Skip to Content

13. அன்னை இலக்கியம் - நான் அவளில்லை

அன்னை இலக்கியம்

நான் அவளில்லை

சமர்ப்பணன்

ஜன்னல் வழியே வீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரகுவின் பின்னால் சத்தமின்றி வந்து நின்ற சுபா, "திரும்பிப் பாருங்களேன்" என்றாள்.

தன்னைத் தன் கணவனுக்காக கவனமாக அலங்கரித்துக் கொண்டு, புன்னகையோடு நின்றிருந்த புத்தம்புது மனைவியைத் திரும்பிப் பார்த்த ரகு உற்சாகமானான். சுபாவின் கைகளைப் பற்றி தன்னருகே இழுத்துக் கொண்ட ரகு, "தேவதையைப் பற்றி கதைகளில் படித்திருக்கிறேன். உன்னைப் பற்றித்தான் அந்தக் கதைகளில் எழுதி இருப்பார்கள் என்று நினைக்கிறேன" என்றான்.

இன்னமும் இதே போல கணவன் பேச வேண்டும் என்ற ஆசை ஏற்படுத்திய உள்ளக் கிளர்ச்சியுடன், கண்களை மூடி, காதுகளைத் திறந்து வைத்துக் கொண்டாள் சுபா. புதிய இல்லற வாழ்வின் இன்ப வானத்தில் எண்ணிப் பார்க்க முடியாத உயரத்தில் அவளது உள்ளப் பறவை சிறகடித்துப் பறந்தது.

"பட்டுப் புடவை, அளவான கொண்டை, அதைச் சுற்றி மல்லிகைச் சரம்! என்ன அழகு, என்ன அழகு! என்னோடு வேலை பார்க்கும் ஆர்த்தி எப்போதும் இப்படித்தான் இருப்பாள். அவளைப் போலவே நீயும் அற்புதமாக இருக்கிறாய்!" அவளது காதருகில் பரவசத்துடன் சொன்னான் ரகு.

சுபாவின் சிறகொடிந்த உள்ளப் பறவை மிகவும் உயரத்திலிருந்து கட்டாந்தரையில் தலைகீழாக விழுந்து காயம்பட்டுத் துடிதுடித்தது.

தன்னைப் பலவந்தமாக ரகுவிடமிருந்து பிரித்துக் கொண்ட சுபா, "இதோ வந்துவிடுகிறேன்'' என்று கூறிவிட்டு படுக்கை அறைக்குள் நுழைந்தாள். நெடுநேரமாகியும் மனைவி வெளியே வராததாலும், வேலைக்காரி வந்துவிட்டதாலும், "சுபா, சுபா'' என்று அழைத்தவாறு படுக்கை அறைக்குள் எட்டிப் பார்த்தான் ரகு.

புடவையை மாற்றி சுரிதார் அணிந்து கொண்டு, படுக்கையில் குப்புறப் படுத்து விம்மி அழுது கொண்டிருந்த புது மனைவியைப் பார்த்ததும் பதறிப் போன ரகு, அவளருகே அமர்ந்து அவள் முதுகை வருடிக் கொடுத்தவாறு, "சுபா, ஏன் இப்படி அழுகிறாய்? என்ன நடந்தது?'' என்று கேட்டான்.

பதில் வரவில்லை.

"உனக்கு என்ன கவலை? என்னிடம் சொல்லக்கூடாதா? மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதில் நான் கொஞ்சம் மந்தம். விஷயம் என்னவென்று வாய்விட்டுச் சொல்லேன்'' என்றான் ரகு.

"உங்களைத் தவிர வேறு யாரிடம் என்னால் சொல்ல முடியும்?'' என்ற சுபா சிறிது நேர மௌனத்திற்குப் பின் படுக்கையிலிருந்து எழுந்து சென்று வேலைக்காரியை அழைத்தாள். அலமாரியிலிருந்த எல்லாப் புடவைகளையும் வெளியே எடுத்துப் போட்டவள், "மீனாக்ஷி, அம்மன் கோவிலுக்கு முன்னால் பிச்சைக்காரிகள் இருப்பார்கள். அவர்களுக்கு இவற்றைக் கொடுத்துவிடு'' என்றாள்.

"என்னம்மா இது, எல்லாமே ஒரு தடவைகூட உடுத்தாத புத்தம்புது புடவைகளாக இருக்கின்றனவே! பட்டுப் புடவை ஒவ்வொன்றும் பல ஆயிரங்கள் விலை ஆகுமே!'' என்று வேலைக்காரி பதறினாள்.

"வேண்டுதல்! உடனே இவற்றை எடுத்துக் கொண்டு போ'' என்று உத்தரவிட்டாள் சுபா.

"சரி அம்மா. வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குப் போகும் போது கொடுத்துவிடுகிறேன்'' என்ற வேலைக்காரிக்குச் சுபா சொல்வதைச் செய்யலாமா, வேண்டாமா என்ற தயக்கம்.

அவள் புடவைகளை மூட்டையாகக் கட்டி ஒரு மூலையில் வைத்துவிட்டுப் போனதும், சுபா குழப்பத்துடன் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்த ரகுவைப் பார்த்து, "நான் அவளில்லை'' என்றாள்.

அங்கே இறுக்கமான அமைதி நிலவியது. வாய்கள் பேசவில்லை என்றால் எண்ணங்கள் ஓய்ந்துவிடுமா என்ன?

"நான் சொன்னது தவறாகவே இருக்கட்டுமே, அந்த ஒரு சொல்லுக்காக இத்தனை கோபப்படுவாளா? இவளோடு எப்படி வாழ்நாள் பூரா சேர்ந்து வாழ்வது?'

"என்னை என்போல பார்க்காமல், யாரோ ஒரு பெண்ணாகப் கற்பனை செய்து பார்ப்பவரோடு இனி எனக்கென்ன வாழ்க்கை வேண்டி இருக்கிறது? இவர் அந்தப் பெண்ணையே நன்றாக இரசிக்கட்டும். வேண்டுமானால் அவளுடன் சேர்ந்தேகூட வாழட்டும். நான் ஒதுங்கிக்கொள்கிறேன். இவர் சந்தோஷமாக நன்றாக இருக்கட்டும்'.

"எத்தனை ஆசையோடு சேலை கட்டிக் கொண்டு எனக்குக் காட்ட வந்தாள்? நான்தான் முட்டாள்தனமாகப் பேசினேன். தவறு என் மீது இருந்தாலும் ஒரு வார்த்தை என்னைக் குறை சொல்லாமல் அதே சமயம் தன் மனக் கசப்பையும் வெளிப்படுத்திவிட்டாள். இதுவே சுபா வேறு ஒரு ஆணைப் பற்றிப் பேசி இருந்தால் நான் என்னவெல்லாம் ஆர்ப்பாட்டம் பண்ணி இருப்பேன்?'

"இவர் எவ்வளவு நல்லவர்! எத்தனையோ பேர் பொய் சொல்மனை வியை ஏமாற்றித் திரியும்போது, தான் நினைத்ததை மறைக்க வேண்டும் என்றுகூட தோன்றாமல் குழந்தையைப் போல வெளிப்படையாகச் சொன்னாரே! எனக்குப் பிடிக்கவில்லை என்றால் அதை நான் நல்ல தன்மையாகச் சொல்லி இருக்கலாமே! இப்படியா ஆவேசப்பட்டு அதை வெளியிலும் காட்டுவது? என்ன பெண் நான்! பிடிக்கவில்லை என்ற எண்ணத்தையே விட்டுவிட்டால்தான் என்ன கேடு?'

"எனக்குப் பிடித்ததைப் பற்றி பேசுவதற்குப் பதில் சுபாவிற்குப் பிடித்ததைப் பற்றி மட்டும் இனி நான் பேசினால் என்ன?'

"ஐயோ பாவம், இவர் முகம் வாடிவிட்டதே! அந்தப் பெண் நாசூக்காக, நாகரிகமாக இருப்பாள் என்றால் நானும் அவளைப் பார்த்து நல்ல விஷயங்களைப் பழகிக் கொள்ளலாமே. பொறாமையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இவருக்காகப் பொறுத்துக் கொள்ளலாம். இந்த சனிக்கிழமை அந்த சனியனை விருந்துக்குக் கூப்பிடலாம்'.

"என்னை மன்னித்துவிடு சுபா, எனக்குப் புத்தி வந்துவிட்டது. இனி எந்தப் பெண்ணாலும் உனக்கு பிரச்சினை வராது'' என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்ன ரகுவின் மார்பில் உரிமையுடன் சாய்ந்துகொண்டாள் சுபா. "என்ன இது, என்னிடம் போய் மன்னிப்பு கேட்டுக் கொண்டு?'' என்றாள்.

"அம்மா, நான் சேலைகளை எடுத்துக் கொண்டு கிளம்பட்டுமா?'' அறைக்கு வெளியே இருந்து வேலைக்காரி குரல் கொடுக்க, "இன்றைக்கு வேண்டாம்'' என்று சுபா சொன்னாள்.

"தலைமுடிக்கு என்ன எண்ணெய் போடுகிறாய்? எவ்வளவு அருமையான வாசம் வருகிறது!'' என்ற ரகு அவள் கூந்தலை முகர, வெட்கத்துடன் புன்னகைத்த சுபா தன் கணவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

முற்றும்.

******



book | by Dr. Radut