Skip to Content

3. தவிர்க்க முடியாதது

தவிர்க்க முடியாதது என்று ஒன்று அன்பர்களுக்கு இல்லை. வாழ்வில் தவிர்க்க முடியாதவை ஏராளம் உண்டு. ஒருவருக்குத் தவிர்க்க முடியும் என்பது  மற்றொருவருக்குத் தவிர்க்க முடியாததாக இருக்கும். ஒரு காலத்தில் முடியாதது, மற்றொரு காலத்தில் முடியும். ஒரு சந்தர்ப்பத்தில் முடியாதது, மற்றொரு சந்தர்ப்பத்தில் முடியும். மூக்குக் கண்ணாடி வருமுன் பார்வை குறைந்தால் அதற்கு வழியில்லை. இன்று குறைந்த பார்வையைக் கண்ணாடி மூலம் சரிசெய்பவர்கள் ஏராளம். சமூக மனப்பான்மை மாறினால், முடியாதது என்பது மாறி, முடியும் என்றாகும். விஞ்ஞான வளர்ச்சியாலும், சமூக மாறுதலாலும், அறிவு வளர்வதாலும், மனப்பாங்கை மாற்றிக் கொள்வதாலும் இடம் மாறுவதாலும் அனுபவித்தே தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் மாறி விடுவதுண்டு. இவற்றையெல்லாம் கடந்து, தவிர்க்க முடியாதவை எவருக்கும் உண்டு.

தலைவிதி, கர்மம் என்பவை அவை போன்றவை எவரும் தப்ப முடியாதவை. ஸ்ரீ அரவிந்த அவதாரம், கர்மம் அழியக் கூடியது என்று அறிவிக்கின்றது. மனிதனுடைய ஆத்மா வெளிவந்து அவன் தலைவிதியை உற்று நோக்கினால், அதன் முன் விதி தலைகுனிந்து திரும்பிப் போகும் என்கிறார். 75 ஆம் வயதில் ஆசிரம மானேஜர் திடீரென வயிற்றுப் போக்கால் 3 நாள் உடல்நலம் குன்றியிருந்து காலமானார். அவர்

நண்பர்கள் அன்னையை அணுகி, "நல்ல ஆரோக்கியத் துடன் இருந்தவர்தாமே? எப்படிக் காலமானார்?'' என்று கேட்டார்கள். "அவருக்கு 50 இல் வயது முடிந்துவிட்டது. மேலும் 25 ஆண்டு அவர் ஆயுளை நான் நீட்டினேன்'' என்றார் அன்னை.

ஜாதகப்படி திவாலாகி, குடும்பம் சிதறியிருக்க வேண்டியவர் அந்நிலையைத் தவிர்த்து, அன்னை அருளால் ஓர் அதிர்ஷ்டத்தையும் பெற்ற நிகழ்ச்சியுண்டு.

மரணத்தை அழிக்க முற்படுவது பூரணயோகம். யோகம் பலித்தவர்க்கு மரணம் தவிர்க்க முடியாததில்லை. யோகத்தை மேற்கொள்ளாத பக்தனுக்கு மரணம் தவிர மற்றவை தவிர்க்க முடியாதவையில்லை. அன்னையை எந்த அளவில் ஏற்றுக் கொள்கிறானோ, அந்த அளவில் உள்ள தவிர்க்க முடியாதவை அவனுக்கு தவிர்க்க முடியும் என்கிறார்.

படிப்பும், பட்டமும், உயர்ந்த உத்தியோகத்தைப் பெற்றுத்தரும் என்பது பொது உண்மை. எந்த உத்தியோகத்தை நாம் நாடுகிறோமோ, அதற்குரிய பட்டத்தைப் பெற்றால் அந்த உத்தியோகத்தைப் பெறும் தகுதி கிடைக்கிறது. இந்தத் தகுதியில்லாவிட்டால் அந்த உத்தியோகமில்லை. தகுதி இருப்பதால் உத்தியோகம் தானே கிடைக்கும் என்பதில்லை. படிப்பு, தகுதியை ஏற்படுத்திக் கொடுத்து, புதிய வழியை உற்பத்தி செய்கிறது.

மனிதன் தன்னால் முடியாது என்று ஆதிநாள் முதல் கைவிட்ட அனைத்தும், முடியும் என்ற நிலையைப் பக்தனுக்கு ஏற்படுத்தும் புதிய சந்தர்ப்பத்தை அன்னை

உலகில் கொண்டு வந்துள்ளார்கள். முடியாத காரியங்கள் பல நிலைகளில் அமைந்துள்ளன. அதன் சிகரம் தலைவிதி, கர்மம். அதேபோல் அன்னையின் சக்தியும் பல நிலைகளில் அமைந்துள்ளது. ஒவ்வொரு நிலைக்கும் உரிய முறைகள் உண்டு, நிபந்தனைகள் உண்டு. அவற்றை ஏற்றுக் கொள்பவர்க்கு அந்த நிலையில் பலன் ஏற்படும். எந்த நேரத்திலும் முறைகளை ஒருவர் மறக்கலாம். மறந்த நிலையில், சக்தி குறையும். கிடைத்த பலன் நிற்காது. பெரிய சொத்தைப் பெற்றவர் பெருமுயற்சியால் பெற்றார். எந்த நிலையிலும் அவர் கவனம் குறையலாம். அலட்சியம் ஏற்படலாம். அது ஏற்பட்டால் சொத்து அவரை விட்டுப் போகும். அது தவிர்க்க முடியாததன்று. மனிதன் தானே வரவழைத்துக் கொள்வது.

ஆசிரமப் பள்ளியிலிருந்து மாணவர்கள் செஞ்சிக்குச் சென்றார்கள். சுனையில் இறங்கிக் குளித்தார்கள். புறப்படும் முன்பே அன்னை அந்தச் சுனை நீரைப் பற்றி எச்சரிக்கை செய்திருந்தார்கள். ஒரு மாணவன் மூழ்கிவிட்டான். அன்னையின் அருள் என்னவாயிற்று என்று மற்றவர்கள் கேட்டார்கள்? அருளின் பாதுகாப்பைத் தாண்டிச் செல்பவர்களை அருள் எப்படிக் காப்பாற்ற முடியும் என்று அன்னை கூறினார்கள்.

வாழ்வு செல்வத்தாலும், பதவியாலும், சந்தோஷத் தாலும், நிறைவாலும், அறிவாலும் பல நிலைகளில் அமைந்துள்ளது. ஒவ்வொரு நிலைக்கும் உரியவையுண்டு. ஒரு நிலையில் முடியாதது, அடுத்த நிலையில் முடியும்.

அந்தந்த நிலைக்கும் முடியாதவை என்பவையுண்டு. அன்னையை அந்த நிலையில் ஏற்றுக் கொண்டால், அந்நிலையில் முடியாதவை, முடியும் என்று மாறுகிறது. மாறியபின் ஏற்றுக் கொண்ட புதிய மனநிலைகளை மாற்றி அதற்கு முந்தைய மனநிலையை மீண்டும் நாடினால், முடியும் என்பவை மாறி முடியாதவையாகி விடுகின்றன. அன்னை கைவிட்டுவிட்டார் என்று பொருளில்லை. பக்தன் அன்னையை மறந்துவிட்டான் என்றே பொருள். அந்தக் காரியத்தைப் பொருத்த அளவிலாவது மறந்துவிட்டான் என்றாகும்.

பக்தியினால் அன்னையை ஏற்றுக் கொள்வது போல் நம்பிக்கையாலும் ஏற்றுக் கொள்கிறோம். அதேபோல் உயர்ந்த குணங்களை நாம் ஏற்றுக் கொண்டாலும் அன்னை நம்மை அதிகமாக ஏற்றுக் கொள்கிறார்.

நமக்குள்ள ஓர் உயர்ந்த குணத்தால் நம்மிடம் அன்னை அதிகமாகச் செயல்பட்டு வாழ்வு முன்னேறி, தவிர்க்க முடியாதவை விலகியுள்ள நிலையில், அந்த உயர்ந்த குணத்தைப் புறக்கணித்தால், அதனால் இதுவரை கிடைத்த பாதுகாப்பு இனி இல்லை என்றாகிறது. 55 வயதுவரை நாணயத்திற்கே எடுத்துக் காட்டாக இருந்த ஆபீசர், அதன் பின் நாணயத்தைக் கைவிடுவதுண்டு. எந்த நிலையிலும், எவரும் தம் விசுவாசத்தை மாற்றிக்கொள்வதுண்டு. செல்வம் அதிகமாகும் பொழுது அடக்கம் குறைவது இயல்பு. அவர் என்று பேசுபவர்களை அவன் என்று பேசும் மனநிலை ஏற்படுவதுண்டு. 10 வருடங்களாக நட்புக்கு எடுத்துக்

காட்டாக இருந்த இரு கூட்டாகளில் ஒருவருக்கு, மற்றவரை விலக்கிவிட்டால் நல்லது என்று தோன்றுவ துண்டு. உன்னுடைய விசுவாசத்தால் அன்னை உன் வாழ்வில் அதிகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது விசுவாசத்தை நீ கைவிட்டால் அன்னையின் பாதுகாப்பு குறையும். நேற்றுவரை விலகியிருந்த ஆபத்துகள் இன்று விலக்க முடியாதவையாகிவிடும்.

பொதுவாக மனிதன் எளிமையானவன். அதிகக் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொள்ளாதவன். உயர்ந்த குணங்களால் நிரம்பப் பெறாதவன். திறமைகளின் உறைவிடமாக மனிதன் இருப்பதில்லை. ஆனால் எவரிடமும் ஒரு கட்டுப்பாடு இருக்கும். ஓர் உயர்ந்த குணம் காணப்படும். ஒரு திறமையிருக்கும். அன்னையிடம் வந்தபின் அன்னை அவற்றின் மூலம் அதிகமாகச் செயல்பட்டு அவனுடைய நிலைக்கு எதிர்பார்க்க முடியாதவற்றைக் கொடுப்பதுண்டு. அவனுடைய நிலைக்குரிய குறைகளையும், கஷ்டங் களையும், ஆபத்தையும் விலக்குவதுண்டு. மனிதன் தன் நிலையை அறிந்து, அருளின் செயலறிந்து, மேலும் அதிக நல்ல குணங்களையும், திறமைகளையும் ஏற்றுக்கொண்டு வேண்டாதவற்றை முனைந்து விலக்க வேண்டும். ஆனால் மனிதன் அதுபோல் செயல்படுவதில்லை. மாறாகச் செயல்படுவதும் உண்டு.

அன்னை அன்பர் வீட்டுப் பெண்ணை ஒருவர் மணந்தார். திருமணத்திற்குப் பின் சமாதி தரிசனம் செய்ய வர அவர் மறுத்தார். பெண்ணின் திருமணத்திற்கு அன்னை தன் 50 படங்கள் நிரம்பிய

புத்தகத்தை நீண்ட ஆசிச் செய்தியுடன் கொடுத்தார். கணவன் அன்னையைப் பார்க்க மறுத்துவிட்டார். ஸ்ரீ அரவிந்த சமாதிக்கு வர ஒத்துக்கொண்டவர் ஆசிரம வாயிலில் மனதை மாற்றிக்கொண்டு திரும்பப் போய்விட்டார். தம் மாநிலத்திற்குச் சென்றார். மாமனார் வாங்கிக் கொடுத்த புதிய காரை கிருஷ்ணா நதிக்கரையில் ஓட்டிக்கொண்டிருந்தபோது கார் ஆற்றில் விழுந்துவிட்டது. எப்படியோ அதிலிருந்து வெளிவந்து நீந்தித் தப்பித்துக் கொண்டார். இதுவரை ஜாதகம் பார்க்காதவர் அப்பொழுது பார்த்தார். அது தப்பக்கூடிய கண்டமில்லை என்று தெரிந்தது. தற்செயலாக அவர் வாழ்வு அன்னையை நோக்கி வந்தது. ஆனால் அவர் மனமும் செயலும் தடையாக இருந்தன. தடையை மீறி அருள் காப்பாற்றுவதுண்டு.

மீண்டும் மீண்டும் தடையான மனநிலையையும் செயலையும் வற்புறுத்தினால் அருள் செயலற்றுப்போகும்.

பர்மாவில் பிரதம மந்திரி பௌத்த மதப் பற்றுள்ளவர். தாம் பெற்ற பெரிய பதவியைவிட மௌனம் உயர்ந்தது என்று கருதி இராணுவத் தலைவனிடம் பதவியை ஒப்படைத்துவிட்டு ஓராண்டு மௌனத்தையும், நிஷ்டையையும் ஏற்றுக் கொண்டார். ஓராண்டுக்குப்பின் திரும்பி வந்து பதவி ஏற்றார். ஓராண்டு பதவியை அனுபவித்த இராணுவ அதிகாரி, சில மாதங்களில் மனம் மாறிப் பிரதமரைச் சிறையில் அடைத்துவிட்டுத் தாம் பதவிக்கு வந்தார். தாம் பெற்ற பெரும்பதவியைத் தம் எதிரியை அழைத்து ஒப்படைத்ததைப் போல் ஆயிற்று அவர் வாழ்க்கை.

கூட்டாளியை அழிக்கும் விருப்பமுள்ளவருண்டு. சகோதரனை அழித்துவிட்டு அவன் சொத்தைப் பறிக்கும் மனப்பான்மையுள்ளவருண்டு.தம்பிக்குள்ள கெட்ட எண்ணம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அண்ணனுக்கு மட்டும் தெரியாமலிருக்கும். அண்ணன் அன்னை பக்தனாக இருந்து பெரிய நிலைகளை அடைவான். தம்பி அவனுக்கு ஜன்ம எதிரி. ஆனால் அண்ணனுக்குத் தம்பிமேல் உயிர். இது போன்ற நிலையில் அண்ணன் விரும்பி தம்பிக்குச் செய்யும் நல்லது அவனுக்கு ஆபத்தாக முடியும். அன்னையின் அருள் சில சமயங்களில் காப்பாற்றும். சில சமயங்களில் காப்பாற்ற முடியாமல் போய்விடும். திடீரென ஓர் எண்ணம் ஏற்பட்டு அண்ணனுக்கு ஒரு சேவை சந்தர்ப்பம் ஏற்படும். அதை அவன் செய்வான். அதன் மூலம் அருள் அவனைக் காக்கும். ஆபத்து சூழ்ந்துள்ள நிலையில் அவன் செயல் அவனுக்குக் கவசமாக அமையும். சில சமயங்களில் அன்னை தரிசனம் அடுத்து வருவதால், அவன் காப்பாற்றப்படுவான். சில சமயங்களில் அதுபோன்ற அரிய வாய்ப்புகளை வலிய விலக்குவான். ஆபத்து தலைமீதிருக்கும் பொழுது, அதுவும் அவன் செயலால் ஆபத்து உருவாகியுள்ள பொழுது, நண்பர் ஆசிரமம் போகலாம் என அழைப்பார். "நான் வரவில்லை. சினிமாவுக்குப் போகிறேன்'' என்று விலகுவான். அப்படி வலிய விலகிப் போகிறவருக்கு அருள் பாதுகாப்பு அளிப்பது நிலையில்லை.

அருள் விலகுவதில்லை. மனிதன் அருளை விட்டு விலகுவதுண்டு. அவனது முந்தைய செயல்களைப்

பொருத்து, அவன் விலகும்பொழுதும், சில நல்ல சந்தர்ப்பங்கள் உருவாகி அதன் மூலம் அவன் காப்பாற்றப்படுவதுண்டு. அவனது மற்ற நல்ல குணங்களாலும் அதுபோன்ற சந்தர்ப்பங்கள் வருவதுண்டு. தானே முனைந்து அதுபோல் தொடர்ந்து வரும் சந்தர்ப்பங்களிருந்தும் மனிதன் விலகுவதுண்டு, அதற்கு வழியில்லை. சந்தர்ப்பங்களிருந்து விலகு வதுபோல், நல்ல பழக்கங்களிருந்தும் விலகுவதுண்டு. விலகியவரை அன்னை விலக்குவதில்லை. மீண்டும் திரும்ப வரும்வரைக் காத்திருப்பார்.

உலகத்தில் சிறுமையுண்டு, சிரமம் உண்டு. நடக்காது என்பதுண்டு, துன்பம், மரணம், மூப்பு ஆகியவை மலிந்துள்ளன. அன்னையை ஏற்றுக் கொண்டபின் உலக வாழ்விலிருந்து மனித வாழ்வு மாற ஆரம்பிக்கும். சிறுமை மாறிப் பெருமையாகும்; சிரமம் வசதியாக மாறும்; நடக்காது என்பது நடக்க ஆரம்பிக்கும்; துன்பம் துடைக்கப்படும்; மூப்பு தள்ளிப்போகும்; யோகம் பலித்தால் மரணத்தை வெல்லும் திறனும் ஏற்படும். யோகம் சாதகனுக்கு. பக்தன் எளியவன். எளியவனுக்கும் எல்லாம் உண்டு. ஆனால் அவன் அளவில் உண்டு. பக்தியுள்ளவனுக்குப் பக்குவம் ஏற்பட்டால், அவன் பவித்திரத்தை மேற்கொண்டால் வாழ்வு மாறும். வாழ்க்கையின் அஸ்திவாரங்கள் மாறி வருவது தெரியும். இது நாம் அறிந்த வாழ்வுபோல் இல்லை என்பது விளங்கும். பக்தியையும், பக்குவத்தையும், பவித்திரத்தையும் பக்தன் தன் நிலைக்கேற்ப, தன் அளவிலேயே ஏற்றுக்

கொள்கிறான். அவற்றின் பூரண புனிதத்தின் சிகரத்தைத் தொடும் அளவில் ஏற்றுக் கொள்வதில்லை.

அவன் அன்னையை ஏற்றுக்கொண்ட அளவில், பக்தியையும், பக்குவத்தையும், பவித்திரத்தையும் ஏற்றுக் கொண்ட அளவில், வாழ்க்கையின் அஸ்திவாரங்கள் தெய்விக அஸ்திவாரமாக மாறும். நடக்காதது நடக்கும். தவிர்க்க முடியாதது என்பதில்லை என்று காண்பான். அவை உயர்ந்த பெருமாறுதல்களானாலும், அதிசயிக்கக் கூடியவையானாலும், அவனுடைய அளவிலேயே அவை அமைந்திருக்கும்.

அவற்றுக்கேயுரிய பெருஞ்சிறப்பின் அளவி ருக்காது. அதை அவன் பேணி வளர்க்க வேண்டும். தானே அவற்றிலிருந்து விலகக் கூடாது.

அன்னையை நினைவாலும், நெகிழ்ந்த உணர்வாலும், உயர்ந்த பண்பாலும், ஆத்மச் சமர்ப்பணத்தாலும் ஏற்றுக்கொண்ட அளவில் தவிர்க்க முடியாதது என்பது அன்பருக்கில்லை.

******



book | by Dr. Radut