Skip to Content

5. ஞாபகம்

படித்ததை மறக்காமல் நினைவு வைத்துள்ளவர்கள், ஒருமுறை கேட்டதை அப்படியே கிரகித்துக் கொள்பவர்கள், 10 வருஷங்களுக்கு முன் நம் வீட்டிற்கு வந்தவருக்குச் செய்துபோட்ட சமையல், 25 வருஷங் களுக்கு முன் கையெழுத்திட்ட ஃபைலில் உள்ள செய்தி, 3ஆம் வகுப்பில் படித்த நண்பர்களுடைய பெயர்கள் ஆகியவற்றை நினைவு வைத்துக் கொள்பவருண்டு. இதற்கு எதிராக இரண்டு வருஷங்களுக்கு முன் எதிர் வீட்டிலிருந்தவர், நேற்றுப் படித்த பாடம், மூன்று நாள்களுக்கு முன் தாமிட்ட வேலை, பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் பொழுதும் தம் ரிஜிஸ்டர் நம்பர் ஆகியவற்றை மறந்து நிற்பவர்களும் உண்டு. நினைவுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அதனால் நினைவையே அறிவு என்று கருதுபவர்களும் உண்டு.

நினைவு வாழ்வில் முன்னேறப் பயன்படும். நினைவு குறைந்தால் சரிவரத் தொழில் செய்ய முடியாது. பலரும் நம்மை ஏமாற்றி விடுவார்கள். படித்த பாடம் நினைவில் நிற்பதில்லை. செய்த வேலை மறந்து வருகிறது என்பவர்கள், தங்கள் ஞாபகமறதியை ஒரு தண்டனையாகவே ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்கு அறிவு பூர்வமான வழியுண்டு. அதனால் பெரும்பாலும் இதுவரை பட்ட சிரமங்களை நீக்கலாம். அன்னை முறையுண்டு. அதன் மூலம் ஞாபக மறதியே போய்விடும். அன்னை முறைகளைப் பூரணமாக ஏற்றுக்

கொண்டால் மறதி போய் நினைவாற்றலில் சிறந்தவ ராகவும் ஆகலாம்.

ஹாஸ்டலுக்குத் திரும்பி வந்து ரூம் சாவியை எடுத்து வரவில்லை என்று காண்பவர், பரீட்சைக்குப் போய் பேனாவில் இங்க் இல்லை என்று நினைவு வருவது, கிரயப் பத்திரம்' எங்கு' வைத்தோம் என்று தெரியாமல் தேடுபவர், யாரிடம் கத்தரிக்கோலை இரவல் கொடுத்தோம் என்று மறந்துவிட்டவர் வாழ்க்கை ஒருவகையில் நரகமாகிவிடும். பல நஷ்டங்கள் ஏற்படும். இவருக்கு ஒரு வழியுண்டு. மறதி என்பது இருந்தாலும் ஒரு புதிய பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நல்லது. பெரிய கம்பெனிகளில் உள்ள பழக்கம் இது. இதற்கு chick list  பட்டியல் எனப் பெயர். ஹாஸ்டலுக்குத் திரும்புமுன், பரீட்சைக்குப் போகுமுன், ஆபீஸுக்குப் போகுமுன், எந்த வேலையையும் செய்யுமுன் என்னென்ன செய்ய வேண்டும் என்று ஒரு பட்டியலைப் போட்டுக் கொண்டால் நாம் மறக்கக் கூடியதைப் பட்டியல் நினைவுபடுத்தும். பட்டியலை எழுதும்பொழுது ஒவ்வொன்றாய் நினைவுபடுத்தி எழுதினால், விட்டுப் போனதை மற்றவர்களும் சொல்லிவிடுவார்கள். ஞாபகமறதியைப் பட்டியல் சரி செய்யும்.

சாதாரணமாக ஏராளமான புத்தகங்கள் உள்ள வீட்டில் ஒரு புத்தகம் வேண்டும் என்றபொழுது அது கிடைக்காது. யாரிடம் கொடுத்தோம் என்பதே மறந்துவிடும். வாங்கியவருக்கும் மறந்து விடும். இதற்காகப் புத்தகம் இரவல் கொடுத்தபொழுது ஒரு டைரியில் குறித்து வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி

விட்டால், மறதியால் பாதிப்பிருக்காது. கிரயப் பத்திரம், நகை, பணம் போன்ற முக்கியமான விஷயங்களைப் பத்திரமாக ஓரிடத்தில் வைத்துவிடுவோம். கொஞ்ச நாள் கழித்து வேண்டும்பொழுது, வைத்த இடம் நினைவிலி ருக்காது, வீடு முழுவதும் தேட வேண்டும். பல சமயங்களில் கிடைக்கும். சில சமயங்களில் வேண்டும் போது கிடைக்காது. பிறகு கிடைக்கும். இதைத் தடுக்க ஒரு வழியுண்டு. ஒரு நல்ல நோட்டு எடுத்து அதை முக்கியமான இடத்தில் வைக்க வேண்டும். முக்கியமான பொருள்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை அதில் குறித்து வைக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் மறக்கக் கூடியதை ரிஜிஸ்டர் மறக்காது. தேட வேண்டிய அவசியம் இருக்காது. அடிக்கடி எல்லாப் பொருள்களையும் தேடும் பழக்கமுள்ள வீட்டில் ஒரு சிறு டைரியில் அவற்றைப் பற்றிய குறிப்புகளை எழுதும் பழக்கம் வந்தால், தேடும் அவசியம் போய்விடும்.

ஒரு விஷயத்துடன் மற்றதைச் சேர்த்துப் பார்த்தால் மறதி குறையும். எந்தத் தேதி அண்ணன் டில்லிக்குப் போனான் என்பது மறந்துவிடும் என்றால், அதை உன் பரீட்சையுடன் சேர்த்து விட்டால் மறக்காது, உன் பரீட்சைக்கு முதல் நாள் ஊருக்குப் போனான் என்று புரிந்து கொண்டால் தேதி மறக்காது, அதேபோல் ஒரு விஷயத்தை மற்றதுடன் தெளிவுபடுத்தினால் பல விஷயங்களை எதில் நினைவுபடுத்த முடியும்.

பாடத்தைப் புரியாமல் மனப்பாடம் செய்தால் மறந்துவிடும். புரிந்து மனப்பாடம் செய்தால் மறக்காது. எளிமையாக நினைவிருக்கும். மறதி என்பது

பொல்லாதது. இந்த உபசாந்தியான முறைகளுக் கெல்லாம் அது அசையாது. மறதியை விட்டொழிக்க டைரி எழுதினால், டைரி வைத்த இடம் மறந்துவிடும். மறதி பொல்லாதது. என்றாலும் இந்த முறைகள் வலுவானவை. இவற்றால் பல விஷயங்களில் மறதியை வெல்ல முடியும். எல்லா விஷயங்களிலும் வெல்ல முடியாது. நமக்கு மறதியுள்ள இடங்களில் பெரும் பாலானவற்றிற்கு இவை போன்ற மாற்றுச் செய்ய முடியும்.

எந்த விஷயம் மறந்து போகிறதோ அந்தச் சூழ்நிலையைக் கற்பனையில் படமாக நினைத்துப் பார்த்தால், விட்டுப்போன விஷயம் திடீரென நினைவுக்கு வரும் வழியுண்டு. ஹாஸ்டலில் நம்முடன் இருந்தவர் இப்பொழுது மறந்து போனால் ஹாஸ்டல் வாழ்வைப் படமாகக் கற்பனை செய்தால் அவர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி நினைவுக்கு வர வாய்ப்புண்டு. அதன் மூலம் அவர் யார் என்பதும் நினைவுக்கு வரும்.

பூமாதேவிக்கு நினைவுண்டு. அது உள்ள இடத்திற்கு யோக சக்தியால் போக முடியும் என்கிறார் அன்னை. அந்த இடத்தைத் தொட்டவர்க்குப் பூமியின் பழைய சரித்திரமும், எதிர்காலமும் தெரிய முடியும்.

அனுபவம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதற்கு நினைவு கிடையாது. அதனுள் உள்ள சைத்திய புருஷனுக்கே நினைவுண்டு. பூர்வ ஜென்ம ஞானம், இது போலும் வருவதுண்டு. எவ்வளவு அனுபவம் ஏற்பட்டாலும் மனத்தாலோ, உணர்வாலோ, உடலாலோ அதை நினைவில் வைத்திருக்க முடியாது. சைத்திய புருஷன் அங்குச் செயல்பட்டால் மட்டும் நமக்குப்

பிற்காலத்தில் அது நினைவிருக்கும். மேடைப் பிரசங்கங்கள் நிலையாக இருக்காது. வெளியிடப்பட்ட புத்தகங்கள் பிற்காலத்தில் நிலைக்கும். அனுபவம் பிரசங்கம் போன்றது. சைத்திய புருஷன் புத்தகம் போன்றது.

ஞாபகம் திறனற்றிருப்பதால் மறந்து விடுகிறோம். பிடிக்காத விஷயங்களும் நினைவில் இருப்பதில்லை. அதனால் ஒரு விஷயம் நினைவில் இருக்க வேண்டு மானால், பிடிக்கவில்லை என்ற மனநிலையை மாற்றிக்கொண்டால், மறதி குறையும்.

ஆபீஸுக்குப் போகும்போது ஃபைலை வைத்துவிட்டுப் போகிறவர், முக்கியமானவற்றை மறந்து விட்டுப் போகிறவர்கள், புறப்பட்ட பின் ஒரு நிமிஷம் கழித்து மீண்டும் தம் மேஜைக்கு வரும் பழக்கத்தை மேற்கொண்டால், எவையெல்லாம் மறந்து விட்டோம் என்பதை மேஜை நினைவுபடுத்தும். அதனால் மறந்தவற்றை மீண்டும் எடுத்துக் கொண்டுபோகலாம்.

மறதி அதிகமாக உள்ளவர்களுக்குப் பல விஷயங்கள் நினைவிருக்கும். அவர்கள் முக்கியத் துவத்தைப் பாராட்டுபவை நினைவிருக்கும். அத்துடன் ஒரு விஷயம் நடக்கும் பொழுது அதைக் கவனித்து அதனால் தாம் எப்படிப் பாதிக்கப்படுகிறோம் என்று யோசனை செய்தவை நினைவை விட்டு அகலாது. எனவே மறதியை அழித்து, நினைவை அதிகரிக்க வேண்டுவோர் செய்யக் கூடியவை பல.

  • நினைவுக்காகப் chick list பட்டியல் தயாரிப்பது.
  • மறந்துவிடும் சிறிய விஷயங்களை டைரி போன்றவற்றில் குறித்துவைப்பது.
  • பெரிய விஷயங்களுக்கு ஒரு ரிஜிஸ்டர் தயார் செய்து அதில் எழுதுவது.
  • வெளியே போகுமுன் மீண்டும் திரும்பி வந்து நினைவு கூர்வது.
  • விஷயங்கள் நடக்கும்பொழுது அவற்றை மற்ற முக்கியமானவற்றுடன் இணைத்துப் பார்ப்பது.
  • விஷயங்களைக் கவனித்து அவை எப்படித் தம் வாழ்வைத் தொடுகின்றன என்று யோசனை செய்வது.
  • விஷயங்கள் நடந்த நேரத்தையும், இடத்தையும் மீண்டும் கற்பனையில் கொண்டு வருவது.

அன்னை பக்தர்களுக்கு மேற்சொன்ன முறைகள் அபரிமிதமான பலனைக் கொடுக்கும். மேலும், அன்னையிடம் "நினைவு வேண்டும்'' என்று பிரார்த்தனை செய்தால், மறதி போய் விடும். அதையே தொடர்ந்து செய்தால் அபரிமிதமான ஞாபகம் ஏற்படும். ஞாபகத்திற்குப் பேர் போனவராக அவர் மாறிவருவார். மறதியால் சிரமப்படும் சமயம் எல்லாம் அன்னையை நினைத்தால், மறதி மடிந்து போகும்.

*******



book | by Dr. Radut