Skip to Content

மானஸீக உருவகம்

அன்னையை வழிபடச் சிறந்த முறையாக நினைவே வழிபாடு என்று நான் சொல்வதுண்டு. மனத்தூய்மையும், பக்குவமே அடிப்படை நிபந்தனைகள் என்பதால், நினைவு தூய்மையைச் சிறப்பாக்குகிறது. நெஞ்சம் தியானத்தில் நிறைவதுபோல் நிறைகிறது. வழிபாட்டின் குறிக்கோள் அளவுகடந்து பூர்த்தியாகிறது.

இது பொதுவான உண்மை. சில பக்தர்களுக்கு மனம் எப்பொழுதும் அன்னையிடமே இருப்பதுண்டு. அன்னையை கண்ட காட்சி கண்முன்னே நிற்கும். அன்னையின் சமாதி, அன்னையின் பல படங்கள், அன்னை நடந்த இடங்கள் கண்ணை விட்டகலாது. அவர்களில் சிலருக்கு அன்னையை நேரில் பார்ப்பதைவிட மனத்தில் காண்பதே சிறப்பாகவும் இருப்பதுண்டு. மனம், மனக்காட்சி, மன நிறைவு தீவிரம் பெற்று, உண்மைக்குச் சமமாகவும், மேலாகவும் இருக்கும் தன்மையைப் பெற்றவர்களுக்கு மானஸீக வழிபாடு சிறந்தது. அவர்கள் அதில் இலயித்துப்போவதுண்டு. வழிபாட்டு முறைகள் பல. அவற்றுள் இதுவும் ஒன்று. இத்தன்மையான மானஸீக உருவகம் அமைந்துள்ளவர்களுக்கு இம்முறை சிறந்தது.

அன்னையின் பெயரை நினைப்பதற்குப் பதிலாக, அன்னையின் உருவத்தை நினைப்பதே இம்முறையாகும். நினைவு நிறைந்து நெகிழ்ந்தபொழுது நினைவில் வரும் அன்னையின் உருவம் படம் போலில்லாது, நிஜ உருவமாகவே மாறிவிடும். சிறப்பான நேரங்களில் அவ்வுருவம் ஒளிமயமானதாகவே மாறிவிடும். அக்காட்சி சிந்தனையைச் சிறப்பாக்கும். சிந்தனையிலேயே நம்மை இலயிக்க வைக்கும். க்ஷணநேரம் தோன்றி மறைவதுண்டு. சில வினாடிகள் தொடர்ந்து காட்சி அளிப்பதுண்டு. அக்காட்சி நிலையானதாகவே மாறிக் கண்ணை மூடினால் தெரியும் காட்சியாகவும் ஆவதுண்டு.

கடைசி கட்டத்தில் கண் திறந்திருந்தாலும் அன்னையின் ஜோதிமயமான உருவம் நிலையாக கண்ணுக்கெதிரில் எப்பொழுதும் இருப்பதுண்டு.

பக்தனுக்கு அதைவிடப் பெரியது ஒன்றில்லை. அதை ஒரு சித்தியாகக்கொண்டு, தம்மை மறந்து அந்நிலையில் தம்மை இழந்திருப்பவர் உண்டு. சிலருக்கு அன்னையின் பாதம், விரல்கள், கண், தலை உச்சி இதேபோல் தோன்றுவது உண்டு.

இந்தத் திறமையுள்ளவர்கள் சிலர் தங்கள் தியானத்தையே மானஸீக வழிபாடாக மாற்றிக்கொள்வார்கள். இவர்கள் அன்னையுடன் இரண்டறக்கலக்க மானஸீகமாகச் சூட்சுமத்திலும், மனதிலும், நெஞ்சிலும், உடலிலும், ஆன்மாவிலும் முயன்றால் பலிக்கும். பலன் அபரிமிதமாக இருக்கும்.

தலைக்கு மேலுள்ள சகஸ்ரதளத்திலிருந்து மூலாதாரம்வரை ஆக்ஞாசக்கரம், மணிபூரஹம், அநாஹதம் என்பனபோல ஏழு சக்கரங்கள் நம் சூட்சும உடலில் இருப்பதாக நாம் அறிவோம். அன்னை 12 சக்கரங்கள் உள்ளன என்கிறார். காலும், காலுக்குக் கீழும் சக்கரங்கள் இருக்கின்றன என்கிறார். ஏதாவது ஒரு சக்கரத்தில் அன்னையை உருவகப்படுத்தி நினைத்தால் அவ்வுருவம் உயிர் பெற்று, ஒளி பெற்று, காட்சி தந்து, நிலைத்துவிட்டால் அது பெரிய முதற்கட்டமாகும். அன்னையின் அற்புதக் காட்சியில் நாம் ஈடுபட்டிருக்கும்பொழுது, சில சமயங்களில் அன்னையின் உருவம் பகவான் ஸ்ரீ அரவிந்தர் உருவமாகவும் மாறுவதுண்டு. அன்னையின் சூட்சுமஉடல் ஸ்ரீ அரவிந்தராகவே மாறிவிட்டதால், நம்முடைய சூட்சுமப்பார்வையில் தெரியும் அன்னையின் உருவம் அதனுள் உள்ள சூட்சுமத்தையும் வெளிப்படுத்துவதுண்டு. ஒவ்வொரு சக்கரத்திலும் இதுபோன்ற காட்சியைப் பார்க்க முயன்று பூர்த்தி செய்தால், நம் சூட்சுமச்சக்கரங்கள் அனைத்தும் அன்னையால் நிரம்பப்பெற்றதாகும். அதன் வழியே நம் சூட்சுமத்தேகம் முழுவதும் அன்னையால்

(Mother's Consciousness) நிரம்ப வாய்ப்புண்டு. சூட்சுமத்தேகத்தில் ஒரு செயல் பூர்த்தியானால் பின்னர் அது ஸ்தூலதேகத்தில் நடைபெறும்.

அன்னையின் ஒளியை, சக்தியை ( consciousness), உருவத்தை மனதில் - புத்தியில் - நிலையாகக் காண்பது சிறப்பு; ஆனால் எளிதன்று. அது நிலைத்துவிட்டால், நாம் பேசுவதற்குப் பதிலாக நம் மனதில் உள்ள அன்னையின் ஒளியைப் பேசச் சொல்லலாம். சுலபமாகக் கற்றுக் கொள்ளக்கூடிய முறையில்லை; பலிப்பது கஷ்டம். பலித்தாலும் ஓரளவே பலிக்கும். மனத்தின் வெளிப்பாடான பேச்சு முழுவதும் அன்னையின் வெளிப்பாடாக ஆனால், புத்தி ஜோதிமயமாகும். அதுவும் அன்னையின் ஜோதிமயமாகும். இது உயர்ந்த நிலை. நாம் பேச ஆரம்பிக்கும்பொழுது நம் எண்ணத்தைப் பேசுகிறோம். சமர்ப்பணம் செய்துவிட்டால், அன்னையை நினைத்து நம் எண்ணத்தைப் பேசுகிறோம். சமர்ப்பணம் செய்துவிட்டு, நாம் பேசுவதற்குப்பதிலாக, நம் மனதில் உள்ள அன்னையின் ஒளி பேச நாம் காத்திருந்தால், பொதுவாகப் பேச்சு எழாது. நாம் பேசலாம் அல்லது பேசாமலிருக்கலாம். மாறாக அன்னையின் ஒளியே பேசட்டும் என முனைந்திருந்தால் ஓரிரு சொற்கள் வெளிவரும். அவை தெளிவாக இருக்கும். அதைப் பயின்று மேலும், மேலும் முயன்றால் அது பலிக்கலாம்.

இதே பயிற்சியை நெஞ்சில் அன்னையை நினைத்து நம் உணர்வு வெளிப்படுவதற்குப் பதிலாக, அன்னையின் ஜோதி வெளிப்படுத்தும் உணர்வே வெளிப்படட்டும் என முயன்றால், முயற்சி வெற்றி பெற்றால், சிறிதளவு வெற்றி பெற்றாலும் அது பெரிய பாக்கியம். உடல் எல்லாம் பூரித்து, உள்ளுணர்வெல்லாம் வெள்ளமாக ஒளியாகி, மனிதனின் திறமைகளெல்லாம் கரைந்து, இன்பப்பெருக்கில் நாம் திளைப்போம்.

அடுத்த கட்டத்தில் இதேவிதமான முயற்சியை உடலும் எடுக்கலாம். உடலின் திறன் ஆயிரம் மடங்காக மாறும். க்ஷணநேரம் அது பலித்தாலும் ஆயிரம் மடங்கு பலன் வந்தாற்போல் தோன்றும். பலன் எதுவானாலும் அன்னையை மனத்திலும், மனத்தின் வெளிப்பாட்டிலும், உணர்ச்சியிலும், உணர்வை வெளிப்படுத்துவதிலும், உடலும், உடலின் செயலும் சூட்சுமமாக உணர்வது ஒரு பெரிய ஆன்மீகச் சிறப்பாகும்.

அன்னையின் திருவுருவத்தைச் சக்கரங்களில் கற்பனை செய்ததுபோல், கரணங்களில் - மனம், உடலில் - செய்ததுபோல், ஆன்மாவின் உறைவிடத்திலும் காண முயலலாம். மனத்தில் ஒளியுடன் காணப்படும் உருவம் ஆன்மாவில் சித்தித்தால் ஆன்மீக ஒளியுடன் தெரியும். அன்னைக்கு இயற்கையானது வெண்ணிற ஒளி, வைர ஒளி அன்னைக்குச் சிறப்பான அம்சம். சைத்தியப்புருஷனிலும், ஆன்மாவிலும் அன்னையை மானஸீகமாகக் காணலாம். அந்த இடங்களில் - தலை, கழுத்து, உடல், கை, கால் - அன்னையின் உருவத்தை மானஸீகமாகக் காண முயலலாம். உடலை 100, 200 சிறு பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியிலும் அன்னையின் ஒளியைக் கற்பனை செய்யலாம். சில சமயங்களில் ஒரு பகுதியில் அன்னையின் ஒளியைக் காண முயலும்பொழுது அப்பகுதி அன்னையின் உடன் பகுதியாகவே தெரிவதும் உண்டு.

மேலும் நாம் சந்திக்கும் நபர்களையும் அன்னையின் பிரதிநிதியாகவோ, அன்னையாகவோ நினைத்துச் சந்தித்துப் பழகலாம். நம் கற்பனையில் திறம் இருந்தால், அவர்களுடன் பழகும்பொழுது அன்னை அந்தச் சந்திப்பில் வெளிப்படுவதைக் காணலாம்.

நாம் இருக்கும் இடங்கள், பயன்படுத்தும் பொருள்கள், சந்திக்கும் நபர்கள், நிகழும் நிகழ்ச்சிகள், கேட்கும் ஒலி, பார்க்கும் காட்சிகள், நினைக்கும் நினைவுகள், உணர்வுகள், செயல்கள்,

அசைவுகள் அனைத்தையும் அன்னையின் அசைவுகளாகவோ, ஒளியாகவோ, அன்னையாகவோ காண முயன்று வெற்றிபெறலாம்.

இடைவிடாத நினைவு Constant Remenbrance, இடையறாத காட்சி Constant Presence ,யோகப் பயிற்சிகளில் முக்கியமானவை. அவை பலித்தால் பின்னர் நம் உள்ளுணர்வு அன்னையுணர்வாகவும், புறச் செயல் அன்னையின் செயலாகவும், கரணங்கள் அன்னைக்கே உரித்தானவையாகவும், ஜீவன் அன்னையாகவும் மாற உதவி செய்யும்.

கடைசியில் சொன்னவையெல்லாம் பெரிய யோக சித்திக்கு ஒப்பானவை. சிரத்தையுடனும், தவமுயற்சியுடனும் அவற்றைப் பின்பற்றுபவர்களுக்குப் பலன் உண்டு. அதே பலன் இல்லாவிட்டாலும், அதுபோன்ற பலனை எளிமையான பக்தனும் ஓரளவு பெற ஒரு வழியுண்டு. அன்னையின் ஒளி உடல் முழுவதும் தழுவினாற்போல் மானஸீகமாகப் பலித்தால், பின்னர் ஒவ்வோர் அங்கத்திலும் புகுந்து நிரம்பி வழியும்படி நினைத்து, அதுவும் பலித்தால், ஒவ்வோர் Cell அணுவிலும் உள்ள கருவில் அன்னையின் வெள்ளொளி சென்று தங்குவதாகவும் காணலாம். அதே ஒளியைப் பொன்னொளியாகப் பாவித்தால், அவ்வொளியால் அணு நிரம்பி, செறிந்து, வழிவதாகக் கண்டால், அன்னைக்கு நம் உடலால் செய்யும் சரணாகதி பூர்த்தியானதாக அர்த்தம். சில சமயங்களில் அவ்வொளிப் பொறி அன்னை உருவத்துடனும் காணப்படும். அது சிறப்பு. பகவான் ஸ்ரீ அரவிந்தரின் பொன்னிற உருவத்துடனும் காணப்படும். அதுவே கடைசி கட்டமான பலன். அது முழுமையான யோகப் பலன். உடலுள்ள ஆன்மீகக் கரு, அன்னை ஸ்ரீ அரவிந்தரின் பொன்னொளியை ஏற்றுக்கொள்ளும் உயர்ந்த நிலை.

******

 book | by Dr. Radut