Skip to Content

பகுதி 3

நாம் எந்த நிலையிலிருந்தாலும், அன்னை நம் அழைப்பின் ஆர்வத்தின் நிலைக்கே பதிலளிக்கிறார். உயர்ந்த நிலையிலுள்ளவர் அழைப்பு தாழ்ந்திருக்கலாம். தாழ்ந்தவர் அழைப்பு உயர்ந்திருக்கலாம். நம் நிலை வேறு, நாம் அன்னையை அழைக்கும் நிலை வேறு. மாணவனுடைய புத்திசாலித்தனம் வேறு, அவன் படிக்க எடுக்கும் முயற்சி வேறு. நன்கொடை செல்வர் நிலையைப் பொறுத்திருப்பதைவிட, அவர் எவ்வளவு தாராளமாகக் கொடுக்கப் பிரியப்படுகிறார் என்பதைப் பொறுத்தது.

நாம் அன்னையிடம் பிரார்த்தனை செய்து பலிக்காதவை அன்னைக்கு சக்தியில்லை எனச் சொல்வதில்லை. நம் பிரார்த்தனையை எத்தனை நம்பிக்கையுடன் எழுப்புகிறோம், இந்தப் பிரார்த்தனையில் நம்பிக்கை அன்னை மீது இருக்கிறதா என்பதைப் பொறுத்துள்ளது. ஓடும் கார் நின்றவுடன் டிரைவர் ரிப்பேர் செய்தான். அது புறப்படவில்லை. காரில் இருந்தவர்கள் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்ததால், அன்னையை அழைக்க வேண்டும் என நினைக்கவில்லை. கார் புறப்படவில்லை என்றபொழுது ஒருவர் அன்னையை அழைத்தார். பேச்சு சுவாரஸ்யம் மனநிலையைத் தாழ்த்திவிட்டதால், பிரார்த்தனை எடுபடவில்லை. சற்று பொறுத்துப் பார்த்தார். கார் ரிப்பேராகவில்லை. மனமும் பழைய நிலைக்கு வரவில்லை. 20, 30 முறை அன்னையை அழைத்தார். சப்'பென இருந்தது. ஒரு புதிய யோசனை தோன்றியது. டிரைவர் இந்த நேரம் முழு முயற்சி செய்கிறான். எனவே அன்னையை அழைப்பதற்குப் பதிலாக, டிரைவரில் உள்ள அன்னையை அழைத்தால் பலனிருக்குமா என நினைத்து, அதை முயன்றார். முதல் அழைப்பில் கார் புறப்பட்டது. இதுவும் பலிக்காத நேரத்தில் எஞ்சினிலுள்ள அன்னையை அழைத்தால், உடனே எஞ்சின் புறப்படுவதுண்டு. இக்கொள்கையை மனம் ஏற்றுக்கொண்டால், பொதுவாக அன்னையை அழைப்பதை விட, இம்முறைக்கு அதிகப் பலனிருப்பதுண்டு. இலாக்கா டைரக்டர் வேண்டியவரானாலும், அந்த ஆபீஸ் சூப்பிரண்டெண்டண்ட் மூலம் அதிவிரைவாகக் காரியம் முடிவதைப் போன்றது இது.

எவருக்கு நம்மீது முழுப் பிரியமுள்ளதோ அவரிடம்' நம் மனதிற்குள்ள ஒரு குறையைச் சொன்னால் அது உடனே தீர்வதைப் பார்க்கலாம். 12 நாள் வேலை செய்யாத போன் அதுபோல் ஒரு மணி நேரத்தில் ஒரு சமயம் வேலை செய்தது. நேரில் வாயால் சொல்வதும் பலிக்கும். மனதால் சொல்வது அதைவிட அதிகமாகவும் பலிக்கும். அன்னையுடன் அதுபோன்ற தொடர்பு நமக்கிருப்பது நல்லது, ஆனால் அரிது.

********

  1. தெய்வம் உலகை நாடிவரும்பொழுது ஞானம், அஞ்ஞானமாகிறது. மனிதன் தன்னை உணர்ந்து இறைவனை நோக்கிச் செல்லும்பொழுது அஞ்ஞானம், ஞானமாகிறது.

உலகை நாடும் தெய்வம் அஞ்ஞானம். தெய்வத்தை நாடும் மனிதன் ஞானம்.

தாய்மை குழந்தையைத் தொடும்பொழுது அன்பாகவும், அரவணைப்பாகவும், கொஞ்சலாகவும் மாறுகிறது. உடலாலும் தாய் அன்பை வெளிப்படுத்துகிறாள். அதை வெளிப்படுத்த அவள் இரத்தம் பாலாக மாறுகிறது. அடம் பிடிக்கும் குழந்தைக்குத் தாயின் பாசம், தண்டனையாகப் போய்ச் சேருகிறது.

இமயமலையை ஆன்மா சிவபெருமானாக அறியும். ஜீவன் இமவான் என்றறியும். கட்புலனுக்கு இமயமலை பிரம்மாண்டமான உயர்ந்த அகன்ற தோற்றம். உணர்ச்சி பிரமிக்கிறது. 100 மைலுக்கு அப்பால் பிரமிப்பு குறைந்து வானை எட்டும் சிகரம் தெரிகிறது. பூகோளப் படத்தில் அது ஒரு புள்ளி, ஒரு பெயர், அதன் உயரம் ஒரு நெம்பராக (29,000 அடி) மாறுகிறது. இமயமலை மாறவில்லை. நாம் உள்ள தூரத்தைப் பொறுத்து, அதன் தோற்றம் நமக்கு மாறித்

தோன்றுகிறது. பாடப்புத்தகத்தில் உயரத்தால் (29,000 அடி) மட்டும் குறிக்கப்படுகிறது.

இந்தியா அடிமைத்தளையை உடைத்தெறிந்து சுதந்திரம் பெற முடிவு செய்தபொழுது நாடு மக்கள் மனத்தில் சுதந்திரம் பெற்றது. அது சுதந்திர வேட்கை. அதன் பலன் சுதந்திரம். இனி நம்மை அன்னியன் நிர்ணயிக்கக் கூடாது, நாமே நம்மை நிர்ணயிக்க வேண்டும் என முடிவு செய்ததை சுயநிர்ணய உரிமை என அறிவோம். நாடு அடிமையிலிருந்து சுதந்திரம் (sovereign state ) பெற்றுவிட்டது. சுதந்திரம் என்பது அரசியல் சட்டமாக மாறி - பார்லி மெண்டால் அரசியல் சட்டமாக்கப்பட்டு - சுதந்திரத்திற்கு உருவம் அளித்தது. இது பாமரனை எட்ட வேண்டும். ஆயிரம் வகைகளில் இது பாமரனை எட்டுகிறது. பார்லிமெண்ட் சட்டங்களை இயற்றுகின்றது. சர்க்கார் இந்தச் சட்டத்தின் பேரில் rule ஏற்படுத்துகின்றது. டிபார்ட்மெண்ட் இந்த ரூலின் அடிப்படையில் சர்க்கார் உத்தரவு (Government order) போடுகிறது. அதன் அடிப்படையில் பாமரன் விண்ணப்பத்தை ஆபீசர் பரிசீலனை செய்து உத்தரவு பிறப்பிக்கின்றார். ஒருவருடைய நிலத்தை முனிசிபாலிட்டி அவருடைய அனுமதியின்றி எடுத்துக்கொண்டால், அல்லது உரிய நஷ்டஈடின்றி எடுத்துக்கொண்டால் அவர் சர்க்காருக்கு மனுப் போடுகிறார். "நான் சுதந்திரமான பிரஜை. என் சொத்து எனக்குரியது. என் அனுமதியின்றி அதைத் தொட எவருக்கும் உரிமையில்லை. முனிசிபாலிடிக்கும் உரிமையில்லை. இந்தியா சுதந்திரமான நாடு. நான் அதன் பிரஜை. அரசியல் நிர்ணயச்சட்டப்படி எனக்குச் சொத்துரிமையுண்டு. பார்லிமெண்ட்சட்டப்படி எனக்கு அந்த உரிமையுண்டு. அதை மீட்டுத் தரவேண்டும் என மனுப் போடுகிறேன்'' என்றால் சர்க்கார் உத்தரவு போடுகிறது. அவர் சொத்து மீட்கப்படுகிறது. அதற்குரிய G.O.வை உத்தரவு சான்றாகக் காட்டுகிறது. G.O.க்கு அடிப்படை சட்டம் (Act) , சட்டம் அரசியல் நிர்ணயத்தின் (constitution) பேரில் எழுகிறது. அதை நமக்களித்தது சுதந்திரம். Sovereignity-constitution-Parliment Act-Government order-order of collector, எனச் சுதந்திரம் நம்மிடம் சர்க்கார் உத்தரவாக வந்து சேருகிறது. சிருஷ்டியைத் தத்துவமாக விளக்கும்பொழுது எது, எதுவாக மாறுகிறது என பகவான் கூறுகிறார்.

சத்து ஜடமாக மாறுகிறது.

சித்து வாழ்வாகிறது.

ஆனந்தம் ஆன்மாவாக (சைத்தியம்) உருப் பெறுகிறது.

சத்தியஜீவியம் மனமாகிறது.

சச்சிதானந்தமே சிருஷ்டி, உலகம். இந்த மாறுதல்களில் ஞானம், அஞ்ஞானமாவது ஒரு மாற்றம். பரிணாம வளர்ச்சியை நாம் மேற்கொண்டு பூரணயோகத்தால் திருவுருமாற்றத்தை நாடினால் நம் மனம், சத்தியஜீவியமாகி, நமது ஆன்மா ஆனந்தமாகி, வாழ்வு சித்தமாகி, உடல் சத்தியமாகி, இத்தனையும் சேர்ந்து சிருஷ்டி பிரம்மமாகிறது.

*******

  1. தன்னையறிந்த நிலையில் இவையிரண்டையும் புரிந்து கொள்ளமுடியும். மனோமயப்புருஷனை அறிந்தாலும் ஜீவாத்மா சித்தித்தாலும், இந்நிலைகளை அறியமுடியாது. அவை சலனமற்றிருப்பதால், இவற்றை வெளிப்படுத்துவதில்லை. நம் அனுபவத்தின் சாரத்தைச் சேர்க்கும் சைத்தியப்புருஷனே இவற்றை அறிவான்.

புருஷனும், ஜீவாத்மாவும் பெறாத ஆத்மஞானம் சைத்தியப்புருஷனுக்கு உண்டு.

உலகத்தை மட்டும் அறிவது அஞ்ஞானம். ஜோதியைமட்டும் அறிவதும் அஞ்ஞானமே. இவையிரண்டும் இறைவனின் பகுதிகள்.

இறைவனாகிய முழுமையை அறிவதே ஞானம். எவ்வளவு உயர்ந்ததானாலும், ஒரு பகுதியை அறிவது அஞ்ஞானம், ஞானமில்லை என்று உபநிஷதம் கூறுகிறது.

குழந்தை வாழ்வை அறிவதில்லை. படிக்காதவன் சட்டத்தை அறிவதில்லை. சாதாரணமனிதன் வாழ்வின் முழுமையை அறிவதில்லை. ஞானி இறைவனின் முழுமையை அறிவதில்லை. வளர்ந்தபின் குழந்தை வாழ்வை அறிகிறது, ஆனால் குழவிப் பருவத்தின் ஆன்மவிழிப்பை இழக்கிறது. குழந்தையுள்ளம்பெற்ற வயதானவர் விவேகியாகிறார். அவர் சிறு வயதின் ஆன்மவிழிப்பை இழக்காமல், வாழ்வின் அனுபவத்தை வயதானபின் பெற்று வாழ்வின் ழுமையை அறிகிறார். படிக்காதவன் சட்டத்தை அறிவதில்லை. சட்டத்தை நிலைநிறுத்த வாதாடும் வக்கீல் பாமரனின் வாழ்வை அறிவதில்லை. பாமரனாய்ப் பிறந்து, சட்டத்தை இயற்றும், அரசியல்வாதியாக (காமராஜ்போல் உயர்ந்தவர்) உயர்ந்தபின் பாமரனுடைய வாழ்வையும், சட்டத்தின் நுணுக்கத்தையும் சேர்ந்த ழுமையை அரசியல் அனுபவமாகப் பெறுகிறார். ஞானி நிஷ்டையில் ஜீவாத்மாவோடும், பரமாத்மாவோடும் தம்மை மறந்து - சமாதிநிலையில் - இரண்டறக் கலக்கின்றார். பரமாத்மாவோடு கலந்தாலும், ஞானி பரமாத்மாவை சிருஷ்டிக்குமுன் உள்ள நிலையில் மட்டும் அறிவதால் அது பூரண ஞானமாகாது. சிருஷ்டிக்கப்பட்ட வாழ்வின் பிடியிலுள்ள மனிதன் பரமாத்மாவை அறியாது இருளிலிருப்பது உண்மையானால், வாழ்வை அறியாது பரமாத்மாவை மட்டும் அறியும் ஞானி பெரிய இருட்டிலிருப்பதாக உபநிஷதம் கூறுகிறது. பரமாத்மாவும், அவரது சிருஷ்டியான வாழ்வும் சேர்ந்ததே முழுமை, முழு உண்மை, இருள் கலப்பில்லாத ஜோதியாகும். அதை ஆன்மாவால் உணர முடியாது. ஏனெனில் மனோமயப்புருஷனான ஆன்மா சலனமற்றது, ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டது. சலனமான வாழ்வைச் சலனமற்ற மனோமயப்புருஷன் அறியமுடியாது. ஜீவாத்மா அழிவற்றது, சலனமற்றது, மாற்றமற்றது. சலனத்தால் மாறி,

ஒன்றழிந்து மற்றது தொடர்ந்து உற்பத்தியாகும் வாழ்வை அறிய, வாழ்விலுள்ள ஆத்மாவாகிய சைத்தியப்புருஷனால்தான் முடியும்.

உலகில் இருளும் ஒளியின்றி எழாது. பொய்யும் சத்தியத்தின் அடிப்படையில் ஏற்பட்டதே. திருடனுக்கும் வாழ்வப்பது அவனுடைய சகாக்களுடன் உண்மையாக இருப்பதுவேயாகும். 10 பேர் சேர்ந்து பொய் சொல், திருடினாலும், அவர்கள் ஒருவருக்கொருவர் உண்மையாக இல்லாவிட்டால், ஒருவர் மற்றவர்க்குத் துரோகம் செய்தால் தொடர்ந்து திருட முடியாது. அனைவரும் பிடிபடுவர். தொழில் திருடு, பொய், சூது, ஆனாலும் அவர்களுக்குள் உள்ள உண்மையே அவர்கள் வாழ்வைக் காப்பாற்றுகிறது. பொய்யும் உலகில் சத்தியத்தின் அடிப்படையின்றி வாழமுடியாது என்பதை இது விளக்கும்.

பிரகிருதி, இயற்கை என நாம் கூறுவது இருளின் வடிவம். எனினும் இதுவும் ஒளியின் அடிப்படையின்றி உருவாகாது. சத்தியத்தின் அடிப்படையில்லாவிட்டால் வாழ முடியாது. அந்த சத்தியம் சைத்தியப்புருஷனாகும். வாழ்வின் ஆன்மீகச் சாரம் சைத்தியம். சைத்தியம் தன்னையறியும், வாழ்வை அறியும், அது வளரும், மாறும். ஜீவாத்மா வளராது, மாறாது, தன்னையறியாத நிலையில் மனோமயப்புருஷனாக இயற்கையை அறியாத - ஆனால் அறிய முடியாமலில்லை - சாட்சிபுருஷனாக இருக்கிறது.

தன்னை ஒருபொழுதும் மறக்காத சைத்தியப்புருஷனால் மட்டுமே ஞானம், அஞ்ஞானமாக மாறுவதையும், அஞ்ஞானம் ஞானமாக மாறுதையும் அறியமுடியும்.

***********

  1. துக்கமான சூழ்நிலையில் சந்தோஷமாக இருப்பது மனதைப் புண்படுத்தும். துக்கமும், சுகமும் எதிரெதிரான உணர்வுகள், மனத்திற்கு மட்டும் உரியவை. மனிதச் சூழ்நிலை ஒன்றை அனுமதிக்கும், அடுத்ததை அனுமதிக்காது. சைத்தியப்புருஷனுக்குத் துக்கமில்லை. உடல் உணர்வின் சந்தோஷம் அதற்கில்லை. துக்கமான சூழ்நிலையில் சைத்தியப்புருஷன் அமைதியாகவும் இனிமையாகவுமிருப்பான், பொருத்தமற்ற சந்தோஷத்தை வெளிப்படுத்தமாட்டான்.

துக்கத்தையும், அமைதியையும், இனிமையையும் கொடுப்பது சைத்தியப்புருஷன்.

ஆன்மீக உணர்வுக்குத் துக்கமில்லை. துக்கப்பட்டால், ஆன்மீகத்தை ஏற்றுக் கொண்டதாகாது. பகவான் ஸ்ரீ அரவிந்தர் சமாதியடைந்தபொழுது பல சாதகர்கள் துக்கமேலீட்டால் தன்னிலை இழந்தபொழுது, அன்னை, நாம் துக்கப்படுவது பகவானை அவமதிப்பதாகும்' என்றார். அவர் நம்மிடையேயிருக்கிறார், நம்மைவிட்டுப் போகவில்லை என நாம் அறியாததால் துக்கப்படுகிறோம் என்றார்.

ஒரே மகன் கடல் மூழ்கியபொழுது போலீஸ் அதிகாரியான தகப்பனார் துக்கத்தில் மூழ்கிப் படுக்கையைவிட்டு எழுந்திருக்க முடியாதபொழுது, அன்னையின் ஆசிபெற்றால் துக்கம் கரையும் என்றனர். அன்னையைத் தரிசிக்க வந்தார். அவரைத் தரையில் தம் நாற்காலியின் அருகே உட்காரவைத்து, வருகிறவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தார் அன்னை. அவர் மனப்பாரம் நிமிஷத்திற்கு நிமிஷம் குறைய ஆரம்பித்தது. இடைஇடையே அன்னை அவர் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்தார். துக்கம்முழுவதும் அரை மணியில் கரைந்துவிட்டது. துக்கம் சந்தோஷத்தின் மறுபுறம். துக்கமான சூழ்நிலையில் அன்னையை இடைவிடாது அழைத்தால் துக்கம் கரையும். தொடர்ந்து அழைத்தால் சந்தோஷமாக மாறும். இது மனதைப் புண்படுத்தும். எப்படி துக்கம் கொண்டாடும் பொழுது சந்தோஷமாக இருப்பது? தவறல்லவா? அன்னையை அழைத்தால் சைத்தியம் மேலெழும். அவனுக்குத் துக்கமில்லை. இயல்பான சந்தோஷமுடையவன் துக்கமான இடத்தில் சைத்தியப்

புருஷனின் சந்தோஷம், சந்தோஷமாக வெளிப்படாது. துக்கத்தை மீறி ஆளும் அமைதியாக மாறும்.

இந்நிலையில் எழும் சந்தோஷத்தைக் கண்டு மனம் புண்பட்டு, வெட்கப்படுவதற்குப் பதிலாக, அதைச் சூழ்நிலையில் உள்ளவரை எட்டும்படிச் செய்தால், அதாவது பிறருக்குக் கொடுத்தால், நம் துக்கம் அழிந்ததைப்போல் இதைப் பெறுபவர் துக்கமும் அழிவதைக் காணலாம். வெட்கப்படுதல் சமூக உணர்ச்சிக்குக் கட்டுப்படுதலாகும். அதற்குக் கட்டுப்பட்டால், அங்கு எழும் பலன் - முடிவு - சமூகம் அனுமதிக்கும் பலனுக்குட்பட்டதாக இருக்கும். மனம் புண்பட்டால், psychology மன உணர்வுக்குக் கட்டுப்படுவதாகும். இதற்குரிய பலனையே இது அனுமதிக்கும். சமூக உணர்வையும், மனஉணர்வையும் புறக்கணித்துவிட்டு, துக்கம் மாறி சந்தோஷமாவதைச் சூழலுடன் பகிர்ந்து கொண்டால், சமூகம் அனுமதிக்காததை, மன உணர்வு அறியாததை, துக்கத்திற்குரியவர் பலனாகப் பெறுவார். குடும்பத்தில் சம்பாதிப்பவர் ஒருவர் இறந்துவிட்டதாக வைத்துக்கொள்வோம். அங்கு வந்த ஒருவரால் துக்கச்சூழ்நிலை மாறியது என்றால், முழுவதும் மாறிய நிலையில் அவர் மரணத்தால் வருமானத்தில் ஏற்பட்ட நஷ்டம் ஈடுசெய்யப்படும்படி ஒரு நிகழ்ச்சி அங்கு நிகழும். மனம் துக்கத்தைப் பாராட்டினால், துக்கத்திற்குரிய - மரணத்தால் கொண்டுவரப்பட்ட - நஷ்டம் இயல்பானது எனச் சூழல் ஏற்கும். மனம் துக்கத்தைவிட்டு வெளிவந்தால், சூழல் மரணத்தால் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து வெளிவரும். அதை ஈடுகட்டும் வழி எழும்.

இறந்தவர் பக்தரானால், இறப்பதற்கு முன் அவருக்கு இத்தெளிவு இருந்தால், மரணம் அவரை நாடாது. அவர் விரும்பும் பொழுது மரணம் ஏற்படும். மரணம் நாடாத அளவுக்கு பக்தியில்லை எனில், மரணத்திற்குரிய நஷ்டம் நாடாது. அடுத்த நிலையில் அதற்குரிய துக்கம் சூழாது.

********

  1. மேலெழுந்தவாரியான மனம் (surface mind): எண்ணம், உணர்வு, செயலனைத்தும் மேல்மனதைச் சார்ந்தது. நாம் மேலெழுந்தே வாழ்கிறோம். உடலும் அதற்குரியது.

மனம், உணர்வு, உடல் மூன்றும் சேர்ந்தது மேல்மனம்.

ஒரு கம்பனியில் ஆயிரம் தொழிலாளர் இருந்தாலும், கம்பனி எங்கு முதலீடு செய்கிறது, எங்குக் கடன் வாங்குகிறது, எவ்வளவு முதலீடுள்ளது என்பனவெல்லாம், இந்தத் தொழிலாளருக்குப் பங்கில்லை. பல கம்பனிகளில் தெரிந்து கொள்ளவும் முடியாது. Bata பாட்டா கம்பனி தனிப்பட்ட முதலாளியுடையது. அதனால் கம்பனிச் சட்டப்படி அவர்கள் வரவு, செலவை இன்கம்டாக்ஸ் ஆபீசுக்குத் தர வேண்டுமென்பதே சட்டம். மற்ற கம்பனிகள்போல் வெளியிட வேண்டிய நிர்ப்பந்தமில்லை. இன்றுவரை பாட்டா கம்பனியின் டர்ன்ஓவர் எவ்வளவு என வெளியில் தெரியாது. வருஷத்தில் எத்தனை ஜதை செருப்பு விற்றது என்பதையே வெளியிடுகிறார்கள். குடும்பங்களில் குழந்தைகள் 20, 25 வயதுவரை குடும்பத்தின் அந்தஸ்து, சொத்து விபரம், அதன் இரகஸ்யங்கள் தெரியாமலிருப்பதுண்டு. அவை சில குடும்பங்களில் பெரியவர்களோடு நின்றுவிடும். நேரம் வரும்பொழுது சொல்வார்கள். அதுவும் தேவைப்பட்டதையே சொல்வதுண்டு. நேர் எதிரான குடும்பங்களுண்டு. நாளைக்கு அமெரிக்காவுக்குக் கணவன் போகிறான் என்பதை இன்றுவரை அறியாத மனைவி ஒருத்தி. கணவனுக்கு என்ன சம்பளம் என்றும் அறியாதவருண்டு. எங்கு வேலை செய்கிறார் என அறியமுடியாத வாழ்வும் உண்டு.

இந்தியச் சர்க்காரின் நடவடிக்கைகள் அனைத்தும் பகிரங்க மானவை. பார்லிமெண்ட்டில் பேசப்படுகின்றன. சர்க்கார் கெஜட்டில் வெளிவருகின்றன. பேப்பரில் எழுதுகிறார்கள். ஆனால் பொதுஜனம் அறிவது என்ன? நரசிம்மராவ் பிரதமர் என்பதுவரை அனைவருக்கும் தெரியும். அதிகப்படிப்புள்ள நாடு அமெரிக்கா. ஒரு சர்வேயில் இரண்டாம் உலகயுத்தத்தைப்பற்றி 53% பதில் சொன்னவர்கள் அமெரிக்கா இரண்டாம் உலகயுத்தத்தில் ரஷ்யாவை எதிர்த்துப்

போரிட்டது என்றனர்! பொதுஜனம் மேலெழுந்தமனம்போலும், சர்க்கார் உள்மனம்போலும் ஆகும். சர்க்காரில் நடப்பது வெளிப்படையானாலும், பொதுமக்கள் அறிய முயல்வதில்லை. இரகஸ்யமாகச் சர்க்காரில் நடப்பவை ஏராளம். அவை வெளி வருவதில்லை.

நம் வீட்டில் 7 வயதுக் குழந்தைக்கு நம் வீட்டு விஷயங்கள், அந்தரங்கங்கள் எவ்வளவு தெரியுமோ, படிக்காத பொதுஜனம் சர்க்கார் வரவு செலவு எப்படி அறிவதில்லையோ அதேபோல் நம் மேல்மனம் நம்மை', நம் ஆழ்ந்த வாழ்வை அறிய முடிவதில்லை. முடிந்த இடங்களில் முயல்வதில்லை.

T.T.கிருஷ்ணமாச்சாரி தமிழ்நாட்டில் ஓர் அரசியல் சட்ட நிர்ணயப் பிரச்சினையைப்பற்றி சூடான விவாதம் நடந்தபொழுது அபிப்பிராயம் தெரிவித்ததை ரேடியோ ஒளி பரப்பியது. இரு கல்லூரி மாணவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். ஒருவருக்கு T.T.K. சொல்லியது பிடிக்கவில்லை, வயிற்றெரிச்சலைக் கிளப்பியது, அவரால் பொறுக்கமுடியவில்லை. "யார் இந்த T.T.K. இவர் அபிப்பிராயத்தை ஏன் ஒளி பரப்புகிறார்கள்? யார் இவரை அழைத்தது?'' என ஆத்திரமாகக் கேட்டார். அடுத்தவர் விஷயம் தெரிந்தவர். "T.T.K. constitution making bodyஅரசியல் நிர்ணயச் சட்டத்தை இயற்றியவரில் ஒருவராயிற்றே. அவர் பேசாமல் வேறு யார் பேசுவது?'' என்று கேட்டார். கல்லூரி மாணவர் நிலை இதுவானால் கல்லூரிக்குப் போகாதவர் நிலை என்ன? பள்ளிக்குப் போகாதவரும் ஓட்டுப் போடும் ஜனநாயகத்தில், அரசியலுள்ள கல்லூரி மாணவனுக்கு அரசியல் விஷயம் தெரியவில்லை என்றால், "பொதுமக்கள்'' நாட்டின் அந்தரங்கங்களை அறிவது எப்படி?

மேல்மனமே நாம். நம் உடலும், மனமும் சேர்ந்தது மேல்மனம் எனப்படுவது. வடதுருவத்தில் கடலினுள் பனிமலைகள் பிரமிட் உருவத்தில் மிதக்கும். அவற்றின் நுனி மேலே தெரியும். கப்பல்கள் அதில் மோதி சேதமடைவதுண்டு. சிகரம் மேலே தெரிந்தால், நம் கண்ணுக்குத் தெரியாமல் நீருள் அமிழ்ந்துள்ளது ஒரு பெரிய

மலையாகும். மேல்மனத்தை பனிமலையின் நுனிக்கு ஒப்பிடுவது வழக்கம். நாம் மேல்மனமே மனிதன், புலன் வாழ்வே வாழ்வு என இருப்பது கண்மூடியான வாழ்வாகும். கண்டதே காட்சி, கொண்டதே கொள்கை என்ற நிலையில் வாழ்பவர் மேல்மனத்தையே மனிதனாகக் கருதுவர். ஆன்மீகத் திருஷ்டியுடையவர் மனிதஜீவனின் அகன்ற உருவத்தை அறிவர்.

********

  1. எண்ணம், உணர்வுக்குரிய சூட்சுமப் பகுதியுண்டு. அவை சூட்சும வாழ்வுக்குரியவை. சூட்சுமவாழ்வு ஆழ்ந்த வாழ்விலிருந்து வேறுபட்டது. எண்ணம் சூட்சுமமான தானாலும், அதற்கு ஸ்தூலமான பகுதி, சூட்சுமமான பகுதி என இரண்டுண்டு.

சூட்சுமமான எண்ணத்திலும் அதற்குரிய சூட்சுமம் உண்டு.

இன்று உலகில் நடப்பவையெல்லாம், சூட்சும உலகில் முதலில் தயாராக வேண்டும். பிறகு அங்கிருந்து ஸ்தூல உலகில் வெளிப்படுகிறது. அதனால்தான் மகாபுருஷர்கள் எதிர்காலத்தைச் சொல்லமுடிகிறது. அவர்களுக்குச் சூட்சுமப் பார்வையுண்டு. சூட்சும உலகில் உருவானவை அவர்கள் கண்ணுக்குத் தெரிவதால், அவர்களால் சொல்லமுடிகிறது. சூட்சும உலகு ஒன்று என்று இல்லாவிட்டால்,முதலில் அங்கு விஷயம் உருவாகாவிட்டால், ஜோஸ்யம் என்ற சாத்திரம் ஏற்பட்டே இருக்க முடியாது. குறி சொல்ல முடியாது. இராமலிங்க சுவாமி வடலூர் கடலூர் ஆகுமென நூறாண்டுக்கு முன் சொன்னார். நேரு சிறுபிள்ளையாக இருக்கும்பொழுது போட்டோவில் அவரைக் காண்பித்து இவரே இந்தியாவின் எதிர்காலத் தலைவர் என்று அன்னை சொல்லியதை அன்று எவராலும் நம்ப முடியவில்லை. செயலுக்கு சூட்சுமம் உண்டு என்பதால், இது முடிகிறது.

மனத்தைக் கவனிக்க முடியும். அங்கு எண்ணம் உருவாவதைக் காணலாம். அது முடிந்தால், அவர்கள் அதைத் தொடர்ந்து கவனித்தால், எண்ணம் சூட்சும மனதிலிருந்து மனத்துள் நுழைவதைக் காணலாம். எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்வது பெரியது. எண்ணத்தைச் சூட்சுமநிலையிலேயே சமர்ப்பித்தால் பலன் பெரியது. சமர்ப்பணத்தை மேற்கொண்டவர் ஓர் ஏக்கர் நிலம் வாங்க முயன்றார். எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்ததால் அதற்கான முயற்சிகள் தடையின்றி நடந்தன. எண்ணத்தைச் சூட்சுமநிலையில் சமர்ப்பணம் செய்தார். அது ஓர் ஆனந்தமான அனுபவம். தன் எண்ணம் கூடிவரவேண்டும் என்பதைவிட சமர்ப்பணம் மேல். சூட்சும நிலையில் சமர்ப்பணம் அதிலும் உயர்ந்தது. அவருக்கு அது பலித்தது. ஓர் ஏக்கர் வாங்கப் பணம் திரட்ட முயன்றவர்க்கு 7 1/2 ஏக்கர் நிலம் அமைந்தது. சூட்சுமநிலையில் சமர்ப்பணம் பெரும்பலன் அளிக்கும். சூட்சுமநிலையில் எண்ணத்தைக் காண முடிந்தால், விபத்து, வியாதி சூட்சுமநிலையில் தங்களைத் தெரிவிக்கும். அதே நிலையில் சமர்ப்பணம் செய்தால் அவை விலகுவதைக் காணலாம்.

உணர்வும் அப்படியே. உணர்வைச் சமர்ப்பணம் செய்வதைப்போல் சூட்சுமநிலையில் உணர்வைக் கண்டு சமர்ப்பணம் செய்வது பெருந்திறன். இவை சகுனமாகவும் வெளியில் தெரியும். உணர்வில் ஒருவர் எரிச்சலைக் கிளப்புவதைச் சூட்சுமநிலையில் கண்டு சமர்ப்பணம் செய்தால், அவரால் வர இருந்த தொந்தரவு விலகும். பிறகு அவர் எப்படித் தொந்தரவு செய்ய முயன்றார், எப்படி அது தடுக்கப்பட்டது எனத் தெரியவரும்.

ஆழ்ந்த மனம், சூட்சுமமனம் ஆகியவை வேறு. சூட்சுமமனத்திற்கு ஆன்மீகம் இல்லை. ஆழ்ந்த மனத்தில் ஆன்மீகம் உண்டு.

எண்ணமே சூட்சுமமானதாயிற்றே, அதன் சூட்சுமப்பகுதி என்றால் என்ன என்று கேள்வி எழலாம். வானிலை இலாக்காவில் பெருமழை என 2''க்கு மேற்பட்டதைக் குறிப்பார்கள். 5'', 9'' மழையை

அதிகமான பெருமழை என்பார்கள். உயர்ந்ததில் மேலும் உயர்ந்ததை உன்னதம் என்பதுபோல் சூட்சுமத்திலும், அதிக சூட்சுமமும் உண்டு. மனம் என்பதற்கு அஸ்திவாரம் மூளை. அது ஸ்தூலமானது. மூளையில் உதிக்கும் எண்ணம் ஸ்தூலமானதாகவும் (gross), சிந்திக்கும் மனத்தில் உதிப்பவை சூட்சுமமான எண்ணமாகவும் கருதப்படும்.

**********

  1. கரணங்கட்குரிய நிறைவு பூரண நிறைவாகாது. பரம்பொருள் மட்டுமே சிருஷ்டிக்கு முன் நிறைவுடையவன். நாம் தேடும் நிறைவு அதைவிடப் பெரியது. அது சிருஷ்டியிலுள்ள நிறைவு (refer 617, 633).

நாம் நாடுவது சிருஷ்டியின் நிறைவு, கரணங்களுடையதன்று.

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று கவி பாடிய காலத்தில் எல்லோருக்கும் ஓட்டுரிமையுமில்லை. இன்று எல்லோருக்கும் இந்நாட்டு மன்னரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு. சுதந்திரம் பெற்றுக் கொடுத்த உரிமை இது. எல்லோரும் இந்நாட்டு மன்னராவது இதுவரை உலகச் சரித்திரத்திலில்லாதது. பூரணயோகம் மனிதனுக்குக் கொடுக்க முயல்வது அதுபோன்ற ஆன்மீக நிறைவு.

இறைவன், சச்சிதானந்தமாகி, பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்து, பூமியையும் அங்குத் தாவரம், விலங்கு, மனிதனையும் சிருஷ்டித்தான். பிரபஞ்சத்திற்கு மேலே சுவர்க்கம், கோலோகம், சிவலோகம் ஆனந்தம், சித்தம், சத்தியமுண்டு. பிரபஞ்சத்தினுள் தெய்வம், மனிதன், விலங்கு, தாவரம், ஜடமுண்டு. பிரபஞ்சத்தினுள் உள்ள இன்பம் சிற்றின்பம், இங்கு பிறப்பு, இறப்புண்டு, இன்பதுன்பமுண்டு, இரவு, பகலுண்டு, பிரபஞ்சத்திற்கு மேல் இரவில்லை, இருளில்லை, மரணமில்லை, அங்குள்ளது பேரின்பம். இதுவே நாம் அறிந்தது. மனிதன் வாழ்வில் பிறவியையும், சிற்றின்பத்தையும் ஏற்கலாம். தவம்

மூலம் விடுதலைபெற்று, மரணமிலா நித்தியத்துவத்தையும், பேரின்பத்தையும் பெறலாம். பூவுலகில்லாத ஆன்மீகப் பூரணம் சுவர்க்கத்திலுண்டு.

இதைத் தாண்டிய நிலையில் உள்ள பூரணத்தை நாடுவது பூரண யோகம். பூவுலகில் இருளை ஒளியாக்கி, மரணத்தை அழித்து, பொய்ம்மையை விலக்கி, பேரின்பத்தை பூவுலகவாழ்வுக்குக் கொண்டுவந்தால், அது தெய்வீக இன்பமாகி, பேரின்பநிலையைக் கடந்து நிற்கும்.

ஆங்கிலேயர் நாட்டை ஆண்டு வந்தபொழுது, வைஸ்ராய் கவுன்சில், அஷ்ட்டோஷ்முகர்ஜி, சி.பி. இராமசுவாமி அய்யர், இராமசாமி முதலியார் போன்றவரிருந்தார்கள். அது அன்னியன் கொடுத்த பரிசு. இன்று மத்திய மந்திரி சபையில் அனைவரும் இந்தியர். பிரதமரும், ஜனாதிபதியும் இந்தியர்கள். இது சுதந்திரம் பெற்று நாம் பெற்ற உரிமை. ஆன்மா மோட்சம்பெற்று பெறும் பேறு, வாழ்வை நீத்து, வாழ்வின் நிலையை மாற்ற முடியாத நிலையில், ஆன்மா தான் பெறும் பேறாகும். இது சி.பி. இராமசுவாமியும், இராமசுவாமி முதலியாரும் மத்திய மந்திரிகளாக இருந்தது போலாகும். அன்னியனை விலக்கி, அனைவருக்கும் சுதந்திரம்பெற்று, சுதந்திரத்தின் உரிமையாக நரசிம்மராவும், நாராயணனும், மன்மோகனும் பதவி வகிப்பது, பூவுலகில் இருளை விலக்கி, பொய்ம்மையை அழித்து (எளிய பிரஜைக்கு எட்டாத பதவியை உரிமையாக அவனை உயர்த்திக் கொடுப்பதுபோல்) பேரின்பத்தைப் பூவுலகுக்குக் கொண்டு வருவது போலாகும்.

மனம், உடல், பிராணன், ஆன்மா கரணங்கள். ஆன்மா மோட்சமடைந்தால், ஒரு கரணம் பெற்ற நிறைவு அது. இவை நான்கும் சேர்ந்தது ஜீவன். ஜீவன் நிறைவு பெற வேண்டுமானால் பூவுலகில் பெற வேண்டும். இறைவன் ஜடத்தை சச்சிதானந்தமாக்க முயன்று பெறும் இன்பம், பூரணம் இன்று உலகில்லை, சிருஷ்டியில்லை.

இன்று சிருஷ்டியில்லாத பூரணத்தைப் பரம்பொருள் நாடுகிறது. அது நிறைவேற ஜடம் சத்தியமாக மாற வேண்டும். வாழ்வு சித்தமாகவும், ஆன்மா ஆனந்தமாகவும், மனம் சத்திய ஜீவியமாகவும் மாறவேண்டும். அது ஜீவன், சத்தியஜீவனாவதாகும். ஒரு கரணம் பெறும் பூரணமில்லை அது. நான்கு கரணங்களும் சேர்ந்த ஜீவன் பெறும் பூரணம் அது. அந்தப் பூரணம் பரம்பொருளுக்கு, இதுவரை அவரறியாத ஆனந்தத்தைக் கொடுக்கும். அதுவே பூரணயோக இலட்சியம்.

நாம் தேடும் நிறைவு பரம்பொருள் நாடும் நிறைவு. அது இதுவரை சிருஷ்டி காணாதது. அந்த நிறைவை ஜீவன் மட்டுமே பெறமுடியும். ஆன்மாவானாலும், ஒரு கரணம் என்பதால் - பகுதி என்பதால் - அதைப் பெறமுடியாது.

********

  1. தெய்வீக அன்பாலும், சரணாகதியாலும் பெறக்கூடியது நாம் தேடும் நிறைவு.

தந்திரசாஸ்திரம், தந்திரயோகத்தை விளக்குவது. இந்திய யோகப் பரம்பரையில் வழங்கிய யோகங்களில் ஞானயோகம், ஹடயோகம், கர்மயோகம், பக்தியோகம், மந்திரயோகம், நாதயோகம் எனப் பல உண்டு. மந்திரம் பேர் இடம் பெற்றது. கர்மயோகம் கீதைக்கு முன்பிருந்து இருந்து வருவது. ஞானயோகம் உபநிஷத காலத்திலிருந்து சிறப்புப் பெற்றுச் சங்கரரால் பிரபலப்படுத்தப்பட்டது. ராஜயோகம் இவற்றுள் தலையானதாகக் கருதப்பட்டுப் போற்றப் படுவது. தந்திரம் இவற்றை எல்லாம் சேர்த்து ஒரு முறையைக் கண்டது. தந்திர யோக இலட்சியத்தை, வேத இரகஸ்யத்தால் மிகச் சுருக்கமான முறையில் அடைய முயல்வது பூரணயோகம். தந்திரம் குந்தளினியை எழுப்பி, உடலை யோக சக்தியால் நிரப்பி, ஒவ்வொரு சக்கரமாகத் திறந்து முடிவில் சகஸ்ரதளத்தைத் திறந்து மோட்சமடைகிறது. இது கீழிருந்து மேலே போகும் முறை. பூரணயோகம் மேலிருந்து கீழே வருகிறது.

முதலில் சகஸ்ரதளத்தைத் திறந்து அதன் மூலம் ஜீவனைத் தெய்வ சக்தியால் நிரப்பி, மேலும் ஒவ்வொரு சக்கரமாகத் திறந்து, முடிவில் குந்தளினியைத் திறக்கிறது. அதாவது, பூரணயோகம் மேலிருந்து கீழே வருகிறது. இறைவனை உலகுக்குக் கொண்டு வரும் யோகம் என்பதால் மேலிருந்து கீழே வருகிறது. இக்காரணங்களால் பூரணயோகம் மனிதனை மனதிலுள்ள ஆன்மாவாகக் கருதி மனதில் ஆரம்பிக்கின்றது. பூரண யோகம் தேடுவது நிறைவு. இறைவன் தேடும் நிறைவைப் பூரணயோகம் தேடுகிறது.

இறைவன் பரம்பொருள். சிருஷ்டி இரு பகுதிகளாலானது. பிரபஞ்சத்திற்குக் கீழே இருள் நிறைந்த பூவுலகமும், மேலே இருளற்ற ஒளி நிறைந்த சச்சிதானந்தமும் உடையது சிருஷ்டி. பூவுலகம் இருளால் நிறைந்ததால், அதற்குப் பூரணமில்லை. சச்சிதானந்தம் ஒளியால் நிறைந்ததால் அதற்கு ஒளியின் பூரணமுண்டு. இவற்றோடு திருப்தியடையாத இறைவன் இருளை, ஒளியாக மாற்றி, சச்சிதானந்- தத்தின் பூரணத்தை பூவுலகிற்குக் கொண்டுவர முனைகிறான். அது இன்று சிருஷ்டியில்லாத பூரணம். பரம்பொருள் நாடுவது அப் பெரும் பூரணத்தையேயாகும். அரசியல் இன்று அனைவருக்கும் மன்னரைத் தேடும் உரிமை வந்தது சுதந்திரம் அளித்த பேறு. எல்லோரும் இந்நாட்டு மன்னராவது உலகில் இல்லாதது, கற்பனைக்கெட்டாதது. ஸ்ரீ அரவிந்தருடன் வாழ்ந்த பாரதியார் ஸ்ரீ அரவிந்தர் கருத்துக்களைத் தம் பாடல்களில் எழுதியுள்ளார். பாரதியின் பாடல்களும், வசன கவிதையும் சொல்லும் கருத்துகள் ஸ்ரீ அரவிந்தர் முதன் முறையாக உலகுக்குக் கொண்டு வந்தவை. அவை நம் மரபில் இது வரையில்லாதவையல்ல. இருந்தாலும் பாராட்டப்படாதவை. மரபுக்கு முரணானவை.

யோகமே வாழ்வு, வாழ்வே யோகம்,

என்ற கருத்து ஒரு பாடலில் வருகிறது. கண்ணன் என் சீடன் என்ற பாடல் மனித குருவின் பரம்பரை அந்தஸ்து அகந்தைக்குரியது, இறைவனே சீடனாக வந்தால், சீடனிலுள்ள இறைவன்வெளிப்பட்டால், மனித குரு விலக்கப்படுவார். மனித குருவின் அகந்தை அழியும் என்ற கருத்தை விளக்குகிறார். இதுவும் பூரண யோகத் தத்துவம். ஈஸ்வரன் சக்திக்குச் சரணடைய விழைகிறான். சக்திக்கு ஈஸ்வரன் சரணடைந்தபொழுது அவனுள் உள்ள பெருந் திறன் வெளிவருகிறது என்பதை சாவித்திரியிலும், பல்வேறு இடங்களிலும் குறிப்பிட்டுள்ளார். நம் மரபுக்கு இது புதியது. முற்றிலும் மாறானது, எதிரானதும்கூட, இதே கருத்தைப் பாரதி,

தானத்து ஸ்ரீதேவி அவள் தாளிணை கைக்கொண்டு மகிழ்ந்திருப்பான்

என்று எழுதுகிறார். எல்லா மனிதரும் தெய்வ நிலையைத் தாண்டி, இறைவனாக வேண்டும் என்பது ஸ்ரீ அரவிந்தர் முதல் கூறியது. பாரதி நாட்டுக்கு இக்கருத்தை எழுதும்பொழுது இதுவரை உலகில் எவரும் நினைக்காதபடி

எல்லோரும் இந்நாட்டு மன்னர்

என்றெழுதுகிறார். மனதில் நம்பிக்கையாகவும், உணர்வில் வழிபாடாகவும், உடல் பணிவாகவும், இதயத்தில் பக்தியாகவும், அர்ப்பணமாகவும், ஆனந்தமாகவும் எழுந்த பூரணயோக சக்தி, ஆன்மாவில் தெய்வீக அன்பாகி, பூரிப்படைந்து, சரணாகதி மூலம் பூர்த்தியடைகிறது. அதுவே பூரணயோக நிறைவு. பகவான் அந்த 9 நிலைகளைக் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

நம்பிக்கை, வழிபாடு, பணிவு

பக்தி, அர்ப்பணம், ஆனந்தம்

அன்பு, பூரிப்பு, சரணாகதி - இவை பூர்த்தியடைந்து நிறைவு எழுகிறது.

*******

  1. ஜபம் வாயால் உச்சரிக்கப்படுகிறது. ஜபத்தை மேற்கொள்பவர்கள் உடன் நிலையிலேயே இருக்க வேண்டும். மந்திரசக்தி உணர்ச்சியைத் தொட்டால்

அது ஆர்வமாகும். மந்திரத்தின் உட்பொருளை மனம் அறிந்தால், உலகை ஆளும் ஜடசக்தியை மனம் எட்டும். அதனால் சொல்லால் சொல்லப்பட்டது உடனே நிகழும். ஜடத்தின் பிடியிலிருந்து மனத்தை விடுவிக்கும்முறையிது. (மனமும், உணர்வும் திருவுருமாற்றமடைந்தபின், உடலை மாற்ற அன்னை மந்திரத்தை மேற்கொண்டார்)

உட்பொருளை மனம் உணர்ந்தால் உலகை ஆளும் ஜடசக்தியை மனம் எட்டும்.

யோகப்பயிற்சி பல நிலைகளில் உள்ளது. ஆசனம், பிராணாயாமம், ஜபம், தியானம், தபஸ், நிஷ்காம்ய கர்மம், விரதம், பக்தி, பஜனை என அவை வேறுபடும். தவமும், தியானமும் மனத்திற்குரியவை, விசாரம் - தத்துவவிசாரம் - மனத்தில் சிந்தனைக்குரிய முறை. பக்தி உணர்வுக்குரியது. நிஷ்காம்ய கர்மம் மனத்தின் செயல்திறனுக்குரியது (will). ஆசனம் உடலுக்குரிய முறை. பிராணாயாமம், பிராணனுக்குரிய முறை. ஜபம் உடலுக்குரிய முறையாகும். மந்திரம் மனத்திற்குரியது.

ஜபத்தால் ஒரு மந்திரத்தை இலட்சம் முறை, கோடி முறை உச்சரித்தால் அதற்குரிய பெரும்பலன் உண்டு. தவறாமல் உண்டு. அதே இலட்சியத்தைத் தியானத்தால் அடைய முயன்றால், மனத்தால் பலன் பெற முயல்வதாகும். பலன் எதிலும், முழுமையாகவும், சீக்கிரத்திலும் கிடைக்கும். உடலைவிட மனம் உயர்ந்த கருவியாதலால் பலன் அதிகம், சீக்கிரம் வருகிறது.

மந்திரத்தை வாயால் சொல்லும்பொழுது அது ஜடத்தின் (உடலின்)

முறையாகிறது. மந்திர சக்தி உணர்ச்சியைத் தொட்டால் ஆர்வம் எழுந்து அது பிராணனுக்குள்ள முறையாகும். மந்திரத்தின் உட்பொருளை அறிந்து சொன்னால், அது மனத்திற்குரிய

முறையாகிறது. அதனால் மனம் ஜடத்தை ஆள முயலும் முறையாகிறது.

பூரணயோகத்திற்கு பகவான் உடலுக்குரிய முறைகளை விலக்கினார். மனத்திற்குரிய முறைகளை மட்டும் சேர்த்துக் கொண்டார். அவருடைய முறை சமர்ப்பணம். சமர்ப்பணத்திற்கும் உடலுக்கும் சம்பந்தமில்லை. முழுவதும் மனத்தால் செய்யக்கூடியது இம் முறை.

தந்திர மார்க்கம் மனிதனை உடலுள்ள ஆன்மாவாகக் கருதி, அதற்குரிய வழிகளை ஏற்படுத்தியுள்ளது. பூரணயோகம் மனிதனை மனத்திலுள்ள ஆன்மாவாகக் கருதுவதால், பகவான் மனத்தின் முறைகளை மட்டுமே கருதுகிறார். அதனால்தான் பூஜையை (உடலுக்குரிய முறை) பகவான் ஒரு முறையாகச் சேர்க்கவில்லை. மந்திரத்தையே அவர் முக்கியமாகக் கருதவில்லை. தியானத்தையும் அவர் ஒரு முறையாகப் பின்பற்ற வேண்டும் எனக் கூறவில்லை.

யோகம் இதுவரை ஆன்மாவுக்குரியதாக இருந்தது. ஆன்மாவுக்கு விடுதலையளிக்க மனத்தையோ (ஞான யோகம்), உடலையோ (ஹதயோகம்) கருவியாகப் பயன்படுத்தினர். பகவான் ஆன்மாவுக்கு மட்டும் உரிய யோகத்தை மனத்திற்கும், உணர்வுக்கும், முடிவாக உடலுக்கும் கொண்டுவந்தார். 1947வரை ஓட்டுரிமை சொத்துள்ளவர்க்கும், படிப்பறிவுள்ள ஆண்களுக்கும் மட்டுமிருந்தது. 1950இல் 21 வயதான ஆண், பெண் அனைவருக்கும் உரியதாயிற்று. உலக சரித்திரத்திலேயே முதன் முதலாக யோகத்தை ஆன்மாவுக்குச் கீழுள்ள மனத்திற்குக் கொண்டுவந்தது பகவான். மனத்திற்கும், உணர்வுக்கும் விடுதலையளித்தார்; திருவுருமாற்றத்தையும் செய்தார். மேலும், அத்திருவுருமாற்றம் உடலுக்கும் உரியதென்றார். அன்னை அதையும் முயன்றபொழுது உடல் அசைய மறுத்தது, அப்பொழுது அது மந்திர ஜபத்திற்கு அசைவதைக் கண்டு, அன்னை மந்திரத்தை மேற்கொண்டார். தன் அன்றாடச் செலவைச் சமாளிக்க முடியாமல் பிரேசில் போன்ற நாட்டில் சர்க்கார் கடன் வாங்கியது. இந்திய

சர்க்காருக்கு அந்தப் பிரச்சினையில்லை. மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தத் திட்டத்தில் மூலதனமிட இந்தியா கடன் வாங்கியது போன்றது அன்னை மந்திரத்தை மேற்கொண்டது.

*********

  1. பாராமுகமாக இருக்கும் தன்மையை வாழ்வு இழக்க ஆரம்பித்துவிட்டது என்கிறார் அன்னை. சிறு நல்ல காரியம் பெரும்பலனையும், சிறு தவறுகள் பேர் ஆபத்தையும் உற்பத்தி செய்கின்றன. முன்னே செல்லாவிட்டால் உள்ளதையும் இழக்க நேரிடும் என நாம் அறிவோம். ஒரு நிலையின் (plane) ஆரம்ப கட்டத்தில் நல்லது, கெட்டது, இடைப்பட்டது என மூன்று பிரிவுகள் இருக்க முடியும். கடைசிக் கட்டத்தில் நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம். இடைப்பட்ட நிலை என்பதில்லை. திருமணம் செய்து குடும்பத்தை நடத்திச் சமூகத்தின் பகுதியாக இருக்க வேண்டும். அல்லது ஒதுக்கப்பட வேண்டும். இடைப்பட்ட நிலையில்லை.
  • சிறு நல்லது பெரும்பலன் தரும்.
  • இனிமேலும் வாழ்வு பார்த்துக் கொண்டிருக்காது.
  • கடவுளுக்குக் கண்ணில்லையா என்பது இனியில்லை.

நாட்டில் பல கட்சிகள் பல அபிப்பிராயங்களைச் சொல்லலாம். அதை எவரும் ஏற்கலாம், ஏற்காமலிருக்கலாம். அன்னியன் படையெடுத்து விட்டான் என்றால், அங்கு ஒரே ஓர் அபிப்பிராயம் தானிருக்கலாம். நாட்டைக் காக்கவேண்டும். எதிராகப் பேசுபவனை நாடு அழிக்கும். இடைப்பட்ட நிலை என்பது இல்லை.

ஊர் ஏதாவது ஒரு விஷயத்தில் சூடாகிவிட்டால், இருப்பவர் அனைவரும் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து கொள்வார்கள். எதிலும்

சேராமலிருந்தால் ஆபத்து. ஒரு பக்கமாக இருந்தால் அந்த கட்சியின் பலமிருக்கும். எதிலும் சேராதவனை இரண்டு கட்சியினரும் தொந்தரவு கொடுப்பார்கள். இந்த நிலை வருகிறது எனில் ஊர் விழிப்பாக இருக்கிறது என்று பொருள். அதைப்போல் Life, வாழ்வு என்று நாம் அறிவது வளர்ச்சியில்லாமல் இதுவரை இருந்தது. அதனால் எதையும் வாழ்வு கவனிப்பதில்லை. யார் எது செய்தாலும் அதன் பலனை அவர் அனுபவிப்பார். வாழ்வு குறுக்கிடாது. குறுக்கிடும் திறன் அதற்கில்லை. ஊரில் மனிதர்கள் இருப்பதாக நாம் அறிவோம். வாழ்வு என்று ஒன்றுள்ளது என அறியோம்.

ஒருவன் மயக்கமுற்று விழுந்தால் பலர் வந்து உதவும் ஊரில் நல்ல மனிதர்களிருக்கிறார்கள் என்போம். எவரும் உதவாவிட்டால் நல்லவர்களில்லை என்போம். ஆனால் காட்டுவழியே தனியே போகும் ஒருவரைத் தாக்க ஒருவன் நினைத்த நேரம், நான்கு பேர் வந்து அவன் எண்ணத்தை முறியடித்தால், வாழ்வு அவருக்கு உதவியதாக நாம் நினைக்கின்றோம்.

தென்னாப்பிரிக்காவில் ரயில்வே புதியதாகப் போடும்பொழுது காடுகள் வழியாகப் போகவேண்டியதாயிற்று. இன்ஜினீயரும், அவர் மகனும் வேலை செய்து கொண்டிருந்தவர்களை ஆதி மனிதர்கள் தூக்கிக்கொண்டு போய்விட்டனர். பாஷை தெரியாது. தரையில் சிலுவையை வரைந்து, அதை இன்ஜினீயரை மிதிக்கச் சொன்னார்கள். அவருக்கு பயம் வரவில்லை. சிரிப்பு வந்தது. தகப்பனாரும், மகனும் குலுங்கக் குலுங்கச் சிரித்தனர். இன்னும் சற்று நேரத்தில் ஆதிமனிதர்கள் அவர்களைக் கொலை செய்யப்போகின்றனர். அந்நேரம் பட்டாளமாக இன்ஜினீயரைத் தேடி வண்டியில் அவர் ஆட்கள் வந்து காப்பாற்றினர். இதைத் தெய்வம் காப்பாற்றியது என்கிறோம். அது சரி. அவர்கள் தைரியம் காப்பாற்றியது என்கிறோம். அதுவும் சரி. எப்படி நடந்தது? வாழ்வுஎன ஒரு சக்தியுண்டு. அது தைரியத்திற்குப் பணிகிறது. அது சூட்சுமமானது. அவர்களுடைய தைரியத்தை வாழ்வு மதித்துத் தன் சக்தியால் அவர்கட்குத் தேவையான உதவியைக் கொண்டு வந்தது என்பது சூட்சும உண்மை.

நல்லதங்காளுக்கும், அரிச்சந்திரனுக்கும், துரௌபதிக்கும் வாழ்வு உதவவில்லை. திரௌபதிக்கு உதவியது வாழ்வில்லை, கண்ணன். நல்லதங்காளுடைய வறுமையை வாழ்வு கால்போட்டு மிதித்தது. அரிச்சந்திரன் சத்தியத்தைப் பாராட்டினான். வாழ்வு சத்தியத்தை ஆதரிப்பதில்லை. பொய்யை ஆதரிக்கும். ஆனால் வலிமை எங்கிருந்தாலும் வாழ்வு பணியும். இன்ஜினீயருடைய தைரியம் வலுவானது. அதனால் பணிந்து ஆதரித்தது.

சத்தியமும், கற்பும் மனத்திற்கு உயர்ந்தவை. வாழ்வுக்கு வலிமையும், பொய்யும் உயர்ந்தவை. மனத்திற்கு வலிமையில்லை. அதனால் செயல்பட முடியாது. நம் சொந்த வாழ்வில் எளியவரைக் கொடுமைப்படுத்துபவரைக் கண்டுள்ளோம். ஏமாற்றுவதைக் காண்கிறோம். இன்ஜினீயருக்கு உதவி அத்ததுபோல் வாழ்வு எளியவருக்கு உதவுவதில்லை. உதவினால் கொடுமைப்படுத்து பவனுக்கு உதவும். ' என்செய்வது, நல்லதற்குக் காலமில்லை என்கிறோம். அது உண்மை. 1950-இல் சத்தியஜீவியம் உலகுக்கு வந்தது. அத்துடன் சிறிதளவு நல்லதற்குக் காலம் வந்துள்ளது. சத்திய ஜீவியம் பூமியின் சூழல் வலுப்பட, வலுப்பட எளியவன், வறியவன், ஏமாந்தவன், மெய் சொல்பவனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுமை குறைந்துவிடுகிறது என்பதை நாம் அறிவோம். வாழ்வு, நல்லது, கெட்டது, இடைப்பட்டநிலை என்ற பகுதிகளைக் கொண்ட ஆரம்பநிலையிலிருந்து, இடைப்பட்ட நிலையை விலக்கும் முடிவான நிலைக்கு வந்துவிட்டது.

முடிவான நிலையில் வாழ்வு முதிர்ச்சியடைந்துள்ளதால், சிறிய நல்லதற்குப் பெரிய பலனும், சிறிய தவறுக்குப் பெரிய தண்டனையுமளிக்கிறது என்கிறார் அன்னை. ஆபீஸில் எல்லாம் நடக்கும். சட்டமேயில்லாததுபோல் நடக்கும். தாமதமாக வருவார்கள். கண்டிப்பார்கள், தண்டிப்பதில்லை. அவரவர் இஷ்டப்படி ஓரளவு நடப்பார்கள். இன்ஸ்பெக்ஷன் வருகிறது. தினமும் லேட்டாக வந்தவனைத் தண்டித்ததில்லை. இன்ஸ்பெக்ஷனன்று லேட்டாக வந்தால் சஸ்பெண்ட் செய்வார்கள். சூழல் சூடாக இருப்பதால் சிறு

தவறுக்குப் பெரிய தண்டனை கிடைக்கிறது. உள்ளூர் முனிசி பாலிட்டியில் வேலை செய்தவர், ஆபீசர் பைல் கேட்டால் இரண்டு நாள் கழித்துக் கொடுப்பார். ஆபீசர் முணுமுணுப்பார். அத்தோடு சரி. அவரே சென்னையில் லோகல் பண்ட் கமிஷனர் ஆபீசுக்கு மாற்றலாகி, அதே மாதிரி நடந்தால், பெரிய தண்டனை கிடைக்கும். நிலை உயர்ந்தாலும், இருக்குமிடத்திலேயே சூழல் உயர்ந்தாலும், பொருட்படுத்தாத சிறிய தவற்றுக்குப் பெரிய தண்டனையுண்டு.

உள்ளூர் கல்லூரி ஆசிரியர் illiteracy எழுத்தறிவின்மை, வறுமைக் கோட்டைத் தாண்டுவது போன்றவற்றைப்பற்றி உயர்ந்த கருத்தைத் தெரிவித்தால், மாணவர்கள் போற்றுவார்கள். நல்ல பெயர் கிடைக்கும். அதுவே கல்லூரி தரமாக இருந்தால்தான் கிடைக்கும். அவரே சென்னையில் World bank Seminar உலகபாங்க் செமினாரில் அதே கருத்தைத் தெரிவித்தால், அதை அவர்கள் ரிப்போர்ட்டில் எடுத்துக் கொள்வார்கள். பாங்க் project திட்டத்தில் ஆபீசர் வேலை வரும். கல்லூரி ஆபீசர் சம்பளம்போல் பல மடங்கு வரும். விஷயம் சிறியதானாலும், இடம் பெரியதானதால், பெரும்பலன் வருகிறது.

Life Plane, வாழ்வுஎன நாம் அறிவது அதைப்போல் சத்தியஜீவியம் வந்ததால் அளவுகடந்து உயர்ந்துவிட்டது. சிறு தவற்றுக்குப் பெரிய தண்டனையும், சிறு நல்ல முயற்சிக்குப் பெரும் பரிசையும் அளிக்கிறது என்கிறார்.

***********

  1. இறைவனே கதி என்பவர்கள் சில நிமிஷம் அழைத்தாலும் பெரும்பலன் உண்டு. அந்நிலையை அடையத் தன்னுள் உள்ள இறைவனையடைய வேண்டும். மேலெழுந்த நிலையில் அதுபோன்ற அழைப்பு எழாது. இறைவனே கதி எனவும் தோன்றாது.

கலந்த உணர்வானவர் குரலுக்குப் பதில் தவறாது.

சீட்டாட்டமே கதி என்பவரிடம் தாயார் இறந்துவிட்டார் என்றபொழுது, பிணம் இந்த வழியாகத்தானே போகும் பார்த்துவிடுவேன் என்றார். வேசி வீட்டுக் கதவைப் புயல் தட்டித்திறக்க முடியாதவர் கயிறு என நினைத்து தோட்டத்து மதிலில் தொங்கும் பாம்பைப் பிடித்து ஏறி உள்ளே சென்றார். ஒரு விஷயமே கதி என்பவர் இப்படித்தானிருப்பார்கள். குருஷேவ் பிரான்சுக்குப் போனபொழுது எந்தக் கூட்டத்தில் - கலை, விளையாட்டு, வியாபாரம், அரசியல், கல்வி - பேசச் சொன்னாலும் கம்யூனிசத்தின் பெருமையை சலியாது பேசியது எல்லோருக்கும் சலிப்பை அத்தது. கடைசி நாள் நிருபர் ஒருவர் நீங்கள் என்ன செய்ய பிரியப்படுவீர்கள் என்று கேட்டபொழுது, கம்யூனிசத்தின் பெருமையை பிரசாரம் செய்ய எனக்கு நேரமில்லை என்றார். கூட்டம் பெருத்த பலத்த சிரிப்பால் எதிரொலித்தது. இறைவனே கதி என்பவர் ஆண்டாள், மீரா, கண்ணப்பநாயனார், போன்ற மனநிலையை உடையவராக இருக்கவேண்டும். குடும்பத்திலிருந்தாலும் நம் நாட்டில் அம்மனநிலையுடையவர் ஏராளம். அவர்கள் அன்னையைச் சில நிமிஷம் அழைத்தாலும் அன்னை வந்துவிடுவார். அவர்கள் நாடுவது பலனில்லை, அன்னையே அவர்கள் நாடுவது.

மேல்மனத்திற்கு அதுபோன்ற ஈடுபாடு முடியாது. அதன் அமைப்பில் அது இல்லை. நம்பிக்கை மனத்தைச் சேர்ந்தது. பக்தி இதயத்திற்குரியது. ஜீவன் முழுவதும் இறைவனை ஏற்றால்தான் இறைவனே கதி எனத் தோன்றும். இதயத்தின் பக்தியும், மனத்தின் நம்பிக்கையும், உடலுக்கும், ஆன்மாவுக்கும் வந்தபின்னரே இறைவனே கதி எனத் தோன்றும்.

பிள்ளையைக் கறி சமைத்தவர், தன்னைக் கொன்றவரைக் காப்பாற்றியவர், விஷத்தைக் குடித்துச் சாகாமலிருந்தவர், கண்ணைப் பிடுங்கிக் கொடுத்தவர், தாம் சூடிய மாலையைக் கொடுத்தவர், காசியில் ஒளியைப் பார்த்து அதைத் தொடர்ந்து திருநெல்வேலி வந்தவர், நாட்டை நான்கு முறை சுற்றி வந்தவர், தம்மைக் கொலைசெய்ய முன்வந்த குருவை மனம் மாறியபின் சிஷ்யனாக

ஏற்றுக்கொண்டவர், தொழுநோய்க்காரனில் இறைவனைக் கண்டு தழுவிக் கொண்டவர், சிவனடியார் கேட்டார் என்பதால் மனைவியையும் கொடுத்தவர், இறைவனே கதி என இருந்தவர்கள். அவர்கள் எல்லாம் ஜோதிமயமானவர்கள். அவர்கள் உடலைத் தாங்கி உலவியதால்தான், இந்தியனுடைய உடல் ஒளியைத் தாங்கி வருகிறது என்கிறார் அன்னை.

'கதி மோட்சம்' என்பது சொல். கதிஎன நாம் ஏற்பது மோட்சத்தில் முடிவது என்பது மரபு. இறைவனே கதி எனில் மனம் மோட்சத்தையும் நாடாமல், இறைவனையே நாடுகிறது என்று பொருள். மனம் முழுமையாக ஈடுபட்டாலும், இராமகிருஷ்ண பரமஹம்சரின் கடைசி நேரத்தில் விவேகானந்தருக்குச் சந்தேகம் தோன்றியதுபோல் தோன்றும். அது மனத்தின் இயல்பு. பக்தி மேலீட்டால் தன்னையே தியாகம் செய்தவரும், பக்தி குறைந்த நிலையில் எளியமனிதன்போல் நடப்பார். உடலால் ஊழியம் செய்தவருக்கு அதிருப்தி ஏற்படும் நேரமுண்டு. ஜீவன் முழுவதும் ஏற்கவேண்டும். ஆன்ம விழிப்புள்ளவருக்கும் நிஷ்டையில்லாத சமயம் விழிப்பிருக்காது. ஜீவன் முழுவதும் இறைவனை நோக்கி அதுவே கதி என நினைக்கச் சைத்தியம் விழித்தெழ வேண்டும். சைத்தியம் தளராது. அதற்குத் தளரத் தெரியாது. இறைவனைத் தவிர வேறெதையும் கருத முடியாத நிலையிலுள்ளது அது.

**********

 



book | by Dr. Radut