Skip to Content

05. அன்னை சோதனை செய்வதில்லை

அன்னை சோதனை செய்வதில்லை

‘தெய்வம் என்னைச் சோதிக்கின்றது’ என்று மனிதன் உணரும் நேரங்களுண்டு. உயர்ந்த மனித யத்தனம் எதிர்பாராத நிகழ்ச்சிகளால் சூன்யமாகும் போது, முப்பது ஆண்டுகளாக ஊரில் இல்லாத எதிர்ப்பு தனக்கு எதிராக முளைக்கும்போது, உற்றாரும், ஊராரும், இயற்கையும், வாழ்வும் தன் முயற்சிக்கு எதிராக ஒன்று சேர்ந்து கூட்டணி வகுக்கும்போது, ஓர் ஆபத்தை உயிரைக் கொடுத்து விலக்கிய போது, இன்னொன்று உற்பத்தியாகும்போது மனிதன் அரிச்சந்திரனை, நல்ல தங்காளை நினைவு கூர்ந்து ‘தெய்வம் என்னைச் சோதனை செய்கிறது; அதற்கெதிராக என் முயற்சிகள் பலன் தரா; அனைத்தையும் இழக்க மனத்தைத் தயார் செய்து கொள்ள வேண்டும்’ என்று அறிகிறான். தெய்வம் ஒருவரை ஆட்கொள்ளும் வழிகளில் சோதனை செய்வதும் ஒன்று. இதை நாம் நெடுங்காலமாக அறிவோம்.

அன்னை, தெய்வங்களுக்கெல்லாம் தாய். தெய்வ லோகத்திற்கும் மேலேயுள்ள சத்தியலோக அவதாரங்கள், அன்னையும் ஸ்ரீ அரவிந்தரும். உலகில் பத்துப் பன்னிரண்டு பேருடைய தவ முயற்சியால் மரணம், மூப்பு, நோய், வறுமை, துன்பம் ஆகியவற்றை மற்றவர் முயற்சியின்றி அழிக்க வந்த அவதார புருஷர்கள் அவர்கள். அவர்கள் செய்த தவத்தால் சத்தியலோக சக்தியை உலகுக்குக் கொண்டுவர முடிந்தது. அடுத்த கட்டத்தில் அதைச் செயல்பட வைக்கத் தேவையான பத்து சித்தி பெற்ற சாதகர்கள் இல்லை. அந்தச் சக்தி இன்று உலகில் நின்று நிலவுகிறது. தானே மனிதன் வாழ்வில் செயல்பட முடியாதென்றாலும், அதைப் பெற விழையும் அனைவருக்கும் அது கிடைக்கும் நிலையில் உள்ளது.

மனிதனை நாடி வரும் தெய்வமான அன்னை, மனிதனைச் சோதனை செய்வதில்லை. செய்ய வேண்டிய அவசியமில்லை. அன்னையின் அருளை அவன் கேட்டுப் பெற வேண்டுமென்பதே அன்னையின் நோக்கம். அன்னையை ஓரளவு ஏற்றுக்கொண்டவருக்குச் சில சமயங்களில் அவர்கள் கேட்காமலேயும் அன்னை கொடுப்பதுண்டு.

உழைப்பு, உற்சாகம், அறிவு, திறமை, முயற்சி அனைத்தும் பூரணமாக இருந்து செயல்பட்ட மனிதன் தன் காரியம் சூன்யமாவதைக் காணும்போது தெய்வம் சோதனை செய்கிறது என்று உணர்கிறான். அன்னை பக்தர்களுக்கு அது போன்ற நிறைவான முயற்சியுள்ள ஒரே ஒரு காரியமும் சூன்யமானதில்லை. அது அன்னை, ஸ்ரீஅரவிந்தருடைய பக்த கோடிகள் சரித்திரத்தில் காணப்படாத ஒன்று. மாறாக, அது போன்ற நிறைவுடைய காரியம் சாதாரணமாகப் பூர்த்தியாவதில்லை. அடுத்த உயர் கட்டத்தில் தவறாது பெரிய அளவில் பலிக்கும். பள்ளியில் முதல் மாணவன் வறுமை காரணமாகப் பாலிடெக்னிக்கில் சேரப் போய் நேர்முகத் தேர்வுக்காக மரத்தடியில் நின்று கொண்டிருந்த சமயம், அற்புதமான மனமாற்றம் அவன் மாமன் மனதில் தோன்றி, அவனை நேர்முகத் தேர்வுக்கு அனுப்பாமல், கல்லூரியில் சேர்த்தார். அவன் இன்ஜினீயராகி, வெளிநாடு சென்று இன்று சொந்தத் தொழில் ஆரம்பித்துத் தொழில் அதிபராக இருக்கின்றான்.

ஒரு காரியம் பூரணமாக உடல் உழைப்பு, மன உற்சாகம், அதற்குரிய அறிவு, முயற்சி தேவை. வாழ்வில் இவற்றுள் ஒன்று குறைவானால் காரியம் பூர்த்தி பெறாது. அன்னையின் சட்டம் வேறு. இந்தத் திட்டத்தில் தேவைப்பட்ட உழைப்பில் உன்னால் பாதிதான் முடியும், மற்ற அம்சங்களில் உன்னால் 75% தான் அதிகபட்சம் கொடுக்க முடியும் என்றால், அவற்றால் வாழ்க்கையில் இந்தத் திட்டத்தைப் பூர்த்தி செய்ய முடியாது என்றாலும், அன்னை பக்தனாக இருந்து உன்னால் முடிந்த பாதி உழைப்பையும், மற்ற அம்சங்களில் முக்கால் பகுதியையும் ஓர் இம்மி கூடக் குறைவில்லாமல், 100% செய்து முடித்துவிட்டால், நீ முடித்த இடத்தில் அன்னை செயல்பட்டுத் திட்டத்தை எல்லா அம்சங்களும் 100% இருப்பதைப் போல் பூர்த்தி செய்வார். உன்னால் முடிந்தது எவ்வளவு என்பது பிரச்சனையில்லை. 90% ஆக இருக்கலாம். 60% ஆகவும் இருக்கலாம். 60% தேவையை மட்டும் பூர்த்தி செய்யும் திறனே நமக்குள்ளது என்றாலும் அந்த 60%தைப் பூரணமாக, மனதில் குறையில்லாமல் செய்துவிட்டால் அன்னை திட்டத்தை 100% பூர்த்தி செய்வார். 60%-க்கு பதில் 59% இருந்தால் இந்தச் சட்டம் செயல்படாது. காரியத்திற்குத் தேவைப்பட்ட முயற்சியை விடக் குறைவான முயற்சியும், பக்தனின் பூரண முயற்சியாக இருக்குமானால் ஒரே ஒருமுறை கூட அது தவறாது. அப்படியிருக்க சோதனை என்பதற்கு இடமில்லை. சோதனை என்பது முழு முயற்சி முழு பூஜ்யமாக முடிவதாகும்.

அன்னை எவரையும் தண்டிப்பதில்லை. தண்டித்ததில்லை. பக்தர்களுக்கு வாழ்வில் கிடைக்கும் தண்டனைகளை, அவர்கள் அன்னையை அழைத்தால், அன்னை விலக்குவார். என்றாலும் அடிக்கடி அன்னை சோதனை செய்கிறார் என்றும் நாம் கேள்விப்படுகிறோம்.

கேள்விப்பட்டாலும், அதற்கும் அன்னைக்கும் சம்பந்த- மிருப்பதில்லை. அவர்கள் பக்தர்களாக இருப்பதால், நம் மரபில் சோதனை, தண்டனை என்பது உண்டு என்பதால் அப்படி நினைக்கத் தோன்றுகிறது. அதில் உள்ள உண்மை என்ன? அப்படிப்பட்ட நிலைமையைத் திருத்த முடியுமா? என்று பார்ப்போம்.

முப்பதாயிரம் ரூபாய் முதல் இட்டவருக்கு வருஷத்தில் 21,000 ரூபாய் இலாபமும் ஏழாயிரம் போனஸும் கொடுக்கும் போது, அவர் இட்ட முதல் பெருகி, இலட்ச ரூபாய் ரொக்கமாக அவர் கையில் இருப்பாக இருக்கும் சமயத்தில் அத்தொழிலி- லிருந்து விலகி, பணத்தை எடுத்துக்கொண்டு போய் 65,000 ரூபாய் செலவு செய்து 35,000 வருமானம் வரும் சொத்தில் போடும் காரியத்தை ஒருவர் செய்தார்.

ஏராளமான செலவு செய்து நான்கு ஏக்கர் சவுக்கு நட்டு விட்டு, தண்ணீர் பாய்ச்சினால் நல்லதல்ல, இளம் நாற்று காய்ந்தால் உரமாக வளரும் என்று பரம்பரை விவசாயி கருதி அவற்றைச் சாகடித்தார். மீண்டும் ஒரு முறை அதையே செய்தார்.

நிலத்தில் மூன்றடி அளவு தண்ணீர் நிரந்தரமாக நிற்க வேண்டிய திட்டத்திற்குத் தண்ணீரில்லாத ஊரில் ஒருவர் நிலம் வாங்கினார்.

ஒழுங்காக நடந்து கொண்டிருந்த பெரிய தொழிற்சாலையில் அடிக்கடி தொழிலாளிகள் முதலாளியை நெருங்கித் தங்கள் குறைகளைப் பவ்யமாகச் சொல்லிக் கொண்டிருந்த போது, ‘எத்தனை பேருக்கு நான் பதில் சொல்ல முடியும்? எல்லோரும் போய் யூனியன் வைத்து, தலைவரை என்னிடம் அனுப்புங்கள்’ என்று புத்திமதி கூறிய முதலாளி, அடுத்த மாதம் “யூனியன் ஸ்டிரைக் செய்து கம்பெனியை மூடிவிட்டது” என்று புலம்பினார்.

அறியாமையாலோ, பிடிவாதத்தாலோ, தவறான நம்பிக்கை- யாலோ, சிறுபிள்ளைத்தனத்தாலோ, அர்த்தமற்ற போக்காலோ காரியங்களைத் தலைகீழாகச் செய்ய ஆரம்பித்துப் பிரார்த்தனை பலிக்கவில்லை, அன்னை சோதனை செய்கிறார் என்று சொல்லிய சிலரை நான் பார்த்ததுண்டு. சோதனை செய்வது அன்னையில்லை. அவர்கள் மேற்கொண்ட வழிமுறைகள். எலக்ட்ரிசிட்டி ‘ஷாக் அடிக்காது’ என்று பாதுகாப்பில்லாமல் மின்சாரத்தில் வேலை செய்பவர்களை எல்லாரும் பார்க்கலாம். பொதுவாக இப்படிப் பேசுபவர்கள் பிடிவாதக்காரர்களாக இருப்பார்கள். போகாத வழிக்குப் போகிறவர்கள், செய்யக்கூடாது என்ற காரியத்தை விரும்பிச் செய்பவர்கள், தனக்குக் கிடைத்த அபூர்வமான சந்தர்ப்பத்தை முனைந்து சின்னாபின்னப்படுத்தியவர்கள். ஒரே சொத்தைக் காட்டிப் பலரிடம் கடன் வாங்கி வீட்டுச் செலவு செய்தவர்கள் இது போன்ற காரியங்களில் ஆர்வமாக ஈடுபடுபவர்கள் செய்யும் பிரார்த்தனை பலிக்காது. உன்னை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவனை உற்ற நண்பன் என்று நீ கருதி உன் ஆயுதத்தை அவன் கையில் கொடுத்தபின், அவன் உன்னைச் சர்வநாசம் செய்ய முனைந்தபோது கூக்குரலிட்டால் என்ன பயன்?

அன்னையிடம் இவர்களுக்கெல்லாம் வழியுண்டு. தான் செய்த தவற்றைத் தவறு என்றுணர்ந்து, மனத்தை உள்ளபடி மாற்றிக் கொண்டு பிறகு அன்னையிடம் பிரார்த்தனை செய்தால், அவர்கள் நாடிப்போன தண்டனையிலிருந்து அன்னை அவர்களைக் காப்பாற்றுவார்.

அறிவில்லாமல் இட்ட மூலதனத்தை அன்னை காப்பாற்றினார்; தண்ணீர் பாய்ச்ச மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த விவசாயி மனதை மாற்றிக் கொண்டபின் சவுக்கு வளர்ந்தது. பலனும் கொடுத்தது. தண்ணீரில்லாத இடத்தில் ஆரம்பித்த திட்டத்திற்கு மனம் உணர்ந்த பின் தண்ணீர் கிடைத்தது. யூனியனை ஆரம்பிக்கச் சொன்ன முதலாளியின் கம்பெனியிலும் அமைதி நிலவி, அகில இந்தியப் புகழ்பெற்ற கம்பெனி என்ற பெயர் ஏற்பட்டது.

இவை மனிதன் செயல்படும் முறையல்ல. வாழ்வின் ஜீவன் மனத்துள் உறைவதால், மனத்தில் உண்மை உணர்வு ஏற்பட்டபின் அன்னை அதை ஏற்று, நமக்காக எதையும் நடத்தி வைக்கின்றார். இப்படியிருக்க, அன்னை சோதனை செய்கிறார் என்ற கூற்றில் எப்படி உண்மையிருக்க முடியும்?

ஒரு பெரிய நன்மையைப் பெற மனிதன் தன்னை வருத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை நாம் நெடுநாளாக ஏற்றுக் கொண்டுள்ளோம். தான் வருந்திப் பெறுவதே நன்மையானது. எளிதாகப் பெறுவது நன்மையாக இருக்காது என்பது நம் மனநிலை. அன்னையின் அடிப்படை சந்தோஷம், மனத்தின் மலர்ச்சி, உயிரோட்டம். அன்னையை ஏற்றுக்கொண்டபின் நம் முயற்சிகளிலெல்லாம் மலர்ச்சியும், மன நிறைவும், சந்தோஷமும் நிறைந்திருக்கும். முயற்சி முழுமையாக இருக்கவேண்டும் என்பது வேறு, நம்மை வருத்திக் கொள்ள வேண்டும் என்பது வேறு. அன்னையை முழுமையாக ஏற்றுக்கொண்டபின், நம் திறமை பெருகி காரியங்கள் எளிதில் முடியும். தன்னைக் கசக்கிப் பிழியும் முறை அன்னைக்குப் பொருந்தாது. தன் முழு முயற்சியையும் செலவிட வேண்டும் என்பதே அன்னைக்குரிய முறை.

தன்னை வருத்தி எடுத்தால் தான் நல்லது என்று நம்புபவர்கள் தங்களைத் தாங்களே சோதனைசெய்து கொள்கிறார்கள். அது அன்னைக்குகந்த முறையாகாது.

************



book | by Dr. Radut