Skip to Content

வாழ்வின் மறுமொழி

நாம் பேசும் சொல்லெல்லாம் எதிரொலித்தாலும் அவை நம் காதில் விழுவதில்லை. வீட்டினுள் பேசினாலும் சுவரில் நம் ஒலிக்கு எதிரொலியுண்டு. எதிரொலி அதிவேகமாக வந்து நம் ஒலியுடனே கலந்துவிடுவதால், நமக்கு அது தனியாகத் தெரிவதில்லை. நமக்கும், சுவருக்கும் இடைவெளி அதிகமாக இருக்கும்பொழுது மட்டும் எதிரொலி தனித்துத் தெரிகிறது. வாழ்க்கைக்குப் பல ஆயிரம் சட்டங்களுண்டு. பெரிய சட்டங்கள், சிறிய சட்டங்கள், சட்டங்களுக்குட்பட்ட நடைமுறை ஆகியவை ஏராளம். அவை இடையறாது செயல்பட்டுக்கொண்டே இருக்கின்றன. முதல் சட்டம் பிறந்தவன் இறப்பான் என்பது. அடுத்த சட்டம் அவரவர் செய்ததை அவரவர் அனுபவித்தே தீரவேண்டும் என்பது. தலையாய கட்டத்தில் இதுபோன்றவை இருந்தால், அடிமட்டத்தில் சில்லரைச் சட்டங்களுண்டு. இன்றைய பால் நாளைக்குக் கெட்டுப்போகும். பழம் கனிந்த பின்னரே சாப்பிட முடியும். நடந்தால் காலை வலிக்கும். படித்தால் அறிவு வளரும். இவை போன்றவற்றை நாம் சட்டம் என்று கருதுவதில்லை. நடைமுறை என்று கொள்கிறோம். அவற்றை மீறவும் நினைப்பதில்லை. அவை நம்மைத் தொந்தரவு செய்வதில்லை. எல்லாச் சட்டங்களும் சில சமயங்களில், நமக்கு விளங்காத நேரத்தில் செயல்படும் விதம் நமக்கு ஆச்சரியத்தைக் கொடுப்பதால், அப்பொழுதுதான் அந்தச் சட்டங்களை நினைவுகூர்கிறோம்.

கன்று போட்ட பசுவை ஒருவன் பிடித்துக்கொண்டு வேறு இடத்திற்குச் செல்ல முயன்று, அது முரண்டு செய்தால், மற்றொருவன் மாட்டை விட்டுவிட்டு கன்றை அழைத்துச் சென்றால், பசு தானாக அதன்பின் செல்லும். அதைப் பார்த்தவுடன் இதுவரை எனக்குத் தோன்றவில்லையே என்று முதலாமவன் நினைக்கிறான். அடுத்தவன் வாழ்க்கைச் சட்டம் ஒன்றைப் பின்பற்றி,

முதலாமவனுக்குண்டான பிரச்சினையைத் தீர்க்கின்றான். இது இயற்கையின் விதி. அறியாதவனுக்குப் பிரச்சினையைக் கொடுக்கிறது; அறிந்தவனுக்கு உதவுகிறது.

நேர்மையாகப் போகும் முதலாளி ஒரு சர்க்கார் ஆபீஸரிடம் தமக்குத் தேவையானது சட்டப்படி நியாயம் என்று ஒரு மணி நேரம் வாதாடுகிறார். அவருடைய தம்பிக்கு அந்த ஆபீஸர் நேர்மையற்றவர் என்று தெரியும். குமாஸ்தாவிடம் தம்பி சென்று வேண்டியதைச் செய்கிறேன் என்றவுடன் செய்தி ஆபீஸருக்கு வருகிறது. இதுவரை வாதாடியவர் முதலாளி கேட்பதற்கு இசைகிறார். இது சமூகத்தில் ஒருவகை நடைமுறை. அதை ஒட்டிப்போய் சௌகரியம் பெறுபவருண்டு. அதை அறியாமல் நடப்பவருண்டு.

ஒரு சிறுவன் ஒரு பெரியவரிடம் பாசமாகவும், நம்பிக்கையாகவுமிருந்தான். பட்டம் முடிக்கும்வரை அவரைக் கலந்தே எதையும் செய்வான். அவரும் அவனுடைய பாசத்திற்குப் பாத்திரமானார். வெளிநாடு சென்றுவந்து தொழில் ஆரம்பித்தான். மீண்டும் பெரியவரைப் பார்க்க வந்தான். இந்த இடைவெளியில் தனக்குப் பழக்கமாயிருந்த பண்டிதர் ஒருவரிடம் பெரியவர் வாலிபனை அறிமுகம் செய்தார். பின்னர் அவர்களுடைய தொடர்பு இல்லாமல் போய்விட்டது. தவறாமல் அவரைச் சந்திப்பவன் 6, 7 வருடங்களாக வருவதில்லை. 7-ஆம் வருஷம் பெரியவரே அவனிடம் தொடர்புகொண்டார். வாலிபன் அளவுகடந்த மகிழ்ச்சியுடன் மீண்டும் பழைய தொடர்பைப் புதுப்பித்துக்கொண்டான். கொஞ்சநாள் கழித்து வாலிபன் இதுநாள்வரை வராததற்குக் காரணம் அந்தப் பண்டிதர்தாம் என்றும், மீண்டும் இப்பொழுது பெரியவரைப் பார்க்க வருமுன் அந்தப் பண்டிதருக்கும் இவருக்குமுள்ள தொடர்பு இல்லை என்று ஊர்ஜிதப்படுத்திக்கொண்டுதான் வந்தான் என்பதையும் விளக்கினான்.

பண்டிதருடைய பார்வை அவருடைய குணம்போலவே தீயது, கடுமையுடையது. பெரியவர் பண்டிதருடன் உள்ள தொடர்பை இழக்கும்வரை வாலிபனை அழைக்கவேண்டும் என்று நினைக்கக்கூட

இல்லை. வாலிபனுக்குப் பண்டிதர் மேலுள்ள வெறுப்பு பெரியவரை வாலிபனை மறக்கச் செய்தது. பண்டிதர் விலகியவுடன் பெரியவருக்கு வாலிபன் நினைவு வருகிறது. இது ஒரு சட்டம். அது வாழ்க்கைச் சட்டம். பண்டிதர் விலகியவுடன் சட்டம் செயல்பட்டு, வாலிபனை அழைக்கச் சொல்கிறது. வாலிபனுக்குப் பண்டிதர் மேலுள்ள வெறுப்புக்கு எதிரொலியாகப் பெரியவரை வாலிபனை மறக்கச் சொல்கிறது. பண்டிதர் விலகியவுடன் பெரியவருடைய நினைவை வாலிபன் பக்கம் செலுத்தச் சட்டம் செயல்படுவதை வாழ்க்கையின் எதிரொலி அல்லது மறுமொழி (Life Response) என்று நான் கூறுகிறேன். பெரியவரோ, வாலிபனோ முயன்று செய்யாத ஒன்றை வாழ்க்கை முயன்று நினைவுகூர்ந்து செய்வதுபோல் நடந்துகொள்கிறது. பெரியவருக்கும், வாலிபனுக்கும் இடையேயுள்ள நெகிழ்ந்த உணர்வைப் பாதிக்கும்வகையில் பண்டிதர் தோன்றினார். பண்டிதருடன் பெரியவர் இருந்தவரை, வாழ்க்கை அவரை வாலிபனிடமிருந்து பிரித்தது. பண்டிதர் விலகியவுடன் வாலிபனுடன் சேர்த்தது. இதுவே வாழ்க்கையின் நியதி. மனிதர்களுடைய மனத்திலுள்ள உணர்வுகளை வாழ்க்கை எதிரொலிக்கிறது. மனத்தின் மொழிக்கு மறுமொழி கூறுகிறது. இந்த உதாரணத்தில், செயல்படுவது உணர்வு. உணர்வு வாழ்க்கையின் கூறுகளில் ஒன்று. அதன் கூறுகள் அநேகம். ஒவ்வொரு கூறும் செயல்படும்பொழுதும், வாழ்க்கையின் எதிரொலியைக் கேட்கலாம். அவற்றுள் முக்கியமான சிலவற்றைக் கூறி, முடிந்தவரை உதாரணங்களைக் கொடுத்து, விளக்கம் அளிக்க விரும்புகிறேன். உதாரணங்களில் எல்லா அம்சங்களும் செயல்பட்டாலும் மறுமொழி ஒரு கீற்றே இருந்தாலும், அந்த ஒரு இழைக்காக அவற்றைச் சேர்த்திருக்கிறேன்.

வாழ்க்கை என்பது ஒரு சமுத்திரம். எண்ணிலடங்காப் பொருள்களும், கருத்துகளும், நியதிகளும், சக்திகளும், வேகங்களும் செயல்படும் முனை வாழ்க்கை. மனிதனும், மனித வாழ்வும், பிரபஞ்சத்தின் வாழ்வில் ஒரு பகுதியே. சிறு பகுதி எனவும் கூறலாம். இன்றைய நிலையில் மனிதன் வாழ்க்கைக்கு உட்பட்டவன். வாழ்க்கை

இயற்கைக்கு உட்பட்டது. விஞ்ஞான அறிவால் மனிதன் இயற்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக வென்றுவருகிறான். அந்த அளவில் வாழ்க்கை அவன் பிடியில் வந்துவிட்டது. அதற்குப் புறம்பான துறைகளில் மனிதன் வாழ்க்கையின் பிடியிலிருக்கிறான். விஞ்ஞானம் இயற்கையை மனிதன் பிடியில் கொண்டுவருவதுபோல், வாழ்க்கை நியதிகளின் ஞானம் வாழ்க்கையை மேலும் மனிதன் பிடியில் கொண்டுவர முடியும். மழை தானாகப் பெய்கிறது. நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு, எல்லார்க்கும் மழை பெய்கிறது என்ற நிலையை ஓரளவு மாற்றி, மேகம் திரண்ட நேரத்தில் விஞ்ஞானி அதை மழையாகப் பெய்விக்க முயன்று, சில சமயம் வெற்றியும் காண்கிறான். வருண ஜபமும் சில சமயம் மழையைப் பெய்விப்பதுண்டு. இதுவரை நம் பிடியில் இல்லாத மழையை விஞ்ஞானியும், சாஸ்திரியும் தம் பிடியில் கொண்டுவர முடியும். அதுபோல் வாழ்க்கையின் நியதிகளை அறிந்தால், பக்தன் வாழ்வைத் தன் பிடியில் கொண்டுவரலாம். குறைந்தபட்சம் தன் வாழ்வைத் தன் சக்திக்குட்பட்டதாகக் கொண்டுவர முடியும் என்பதே இக்கட்டுரையின் மையக் கருத்து.

வீட்டைச் சுத்தம் செய்தால் பணம் வரும்; நல்லது நடக்கும் என்பது அன்பர்களுடைய அனுபவம். வீட்டைச் சுத்தம் செய்வதற்கும், பணம் வருவதற்கும் உள்ள தொடர்பு சூட்சுமமானது (Subtle); கண்ணுக்குத் தெரியாத ஒன்று. அப்படி நடக்கும்பொழுது அது வியப்பளிக்கிறது. வாழ்க்கை ஒருவனுக்கு செல்வத்தைக் கொடுக்கத் தேவையான நிபந்தனை அது. சுத்தம் செய்தவுடன், வாழ்க்கை செயல்பட ஆரம்பிக்கிறது. சுத்தத்திற்குரிய செல்வத்தை அளிக்கிறது. வீட்டின் சுத்தம் வாழ்க்கையில் எதிரொலிக்கிறது. ஒரு பெருந்தொகையைக் குறிப்பிட்ட நாளுக்குள் கொடுக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட நிலையில் வேறு வழியே தெரியாதபொழுது, சுத்தம் செய்துதான் பார்ப்போம் என்று கடையை தீவிரமாகச் சுத்தம் செய்தவருக்கு, அது முடிவதற்குள் தேவைப்பட்ட தொகை எதிர்பாராமல் கிடைத்தது ஒரு நிகழ்ச்சி.

B.E. படித்துவிட்டு, மத்திய சர்க்காரில் Class I அதிகாரியாக செலக்ஷன் ஆன நிலையில், காலில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டு, டாக்டரிடம் காண்பித்ததில், எலும்பு வளர்வதாகவும், ஆப்ரேஷன் செய்யவேண்டும் என்றும், ஆப்ரேஷன் செய்தாலும் சில வருஷங்களுக்குப்பின், மீண்டும் வளரும் என்று இத்துறை வல்லுநர் கூறினார். அவருடைய நண்பராக உள்ள வேறொரு டாக்டரை மதுரையில் போய் பையன் சந்தித்தான். முதல் டாக்டர் சொல்லியதையே அவரும் சொன்னார். வியாதி உடலில் ஏற்படுகிறது. ஆனால் உடலே முடிவானதில்லை. உயிர் உடலைவிட உயர்ந்தது. உயிரின் உணர்வுகளை உடல் பிரதிபலிக்கும். உயிருக்குத் தாங்கமுடியாத வேதனை மனதில் ஏற்பட்டால், சில சமயம் அது உடலில் வியாதியாகப் பிரதிபலிக்கும். எலும்பு வளர்வது அந்த வகையைச் சேர்ந்தது. உனக்குத் திருமணமானால், வளரும் எலும்பு வலியைக் கொடுக்காது, வளராது என்றார். பையன் வீட்டார் பெண் பார்க்கப்போனார்கள். வலி நின்றுவிட்டது. வாழ்க்கைப் பல நிலைகளில் (level) களில்செயல்படுகிறது. உடல்நலம் என்பது ஒரு நிலையானால், அதைவிட உயர்ந்த நிலையில், மனவளம் என்ற நிலையுள்ளது. உயர்ந்த நிலையான மனவளத்திற்கு, தாழ்ந்த நிலையான உடல்நலம் கட்டுப்படுகிறது. மனவளத்தின் நியதிகளை அறிந்த டாக்டரால் உடல் நலத்தின் குறைகளை ஆச்சரியப்படும் வகையில் நீக்க முடிகிறது. உடல்நலமும், மனவளமும் வாழ்க்கையில் பல நிலைகளில் இரண்டாகும். வளரும் எலும்பை ஆப்ரேஷன் செய்து தற்காலிகமாக நீக்குவது ஒரு முறை. மனவளத்தின் நியதிகளை அறிந்து, எண்ணத்தால் அங்குச் செயல்பட்டு வாழ்க்கையில் எதிரொலியைக் கிளப்பி, வலியை ஒரே நாளில் மாயமாய் மறைய வைப்பது மற்றொரு முறை. இந்த இரண்டாம் முறையை Life Response வாழ்வின் மறுமொழி எனப் பெயரிட்டு, இதன்மூலம் வாழ்க்கையின் எல்லாப் பிரச்சினைகளையும் "ஆப்ரேஷனில்லாமல்'' சுலபமாகத் தீர்ப்பதெப்படி என்பதை விளக்க முயல்கிறேன். இக்கருத்தைத் தெளிவாக விளக்குவது சுலபமன்று என்று தெரிந்தே இம்முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். எவ்வளவு தூரம் வெற்றி கிடைக்கிறது என்று பார்ப்போம்.

அன்னை புதுவை வருமுன் தம்முடைய முதல் குருவுடன் சகாரா பாலைவனத்தருகே தங்கியிருந்தார். குருவின் மனைவிக்கு உடலை விட்டு வெளியே செல்லுதல், பொருள்களைத் தம்மை நோக்கி வரும்படிக் கட்டளையிடுதல் போன்ற பல யோக சக்திகளிருந்தன. ஒரு நாள் பகல் குருவின் மனைவி படுத்திருந்தபொழுது (Lord of Snow) பனி அரசன் தம் அருகே நிற்பதைக் கண்டார். என்ன வேண்டும் என்று கேட்டதற்கு, என்னை அழைத்ததால் வந்தேன் என்று பனி அரசன் பதிலிறுத்தான். குருவின் மனைவிக்கு புரியவில்லை. பனி அரசன் மறைந்துவிட்டான். அவன் நின்ற இடத்தில் குட்டையாக சில்லென்று தண்ணீரிருந்தது. எதுவும் புரியாமல் ஜன்னல் வழியே குருவின் மனைவி வெளியே பார்த்தார். தூரத்திலுள்ள மலையுச்சி பனியால் மூடப்பட்டிருந்தது. அங்கு (Fir) பிர் மரங்கள் தெரிந்தன. இம்மரங்கள் வடதுருவத்தில்தான் வளரக்கூடியவை. அவற்றைப் பார்த்தவுடன், குருவின் மனைவிக்குச் சந்தேகம் தெளிந்துவிட்டது. பனி நிறைந்த துருவத்தில் மட்டுமே வளரக்கூடிய பிர் மரங்களை அருகேயுள்ள மலையில் யாரோ கொணர்ந்து நட்டிருக்கிறார்கள். சகாரா பாலைவன எல்லையாக இருந்தபோதிலும், அந்த மரங்கள் அதற்குரிய பனி அரசனை அவ்விடம் அழைத்து வந்துவிட்டன. மனிதன் நட்டது பனிப்பிரதேச மரம். வந்தது பனியும், பனி அரசனும். பனியைக் கொண்டுவர இது ஒரு உபாயமாக இருக்கிறது. மரம் கண்ணுக்குப் புலப்பட்டது. பனி அறிவுக்குப் புலப்படாதது. பனியும், மரமும், வாழ்க்கை என்பதில் இணைந்துள்ளன. மரத்தை நட்டால், பனியாக வாழ்க்கை எதிரொலிக்கிறது.

ஜொஜோபா (Jojoba) என்று ஒரு மரமுண்டு. இதிலிருக்கும் கொட்டையிலிருந்து வரும் எண்ணை விலையுயர்ந்தது. மரம் வளர்ந்து பலன் தர 12 ஆண்டுகளாகும். 200 வருஷமிருக்கும். இந்த எண்ணை தற்சமயம் பிரபலமாகி வருவதால், உலகெங்கும் இதைப்

பெருவாரியாகப் பயிரிடுகிறார்கள். அபரிமிதமான இலாபம் உண்டு. அதனால், இந்திய சர்க்கார், தமிழ்நாடு அரசு, பல்கலைக்கழகங்கள் ஆகிய இடங்களில் இதைப் பற்றிச் சொல்லி ஆர்வத்தை உற்பத்தி செய்ய முயன்று சில வருஷங்களில் கைவிட்டுவிட்டோம். இதன் விதையை வரவழைத்து, சில தொழிலதிபர்களிடம் சொன்னோம். ஒருவர் ஆர்வம் காண்பித்தார். 10,000 ஏக்கர் வாங்க ஏற்பாடு செய்தார். ஆர்வமாக நாங்கள் (The Mother's Service Society ) செயல்படும்பொழுது அந்த ஆண்டு மழையில்லை என்பதை அறிந்தோம். ஜொஜோபா பாலைவனச் செடி. அதைக் கொண்டுவர முயன்றால், பாலைவன வறட்சியும் வருகிறது என்று உணர்ந்தவுடன், அம்முயற்சியைக் கைவிட்டுவிட்டோம்.

ஒரு நம்பரை நினைத்துக்கொள், அதை இரண்டால் பெருக்கு, இதைக் கூட்டு, அதால் வகு, கடைசி நம்பரைச் சொல் என்பார்கள் பிள்ளைகள். கடைசி நம்பரை சொன்னவுடன், நாம் நினைத்த நம்பரை சொல்வார்கள். அவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். நமக்கு வியப்பைத் தரும். ஒரு சூத்திரத்தால் பையன் நம்பரை அறிந்துகொள்கிறான். சூத்திரம் தெரியாதவர்க்கு அது சூட்சுமமாகப்படுகிறது.

உயர் அதிகாரி ஒருவரை இலாகா டைரக்டர் (oust) வேலை நீக்கம் செய்துவிட்டார். டைரக்டருக்கு மேலே செக்ரட்டரிக்கு அப்பீல் செய்யலாம். அது சட்டம். நடைமுறையில் நெடுநாளாக செக்ரட்டரி டைரக்டர் செய்ததே சரி என்பார். அப்பீல் என்பது ஒரு கண்துடைப்பு. வேலையை இழந்தவருக்கு அப்பீல் செய்ய அபிப்பிராயமேயில்லை. சமாதிக்கு வந்தார். பிரார்த்தனை செய்தார். நண்பர்கள் வற்புறுத்தலுக்காக அப்பீல் எழுதிப்போட்டார். 3-ஆம் நாள் வேலை நீக்கம் ரத்து செய்யப்பட்டது. டைரக்டர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. செக்ரட்டரி ஆபீசில் ஒரு குமாஸ்தாவுக்கு வேலை நீக்கம் செய்யப்பட்டவர் தன்னூரைச் சேர்ந்தவர் என்று தெரியும். அவர் வேலை நீக்க உத்தரவைப் பார்த்தவுடன் செக்ரட்டரியிடம்

சென்று அது சரியான உத்தரவில்லை என்று சொன்னார். யுகாந்தரக் கால வழக்கத்திற்கு மாறாக செக்ரட்டரி, வேலை நீக்கம் செய்யப்பட்டவர் அப்பீல் வந்தால், உடனே அவரைத் திரும்பவும் வேலைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று அபிப்பிராயம் தெரிவித்ததால், குமாஸ்தா அப்பீலுக்காகக் காத்திருந்தார். நல்ல பதில் உடனே கிடைத்துவிட்டது. அன்னைக்குப் பிரார்த்தனை என்பது ஆன்மீக நிலை. வேலை, வாழ்க்கையில் சமூக நிலையிலுள்ளது. உயர்ந்த நிலையிலுள்ள (Force) சக்தியைப் பிரார்த்தனை செயல்பட வைத்ததால், செயலுக்குரிய கருவிகளை உயர்ந்த சக்தி வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே தயார் செய்துவிட்டது. கண்ணுக்குப் புலப்பட்டது அனுபவம். கண்ணுக்குப் புலப்படாதது தன்னூரைச் சேர்ந்தவர் தனக்காக உதவி செய்ய காத்திருப்பது. இவற்றை இணைப்பது வாழ்வு (Life Plane). வாழ்வுக்குத் திறனளிப்பது இங்கு பிரார்த்தனை. அர்த்தமற்ற ஒன்றாகக் கருதும் அப்பீல் வாழ்க்கையில் பிரார்த்தனைமூலம் ஒரு பதிலை எழுப்புகிறது. அதனால் பலன் கிடைக்கிறது.

இலட்ச ரூபாய்க்கு வாங்கிய ஒரு மெஷின் தொடர்ந்து 3 வருஷம் தொந்தரவு செய்தது. திடீரென்று அது தொந்தரவு கொடுப்பதை நிறுத்தி, ஒழுங்காக வேலை செய்ய ஆரம்பித்தது அனைவருக்கும் புதிராக இருந்தது. கடன் வாங்குவது சரியில்லை; சரியேயில்லை என்ற கொள்கையுடையவர் அக்குடும்ப முக்கியஸ்தரில் ஒருவர். அந்த மெஷின் ரிப்பேரானபோது கடன் வாங்கியதால்தான் அது ரிப்பேராகி விட்டது என்று அவர் தம் மனதுக்குள் கருதினார். வெளியில் சொல்லத் தயங்கினார். கடனுக்கு வாங்கிய மெஷினெல்லாம் ஓடவில்லையா என மற்றவர்கள் கேட்பார்கள் என்று தயக்கம். மெஷின் வேலை செய்ய ஆரம்பித்தவுடன் அவருக்குத் தெளிவாகப் புரிந்தது ஒன்று. அந்த மாதம்தான் மெஷின் கடன் தீர்ந்தது. மேலும் அவருக்குப் புரியவில்லை. எல்லோரும் கடனுக்கு மெஷின் வாங்கினால் ஓடுகிறதே என்ற கேள்வி அவருக்கும் இருந்தது. கடன் தவறு என்று நினைப்பவர் கடன் வாங்கி மெஷின் வாங்கினால் அது ரிப்பேராகிறது. மற்றவர்களுக்கு அந்தச் சட்டம் கிடையாது. குடும்பத்தில் முக்கியஸ்தராக இருப்பதால் இவருடைய எண்ணம் மெஷினைப் பாதிக்கிறது.

பத்து வருஷங்களாகப் பயிரில்லாத பலன் முதலாளியின் மனப்பாரம் குறைந்த வருஷம் அபரிமிதமாகக் கிடைக்கிறது. பயிர் பலனளிக்க தேவையானது எரு, உரம், தண்ணீர், மாடு ஆகியவை. இவை நமக்குத் தெரிந்தவை. முதலாளியின் உணர்ச்சியும், உற்சாகமும் பயிரைப் பாதிக்கும் என்று நாம் கருதுவதில்லை. வாழ்க்கை எனும் கண்ணாடியில் நமக்குத் தெரிந்த எரு முதலியவை பிரதிபலிப்பதுடன், நம் கண்ணுக்குத் தெரியாத மனித உணர்வும் அபரிமிதமான விளைச்சலாக பிரதிபலிக்கிறது.

தானாக வந்தது என்று நாம் சொல்லும்பொழுது எப்படி வந்தது என்று தெரியவில்லை என்று மறைமுகமாகச் சொல்கிறோம். தானாக வருவது என்பது வாழ்க்கை. அதன் பரிசாக நாம் எதிர்பாராததைக் கொடுப்பதாகும். நாம் எதிர்பார்க்காவிட்டாலும் வாழ்க்கை அதுபோல் செயல்படுவது ஒரு நியதிக்கு உட்பட்டதேயாகும். அந்த நியதிகள் பலவகையின. அவற்றுள் கீழ்க்கண்டவை முக்கியமான சில நியதிகளாகும். இவற்றைப் புரிந்துகொண்டால், இன்று நமக்குள்ள பிரச்சினைகளை, வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்க்கச் சொல்ல முடியும். வாழ்க்கையும் நம் சொல்லுக்கிணங்கி, மறுமொழி அளிக்கும்.

எதிரொலி கிடைக்க உதவியாயுள்ள சட்டங்களில் சில:

 1. கண்ணுக்குத் தெரியாத தொடர்பு.
 2. காரண-காரியம் என்ற தத்துவம்.
 3. பின்னணியாக உள்ள நிலையினுடைய நியதிகள்.
 4. வேறு நிலையிலுள்ள ( Level )மாற்று நியதிகள்.
 5. இலட்சியமும், காரியவாதமும் சேர்ந்துள்ள நிலை.
 6. குறையாக உள்ள தடை.
 7. முன் கட்டத்திலுள்ள குறை.

 1. நம் செயலையொத்த செயல்களுடன் உள்ள தவிர்க்க முடியாத தொடர்பு.
 2. மனதில் மறைத்து வைத்துள்ள குறிக்கோள்.
 3. மறைமுகமான தொடர்பு.
 4. செயலுக்குத் தேவைப்பட்ட காலம்.
 5. பொருள்களின் இராசி.
 6. மனிதர்களுடைய இராசி.
 7. செயலைவிட அதிக வலுவுள்ள சக்திகளின் தடை.
 8. நம் முன் செயல் நம்மைப் பாதிப்பது.
 9. விசால புத்தி.
 10. அறிவிலுள்ள குறை.
 11. உணர்விலுள்ள குறை.
 12. செயலுள்ள குறை.
 13. சூட்சுமத் தொடர்பு.
 14. நிலைகளில் ( Levels) உள்ள வித்தியாசம்.
 15. வேண்டுமென்று செய்ததின் பலன்.
 16. விரயத்தை விலக்குதல்.
 17. நம் முயற்சிகளை முழுவதும் முடித்தல்.
 18. பொருள்களை முழுமையாகக் குறைவறப் பயன்படுத்துதல்.

தினமும் கணக்கு, தவறாமல் எழுதுவதால் பணத்தின்மீது கவனமும், அக்கறையும் கொள்வதாகிறது என்கிறார் அன்னை. குழந்தையும், தெய்வமும் கொண்டாடுமிடத்தில் என்பது பண விஷயத்திலும் உண்மை. கணக்கு எழுதுபவரைத் தன்னைக் கொண்டாடுபவராகப் பணம் கொள்கிறது. அதனால் அவரிடம் அதிகமாகப் பணம் வரப் பிரியப்படுகிறது. கவனம் (Attention) என்பது சூட்சுமமானது. வருமானம் தெளிவானது. சூட்சுமத்தில் கவனத்திற்கு உரிய பணம் (Subtle) நடைமுறையில் கையில் சேருகிறது. எனவே அதிக வருமானம் வேண்டுமானால், பணத்திற்குக் கணக்கை எழுத வேண்டும் என்பதே ஒரு வகையில் வாழ்க்கையின் பதிலாக

அமைகிறது. அதிக வருமானம் தேவைப்பட்டால், அதிக மூலதனம் தேவை, அதிக உழைப்பு தேவை என்பது அர்த்தமுள்ளதாக இருக்கின்றன. அதிக வருமானம் தேவைப்பட்டால் சரியான கணக்கைத் தவறாமல் எழுத வேண்டும் என்பது அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது. அர்த்தமற்ற காரியம் ஒன்றை அர்த்தபுஷ்டியுள்ளதாகச் செய்வது கண்ணுக்குத் தெரியாத வாழ்க்கை எனும் படலம். பணத்தின் ஓட்டமும், கணக்கில் கவனமும் வாழ்க்கையில் சந்திக்கின்றன. கவனத்திற்குரிய ஓட்டத்தை வாழ்க்கை தன் பரிசாக, பதிலாக மனிதனுக்கு அளிப்பதை நாம் சூட்சுமமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர்களும், பிள்ளைகளுக்குப் பட்டப்படிப்பு கொடுக்க முடியாத கடந்த காலத்தில், செகண்டரி கிரேட் ஆசிரியர் தம் பிள்ளைப் படிப்பைத் தொடர்ந்து சென்னையில் பட்டம் பெறும்வரை நிறைவேற்றப் பிரியப்பட்டார். பிரசிடென்சி கல்லூரியில் சேர்க்க விருப்பம். சம்பளம் தவிர வேறு வசதியில்லை. பையன் S.S.L.C. பாஸ் செய்த வருஷம் இதற்குமுன் இல்லாததுபோல் அவரிடம் ட்யூஷன் படிக்க மாணவர்கள் வந்தனர். ஏராளமாக வருமானம் வந்ததால், பையனைத் தம் விருப்பப்படி சென்னையில் சேர்த்தார். ட்யூஷன் வருமானம் தொடர்ந்தது. பையன் படிப்பு முடிந்தது. ட்யூஷன் வருமானம் நின்றுவிட்டது. ரிடையர் ஆகும்வரை அதுபோல் ட்யூஷன் வரவில்லை. அவர் மனத்தில் ஆழமாக உள்ள ஒரு எண்ணத்தை ஏற்று, பிரதிபலிப்பதுபோல் பையன் சென்னையில் படிக்கும்வரை தொடர்ந்து வருமானம் வந்தது. படிப்பு முடிந்தவுடன் வருமானம் நின்றுவிட்டது. வருமானம் அவர் கையிலில்லை என்பது உண்மையானாலும், அவர் மனத்திண்மைக்கு அந்த வருமானத்தை உற்பத்தி செய்யும் திறமையுண்டு என்று தெரிகிறது. பையனுடைய படிப்புக்குத் தேவையான பணமும், அவர் மன எழுச்சியும் பின்னணியில் உள்ள வாழ்வில் சந்திக்கின்றன. அங்கிருந்து ஒரு பதில் அசரீரிபோல் வருகிறது. அதுவே அவர் எண்ணத்தைப் பூர்த்தி செய்யும் அதிக வருமானம்.

வாயால் கேட்ட கேள்விக்குப் பதில் கிடைப்பது நாம் அறிந்தது. நம் மனத்தில் எண்ணம் ஒன்றிருந்து, அதை நாம் வெளியிடாத நேரத்தில் அதற்குரிய பதிலை மற்றவர் சொல்வதுண்டு. இதை (Silent will) மௌனத்தில் எழும் மனோசக்தி எனலாம். இதுவும் ஒரு வகையில் எதிரொலியை எழுப்புவதாகும். இருவர் பேசுவது தெரிந்தது. இருவர் மனமும் கண்ணுக்குத் தெரியாதது. மனத்திலுள்ள எண்ணத்திற்கு எதிரியின் வாயால் கிடைக்கும் பதில் சூட்சுமம். நடைமுறையில் எழுப்பிய செயலாகும். இது ஓர் அரிய சக்தி. அனைவருக்கும் பயன்படக்கூடிய ஒன்று. புரியாத புதிர் போன்றது.

பஞ்சபாண்டவர்கள் வனவாசம் ஆரம்பித்த 13-ஆம் நாள் அவர்களுக்குள் நடந்த ஒரு விவாதத்தில் கிருஷ்ண பரமாத்மா, "பன்னிரண்டாண்டு வனவாசமும், 13-ஆம் ஆண்டு அஞ்ஞான வாசமும் இத்துடன் முடிந்துவிட்டன. நாம் போய் இராஜ்ஜியத்தைக் கேட்கலாம்'' என்றது அனைவருக்கும் திகைப்பை ஏற்படுத்தியது. விளக்கம் கூறும் வாயிலாக பரமாத்மா, "நமக்கு 12 மாதமானால்தான் ஒரு வருஷம். வேறொரு பஞ்சாங்கப்படி 1 நாள் ஒரு வருஷத்திற்கு சமம். அந்தக் கணக்குப்படி கடமை முடிந்துவிட்டது'' என்றார். நமக்குத் தெரிந்ததே முடிவில்லை. அதன்பின் மற்றொன்றுளது. அதன்பின்னும் வேறொன்றுளது. அதைக் கடந்த நிலையில் சிறந்த ஒன்றுளது. உயர்ந்தது அதற்கடுத்தது. சிகரம் கடைசி என்பதுபோல் நாம் வாழ்வது சமூக வாழ்க்கை; கண்ணால் பார்க்கக்கூடியது. மேஜை என்றால் கையால் தொட்டுப் பார்க்கலாம். அதுவே முடிவானதன்று. சட்டம் கண்ணுக்குத் தெரியாதது. உறவைத் தொட்டுப்பார்க்க முடியாது. உணர்வு என்றால் தெரிவதில்லை. ஸ்தூலமான நடைமுறை ஜடமான உலகத்தைச் சேர்ந்தவர்கள் நாம். நம் கண்ணுக்குப் பளிச்சென்று தெரிவது மட்டும் புரியும். மரம், ரோடு, கட்டடம், துணி, சாப்பாடு கண்ணுக்குத் தெரிவன. ஜடத்தின் பின்னால் உணர்வுண்டு. அதற்கடுத்த கட்டத்தில் அறிவுண்டு. சிகரமாக ஆன்மாவுண்டு. ஒவ்வொன்றும் ஒரு நிலை; அடுத்த உயர்ந்த நிலை. அத்துடனில்லை, உடலுக்கும், உணர்வுக்கும், அறிவுக்கும், ஜீவனுக்கும் சூட்சுமலோகம் என்பதுண்டு. மஹரிஷி ரமணர் சமாதி அடைந்த தினம் ஒரு பேரொளி வானுலகில் தவழ்ந்து சென்றது. ஆந்திராவில் உள்ள சிலர் கண்டனர். போளூரிலிருந்த விட்டோபா சுவாமிகள், அவ்வொளியைப் பார்த்து, "இதோ போறான் அவன்'' என்று கூவினார். எளியவருக்கும் காட்சியாக எதிர்காலத்தைக் காட்டும் சூட்சும லோகமிது. மையிட்டுப் பார்த்து திருடனுடைய அடையாளத்தைச் சொல்லும் ஜோஸ்யருக்கும் இது தெரியும். கனவுலகம் இதைச் சேர்ந்தது. இது தவிர மற்ற தேவதைகள் உள்ள லோகம் உண்டு. அதுவும் போக, மனத்தின் அளவிறந்த திறனைத் தாங்கி நிற்கும் மற்றொரு லோகமும் உண்டு. படிப்பேயில்லாதவர்க்கும் சில சமயம் பெருங்கவித் திறனை அளிப்பது இது. ஆன்மீக லோகம் எல்லாவற்றையும்விட உயர்ந்தது. வாழ்வு இத்தகைய பல நிலைகளில் இருப்பதால், ஒரு நிலையில் (Level) கட்டுப்படாத பிரச்சினை அடுத்த நிலையிலுள்ள சட்டத்திற்கு எளிதில் கட்டுப்படும். அதைப் பெற வாழ்க்கை உதவும். அதைப் பெற்று எதிரொலியாக நமக்கு வாழ்க்கை அளிக்க முடியும் என்பதை விளக்கவே மேற்கூறிய உண்மைகளை அறிமுகமாக எழுதுகிறேன். இவையெல்லாம் உயர்ந்த நிலைகள்; பாமரராகிய நமக்குப் புரியாது என்பது சரி. ஆனால் நம் சொந்த விஷயங்களில் எந்த மறைபொருளாயிருந்தாலும், சூட்சுமமாக இருந்தாலும் 90 பாகத்திற்கு மேல் புரியும் என்பதும் சரி. அதனால் இந்த சட்டங்கள் 10-இல் 9 விஷயங்களில் உதவும்.

ரோடு மேஸ்திரி மகன் பெரிய படிப்பு படித்துவிட்டான். நெடுநாள் வேலை கிடைக்கவில்லை. பிறகு உயர்ந்த வேலை கிடைத்தது. இதை எப்படி நாம் புரிந்துகொள்கிறோம்? நாட்டில் வேலைப் பஞ்சம். உயர்ந்த படிப்பிருந்தும் வேலை கிடைக்கவில்லை என்று அறிகிறோம். அவர் பாஸ் செய்தது இந்தக் காலத்திலில்லை. ஏட்டு வேலையைப் பெரியதாக நினைத்த காலம் அது. அறிவால் உயர்ந்த பட்டத்திற்கு உரியவராகிவிட்டாலும், சமூக அந்தஸ்து இல்லை. அதைப் பெற்றுக்கொள்ளும் தகுதி அவர் மனத்திலில்லை.

படிப்பால் பெற்றுக்கொடுக்க முடியாத தகுதியை மனம் பெற பல ஆண்டுகளாயின.

ஒரு மிராசுதார் வீட்டுப் பிள்ளையும், கடைநிலை ஊழியர் மகனும் உயிருக்குயிரான நண்பர்களாக சுமார் 20 வருஷங்களிருந்தனர். நெருங்கிய நட்புக்கு உதாரணமாயினர். பின்னர் ஏழை நண்பரின் நிலை, அந்தஸ்து உயர ஆரம்பித்தது. மிராசுதார் நிலையை எட்டியது, அதையும் தாண்டியது. உயர்ந்த நிலையை எட்ட ஆரம்பித்தவுடன் அவர்கள் நெருக்கம் குறைய ஆரம்பித்தது. பிரச்சினைகள் இல்லை, சண்டை, மனஸ்தாபம் இல்லை. இருவரும் ஏற்கனவே வேறு ஊர்களில் இருந்தார்கள். தற்சமயம் ஒரே இடத்திலிருக்கின்றனர். நெருக்கம் குறைந்தது; நட்பு மறைந்தது. அறிமுகமில்லாதது போலாயினர். இந்த மாற்றம் எதைக் காட்டுகிறது? ஆரம்ப காலத்து உறவு நட்பன்று. அந்தஸ்து வித்தியாசத்தால் ஏற்பட்ட பிரியம். நட்புக்கும், அதற்கும் சம்பந்தமில்லை. கண்ணுக்குத் தெரிவது நட்பு, பிரியம். உண்மையில் அவர்களைப் பிணைத்தது உயர்ந்த, தாழ்ந்த அந்தஸ்து.

ஏராளமான எழுத்துத் திறமையுள்ள ஒருவர், சமூக சேவையை எழுத்துமூலம் செய்ய விரும்பினார். அரசியல் காரணத்தால், சமூகத்தில் யதார்த்தத்திற்கு மாறான கொள்கைகளை நம்பினார். அவர் திறமை எடுபடவில்லை. அரசியல் சூழ்நிலை மாறியது. அவர் மனமும் மாறியது, சமூகத்தின் யதார்த்தத்தை அவர் மனம் ஏற்றுக்கொண்டது. உடனே அவர் எழுத்து பிரபலமடைந்தது. நாடெங்கும் புகழ் எட்டியது. வெளிநாட்டிற்கும் அவரை அழைத்துச் சென்றது. யதார்த்தத்திலிருந்து விலகி நிற்கும்வரை சமூக சேவை அவரை விட்டு எட்டி நின்றது.

உயிர் போகும்பொழுது ஒருவருடன் கடைசி நிமிஷத்திலிருப்பவர்கள் அவருடைய உண்மையான உணர்ச்சிக்கு உரியவர்களாவர். ஒரு போலீஸ் ஆபீஸர் ரிடையராகி தனியே இருந்தார்; மனைவியில்லை. 6 பிள்ளைகளும் அதே வீட்டிலும், அதே தெருவிலும் குடும்பம் செய்தாலும், மாதக்கணக்காக, வருஷக்கணக்காக அவர் எதிரில் வரமாட்டார்கள். கடைசி காலத்தில் பல இடங்களில் இருந்த அனைவரும் வந்துவிட்டார்கள். உயிர் பிரியும் க்ஷணத்தில் அத்தனைப் பிள்ளைகளும் உடன் இருந்தனர். நடைமுறையில் பிள்ளைகள் தூர இருந்தாலும், அவர் மனத்தில் பிள்ளைகள் இருந்ததால், கடைசி நிமிஷத்தில் அருகிலிருந்தனர்.

பிரபலமான பாதிரியார் பெரிய ஸ்தாபனத்தை அடியிலிருந்து எழுப்பியவர். 25 ஆண்டுகளில் அவர்போன்ற எவரும் சாதிக்காத ஒன்றைச் சாதித்தவர். அவர்கள் மடத்துச் சட்டப்படி பாதிரியாரை மாற்றுவது வழக்கமானாலும், இவரை அனைவரும் விதிவிலக்காகக் கருதினர். ஸ்தாபனத்தை கண்ணின் மணியாகவும், உயிராகவும் கருதிவந்தார். ஏனோ அவருக்கு வினோதமான எண்ணம் தோன்றியது. தன் 55-ஆம் வயதில் தமக்குக் கல்லறை கட்ட ஆரம்பித்தார். இதென்ன விபரீதப் போக்கு என பலரும் வியந்தனர். மடத்திற்குள் ஏற்பட்ட விவாதங்கள் இவருக்கு எதிராக உருவெடுத்தன. உயிர்போன்ற அவருடைய ஸ்தாபனத்தைவிட்டு அவரை மாற்றிவிட்டனர். காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினார். எதுவும் நடக்கவில்லை. வேறு இடம் சென்றார். 75 வயதுவரை இருந்தார். அவருக்கு வலிமையான ஆயுள். அவர் கட்டிய கல்லறை அவர் ஆயுளைப் பாதிக்கவில்லை. அவர் வேலைக்குக் கல்லறையாக அமைந்தது. கல்லறையை நாடினார்; ஸ்தாபனத்தை இழந்தார்.

ஒருவர் சேவை ஸ்தாபனத்தில் ஊழியம் செய்து கொண்டிருந்த காலத்தில் அங்குள்ள சந்தர்ப்பத்தால் அபாரத் திறமையைப் பெற்றார். அவர் பெற்ற திறமையை அவர் அறிந்தாரில்லை. அவரது திறமையை எடுத்துச்சொன்ன நண்பரைக் கேலி செய்தார். ஊழியர் Life Responseஐ நன்கு அறிந்தவர். எனவே நண்பர் விளக்கம் கூறும் வாயிலாக, "உங்கள் திறமை பெரியது. அது பலன் தரக்கூடியதுமாகும். அனுபவக்குறைவால் உங்கள் திறமை உங்களுக்கே தெரியவில்லை. அத்துடன் அந்தத் திறமைக்கேற்ற தைரியம் இல்லை. இருக்கும் திறமையை அறிந்து, அது செயல்படவேண்டிய இடத்திற்குரிய தைரியத்தைப் பெற்றால் 24 மணி நேரத்தில் பலன் Life Responseஆக வரும்'' என்றார். ஊழியர் விளக்கத்தை ஏற்றுக்கொண்டார். தைரியம் இல்லை என்பது உண்மைதான் என்றும், தம் திறமையை மேலும் விளக்கிக் கூறும்படியாகவும் கேட்டார். நண்பர் நீண்ட விளக்கத்தை அளித்தார். இரவு அதிக நேரமானாலும், தாம் மேலும் மனத்தளவில் தீவிர முயற்சி எடுப்பதாகச் சொல்லி ஊழியர் சென்றார். மறுநாள் காலை ஊழியர் நண்பர் படுக்கைக்கு அருகில் அவர் விழிப்பதற்காகக் கையில் தந்தியுடன் காத்திருந்தார். தாம் தேடிப்போகாத மகாநாடு ஒன்றில் 3 நாட்கள் முதன்மைப் பிரசங்கம் செய்யவேண்டும் எனவும், அப்படி அவர் சம்மதித்தால் அதற்கு 1.5 இலட்ச ரூபாய் சன்மானம் அளிப்பதாகவும் தந்தி சொல்லியது. தந்தியை நண்பரிடம் கொடுத்துவிட்டு, தாம் மனதில் செய்த தீவிர முயற்சியை ஊழியர் விவரித்தார். அவர் திறமை அவருக்குத் தெரியவில்லை. வாழ்க்கைக்குத் தெரிகிறது. ஆனாலும் அவர் மனம் இடம்கொடுத்த பின்னரே, வாழ்க்கை எதிரொலியாகச் செயல்பட முடிகிறது. வாழ்க்கையைச் செயல்படுத்த நம்மால் முடியும், அதற்கு இந்த ஞானம் உதவும்.

குதர்க்கம் நிறைந்த குரு ஒருவர்; இவரிடம் எவரும் வருவதில்லை. ஒருவர் மட்டும் குருவின் குதர்க்கத்தைப் புறக்கணித்து, அவருடனிருந்தார். "நான் உன்னைச் சரியாக நடத்தாதபொழுதும் நீ ஏன் இன்னும் என்னுடனிருக்கிறாய்?'' என்று கேட்கும் அளவுக்குக் குதர்க்கவாதி அந்தக் குரு. சிஷ்யன் குதர்க்கத்தைப் புறக்கணித்தான். கடமைகளை நிறைவேற்றுதல் நல்லது என்று கொண்டான். சிஷ்யன் வாழ்வு மலர்ந்தது. நிமிஷம் தவறாமல் குரு, தம் ஆசியால்தான் எல்லாம் நடக்கிறது என்று சொல்வார். சிஷ்யன் கார் வாங்கினான். குருவுக்குச் சந்தோஷம். இரண்டாம் காரும் வாங்கினான் சிஷ்யன். குருவின் குதர்க்கம் செயல்பட ஆரம்பித்தது. தான் சிஷ்யனுடைய காரில் ஏறுவதால்தான் சிஷ்யன் செல்வம் பெறுகிறான் என்று நினைத்தார்; சொன்னார். இரண்டாம் காரில் ஏற மறுத்தார். நிலைமை

மாறியது. அவர்கள் பிரிந்தனர். குரு வெளிநாடு சென்றார். அங்கிருந்த வேறொரு சிஷ்யனுக்குத் தான் வருவதாக எழுதியிருந்தார். சிஷ்யர் விமான நிலையம் வந்தார். பிரயாணிகள் பட்டியலில் குறிப்பிட்டபடி குருவின் பெயரைக் காணோம். விமானம் புறப்பட்ட இடத்தை போனில் கூப்பிட்டு விசாரித்தார். அந்தப் பட்டியலிலும் குருவின் பெயரில்லை. இவர் Life Responseஐ விவரமாக அறிந்தவர். வீடு திரும்பினார். குரு பட்டியலை எல்லாம் பொய்த்துவிட்டு அதே விமானத்தில் வந்தார். சிஷ்யனைக் காணோம். போன் செய்யத் தெரியாது. சிரமப்பட்டு சிஷ்யனைக் கூப்பிட்டார். 150 மைலுக்கு அப்பாலிலிருந்து சிஷ்யன் மீண்டும் வந்தான். குருவைப் பார்த்தவுடன், முதல் கேள்வியாக, "ஏன் பட்டியலில் உங்கள் பெயரில்லை?'' என்றான். குருவுக்குப் புரியவில்லை. ஆனால் அவரது முதல் சிஷ்யனுக்குப் புரியும். அன்புடன் அளித்த காரில் குரு ஏற மறுத்தார். நமக்குத்தான் இது வேறு கார், அது வேறு கார். கார் என்பது ஒன்றே. தன்னை நிராகரித்ததைக் கார் மறக்கவில்லை. வந்த காரை அன்று திருப்பி அனுப்பினார். இன்று வந்த கார் திரும்பப் போய்விட்டது. மனிதன் மன்னிக்கலாம், மறக்கலாம். கார் மறக்காது, மன்னிக்காது. இந்தக் குருவுக்கு வெளிநாட்டுக் கார் மட்டுமன்று, சிஷ்யனின் காரை மறுத்ததிலிருந்து கார் என்றால் பிரச்சினைதான்.

சுத்தமட சாம்பிராணி ஒருவர். எந்தத் திறமையும் இல்லாதவர். படிப்பில்லை; சம்பாதிக்க முடியாது. தன் 70 வயது வாழ்நாளில் 100 ரூபாய் சம்பாதித்ததில்லை. ஆனால் கடமைகளை நிறைவேற்றும் மனப்பான்மையுடையவர். பாசம் உண்டு; சுத்த மண்டு. ஆனாலும் தம்மால் முடிந்த இடங்களிலெல்லாம் பூரணமாகக் கடமை உணர்வைப் போற்றினார்; நிறைவேற்றினார். ஒரே ஒரு நாள்கூட அவருக்கு வாழ்க்கை சிரமம் வைக்கவில்லை. இருக்கும் சிரமங்களை எல்லாம், மற்றவர்கள் அவருக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாமல் பார்த்துக்கொண்டனர். அவரால் முடிந்த அனைத்தையும் எவ்வளவு சிறியதானாலும், பாக்கியில்லாமல், மனத்தில் குறையில்லாமல்

நிறைவேற்றினார். அதையே வாழ்க்கை திரும்ப அவருக்குப் பரிசாக அளித்தது.

இராஜகுமாரன் ஒருவன் ஓர் இராஜகுமாரியைச் சந்தித்துப் பேச நடுவில் திரையிட்டு ஏற்பாடு செய்தார்கள். மறுநாள் அவனுடைய உருவத்தைப் படமாக எழுதி இராஜகுமாரி அவனுக்கு அனுப்பியிருந்தாள். தன்னைப் பார்க்காமல் எப்படி படத்தை எழுத முடியும் என்பது அவனுக்குப் புதிராக இருந்தது. திரையடியில் அரசகுமாரன் கட்டைவிரல் தெரிந்தது. அதைப்பார்த்து, அதன்மூலம் உருவத்தைக் காண தம்மால் முடியும். சாமுத்திரிகா அங்கலக்ஷணம் என்ற சாஸ்திரத்தை தாம் பயின்றவள் என்று விளக்கம் சொல்லி அனுப்பினாள். சாஸ்திரம் ஜீவனை விவரிப்பதால், ஜீவனின் ஒரு பகுதிமூலம் முழுமையும் காணமுடிகிறது. உருவம் வெளிப்படையாகத் தெரிவது; ஜீவன் உள்ளிருப்பது. வெளித்தோற்றம் பகுதி; ஜீவன் முழுமை. தோற்றம் ஜீவனுக்குட்பட்டது. எந்த ஒரு செயலையும், அதன் முழுமையைக் கருதிப் பயின்றால், அதன் பகுதிகளைப் பற்றிய அறிவு பூரணமாகக் கிடைக்கும். பகுதியில் உள்ள பிரச்சினை ழுமையின் அறிவுக்குக் கட்டுப்படும்.

குருசாமி முதலியார் கடந்த நாட்களில், பிரபலத்துடன் தொழில் நடத்திய டாக்டர். ஓர் உறவினருக்குத் தினமும் ஜுரம் வருவதால், அவருடைய நாடியைப் பார்த்து, நுரையீரலில் ( Tumour) கட்டியிருப்பதாக அவரால் சொல்ல முடிந்தது. நுரையீரலில் உள்ள கட்டியை உணர்த்தும் திறன் நாடிக்குண்டு. அது முழுமையை உணர்த்தும் ஞானம்.

5-ஆம் வகுப்புப் படிப்புள்ள தமிழ்ப் பண்டிதருக்கு B.A பட்டம் பெற ஆசை. தனக்குப் பாடம் சொல்லித்தரும்படி அவர் கேட்டவர்கள் எல்லாம் அவரைக் கேலி செய்ததால், அந்த ஆசையை கைவிட்டுவிட்டார். ஒரு பட்டதாரி மாற்றான எண்ணத்தைச் சொன்னார். B.A. படித்து பாஸ் செய்வது எளிதன்று. ஆனால் முறையாக முயன்றால், சிரமப்பட்டு முடிக்கலாம் என்றார். தமிழ்ப்

பண்டிதருக்கு நம்பிக்கையுடன், ஆர்வமேற்பட்டது. பட்டதாரி வெளியூர்வாசி. தன்னூருக்கு வந்து தனக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று பட்டதாரியைக் கேட்டுக்கொண்டார். அந்த ஊரில் பட்டதாரிக்கு எந்த வேலையுமில்லை. எனினும், தம் இரு சகோதரிகளுக்குத் திருமணம் முடிந்தபின்னரே தாம் நிரந்தர வேலைக்குப் போக இருப்பதால், இரண்டு ஆண்டுகள் பண்டிதர் ஊரில் தற்காலிகமாக வேலையை ஏற்று, B.A. பாடம் சொல்லித்தர இசைந்தார். ஏராளமான வரன்கள் வந்ததால், இரு திருமணமும் ஒரே வருஷத்திற்குள் முடியும் நிலை இருந்தது. முதல் திருமணம் நிச்சயமாயிற்று. மறுநாள் தகராறு ஏற்பட்டது. கோர்ட்வரை விஷயம் சென்றது. அடுத்த ஆண்டு தகராறு ஓய்ந்து திருமணம் நிறைவேறியது. ஒரு வாரத்தில் தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து தொந்தரவாக இருந்தது. இதற்குள் இரு ஆண்டுகள் முடிந்து பண்டிதர் B.A.. எழுதினார்; பெயிலானார். மீண்டும் எழுதினார்; பெயிலானார். இது 3-ஆம் ஆண்டு. சகோதரியின் திருமணத் தகராறு, நிரந்தரமாக 3-ஆம் ஆண்டு முடிவில் தீர்ந்தது. பண்டிதரும், அதே சமயம் B.A. பாஸ் செய்தார். "உங்கள் பட்டமும், எங்கள் வீட்டுத் தகராறும் ஒரே சமயத்தில் முடியவேண்டுமென்றிருக்கிறது போலும்'' என்று பட்டதாரி பண்டிதரிடம் சொல்லியபொழுதும் அதில் பொதிந்துள்ள சூட்சுமத்தை அவர் அறியவில்லை. திருமணங்கள் முடிந்துவிட்டால் பட்டதாரி அங்கிருக்கமாட்டார் என்பதால், முதல் திருமணம் நிச்சயமான அன்றே பண்டிதருக்குத் திகில் ஏற்பட்டது. அந்த பயத்தின் நேரடியான எதிரொலியே நிச்சயதார்த்தத்தில் தகராறு. தகராறு தீர்ந்து திருமணம் முடிந்தபின்னும் பண்டிதருக்குத் தம் படிப்பு முடியும்வரை பட்டதாரி வீட்டுத் திருமணம் சிக்கல்லாமலிருந்தால் தமக்கு ஆபத்து என்றறிந்ததால், திருமணத்திற்குப் பின்னும் தகராறுகள் உருவாயின. அவருக்கு ரிஸல்ட் வருவதும், தகராறு தீர்வதும் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தகராறு முதல் ஏற்பட்டது பயத்தின் எதிரொலி. கடைசியாகத் தீர்ந்தது, படிப்பு முடிந்ததின் எதிரொலி. ஒரு திருமணம் முடிய அனைத்தும் இருந்தும்,

உணர்வு வழிவிடவில்லை என்பதால், அது தடைப்பட்டது. செயல் பூர்த்தியாக அறிவும், உணர்வும், துணை நிற்க வேண்டும்.

1914-இல் அன்னை சூட்சும உலகில் இந்தியா சுதந்திரமடைந்துவிட்டது என்று கண்டார். தாம் கண்டதை ஸ்ரீ அரவிந்தரிடம் சொன்னார். 1910-இல் இறைவன் ஸ்ரீ அரவிந்தரிடம், "இந்திய விடுதலை பூர்த்தியாகிவிட்டது; அடுத்தபடி யோகத்தை மேற்கொள்'' என்று பணித்தார். 1940-இல் கிரிப்ஸ் மிஷன் இந்தியாவுக்கு வந்து சுதந்திரத்திற்குரிய முன்னேற்பாடுகளைச் செய்ய முனைந்தது. காங்கிரஸ் தலைமைக்குத் தெளிவில்லை. பூரண சுதந்திரம் பெற நாட்டின் பூரண ஆதரவும், மக்கள் ஆர்வமும் இருக்கின்றன. அதற்குரிய அறிவு தெளிவாக இல்லை. அது சமயம் பகவான் ஸ்ரீ அரவிந்தர் காங்கிரஸ் தலைமைக்குக் கிரிப்ஸ் மிஷனுடைய முக்கியத்துவத்தைச் சொல்லி, அதை ஏற்றுக்கொள்ளும்படிக் கேட்டுக்கொண்டார். குழப்பம் மிகுதியாக இருந்ததால், தலைமை செய்வதறியாது நின்றது. ஸ்ரீ அரவிந்தரின் ஆலோசனையைப் புறக்கணித்தது. அதன் விளைவாக இந்தியா இருநாடுகளாகப் பிரிந்து, சுதந்திரமடையவேண்டி வந்தது. செயல், உணர்வு, அறிவு ஆகிய மூன்றும் பூரணமாக இல்லாமல் ஒரு காரியம் நிறைவேறாது என்பதற்கு இந்திய சுதந்திரமே அத்தாட்சி.

நம்முடைய அன்றாட வாழ்வில் நடக்கும் சிறு காரியங்களும், பெரிய காரியங்களும் இந்தச் சட்டங்களுக்கு உட்பட்டவை. நாம் அவற்றைக் கவனிப்பதில்லை. காரியம் தடைபட்ட நேரத்தில்தான் யோசனை செய்கிறோம். அதுவும் நமக்குத் தெரிந்த முறையில் அதைச் சரிசெய்ய முனைகிறோம். முடியாவிட்டால், விட்டுவிடுகிறோம். நமக்குத் தெரிந்த முறைக்கும், வாழ்க்கையின் நியதிகளை உபயோகப்படுத்தும் முறைக்கும் உள்ள வித்தியாசம் தபாலுக்கும், டெலிபோனுக்கும் உள்ள வித்தியாசத்தைப் போன்றது. நம் கடந்தகால வாழ்வை ஊன்றிப்பார்த்தால், பூர்த்தியான விஷயங்களில் (செயல், உணர்வு, அறிவு), இந்த எல்லா அம்சங்களும் குறைவற இருந்திருக்கும்.

தடைபட்ட காரியங்களில் குறை இருக்கும். இந்தப் புதிய அறிவை ஏற்று, இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், விளங்காதனவெல்லாம் விளங்கும். அத்துடன், இன்னும் குறையாக உள்ள காரியங்களைப் பூர்த்தி செய்யும் திறன் ஏற்படும். மேலும் எதிர்காலத்தில் நமக்கு வேண்டிய வாய்ப்புகளை உற்பத்தி செய்யும் திறனும் ஏற்படும். இக்கட்டுரையில் ஒரு பகுதி விளங்கினாலும், நம் சொந்த பாக்கிகளை நிவர்த்தி செய்யும் சக்தி ஏற்பட்டுவிடும் என்பதால் பல கோணங்களிலிருந்தும் உதாரணங்கள்மூலம் குறைகளையும், தடைகளையும், நிபந்தனைகளையும் விளக்க முயல்கிறேன்.

ஜெனரல் ஆஸ்பத்திரிக்குத் திறந்த வாயை மூட முடியாதபடி ஒருவரை அழைத்துவந்தார்கள். கொட்டாவி விட்டபொழுது திறந்த வாய் திரும்ப மூடவில்லை. டாக்டர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்திருந்த நேரத்தில், ஒரு டாக்டர் அடுப்பிலிருந்து எரியும் கொள்ளிக்கட்டையைத் தம் பின்னால் மறைத்து எடுத்துவந்து திடீரென்று மூடாத வாயை நோக்கி நெருப்பைக் கொணர்ந்தார். பயத்தில் வாய் மூடிக்கொண்டது. மருத்துவ அறிவுக்கு எட்டாத ஞானம் அது. ஆபத்து சமயத்தில் உடல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அபார சக்தியை உற்பத்தி செய்யும் திறனுடையது. தாடை மூட்டு கொட்டாவியால் திறந்தபொழுது, தவறுதலாகச் சிக்கிக்கொண்டது. அந்தச் சிக்கலை எடுக்க வழியில்லை. எலும்பு இணைப்பு வலியை உற்பத்தி செய்தது. எந்தச் சட்டத்தின்படி எலும்பு இணைப்பு இயங்குகிறதோ, அந்தச் சட்டம் உடைந்துவிட்டது. இனி வழி எதுவும் புலப்படவில்லை. ஆபத்து என்பது பெரிய விஷயம். அது உயிரைக் காப்பாற்றும் நேரம். உயிர் எலும்பைவிடப் பெரியது. உயிர் செயல்படும் சட்டம், எலும்பு இயங்குவதைவிட உயர்ந்த சட்டம். உயர்ந்த சட்டம், உயர்ந்த சக்தியை உற்பத்தி செய்யும். கொள்ளிக்கட்டையைப் பார்த்தவுடன், உயிர் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அபரிமிதமாக சக்தியை உற்பத்தி செய்கிறது. எலும்பு இணைப்பைச் சரிசெய்யத் தேவையான சக்தியைவிட இது அதிகமானது. அந்த க்ஷணத்தில் சிக்கலான இணைப்பு, சிக்கலை

இழந்து செயல்படுகிறது. எலும்பில் ஏற்பட்ட சிக்கலை அவிழ்க்க, அதைவிட உயர்ந்த, கொள்ளிக்கட்டையைக் கொண்டுவந்த டாக்டருக்கு, அந்த உபாயம் தோன்றியது. இந்த உபாயம் அவரது உயிரைச் செயல்பட வைத்தது. எலும்பின் சிக்கலை அவிழ்த்தது. உயிரும், எலும்பும் இணைந்து செயல்படும் நிலை வாழ்வு எனப்படும். டாக்டருடைய உபாயத்திற்கு வாழ்க்கை உயிர்மூலமாக எதிரொலியைக் கிளப்பிச் சிக்கலை விலக்கியது. ஒரு நிலையில் (Level) தீராத சிக்கலை அவிழ்க்க அதற்கடுத்த நிலையிலுள்ள சக்தியை வாழ்வின்மூலம் செயல்படவைக்கும் இம்முறையை (Life Response) வாழ்வின் மறுமொழி என்று நான் பெயரிட்டழைக்கின்றேன்.

வெளிநாட்டு வியாபாரி, இந்திய வியாபாரிக்கு வாங்கிய சரக்குக்கு (Telex) டெலக்ஸ்மூலம் தம் பாங்கிலிருந்து, இந்திய பாங்குக்குப் பணம் அனுப்பி எந்த பில்லுக்குப் பணத்தைக் கட்டுவது என்ற விளக்கமான செய்தியனுப்பியிருந்தார். இந்திய வியாபாரி வெளிநாட்டு வியாபாரிமீது வேறொரு விஷயமாகப் பொய் வழக்குப் போட்டிருந்தார். சரக்குக்குப் பணம் வந்தவுடன், அந்தப் பணத்தை வழக்கிருக்கும் கணக்குக்கு நேர் செய்துவிட்டு, மீண்டும் பணம் வேண்டும் என்று வெளிநாட்டு வியாபாரியைக் கேட்டார். அதற்காக இந்திய வியாபாரி கோர்ட்டுக்குப் போனார். இந்திய வியாபாரியின் வக்கீல், பணம் வந்த இந்திய பாங்குக்கும் வக்கீல். வக்கீலும், பாங்க் ஏஜெண்ட்டும் இந்திய வியாபாரிக்கு உடந்தை. வெளிநாட்டு வியாபாரி செய்வதறியாமல் திகைத்தார். கோர்ட்டுக்கு, பாங்க் அதிகாரியை வரவழைத்து, தாம் அனுப்பிய டெலக்ஸ் செய்தி எங்கே என்று கேட்டார். பாங்க் இல்லாத பொய்களையெல்லாம் சொல்லியது. வருஷம் 3 ஓடிவிட்டது. சுமார் 10 பெட்டிஷன்கள் போட்டு கேஸ் நடக்கிறது. பிரான்ச் ஆபீஸ், சென்னைத் தலைமை ஆபீஸ், பாம்பே தலைமை ஆபீஸ், வெளிநாட்டு பிரான்ச் ஆகிய இடங்களிலிருந்து கேட்கும் கேள்விகளுக்குச் சாதுரியமான பொய் சரமாரியாக வருகிறது. வெளிநாட்டு வியாபாரி ஒரு பாங்க் ஆபீஸரைக் கலந்து யோசனை கேட்டார். அவர் ஒரு வழி சொன்னார். ஆமையைத் திருப்பிப்போட்டுத் தட்டு என்பது போன்றது அது. உங்களுக்கு உரிமையில்லாத எல்லா இடங்களிலும் நீங்கள், தலையால் முட்டி தலையைக் காயம் செய்துகொள்கிறீர்கள். உரிமையுள்ள இடம் உங்களுக்குத் தெரியவில்லை. உங்கள் நாட்டில் பணம் கட்டிய பாங்கிடம் பணத்தைத் திருப்பித்தரச் சொல்லுங்கள். பணம் உங்களுடையது; பாங்குக்குப் பணத்தின்மீது உரிமையில்லை. நீங்கள் சொல்லியபடி பணத்தைச் சொல்லிய பில்லின் மீது கட்டாவிட்டால், அது குற்றம். பணம் உங்களுடையது என்பதை மறந்துவிட்டீர்கள் என்றார். வெளிநாட்டு வியாபாரிக்குப் புரிந்துவிட்டது. தம் ஊரில் பாங்க், பணத்தை ஒரு நாளில் கொடுக்க நேரிடும் என்பது விளங்கிவிட்டது. தான் தம் நாட்டில் கோர்ட்டுக்குப் போனால் 24 மணி நேரத்தில் பணம் வந்துவிடும் என்பது தெரிந்தது. பணத்தைத் திருப்பிக்கேட்டார். மறுநாள் இந்திய கோர்ட்டில் 3 வருஷங்களாக ஒளிந்திருந்த டெலக்ஸ் செய்தி தாக்கல் செய்யப்பட்டது. டெலக்ஸ் செய்தியைக் கேட்பது (Procedure) நடைமுறை. பாங்க் தில்லுமுல்லு செய்கிறது. உரிமை பெரியது; நடைமுறையில் ஏற்பட்ட சிக்கலை, உரிமையைப் பயன்படுத்தி தீர்க்கும் உபாயம் நமக்குத் தோன்றாது. நாம் தெளிவு இல்லாமலிருக்கிறோம். பாங்க் ஆபீஸருக்குத் தெளிவுண்டு; அதனால் பலனுண்டு. பிரச்சினை ஏற்பட்ட அதே நிலையில் மண்டையை உடைப்பதைவிட்டு, அதன் பின்னணியில் உள்ள சக்தியைப் பயன்படுத்த ஓர் உபாயம் கண்டுகொண்டால், வாழ்க்கை எதிரொலியாகச் செயல்படும்.

ஏழை விவசாயிகளுக்கு ஏராளமாகப் பணத்தை ஏற்பாடு செய்து போர்க்கிணறு போட்டு, அவர்கள் பயனடைய வேண்டும் என்று கேட்டபொழுது, அவர்களுடைய அறிவு அந்த வாய்ப்பைப் புறக்கணித்தது. அவர்களில் ஒருவர் பணம் பெற்று, பெரிய ஆதாயமடைந்தபொழுதும், மற்றவர்கள் அந்த ஆதாயத்தை நாடவில்லை. புதுப் பணம் படைத்த சிறு விவசாயிக்கு ஊர்ப்பஞ்சாயத்தில் உயர்ந்த நிலை ஏற்பட்டது. நாட்டாண்மைகாரனுக்கும், சொஸைட்டி தலைவருக்கும் ஏற்பட்ட சண்டையைத் தீர்த்துவைக்க

அவனை அழைத்தார்கள். ஊரில் எவராலும் அந்த ஏழைக்குக் கிடைத்த புது மரியாதையைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எப்படி அவனுக்கு இந்த மரியாதை ஏற்பட்டது? எல்லாம் அந்த போர்க்கிணற்றால்தானே என்று அனைவரும் அன்றே பாங்கில் பணம் பெற விண்ணப்பித்தனர். அறிவால் செயல்படாத மனிதன் ஆதாயத்திற்காக ஓடுவான். ஆதாயத்திற்கும் நகராதவன் மரியாதைக்காகப் பறப்பான். அறிவுக்கும், ஆதாயத்திற்கும் அப்பாலிருந்த விவசாயிகள், ஏழையின் மரியாதை உயரும் நேரத்தில் தங்கள் சொந்த மரியாதை பறிபோவதை உணர்ந்தார்கள். அறிவு செய்ய முடியாத காரியத்தை, உணர்வு செய்து முடித்தது. பிரச்சினைக்கு உரிய இடம் எதுவோ, அதைக் கண்டுகொண்டால், அதற்குரிய உபாயத்தையும் கண்டுபிடித்துவிட்டால், அறிவு தவறிய நேரத்தில் வாழ்க்கை செயல்படும். அறிவு பதில் சொல்லாத நேரத்தில், வாழ்க்கை நல்ல பதிலைச் சொல்லிற்று. கண்ணுக்குத் தெரிந்தது போர்க்கிணறு. அதில் வருவது வருமானம். கண்ணுக்குத் தெரியாதது அவனது மரியாதை உணர்வு. கண்ணுக்குத் தெரிந்தது தவறிய காலத்தில், கண்ணுக்குத் தெரியாதது செயல்பட்டு பலன் தர வாழ்க்கை உதவும்; மறுமொழி சொல்லும்; எதிரொலிக்கும். இவை இரண்டையும் ஜீவனோடு இணைப்பது வாழ்க்கை. அதன் சூட்சுமத்தை அறிய உதவுவது (Life response) வாழ்வின் மறுமொழி.

ஒரு காரியம் பூர்த்தியாகத் தேவையானவை பொருள்கள், அந்தச் செயலை நிறைவேற்றும் ஆர்வம், அதற்குரிய அறிவு. அறிவும், ஆர்வமும், பொருளும் இருந்தால் காரியம் நிறைவேறும். அவற்றுள் ஏதேனும் குறையிருந்தால், தடை ஏற்படும். ஷர்ட் தைப்பதற்குத் தேவையான பொருள்களான துணி, பட்டன், நூல், மெஷின் ஆகியவற்றில் நூல் குறையானாலும் தைப்பது தடைபடும்; துணியை வாங்கி டெய்லரிடம் கொடுத்து, தைத்து வாங்கிவர ஆர்வம் குறையாயிருந்தால், வாங்கிய துணி பல நாட்கள் அப்படியே இருப்பதுண்டு. எந்த டெய்லரிடம் தைக்க வேண்டும் என்று அறிவில் தெளிவு தேவை. உயர்ந்த சூட்டிங் வாங்கி, இதுவரை சூட் தைக்காத

டெய்லரிடம் கொடுத்தால், அவன் பை போலத் தைத்துத் தருவான். நடைமுறையில் நாம் இந்தத் தவறு செய்வதில்லை. ஒரு காரியம் கெட்டுப்போனால், இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையுண்டு. காரியம் நீண்ட நாட்களாகத் தடைபடுகிறது, வழி தெரியவில்லை என்றால் Life Response உதவும்.

B.A. படிக்கும் பண்டிதருடைய திகில், தங்கை திருமணத்தில் கோளாறு ஏற்படுத்துகிறது என்பது தெரிந்திருந்தால், அவர் திகிலை நீக்க வழிசெய்தால், திருமணத் தகராறு விலகியிருக்கும். தெரியாததால், தானே விலகும்வரை காத்திருக்க வேண்டியதாயிற்று.

நம் வாழ்க்கையை புரட்டிப்பார்த்தால், ஒரு நல்ல பள்ளியில் சேர முடிந்தது; பரிசு வாங்கியது; வகுப்பில் முதல்வனாக வந்தது; குடும்பத்தில் எல்லோராலும் பாராட்டப்பட்டது; பட்டம் பெற்றது; வேலைக்குப் போனது; தொடர்ந்து பதவியுயர்வு வந்தது; திருமணம்; குழந்தை பெற்றது; வீடு கட்டியது; சொந்த ஊரைவிட்டுப் போனது போன்ற எல்லா முக்கியக் கட்டங்களையும் இன்று யோசனை செய்துபார்த்தால், பூர்த்தியான எல்லாக் காரியங்களிலும், எல்லா அம்சங்களும் (அறிவு, உணர்வு, செயல்) குறைவற இருந்திருக்கும். தவறிய பரிசு, கிடைக்காத இடம், விட்டுப்போன Rank, வீட்டில் ஒதுக்கப்பட்டது; பட்டப்பரீட்சையில் பல முறைகள் தவறியது; வேலை கிடைக்காதது; பதவியுயர்வு தள்ளிப்போனது; திருமணம் தடையானது; பிள்ளையில்லாதது; வீடு கட்ட முடியாதது; சொந்த ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டது போன்ற எல்லா முக்கியமான காரியங்களையும் இன்று சோதனை செய்தால், அவை பூர்த்தியாக வேண்டியவற்றுள் (அறிவு, உணர்வு, செயல்) ஒன்றோ, பலவோ குறைவாக இருந்திருக்கும். அந்தக் குறையை இன்று நிவர்த்திசெய்தால், அந்தக் காரியம் பூர்த்தியாகும். அக்குறைகளை நேரடியாகப் பூர்த்தி செய்ய முடியாத இடங்களில் அவற்றின் பின்னணியிலுள்ள மற்ற உயர்ந்த சக்திகளால் பூர்த்தி செய்யலாம். ஒரு குறையிருக்கலாம்; அதை விலக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் வேறு ஒரு நிறைவு

இருந்தால், அதன்மூலம் இக்குறையை மறைமுகமாக விலக்க முயல Life Response உதவும். தன்னுடைய சொந்த வாழ்க்கை என்பதால் பெரும்பாலான விஷயங்கள், சூட்சுமமானவைகூட புரியும். பொதுவாகப் புரியாத விஷயங்கள், சொந்த விஷயத்தில் புரியும். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்து, அன்று தெரியாத தடைகள், குறைகள் இன்று விளங்கினால், அவற்றை நேராகவோ அல்லது வாழ்க்கைமூலமாகவோ நீக்க முயன்றால், நெடுநாள் தீராத பிரச்சினை தீரும். இந்தப் புதிய அறிவு ஏற்பட்டபின், தன் விஷயங்களைத் தீர்க்கும் அளவுக்கு புரியவில்லை என்ற நிலை ஏற்படாது. அப்படி ஏற்பட்டால், ஆத்ம சமர்ப்பணம் செய்து அன்னையிடம் வரலாற்றைச் சொல்லும்பொழுது, நமக்குத் தெரியாத தடைகளை அன்னையின் ஒளி கரைக்கும். அப்படியும் ஒரு பிரச்சினை தீரவில்லை என்று இருப்பதில்லை. இருப்பதாக வைத்துக்கொண்டால், அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனையால் அது தீரும். ஏற்கெனவே செய்த பிரார்த்தனை பலிக்கவில்லை என்றால், இந்தப் புதிய அறிவு ஏற்பட்டபின், அதனடிப்படையில் செய்த ஆத்ம சமர்ப்பணத்திற்குப்பின், பிரார்த்தனை பலிக்க வேண்டிய புது நிலை உருவாகிவிடும். இந்த நிலை வரை பக்தன் வருவதில்லை. பாதி வழியிலேயே பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

அதேபோல் நெடுநாட்கள் பாக்கியாக இருந்த வேலைகள் திடீரென்று பூர்த்தியாகும்பொழுது கவனித்துப்பார்த்தால், நமக்குத் தெரியாத தடைகள் விலகுவதைக் காணலாம். அன்று தடை என்று புரியாதவை இன்று தடை என்பதை விளக்கும்வகையில் செயல்படும். மனதில் ஏற்பட்ட மாற்றம் எது, செயல் என்ன வித்தியாசம், உணர்வில் புதியது எது என்று யோசனை செய்தால் (Life Response), இதனுடைய அம்சங்கள் விளங்கும்.

காலவரையறை என்று உண்டு. அது முடிந்தபின்பே வேலை பூர்த்தியாகும். பொதுவாக இதை நாம் அறிவோம். ஆனால் பல விஷயங்களில் அறிவதில்லை. சிமெண்ட் காங்க்ரீட் காய 22

நாட்களாகும் என்பது புரியும். நட்ட பயிர் முளைக்க எத்தனை நாட்களாகும் என்பது தெரியும். ஆனால் ஒரு புத்தகம் படித்து முடிந்தவுடன் அடுத்த புத்தகம் படிக்க இடைவெளி தேவை என்பது தெரிவதில்லை. ஒருவருக்கு 10 நாட்களும், அடுத்தவருக்கு 1 வருஷமும் தேவைப்படும். சிலருக்கு இடைவெளி தேவைப்படாது. 3 மாதம் இடைவெளி தேவைப்படுபவர் 4 புத்தகங்களை வாங்கிவந்து உடனே படித்து முடிக்க முயன்றால், முதல் புத்தகத்துடன் படிப்பு 3 மாதம்வரை முடிந்துவிடும். அடுத்த 3 மாதங்களுக்கு புத்தகத்தைத் தொட முடியாது. மனதில் படிக்கும் திறனுக்கு அளவுண்டு. முதல் புத்தகம் முடிந்தபின் மீண்டும் அத்திறன் சேர அவரவர்களுக்குரிய நாளாகும். அதைப் புறக்கணிக்க முடியாது. படிப்பதற்கு மட்டுமன்று; எல்லா வேலைகளுக்கும் இதுபோன்ற நிபந்தனையுண்டு. தொடர்ந்து செய்ய முடியாது. வீட்டில் விருந்து ஏற்பாடு செய்தால், அடுத்த விருந்திற்குப் பணமிருக்காது; அதற்குக் காலம் தேவை. பணம் மட்டுமன்று; முயற்சிக்கும், உழைப்புக்கும் காலம் தேவை. அத்துடனில்லை, நம் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கும் இதுபோன்ற (Cycle of Time) காலவரையறையுண்டு. முதல் வாரத்தில் 10 விருந்தினர்கள் வந்துபோனால், அடுத்த விருந்தினர் குழாம் வர ஒரு காலம் தேவை. நம் வீடும், விருந்தினரும், நம் திறனும் ஒரு சூழலுக்கு உட்பட்டவை. அச்சூழல் (Atmosphere) விருந்தினர் வருவதை நிர்ணயிக்கக்கூடியது. நாம் ஏற்பாடு செய்யும் விருந்துகளை நாம் அறிவோம். நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு அது எப்படித் தெரியும் எனலாம். நாமும், அவரும் ஒரே சூழலின் பகுதிகளாக இருப்பதால், நம் நிலைமையை சூட்சுமமாக அவர்களை அறியாமல் உணரும் திறன் அவர்களுக்குண்டு. "பல நாட்களாக வர நினைக்கிறேன், முடியவில்லை'' என்று நண்பர்கள் சொல்வது அதையே குறிக்கும். எழுத்திற்கும் அதே சட்டமுண்டு. பெரிய எழுத்திற்கு மட்டுமன்று, சாதாரணக் கடிதம் எழுதுவதற்கும் அது பொருந்தும். ஒருவர் ஒரு மாதத்தில் 6 கடிதங்கள்தாம் எழுத முடியுமானால், அதற்குமேல் வரும் கடிதங்களுக்குப் பதில் எழுத

தாமதமாகும். இவற்றையெல்லாம் நாம் கவனிப்பதில்லை. மிகச்சிறிய செயலிலிருந்து, மிகப்பெரிய காரியங்கள்வரை காலவரையறை செயல்படும். காலத்தைப்போல் சக்தியும் அளவுக்குட்பட்டது. காலம், சக்தி, பொருள், அறிவு, உணர்வு, திறமை ஆகிய அனைத்துக்கும் அளவுண்டு. அந்த அளவு செயலின் போக்கையும், பூர்த்தியையும் நிர்ணயிக்கும். அவை புரிந்தால் பல தவறுகளை விலக்கலாம்; பல தடைகளை நீக்கலாம்.

(Iridology) கண்ணுள் பூதக்கண்ணாடியால் பார்த்து உடலில் எங்கு வலியிருக்கிறது, வியாதியிருக்கிறது என்று சொல்லக்கூடிய சாஸ்திரம் ஒன்றுண்டு. ரேகையைப் பார்த்துச் சொல்வதுபோல், கண்ணுள் பார்த்துச் சொல்ல முடிகிறது. ஏனெனில் மனித உடல் ஓர் இடத்தை மற்றோர் இடம் பிரதிபலிக்கும் திறனுடையது. இந்தத் தொடர்பு தெரிந்தால், மனிதனை அதிகமாகப் புரிந்துகொள்ளலாம். காலவரையறை இருப்பதுபோல், வாழ்வில் உள்ள எந்த அம்சமும், மற்ற எல்லா அம்சங்களுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொண்டுள்ளன. சில தெளிவாகத் தெரியும்; பல தெரியா. அவற்றைப் புரிந்துகொண்டால், அந்தத் தொடர்புமூலம் குறையாக உள்ள காரியங்களைப் பூர்த்தி செய்ய முடியும். ஒரு போலீஸ் அதிகாரி ஒரு பியூனுக்கு அடாவடியாகத் தொந்தரவு கொடுத்தார். பிரதமமந்திரியின் செக்ரடேரியட்டிலிருந்து போலீஸ் அதிகாரிக்கு எச்சரிக்கை வந்தது. அவருக்கு எதுவும் புரியவில்லை. P.C. அலெக்ஸாண்டர் கலெக்டராக இருந்த பொழுது, இந்தப் பியூன் அவரிடம் வேலை செய்தவன். தன் குறையை அவருக்கு எழுதினான். அவர் நடவடிக்கை எடுத்துவிட்டார். தமிழ்நாட்டில் இரண்டே இன்ஜினீயரிங் காலேஜ் இருந்த காலத்தில் ஏழை சங்கீத வித்வான் மகனுக்கு அதில் இடம் கிடைத்தது அவனது நண்பர்களுக்கு வியப்பாக இருந்தது. சங்கீத வித்வானுடைய மருமகன் பெரிய பாடகன். கல்லூரியை ஸ்தாபிதம் செய்தவருக்கு இவருடைய பாட்டு என்றால் விருப்பம். அதன்மூலம் எளிதில் கிடைக்காத இடம் கிடைத்தது. அட்மிஷன், உத்தியோகம், சிபாரிசு, கடன், பிரமோஷன்,

டிரான்ஸ்பர் ஆகியவற்றிற்காக மனிதன் எடுக்கும் முயற்சிகள் அதிகபட்சம். அதைவிட அதிக முயற்சி உலகிலில்லை. இறைவன் மனிதனுக்கு என்ன கொடுக்க முடியும் என்று மனிதனுக்குத் தெரியாது. தெரிந்தால் உலகம் ஒரு கணமும் தாமதியாமல் இறைவனை ஏற்றுக்கொள்வார்கள் என்று பகவான் கூறுகிறார். அட்மிஷனுக்கு, டிரான்ஸ்பருக்குச் செய்யும் முயற்சியை, வாழ்வின் மறுமொழியின் அம்சங்களை அறிந்து ஒருவன் செய்தால், அவன் வாழ்வில் பிரச்சினையின் சுவடே இருக்காது. மனிதனுக்கு முயற்சியில் குறைவில்லை. முயற்சி செய்யும் கோணத்தை அறிந்துகொள்ளும் திறமையில் குறைவுண்டு. அந்த அறிவைச் சிறிது அதிகப்படுத்தும் முயற்சியைப் பற்றிக் கூறுவதே இக்கட்டுரை.

வாழ்க்கை பெரியது; பெரிய சமுத்திரம் போன்றது. அதன் அம்சங்கள் ஆயிரம். பிரபஞ்சம் முழுவதும் பரவியது வாழ்வு. அதில் ஒரு பகுதியே பூவுலக வாழ்வு. அதன் பகுதியே மனித வாழ்வு. தனி மனிதனுடைய வாழ்வு மனித வாழ்வு எனும் விரிந்த பரப்பில் ஒரு பொறியேயாகும். தனி மனித வாழ்வின் பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சியே நம்முடையது. Life Response என்று நான் விளக்கும் முறை திறனுடையதானாலும், மனிதனைப் பொருத்தவரை பெரியதானாலும், மனித வாழ்வைப் பொருத்தவரை ஒரு பகுதியே. அன்னையின் செயல் ஒரு சிறு பகுதியேயாகும். அன்னை செயல்படும் உயர்ந்த முறை அருள். அது நிபந்தனையற்றுச் செயல்படுவது. கடைசி முறை மனிதனுடைய தீவிர பிரார்த்தனைக்குப் பதிலளிப்பது. இவற்றிடையே பல வேறு முறைகள் வாழ்வுக்குண்டு. அவைமூலமெல்லாம் அன்னை செயல்படுவார். Life response என்பது அன்னை செயல்படும் முறைகளில் ஒன்று. தனி மனிதனைப் பொருத்தவரை உயர்ந்த முறையாதலால், இதன்மூலம் அன்னையின் அனுக்கிரஹத்தை அதிகமாகப் பெறலாம் என்பதே இதன் விசேஷம்.

விளையாட்டுச் சட்டங்கள் தெரியாமல் விளையாட முடியாது. சட்டங்கள் தெரிவதால் ஜெயித்துவிட முடியாது. ஜெயிக்க திறமை

வேண்டும். எதிரியைவிட அதிகத் திறமை வேண்டும். விளையாடும் பொழுது எதிரியுண்டு. ஒரு தொழில் நடத்தவேண்டுமானால், எதிரி கிடையாது. எதிரான சந்தர்ப்பங்களுண்டு. எல்லாச் சந்தர்ப்பங்களையும் ஜெயித்துவந்தால்தான் தொழில். அதுபோல் வாழ்க்கையில் எதிரி என்றில்லை. நாம் எந்த நிலையில் சாதிக்க முயல்கிறோமோ, அதற்குக் கீழுள்ள அத்தனை நிலைகளையும் மீறி செயல்படத் திறமை வேண்டும். சமூகத்தில் எதிரியுண்டு; வாழ்க்கையில் எதிரியில்லை. எதிரான சந்தர்ப்பங்களுண்டு. நீ பரீட்சை எழுதி பாஸ் பண்ண எதிரி எவருமில்லை. பாடத்தின் கடுமை, பள்ளிக்கூட வசதி, வீட்டு நிலைமைகளை மீறி பரீட்சையில் பாஸ் பண்ண முயற்சி வேண்டும். Life Response சட்டங்களை எல்லாம் ஒருவர் தெரிந்துகொண்டால், அதற்கு உபயோகம் உண்டு. அதற்குச் சக்தியில்லை. நாம் செய்யும் முயற்சிக்கு அதிகப் பலன் தரும் திறமை அதற்குண்டு.

இந்த நாளில் உத்தியோகத்திற்குச் செல்லும் பெண்களில் பலருக்குத் திருமணம் தள்ளிப்போகிறது. அவை பல்வேறு காரணங்களால் அமையும். அவற்றுள் ஒன்று, பெண்ணின் வருமானம். இந்த வருமானத்தை நம்பி, பெற்றோர்களோ, சகோதரனோ, சகோதரியோ, வாழ்வை அமைத்துக் கொண்டிருந்தால், அது பெண்ணின் திருமணத்திற்குத் தடையாகும். "திருமணமாகும்வரை வீட்டிற்கு உபயோகமாக இருக்கிறேன்'' என்று பெண் நினைக்கலாம். அவளை நம்பியுள்ளவர்கள் தீவிரமாகத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யலாம். பெண்ணுக்கு மற்றவர்களுடைய எண்ணம் தெரியாமலிருக்கலாம்; தெரிந்துமிருக்கலாம். பெண்ணின் வருமானத்தை எதிர்பார்த்து குடும்பம் இருந்தால், பெண்ணின் திருமணத்திற்கு அதுவே தடை. குடும்பத்தின்மீது பெண்ணுக்குள்ள பாசம் அந்தத் தடையை வலுப்படுத்தும். இது இக்கட்டான நிலை, விவரம் தெரியாமலிருப்பதே மேல்; தெரிந்து மனத்தைப் புண்படுத்துதல் பலனில்லை என்று நினைக்கலாம். பெண்ணுக்கு உள்ள நிலைமையின் சூட்சுமம் புரிந்தவுடன் பெரும்பாலும் தடை விலகி திருமணமாகும். சில சமயங்களில் புரிவது போதாது. அதனால் தடை விலகாது.

திருமணத்திற்குப் பின் குடும்பத்திற்கு என்ன வழி செய்யப் போகிறோமோ, அதை இப்பொழுதே செய்ய முயன்றால், பயன் கிடைக்கும். அவரவர்கள் சுபாவப்படி பிரச்சினை வளரும் அல்லது குறையும்.

ஒரு project திட்டம் சுமுகமாக ஓடிக்கொண்டிருந்தது. கல்லூரி மாணவர்கள் இருவர் திட்டத்தில் தங்கி ஓர் ஆராய்ச்சி செய்ய விரும்பினார்கள். அவர்களை அனுமதித்தார்கள். அடுத்த நிமிஷம் சமையல் அறையில் கலாட்டா. கூட்டம் சேர்ந்து, அடங்க நேரமாயிற்று. தினமும், இதுவரை இல்லாத பிரச்சினைகள் பல உற்பத்தியாகி, அனுமார் வால்போல் வளர்ந்தது. முதலாளி ஒரு நாள் மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றவர், ஒரு கிழவிமீது மோதிவிட்டார். அவள் கீழே விழுந்தாளேதவிர எந்தவிதமான காயமுமில்லை. பெருங்கூட்டம் சேர்ந்தது. முதலாளியைப் பத்திரமாக அனுப்பவேண்டியதாயிற்று. போலீஸ் பிராது, நஷ்டஈட்டுத் தொகை, ஊர்ப்பஞ்சாயத்து, தெருக்கூட்டம், அக்கப்போர், எங்குப் பார்த்தாலும் ரகளை, நஷ்டஈட்டைப் பெற்றுக்கொண்ட பின்னும், பிராதுக்கு உயிர் வைத்துக் கொண்டு, அடாவடி பேசுவது என்று வாழ்க்கையே நரகமாகி விட்டது. மேலும், சிறிய பிரச்சினைகள் அளவின்றி தொந்தரவாகிவிட்டன. திட்டத்திலுள்ள அனைவரும் சேர்ந்து கலந்தனர். ஏன் இப்படி என்று யோசனை செய்தனர். அதில் ஒருவர் தமக்குக் காரணம் தெரியுமென்றார். அந்தக் கல்லூரி மாணவர்கள் பார்வை வேறு மாதிரியிருக்கிறது என்று அவர் முதலிலேயே சொன்னபொழுதும், அவரைக் கேலி செய்தனர். இப்பொழுது மீண்டும் அதையே சொன்னார். அனைவரும் கேட்டுக்கொண்டனர். 30 நாட்கள் தங்க வந்தவர்களை 20-ஆம் நாளன்றே அனுப்ப முடிவு செய்தனர்; அனுப்பிவிட்டார்கள். அடுத்த நிமிஷமே அத்தனை பிரச்சினைகளும் மறைந்துபோயின. அந்த மாணவர்களைப் பார்த்தால், மனித ஜென்மம் போலில்லை என்று நினைப்பது அநாகரீகமான செயலாக இருக்கலாம். அதுவே உண்மை. அவர்களை விலக்கிய உடன் அவர்களால் ஏற்பட்ட அத்தனை பிரச்சினைகளும் மறைந்துவிட்டன.

காரியங்களைச் சில சமயங்களில் வரிசைக்கிரமமாகச் செய்யவேண்டிய அவசியமுண்டு. வரிசையை மாற்ற முடியாது. நிலத்தை உழுது, பின்னர் விதையை விதைக்க வேண்டும். இது மாற்றத்திற்குரியதன்று. புத்தகத்தை அச்சடித்த பின்னரே, பைண்டிங் செய்ய முடியும். மாற்றக்கூடிய வரிசைகளும் உள்ளன. மாற்ற முடியாதவையும் இருக்கின்றன. முன்னே செய்ய வேண்டியதில் குறை இருக்கும்வரை, அடுத்த கட்டத்தில் செயல் நடைபெறாது என்பது ஒரு சட்டம். ஒரு பக்தர் சிறிய புத்தகம் அச்சிட அச்சகத்திற்குப் போய் ஏற்பாடுகள் செய்து, பேப்பர் கடையில் பேப்பருக்கான விலையைக் கொடுத்து, இந்த அச்சகத்திற்குப் பேப்பரை அனுப்பச் சொல்லியிருந்தார். இதற்குமுன், இதே ஏற்பாடு சுமுகமாக நடப்பது வழக்கம். இம்முறை கம்போஸிங் முடிந்தபோதிலும், பேப்பர் வரத் தாமதமாகிறது. அதனால், தாமே பேப்பர் கடைக்குப் போய் பேப்பரைக் கையோடு எடுத்துவர முடிவு செய்தார். அந்த நேரத்தில் அவருக்கு இந்தச் சட்டம் மனதில் தோன்றியது. பேப்பர் வராததற்குக் காரணம் அதற்குமுன் செய்ய வேண்டியதில் ஏதேனும் குறையாக இருக்குமோ என நினைத்தார். 30வது பக்கத்தில், கடைசியாகத் திருத்தம் செய்யவேண்டியவைகளுள் இன்னும் 3 பிழைகள் இருந்தன. கம்பாஸிட்டர்கள் இதுபோன்றவற்றைக் கடைசி நேரத்தில் செய்வதுண்டு; பெரிதுபடுத்தமாட்டார்கள். ஒருவேளை அதுதான் பேப்பருக்குத் தடையோ என நினைத்து கம்பாஸிட்டரிடம் அந்தப் பிழையைத் திருத்தும்படிக் கேட்டுக்கொண்டார். அவனுக்கு அது வேடிக்கையாக இருந்தது. அவருக்கு அது முக்கியமாக இருந்தது. பேப்பர் கடைக்குப் போனால், தடையில்லாமல் பேப்பருடன் திரும்பிவர அவர் மனதில் முக்கியமாக இந்தப் பிழைகளைத் திருத்தவேண்டும் என்றிருந்தது. கம்பாஸிட்டர் அவர் எதிரிலேயே அவற்றைத் திருத்திவிட்டான். அதே நேரம் தெருவில் பேப்பர் வந்து இறங்கியது, அவருக்கும் வியப்பாக இருந்தது. இந்தச் சட்டம் தெரியாமல் பேப்பர் கடைக்குப் போனால் வெறும் கையுடன்தான் திரும்ப வேண்டும். சட்டம் தெரிந்ததால், பேப்பர் கடைக்குப் போகாமலேயே வேலை

முடிந்துவிட்டது. எவ்வளவு பெரிய சௌகரியம் என்பது முக்கியமில்லை. இதனால் பெறும் அறிவு சிறந்தது.

ஒரே இடத்தில் 10 பேருக்குமேல் குடியிருப்பதில் இருவர் உண்டு. இவர்களுள் எந்தத் தொடர்பும், எந்த வகையிலும் இல்லை. ஒருவரை மற்றவருக்கு எந்த வகையிலும் பிடிக்காது. ஆனால் நடைமுறையில் நல்லவிதமாகப் பழகுவார்கள். ஒருவருக்கு ஆப்ரேஷனாயிற்று. அவர் வீடு திரும்பியதும், அடுத்தவருக்கு, முதலாமவருக்கு ஆப்ரேஷன் செய்த இடத்திலேயே அதிகமாக வலிக்க ஆரம்பித்தது. 3 மாதம் கடுமையாகக் கஷ்டப்பட்டார். ஒருவருக்கு நடந்த ஆப்ரேஷன் மற்றவருக்கு வலி கொடுப்பது விநோதம். அதுவும் தொடர்பில்லாதவருக்கு வருவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. பிரியத்தால் வலி வந்ததென்றாலும், ஓரளவுக்கு மனம் ஏற்றுக்கொள்ளும். பிடித்தால் பிரியம் என்பது நம் தெளிவு. பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் தொடர்பு உணர்ச்சியால் ஏற்பட்டுவிடுகிறது. பிடித்தம் தொடர்பானால், வெறுப்பும் தொடர்பாகும். வெறுப்புள்ளவரை மனம் நினைத்தபடியிருக்கும். அதனால் உணர்வால் தொடர்பை ஏற்படுத்திவிடும். அத்தொடர்பால் வலி ஏற்பட்டது.

இதன்படி பெறும் பலனின் அளவு, செயலின் திறத்தைப் பொருத்தது. லேசாகச் செயல்பட்டால் சிறுஅளவு பலனும், தீவிரமாகச் செயல்படும்பொழுது அதிகப் பலனும் கிடைக்கும்.

வயதுவந்த பையன் வீட்டைவிட்டு ஓடிவிட்டான். காரணமில்லை; சண்டை ஏதுமில்லை; தகப்பனார் கலங்கிவிட்டார். 3, 4 நாட்களாக அவர் செய்த பிரார்த்தனைக்குப் பலன் என்று எதுவுமில்லை. பாரத்தைத் தாங்கிக்கொள்ள சக்தியை அளித்தது எனலாம். ஏன் தம் பிரார்த்தனைக்குப் பலனில்லை என்று கேட்டார். மூலகாரணம் இருக்கலாம் என்றேன். உங்கள் மனநிலையில் அல்லது வாழ்வில் பையன் செயலுக்குரிய வித்திருந்தால், இன்றைய பிரார்த்தனை பலிக்காது. தாம் சிறு வயதில் இதேபோல் காரணமில்லாமல் வீட்டைவிட்டு ஊர் பார்க்க ஓடியதாகச் சொன்னார்.

அந்தச் செயலின் வித்து அழியும்வரை சமர்ப்பணம் செய்தால், பிரார்த்தனை அதன்பிறகு பலிக்கும். சமர்ப்பணத்தை மேற்கொண்டார். பிரார்த்தனையைத் தொடர்ந்தார். 4, 5 நாட்களுக்குப்பின் அவரால் மனவேதனை தாங்கமுடியாத நேரத்தில் மறைவாகச் சென்று தேம்பினார். ஒரு பையன் ஓடிவந்து, அவர் மகன் திரும்பி வந்துவிட்டதாகப் போன் வந்திருப்பதாகச் சொன்னான். வித்து உள்ளவரை விஷயம் நகராது. அதுவும் மனதால் ஏற்றுக்கொண்ட கருத்துக்குச் செயலைப் பூர்த்திசெய்யும் திறனில்லை. உணர்ச்சிக்கு அத்திறனுண்டு. மனம் ஏற்றுக்கொண்ட கருத்தை, உணர்ச்சி பூரணமாக ஏற்றுக்கொண்டால், அதே கணம் மின்னல்போல் காரியம் முடியும்.

இவையெல்லாம் தத்துவரீதியான விளக்கங்கள். எளியவர்க்குப் பயன்படாது என்றால் ஒரு வகையில் சரி. இன்று நம் சமுதாயத்தில் நாமறியாமல் எல்லோரும் பெற்றிருக்கும் விஷய ஞானம் இது. ஆனால், நாமும், சமுதாயமும் நம் பழம்பெரும்பொக்கிஷங்களை அறியும் நிலையிலில்லை. ஆற்றில் தண்ணீர் ஓடாவிட்டாலும், மணலின்கீழ் ஊற்றிருக்கும். அதுபோல் நம் இந்தியச் சமுதாயத்தில் மேலெழுந்தவாரியாக ஆன்மீகம் வற்றிவிட்டாலும் அரை அடிக்குக்கீழ் ஆன்மீக ஊற்றுள்ளது. இந்தச் சட்டங்களைப் பின்பற்ற ஆரம்பித்தால், நம்முள் உள்ள இறையுணர்வும், நெடுநாளைய பரம்பரை ஞானமும் ஒரு சமயம் நம் முயற்சியுடன் கலந்து பெரிய பலனை அளிக்கவல்லது. ஆன்மீகம் சத்தியம். சத்தியத்தின் சமூக வடிவங்கள் மெய்ம்மை, விஸ்வாசம், நாணயம், கற்பு, கடமையுணர்வு, பொறுப்பு, வீரம், வைராக்கியம், அன்பு, பாசம், பற்று ஆகியவை; இவை உயர்ந்த குணங்கள். Life Responseனுடைய சட்டங்கள் புரியவில்லையென்றாலும், நம் கடந்தகாலச் செயல்களை மேற்சொன்ன சிறந்த பண்புகளின் கண்ணோட்டத்தில் பார்த்தால், எது குறை எனத் தெரியும். அது தெரியாமலிருக்க முடியாது. கடந்தகால நிகழ்ச்சிகளில் குறையானவற்றை இன்று ஆத்ம சமர்ப்பணத்திற்காகத் தேர்ந்தெடுத்து, அன்னையிடம் அதன் வரலாற்றைத் தினமும் சொல்லிவந்தால், நமக்கு விளங்காத பகுதிகளும், அன்னையின் ஒளியால் விளக்கம் பெறும், பிரச்சினை விலகும்.

ஒரு கல்லூரி வைஸ்-பிரின்சிபால் தாயாருக்கு (Family Pension ) பென்ஷனுக்குரிய அருகதை ஏற்பட்டதாகச் சட்டம் வந்தது. ஆனால், அந்தத் தொகையைப் பெற 40 ஆண்டுகளுக்குமுன் அவருடைய தகப்பனார் வேலை செய்த இடத்திலிருந்து பல சர்ட்டிபிகேட்டுகள் தேவை. அந்த ஊருக்குப்போய், சில நாட்கள் தங்கியிருந்து, செய்யக்கூடிய முயற்சிகள் அனைத்தும் செய்து, முடியாது என்று கைவிட்டுவிட்டார். பலர் உதவியை நாடினார். நாளாகிவிட்டதால், ரெக்கார்டுகள் இல்லை. இந்த நிலையில் ஆத்ம சமர்ப்பணத்தை மேற்கொண்டார். சில நாட்கள் தொடர்ந்தார். ஒரு நாள் சமர்ப்பணம் முடிந்து எழுந்திருக்கும் நேரத்தில் தம் பெயரை உரக்கக் கூப்பிடுவது கேட்டு ஓடினார். எல்லா ரெகார்டுகளையும் ஒரு நண்பர் சேகரம் செய்துகொண்டு வந்துவிட்டார்.

வாழ்வு தன் ஆழத்திலிருந்து குரல் எழுப்பும். அதைப் பெற நாம் அதன் ஆழத்தை அறியவேண்டும். வாழ்வின் ஆழத்தைக் காணமுடியாதவர்கள் தங்கள் மனத்தின் ஆழத்தைக் காணலாம். மனத்தின் அடியிலிருந்து செய்யும் ஆத்ம சமர்ப்பணம் வாழ்வின் ஆழத்திலிருந்து அதன் மறுமொழியை எழுப்பும்.

******

 book | by Dr. Radut