிப்பது பாரபட்சமாகும்.

********

 1. தெய்வ நியாயத்தை ஒரு செயலில் கண்ட பின், அதிலுள்ள தவற்றைப் புறக்கணித்து, அதை ஆதரிப்பது பாரபட்சமாகாது.

*******

 1. அதுபோன்ற ஆதரவைத் தர மறுப்பது பொய்யான உலகத்தை ஏற்று, சத்தியமான இறைவனை மறுப்பதாகும்.

*******

 1. உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி நல்ல பழக்கத்தை மேற் கொள்கிறோம்.

ஆசையைக் கட்டுப்படுத்தி நாகரீகமடைகிறோம்.

அகந்தையைக் கட்டுப்படுத்தி பண்பு பெறுகிறோம்.

மனத்தைத் தாண்டி வந்தால், ஆன்மாவை அடையலாம்.

********

 1. மனம் அன்னையை நாடினால், உலகம் முழுவதும் உன்னை நாடும்.

*********

 1. ஒரு சிரமத்தைச் சந்தர்ப்பமாக மாற்ற கட்டுப்பாடு தேவை. அதே சிரமம் அகவுணர்விலிருந்தால் அதை மாற்ற கட்டுப்பாடு போதாது, நம்பிக்கை வேண்டும்.

********

 1. ஆசை அழிவதில்லை. அடுத்த உயர்ந்த நிலையில் திருவுருமாற்றம் அடைந்து தன்னைப் பூர்த்தி செய்து கொள்கிறது. ஆசை உயர்ந்த நிலையில் ஆனந்தமாகப் பூர்த்தியாகிறது.

**********

 1. கிராக்கி செய்வது சின்னபுத்தியின் உத்தி. பொய்ம்மையை வலுப்படுத்தும்.

********

 1. உயர்ந்த நாளில் பெரிய தவறு நடக்கிறது. இரண்டையும் புரிந்து கொள்வதே ஞானம்.

********

 1. அன்னை நினைவுடன் ஒரு காரியத்தை ஆரம்பித்தால், அதே நினைவுடன் அதைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

********

மூன்றாம் பாகம் முற்றும்.book | by Dr. Radut