Skip to Content

அன்னையின் அருள்

அன்னையின் அருள்

கர்மயோகி

 

மதர்ஸ் சர்வீஸ் சொஸைட்டி

5, புதுவை சிவம் தெரு

வெங்கட நகர் விரிவு

புதுச்சேரி - 605 011

**********

 

பதிப்புரிமை : © கர்மயோகி

முதற்பதிப்பு : ஆகஸ்ட், 1990

பதினான்காம் பதிப்பு : செப்டம்பர், 2019

அச்சிட்டோர் : அகரம் ஆர்ட்ஸ்

சென்னை.

 

********

முன்னுரை

இந்தியப் பரம்பரையின் சிகரமாக விளங்குவது சநாதன தர்மம். அதாவது, எல்லாத் தத்துவங்களையும், தர்மங்களையும் தன்னுள் அடக்கியது. எந்தத் தெய்வத்தை மனிதன் வணங்கினாலும் அவன் வழிபாட்டை ஏற்றுக்கொள்வது அதற்குப் பின்னணியாகவுள்ள பரம்பொருளேயாகும். அப்பரம்பொருளே வாழ்வு. அதுவே உலகம். அதுவே அனைத்துமாம்.

இத்தனை உயர்வான இலட்சியத்தை ஏற்றுக்கொண்ட நாடு இன்று உலக நாட்டுப் பட்டியலில் கடைசியிலிருந்து 10-வது நாடாக அமைந்துள்ளது. சுவாமி விவேகானந்தர் தம் நிஷ்டையில் பாரத புத்திரர்களை இருள் நிறைந்தவர்களாகவும், பொய்யை ஏற்றுக் கொண்டவர்களாகவும் கண்டு மனம் நொந்து இறைவனை நோக்கி இதற்கு ஒரு மாற்றம் வேண்டுமெனக் கேட்டார். அடுத்த காட்சியில் மக்கள் ஒளி நிறைந்தவர்களாகவும், சத்தியசீலர்களாகவும் காட்சி அளித்தனர். பொருளாதாரத்தில் நாடு பின்தங்கியுள்ளது. அதே போல வேறு பல அம்சங்களிலும் பின்தங்கியுள்ளது. சுவாமி விவேகானந்தரின் ஞானதிருஷ்டி பலிக்கும் நாளை நாம் அடைய முடியும்; அடைய வேண்டும்.

இன்று நாட்டை ஆட்சி செய்வது பணம். பெரும் பணம் எல்லா நிலையிலுள்ள வாழ்வையும் நிர்ணயிக்கும் நிலையிலுள்ளது. சத்தியம், நேர்மை, நாணயத்தைப் பற்றிப் பேச நேரமில்லை. அவற்றைப் பின்பற்றுபவர்களைப் பிழைக்கத் தெரியாதவர்கள் என நினைக்கிறார்கள்.

அன்னையும் ஸ்ரீஅரவிந்தரும் அதற்கான வழியை வகுத்துள்ளனர். வேலை கிடைக்க வேண்டுமானால் பணம் தேவை. எது வேண்டுமானாலும் அதற்குரிய சõமர்த்தியம் வேண்டும். பணம் வேண்டும். பணமின்றி இன்று எவரும் தேர்தலில் நிற்க முன்வரமாட்டார்கள். பணம் முக்கியமானபின் அதற்குரிய மற்ற பழக்கங்கள் முன்வந்து ஆட்சி செய்யும். அருளை முன் வைத்துச் செயல்பட்டால் பணம் செய்வதை அருள் செய்யும். பணம் செய்யாததையும் அருள் செய்யும் என்பதை விளக்கும் கட்டுரைகள் கொண்ட நூல், ‘அன்னையின் அருள்’.

பணத்தைப் பிரதானமாக்கியபின் பல காரியங்கள் கூடிவருகின்றன. ஆனால் சச்சரவு நிறைந்த வீட்டைப் பணத்தால் சுமுகமாக்க முடியாது. பொறுப்பில்லாத பிள்ளைக்குப் பொறுப்பு வர பணம் உதவாது. இருக்கும் பொறுப்பையும் அழிக்கத்தான் பணம் உதவும்.

வாழ்வு தெய்வீகமானது. ஆனால் மனிதன் வாழ்வுக்கு அடிமையாக இருக்கிறான். அவனுக்குக் கருவியாகச் சேவை செய்யவேண்டிய வாழ்வு அவனை ஆட்டிப் படைக்கிறது. வாழ்வைத் தன் பிடியில் கொண்டு வரவும், மனித இலட்சியங்களை வாழ்வில் செயல்படுத்தவும், தெய்வத்தின் ஆதிக்கத்தில் வாழ்வு வரவும் வழிகள் உண்டு என்பதை இந்நூலிலுள்ள கட்டுரைகள் விளக்கும்.

‘அமுதசுரபி’ மாத இதழில் தொடர்ந்து வந்த கட்டுரைகளைத் தொகுத்து இந்நூலாக வெளியிடுகிறோம். தமிழ்நாட்டுக்கு அன்னையையும் ஸ்ரீஅரவிந்தரையும் அறிமுகப்படுத்தி திரு. விக்கிரமனும், ‘அமுதசுரபி’ இதழும் செய்துவரும் சேவையைப் பாராட்டி எனக்கு ஏராளமான கடிதங்கள் வருகின்றன, இதன் மூலம் இலக்கிய இதழான ‘அமுதசுரபி’ ஆன்மீக இதழாகவும் மாறி வருகின்றது.

1958-இல் நான் ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் வந்தபொழுது தமிழ் அன்பர்களைச் சமாதியருகே கண்டதில்லை. இன்று தமிழ் அன்பர்கள் சமாதியைச் சூழ்ந்து நிற்காத நேரமில்லை. இதுவே அவர்களின் சேவையை எடுத்துக்காட்டுகிறது. அன்னாரின் சேவை பாராட்டுக்குரியது. அதுவே அன்னையின் அருளுமாகும்.

கர்மயோகிbook | by Dr. Radut