Skip to Content

பகுதி 1

  1. ஆதாயம், இலாபம், பொருள் நம் இலட்சியத்தை இன்று நிர்ணயிக்கின்றன. இது மாறி, இலட்சியம் இவற்றை நிர்ணயிக்கும் நிலைமை ஏற்பட்டால், அன்னையை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்வதாகும். இதற்கு முதற்படியாக இலாபத்தைக்கொண்டு இலட்சியத்தை நிர்ணயிப்பதை விட்டுவிட வேண்டும்.

இலட்சியத்தை நிர்ணயிக்க இலாபம் அளவுகோலன்று.

நாமுள்ள நிலைக்கும், அன்னையுள்ள நிலைக்கும் 4 அல்லது 5 நிலைகள் இடையில் உள்ளன. ஐந்தாம் நிலையை எட்டுவது குறிக்கோள். நாம் மனத்திலிருந்து செயல்பட்டால் 4 நிலை உயர்ந்து அன்னையை அடையவேண்டும். உணர்விலிருந்து செயல்பட்டால் 5 நிலையுயர வேண்டும். ஒவ்வொரு நிலையையும் உயர்ந்தது, தாழ்ந்தது என இரண்டாகப் பிரிக்கலாம். ஆதாயம், இலாபம் உணர்வைச் சேர்ந்தவை. பொருள் உடலைச் சார்ந்தது. இலட்சியம் மனதைச் சேர்ந்தது. ஆதாயத்தைவிட்டு இலட்சியத்தை ஏற்றுக்கொண்டால் அன்னையை நோக்கி ஒரு படி முன்னேறியதாகும். அதுவே அன்னையை ஏற்றுக்கொள்வதாகும். இலட்சியம் உயர்ந்தது, இலாபம் தாழ்ந்தது. இலாபம் கண்ணுக்குத் தெரிவது. இலட்சியம் கண்ணுக்குத் தெரியாதது, இலட்சியத்தை மனிதன் இலாபத்திற்காகவும் ஏற்க மாட்டான். இலாபத்திற்காகவாவது ஏற்றால் போதும் என்பது சாதாரண மனிதன் நிலை. அன்னையை நோக்கி வர அது போதாது. புது டிரஸ்

வாங்கித் தருவேன், முதல் மார்க்கு வாங்கு என்று சிறு குழந்தைக்குச் சொல்லலாம். அதையே பெரிய பையனிடம் சொல்லி, பெரிய படிப்பை படிக்கச் சொல்ல முடியாது. படிப்பின் முக்கியத்துவம் அறியப்பட வேண்டும். இல்லை எனில் படிப்பு வாராது. இலாபத்தைவிட்டு இலட்சியத்தை ஏற்பது உணர்விலிருந்து மனத்திற்கு வருவதாகும். அதுவே நம் யாத்திரையின் முதற்கட்டம். இலட்சியத்தை ஏற்க, இதனால் என்ன இலாபம் வரும் என்ற நோக்கம் உள்ளவரை நாம் ஏற்பது இலட்சியமில்லை, இலாபமே. நம் நோக்கம் மாறியபின்னரே இலட்சியம் நம் வாழ்வில் இடம் பெறும். அன்னை வழிபாடு உள்பட எந்த வழிபாட்டிற்கும் நம்பிக்கை அடிப்படை. நம்பிக்கை என்றால் அன்னையை நம்புவதாகும். எனக்குப் புரியும்போல் சொல்லிவிட்டால் போதும் நான் நம்புவேன் என்பதைப் பெரும்பாலான பக்தரிடையே காணலாம். புரிந்துவிட்டால் பக்தர் ஏற்றுக்கொள்வது அன்னையையா? தனக்குப் புரிவதையா? தனக்குப் புரிகிறது, என்றால் பக்தர் மனம் புரிந்து கொள்கிறது. அதை நம்பினால் பக்தர் தம் மனத்தை நம்புகிறார். அதற்கு தன்னம்பிக்கை என்று பெயர். தன்னம்பிக்கையுள்ளவன் திறமையோடு செயல்படுவான். அது அன்னைமீது நம்பிக்கையாகாது. புரிவதை நம்பினால் அதற்கு நம்பிக்கை எனப் பெயரன்று. புரியாததை நம்பினால் அதற்கு நம்பிக்கை என்று பெயர். நாம் டாக்டரை நம்புகிறோம். துணி வாங்கினால் கடையை நம்புகிறோம். ரூபாய் நோட்டு வாங்கினால் சர்க்காரை நம்புகிறோம். கடையில் வாங்கும் துணி சாயம் போகாது எனக் கடைக்காரன் சொல்கிறான். நமக்குத் தெரியாது. இனிமேல் போய் பார்க்க வேண்டும். தெரியாத விஷயத்தை ஒருவர் சொல்லக்கேட்டு நம்புவது நம்பிக்கை. தெரியாத விஷயம், தெரிந்துவிட்டால் இனி நம்புவது அவரையன்று, நம்மை நம்புகிறோம். இலட்சியம் எவ்வளவு இலாபம் தரும் எனக் கணக்குப்போட்டு இலட்சியத்தை ஏற்றுக் கொண்டால், நாம் இலாபத்தையே ஏற்கிறோம். இலட்சியத்தையன்று. எனவே இலாபத்தைக்கொண்டு இலட்சியத்தை நிர்ணயிக்கும் மனப்பான்மை போகவேண்டும்.

இலாபத்தை மனம் நாடுவது ஒரு நிலை. இலட்சியத்தை நாடும்பொழுது இலாபத்தால் இலட்சியத்தை நிர்ணயிப்பது வேறு. முந்தையது சரியில்லை. அடுத்தது தவறு. மனச்சாட்சிப்படி இறைவனை வழிபடும் இயக்கம் (Quakers) ஐரோப்பாவில் சென்ற நூற்றாண்டில் எழுந்தது. அவர்கள் வியாபாரத்தில் வந்தால் இலாபம் பெறச் சம்மதிக்கவில்லை. தமக்குச் சம்பளமாகத் தேவைப்பட்ட அளவே இலாபம் பெற வேண்டும் என்று கருதினர். இவர்கள் இன்றும் இங்குமங்குமாகத் தொழிலிலிருக்கின்றனர். ஆனால் இலாபத்தைத் தேடாத மனப்பான்மை இவர்கள் தொழிலை நசித்துவிட்டது. இலாபமில்லாமல் தொழில் செய்யமுடியாது. இலாபத்தை நாடுவது என்றால் அதையே மனம் குறியாக நாடுவது என்றாகும். அது சரியில்லை. நடைமுறையில் இலட்சியமாகக் காரியங்களைச் செய்யும்பொழுது - பள்ளி, மருத்துவமனை போன்றவற்றை நடத்தும்போது - எவ்வளவு இலாபம் வரும் என்று பார்த்து அதைக்கொண்டு இலட்சியத்தை நிர்ணயிக்கும் எண்ணம் தவறு. Life Divine இல் இதை Matter over mind பொருள் மனத்தை நிர்ணயிப்பது என்கிறார். மனம் பொருளை நிர்ணயிப்பதைச் சரி என்கிறார். Life Divine இல் கருவாக உள்ள 20, 30 கருத்துகளில் இதுவும் ஒன்று*. உலகம் முன்னேறிக் கொண்டேயிருக்கிறது. எங்குமே பின்னே போவதில்லை. நாட்டில் லஞ்சம், ஊழல், தரக்குறைவு ஏற்பட்டதைக் கண்டு நல்லவர் மனம் நடுங்குகிறார்கள். தூய்மை, தரம் மூலமாக முன்னேற முடியாத பிற்பட்ட சமூகங்கள் ஊழல், தரக்குறைவு மூலமாக முன்னேறுகிறார்கள். இவை மந்த நாடுகள் - சமுதாயங்களைப் - பார்த்தால் அடுத்த 30 ஆண்டுகளில் ஊழலைவிட்டுத் தூய்மையை ஏற்றுக் கொண்டதைப் பார்க்கலாம். கடத்தல், லஞ்சம், மோசடி, பித்தலாட்டம் செய்த குடும்பங்கன் வாரிசுகளைப் பார்த்தால், நேர்மை, நிர்ணயம், நாணயத்தை மூன்றாம் தலைமுறை, நாலாம் தலைமுறைகளில் ஏற்றிருப்பார்கள். இவை தவறு என்பதை உணர இரண்டு மூன்று தலைமுறைகள் ஆகின்றன.

ஆதாயத்தை இன்று கருதினால், அதைக்கொண்டு இலட்சியத்தை நிர்ணயித்தால், நமக்கு முன்னேற்றம் வரும் முன் ஆதாயம் பலன் தாராது என்று உணரவேண்டும். அதற்கு ஓரிரு தலைமுறைகளாகும். இதை அறிவால் ஏற்றால் பலன் உடனடியாகக் கிடைக்கும். அனுபவத்தால் ஏற்க நெடுநாளாகும். இந்தியாவிலும், உலகத்திலும் பெரிய கம்பனிகளாக இருப்பவர்களும், பெருஞ்செல்வர்களாக இருப்பவர்களும், இலட்சியத்தை ஏதோ ஒரு வகையில் சிறப்பாக ஏற்றுக் கொண்டவர்களே. ஆதாயத்தை மட்டும் தேடியவர்கள் அந்த தலைமுறையுடன் அழிந்துவிடுகிறார்கள்.

*******

  1. ஆன்மா ஜடப்பொருளை நிர்ணயிப்பது முடிவு. அதற்கு முன் ஆன்மா மனத்தின் எண்ணத்தை நிர்ணயிக்க வேண்டும். ஆன்மா வாழ்வின் செயலை நிர்ணயிக்கும் இலட்சியத்தையடைய, ஆன்மா எண்ணத்தை நிர்ணயிப்பதும், செயல் ஆன்மாவைக் கட்டுப்படுத்தாததும், முதற்படிகளாகும்.

ஆன்மா ஜடத்தை ஆளுமுன் மனத்தையும் உணர்வையும் ஆள வேண்டும்.

நம் வாழ்வை இன்று நிர்ணயிப்பது தேவை. பசிக்குத் தேவையான உணவு, உறக்கத்திற்குத் தேவையான வீடு போன்றவை நம் வாழ்வை நிர்ணயிக்கின்றன. ஜடம் (உணவு, வீடு) வாழ்வை நிர்ணயிக்கின்றது. வாழ்வுக்கு அடுத்தாற்போன்ற மனம் வாழ்வால் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே ஆன்மாவை மனம் நிர்ணயித்தால்

ஜடம் ஆன்மாவை நிர்ணயிப்பதாகும். முஸ்லீம் மதத்தை தழுவவில்லை என்றால் உயிர்போகும் எனில் உயிர், ஆன்மாவை நிர்ணயிக்கிறது. கிருத்துவமதத்தில் சேர்ந்தால் படிப்புக்கு ஸ்காலர்ஷிப் வரும் எனில் படிப்புக்குரிய சௌகரியம் ஆன்மாவை நிர்ணயிக்கிறது. சிவன் கோயில் நிலத்தைக் குத்தகைக்கு எடுக்க சிவபக்தனாக இருக்க வேண்டும் என்று சிவன் மீது பக்தி வந்தால், நிலம் பக்தியை நிர்ணயிப்பதாகும். பூரணயோகத்தை விளக்கும் Life Divine-இன் கடைசி அத்தியாயம் Divine Life. அந்த அத்தியாயத்தின் மையக் கருத்து,

ஆன்மா ஜடத்தை நிர்ணயிக்க வேண்டும்.

ஆன்மா ஜடத்தை நிர்ணயிப்பது என்றால் என்ன? விவேகானந்தர் பசியோடு ரயில்வே ஸ்டேஷனில் தூங்கியபொழுது கிருஷ்ணன், பலகாரக்கடை வியாபாரி பகல் தூங்கும்பொழுது அவன் கனவில் வந்து, என் பக்தன் பசியோடிருக்கிறான், அவனுக்குப் பக்ஷணம் எடுத்துக் கொண்டு ஓடு என்றார். அவனும் ஓடி வந்தான். விவேகானந்தருடைய ஆன்மா செயல்பட்டு உணவை அவரிடம் கொண்டுவந்தது. அதுவே வாழ்க்கை நியதியானால் மனிதவாழ்வு, தெய்வீகவாழ்வாகும். விஷம் சாப்பிட்டால் உடல் இறந்துபோகும் என்ற சட்டம் மீரா விஷயத்தில் பலிக்கவில்லை. மீராவின் பக்திக்குள்ள சக்தி விஷத்தின் சக்தியைவிட அதிகமாகி பக்தி, உடலைக் காப்பாற்றியது. உணர்வு, உடலின் வாழ்வை - விஷத்தை மீறி - நிர்ணயிக்கிறது. மந்திரவாதி உச்சரிக்கும் மந்திரம் பாம்பின் விஷத்தால் இறந்து கொண்டிருப்பவனைத் தடுக்கிறது. மனத்தின் மந்திரசக்தி உடலின் வாழ்வை - பாம்பின் விஷத்தை மீறி - நிர்ணயிப்பதுபோல் ஆன்மா உடலை (ஜடத்தை) நிர்ணயிக்க வேண்டும். தியானத்தில் ஆன்மாவில் எழும் காட்சிகள் நிஜவாழ்வில் நடந்தால் ஆன்மா செயல்படுவதாக அர்த்தம். பிரார்த்தனை பலிப்பதே ஆன்மா ஜடத்தை ஆள்வதாகும். ஆன்மா ஜடத்தை நிர்ணயிப்பதன்முன், உணர்வை நிர்ணயிக்க

வேண்டும், அதற்குமுன் எண்ணத்தை நிர்ணயிக்க வேண்டும். எண்ணம் கட்டுப்படுவது, ஆன்மா எண்ணத்தை நிர்ணயிப்பதாகும்.

இன்று ஜடம் உணர்வையும், எண்ணத்தையும், ஆன்மாவையும் நிர்ணயிப்பது நிற்க வேண்டும். உதவி செய்பவன் நண்பன் என்பது ஜடம் உணர்வை நிர்ணயிப்பது. நட்பு முதல், உதவி இரண்டாம்பட்சம் எனில் ஜடம் (செயல்) உணர்வைக் கட்டுப்படுத்தவில்லை என்று பொருள். மந்திரி, துணை வேந்தர் சொல்கிறார் என ஒரு கருத்தை ஏற்றால் பதவி, அறிவை நிர்ணயிப்பதாகும்.

தலையிருக்க, வால் ஆடக்கூடாது. தலைவர் சொற்படி மக்கள் நடக்கவேண்டும். அதுவே முறை. அதற்குமுன் தலைவர் சொல்வதைத் தொண்டர்கள் ஏற்கவேண்டும். அடுத்தாற்போல் உள்ளூர்த் தலைவரும், மாநிலத் தலைவரும் நாட்டுத் தலைவருக்குக் கட்டுப்பட வேண்டும். மாநிலத் தலைவர் அகில இந்தியத் தலைவருக்குக் கட்டுப்படாவிட்டால், எப்படி தலைவர் மக்களைக் கட்டுப்படுத்த முடியும்?

ஜடம் என்பது உடல். ஆன்மா, மனம், உணர்வு, உடல் (ஜடம்) என்பவை படிப்படியான நிலை. மனிதன் இன்று ஆன்மாவையும் அறியவில்லை, சொல்லப்போனால் மனத்தையும் அறியவில்லை. உணர்ச்சியையே அவன் அறிவான். உடல் உணர்ச்சிக்குக் கட்டுப்படுவது முறை. அவனுள்ள நிலையில் உணர்ச்சி, உடலுக்குக் கட்டுப்பட்டுள்ளது. எதை உடல் தேடுகிறதோ - பசி, தாகம், சௌகரியம், சந்தோஷம் - அதை உணர்ச்சி போற்றுகிறது. இது தலைகீழான நிலை. இந்த நிலையிலுள்ளவன் கூலியாகப் பிறந்து, கூலியாக இறப்பான். உணர்ச்சிக்கு - சொரணை - மனிதனுடைய உடல் கட்டுப்பட்டால், அவனுக்கு மானம், மரியாதையிருக்கும். கூலியாக இல்லாமல் மேஸ்திரியாவான். இந்த மாற்றம் ஏற்படாதவரை மனிதன் ஜடமாகவே இருப்பான். அடுத்தாற்போல் ஆட்சி பீடத்தில் உணர்வுக்குப் பதிலாக மனத்தையும், முடிவாக ஆன்மாவையும் வைக்க வேண்டும். இன்று ஆன்மா மனத்தை நிர்ணயிக்கும் நிலையிலும் இல்லை. ஸ்ரீ அரவிந்தர் நூலைப் படித்தவர் "உன் செயல்

உன்னுடையது'' என்ற கருத்தை மனதால் பூரணமாக அறிந்து கொண்டபின், அவர் போகுமிடங்களெல்லாம் நஷ்டம், கஷ்டம், மரணம் ஏற்படுவதைக் கண்டால், அவர் மனம் என்ன சொல்ல வேண்டும்? "ஆன்மவிளக்கம் பெற்றேன். என் செயல் மரணத்தைத் தாங்கிச் செல்கிறது. இது சரியில்லை. மனமும், செயலும், ஆன்மாவுக்கு உட்பட வேண்டும்'' என்று அவர் மனம் ஏற்றுக்கொண்டால், மரணத்தைத் தாங்கிச் செல்லும் இராசி அவரை விட்டுப் போகும். ஆன்மா மனத்தையும், செயலையும் நிர்ணயிக்கும். மரணராசியை, நல்ல இராசியாக மாற்றும்.

மாறாக, இதைக் கண்டவுடன், என் இராசி யாருக்கும் தெரியாது. இதெல்லாம் வேண்டாம். வெளியில் சொல்லக்கூடாது என்று முடிவு செய்தால், மனத்தின் முடிவுக்கு ஆன்மாவை உட்படுத்தி விடுகிறார். Sincerity என்று அன்னை சொல்வதின் அம்சங்களில் இது ஒன்றாகும். அன்னையை அதிகமாக ஏற்றுக்கொள்ளத் தேவையான அம்சங்களில் இது முக்கியமான ஒன்றாகும். இதை ஏற்றுக்கொண்டால் அன்றாட வாழ்வில் பல்வேறு ரூபங்களில் இப்பழக்கம் வரும். தலைகீழான பழக்கத்தை நேராக மாற்றவேண்டும்.

********

  1. இந்தத் தத்துவம் வாழ்வில் கடைப்பிடிக்கப்பட வேண்டுமானால், மனைவி கணவனை அதிகாரம் செய்யக்கூடாது.

மேலதிகாரியைத் தன் கைக்குள் வைக்க நினைக்கக் கூடாது. உரிமையில்லாததை மனம் விழையக்கூடாது.

அடுத்தவர் கண்ணோட்டத்தில் பிரச்சினையைப் புரிந்து கொள்ள வேண்டும். தந்திரயுக்திகளைப் பயன்படுத்தக்கூடாது.

பிரச்சினையைப் பிறர் நோக்கில் காணவேண்டும். தந்திரம் தவிர்க்கப்பட வேண்டும்.

மேற்சொன்னவை உடனே பலன் தரும். யோசனை செய்தால் அது பலனில்லை என்று தெரியும். பலனில்லாததைப் பலனாகக் கருதும் மனம் உடையவர்க்கு அது பலனாகும். இந்தப் ' பலனை' அனுபவிப்பவர்களுக்கு அவர்களுக்குரிய பலனோ, உயர்ந்த பலனோ, உலகத்தார் கருதும் எந்தப் பலனோ நிச்சயமாக வாராது. பெண்ணுக்குத் திருமணம் செய்து மாப்பிள்ளையை வீட்டோடு வைத்துக்கொண்டால் குடும்பம் விருத்திக்கு வாராது. பெண்ணுக்கும் கஷ்டம். தகப்பனாருக்கும் கஷ்டம் என்பது பரம்பரை விவேகம். இதை மீறிச் செய்பவர்கள் அநேகர். ஒரு சிறு தொழிலதிபர் இதைச் செய்தார். இவர் மருமகனுக்கு மாப்பிள்ளை' என்று பெயராயிற்று. அவர் பெயர் எவருக்கும் தெரியாது. அவர் எந்த வியாபாரத்தில் உட்கார்ந்தாலும் அது திவாலாயிற்று. தொழிலதிபர் மகன் தறுதலையானான். 15 வருஷத்திற்குப் பின் தகப்பனார் நிலை எக்கச்சக்கமாயிற்று. மாப்பிள்ளையைக் கூப்பிட்டு வெளியே போ என்று விரட்ட வேண்டிய தாயிற்று. ஆனால் கணவனை அதிகாரம் செய்யும் மனைவியும், தந்திரயுக்திகளைப் பயன்படுத்துபவரும் இப்படிக் கெட்டுப்போவதை நாம் பார்ப்பதில்லையே என நினைக்கலாம். இவர்கள் தங்களையொத்தவர்கள், தங்களைப்போன்ற பழக்கமில்லாதவரைப் பார்த்தால், அவர்களுக்கு வந்த செல்வாக்கு, வசதி இவர்களுக்கு வந்திருக்காது. அடுத்த கட்டப் பயனை இழந்திருப்பார்கள். பாங்கில் ஏஜெண்ட்டாகப் போனவர் மனைவி பெருநகரங்களிலிருந்தாலும், பெரிய படிப்பு படித்திருந்தாலும், கிராமத்துப் பெண்கள்

போல அடக்கவுணர்வு அதிகமானவராகக் காணப்பட்டார். இவருக்குத் தொடர்ந்து வந்த பிரமோஷனைக்கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இந்தச் சிறுவயதில் இவ்வளவு பெரிய உத்தியோகமா என்று நினைத்தனர். அவர்களெல்லோரும் மேலும் ஆச்சரியப்படும்படி அவர் சேர்மனானார். கணவனை அதிகாரம் செய்தவர்கள் இதுபோன்ற பலன்களை இழந்ததை அறியார். அடக்கமான மனைவியுடைய ஏஜண்ட்கள் சேர்மனாகிவிடுவார் என்பதில்லை. கணவனுக்கு மனைவி அடங்கினால் குடும்பம் முன்னேறும் என்பது உண்மை.

மேலதிகாரியைக் கைக்குள் வைக்க நினைப்பவர்கள் முக்கால் வாசிப்பேர் வீட்டில் தம்பிக்கும், மனைவிக்கும் அடங்கியிருப்பார்கள். அடுத்தவர் கண்ணோட்டத்தில் பிரச்சினையை அணுகுபவர் அவர் உள்ள நிலையிலிருந்து அவரைப் போன்றவர்கள் இதுவரை எவ்வளவு உயர்ந்துள்ளார்களோ, அந்த அளவுக்கு உயர்வார்கள். தந்திரயுக்திகளைப் பயன்படுத்துபவர் முதல் ஜெயிப்பதுபோல் தெரிந்தாலும் சில ஆண்டுகட்குப் பின் "எனக்கு எதுவும் கூடிவரவில்லை'', "எதுவும் தலைகீழ்ப் பலனைத் தருகிறது'', "மனைவி காளியாட்டம் ஆடுகிறாள்'', "எனக்குப் பிறந்ததுபோல் பிள்ளைகள் எதிரிக்கும் பிறக்கக்கூடாது'' என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு வாழ்க்கையைக் காண்பார்கள். Life Divineஇல் உள்ள தத்துவம் ஏராளம். மனம், (ஜடத்தை) பொருளை நிர்ணயிக்கிறது, பொருள் மனத்தை நிர்ணயிக்கவில்லை என்பதை நூலின் மையக் கருத்தாக எழுதியிருக்கிறார்.

தத்துவம் அதானால், நம் வீட்டில், தொழில், அந்தத் தத்துவம் எப்படிச் செயல்படுகிறது என்பதை சிறு விளக்கமாக இந்த மேற்சொன்ன மூன்று கருத்துகளில் விளக்க முற்பட்டேன்.

விலங்கு தன் உணவைத் தேட வேண்டும். தேட மறுத்தால் பட்டினி கிடந்து இறந்துவிடும். மனிதனுக்குக் குடும்பம் உண்டு. குடும்பத்தில் அனைவரும் வேலை செய்ய வேண்டும் என்பது

பொதுவானாலும் வேலை செய்யாதவனுக்கும் சாப்பாடுண்டு. அவனைச் சாகவிடமாட்டார்கள். மனிதன் முன்னேறி குடும்பத்தை ஏற்படுத்தினால், அதில் சோம்பேறி வேலை செய்யாமல் சாப்பிடமுடியும். மனிதவாழ்வில் ஏற்படும் ஒவ்வோர் உயர்வும், தாழ்ந்தவனுக்கும் ஒரு தவறான சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறது. இதை உயர்ந்தவன் ஏற்பதில்லை. விலங்கு சேமிப்பதில்லை. மனிதன் சேமிப்பான். சேமித்தால் ஒருவன் திருடும் வாய்ப்புண்டு. நிர்வாகம் வாழ்க்கையை முன்னேற்றும். நிர்வாகத்தில் மேல் அதிகாரி, கீழ் அதிகாரி என்பதுண்டு. கெட்டிக்காரன் மேல் அதிகாரியைக் கைக்குள் போடுவான். தாவரங்களுக்குள் திருமணமில்லை. திருமணத்தில் கணவனுக்கு அதிகாரம் உண்டு. உரிமையுண்டு. மனைவி கணவனை அடக்குவதுண்டு. வசதியை ஏற்படுத்தினால், உரிமை எழும். உரிமையில்லாதவன் பிறர் உரிமையை அடைய முயல்வதுண்டு. இவற்றைச் சாதிக்க தந்திரம், யுக்திகள் பயன்படும்.

மனித வாழ்வு மலை போன்றது. அதில் இலட்சியம் சிகரமானது. சிகரம் சிறு பகுதி. ஒரு சிறு சிகரத்தை ஏற்படுத்த பீடத்திலிருந்து பெரிய மலை எழுகிறது. அது காட்டாலும், விலங்காலும் நிறையப் பெற்றுள்ளது. பூமிக்குக் கீழ் மலை நெடுக வளர்ந்து போகிறது. நாம் இலட்சியத்தை மட்டும் நினைத்தால், அது சிகரத்திற்கொப்பாகும். மனித வாழ்வு சக்தி நிறைந்தது. வாழ்வு ஒன்றிருப்பது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. காற்று தெரிவதில்லை. ஆனால் இருப்பதை உணர்வால் அறிகிறோம். காற்றில் ஆகர்ஷணமும், மின்சாரமும், காந்தசக்தியும், ஆக்ஸிஜனும் இருப்பதாக விஞ்ஞானி சொல்வதை நாம் காண்பதில்லை. ஆனால் ஏற்றுக்கொள்கிறோம். வாழ்வு என்றொன்று இருப்பதாக நாம் நினைப்பதில்லை. நினைத்தால் அது கண்ணுக்குத் தெரிவதில்லை. அறிவுக்கும் புலப்படுவதில்லை. கர்மம் அதன் மூலம் செயல்படுகிறது. அதை நம்புகிறோம். தாவரங்களுக்கும், விலங்குக்கும், நமக்கும் உயிரிருப்பதைப்போல் வாழ்வுக்கு உயிருண்டு. அது பல சட்டங்கள் மூலம் செயல்படுகிறது. அதற்கு உயிரப்பது பொய். அதன் குணங்கள் பொறாமை, தந்திரம், சந்தேகம் போன்ற

தாழ்ந்த குணங்கள். வாழ்வில் நல்லது மிகக் குறைவாகவும், கெட்டது அதிகமாகவும் உண்டு. பொறாமை போன்ற வாழ்வின் குணங்களை நாம் பின்பற்றினால் நாம் வாழ்வுக்குக் கட்டுப்படுவோம். எதிரான உயர்ந்த குணங்களைப் பின்பற்றினால் வாழ்வு நமக்குத் துணை செய்யாது. எதிர்க்கும். எதிர்ப்பை மீறி வென்றால் வாழ்வு நமக்குக் கட்டுப்படும். அது மனிதனுக்குப் பெரிய வெற்றி. அவ்வெற்றியைப் பெற மேற்சொன்னவற்றைக் கடைப்பிடிக்கக் கூடாது. ஆன்மா ஜடத்தை நிர்ணயிக்க வேண்டும். ஜடம் ஆன்மாவை நிர்ணயிக்கக்கூடாது. ஆன்மா ஜடத்தை நிர்ணயிக்க மனைவி கணவன் பாசத்தைப் பயன்படுத்தி அவனை அதிகாரம் செய்யக்கூடாது என நினைக்க வேண்டும். தன் பேச்சை, கணவன் கேட்பான் என்ற நிலையில் அவனை அதிகாரம் செய்யாமலிருக்க மனைவிக்குச் சுயக்கட்டுப்பாடு வேண்டும். இலட்சியம் வேண்டும். மனைவி கணவனுக்குக் கட்டுப்படுவது சரி. கணவன் மனைவிக்குக் கட்டுப்படுவது தவறு என்பது இலட்சியம். எனவே இலட்சிய மனப்பான்மை வேண்டும். இலட்சிய மனப்பான்மை வாழ்வின் அடிப்படையைத் தலை கீழாக மாற்றும். ஜடம் ஆட்சி செய்யும் அடிப்படையை, ஆன்மா ஆட்சி செய்யும் அடிப்படையாக மாற்றும். இதை நிர்ப்பந்தத்தால் செய்தால் ஆன்மாவின் ஆட்சி எழாது. தானே வலிய வந்து செய்ய வேண்டும். தானே செய்யும் பொழுது, ஆன்மா விழிப்புறுகிறது. வெளி வருகிறது. அதன் ஆட்சி எழுகிறது.

*******

  1. பிறர் வாழ்வு மலர, தன்னை விட்டுக்கொடுப்பது அர்ப்பணம். தன் அதிகாரமும், செல்வாக்கும் அதிகப்படுவதை மனிதன் முன்னேற்றம் என இன்று கருதுகிறான். இறைவன் மனித வாழ்வில் மலர்ந்து வெளிப்படுதல் அவசியம் என மனிதன் உணர வேண்டுமானால், தன்னுடைய சொந்த அபிப்பிராயங்களை ரசிக்கும் பழக்கத்தை அவன் விட்டுவிட வேண்டும் என அவன் அறியவேண்டும்.

பிறர் வாழ்வு மலர, தன்னை விட்டுக்கொடுப்பது அர்ப்பணம்.

நம் அபிப்பிராயங்களை ஒருவர் விரும்பிக் கேட்டால், நாம் பிரியமாகப் பேசுகிறோம். வாழ்வில் நாம் அதுபோல் சந்தோஷப்பட பிறர் அனுமதிப்பதில்லை. நினைத்துப்பார்த்தால் இதுவரை அதுபோன்ற சந்தர்ப்பங்கள் சிலவே இருந்திருக்கும். அவை இனிமையாக நினைவிலிருக்கும். சிலர் வாழ்வில் அதுபோன்ற நிகழ்ச்சிகள் இருந்திருக்கா. நம் அபிப்பிராயங்களைப் பிறர் ஏற்பதை, கேட்பதை நாம் பெரிதும் விரும்புகிறோம். அதற்கு வாழ்வில் வழியில்லை. மிகக் குறைவு. எனவே நம் அபிப்பிராயங்களை நாமே ரசிக்கிறோம். சிந்திக்கின்றோம். அதனால் பிறர் அபிப்பிராயங்களை நாம் கேட்கப் பிரியப்படுவதில்லை. தன்னை மரியாதையாக நடத்தியவை நினைவிலிருக்கும். வருஷம் பத்தானாலும், தன்னிடம் பிறர் இனிமையாகப் பேசியது நினைவிலிருக்கும். அதுவே நாம் மலர்ந்த நேரங்கள். மலர்ந்த நேரங்கள் மனதிலிருக்கும். பிறர் மலர வேண்டுமானால், அவரிடம் நாம் பிரியமாகப் பேச வேண்டும், அவரை மரியாதையாக நடத்த வேண்டும், அவர் அபிப்பிராயங்களை நாம் கவனமாகக் கேட்டு, ரசிக்கவேண்டும். அவர் அபிப்பிராயங்களை நாம் ரசிக்க வேண்டுமானால், நம் அபிப்பிராயங்களை ரசிப்பதை நிறுத்த வேண்டும். நாம் என்பது அகந்தை, பிறர் என்பது இறைவனின் ரூபம். இறைவன் நம் வாழ்வில் மலர, பிறருடன் நம் தொடர்பில் பிறர் மலர வேண்டும். அதுவே ஆரம்பிக்கும் இடம். பிறர் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தால், அர்த்தமற்றவை ஆயிரம் காதில் விழும். பையித்தியம் பிடிப்பது போலாகும். அர்த்தமுள்ளவை நூற்றில் ஒன்றேயிருக்கும். அதுவும் நமக்குப் பிடித்ததாகாது. பிறர் அபிப்பிராயங்களை ரசிப்பது, நம் அபிப்பிராயங்களை விலக்குவதாகும். நம் அபிப்பிராயங்களைக் கேட்பவர் எவரும் இல்லை. நாம் ஒருவரே அதை மதிக்கிறோம். நாமும் அதை விலக்கினால், வாழ்வு கசக்கும், விரக்தியாக இருக்கும். எல்லோர் மீதும் எரிச்சல் வரும்.

தலைவர், செல்வர், பிரபலமானவர், எழுத்தாளர், கவர்ச்சியானவர் அபிப்பிராயங்களை உலகம் கேட்கும், மதிக்கும்.

இவர்கள் சமூகத்தில் 1% இருக்கமாட்டார்கள். தமிழ்நாட்டில் 1% எனில் 4 லட்சம் பேர். இது போன்றவர் தமிழ்நாட்டில் ஆயிரம் பேரிருப்பதும் கஷ்டம். மற்றவர்களுடைய நிலை பரிதாபத்திற்குரியது. நம் சொந்த வீட்டிலேயே நம் அபிப்பிராயத்தை மற்றவர் கேட்க வேண்டுமானால் நமக்கு அதிகாரம் இருக்க வேண்டும். அல்லது பிறருக்கு அதனால் ஆதாயமிருக்க வேண்டும். அதிகாரத்தாலோ, ஆதாயத்திற்காகவோ பிறர் நம் அபிப்பிராயத்தைக் கேட்டால் மனம் மலராது. அபிப்பிராயத்தை அபிப்பிராயமாகக் கேட்டால் நன்றாக இருக்கும். நாம் வாழ்வில் அதுபோன்ற நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தால் இருக்காது, இருந்தால் வாழ்வில் ஒன்றிரண்டு இருக்கும். ஒரு முக்கியமான நேரத்தில் அற்புதமான கருத்து மனதிலெழுந்தால் யாரிடமாவது சொல்லமுயன்றால் எவரும் சொல்ல அனுமதிக்க மாட்டார்கள். நாம் வலியுறுத்தினால், "யாருக்கு வேண்டும் உன் அபிப்பிராயம்'' என்பார்கள். "ஏற்றுக்கொள்ளுவது அப்புறம். ஒரு மனிதன், ஒரே ஒரு மனிதன் சொல்ல விடமாட்டேன் என்கிறான். யாரிடம் நாம் சொல்வது'' என்று தோன்றும். ஒருவர் அதைக் கேட்க முன்வந்தால் நாம் புது மனிதராகி விடுகிறோம். இதை எவரும் நமக்குச் செய்ய மாட்டார்கள், எவரும் அடுத்தவருக்குச் செய்யமாட்டார்கள் என்பது வாழ்வின் உண்மை. ஜடம் ஆன்மாவை ஆள்வதால் வாழ்வு இப்படியிருக்கிறது. ஆன்மா ஜடத்தை ஆள இது மாறவேண்டும். மாற வேண்டுமானால் இதை நாம் ஆரம்பிக்கவேண்டும். "நம் அபிப்பிராயத்தை விலக்கி, பிறர் அபிப்பிராயத்தைப் போற்றிக்கேட்டு ரசித்தால் அவர் மலருவார், இறைவன் நம்மில் மலருவார்''.

********

  1. எந்தக் கட்டத்தில் மேற்சொன்னது இன்பமாக இருக்கிறதோ, அக்கட்டத்தில் மனிதனுடைய செயல் அர்ப்பணமாகிறது. அதுவரை மனிதன் அதைத் தியாகம் என நினைக்கிறான்.

விட்டுக் கொடுக்கும் அர்ப்பணம் இன்பம், தியாகமில்லை.

ஆபீஸ் வேலையானாலும், பள்ளிப் படிப்பானாலும், வீட்டு வேலையானாலும், நாம் அதைக் கடனே எனச் செய்கிறோம். விரும்பிச் செய்வதில்லை. நாம் விரும்பிச் செய்வது பொழுதுபோக்கு, நம் மரியாதை உயரும் காரியங்கள் ஆதாயமானவை. பள்ளியில் முதல் ராங்க் வாங்குபவன், ஆபீசில் சீக்கிரம் பிரமோஷன் பெறுபவர், குடும்பத்தை விரைவாக முன்னேற்றுபவர்களைப் பார்த்தால், படிப்பையும், பைலையும், வீட்டு வேலைகளையும் விரும்பிச் செய்பவர்களாக இருப்பார்கள். அத்துடன் படிப்பு அவருக்கு இன்பம் தரும். எல்லோரும் T.V பார்க்கும்பொழுது அப்படிப்பட்டவர் ஆபீஸ் பைல் பார்த்துக்கொண்டிருப்பார். ரசமான கதையை நாலுபேர் ருசியாகக் கேட்பதில் பங்கு கொள்ளாமல், அவர்களுக்குரிய சமையலைச் செய்வதில் இன்பம் காண்பவர் ஒருவர். அனைவருக்கும் சலிப்பான காரியங்களில் இன்பம் தேடுவது சிறந்தவனின் போக்கு. அதைத் தியாகமாகக் கருதும்வரை இன்பமில்லை. இன்பமாகக் கருதினால் தியாகமில்லை. விரதமாக நல்லதை மேற்கொள்ளுதல் பலன் தரும். ஆனால் அதனால் ஜீவன் மலராது. ஜீவன் மலர வேண்டுமானால், அதை ஜீவன் தானே விரும்பி, ஆர்வமாக ஏற்க வேண்டும். செயல் அர்ப்பணமாக வேண்டும்.

பிறரிடம் ஓர் உதவியை, பொருளைக் கேட்டு வாங்குபவர் பலருண்டு. அதைக் கேட்காதவருண்டு. கேட்க முடியாதவருண்டு. கேட்கவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் கூச்சப்படுவதுண்டு, அசிங்கப்படுபவருண்டு. பிறருக்கு ஓர் உதவி தேவை எனில் கொடுப்பதுண்டு, அவர் கேட்டுக் கொடுப்பது, கேட்காமல் கொடுப்பது, கேட்க நினைக்குமுன் கொடுப்பது, கேட்கவேண்டுமென அறியுமுன் கொடுப்பது எனப் பல நிலைகளுண்டு. பிறர் கேட்க அறியுமுன் கொடுப்பதால் அவர் மலர்கிறார். அவர் மலர்வதால் தான் மலர்பவன் அதில் இன்பம் காண்பான். அந்த இன்பத்திற்காக மனிதன் செயல்படுவான். அதுவே அவன் கொள்கையானால் அவன் மலர்ந்த

நிலையிலிருப்பான். அவன் வாழ்வு சந்தோஷமாக இருக்கும். அவன் விட்டுக் கொடுப்பது தியாகமாகாது. தியாகம் என நினைக்கவும் தோன்றாது.

இது உலகத்திற்குப் புதிதன்று. அரிது. பிறருக்கு நாம் உபதேசமாகச் செய்வதன்று. நாமே பின்பற்றுவது. நம் வளர்ச்சி, மலர்ச்சியாகப் பின்பற்றுவதாகும். பள்ளியிலிருந்து வரும் குழந்தைக்கு இருக்கும் ஒரே இனிப்பைத் தாம் சாப்பிடாமல், கொடுப்பதைத் தாயார் தியாகம் என நினைப்பதில்லை. குழந்தை தாயார் தியாகம் செய்வதாக அறிவதில்லை. அதைச் சாப்பிடுவது குழந்தைக்கு இன்பம். குழந்தையின் இன்பத்தில் தாயார் காண்பதின்பம்.

நான்கு நண்பர்கள். ஒருவன் சுயநலமி. அடுத்தவன் மடசாம்பிராணி. ஒருவன் அதிகப்பிரசங்கி. பிறரை மட்டம் தட்டி பேசுபவன். பிறர் இனிக்கப் பழகும் குடும்பத்தில் பிறந்தவன் ஒருவன். அதிகப்பிரசங்கி வெளியூர் ஹாஸ்டல் தங்கிப் படித்தான். ஊரிலிருந்து லீவுக்கு வந்திருந்தான். மடசாம்பிராணியும் மற்றவனும் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். வந்தவுடன் தன் கல்லூரி வாழ்க்கையைப் பற்றிப் பேச ஆரம்பித்தான். கேட்பவனும் வேறோர் ஊரில் ஹாஸ்டலில் வாழ்பவன், அவனுக்கும் சொல்ல விஷயமிருக்கும் என்று அதிகப்பிரசங்கிக்குத் தோன்றவில்லை. மாலை 3 மணியிலிருந்து 51/2 வரை வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தான். சுயநலமி சென்னையில் கல்லூரியில் படிப்பவன். 51/2 மணிக்கு வந்தான். இரண்டு நிமிஷத்திற்கு மேல் அவனால் தாங்க முடியவில்லை, "டேய், என்னடா நினைத்திருக்கிறே. நீ பாட்டுக்கு பேசறே. நானும் ஹாஸ்டலிலிருந்து வர்ரேன். இவனும் ஹாஸ்டலில்தான் படிக்கிறான். போதும் உன் கதையை நிறுத்து. இவன் மடையன். அடுத்தவன் வாயில்லாப்பூச்சி. அவர்கள் வேண்டுமானாலும் கேட்கலாம். நான் கேட்கமாட்டேன்'' என்றான். 21/2 நிமிஷம் ஒருவருக்குத் தாங்காததை 21/2 மணி கேட்டு சந்தோஷப்பட மடசாம்பிராணியாக இருக்கவேண்டும் அல்லது இனிமையான சுபாவமுடையவராக இருக்கவேண்டும்.

*********

  1. அன்னையை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளம் மனிதன் தன் புனித எண்ணங்களையும், தான் போற்றும் பண்புகளையும் அர்த்தமற்றவை எனவும், தடை எனவும் உணருதலாகும். பிரியம், விஸ்வாசம், நேர்மை ஆகியவை சிறிய மனித எல்லைக்குள் இருக்கும் குணங்கள் என அறிவது அன்னையை நாம் நெருங்குவதாகும். மிக உயர்ந்த பண்புகளும் மனிதனை அன்னையை முழுவதும் அடைவதைத் தடுக்கும் என்பதே உண்மை என்றாலும், இன்றுள்ள மனிதன் தன் சிறு ஆசைகளை முழுவதும் திருப்தி செய்வதிலேயே முனைந்துள்ளான்.

உயர்ந்த பண்பும் உதவாது. சிறு ஆசைகட்கு இடமில்லை.

வாழ்வில் கெட்டது, நல்லது என்பவையுண்டு. கெட்டதை விடாமல் அன்னையை அணுக முடியாது. அன்னையை அணுகினால் கெட்டது கரையும். அன்னையை அணுகியபின் கெட்டதை வலியுறுத்தினால் பெரிய தண்டனை சீக்கிரம் கிடைக்கும். நம் வாழ்வில் கெட்டது குறைந்து, கரையும்பொழுது சிறிய நல்லதும், பெரிய நல்லதுமிருக்கும். நாளாவட்டத்தில் சிறிய நல்லவைகளும், ஏற்கனவே கெட்டது கரைந்ததுபோல் கரைய ஆரம்பித்து, உயர்ந்த நல்லது, புனிதமானவை மட்டும் நிற்கும். அன்னை என்பது மனத்தைத் தாண்டிய நிலைக்குரிய தெய்வம். சிருஷ்டியின் அமைப்பு.

உடல் - உணர்வு - மனம் (மனிதன் - முனிவன் - ரிஷி - யோகி - தெய்வம்) - சத்தியஜீவியம் - சச்சிதானந்தம் என்றுள்ளது. மனிதன் முதல் தெய்வம்வரை மனம் ஆட்சி செய்கிறது. இலட்சியஙகள், பண்புகள், உன்னத எண்ணங்கள் மனத்தைச் சார்ந்தவை. அன்னை சத்தியஜீவியத்தைச் சேர்ந்தவர். சத்தியஜீவியம் மனத்தைக் கடந்த நிலையிலுள்ளது. எனவே அன்னையை அடைய அல்லது ஏற்றுக் கொள்ள, மனத்தைக் கடக்க வேண்டும். அதாவது மனத்தால்

சிந்திப்பதை நிறுத்த வேண்டும். மனத்தின் குறைகளை (கெட்டவை) முதலில் நீக்கவேண்டும். பிறகு மனத்தின் உயர்வை (நல்லவை) நீக்க வேண்டும். உன்னத எண்ணங்கள், உயர்ந்த பண்புகள் மனத்தைச் சார்ந்தவை. அவற்றை நாம் கைவிட்ட பின்னரே மனத்தைக் கடக்க முடியும். மனத்தைக் கடந்தால்தான் அன்னையை அடையமுடியும்.

பிரியம், விஸ்வாசம், கற்பு, நேர்மை, நாணயம் ஆகியவற்றை எப்படி விடமுடியும் என்ற கேள்வி எழும்? மனத்தைக் கடந்து அன்னையை நாடும் அந்த அற்புதத் தருணத்தில் நம்மேல் பிரியமுள்ளவர், அல்லது நமக்கு எவர்மேல் பிரியமிருக்கிறதோ அவர் மூலம் தீயசக்திகள் நாம் அன்னையை அடைவதைத் தடுக்க முயலும். அருள் செயல்பட்டு ஆன்மீக அனுபவத்தைக் கொடுத்து மனத்தைக் கடந்து, அன்னையின் ஸ்பர்சத்தை அடையும் நேரம் அவர் வருவார். நாம் எவரையும் மறுக்க முடியும். இவரை மறுக்க முடியாது. பிரியத்திற்காக இவரை ஏற்றால் அன்னையின் அருள் விலகும். இவரை விட்டால், பிரியத்தை விடுவதாகும். அன்னையும் பிரியமும் எதிரெதிராக நின்றால் பிரியத்தைவிட்டு அன்னையை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாட்டில் ஒரு தலைவன் பெரிய இலட்சியத்தை ஏற்றால், அவனைத் தடுக்க எதிரான சக்திகள் அவன் நண்பர், குடும்பம், மூலமாக அவனை இலட்சியத்திலிருந்து தடுக்க முனைவர். தீயசக்திகள் கடைசி நேரத்தில் பிரியம், விஸ்வாசம், சத்தியம், கற்பு, நேர்மை ஆகியவற்றைப் பயன்படுத்தி நம்மை அன்னையிடமிருந்து தடுப்பார்கள். நாம் அன்னையை ஏற்று, புனித எண்ணங்களானாலும், அன்னையிடமிருந்து தடுப்பதால், அவற்றைக் கைவிட முன்வரவேண்டும். இது முடிவான நிலை. இன்று நாம் ஆசைகளை ழுவதும் திருப்தி செய்து கொள்ளும் நிலையிலிருக்கிறோம். இது முதல் நிலை. இங்கிருந்து நாம் உயர்ந்து முடிவான நிலைக்குப் போன பின்னரே அவற்றைக் கைவிடும் பிரச்சினை எழும்.

*******

  1. குழப்பம், சந்தேகம், பூர்த்தியாகாத ஆசை, வர்மம், அறிவுத்தாகம் ஆகியவை மௌனம் நிரந்தரமாவதைத் தடுக்கும். அவற்றை அனுபவித்துத் தீர்த்துவிட வேண்டும். அல்லது மன உறுதியால் விலக்கவேண்டும்.

அனுபவம் தீர்க்கும். உறுதி விலக்கும்.

மௌனசித்தி என்று பொதுவாக வழங்குவது எதனால் என்றால், மௌனமே இறைவன் என்று கருதுவதால், மௌனமும், சாந்தியும் இறைவனுக்குச் சமம் என்பது வழக்கு. இவையிரண்டும் இறைவனின் 12 அம்சங்களில் தலையானவை. எண்ணம் அற்ற நிலையில் மனம் சலனமற்றிருப்பதையே மௌனம் என்று வழக்கில் அறிவோம். மௌனம் பெரியது. செயலைத் தன்னுட்கொண்டது. சக்தியைத் தன்னுட்கொண்டது. ஆதலால் மௌனம் மிகப் பெரிய சித்தி. மௌனம் முக்கியமாக மனத்தில் குடி கொள்ளும். உயர்வான மௌனம் ஆன்மாவில் நிலைக்கும். மௌனம் உணர்விலும் நிலைப்பதுண்டு. உடலும் மௌனம் வந்து தங்கும். மனத்தில் தங்கும் மௌனத்தைவிட உணர்வின் மௌனம் வலிமையானது. சிறிய கம்பனியில் முதலாளிக்கு கார், மானேஜருக்கு ஸ்கூட்டர். பெரிய கம்பனியில் காரை மானேஜருக்குக் கொடுப்பார்கள். கம்பனி பெரிதானால், சிறிய ஆபீசருக்கும் பெரிய வசதியுண்டு. உணர்வு, மனத்தை விடச் சிறியது. மௌனம் சிறியதான உணர்வில் வந்து தங்க வேண்டுமானால், அவருடைய சித்தி மிகப் பெரியதாக இருக்கும். உடலுக்கே மௌனம் வந்தால் அவர் மகாத்மா, மகாபுருஷராகி விடுவார்.

எண்ணம் நின்ற பின் மௌனம் வரும். எண்ணம் நிற்க வேண்டுமானால், எண்ணம் தெளிவாக இருக்க வேண்டும். குழப்பமிருந்தால் தெளிவில்லை. குழப்பம் தெளிந்த பின்னரே எண்ணம் பளிங்குபோலிருக்கும். தெளிந்த எண்ணமே மௌனத்தை அனுமதிக்கும். குழப்பம் குறைந்தால் சில சமயங்களில் தெளிவும், சில சமயங்களில் தெளிவற்ற நிலையுமிருப்பது சந்தேகமாகும்.

சந்தேகம் தெளிவுக்கு எதிரி. ஆசை மனத்தை நேரடியாகச் சேர்ந்ததில்லை. ஆசை உணர்வைச் சார்ந்தது. உணர்வு ஆசையால் கிளறப்பட்டால் அது மனத்தை ஆட்டிப் படைக்கும். அதனால் மௌனம் தடையாகும். ஆசையை அழிக்கும் வழிகளில் இரண்டு, அதை அனுபவிப்பது, அல்லது மறுப்பது. நெடுநாள் அனுபவித்த ஆசை தானே பூர்த்தியாகும், (exhausts itself). அதுபோல் பிரயாண ஆசை பூர்த்தியாக 20, 30 வருஷங்களாகும். 10 வருஷத்தில் பூர்த்தியாவது குறைவு. இனிப்பு சாப்பிடுவது, மேடையில் பேசுவது, பணம் சேர்ப்பது, புகழடைவது போன்று ஆயிரம் ஆசைகளுண்டு. இவை ஒரு ஜென்மத்தில் பூர்த்தியாகும். ஆசையுள்ளவரை மனம் நிலைக்காது. மௌனம் சிந்திக்காது. அனுபவித்து பூர்த்தி செய்வது ஒரு முறை. மன உறுதியால் ஆசையை நிரந்தரமாக விலக்க முடியும். இது விரதம். விரதத்தை மேற்கொள்ள சிலரால் முடியும். அவருக்கு இம்முறை உதவும். வர்மம் ஆசையைவிடத் தாழ்ந்தது. மனத்தில் ஒருவர் மீது வர்மம் இருந்தால் மௌனம் சித்திக்கும் சமயம் அது எழுந்து மௌனத்தைக் கலைக்கும். அறிவுத் தாகம் அனைவருக்கும் இருப்பதில்லை. ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள ஆர்வம் எழுந்தால், அது புரியும்வரை மனத்தை அதிலிருந்து விலக்கமுடியாது. 90% புரிந்த பின்னும் மனம் அதே விஷயத்தை நாடும். முழுவதும் புரிந்த பின்னரே மனம் அதிலிருந்து விலகச் சம்மதிக்கும். மனிதனுடைய எந்தக் குறையும் மௌனத்தைத் தடுக்கும். சுறுசுறுப்புள்ள எந்த நிறைவும் மௌனத்தைத் தடுக்கும். மனம் எண்ணமற்று, சலனமற்று, ஆர்வமற்று, ஆசையினின்று விலகி நின்றால் மௌனம் எழும்.

*********

  1. சிறு வயதிலும் பெரும்பாலோர்க்கு ஆர்வமிருப்பதில்லை. உயர்ந்த ஆசையை இலட்சியம் எனப் பலர் கருதுகிறார்கள். இளமை தாண்டினால் பலருக்கு ஆசையும் இருப்பதில்லை. நடுத்தரவயது அடைந்தபின் மனம் அசை போடுவதை மட்டும் மேற்கொள்ளும். அது வளர்ந்து வயது முதிர்ந்தபின் மனிதனைப் பிடித்து உலுக்கும்.

ஆசை இலட்சியமாகாது. அசை போடும் மனம் பேயாய் உலுக்கும்.

உயர்ந்த அம்சங்கள் எதுவானாலும் சிலருக்கே அமையும். சிலர் எனில் 300 பேரான குடும்பத்தில் - குடும்பங்களின் தொகுதியில் - இரண்டு மூன்று பேர் அல்லது 4, 5 பேருக்கே அமையும். ஊரில் பெரிய அம்சம் உள்ளவர்களை விரல்விட்டு எண்ணலாம். 100 ஆசிரியர் உள்ள பள்ளியில் மாணவர்கள் விரும்பிப் போற்றும் ஆசிரியர்கள் ஓரிருவரே இருப்பார்கள். எந்தத் தொழிலும் இது உண்மை. அறிவு, தெளிவு, திறமை, அழகு, சாந்தம், பொறுமை, சாதுரியம், வெற்றிபெறும் திறமை, செல்வம், ஆரோக்கியம், உயரம், உடல் வலிமை, இனிமையான குரல், நாணயம், தைரியம், அஞ்சாநெஞ்சம், விஸ்வாசம், கற்புநெறி, மிருதுவான உடல், பளபளக்கும் முகம், ஆன்மீகத் தேஜஸ், அந்தஸ்து ஆகிய எதுவும் ஒரு சிலரே பெறுவர். சுறுசுறுப்பு அதைப் போன்றது. ஆங்கிலத்தில் dynamic என்ற சொல்லைத் தமிழில் சுறுசுறுப்பு என மொழிபெயர்க்கிறோம். அது active என்று பொருள்படும். உபரியான சக்தி திறமையாகத் தொடர்ந்து வெளிவருவது dynamism. ஒரு சொல்லால் சுறுசுறுப்பு என்றே குறிக்கலாம். சுறுசுறுப்பு இருந்தால் ஆர்வம் வரும். சுறுசுறுப்பானவர்கள் பலருடனிருக்கும்பொழுது இதைச் செய்யலாம், அதைச் செய்யலாம், எதையாவது செய்யலாம் என்று சொல்லியபடியிருப்பார்கள். "சும்மா இரு, எதையும் செய்ய வேண்டாம். ஏன் செய்யவேண்டும்''' என்பதே மற்றவர்கள் சொல்வதாகும். சிறுவயதில் சுறுசுறுப்பானவர்கள், வயதானபின் அதை இழந்து விடுவார்கள். சிறுவயதிலேயே சுறுசுறுப்பு இல்லை என்றால் ஆர்வம் எதற்கும் எழாது. அவர்களுக்கு ஆசையே இலட்சியமாகத் தெரியும். ஆசைப்பட்டு, அதைப் பூர்த்தி செய்யும் ஆர்வத்தை எழுப்பவும் முடியாத நிலை அவர்களுடைய மனநிலை. இளமை தாண்டியபின் எதிலும் ஆசைப்பட முடியாத அளவுக்குத் தெம்பில்லாதவருண்டு. இவர்களுக்கு

35, 40 வயதில் முதுமை வந்தது போலிருக்கும். வயதானபின் தெளிவில்லாமல் பேசுவதுண்டு (senility). 40 வயதிலும் தெளிவு குறைய ஆரம்பிக்கும். சிலருக்கு மறதி வரும். சிலர் சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்வார்கள். சிலர் பழங்கதையைப் பலமுறை சொல்வார்கள். சமூகத்திலும், வீட்டிலும் இவர்களுடன் பேச எவரும் வரமாட்டார்கள்.

இந்நிலையில் இவர்கள் மனம் தெரிந்ததை, செய்ததை, புரிந்ததைத் திரும்பத்திரும்பத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருக்கும். இதை occupation என்பார்கள். அதிகமானால் pre occupation என்பார்கள். அறிவின்றி, அவசியமின்றி, தெளிவின்றி, தேவையின்றி, மனம் ஓர் எண்ணத்தால் நிரம்புவதுண்டு (mind is occupied). இரவும் பகலும் அது நிலைத்திருந்தால் (ocuupation) மனத்தை விட்டகலாமலிருப்பதுண்டு. இது பிணமாகும் நிலைக்கு முன் நிலை. நடைப்பிணமாக மனமிருக்கிறது எனலாம். வயது முதிர்ந்தால் இது மனிதனைப் பிசாசுபோல் உலுக்கும். அறிவும், தெளிவும், சுறுசுறுப்புமுள்ளவர்க்கும் அடித்தளத்தில் (occupation) இது இருக்கும். மௌனம் சித்திக்க, தியானம் நிலைக்க, சாந்தி எழ, இது விலக வேண்டும். அந்த நேரம்வரையாவது இது விலகி நிற்கவேண்டும். இது விலகாமல் தியானமோ, மௌனமோ வாராது. இது நிரந்தரமாக விலகிய பின்தான் மௌனம் நிரந்தரமாகச் சித்திக்கும்.

*******

  1. அப்படிப்பட்ட மனிதனுக்கு ஆர்வம் உண்டாக்குவது இறந்தவனைப் பிழைக்க வைப்பது போன்றதாகும். வாழ்க்கை வாழ ஆர்வம் தேவையில்லை. நம்பிக்கை பொறுமை, நேர்மை, ஒருநிலைப்படுதல், பக்தி, ஆகியவை பட்டியல் வருவது ஆர்வம். சாதாரண மனிதன் வாழ்வில் இவையிருப்பதில்லை.

அசை போடும் மனிதன் ஜீவனற்றவன்.

வாழ்வின் சிறப்புகளில் பலவற்றையோ, ஒன்றையோ பெற்றவர் மிகக் குறைவு. சிறப்புகன் சாயல் பெற்றவரும் குறைவு. எந்த வகையான சிறப்புமில்லாதவரே அதிகம். அறிவில்லாதவனுக்கு அறிவை உற்பத்தி செய்வது, ஏழை செல்வனாவது, அழகில்லாதவர் அழகு பெறுவதில்லை. பெறமுடியாது என்பதில்லை. யாரோ ஒருவர் பெறுகிறார்கள். அதிலும் செல்வம் பெறலாம், அழகு பெறமுடியாது. புகழ் பெறலாம், அறிவு பெற முடியாது. ஆர்வம் அத்தகையது. பிறப்பிலிருக்க வேண்டும். பிறப்பில் இல்லாததை ஒருவர் உற்பத்தி செய்ய முடியாது என்பது வாழ்வு. ஆன்மாவோடு தொடர்பு கொண்டால் முடியும் என்பது அன்னை விளக்கம்.

கிராமங்கள், ஸ்தாபனங்கள், ஆபீஸ்கள், பல குடும்பங்கள் சேர்ந்து வாழுமிடங்கள், 80, 90 குடும்பம், நகரத்திலுள்ள கட்டிடங்கள், கல்லூரிகள், போன்ற இடங்களில் அதற்குரிய திறமையுடையவர் இருப்பார்கள். திறமையில்லாதவர் எப்படியாவது அந்த இடத்திற்கு வந்திருப்பார்கள். பெரிய அம்சங்களுக்கும், இதுபோன்ற இடங்களுக்கும் தொலைதூரம். ஏதோ ஒருவர்க்கிருப்பதுண்டு. ஒரு கல்லூரியில் ஹாஸ்டல் உள்ள 150 மாணவர்களில் ஒருவர் கூட முதல் வகுப்பிலிருந்து தவறாது பாஸ் செய்தவரில்லை என்று கணக்கெடுத்தார்கள்.

ஒரு கிராமத்தில் நாணயத்தில் சிறந்தவர்கள் யார் என்று புதியவர் கேட்டதற்குப் பதிலாக, ஜெயிலுக்குப் போகாதவன் எவனுமில்லை என்ற பதில் வந்தது.

40, 50 பட்டதாரிகள் உள்ள இடத்தில் உங்களுக்குப் பிரியமான ஆங்கில எழுத்தாளர் யார் என்ற பொழுது, பட்டம் பெற்றபின் அங்குள்ள எவரும் ஒரேயொரு ஆங்கிலப்புத்தகம்கூடப் படிக்கவில்லை எனப் பதில் வந்தது.

உடலில் முக்கியமான வியாதி எதுவுமில்லை என்று அதுபோன்ற கூட்டத்தில் சொல்பவர் குறைவு.

நம்பிக்கை, பொறுமை, நேர்மை, பக்தி ஆகியவை ஆர்வத்தைப் போல் மேற்சொன்னவற்றைவிட அதிக உயர்வு பெற்றவை இவை. இவையில்லாமலிருப்பது ஆச்சரியமில்லை. உலக மக்களில் முக்கால் பங்கு எதற்கும் இலாயக்கில்லாதவர் என்கிறார் அன்னை. இதுபோன்ற மனிதனும் அன்னையை ஏற்றுக்கொண்டு, ஒரு பெரிய அம்சம் வேண்டும் என பிரார்த்தனை செய்தால் ஆர்வத்திற்கேற்ற பலனிருக்கும். அப்படியின்றி அவனுக்கு ஆர்வம் வர முயல்வது கறுப்பு நாயை வெள்ளையாக்குவதுபோலாகும். இறந்தவனைப் பிழைக்கவைக்க ஏற்கும் முயற்சி போன்றது அது. பிணத்தை நடக்கவைக்க முடியாது. முடிந்தால் அது நடைப்பிணமாகும். ஆர்வம் என்பது சக்தியும் தெம்பும் ஒரு குறிக்கோளை நாடி அதிவேகத்தில் எழுந்து, இலக்கை எட்டும்வரை நிற்காமல் ஓடுவதாகும். தவறான காரியங்கட்கு ஆர்வமிருக்கும். நல்ல காரியங்களுக்கு ஆர்வமிருக்காது. நல்லதோ, கெட்டதோ, ஆர்வமேயில்லாதவரை என்ன செய்யமுடியும்? ஆர்வம் என இருந்தால், தவற்றை நல்லதாக மாற்ற முனையலாம். ஆர்வமேயில்லாதவரை எழுப்புவது, ஆண்டவனால் முடியும். மனித முயற்சிக்குரியதன்று அது.

*********

  1. நாலுபேர் வெட்கப்படக்கூடிய காரியத்தை, வெட்கத்தை மீறிச் செய்பவருண்டு. வெட்கத்தை மீறும் அளவுக்கு அக்காரியத்தை அனுபவிப்பதில் சந்தோஷமும், மனதிற்குள் பெருமையும், ஏற்படுவதால், மனிதன் அதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகிறான். இது சிற்றின்பம். தெய்வத்தை மனம் நாடும்பொழுது, அதுபோல் வெட்கத்தை மீறி மனிதன் செயல்படுவதுண்டு. அந்த வெட்கமே அவனுக்குப் பெருமையளிக்கக் கூடியதாக இருக்கும். வெட்கத்தை, ஆனந்தமான பெருமையாக்கும் திறன் பக்தியின் உச்சகட்டத்தில் ஏற்படும்.

மீறி எழும் பக்தி வெட்கத்தை மீறி வரும்.

அளவோடு அனுபவிப்பது இன்பமாகாது. ஆனந்தம் என்பதற்கு ஆன்மீகவிளக்கம் அளவில்லாதது. அளவு, வரையறை,லிமிட் இருந்தால் அங்குச் சந்தோஷமில்லை. அளவை எடுத்தபின் எழுவது சந்தோஷம். சுதந்திரம் சந்தோஷத்தைக் கொடுக்கிறது என்பது ஆன்மீக விளக்கம். இது பேரின்பத்திற்குப் பொருந்துவதுபோல் சிற்றின்பத்திற்கும் பொருந்தும். மனிதன் நாகரீகம் பெற்று முதல் பெற்ற உணர்வு வெட்கம். வெட்கத்தை மீறி என்றால், சமூகத்தை மீறி என்று பொருள். மனிதனுக்குச் சமூகமே அளவை ஏற்படுத்துவது. சமூகத்தை மீறினால் அளவை மீறுவதாகும். சீட்டாடுபவன், குடிப்பவன், பெண்களை நாடுபவன் சிற்றின்பத்தை அனுபவிக்கின்றான். அவன் நாலு பேர் என்ன சொல்வார்கள் என்று வெட்கப்படும் நிலையிலில்லை. அவனுக்கு சமூகமோ, வெட்கமோ பொருட்டாக இல்லை. தான் பெறும் இன்பமே கண்ணுக்குத் தெரிகிறது. இதை நாம் தவறாகக் கருதுகிறோம்.

தெய்வத்தை நாடும்பொழுது சமூகத்திலுள்ளவன் அளவோடு நாடுவான். அதிகமாகச் சாமி கும்பிடுவது நல்லதன்று. குடும்பத்திற்கு ஆகாது என்பார்கள். அவனுக்கு ஸ்தோத்திரம், பூஜை, மந்திரம், கோயில், உத்சவம், கீதைப்பிரசங்கம், இராமாயணம், பாரதம் படிப்பது போன்றவை போதும். அவை எல்லாம் ஒரு பொழுதும் அளவை மீறாது. தவம் காட்டிற்குரியது. அளவை மீறியபின் ஆரம்பிக்க முடியும். பக்தி ஆரம்பத்திலேயே எழுச்சியுடையது. அளவை மீறியபின்னரே அது பக்திக்குரிய இலட்சணத்தைப் பெறுகிறது.

இறைவனைப் பெண்ணாக அனுபவிக்கும்வரை, இறைவனை அனுபவித்ததாகாது, நாமே பெண்ணாக மாறி இறைவனை அனுபவிப்பதே அதைவிட மேல் என பகவான் கூறும் கருத்துகள்

வேதத்தின் கருத்துகளாகும். (commiting adultry with God ) இறைவனைச் சோரத்தில் சந்திப்பது என்பது வேதத்தின் சொல்.

இராமலிங்க சுவாமி இறைவனை துதித்த பாடல்களில் தாம் பெண்ணாகி அனுபவித்ததைப் பாடல்களாக எழுதியுள்ளார். கணவன் மனைவியைத் தேடி இரவில் வருவான். என் கணவர் பகலிலேயே என்னை நாடி வருகிறார் என்று பெருமிதத்துடன் பாடுகிறார். வெட்கத்தை விடுதல் எனில் அளவைக் கடத்தல் எனப் பொருள். ஆனந்தம் அளவைக் கடந்தது. பிறர் வெட்கப்படக்கூடியதற்கு பக்தன் பெருமைப்படுவதே உயர்ந்த பக்தி. மீராவின் பக்தியும், ஆண்டான் பக்தியும், இராமலிங்க சுவாமியின் பக்தியும், நாயன்மார், ஆழ்வார் பக்தியும் அளவைக் கடந்தன.

சமூகம் என்பது ஓர் இராஜ்யம். பக்தன் உயர்ந்த எல்லையைக் கடந்து சமூகத்தைவிட்டு வெயே போய் பரம்பொருளோடு இன்பம் துய்க்கின்றான். குடிகாரன் சமூகத்தின் தாழ்ந்த எல்லையைத் தாண்டி சிற்றின்பத்தில் திளைக்கின்றான். இருவரும் எல்லையைத் தாண்டியவர்கள். எல்லைக்குள்ளிருப்பது (pleasure) சந்தோஷம். எல்லையைக் கடந்த நிலையிலிருப்பது ஆனந்தம் (bliss). ஆனந்தத்தை உயர்வாகவோ, தாழ்வாகவோ மனிதன் நாடியபடியிருக்கிறான்.

*********



book | by Dr. Radut