Skip to Content

இடைவிடாத பிரார்த்தனை

பிரார்த்தனை என்பது தெய்வீகம் பொருந்தியது. மனித உழைப்பைப் போற்றாதவர் இல்லை. நட்பில் விஸ்வாசத்தைப் பாராட்டாதவரில்லை. உயர்ந்த ஞாபகசக்தியை அனைவரும் கண்டு வியப்படைவார்கள். உழைப்பு உடலின் முயற்சி; விஸ்வாசம் உணர்வின் நெறி; ஞாபகம் அறிவின் முயற்சி; இவற்றையெல்லாம் கடந்த நிலையிலுள்ளது ஆன்மா. ஆன்மா முயன்று எழுப்பும் குரல் பிரார்த்தனை. இது ஆண்டவனை எட்டும். எட்டிய க்ஷணம் அற்புதம் நிகழும். இடைவிடாத பிரார்த்தனை இறைவன் காதில் தவறாது விழும். மனித வாழ்விலுள்ள எந்தச் சிக்கலையும் அவிழ்க்கும் திறனுடையது இடையறாத பிரார்த்தனை. மூன்று நாட்கள் இடைவிடாமல் பிரார்த்தனை செய்து தீராத பிரச்சினை ஒன்றை இதுவரை நான் கேட்டதில்லை.

அன்னையைப் பற்றி பக்தர்கள் அறிந்தன அநேகம். ஆயிரம் வகைகளில் பக்தனின் துயரைத் தீர்த்தவர் அன்னை. ஆழாக்கு அரிசிகூட வீட்டில் இல்லை என்று அழுது புலம்பியவர் வாழ்வில் அன்னை உதயமாகி, நமக்கில்லை என்று மறந்துவிட்ட பெருஞ்சொத்தை, கைக்கு வந்துவிட்டது என்பதை நிறைவேற்றியவர் அன்னை. கஷ்டம் வந்து கடைசி நிலைக்குப் போனபின், அன்னை அளித்த வாழ்வு பேர்அதிர்ஷ்டமாக அமைந்ததை வர்ணித்தவர், "இதை அன்னையால் மட்டுமே கொடுக்க முடியும் என்பது எனக்குத் தெளிவாக விளங்குகிறது. எனக்குக் கிடைத்த இப்பேறு வேறு எதனாலும் இல்லை. அன்னையால்தான் என்பதை என் நெஞ்சம் உணருகிறது'' என்றார். ஹிருதயம் கோளாறாக இருக்கிறது; ஆப்ரேஷன் செய்துகொள்ள வேண்டும் என்று 70 பவுண்ட் எடையுள்ள 30 வயதுப் பெண்மணிக்குச் சொன்ன டாக்டர், கூடவே "உனக்கு அந்த ஆப்ரேஷனில்லை. எந்த ஆப்ரேஷனும் செய்ய

முடியாது. உடலில் சதையேயில்லை'' என்று அனுப்பிவிட்டார். 300 ரூபாய் சம்பாதிக்கும் அந்தப் பெண்ணுக்கு டாக்டர் சொல்லியதைவிட முக்கியமானது ஆப்ரேஷன் செலவு. அதற்கு வழியில்லை. அன்னை ஸ்தாபனத்தில் வேலை செய்த அந்தப் பெண் பொறுப்போடும், விஸ்வாசத்துடனும் வேலை செய்தவர். அவருக்குப் புதிய நிலை ஏற்பட்டது. டெல்லியிலிருந்து அப்பெண்ணின் ஊருக்கு ஒரு புதிய டாக்டர் இதுபோன்ற சிக்கலான கேஸ்களைப் பரீட்சார்த்தமாக ஆப்ரேஷன் செய்ய வந்தார். அப்பெண்ணுக்கு இலவசமாக ஆப்ரேஷன் செய்தார். ஹிருதயக் கோளாறு நீங்கியது. பின்னர் திருமணமும் ஆயிற்று. சேவையின் உள்ளடங்கிய, செய்யாத பிரார்த்தனையின் பலன் அது. துறைமுகத்தை விட்டுப்போன கப்பல் அன்னைக்குப் பிரார்த்தனை செய்ததால், திரும்பிவந்து அழைத்துப் போனதுண்டு. ஒரு காலனியில் உள்ள எல்லா வீடுகளும் சேதமான நேரத்திலும் அன்னை படம் இரண்டு நாளிருந்த வீடும், அங்குள்ளவர்களும் அந்த அசுரச் சூறாவளியிலிருந்து தப்பும்படிக் கவசமாக இருந்தது அன்னையின் சூழல். பல ஆண்டுகள் சந்தான பாக்கியமில்லாதவர்கள் பலர்; அன்னைக்குப் பிரார்த்தனை செய்த அடுத்த மாதம் கர்ப்பமானேன் என்று சொன்னதுண்டு.

வாழ்க்கையில் தீராத பிரச்சினைகள் சிலவற்றை நாம் கேள்விப்படும்பொழுது, இது தீர்க்க முடியாத பிரச்சினை என்று தெளிவாகப் புரியும். பெரும்பாலும் பிரச்சினைக்கு உரியவர்கள், இனி இது நடக்காது என்று கைவிட்டுவிடுவார்கள். சிலர் நடக்காது என்று மனம் தெளிவாக அறிந்தாலும் தொடர்ந்து முயன்றுகொண்டிருப்பார்கள். வருஷங்கள் ஓடும்; பலன் பூஜ்யமாக இருக்கும். நாள் ஆக, ஆக சிக்கல் பெரிய சிக்கலாவதைக் காண்பார்கள். அதுபோன்ற சில விஷயங்களைக் குறிப்பிடுகிறேன்.

 1. இன்று 41 வருஷமாகிறது. குத்தகைக்காரன் நிலத்தை ஆக்ரமித்துக்கொண்டான். கொடுப்பதையும் குறைத்து, நிறுத்திவிட்டான். 15 வருஷமாக எதுவும் வரவில்லை ; உரிமையும் போயிற்று; உடமையும் போயிற்று; வருமானமுமில்லை.

 1. இந்த வட்டாரத்திலேயே பெரிய மிராசுதாரர். 50 வருஷமாகப் பெருஞ்செல்வமுடையவர். இரண்டு குழந்தைகளையும் விட்டுத் தாயைப் பிரித்து 22 வருஷத்திற்குமுன் தாய்வீட்டிற்கு அனுப்பினார். அவருக்குச் சமாதானம் சொல்ல ஒருவரில்லை. இனியும் நிலைமை மாறப்போகிறதா?  
 1. எங்கள் குடும்பம் செல்வம் நிறைந்தது. பெரும்பாலானவர்க்கு புத்திர சந்தானமில்லை. போகாத கோயிலில்லை. எந்த வழியும் இந்த 20 வருஷங்களாகப் புலப்படவில்லை.
 2. என் அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகள் அனைவரும் நல்ல நிலைமையிருக்கிறார்கள். எனக்கு வசதியில்லை. அதனால் மரியாதையில்லை. 30 வருஷங்களாக மனம் புழுங்குகிறது. எவரும் எங்களைப் பொருட்படுத்துவது இல்லை. இதற்கு வழியே தெரியவில்லை.
 3. கணவருடைய குடிப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிறது. வருஷம் 12ஐத் தாண்டிவிட்டது. இனி எந்த மார்க்கமும் தென்படவில்லை.
 4. என் பிள்ளை உத்தியோகத்திற்குப் போய் 20 வருஷங்களாகின்றன. இதுவரை 19 கம்பெனிகளில் வேலை செய்திருக்கிறான். வருஷத்திற்கு ஓர் இடம் மாறுவதே அவனுக்குரிய பழக்கமாகிவிட்டது. அத்துடன் கடனும் வருஷத்துக்கு வருஷம் அதிகமாகிறது. இனி அவன் மாறுவான் என்று எனக்குத் தோன்றவில்லை.
 5. 30 வருஷங்களுக்குமுன் என் 45வது வயதில் 26 புத்தகங்களை எழுதினேன். 45 வருஷங்களாக அகில இந்திய பத்திரிக்கை ஒன்றுக்கு ஆசிரியராக இருக்கிறேன். எனக்குத் தெரியாத பெரிய மனிதர்கள் இந்தியாவில் இல்லை. என் புத்தகங்களைப் பாராட்டாதவரில்லை. ஆனால் இந்த 75-ஆம் வயதிலும் அவற்றை வெளியிடும் வாய்ப்பு ஏற்படவில்லை. வெளியிடும் நினைவு என்னை விட்டகலவில்லை. ஆனால் நம்பிக்கையில்லை. ஒரு புத்தகம்கூட வெளியிடப்படவில்லை.

 1. யுத்தம் ஆரம்பிப்பதற்குமுன் என் தகப்பனார் 25 இலட்ச ரூபாய் சம்பாதித்துவிட்டார். அவருடைய கூட்டாளி ஆங்கிலேயர். அவர் இலண்டனுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த நேரம் என் தகப்பனார் கையிலுள்ள பெருந்தொகையால் தம் உயிருக்கு ஆபத்து என்றறிந்து பார்ட்னரிடம் பணத்தைக் கொடுத்து, "என் மகனிடம் சேர்த்துவிடுங்கள்'' என்றார். பார்ட்னர் ஒரு பாங்கில் பணத்தை என்னுடைய பெயரையும், ஊரையும் மட்டும் குறித்து டெபாஸிட் செய்துவிட்டிருக்கிறார். அடுத்த வாரம் உறவினர்கள் என் தந்தையை அடித்துக் கொன்றுவிட்டார்கள். அப்பொழுது நான் பள்ளிக்குச் செல்லும் சிறுவன். 25 வருஷங்கள் கழித்து எங்கள் ஜில்லா கலெக்டருக்கு ரிஸர்வ் பேங்கிலிருந்து என் பெயரைக் குறிப்பிட்டு விவரம் கேட்டிருந்தார்கள். அப்பொழுதுதான் நடந்தது தெரியவந்தது. எனக்குப் புரிகிறது அது என் பணம்தான் என்று. தகப்பனார் பெயரில்லாமல், விலாசமில்லாமல் அதை நான் பெற்றுக்கொள்ள சட்டம் இடம்கொடுக்கவில்லை. பணம் சர்க்காருக்குத் திரும்பப் போய்விட்டது. இவருக்கு வழிவகை சொல்ல ஒருவரும் இல்லை.

இதுபோன்ற பிரச்சினைகள் அன்னையிடம் செய்யும் பிரார்த்தனையால் அகலும். இடைவிடாத பிரார்த்தனை அதற்கு உதவும். அதை மேற்கொள்ள ஸ்லோகங்களில்லை; மந்திரங்கள் தேவையில்லை. மனத்தின் நம்பிக்கையும், இடைவிடாமல் நெஞ்சம் எழுப்பும் குரலும் போதும். அதன் அம்சங்களையும், வழிமுறைகளையும் கீழே குறிப்பிடுகிறேன்.

இதுவரை எதுவும் பலிக்கவில்லை. இதையும்தான் செய்து பார்க்கலாமே என்ற எண்ணம் சில விஷயங்களில் பலிக்கலாம். இதுபோன்ற நீண்ட நாளைய சிக்கலைத் தீர்க்க பயன்படாது. பலிக்குமா என்ற கேள்வியை மனம் எழுப்பினால், நம்பிக்கையில்லை என்று பொருள். சோதனையாகச் செய்யும் பிரார்த்தனைக்கு இதுபோன்ற பெரிய பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனில்லை. அன்னையைப் பற்றி இதுவரை கேள்விப்பட்ட விஷயங்களால் மனத்தில் திடமான நம்பிக்கை தீர்க்கமாக உதயமானவருக்கே

இதனால் பலன் ஏற்படும். நம்பிக்கை அவசியம். அதுவே அஸ்திவாரம். பூரண நம்பிக்கையே, பூரணப் பலனைக் கொடுக்கும். ஒரு நேரம் நம்பிக்கையிருக்கிறது, ஒரு விஷயத்தில் நம்பிக்கையிருக்கிறது என்பவர்களுக்கு வேறு அனுபவம் உண்டு. தீவிரமாகப் பிரார்த்தனை செய்கிறேன், பலனில்லை என்பவர்கள் அவர்கள். நம்பிக்கை திடமாகவும், நிலையாகவும், பூரணமாகவுமில்லை என்பதே அதற்குக் காரணம். அன்னையிடம் அத்தகைய நம்பிக்கையுள்ளவர்கள் இம்முறையைக் கையாளலாம். அடுத்தாற்போல் அவர்கள் செய்யவேண்டியது தீர்மானம். அரைகுறையாக முடிவு செய்து ஆயுள் முழுவதும் ஒரு காரியத்தைப் பேச்சளவிலேயே சொல்லிக்கொண்டு இருப்பது ஒரு சுபாவம். அதற்கு எதிரான தீர்க்கமான முடிவு தேவை.

3 நாட்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய ஆரம்பிக்கும்பொழுதே, அது முடியுமா என்ற கேள்வி எழும். 3 நாட்கள் பிரார்த்தனையால் 30 வருஷப் பிரச்சினை தீருமா என்று தோன்றும். 3 நாட்கள் என்றால் இரவு என்ன ஆகிறது? சாப்பாடு மற்ற காரியங்களை எப்படிச் செய்கிறது என்ற ஐயம் வரும். தெரியவில்லை என்பதால் ஏற்படும் குழப்பங்களை எல்லாம் நீக்கிவிடலாம். 3 நாட்கள் தினமும் காலையில் 1 மணி செய்தால் போதும் என்ற நினைவு வரும். அதனால் 3 நாட்கள் பிரார்த்தனையை மேற்கொள்ளுமுன் முடிவை அறிவு ஏற்றுக்கொள்கிறதா? அதை உணர்வு ஆமோதிக்கின்றதா? உடல் ஒத்துழைக்குமா? என்று நிதானித்து, பின்னால் முடிவை எடுத்தல் அவசியம். எடுத்தபின் நெறியாக நிறைவேற்ற வேண்டும்.

அடுத்ததாக, பிரச்சினையின் வரலாற்றை அன்னையிடம் தினமும் ஒரு முறை சொல்ல வேண்டும். 3 முறைகள் சொல்வது சிறப்பு. முடிந்தால் 2 முறையாவது சொல்ல வேண்டும். இதை 15 நாட்கள் தொடர்ந்து செய்தபின்னரே இடைவிடாத பிரார்த்தனையை ஆரம்பிக்க வேண்டும்.

3 நாட்கள் இடைவிடாது எந்த எண்ணத்தையுமே தொடர்ந்து மனதில் நிறுத்த முடியாதவர்களுண்டு. அவர்களுக்குப் பிரார்த்தனையை ஆரம்பித்த 1 மணிக்குப்பின் தானே அது நின்றுவிடும். மேலே தொடர முடியாது. சிலர் 4, 5 மணி பிரார்த்தனை செய்து, பின் முயற்சியைக் கைவிட்டுவிடுவார்கள். 36-ஆம் வயதில் திருமணமாகாத பெண், 300 ஏக்கர் நிலத்தை 30 வருஷங்களுக்குமுன் உழுதவனுக்கே அளித்தவர், போன்றவர்களுடைய பிரச்சினையை நோக்கும்பொழுது 3 நாட்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்தால் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க அதிக முயற்சியில்லை என்று நாம் அறிவோம். உலகத்திலேயே ஒரு வழியில்லை என்ற நிலையில் ஒரு புது வழியை அன்னை தம் அருள்மூலம் கொண்டுவந்திருக்கின்றார் என்றபொழுதும், என்னால் 3 நாட்கள் பிரார்த்தனை செய்து அதைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. என்னால் முடியவில்லை, உதவி வேண்டும் என்பவர்களுக்கு வழி சொல்லலாம்.

இடைவிடாத பிரார்த்தனையை ஆரம்பிப்பதற்குப் பதிலாக, அதைச் செய்ய தன்னைத் தயார் செய்துகொள்ள வேண்டும். முதல் 1/2 மணி பிரார்த்தனை செய்து, அடுத்த நாளிலிருந்து அதை ஒரு மணி, 2 மணி என்று அரைநாள்வரை தயார் செய்துவிட்டால், மேலும் 3 நாட்கள் பிரார்த்தனையை ஆரம்பிக்கலாம்.

பிரார்த்தனை ஆரம்பித்தபின், தபால்காரர் கூப்பிடுகிறார், 5 நிமிஷம் ஒரு வேலை வருகிறது என்றால் என்ன செய்வது? 3 நாட்கள் குறுக்கீடில்லாமல் சொல்வது சிறந்தது. அது முடியவில்லை என்றால் குறுக்கீடுகளை குறைந்தபட்சமாக்கிக் கொண்டு மனதைத் தியானத்தில் நிறுத்தி, 5 நிமிஷம் வெளியே வந்து கடமையைப் பூர்த்திசெய்து திரும்பவும் பிரார்த்தனைக்குப் போகவேண்டும். மீண்டும் பிரார்த்தனை முன்போல் தொடர்ந்தால் குறுக்கீடு மேலெழுந்தவாரியானது என்றாகும்.

பிரார்த்தனையை எளிய முறையில் சொல்லலாம், "திருமணமாக வேண்டும்'', "வறுமை தீரவேண்டும்'' என்பதுபோல் சுலபமாகச் சொல்லலாம். அதற்குப் பதிலாக Mother, அம்மா, அன்னை என்று சொன்னாலும் அதுவும் பிரார்த்தனைக்கு ஒப்பாகும். 3, 4 மணிக்குப்பின் பிரார்த்தனை தானே நெஞ்சில் ஒலிக்கும்.

3 நாட்கள் பிரார்த்தனை முடிந்தபின், பிரச்சினை தீர அறிகுறிகள் தென்படும். முழுவதும் தீரும்வரை பிரச்சினை நினைவு வரும்பொழுதெல்லாம், அதை ஒதுக்கிவிட்டு, அன்னையை மட்டும் நினைக்கவேண்டும்.

சுருக்கமாக மீண்டும் அவற்றைச் சொல்கிறேன்.

 1. ஆத்ம சமர்ப்பணம்; பிரச்சினையின் வரலாற்றை அன்னையிடம் கூறுதல். 15 நாட்கள் செய்ய வேண்டும். (15 முறை சொன்னால் போதும், எத்தனை நாட்கள் என்பது முக்கியமில்லை).
 2. அன்னை மீது முழு நம்பிக்கைக்கொள்ளுதல் அவசியம்.
 3. 3 நாட்கள் பிரார்த்தனையை மேற்கொள்ள தீர்க்கமான, பூரண முடிவை எடுத்தல் தேவை.
 4. பிரார்த்தனை ஆரம்பித்தால் தொடர வேண்டும் என்பதற்காகத் தன்னைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.
 5. 3 நாட்கள் இடைவிடாமல் வாயாலோ, மனதாலோ, நெஞ்சாலோ பிரார்த்தனையைச் சொல்ல வேண்டும்.
 6. பிறகு பிரச்சினை நினைவு வந்தால், அன்னையை நினைத்துக்கொள்ள வேண்டும்.
 7. பகல் முழுவதும் பிரார்த்தனையை தொடர்ந்து சொல்ல வேண்டும். அது இரவும், பகலும் சொல்லியதற்குச் சமம்.

பிரச்சினையைத் தீர்க்கும் இம்முறையைப் பின்பற்றி வாய்ப்பை உற்பத்தி செய்யலாம். மாநிலத்தில் முதல் மாணவனாக வேண்டும், பெரிய மகசூல் எடுக்க வேண்டும், 10 இலட்ச ரூபாய் கம்பெனியை 10 கோடி கம்பெனியாக மாற்ற வேண்டும் என்பதற்கும் இதே முறையைப் பின்பற்றலாம். நம்பிக்கையும்,முயற்சியும் அன்னை இடத்தில் பூரணப்பலனை அளிக்கும்.

*******book | by Dr. Radut