Skip to Content

இந்தியா உலகத்தின் குரு

இந்தியா ஒரு பின்தங்கிய நாடு என்று உலகமும், இந்தியர்களும் அறிவார்கள். உலகத்திற்கு வழிகாட்டும் தகுதிக்கும், இந்தியா இன்றுள்ள நிலைக்கும் உள்ள தூரம் அதிகம். ஐ.நா. சபையில் 5 வல்லரசுகள், சம அந்தஸ்துடன் இருந்தாலும், உலகத்தின் தலைமைப் பதவியை அமெரிக்காவுக்கே அனைவரும் நடைமுறையில் அளித்துள்ளனர். இன்று நாம் சென்னையில் நாகரீகம் - Fashion- என்று காண்பது சில ஆண்டுகளுக்குமுன் அமெரிக்காவில் ஆரம்பித்தது. அமெரிக்காவில் உள்ள பல கம்பெனிகளில் வரவு, செலவு இந்திய மத்திய சர்க்காரின் வரவு செலவைப்போல் இரு மடங்கு, மும்மடங்குள்ளன. பணத்திலும், படிப்பிலும், நடைமுறையிலும் உலகத்தின் முதன்மை ஸ்தானத்தை அமெரிக்கா பெற்றுள்ளது. ஜப்பான் அதற்குப் போட்டியாக எழுகிறது. உலகச் சபைகளில் இந்தியாவின் நிலை எந்தத் துறையிலும் உயர்ந்து காணப்படவில்லை எனும்பொழுது, உலகத்தின் குருவாக நம் தாய்நாட்டை நினைக்கத் துணிவு ஏற்படாது. இவை எல்லாம் உண்மை என்றாலும், வேறு சில உண்மைகளும் உண்டு.

உலகத்தை உயர்த்திய தொழில்களும், விஞ்ஞான அறிவும், பூமியில் ஜீவராசிகள் வாழ உதவும் மழையும் இன்று வேறு நிலையிலுள்ளன. மழை வரும் வருஷங்களில் பெய்யாமலிருக்க வேண்டியவற்றை இன்றையச் சமூகம் செய்துவருகிறது. தொழிலையும், விஞ்ஞானத்தையும் சமூக விரோதிகளாக நினைக்குமளவுக்கு உலகச் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு காணாவிட்டால், இன்னும் 30, 40 ஆண்டுகளுக்கு மேல் உலகம் இருக்காது என்ற கருத்தைப் பெரும்பாலோர் ஏற்றுக்கொண்டுள்ளனர். மேலும், இந்தப் பிரச்சினைகள் தீராதப் பிரச்சினைகள் என்றும் அனைவரும் நம்புகின்றனர். வருங்காலத்தில் உலகத்தின் தலைமையை

ஏற்பவர்கள், இப்பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அந்தத் தகுதி இந்தியாவுக்குண்டு என்பதால், நாம் அதை நம்பலாம்.

ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் இந்தியா உலகத்தின் குரு ஆகப்போகிறது என்று பல முறைகள் சொல்லியிருப்பது, அன்னையின் பக்தர்களுக்கு இதை நம்புவதற்குப் போதும். அன்னை சொல்லியிருக்கின்றார் என்பதால் மட்டுமே பக்தர் இதை நம்ப முடியும். என்றாலும் இது சம்பந்தமாக வேறு செய்திகளிருந்தால் அவை மற்றவர்கள் இதை நம்ப உதவும். 1914-இல் அன்னை சூட்சுமப் பார்வையால் இந்தியச் சுதந்திரம் பூர்த்தியாகிவிட்டது என்றும், அன்னியர்கள் தாங்களே வலியத் திரும்பப்போய்விடுவார்கள் என்றும் கூறினார். 1947-இல் இங்கிலாந்து உலக மஹா யுத்தத்தை வென்று தனிப்பெரும் புகழ் பெற்று வீறுகொண்டு நிற்கும் நேரம். பெரும்படையும், ஆயுதத் தளவாடங்களும் உள்ள நாடு இங்கிலாந்து. இந்தியச் சுதந்திர இயக்கத்தில் அஹிம்சாவாதிகளான தொண்டர்களே இருந்த காலம் அது. 1942-இல் மகாத்மா காந்தியை விடுதலை செய்யக் கோரி இந்தியாவெங்கும் நடத்திய போராட்டம் சில நாட்களுக்குள் நின்றுவிட்டது. என்றாலும் இங்கிலாந்து தானே முன்வந்து இந்தியாவுக்குச் சட்டப்பூர்வமான சுதந்திரம் அளித்தது என்றால், படைபலத்தைவிட உயர்ந்த வலிமை இந்தியாவுக்கிருக்கிறது என்றாகிறது. அத்துடனில்லை, போராட்டமின்றி, இந்தியாவைத் தொடர்ந்து, பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. அதாவது, இந்தியா ஆரம்பித்த ஒன்றை பல நாடுகள் பின்பற்றின. அந்த அளவில் தலைமை ஸ்தானத்தை இந்தியாவுக்கு 10, 15 நாடுகள் அன்று அளித்தன.

உலகத்தின் குருவாக இருப்பதற்கு, ஆன்மீக உயர்வும், அஸ்திவாரத்தில் அளவுகடந்த வலிமையும் தேவை. நாகரீகம் வளர்ந்து வந்தபொழுது ஐரோப்பிய நாடுகள் அறிவையும், செல்வத்தையும், வாழ்க்கை வளத்தையும் போற்றி வளர்த்தன. நாம் ஜடமாகக்

கண்டவற்றை மேல்நாட்டார் செல்வமாகவும், பொருளாகவும் போற்றினர். ஜடத்தில் அவர்கள் பிரம்மத்தைக் கண்டார்கள் என்கிறார் பகவான். ஜடத்தின் தத்துவங்கள் விஞ்ஞானமாக உருவெடுத்தன. விஞ்ஞானம் வாழ்க்கையை வளப்படுத்த முன்வந்தது; நாகரீகம் ஏற்பட்டது; செல்வம், வளம் அபரிமிதமாகப் பெருகின. ஆசிய நாடுகள் வேறு போக்கில் வந்து வழிபாட்டைக் கண்டன. உலகப் பெருநெறிகளான இந்து மதம், புத்த மதம், கிருஸ்துவ மதம், இஸ்லாம் ஆகிய அனைத்தும் ஆசியாவில் தோன்றியவை. ஆன்மீகம் மதங்களைக் கடந்தது. மதவழிபாட்டை உயர்ந்த நிலையில் முனிவரும், யோகியும், ரிஷியும் ஏற்படுத்துகின்றனர். இந்தியா ஆன்மீகத்தின் சிறப்பை அறிந்தது. தவம் பலித்த பூமி இந்தியா. வேத ரிஷிகள் ஆன்மீகச் சிகரத்திற்குச் சென்றவர்கள். அத்துடனில்லை, ஆன்மீகத்தை அன்றாட வாழ்க்கையாக மாற்றியவர்கள். எந்த நாட்டிலும் வழிபாடு கோயிலுக்குரியது. இலட்சியம் கோயில்வரைதான். வாழ்க்கை குடும்பத்திற்கு உரியது. குடும்பத்தை நடத்த இலட்சியமோ, வழிபாடோ, ஆன்மீகமோ பயன்படுவதில்லை. யதார்த்தத்தை ஏற்கும் பகுத்தறிவு தேவை. அது இல்லாவிட்டால், குடும்பம் நிலைக்காது; வாழ்க்கை வறண்டு போகும்; உலகெங்கும் அன்றிருந்து இன்றுவரையுள்ள நிலை இது. இந்தியாவின் நிலை வேறு. யதார்த்தத்தில் இலட்சியத்தைக் கண்டது இந்திய ஆன்மீகம்.

வேத ரிஷிகள் கடலையும், வானையும், மலையையும், நதியையும் இறைவனாகக் கண்டார்கள். வாழ்க்கைப் பொருள்கள் அனைத்தையுமே இறைவனாகக் கண்டார்கள். வாழ்க்கை நிகழ்ச்சிகள் அனைத்தையுமே இறைவனாக உணர்ந்தார்கள். மேலை நாட்டார் ஜடத்தைப் பிரம்மமாக உணர்ந்தார்கள் எனில், வேத ரிஷிகள் ஜடம் உட்பட, வாழ்வும், அறிவும் உள்பட ஜகத்தையே பிரம்மமாகக் கண்டு, அதே அடிப்படையில் அன்றாட வாழ்வையும், அரசர்கள் வாழ்வையும் அமைத்துக்கொண்டு தெய்வீக வாழ்வை மனிதன் வாழ முடியும் என்பதை நிரூபித்தார்கள். இந்த வாழ்வின் அடிப்படையில் முரண்பாடுகள் சிறிதளவும் இல்லை. மின்சாரம் பெரிய வரப்பிரசாதம்.

ஆனால் அதை உற்பத்தி செய்யும்பொழுது உண்டாகும் மற்ற விஷயங்கள் சூழ்நிலையைப் பாதிப்பதை இன்று விஞ்ஞானிகள் கண்டு, இது உலகத்திற்கு நல்லதன்று என்று உணர்கிறார்கள். சோஷஸம் ஒரு பெரும்புரட்சிமூலம் வந்தது. இன்று அதை விட்டு மாறவேண்டுமென்ற புரட்சி தலைதூக்குகிறது. விஞ்ஞானப் பலனானாலும், சமூக அமைப்பானாலும் இன்று சௌகரியமாக இருப்பது, என்றும் சௌகரியமாக இருக்காது. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகட்குப்பின் வேதகாலத்து வாழ்வை இன்று பார்த்தால், ஆரம்ப அமைப்பில் முரண் இல்லாததுபோல், இன்றும் அதன் உயர்வு மட்டும் தெரிகிறது. இன்றுகூட அந்த அமைப்பில் முரண்பாட்டைக் காண முடியாது. ஏனெனில், முரண்பாடொழிந்த தத்துவத்தின் அடிப்படையில் ஏற்பட்டது ஆன்மீகம். அதனடிப்படையில் ஏற்பட்டது, அந்த வாழ்வு. இந்து மதம் சநாதன தர்மம், சகல தர்மங்களையும் தன்னுள் அடக்கியது. சகல தர்மங்களின் அடிப்படைகளையும் ஸ்வீகாரம் செய்துகொண்டது. அதன் அடிப்படை (Spiritual oneness) அனைத்தும் அவனே, அனைத்தும் ஒன்றே என்பதால் முரணுக்கு வழியில்லை.

புற வழிபாடுகள் மாறினாலும், நாட்டின் அடிப்படை தர்மம் வேத ரிஷிகளுடைய யுகதர்மமாக அமைந்தது. ஜகத் என்றால் உலகம். உலகத்திற்குக் குரு ஜகத்குரு. ஜகத்குரு இந்தியாவில் ஜனிக்க ஆன்மீக உயர்வும், அதன் செறிவுள்ள சிறப்பும் ஏற்பட்டபின், தன் கடமையை உலகெங்கும் நிறைவேற்ற வலுவான அஸ்திவாரம் தேவைப்பட்டது. அந்த அஸ்திவாரத்தின் முதல் நிபந்தனை ஒன்றுபட்ட நாடு. அன்று இந்தியா 56 தேசங்களாகவும், பரந்தும், விரிந்தும், சிதறியும், சிறு பகுதிகளாகப் பிரிந்துமிருந்ததால் ஆன்மீக உயர்வுக்குப் போதிய அஸ்திவாரமில்லை. காலம் தன் திறனையும், தன் சூட்சுமங்களையும் ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் பயன்படுத்தி இந்தியாவை ஒருமைப்படுத்த முயன்று தோல்வியுற்றது. பின்னர் ஒரு யுக்தியைக் கையாண்டது. அன்னிய ஆட்சி ஏற்பட்டால் நாடு ஒன்றுபடும் எனக் கருதி அன்னிய ஆதிக்கத்தைக் கொண்டுவந்தது என்கிறார் பகவான். அன்னியன் நாட்டை ஒன்றுபடுத்தினான்.

பலுசிஸ்தானத்திலிருந்து, பர்மா, சிங்கப்பூர்வரை இலங்கையுட்பட இந்தியா ஆன்மீக அடிப்படையில் ஒரே நாடு என்கிறார் அன்னை. ஆசிரம விளையாட்டு மைதானத்தில் அந்தப் படத்தைச் சுவரில் வரைந்து, அன்னை அதே இடத்தில் அமர்ந்து தரிசனம் தருவது வழக்கம். அன்னியன் வெளியேறும்பொழுது நாடு துண்டிக்கப்பட்டது. ஆதலால் அந்த இலட்சியம் ஓரளவு பாதிக்கப்படும் என்றாலும் 200 ஆண்டுகளுக்குமுன் இருந்ததைவிட நாடு இன்று ஒன்றுபட்ட அமைப்பின்கீழ் வந்துள்ளது.

வெள்ளையரோடு தொடர்புகொண்ட நகர்ப்புறங்களில் இந்திய ஆன்மீகச் சிறப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மீதியிடங்களில் ஆன்மீகம் ஆரம்பக் காலத்து உயர்வுடனிருக்கிறது என்கிறார் அன்னை. உலகம் தான் முன்னேறப் பயன்படுத்திய உபாயங்களே - விஞ்ஞானம், அறிவுமார்க்கம், தொழில்அபிவிருத்தி - இன்று உலகத்தின் அழிவுக்கு வித்தாக இருக்கின்றன என உணர்ந்து, செய்வதறியாத நிலையில் ஒரு தலைமையை எதிர்பார்த்து நிற்கிறது. அந்தத் தலைமையை இந்தியாவினால் மட்டுமே கொடுக்க முடியும். அதற்குத் துணையாக பிரான்சு மட்டுமே இருக்கும். பிரான்சு நாட்டிற்கு அந்த அம்சம் இருந்ததால்தான், எகிப்து, துருக்கியைச் சேர்ந்த அன்னை தாம் அவதரிப்பதற்குப் பிரான்ஸைத் தேர்ந்தெடுத்ததாகச் சொல்கிறார்.

இன்று உலகத்தின் முன்னுள்ள பிரச்சினைகளில் தலையாயவை: 1) ஆயுதக் குவியல், 2) சூழ்நிலை பாதிக்கப்படுதல், 3) பஞ்சம், 4) வரும் ஆண்டுகளில் மழை பெய்ய வாய்ப்பில்லாதது, 5) வன்முறை, 6) போதைப் பொருள்கள் பரவுதல். இன்றுள்ள நிலையில் இந்தப் பிரச்சினைகள் வளர வழியிருக்கிறதே தவிர, குறைய வழியில்லை. இந்த எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கும் உபாயங்களையும், அவற்றை நிறைவேற்றும் திறனையும் உடையவரே தலைமைக்கு வரமுடியும். இந்திய ஆன்மீக அடிப்படையில் ஏற்படும் வாழ்வு இப்பிரச்சினைகளை விலக்கவல்லது. இந்தியாவில் அந்த

ஞானம் ஏற்பட்டு, இந்தியர்கள் அதைப் பாராட்டினால், அன்னையின் இலட்சியம் நிறைவேறும்.

அலெக்ஸாண்டர் மாவீரன் என்று புகழ்பெற்று இந்தியாவிலும் தன் வெற்றிக்கொடியை நாட்டிய காலத்தில் ஓர் ஆன்மீகப் புருஷரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவருக்குச் சொல்லி அனுப்பினான். அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவராகத் தெரியவில்லை. சென்ற ஆள் அவரை அணுகி, அலெக்ஸாண்டரை வந்து பார்க்கும்படிச் சொன்னான். அவர் சொல்லிய பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் இருவரும் சந்திப்பதால், அவருக்கோ அல்லது எனக்கோ பலன் இருந்தால் நல்லது. அலெக்ஸாண்டரிடமிருந்து நான் பெறக்கூடியது எதுவுமில்லை. என்னிடம் உள்ள அறிவோ அல்லது ஆன்மீகமோ அவருக்குப் பயன்படாது. எனவே நான் அவரை வந்து சந்திப்பது பயனற்றது என்று சொன்னார். அலெக்ஸாண்டர் அந்தப் பதிலைக் கேட்டபின் அப்படிப்பட்டவரைப் பார்க்கவேண்டும் என விரும்பி அவரை வந்து சந்தித்தான். சாம்ராஜ்ய அதிபதியும் தலைவணங்கும் சக்தி ஆன்மீகத்திற்குரியது. ஆன்மீகம் அஸ்திவாரத்தில் செறிந்துள்ள இந்நாட்டின் திறனையும், தலைமையையும் உணர்ந்து அதைக் கருதினால், அது வெளிப்படும். அதன் உயர்வை உலகம் ஏற்றுக்கொள்ளும்; அதனால் உலகம் பயன் அடையும்.

அன்னிபெசன்ட் அம்மையார் சிகாகோ நகரத்தினுள் நுழையும்பொழுது வானில் கருமை நிறத்தில் பரவலாகக் கண்ணில் பட்டவற்றைக் கண்டு வியந்தார். மற்றவர்கள் கண்ணில் அது படவில்லை. நகரத்தைப் பற்றி விசாரித்ததில், ஆயிரக்கணக்கான மாடுகள் அங்கு தினமும் கொலை செய்யப்பட்டு மாமிசம் தயார் செய்யும் தொழிற்சாலைகள் பல உள்ளன என அறிந்தார். தாம் வானில் கண்ட காட்சி அவருக்குப் புரிந்துவிட்டது. இறந்த மாடுகளின் உயிர்கள் வானில் சேர்ந்து வதைவது அவருக்குத் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் மூன்றாவது பெரிய நகரத்தின் நிலை இது. இந்தியா

ஆன்மீகப் பூமி. 1893-இல் ஸ்ரீ அரவிந்தர் பம்பாய் துறைமுகத்தில் அப்பெல்லோ பந்தர் என்ற இடத்தில் வந்து இறங்கி, தாய்நாட்டு மண்ணை மிதித்தவுடன் மலைபோன்று சாந்தம் அவருள் பாய்ந்தது. பாய்ந்த அது கடைசிவரை அவருள் தங்கியிருந்தது. 1971-இல் ஓர் அமெரிக்கர் முதன்முறையாக இந்தியா வந்தார். விமானத்திலிருக்கும் பொழுது திடீரென தன்னுள் பிரவாகமாகச் சாந்தம் நுழைவதைக் கண்டு திகைத்தார். சிறிது நேரத்தில் விமானி, விமானம் இந்திய மண்ணுக்கு வந்துவிட்டது; பம்பாய்க்கு அருகில் இருக்கின்றோம் என்று அறிவித்தார். பம்பாய் ஆன்மீகச் சிறப்பு வாய்ந்த நகரமில்லை. இந்திய மண்ணில் ஆன்மீகம் ஊன்றியிருக்கிறது என்று அன்னை சொல்வதை இந்நிகழ்ச்சிகள் விளக்குகின்றன.

உலகத்தில் அஹிம்சையைப் பிரபலப்படுத்தியவர்கள் குறைவு. அதுவும் சாம்ராஜ்யத் தலைவனுக்கு அஹிம்சை ஒத்துவாராது. பெரிய ராஜ்யத்தை ஏற்படுத்தி, பெரும் போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தி, வெற்றிக்கு மட்டுமே உரியவன் என்று தன்னை நிலைநிறுத்திய அசோக சக்ரவர்த்தி, போர்க்களத்தில் ஹிம்சையை விலக்கி, அஹிம்சையை மேற்கொள்ள முடிவு செய்தான். இதுபோன்ற நிகழ்ச்சி உலகில் நடந்ததில்லை. அவன் எடுத்த முடிவு ஆன்மீகத்திறன்வாய்ந்த முடிவு. சேனாபலத்தைவிட அதிகப்பலம் வாய்ந்த ஒன்று. பல் போன கிழப்புலி சைவத்தை மேற்கொள்வது போன்றதன்று. அது அசோகனின் உயர்வு; ஆன்மீகத்தின் திறன்; ஆயுதங்களை மடக்கும் அமைதி.

பூரணயோகம் எல்லா வகைகளிலும் புதியது. சாஸ்திரமே முடிவானது என்ற நம் யோகப் பரம்பரையை மாற்றி, எந்த சாஸ்திரத்தாலும் இந்த யோகத்தைப் பூர்த்தி செய்ய முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. சாஸ்திரங்களுக்கெல்லாம் உற்பத்தி ஸ்தானமான பூரணனே நேரடியாக அவ்வப்பொழுது உணர்த்தும் சாஸ்திரம் மட்டுமே பூரணயோகத்திற்குப் பயன்படும் என்று பகவான் கூறுகிறார். குருவே கடவுள் என்பது நம் யுகாந்திரகாலப் பரம்பரை நம்பிக்கை. கடவுளே குரு, கடவுள் மட்டுமே இந்த யோகத்திற்குக்

குருவாக அமைய முடியும் என்பது பூரணயோகம். காலத்தால் கட்டுப்படுத்தவல்லது; காலத்தைக் கடக்கவல்லது. இவை யோகத்தைப் பொருத்தவை என்றால் வாழ்வில் இருக்கும் நியதியை மாற்றி, வெற்றி - தோல்வி என்பதில்லை; சிறியது, பெரியது என்பதில்லை; சிறியதில் ஆரம்பித்து, பெரியதற்குப் போகவேண்டும் என்ற நியதியில்லை என்றெல்லாம் பல புதிய நிலைகளை ஏற்படுத்தி உள்ளது.

உலகத்தின் தலைவனான இறைவன் மனித ஹிருதயத்திற்குப் பின் மறைந்திருக்கிறான். அவனைக் கண்டு, அவனையே குருவாக ஏற்றுக்கொண்டு, அவன் வழிப்படி செய்யும் யோகம் பூரணயோகம். ஜகத்குருவே சாதகனின் குரு. உலகத்திற்கு இந்தியா குரு ஆக வேண்டுமெனில், அதாவது ஜகத்திற்கு ஒரு நாடு குரு ஸ்தானத்தைப் பெற வேண்டுமானால், அது அடையவேண்டிய நிலை என்ன?

மனிதன் உடலால் செயல்படுபவன். அவன் வளர்ந்த நிலையில் உணர்ச்சியால் செயல்படுகிறான். அடுத்த கட்டத்தில் அறிவால் நடத்தப்படுகிறான். முடிவான நிலையில் ஆன்மீகத்தை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்கிறான். தனி மனிதன் இதுபோன்ற உயர்ந்த நிலையை எட்டுவது முதல் நிலை. ஒரு நாட்டுக்கு அதே நிலை கிடைக்கப் பல்லாயிரம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். சுமார் 2000 ஆண்டுகட்குமுன் சாக்ரடீஸ் என்ற மேதை (Genius) தோன்றினார். மனிதன் உடல், உணர்வு, அறிவு, இவற்றைக் கடந்துவந்து, அறிவின் சிகரத்தை எட்டுவதால் மேதை பிறக்கின்றான். அறிவின் பாகங்கள் பல. அவை நினைவு, சிந்தனை, கற்பனை, எண்ணம் ஆகியவை. மனிதன் உயர்ந்து வரும்பொழுது அறிவு தன் திறனின் சிகரத்தை எட்டி, அதன் பகுதிகளில் ஒன்றில் ஆன்மா வெளிப்படுமானால் மேதை என்ற நிலை ஏற்படுகிறது. இந்த நிலையை 2000 ஆண்டுகட்கு முன் சாக்ரடீஸ் எட்டினார். பகவான் ஸ்ரீ அரவிந்தர், சாக்ரடீஸ், நியூட்டன் ஆகியவரைவிட உயர்ந்த அறிஞனை இனி உலகம் உற்பத்தி செய்யப்போவது இல்லை என்றார். தனி மனிதன் 2000 ஆண்டுகட்கு முன் எட்டிய நிலை இது. என்றாலும் உலகம் அறிவைத்

தன் கருவியாகப் பயன்படுத்த ஆரம்பித்தது ஷேக்ஸ்பியர் காலத்தில்தான், அதாவது சாக்ரடீஸுக்கு 1500 ஆண்டுகளுக்குப்பின். தனி மனிதன் எட்டிய உச்சியின் அடிமட்டத்தை சமுதாயம் தொட ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஜகத்குரு என அன்னை சொல்லும் நிலை, இந்தியாவுக்கு அன்னை ஏற்படுத்திய நிலை; அறிவுக்கு அடுத்த ஆன்மீக நிலையின் சிகரம். அதுவும் தனி மனிதனுடைய சிறப்பு மட்டுமன்று, நாடு முழுவதும் ஆன்மீக உயர்வு பெற்று, சிகரத்தைத் தொடும் அளவுக்கு வந்து, உலகத்தின் குரு ஸ்தானத்தை ஏற்றுக்கொள்ளும் நிலை. பாரதமாதா இந்தியாவின் ஆன்மா, ஜீவன். இந்திய நாட்டின் தாய் வடிவமான ஜீவன்; பல்லாயிரம் இந்தியர்களின் ஆன்மீக ஜீவன். அது வெறுஞ் சொல்லன்று; நிதர்சனமான தேவதை என்பது அன்னை நமக்கு அறிவுறுத்துவது. அதையே பகவான் (Nation soul ) நாட்டின் ஆன்மீக ஜீவன் என்கிறார். தனிப்பட்ட மனிதன் தன்னுள் உறையும் ஜகத்குருவைக் கண்டு, அவரையே தன் யோகத்திற்குக் குருவாக வரித்தால், அவன் பூரணயோக சாதகனாகிறான். பாரதமாதா பூரண யோகத்தை மேற்கொண்டு தன் ஜீவனுள் பொதிந்துள்ள ஜகத்குருவைக் கண்டு, அவரை வெளிக்கொணர்ந்து, ஜகத்குருவையே தன் குருவாகக்கொண்டு பூரணயோகம் பயில ஆரம்பித்து, அது பலிக்கும் நிலையில் இந்தியா உலகத்தின் குருவாகும்; ஜகத்குருவாகும். அது நடக்கும் என்பது அன்னையின் ஞானதிருஷ்டியில் கண்ட தீர்க்கதரிசனம். இதையே பகவானும், அன்னையும் இந்தியாவின் எதிர்கால இலட்சியமாக வைத்துள்ளார்கள். இந்த இலட்சியம் பலிக்கும். அதற்கு முன்னுள்ள நிலைகள் எவை? அவற்றுள் பக்தன் தன் வாழ்வில் பூர்த்தி செய்யக்கூடியது ஒன்றுள்ளதா? என்பதை மட்டும் இக்கட்டுரையில் எழுதுகிறேன்.

ஜகத்குரு ஆன்மீகச் சிகரம். அதற்கு முன்னுள்ளது அறிவு. அறிவின் சிகரம் மேதை (Genius). அதற்கும் முன்னுள்ளது கல்வி. கல்வியால் நாடு அடைவது பொதுச் சிறப்பு. தனி மனிதனுக்குரிய மேதை நிலை ஒன்றிருப்பதுபோல் நாட்டுக்குரிய மேதை நிலையும்

ஒன்றுளது. நாடு முழுவதும் பொதுவாகத் தன்னிலையை உயர்த்தி அடையக்கூடிய உயர்நிலை அது. ஒவ்வொரு நாடும் அதுபோல் மேதை நிலையை அடையக்கூடிய அம்சங்களை அன்னை சொல்லியிருக்கிறார். ஜப்பானுடைய உயிர் மானத்தைக் காப்பதிலும் (Nation of honour), அமெரிக்காவின் அம்சம் வாழ்க்கையை முறைப்படுத்தி வளப்படுத்துவதிலும், பிரான்சின் துறை அறிவு பெறுவதிலும், ஜெர்மனி புதியவற்றைக் கண்டுபிடிப்பதிலும், இதுபோன்ற அம்சத்தைப் பெற்றிருப்பதாக அன்னை கூறுகிறார். அதேபோல் இந்தியாவுக்கு அமைந்த துறை ஆன்மீகம் எனவும் சொல்கிறார். இங்கிலாந்து தேசபக்திக்குச் சிறந்த நாடு என நாம் அறிவோம். எனவே, இந்தியா ஆன்மீகத் துறையை தேர்ந்தெடுத்து அதில் மேதை நிலையை நாடு அடையப் பாடுபட்டால் அது பலிக்கும். அதற்கும் முன்னுள்ள கட்டம் நாட்டின் கல்வி. நாட்டில் கல்வித் துறையை உயர்த்த முற்பட்டால் அது அளவுகடந்து உயர்ந்து, எதிர்பாராத பெருஞ்சிறப்புகளைப் பலனாக அளிக்கும். உதாரணமாக ஒரு நிலையை ஒப்பிட்டுக்காட்ட முயல்கிறேன். நிலம், ஏக்கர் 400 ரூபாய் என யுத்தகாலத்திற்குமுன் இருந்தது. யுத்தத்திற்குப்பின் விலை ஏற ஆரம்பித்து 500, 600 என்று உயர்ந்தது நிலத்தின் சொந்தக்காரனுக்கு அதிர்ஷ்டமாகப் பட்டது. ஒரு புதிய நிலை உருவாகி, அந்த ஊரில் உள்ள நிலம் அனைத்தும் மனையாக மாறினால், அப்பலன் எளியவனுக்கும், வலியவனுக்கும், நல்லவனுக்கும், கெட்டவனுக்கும் சமமாகக் கிடைக்கும். புதிய நிலை பழைய பாகுபாடுகளை விலக்கிச் செயல்படும். நாடு முழுவதும் உயர்ந்த ஆன்மீக இலட்சியத்தை நோக்கிப் போவதால் ஏற்படும் கல்விச் சிறப்பின் பலன் இன்றைய ஏற்றத்தாழ்வுகளை விலக்கி, அனைவருக்கும் சமமாகக் கிடைக்கும். கிடைக்கும் பலன் இன்றைய மனநிலையிலிருந்து கற்பனை செய்யக்கூடியதாகவும் இருக்காது. கல்வித் துறையை ஆன்மீக அடிப்படையில் இந்தியா சிறப்புற அமைக்க முற்பட்டால், உலகத்தில் கல்விக்கு இன்றில்லாத பெருஞ்சிறப்பு ஏற்பட்டு, அதன்

தலைமையிலும், முன்னணியிலும் தன்னை அமர்த்தும் நிலை உண்டாகும்.

மனிதனில் உயர்ந்தது மனம். மனத்தின் திறமையைப் புத்தி என்கிறோம். அதிபுத்திசாலியையும் வெறும் மனிதனாக்கும் வகையில் ஒருவருடைய புத்தி செயல்படுவதுண்டு. 6 இலக்கம் கொண்ட எண் ஒன்றை 3 இலக்கம் கொண்ட எண்ணால் பெருக்கி வாயால் உடனே விடையை ஒருவர் சொன்னால், அது சரியா என நாம் கண்டுபிடிக்க 15 நிமிஷம் பெருக்கி, கூட்டிப்பார்க்க வேண்டியிருக்கிறது. ஆப்பிள் விழுவது அனைவருக்கும் தெரிந்தது. அந்தச் சாதாரண நிகழ்ச்சியில், அசாதாரணமான விஞ்ஞானத் தத்துவத்தை நியூட்டன் சொல்லியது உலகத்திற்கு அதிர்ச்சி தந்தது. ஆனால் அது புதிய விஞ்ஞானக் கருத்தை உலகத்திற்குக் கொடுத்தது. நாமெல்லாம் சூரியனைப் பார்த்தால், சூரியன் உலகைச் சுற்றி வலம் வருவது தெரிகிறது. கோபர்னிகஸ் என்ற விஞ்ஞானிக்கு, பூமி உலகத்தைச் சுற்றிவருவது அறிவில் புலப்பட்டது. ஐன்ஸ்டீன் அறிவில் சிருஷ்டியின் சூட்சுமம் புலப்பட்டு, ஒரு சூத்திரமாக உருவாகி அவருக்கு அறிவிக்கிறது. அப்படிப்பட்ட அறிவின் சிகரத்தை எட்டியவர்களை (genius) மேதை என்று நாம் அழைக்கின்றோம். அவர்களுடைய தெளிவு சிந்தனையால் ஏற்பட்டதன்று. அவர்களுடைய அறிவு படிப்பால் ஏற்பட்டதன்று. சிந்தனை முற்றிச் செயலற்றபின், படிப்பு முடிந்து, அறிவு முதிர்ந்தபின் தானே புத்தியில் உதயமானவை அவை. ஆன்மீகப் பாஷையில் அதை ஞானம் என்றும், அறிவுக்குரிய பாஷையில் அதை விஞ்ஞானம் எனவும் உலகம் சொல்லும். இப்படிப்பட்ட மேதை ஏற்படுவது எப்படி? செடி வளர்ந்து மரமாகி, கிளைகள் பிரிந்து, இலைகளும், துளிர்களும் மிளிர்ந்து, பூத்துப் பலன் தரும் காலத்தில், அது காய்த்து பழத்தை அளிக்கிறது. 12 மாதத்தில் பழம் தரும் மரமும் உண்டு. நாடு, மேதையை உற்பத்தி செய்வது மரத்திற்கு ஒப்பாகும். விலங்கான மனிதன் ஊராகவும், கூட்டமாகவும் மாறி மனிதனாக வாழ்ந்து, உணர்வு பெற்று, உற்றார் - உறவினரைப் போற்றி, அறிவு பெற்று, வாழ்க்கையை முறைப்படுத்தி, வளம் செறிந்து, கல்வியைக்

கண்டுபிடித்து, பேச அறிந்து, சிந்திக்கக் கற்று, சிந்தனை சிறப்படைந்து, அறிவால் வாழ்க்கையை அணை கட்டி, சமுதாயத்தில் அறிவை ஆட்சிப்பீடத்தில் நிறுத்தி, அனைவரும் அறிவை ஏற்றுக்கொண்டு, அறிவின் உயர்வைப் பாராட்டி, அதன் சிகரத்தை அடைய முனையும்பொழுது, சமுதாயத்தின் நெடுநாளையக் கூட்டு முயற்சி ஒருவர் மனதில் தனிப்பட்ட பலனாக உருவெடுத்துத் தோன்றும் நேரம் மேதை உலக அரங்கிற்கு வரப்பிரசாதமாக வருகிறார்.

ஒரு நாடு மேதை நிலையை அடையவேண்டுமானால், உலகெங்கும் அறிவை ஏற்றுச் செயல்படுவதுடன் நாடு ஒன்றுபட்டு, ஜீவன் பெற்று, ஜீவனில் ஆன்மா துலங்கி, அறிவின் உயர்வை அனைவரும் தடையின்றி பெற்று உயர்ந்து, நாட்டு மக்களில் பெரும்பாலோர் அறிவின் சிகரத்தைத் தொடும் நேரத்தில் நாட்டுக்கு மேதை நிலை வரும். குருவின் ஸ்தானம், அதுவும் ஜகத்குருவின் ஸ்தானம் பெற மேலும் ஒரு கட்டம் உயரவேண்டும். உலகெங்கும் ஆன்மீக வாழ்வை அனைவரும் ஏற்றுப் போற்றுதல் அடிப்படை. ஆன்மீகம் ஆரம்பித்த நாடு தன் வாழ்வையும், அறிவையும், நடைமுறை இருப்பையும் (Existence) ஆன்மீகச் சட்டத்தின் பிடியில் தவறாது கொணர வேண்டும். அன்று வேத ரிஷிகள் வாழ்வில் இறைவனைக் கண்டார்கள். உடல் முதற் கட்டமானால், வாழ்வு அடுத்தது. மூன்றாம் கட்டமாக உள்ளது அறிவு. வேதகாலத்திற்குப்பின் வந்த உபநிஷதங்கள் வேத இரகஸ்யங்களை அறிவுபூர்வமாகத் தெளிவு கொண்டதாகவோ, ஆன்மா அறிவில் வெளிப்பட்டதாகவோ ஆகாது. வேதகாலத்தில் வாழ்வில் வெளிப்பட்ட சிறப்பின் தத்துவத்தை உபநிஷதக் காலத்தில் அறிவு வெளிப்படுத்தியதாகும். வேதகால இறைவாழ்வு உயர்ந்து, அடுத்த கட்டத்தில் இறைஞானம் இன்னும் ஏற்படவில்லை. அந்த ஞானம் தனி மனிதர் பலருக்கு ஏற்பட்டுள்ளது. சமுதாயத்திற்கு முழுவதுமாக அந்த ஞானம் ஏற்பட்டால், நாடு மேதை நிலைமையை அடையலாம். ஜகத்குருவின் நிலை அடுத்த உயர்ந்த பொதுக்கட்டம்.

சமுதாயம் முழுவதும் இறைவனின் ஞானத்தை ஏற்றுக்கொள்ள முயல்வதே இன்று நம்முள் உள்ள இலட்சியம். இது நடந்தால், நாடு மேதையாகும். அதற்கு முன்னுள்ள சிறு இலட்சியமான கல்வித்துறை முன்னேற்றத்தை நாம் கருத முடியும். இந்த உயர்ந்த இலக்கிலிருந்து எது சிறுஇலட்சியமாகத் தெரிகிறதோ, அதுவே இன்று நாட்டில் அறிஞர் உலகுக்கு கற்பனைக்கெட்டாத ஒன்றாகத் தெரியும்.

சுருக்கமாகச் சொன்னால், இந்த இலட்சியம் இந்திய நாட்டு இளைஞர்களுக்கு நூற்றுக்கணக்கான சர்வதேசப் பரிசுகளைப் பெற்றுத்தரும். ஒவ்வொரு பட்டதாரியும் I.A.S.க்கு நிகராக இருப்பர். உலகில் இந்திய அறிஞர்கள் பெறாத பரிசே இருக்காது. அமெரிக்கா கல்வித்துறையில் யுத்தத்திற்குப் பிறகு பெற்ற பெயரை இந்தியா கி.பி.2000த்திற்குள் பெறும். இவை நம்பமுடியாதவை. இது சம்பந்தமான பல கருத்துகளையும், நிகழ்ச்சிகளையும் பார்த்து, பின் இவை நடக்கக்கூடியவை என்று விளக்குகின்றேன்.

சர்வதேசப் பரிசுகளில் இன்றுவரை முதன்மையாக நிற்பது நோபல் பரிசு. 1901-இல் ஆரம்பித்தது இது. சுமார் 60 ஆண்டுகள் வரை ஐரோப்பியர்கள் மட்டுமே பெரும்பாலும் இதைப் பெற்றுவந்தனர். அதுவும் பழம்பெரும் பல்கலைக்கழகங்களான ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், லண்டன், வியன்னா, பாரிஸ் போன்ற ஸ்தாபனங்களை ஒட்டியுள்ளவர்க்கு இப்பரிசு கிடைத்துவந்தது. உதாரணமாக இந்தியர் இருவரே இதுவரை - சி.வி.இராமன், தாகூர் - அதாவது 89 வருஷங்களில் இதைப் பெற்றுள்ளனர். பெரும்பாலான ஆசியர்களுக்குக் கிடைக்காத ஒன்று. ஆப்பிரிக்கர்களுக்கும், ஆஸ்திரேலியர்களுக்கும் கிடைக்காத ஒன்று. ஆப்பிரிக்காவும், ஆஸ்திரேலியாவும் அதே நிலையிலுள்ளன. அறிவுக்கு உறைவிடம் ஐரோப்பா. எனவே ஐரோப்பியர்களுக்கு மட்டுமே இப்பரிசு உரியது என்பது அபிப்பிராயம். ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் முன்னாள் காலனியாக இருந்ததாலும், ஐரோப்பாவிலிருந்து வெளியேறிய தொழிலாளிகளால் அவை நிரம்பியிருந்ததாலும், அந்த நாடுகளுக்கு

இப்பரிசு பெற அதிக வாய்ப்பில்லை என்ற நிலையிருந்தன. ஓரிருவர் அந்நாட்களில் இப்பரிசைப் பெற்றபோதிலும் அவர்களும் சமீபத்தில் ஐரோப்பாவிலிருந்து இந்நாட்டுக்குச் சென்றவர் என்ற விளக்கம் வரும். ஆனால் இதில் அடிப்படை உண்மை வேறு. ஒரு தலைமுறையில் நாடு பெறும் கல்வி, அடுத்த தலைமுறையில் அறிவின் சிறப்பாக மாறி விருது பெறும் என்பதே அந்த உண்மை. கல்லூரிப் படிப்பை அமெரிக்கர் அதிகமாகப் பாராட்ட ஆரம்பித்து, ஐரோப்பாவைவிட அதிக சதவீதம் கல்லூரிப் படிப்பை மேற்கொண்டபின் நிலைமை மாறி நோபல் பரிசு அமெரிக்காவுக்குக் கிடைக்க ஆரம்பித்தது. அன்று ஆக்ஸ்போர்டுக்கு இருந்த நிலை இன்று அமெரிக்கப் பல்கலைக்கழகமான ஹார்வேர்டுக்கு ஏற்பட்டுள்ளது. கல்வியைப் பாராட்டி, நாடு மேற்கொண்டால், வரும் தலைமுறைகள் கல்வியில் விருது பெறும் என்பதைத் தொழிலாளிகள் நிரம்பிய அமெரிக்க நாட்டின் உதாரணம் விளக்குகிறது.

உலகெங்கும் ஜப்பானில் செய்த பொருள் என்றால் எளிதில் உடைவது என்று பெயர்பெற்ற ஜப்பான், கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து, அதைப் பெருவாரியாகப் பாராட்டியதன் விளைவாக கல்வியின் தரம் உயர்ந்து, விஞ்ஞான முன்னேற்றமேற்பட்டு, தொழில் நுணுக்கம் பெருகி, தலைசிறந்த தரமான பொருள்களைப் பாதி விலையில் செய்து உலகெங்கும் விற்பனை செய்ய ஆரம்பித்து, அமெரிக்கர், ஜெர்மனி, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் ஆகியவை அனைத்தும் இனி தங்களுக்குத் தொழில் எதிர்காலமிருக்காதோ' என்று அஞ்சும் அளவுக்கு இன்று உயர்ந்து நிற்கிறது. இதன் அடிப்படையில் உள்ள உண்மை கல்வி. 1900த்தில் ஜப்பானில் (Literacy) எழுத்தறிவு 100%. இன்று ஜப்பானிய மாணவர்கள் ஐரோப்பிய, அமெரிக்க மாணவர்களைவிட அதிக நேரத்தைக் கல்லூரிப் படிப்பில் செலவிடுகிறார்கள். கல்வியின் அளவு, நாட்டின் எதிர்கால வளத்தை நிர்ணயிக்கும் என்பதே உண்மை. அந்த உண்மையை அறியாதவரை நாடு பின்தங்கியிருந்தது. அதை உணர்ந்து செயல்பட்டபின், ஒரு தலைமுறைக்குப்பின் நாடு

சாதாரணமாக முன்னேறவில்லை, உலகில் தொழிலும், தொழிற்கல்வியிலும் முதன்மையான நாடாக மாறிவிட்டது. ஜப்பானில் போதுமான கல்வி அடிப்படையிருந்தது. அதன் சிறப்பை 1950வரை அவர்கள் அறியவில்லை. கல்வியின் மகத்துவம் அது.

இந்தியர்களுடைய புத்திகூர்மையைப் பற்றிப் பேசும்பொழுது, ஸ்ரீ அரவிந்தர் அது மிகவும் நுணுக்கமானது, எடுத்த விசாரத்தைப் பூரணமாக முடிக்கும்வரை ஆராய்ச்சியை நிறுத்தாது' என்கிறார். மொழி, இலக்கணம், இலக்கியம், ஜோதிடம், வானிலை போன்ற எந்த ஒரு விஷயத்திற்கும் பல அம்சங்களுண்டு; பல கோணங்களுண்டு. ஒரு முடிவுக்கு வரும்முன் எல்லா அம்சங்களையும், எல்லாக் கோணங்களினின்றும் ஆராய்ச்சி செய்தால்தான் பிறகு அதில் குறை வாராது. குறை வாராத நிறைவுடையது இந்திய ஆராய்ச்சித் திறன். ஒரு காலத்தில் இந்தியப் பண்பாடு எடுத்த முடிவு பிற்காலத்தில் சரியில்லை என்று சொல்வதாக இருக்காது. மகாபாரதத்தில் பொதிந்துள்ள உண்மை, நமக்களிக்கும் படிப்பினைகள் ஆகியவற்றை நாம் உயர்வாகப் போற்றுகிறோம். பாரதத்திலில்லாதது உலகத்திலில்லை என்று சொல்கிறோம். உலகத்தின் அனுபவம் முழுவதையும் சுருக்கித் தரும் இலக்கியம் பாரதம். எதிர்காலத்திலும் பாரதத்திலில்லாத உண்மைகளை உலகம் காணப்போவதில்லை என்று நாம் பேசுவதுண்டு. வாழ்வின் ஆன்மீக முழுமை பெற்று, காலத்தைக்கடந்த இலக்கியம் பாரதம் என்றாகிறது. இதுவே இந்திய ஆன்மீகப் பரம்பரையிலிருந்து இலக்கியத்துறைக்குக் கிடைத்த ஞானம். அறிவுத்துறைக்கும், கல்வித்துறைக்கும் இந்திய ஆன்மீக ஞானத்தை இன்று நாம் பெற்றுத்தந்தால், அறிவுத்துறையில் அநேக மேதைகளும், கல்வித்துறையில் உலகில் எந்த நாட்டிற்கும் இன்றில்லாத உயர்ந்த சிறப்பும் இந்தியாவுக்குக் கிடைக்கும்.

கார்ல் மார்க்ஸ் தத்துவம் உலகை 100 ஆண்டுகளாக ஆண்டது. ஆசியா, ஐரோப்பாவின் பெரும்பகுதியை ஆட்கொண்டது. ஜவஹர்லால் நேரு போற்றியது சோஷலிஸம். தம் 26-ஆம் வயதில்

Ph.D. பட்டம் பெற்றார் மார்க்ஸ். இலண்டன் மியூஸியத்தில் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து உலகம் போற்றும் தத்துவத்தைக் கண்டார். பொருளாதாரம், அரசியல் துறைகளை அலசினார்; ஆராய்ந்தார். ஆனால் மனிதச் சுபாவத்தைப் புறக்கணித்தார். சக்திவாய்ந்த தத்துவம் உலகை ஆட்சி செய்யும் வகையில் உருவானாலும், சுபாவம் என்ற முக்கிய அம்சத்தைப் புறக்கணித்ததால், 100 ஆண்டுகட்குப்பின் சோஷலிஸம் தன் தோல்வியை ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் மனிதனை ஆராய்ச்சி செய்தார்கள். அணுவால் ஆனதே உலகம் என்று கண்டார்கள். அணுவையும் ஆராய்ச்சி செய்தார்கள். அதையும் பிரிக்க முடியும் என்றார்கள். பிரித்தால் பெரிய சக்தி வெளியாவதைக் கண்டு வியந்தார்கள். 1933-இல் அணுவைப் பற்றிய ஆராய்ச்சி சிறந்ததால், 1940க்குமேல் அணுகுண்டு தயாரானது. ராபர்ட் ஓப்பன் ஹீமர் என்ற ஜெர்மானிய விஞ்ஞானி அணுக்கமிஷனுக்குத் தலைமை வகித்தார். அணுவைப் பிளந்த முதல் சோதனையின்போது பெரிய ஜோதி ஜகத்ஜோதியாக வானில் காணப்பட்டது. அவர் கீதை பயின்றவர். இறைவனை ஆயிரம் சூரியப் பிரகாசத்திற்கு ஒப்பிடும் ஸ்லோகம் ஒன்றுண்டு. அணுவைப் பிளந்து எழும் ஜோதியைக் கண்ட அவர் கீதை ஸ்லோகத்தை சொல்லி, அதுபோன்ற ஜோதி என விளக்கினார். பின்னர் இந்த ஆராய்ச்சியால் அணுகுண்டு உற்பத்தியான பொழுது மனம் உடைந்தார். இதுபோன்ற காரியத்திற்கு அணு ஆராய்ச்சி பயன்படும் என்று தெரிந்திருந்தால் நான் இதில் பங்குகொண்டிருக்க மாட்டேன் என்று வருத்தமாகப் பேசினார். எவ்வளவு உயர்ந்த ஆராய்ச்சியானாலும், ஓர் அம்சத்தைப் புறக்கணித்தால், பின்னர் புறக்கணித்ததன்மூலம் குறை ஏற்படும்; ஆபத்து வரும். இந்திய மனம், இந்திய அறிவு, இந்திய ஆராய்ச்சி ஆன்மீக அடிப்படையில் ஏற்பட்டது. ஆன்மீகம் முழுமையானது. அடிப்படை எல்லாம் ஒன்றே என்ற தத்துவத்தை உடையது. எடுத்த காரியத்தை ஆராய்ச்சி செய்வதில் கடைசிவரை எதையும் புறக்கணிக்காமல் பயிலவல்லது. எனவே இதுவரை இந்தியா மேற்கொண்ட எந்த அறிவியல் கொள்கைகளையும்

பிற்காலத்தில் குறையாகக் கண்டதில்லை. அணுவைப் பிளந்ததால் ஏற்பட்ட குறையும், சோஷஸத்தில் உள்ள குறைபாடும் இந்திய அறிவியல் ஆராய்ச்சியில் இருக்காது. ஸ்ரீ அரவிந்தர் எழுதிய சாவித்திரி என்ற காவியத்தில் உலகத்தில் உள்ள அனைத்தும் இருக்கிறது என்று அன்னை கூறுகிறார். மகாபாரதத்தைப் பற்றிச் சொல்லியதைப் போன்று அன்னை சாவித்திரியைப் பற்றிக் கூறுகிறார். ஒரே ஒரு முக்கியமான வித்தியாசம். மகாபாரதக் கதைகளில் உலக நிகழ்ச்சிகள் அனைத்தும் கிருஷ்ணாவதாரத் தத்துவப்படிச் சொல்லப்பட்டுள்ளது. சாவித்திரியில் அவை பூரணயோகத் தத்துவப்படிச் சொல்லப்பட்டுள்ளது. கிருஷ்ணாவதாரம் துஷ்டர்களைத் தண்டித்தது; தீமையை அழித்தது. உலகைத் தீமையின் அவதாரமான துரியோதனனிடமிருந்து மீட்டு தர்மத்தின் புத்திரனிடம் கொடுத்தது. சாவித்திரி காலனை எதிர்கொண்டு அவனிடம் வாதாடிப் போராடி இருள்மயமான காலனை ஒளிமயமாக மாற்றம் செய்கிறாள். சாவித்திரியின் செய்கை உலகம் முழுவதற்கும் பலன் அளிக்கவல்லது. இந்திய இலக்கியம் வாழ்க்கையில் ஆன்மீக உண்மையின் அடிப்படையில் ஏற்பட்டதால் வாழ்க்கைக்கு ஊறு செய்யாது. மேலைநாட்டு விஞ்ஞானம் உயர்ந்ததென்றாலும் அதன் அடிப்படை ஆன்மீகம் இல்லை; வாழ்க்கைக்கு இடையூறு செய்யவல்லது. இன்று பூவுலக வாழ்வை அழிக்கும் கட்டத்திற்கு வந்துள்ளது. இதனின்று தப்ப மேலைநாட்டு மேதைகளுக்கு இதுவரை ஓர் உபாயம் இருப்பதாகத் தெரியவில்லை. அதற்கு ஒரு வழியுண்டு. அது பிறக்க வேண்டுமானால் இந்தியாவில்தான் பிறக்க முடியும்.

மதங்களுடைய காலம் கடந்துவிட்டது. எதிர்காலம் ஆன்மீகத்திற்கேயுரியது என்று அன்னை கூறுகிறார். ஒருவர் ஆன்மீக அனுபவம் பெற்றால் அதைக்கண்டு தெய்வ நம்பிக்கை கொண்டு பலர் தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுதல் மதவழிபாட்டின் பாதை. பிறர் ஒளியைப் பின்பற்றும் முறை. வருங்கால உலகத்தின் பிரச்சினைகள் பெரியவை; முழுமையானவை. முழு உலகத்தையும் அழிக்கவல்லவை. மதவழிபாட்டின்படி எதிர்காலப் பிரச்சினைகளைத்

தீர்க்க முடியாது. எதிர்கால வாழ்வை நடத்த முடியாது. சொந்தமாக அவரவர்கட்கு ஆன்மீக அனுபவம் தேவை. ஸ்ரீ அரவிந்த மதம் என்று ஒன்றை ஏற்படுத்தலாம் என இங்கிலாந்திலிருந்து அன்னையை எழுதிக் கேட்டபொழுது, அன்னை இதே பதிலை அனுப்பினார். மதம் இனி உலகுக்குச் சேவை செய்ய முடியாது; ஸ்ரீ அரவிந்தர் தத்துவத்தை ஒரு மதமாக்க முடியாது; அது தவறு என்றார் அன்னை. இதன் சாரமாவது:

புறத்தோற்றத்திற்காக எதையும் செய்ய முடியாது. அகவுணர்வின் சத்தியத்திற்காகவே செயல்பட வேண்டும்.

அதுவே ஆன்மீகப் பாதை.

பட்டத்திற்காகப் படிப்பை நாடாதே, அறிவுக்காகப் படிக்க வேண்டும்; பலன் கருதிச் செயல்படக்கூடாது, செயலின் அவசியம் கருதிச் செயல்படவேண்டும்; ஊருக்காக உண்மையாக நடப்பதைவிட, உள்ளத்தின் தூய்மைக்காக உண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பன போன்றவை ஆன்மீக வாழ்க்கையின் அம்சங்கள். இதுபோன்ற எதிர்கால வாழ்வை உலகுக்கு அமைத்துக்கொடுக்க இந்தியாவால்தான் முடியும் என்பது அன்னையின் கருத்து.

சமூகம், தான் அறிந்ததைவிட அதிகமானதை அல்லது சமூகத்திற்கே புறம்பான அறிவை ஒருவர் பின்பற்ற அனுமதிக்காது. அரசியல் வேறுபாடு குறுக்கே வரும். வீர சைவம் வைஷ்ணவத் தத்துவங்களைத் தன் பையன் ஆராய்ச்சி செய்ய சம்மதப்படாது. 3, 4 நூற்றாண்டுகட்குமுன் மனிதனுடைய எலும்பு அமைப்பை ஆராய்ச்சி செய்ய முற்பட்ட உலகப் பிரசித்திபெற்ற இத்தாய விஞ்ஞானி மறைந்து, ஒளிந்து கல்லறைகட்குச் சென்று பிரேதங்களைப் பார்வையிட்டார். சூரியனானாலும், மனித உடலானாலும், வேறு மதமானாலும், மாற்றுக்கட்சியின் கொள்கையானாலும், சமூகம் அவற்றை ஆராய்ச்சி செய்ய அனுமதிக்காது. இராமகிருஷ்ண பரமஹம்ஸர் உலகம் கண்டிராத ஆன்மீக மேதை; அற்புதப் பிறவி.

எல்லா மதத்தின் ஆன்மீக அனுபவங்களைப் பெற விழைந்து வெற்றி பெற்றவர். அதைச் செய்யும்பொழுது அதற்குரிய பூஜை முறைகளையும், உணவையும் சாப்பிடவேண்டி வந்தது. அவரது சிஷ்யர்கள் அவரைப் பலமுறை தடுத்து விட்டார்கள். சமூகத்தில் அறிவின் பாதையை, சுதந்திரமாகப் பின்பற்றும் உரிமை பூரணமாக இருந்தால்தான் பொதுவாக அறிவு வளரும். மேதை பிறக்க வேண்டுமானால் பொதுச் சுதந்திரம் மட்டும் போதாது. அறிவின் வளர்ச்சியின் பெருமையை சமூகம் அறிந்து, அனைவரும் மேற்கொண்டு, அதை நாடுபவர்களைப் போற்றி, பாராட்டி, உதவி செய்யும் சூழ்நிலை நாட்டிலிருக்கவேண்டும்.

இந்தியச் சமுதாயம் தன் ஆன்மீகப் பொக்கிஷத்தை கல்வித்துறையில் கண்டு, சிகரமான நிலைக்குச் சென்று, உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, வாடிய தன் மக்களை வற்றாத ஆன்மீக அறிவின் ஊற்றாக மாற்றி, உலகுக்கே எடுத்துக்காட்டான ஒரு கல்வித் திட்டத்தை உருவாக்கி, கல்வி ஓர் ஆன்மீகக் கருவி என்பதை நிலைநாட்ட முடியும். அதற்கு மேற்சொன்ன சூழ்நிலை நாட்டில் ஏற்பட வேண்டும்; அதை ஏற்படுத்த முடியும். ஆன்மீக உயர்வு, உலகத்தின் குரு என்ற நிலையும், மேதைகள் ஜனிக்கும் அமுதசுரபியாகும் நிலையும் உயர்ந்த கட்டங்கள். அவற்றைத் தவிர்த்து, ஆன்மீக அடிப்படையில் கல்வியைப் பாராட்டி உடனடியாக இந்திய இளைஞர்கள் பெரும்பலன் அடைய என்ன செய்யலாம் என்பது மட்டுமே இங்குள்ள இலட்சியம்.

இந்த நாட்டு மக்களின் சிந்தனையை உருவாக்கும் அறிஞர்கள், பேராசிரியர்கள், தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் (The elite) போன்ற அனைவரும் இந்த உண்மையைப் பூரணச் சிறப்புடன் உணர வேண்டும். பழங்காலத்தை நாடும் பண்பன்று இது. ஆன்மீகம்தான் காப்பாற்ற முடியும். ஆன்மீகம் வளர்ந்த நாடான இந்தியாவுக்கு இந்தப் பொறுப்பும், திறனும் உண்டு. எனவே நாடு, வரும் காலத்தில் செல்ல வேண்டிய பாதை மேலைநாட்டைப் பின்பற்றும் பாதையன்று. ஆன்மீக அடிப்படையில் இந்தியாவில்

உருவாகி, உலகம் பின்பற்ற வேண்டிய பாதையை நாம் இன்று செப்பனிட வேண்டும் என்ற பேருண்மையை நம் நாட்டு அறிஞர்களும், இளைஞர்களும் அறிய வேண்டும். அறிந்தவர்கள் அதைப் பின்பற்ற முன்வந்து சிறு சோதனைகள் செய்தால் எதிர்பாராத பெரும்பலன் கிடைக்கும். அதைப் பின்பற்றி கல்வித்துறையை மட்டும் முழுமையாக, சிறப்பாக, உயர்ந்த முறையில், ஆழ்ந்த அடிப்படையில் அமைக்க வேண்டும்; அதன் பலன் பெரிது.

இன்று M.Phil. படித்த பட்டதாரி 2 பக்கங்கள் புத்தகத்தைப் பார்த்து எழுத முடியாத நிலையிலிருக்கும் இந்தியாவில் இது எப்படி நடக்கும் என்பது கேள்வி. அறிவு உயர்ந்த நிலையிலும், பயிற்சி தாழ்ந்த நிலையிலும் இருப்பதால் இந்த அவல நிலை ஏற்பட்டு உள்ளது. கிராமத்தில் வசதி குறைவான குடும்பத்தில் பிறந்த பையன் S.S.L.C. பாஸ் பண்ண, நகரத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்த பையன் M.A. பாஸ் செய்யவேண்டிய புத்திசாலித்தனம் தேவை. குறைந்த புத்தியுடன், சௌகரியமான நிலையில் அதிகமான படிப்பையும், பட்டத்தையும் பெறலாம். சமூக முன்னேற்றத்தின் இலட்சியமே அதுதான். இன்று வசதி குறைந்தவர்களும், உடல்நலம் குறைந்தவர்களும், அறிவு குறைந்தவர்களும் எல்லாச் சௌகரியங்களையும் பெறும் அளவுக்குச் சமூகம் உயர வேண்டுமென உலகம் பாடுபடுகிறது. மேலைநாடுகளில் சமூகம் இதுபோன்ற முன்னேற்றத்தை அடைந்துவிட்டதால், சிறு திறமையுள்ளவர்களும் பெரும் பட்டங்களைப் பெற முடிகிறது. அதனால்தான் இந்திய இளைஞர்கள் மேலைநாடுகளுக்குச் சென்றால் உயர்ந்த பட்டங்களைப் பெற முடிகிறது. லாகூர் சர்வகலாசாலையில் எதையும் சாதிக்க முடியாத விஞ்ஞானி, இங்கிலாந்து சென்று Ph.D. பெற்று, இத்தாலி சென்று நோபல் பரிசு பெற்று, உலகப் புகழ்வாய்ந்த ஸ்தாபனம் ஒன்று அமைத்து, அதன் தலைவராக விளங்குகிறார். அவர் லாகூரிலேயே இருந்திருந்தால் ஆசிரியராக ரிடையராகியிருப்பார்.

சம உத்தியோகத்தில் மேலைநாடுகளிலும், இந்தியாவிலும் உள்ளவர்களைப் பார்த்தால் இந்த வித்தியாசம் தெரியும். இந்தியாவிலிருந்தால் எதுவும் செய்ய முடியாதவர்கள் மேலைநாட்டில் பல கோடி ஸ்தாபனத்தின் தலைவர்களாகி விடுகிறார்கள். அது அந்த நாட்டு வாழ்க்கை அமைப்பின் சிறப்பு. நம் நாடு முழுவதும் அந்நிலை வர நாளாகும். சிறந்த மாணவர்களைத் திரட்டிச் சிறப்பான வாழ்க்கை அமைப்பையும் (Social infrastructure and academic facilities) படிக்கத் தேவையான எல்லா வசதிகளையும் ஒன்று தவறாமல் அளித்தால் அங்குப் பயிலும் மாணவர்கள் அனைவரும் எந்த சர்வதேசப் போட்டியிலும் பூரண வெற்றி பெறுவார்கள்.

சுமார் 100 மாணவர்களுக்கு இதுபோன்ற வசதி, ஊக்கம், பயிற்சி அளித்தால், அவர்கள் சர்வதேச அரங்கில் நற்பெயரெடுத்தால், நாட்டில் அனைவருக்கும் தெளிவு ஏற்பட்டுவிடும். பிரபலமான கல்லூரிகளில் ஒன்று, தன் பட்டதாரிகள் அனைவரும் (சுமார் 100 அல்லது 200) I.A.S. பாஸ் செய்ய வேண்டும் என ஆரம்பத்திலிருந்து முழு முயற்சி செய்தால் அனைவரும் I.A.S. பாஸ் செய்வார்கள். 20,000 பேர் எழுதி, 200 பேருக்கு செலக்ஷன் கிடைக்கும் நிலையிலுள்ள உயர்ந்த இந்தப் பரீட்சையை எந்த ஓர் உயர்ந்த கல்லூரியும் தகுந்த தயாரிப்புடன் முனைந்தால், தன் கல்லூரி பட்டதாரிகள் அனைவரும் தேர்வு பெற வாய்ப்பளிக்க முடியும்.

சர்வதேசப் பரிசுகள் சுமார் 100 அல்லது 200 இன்றுண்டு. இந்தியர்கள் இவற்றைப் பெறுவது குறைவு. முறையான தயாரிப்பிருந்தால் அந்த ஸ்தாபனத்திலுள்ள அனைவரும் ஒரு பரிசைப் பெறலாம்.

200 ஆண்டுகளாக அடிமையாக இருந்ததின் பலனாக, மனம் அடிமை மனப்பான்மையை ஏற்றுக்கொண்டது. எனவே சுதந்திரமாகச் சிந்திக்கும் திறனை இழந்துவிட்டது. எது சரி, எது தவறு என்பது தெரிய நாலு பேர் எதைச் செய்கின்றனர் என்று பார்க்க

வேண்டியிருக்கிறது. ஒரு கட்டுரை, புத்தகம், கருத்து, வழக்கம், பழக்கம் நல்லதா என்று சொந்தமாக நல்லது எது, கெட்டது எது என்ற பாகுபாட்டை அறியும் திறன் நமக்குண்டு. ஆனால் அத்திறனில் நமக்கு நம்பிக்கையில்லை. ஆன்மீக வழியில் சொந்த அறிவு பிறக்கும்; சொந்தத் தெளிவு உற்பத்தியாகும்; எதையும் பகுத்துணர உள்ளுணர்வு துணை செய்யும். ஆன்மீக அடிப்படையில் எழும் வாழ்வு அசைக்க முடியாத சத்தியத்தின் வாழ்வாகும். அதனடிப்படையில் கல்வி முறையை அமைத்தால் அது குறைவற்ற முறையில் அமையும்.

இந்த நாட்டுக்குள்ள தகுதி பெரியது. ஜகத்குருவாகும் நிலையை இறைவன் அளித்துள்ளான். நாடு மேதைகள் பிறக்குமிடமாகும். அவையெல்லாம் அதிகபட்ச உயரத்திருந்தால் கல்வி நாம் எட்டிப்பிடிக்கும் நிலையிலுள்ளது. அந்த உயர்ந்த இலட்சியங்களை நாம் செயல்படுத்தக்கூடிய துறையில் நடைமுறைக்குக் கொண்டுவந்தால், பலன் பெரியது. உலகத்திற்கு அது பெரிய சேவை. இலட்சியம் பெரியதானாலும், எட்டக்கூடிய இலக்கே அது.

******book | by Dr. Radut