முகவுரை
உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அன்னையைத் தேடி வரும்பொழுது அருகில் உள்ள நாம் அன்னையை நாடுவதில்லை என்ற ஒரு நிலை நீண்ட நாட்களாக இருந்தது. இப்பொழுது சற்று மாற்றம் தெரிகிறது. என்றாலும், "அருகில் இருப்பதால் மட்டும் அன்னையை அறிய முடியாது'' என்ற உண்மை மீண்டும் தெளிவாகத் தெரிகிறது. இறைவன் நெஞ்சில் குடியிருந்தாலும், நெஞ்சம் அவனை நாடுவதில்லை என்பதே பிறப்பில் நம்முடைய அமைப்பு. அன்னையை நாடி ஆசிரமம் வந்தாலும், அவரைத் தெய்வமாக ஏற்றுக்கொண்டாலும், யோகத்தை மேற்கொண்டு அவர் காலடியிலேயே காலத்திற்கும் இருந்தாலும் அன்னைக்கும் பக்தனுக்கும் உள்ள இடைவெளி முழுமையாக மறைவதில்லை.
அன்னையை ஏற்றுக்கொள்ளுதல் என்றால் என்ன? என்பதை ஏற்கனவே, அன்னையை ஏற்றுக்கொண்ட பக்தர்களுக்கு விளக்கும் வாயிலாக ஒரு கட்டுரை எழுதினேன்.அதை எழுத நினைக்கும் பொழுது மனிதன் இன்றுள்ள நிலை என்ன? அவன் எதை உயர்வாகக் கருதுகிறான்? அவனுக்குத் தேவையானவை எவை? அன்னை இந்தியாவைப் பற்றியும், இந்தியர்களைப் பற்றியும் என்ன சொல்லியிருக்கிறார்கள்? அன்னை, பக்தன் வாழ்வில் செயல்படும் முறைகள் எவை? எனப் பல கேள்விகள் எழுந்தன. அவற்றிற்குப் பதிலாகப் பல எண்ணங்கள் தோன்றின. அவற்றுள் சிலவற்றிற்கு விளக்கம் எழுதியதால் அக்கட்டுரைத் தொகுப்பு "புஷ்பாஞ்சலி'' எனும் இந்நூலாக வெளிவருகிறது.மனிதன் கடன்பட்டிருக்கிறான். உயர்ந்த குணங்களைப் போற்றுகிறான். வாழ்க்கைக்கு ஒரு நியதியுண்டு என்று பெரும்பாலும் அவன் அறிவதில்லை. பூரணயோகத்திற்கு அடிப்படையான சமத்துவம் வாழ்வில் நிதானம் என்றும் செயல் படுவது. நிதானம் அன்னையை அதிகமாகப் பெற்றுத்தரும் என்பதால், கடன், வாழ்வின் மறுமொழி, நிதானம் என்ற தலைப்புகளில் கட்டுரைகளை எழுதினேன். இந்திய விவசாயியின் ஆன்மீக உயர்வையும், உலகத்திற்குக் குருவாகும் தகுதி இந்தியாவுக்கு உண்டென்றும், அன்னை கூறியிருப்பதை, ஒரு கட்டுரையிலும் எழுதினேன். அன்னை, ஸ்ரீ அரவிந்தர் நூல்களை அறிமுகம் செய்யும் வாயிலாக ஒரு கட்டுரையும் இதில் சேர்ந்துள்ளது. இக்கட்டுரையிலுள்ள கருத்துகள் பக்தனை அன்னையிடம் நெருக்கமாகக் கொண்டுவரும். அவைகள் கொடுக்கும் பலனை நேரடியாகக் கொடுக்கும் திறன் புஷ்பங்களுக்கு இருப்பதால், "புஷ்பாஞ்சலி'' என்ற கட்டுரையை முதலில் எழுதி அதையே நூலுக்கு தலைப்பாக அளித்துள்ளேன்.
கர்மயோகி
- Login to post comments