Skip to Content

சிருஷ்டியின் அமைப்பும், நூலின் சாராம்சமும்

Life Divineஇல் சிருஷ்டியின் அமைப்பும்,

 

நூலின் சாராம்சமும்

மனிதன் இறைவன். தான் இறைவன் என்பதை மனிதன் மறந்துவிட்டான். மீண்டும் அதை நினைவுபடுத்திக் கொண்டு இறைவனாக வேண்டும் என்பது நூலின் சாராம்சம். இறைவனே மனிதன். தன்னை மறந்துவிட்ட இறைவன் மீண்டும் தன்னை நினைவுபடுத்திக் கொள்வது பரிணாமம் என்று கூறப்படுகிறது.

புதியதாக பகவான் ஸ்ரீ அரவிந்தரை அறிந்தவர்கள், பகவான் என்ன சொல்கிறார் என்று கேட்டால், "மனிதனே சிருஷ்டிக்கு முடிவல்ல. மனிதனுக்கு அடுத்த நிலை சத்திய ஜீவன் பிறப்பது. அது நடக்க மனித குலம் சத்திய ஜீவியத்தை எட்ட வேண்டும். குறைந்தபட்சம் 12 யோகிகள் அந்த சித்தி பெற வேண்டும். அது நடந்தால் சத்திய ஜீவியம் புவிக்கு வரும். மனிதன் சத்திய ஜீவனாவான் என்று விளக்கம் அளிப்பார்கள்.

சிருஷ்டி எப்படி ஏற்பட்டது என்பதை இந்தியாவிலோ, மற்ற நாடுகளிலோ, இதுவரை எவரும் அறியவில்லை. ஸ்ரீ அரவிந்தர் Life Divine இல் அதற்குரிய விளக்கங்களை எழுதியுள்ளார் என்றால் பொருந்தும். நூலை ஒருவாறு சுருக்கமாகக் கூறவேண்டும் என்று கேட்டால், கீழ்க்கண்டவைகள் தக்க பதிலாக அமையும் :

1. பரம்பொருளை சச்சிதானந்தம் என்கிறோம்.

2. சச்சிதானந்தம் தன்னை உலகமாக மாற்றிக் கொண்டது.

3. இதை சிருஷ்டி என்கிறோம்.

4. சிருஷ்டிக்கு அடுத்த நிலை பரிணாமம்.

5. பிரம்மம் சச்சிதானந்தமாகி, உலகமாயிற்று.

6. உலகம் பரிணாமத்தால் மீண்டும் சச்சிதானந்தமாகி பிரம்மமாக வேண்டும்.

7. இது இறைவனின் லீலை. ஆனந்தத்தைத் தேடி இறைவன் மேற்கொண்ட லீலை இது.

8. ஞானமான இறைவன் அஞ்ஞானமான இருளாக மாறி, அதனுள் மறைந்து, மறைந்ததை மறந்து, மீண்டும் நினைவு வந்து, அஞ்ஞானத்திலிருந்து மீள்வதில் ஆனந்தம் காண்கிறான்.

9. ஒளிவது சிருஷ்டி.

10. வெளிவருவது பரிணாமம்.

இது தத்துவம். வாழ்க்கைக்கு முக்கியமானது ஏதாவது உண்டா எனக் கேட்பவருண்டு. கர்மத்திலிருந்து விடுபட்டு தோல்வி, துன்பமற்ற வாழ்க்கையை ஸ்ரீ அரவிந்தம் தரும் எனலாம். Life Divine தத்துவமான நூல், இங்கு யோகப் பயிற்சியோ, வாழ்க்கை நெறியோ விளக்கப்படவில்லை. அவற்றை மற்ற நூல்களில் காணலாம்.

Life Divineக்கு விசேஷமாகக் கூறப்பட வேண்டியது ஒன்றுண்டு. உலகம் இறைவனை அறியும், வாழ்வை அறியும், இறைவன் எப்படி வாழ்வை சிருஷ்டித்தான் என்பதை அறியாது. Life Divine இறைவன் தன்னை தன்னுள் மறைத்து வாழ்வானான் என்ற விளக்கம் அளிக்கிறது. அதுவே நூலின் விசேஷம்.

இறைவன் தன்னுள் தானே மறைந்த மார்க்கம் சிருஷ்டி.

அதுவே நூலின் முதற் பகுதி.

முதற் புத்தகத்தின் அமைப்பு

  1. சச்சிதானந்தத்தின் விளக்கம்.

சத் என்பது சக்தி.

சித் என்பது ஜீவனுள்ள சக்தி.

ஆனந்தம் சத், சித்திற்கு இயல்பானது.

சச்சிதானந்தம் என்ற அகத்தின் புறம் சத்திய ஜீவியம்.

  1. சிருஷ்டிக்கர்த்தா

உலகை சிருஷ்டித்தது சத்திய ஜீவியம், மனம் இல்லை.

  1. மனம் பிறந்த வரலாறு

சத்திய ஜீவியம் காலத்திலும், காலத்தைக் கடந்த நிலையுமாகப் பிரிந்தபொழுது மனம் இடையே பிறந்தது.

  1. வாழ்வு

மனத்தின் ஞானம் உறுதியின்மேல் செயல்பட்டு சக்தி பிறந்து சக்திமயமான லோகமாக எழுந்தது வாழ்வு.

  1. ஜடம்

வாழ்வு உற்பத்தியாக ஞானம் செயல்பட்டபொழுது ஓரளவு தன்னை இழந்தது. தொடர்ந்து செயல்பட்டால், முழுவதும் இழக்கப்படும். அந்நிலை ஜடம்.

இவ்விதமாக சச்சிதானந்தம் உலகமாயிற்று. இறைவன் ஒளிந்ததை பகவான் அஞ்ஞானத்தை ரசிக்க இறைவன் ஒளிந்து கொண்டான் என்கிறார். ஒளிந்து கொண்ட இறைவன் அஞ்ஞானமானான். அஞ்ஞானத்துள் ஞானம் மறைந்துள்ளது. இரண்டாம் புத்தகத்தில் ஞானம் அஞ்ஞானத்திலிருந்து வெளிவந்ததை முதற் பகுதியிலும், வெளிவந்த ஞானம் பரிணாமத்தால் வளர்ந்து ஆன்மாவாகி, சச்சிதானந்தத்தை அடைந்து, தன் பிறப்பிடமான பிரம்மத்தை அடைந்து சிருஷ்டி, பரிணாமம் என்ற யாத்திரை பூர்த்தியாகிறது.

நூல் இரு புத்தகங்களுண்டு. இரண்டாம் புத்தகம் இரு பகுதிகளானது. முதற்புத்தகம் சிருஷ்டி. இரண்டாம் புத்தகம் பரிணாமம். இரண்டாம் புத்தகத்தில் முதற் பகுதி அஞ்ஞானம், ஞானமாக மாறுவது. இரண்டாம் பகுதி ஞானம் பரிணாமத்தால் வளர்ந்து ஆன்மாவாகி, பிரம்மமாவது.

புத்தகத்தைப் பல பகுதிகளாகப் பிரித்துக் கூறலாம்.

  1. முதற் புத்தகம் 9, 10, 11, 12 அத்தியாயங்கள் சச்சிதானந்தம்.

14, 15, 16 அத்தியாயங்கள் சத்திய ஜீவியம். 18 மனம்

19, 20, 21,22 வாழ்வு. 1ம் அத்தியாயம் முரண்பாடு

23 சைத்திய புருஷன் 2, 3 அத்தியாயம் ஜடம், ஆன்மா

24, 25 ஜடம் 4 பரம்பொருள்

26, 27, 28 பரிணாமம் 5, 6 மனிதன், பிரபஞ்சம்

13 மாயை 7 அகந்தை

17 தெய்வீக ஆன்மா 8 வேதாந்த ஞானம்

 

2. இரண்டாம் புத்தகம் முதற் பகுதி

முதல் அத்தியாயம் சிருஷ்டி

இரண்டாம், மூன்றாம் அத்தியாயங்கள் பூரணமான பிரம்மம்

4ம் அத்தியாயம் தீமை என்பதில்லை

5, 6 அத்தியாயங்கள் மாயை

7,8,9,10 ஞானம்

11,12,13 அஞ்ஞானம்

14 தீமை

 

3. இரண்டாம் புத்தகம் இரண்டாம் பகுதி.

1ம் அத்தியாயம் பிரம்மம்

2ம் அத்தியாயம் வாழ்வு

3, 4 அத்தியாயங்கள் இறைவன்

5ம் அத்தியாயம் அஞ்ஞானம் ஞானமாவது.

6,7,8 புனர்ஜன்மம்

9,10 மனிதன் பிறந்து ஆன்மாவானது.

11 திருவுருமாற்றம்.

12 சத்யாரோகணம்

13 சத்திய ஜீவன்

14 தெய்வீக வாழ்வு

இந்த 56 அத்தியாயங்களையும் சுருக்கமாகப் பின்வருமாறு கூறலாம். ஒன்பதாம் அத்தியாயத்தில் சச்சிதானந்தம் உலகமாயிற்று என்று கூறுமுன் ஸ்ரீ அரவிந்தர் சிருஷ்டியின் முக்கிய அம்சமான முரண்பாடு உடன்பாட்டை 8 அத்தியாயங்களில் விளக்குகிறார்.

  • பிரம்மம் ஜடமாக மாறப் பயன்படுத்திய உபாயங்களில் ஒன்று முரண்பாடு.
  • ஒன்றை எதிரான இரண்டாகப் பிரித்து அவை ஒன்றோடொன்று மோதி உடன்பாட்டைக் காணுவது சிருஷ்டியின் இரகஸ்யம்.
  • முதல் அத்தியாயம் மனிதனில் உள்ள முரண்பாடுகளைக் குறிக்கிறது.
  • உடலுக்கும் உயிருக்கும் உள்ள முரண்பாடு, உயிருக்கும் மனத்திற்கும் உள்ள முரண்பாடுகள் விளக்கப்படுகின்றன.
  • உயிருக்கும் மனத்திற்கும் உள்ள முரண்பாடு உடன்பாடானதால் விஞ்ஞானம் உற்பத்தியாயிற்று என்று கூறுகிறார்.
  • மனத்திற்கும் சத்திய ஜீவியத்திற்கும் உள்ள முரண்பாடு உடன்பாடானால் சத்திய ஜீவன் பிறப்பான் என்பது முதல் அத்தியாயம்.

இரண்டாம் அத்தியாயம் ஜடமும் ஆன்மாவும் ஒன்றே என்பது. மூன்றாம் அத்தியாயம் ஆன்மாவும், ஜடமும் ஒன்றே என்பதாகும். நான்காம் அத்தியாயத்தில், பரம்பொருள் உலகமாயிற்று என்கிறார். 5ஆம் அத்தியாயத்தில்,

  • பரமாத்மாவும், பாதாளமும் மனிதன் காணும் முரண்பாடு.
  • மனிதனே அவற்றை இணைக்க முடியும்.
  • அங்கு உடன்பாடு காண்பது அவன் கடமை என்கிறார்.
  • 5ஆம் அத்தியாயம் பிரபஞ்சம், மனிதன் என்ற முரண்பாட்டைக் கூறுகிறது.
  • பிரபஞ்சம் தன்னை மனிதனில் பூர்த்தி செய்யும்.
  • மனிதன் தன்னைப் பிரபஞ்சத்தில் பூர்த்தி செய்கிறான் என்பவை 6ஆம் அத்தியாயத்தின் கருத்து.

7ஆம் அத்தியாயம் சிருஷ்டிக்கேயுரிய முரண்பாடான அகந்தை, சச்சிதானந்தத்தைக் குறிக்கிறது. 8ஆம் அத்தியாயம் வேதாந்த ஞானம்.

  • பரமாத்மாவுக்கும், பாதாளத்திற்கும் இடையேயுள்ள மனிதன் புலனை இழந்தால் ஞானம் பெற்று இவற்றை இணைத்து பரமனை அறிவான். அதுவே பிரம்மம், அதுவே உலகம் என்பது வேதாந்தம்.
  • இதைக் கண்ட வேதாந்தம் பாதாளத்தை மனிதனால் எட்ட முடியாது என்பதால் பரமாத்மாவை நாடி மோட்சம் பெற முனைந்தது.

9,10,11,12 அத்தியாயங்கள் சச்சிதானந்தத்தைக் கூறுகின்றன. 13ஆம் அத்தியாயம் மாயை. மாயை என்பது இல்லாதது இல்லை, சிருஷ்டியின் கருவி என்பது பகவான் விளக்கம். 14,15,16 அத்தியாயங்கள் சத்திய ஜீவியம் எப்படி சிருஷ்டித்தது, இறைவன், ஜீவாத்மா, மனிதன் என்பதை எப்படி சத்தியஜீவியத்தின் நிலைகள் எனக் கூறுகின்றன.

17ஆம் அத்தியாயம் தெய்வீக ஆன்மா . தெய்வீக வாழ்வு உண்டென்றால் அதற்குள்ள ஆன்மா தெய்வீக ஆன்மாவாகும் (Divine Soul).

  • தெய்வீக ஆன்மா சச்சிதானந்தத்துள் உறைகிறது.
  • இது பிரம்மத்துடன் தொடர்புள்ளது.
  • இது சத்திய ஜீவிய வாழ்வின் மூன்று அம்சங்களையுடையது.
  • அஞ்ஞானத்தின் கறைபடாதது.
  • பரமாத்மாவுடனும், ஜீவாத்மாவுடனும் தொடர்புள்ளது.
  • Human Soul மனித ஆன்மா அஞ்ஞானத்துள் உள்ளது.
  • மனித ஆன்மா அகந்தையால் கவரப்பட்டுள்ளது.
  • மனத்தினின்றும், அகந்தையினின்றும் விடுபட்டு மனித ஆன்மா தெய்வீக ஆன்மாவாக வேண்டும்.

மனித வாழ்வு, தெய்வீக வாழ்வாக மாற மனித ஆன்மா தெய்வீக ஆன்மாவாக வேண்டும் என்பதால் இந்த அத்தியாயத்திற்கு முக்கியத்துவம் உண்டு. 18ஆம் அத்தியாயம் மனமும் சத்திய ஜீவியமும் என்ற தலைப்புடையது. சிருஷ்டியில் மனம், வாழ்வு, ஜடத்தில் அஞ்ஞானம் என்பதில்லை. சத்திய ஜீவியத்தில் பிறந்த மனம், தன் ஆதியை மறந்து, தன்னை தன் செயலிலிழந்து, மனத்தோடு ஐக்கியமாகி, வாழ்வோடு ஐக்கியமாகி, முடிவாக உடலோடும் ஐக்கியமாவதால் அஞ்ஞானத்தை உற்பத்தி செய்தது என்பதைக் கூறுவது இந்த அத்தியாயம்.

19,20,21 என்பவை வாழ்வை விவரிப்பவை. அவற்றினுள்ள முக்கியக் கருத்துகள்,

  • வாழ்வை மனம் உற்பத்தி செய்கிறது.
  • பிரபஞ்சம் அழிந்தாலும் அழியாதது வாழ்வு.
  • உடல் உணர்வை மனத்திற்குக் கொண்டு போய் எண்ணமாக மாற்றி, எண்ணத்தின் உதவியால் மனத்தை ஆட்சி செய்ய வைப்பது வாழ்வு. உடல் மனத்தின் ஆதிக்கத்துள் இப்படி வருகிறது.
  • மரணம் வாழ்வை நித்தியமாக்குகிறது.
  • மரணம், ஆசை, இயலாமை ஆகியவை முயன்று பாடுபட்டு போரிட்டு சைத்திய புருஷனை மனத்தில் உற்பத்தி செய்கின்றன.
  • ஜீவியமும், சக்தியும் பிரிந்துள்ளவற்றை வாழ்வு பரிணாமத்தால் இணைக்க பிரபஞ்சவாழ்வாக வேண்டும்.

23ஆம் அத்தியாயம் சைத்திய புருஷன். இது ஸ்ரீ அரவிந்தருக்கே உரிய கருத்து. சைத்திய புருஷன் என்பது வளரும் ஆன்மா. ஆன்மாவுக்கு ஆதி, அந்தம், மாற்றம், வளர்ச்சியில்லை என்பது மரபு. காலத்தைக் கடந்த நிலையினுள்ள ஆன்மா அது. காலத்துள் ஆன்மா இருப்பது உபநிஷதம் அறிந்தாலும், அவர்கள் அதை தங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளவில்லை.

ஸ்ரீ அரவிந்தம் வாழ்வுக்குரிய ஆன்மாவைக் கணக்கில் சேர்த்துக் கொண்டதுடன் அதுவே (Being of the Becoming) பரிணாம வளர்ச்சி பெறும் ஆன்மா என்றார். இதன் சிறப்பு,

  • உலகம், வாழ்வு, சிருஷ்டி, பிரம்மம் ஆகிய அனைத்தும் முழுமையானவை என்பது இக்கொள்கை.
  • வாழ்வு இயற்கையால் வளர்கிறது.
  • வாழ்வின் வளர்ச்சியின் சாராம்சத்தை சேகரிப்பது சைத்திய புருஷன்.
  • ஸ்ரீ அரவிந்தரின் யோகமான ஆன்மீகப் பரிணாம யோகத்திற்குரிய ஆன்மா சைத்திய புருஷன். இது வளர்ந்து ஈஸ்வரனாகவும், சத்திய ஜீவனாகவும் மாறுகிறது.
  • இதன் இருப்பிடம் அடிமனக்குகை.

24,25ஆம் அத்தியாயங்கள் ஜடத்தைப் பற்றியவை. ஜடம் உற்பத்தியான வகையை பல வகையாக விளக்கலாம். ஆன்மாவை மனம் புலனால் காண்பதால் ஜடம் உற்பத்தியாகிறது என்று இங்குக் கூறுகிறார். 26,27 அத்தியாயங்கள் பரிணாமத்தைப் பற்றியவை. முக்கிய கருத்துகள்,

  • சத், சித், ஆனந்தம், சத்திய ஜீவியம் சிருஷ்டியில் ஜடம், வாழ்வு, சைத்திய புருஷன், மனம் என மாறுகின்றன.
  • வேதம் 7 லோகங்களைக் கூறி அவற்றை 8 அல்லது 12 ஆகவும் கூறலாம் என்கிறது. நாம் 8 எனக் கொள்வோம்.
  • 8 தத்துவங்கள் பொதிந்திருந்தால் ஒரு சமயம் ஒரே தத்துவம் மட்டும் செயல்படுவதால், மற்ற 7 தத்துவங்கள் பரிணாமத்தால் வெளிவரவேண்டும்.
  • 8 லோகங்களும் ஒரே வகையான பொருளாலானதால் பரிணாமம் சாத்தியமாகிறது.

28ஆம் அத்தியாயம் சத்திய ஜீவியம், மனம், தெய்வீக மனத்தின் மாயை என்ற தலைப்புடையது. 1914 முதல் 1920 வரை ஆர்யா பத்திரிகையில் ஸ்ரீ அரவிந்தர் எழுதியபொழுது இவ்வத்தியாயம் எழுதப்படவில்லை. 1940இல் Life Divine புத்தகமாக வெளிவந்தபொழுது எழுதப்பட்ட 3 அத்தியாயங்களில் இதுவும் ஒன்று. இங்கு ரிஷி மனம், முனிவர் மனம், யோகி மனம், தெய்வ மனம் விவரிக்கப்படுகின்றன. இதுவரை சத்திய ஜீவன் பிறப்பான் என்ற பகவான் இந்த அத்தியாயத்தில், சத்திய ஜீவன் பிறப்பது நிச்சயம். இது தவிர்க்க முடியாதது,

என்று கூறுகிறார். சத்திய ஜீவியம் ஜடத்துள்ளிருப்பதால், உள்ளே மறைந்துள்ளது வெளிவர வேண்டியது அவசியம் என்கிறார்.

இரண்டாம் புத்தகம் முதற் பகுதி உலகில் தீமையை இறைவன் படைக்கவில்லை. அஞ்ஞானமே தீமை எனக் கருதப்படுகிறது. அஞ்ஞானத்தால் மாறுபட்டு செயல்பட ஆரம்பித்து குதர்க்கமான சிக்கலாகிய செயல் நாம் தீமை என அறிவது. ஆனந்தத்திற்காக சிருஷ்டி ஏற்பட்டது. இங்கு வலி, துன்பம், தீமை என்பவையில்லை. அகந்தை ஆண்டவனின்று பிரிந்து நிற்பதால், பிரிந்துள்ள அகந்தை மீண்டும் ஆண்டவனுடன் சேரும்பொழுது, ஏற்படும் உணர்வு வலி, துன்பம், அகந்தையுள்ளிருந்தாலும், அகந்தையை வலியுறுத்தாவிட்டால் துன்பமில்லை என்பது இரண்டாம் புத்தகத்தில் 14ஆம் அத்தியாயம் கூறுவது.

13ஆம் அத்தியாயத்தில் தீமையெனக் கருதப்படும் அஞ்ஞானம் உற்பத்தியானதை விவரிக்கின்றார். அஞ்ஞானம் மேல் மனத்தில் பூரணம் பெறுகிறது. அஞ்ஞானம் சிருஷ்டியின் சிகரம், மகுடம் என்கிறார். இதற்கு முன் அத்தியாயமான 12ஆம் அத்தியாயம் சத்திய ஜீவியத்தினின்று மனம் பிரிந்ததே அஞ்ஞானத்தின் ஆரம்பம் என்று கூறுகிறது. 11ஆம் அத்தியாயம் நால்வகை ஞானத்தைக் கூறுகிறது. அவை,

  1. பரமாத்மாவை அறியும் ஐக்கியம்.
  2. யோகி அறியும் ஞானம்.
  3. அடிமனம் அறியும் பரந்த உலக ஞானம்.
  4. மேல் மனம் அறியும் அகந்தையின் ஞானம்.

10ஆம் அத்தியாயம் ஏழுவகை அஞ்ஞானத்தையும், அவை உறையும் லோகங்களையும், அவை ஏற்பட்ட வகைகளையும்

கூறுகிறது. 8ஆம், 9ஆம் அத்தியாயங்கள் நினைவைப் பற்றியவை. நினைவு காலத்திற்குரியது. காலத்தைக் கடந்தும், காலத்துள் கடந்த நிலையை அறிந்துமே பிரம்மத்தை அறிய முடியும்.

அறியாமையின் ஜீவியம் ஆத்மானுபவம்

பெறுவதால் அகந்தை உருவாகிறது

என்பதும், அகந்தை செயல்பட ஞாபகம் அவசியம் என்பதும் இந்த அத்தியாயம். 7ஆம் அத்தியாயம் ஞானமும் அஞ்ஞானமும் எனப்படும். வேதம் இவற்றை சித்தி, அசித்தி எனவும், உபநிஷதம் வித்யா, அவித்யா எனவும் கூறியபொழுது ஞானமும், அஞ்ஞானமும் இவ்விளக்கங்களால் பிரிக்கப்பட்டன. பிரிக்கப்பட்ட நிலைகள் முழுமையைக் கூற முடியாது.

அஞ்ஞானம் ஞானத்திலிருந்து உற்பத்தியாயிற்று.

திருவுருமாற்றத்தால் மீண்டும் ஞானமாக வேண்டும்

என்பவை இந்த அத்தியாயத்திற்குரிய கருத்துகள். 5ஆம், 6ஆம் அத்தியாயங்கள் மாயையைப் பற்றியவை. மாயை என்பதில்லை. உண்மையில் மாயை என்பது அஞ்ஞானமே எனக் கூறுகிறார். இவ்விரு அத்தியாயங்களும் ஆர்யாவுக்கு எழுதப்படவில்லை. 1940இல் எழுதப்பட்டன. மீதியுள்ள 4 அத்தியாயங்களில் 2ஆம் 3ஆம் அத்தியாயங்கள் பிரம்மம் முழுமையானது எனவும்,

  • பிரம்மம் என்றும், எப்பொழுதும், எங்கும் முழுமையானது, பார்வை நம்முடையது. பிரிவினை பார்வையிலுள்ளது. பிரம்மத்திலில்லை.
  • ஆத்மாவான அகந்தை விழிப்புப் பெற்றால் தன்னைப் புருஷனாகவும், உலகத்து ஆத்மாவாகவும் அறியும்.
  • புறத்திலுள்ள உலகை அகத்துள் கண்டால், அகத்துள் காணும் ஆத்மாவின் மையம் பரமாத்மா எனக் கூறுகிறார்.

4ஆம் அத்தியாயத்தில் தீமை இறைவனால் படைக்கப் படவில்லை என்பதைக் கூறுகிறார். முதல் அத்தியாயம் பிரபஞ்ச சிருஷ்டி, பிரம்ம சிருஷ்டி என்பது. இந்த அத்தியாயம் விஞ்ஞானிக்கும், பகுத்தறிவுவாதிக்கும் பதில் அளிப்பதுடன் உலகை மனம் சிருஷ்டிக்கவில்லை, சிருஷ்டித்தது சத்திய ஜீவியம் என்று

கூறுகிறார். சத்திய ஜீவியம் சச்சிதானந்தத்தின் பகுதி. அது பிரம்மத்தின் பகுதி என்பதால், உலகை சிருஷ்டித்தது பிரம்மம் என்று முடிக்கிறார்.

இரண்டாம் புத்தகம் இரண்டாம் பகுதி

இந்தப் பகுதி பிரம்மம், வாழ்வு, ஞானம், மறுபிறப்பு, மனிதன் சத்திய ஜீவன், திருவுருமாற்றம், தெய்வீக வாழ்வு ஆகியவற்றைக் கூறுகிறது.

1. ஜீவாத்மாவோ, பரமாத்மாவோ முடிவில்லை. இரண்டையும் உட்கொண்ட பிரம்மமே சத்தியம் என்பது முதல் அத்தியாயம்.

2. வாழ்வைப் பற்றிய தத்துவங்கள் நான்கு. ஸ்ரீ அரவிந்தருடைய தத்துவம் பரமாத்மாவை வாழ்விலிருந்து விலக்க மறுப்பது.

3. பரமாத்மாவையும், பாதாளத்தையும் மனிதன் தன்னில் இணைத்து, இணைத்ததை மேல் எடுத்துச் செல்வது 3, 4 அத்தியாயங்களாகும்.

4. 5ஆம் அத்தியாயம் 7 வகை அஞ்ஞானம் 7 வகை ஞானமாக மாறுவது.

5. 6,7,8 அத்தியாயங்கள் மறுபிறப்பைப் பற்றியவை.

6. 9ஆம் அத்தியாயம் மனிதன் பிறந்த வரலாறு. 10ஆம் அத்தியாயம் ஆன்மீக மனிதன் பிறந்தது.

7. 11ஆம் அத்தியாயம் 3 திருவுருமாற்றங்கள். 12ஆம் அத்தியாயம் சத்தியாரோகணம், 13 சத்திய ஜீவன். கடைசி அத்தியாயம் தெய்வீக வாழ்வு.

பிரபஞ்சத்தையும், பரமாத்மாவையும் தன்னுட் கொண்ட மனிதன் முழு மனிதன். இவனே திருவுருமாற்றத்திற்குரியவன். சோவியத் சர்க்கார், கிருஸ்துவ மடங்கள், சன்னியாச ஆசிரமம் முடியவில்லை என்று கைவிட்ட திருவுருமாற்றத்தை சரணாகதியால் பூர்த்தி செய்பவன் ஆன்மவிழிப்புள்ள சத்திய ஜீவன்.

******



book | by Dr. Radut