Skip to Content

பகுதி 3

15. உயர்ந்த சத்தியஜீவியம்

சச்சிதானந்தத்தை 4 அத்தியாயங்களில் எழுதிய பகவான் அடுத்த அத்தியாயமாக தெய்வீக மாயையை எழுதினார். மாயை பிரம்மத்தின் ஜீவியம் என்பது பகவான் விளக்கம். மாயை உலகை சிருஷ்டித்தது என்கிறார். பிரம்மத்தில் எல்லாம் எல்லாவற்றிலும் உள்ளது (all is in all). இது அசைவற்ற சாரமான சத்தியம். இதை மாற்றுவது சிருஷ்டி. எல்லாம் ஒன்றினுள்ளும், ஒன்று எல்லாவற்றிலுமிருப்பது (all is in each,each is in all) சிருஷ்டி. இப்படி மாற்றியது மாயை. அடுத்த அத்தியாயம் சத்திய ஜீவியம் - சிருஷ்டிக்கர்த்தா. சத்தியஜீவியம் சச்சிதானந்தத்திற்கும், உலகுக்கும் இடைப்பட்டது. அது சிருஷ்டிக்கப் பயன்படுத்தும் கருவி - முழு எண்ணம் (Real-Idea). அது சிருஷ்டிக்கும் லோகம் சத்தியஜீவியம். முழு எண்ணத்தில் அறிவும், உறுதியும் (knowledge and will) இணைந்து இருப்பதால் சிருஷ்டி ஏற்படுகிறது. அதற்கடுத்த அத்தியாயம் இது. இந்த அத்தியாயத்தின் முக்கிய கருத்துகள்:

  1. சத்தியஜீவியம் பிரம்மத்தின் அகண்ட வெளிப்பாடு.
  2. இது சத் என்பதை சத், சித், ஆனந்தம் எனப் பிரித்தது.
  3. சத்தியஜீவியம் சச்சிதானந்தத்தின் சுபாவம்.
  4. சத்தியஜீவியமே பிரபஞ்சமாயிற்று.
  5. சத்தியஜீவியம் முழுமையுடையது.
  6. சத்தியஜீவியம் உலகை சிருஷ்டித்து, தன் இச்சைப்படி அதை நடத்த, தானே தன்னுள் உலகை வைத்துக்கொண்டு, அதன் சக்தியால், அதன் இச்சைப்படி, அதனுள் உலகை செயல்படுத்துகிறது.

  1. இது மனத்திலிருந்து மாறுபட்டது.
  2. இது காலத்தைக் கடந்தது.
  3. பிரம்மம் அனைத்துள்ளும் இருக்கிறது; அனைத்தும் பிரம்மத்துள் இருக்கின்றன; அனைத்தும் பிரம்மம் என்பது சத்தியஜீவிய சூத்திரம்.
  4. சத்தியஜீவியத்தை இரண்டாகப் பிரித்து - காலத்தைக் கடந்தது, காலத்துள் உள்ளது என இரண்டாகப் பிரித்து - இது மனத்தை அவற்றிடையே உற்பத்தி செய்தது.
  5. அப்படி உற்பத்தியான மனம், உயிர், உடல் ஆகியவற்றை அறிவது சத்திய ஜீவியத்தை அறிவதைவிட எளிது.
  6. உலகம் என்ற முழு ஒருமையினின்று மனம் மனிதனைப் பிரித்து விடுவதால் மனிதன் சிறியது (finite) என்ற கண்டமாகிறான். சத்திய ஜீவியம் அப்படிப் பிரிந்த மனிதனை உலகத்துடனும், பிரம்மத்துடனும் இணைக்கிறது.

இந்த அத்தியாயக் கருத்துகளை எடுக்கும்முன் சத்தியஜீவியம் சச்சி- தானந்தத்தின் சுபாவம் என்ற கருத்தையும், ஒன்று பலவாகி உலகம் ஏற்பட்ட இரகஸ்யத்தையும், சத்தியஜீவியம் பெற்ற வரலாற்றையும், காலமும் இடமும் அவசியம் என்பதையும் கருதுவோம்.

  1. சுபாவம்: நமது சுபாவம் வேகம் என்றால் நாம் செய்யும் காரியங்களிலும் வேகம் வெளிப்படும். வெளிப்படுவது சுபாவம். அதையே பகவான் சக்தி power என்கிறார். சில உதாரணங்கள்:
  • எலக்ட்ரிசிட்டியின் சுபாவம் ஷாக் அடிக்கும், எலக்ட்ரிசிட்டியின் சக்தி ஷாக் அடிக்கும் என நாம் அறியலாம். என்றாலும் power, nature என்பவை சற்று வேறுபட்டவை. பெண்ணின் சுபாவம் மென்மை. பெண்ணின் சக்தி பிள்ளையை சிருஷ்டிப்பது. சத்தியஜீவியத்தை பகவான் சச்சிதானந்தத்தின் சுபாவம் என்கிறார்.

அறிவின் சுபாவம் ஆராய்வது, புரிந்துகொள்வது, அறிவின் சக்தி (power) ஒழுங்கை ஏற்படுத்துவது (organising). படிப்பின் சுபாவம் தெளிவு தருவது. படிப்பினுடைய சக்தி (power) வேலை பெற்றுத் தருவது. மனம் பிரிக்கும்பொழுது பொருள்களை தனித்தனி ஆக்கிவிடும்; ஒரு கட்டையை துண்டாடுவதுபோல். சத்தியஜீவியம் (differentiares wihout dividing) பொருள்களின் அம்சத்தைப் பிரிக்கின்றது. பொருள்களைப் பிரிப்பதில்லை. மனம் பிரிப்பது சொத்து பாகப்பிரிவினை செய்வதுபோல். சத்தியஜீவியம் பிரிப்பது குடும்பம் பிரிவதுபோல்.

Page 132 / Para 1:

சத்தியஜீவியம் அனைத்தையும் தன்னுட் கொண்டது. அனைத்தையும் தன்னில் உற்பத்தி செய்கிறது. அனைத்தையும் தன்னுள் பூர்த்தி செய்கிறது. நாம் சத்தியஜீவியத்தை தெய்வீகப் புருஷனின் சுபாவமாகக் (nature of Sachidananda) கருதவேண்டும். சச்சிதானந்தத்திற்கு இரு அம்சம் உண்டு. 1) பிரம்மமாக பிரபஞ்ச வாழ்வு, 2) ஈஸ்வரனாக உலகை சிருஷ்டிக்கும் அம்சம். நாம் இரண்டாம் அம்சத்தின் சுபாவமாக சத்திய ஜீவியத்தைக் கருதவேண்டும். நாம் கடவுள் எனக் கூறுவது இதையேயாகும். இது சிறிய, இஷ்டதேவதையில்லை. மேல்நாட்டார் கடவுளை பலம் வாய்ந்த மனிதனாகக் கருதுகிறார்கள். இஷ்டதேவதையென நாம் சத்திய ஜீவியத்தைக் கருதினால் மேல்நாட்டார் செய்யும் தவறு எழும். அது மனித மனத்திற்குரியது. அகந்தைக்கும் சத்தியஜீவியத்திற்கும் உள்ள உறவாக முடியும். தெய்வம் இஷ்டதெய்வமாக இருப்பதை நாம் மறுக்க முடியாது. பொதுவான அம்சம் பிரபஞ்ச வாழ்வின் ஒரு அம்சம்தான். தெய்வம் வாழ்வின் எல்லா அம்சங்களையும் கொண்டது. ஆனால் தெய்வம் ஒரு புருஷன். தெய்வம் தன்னையறிந்த புருஷன். அது புருஷன் என்பதை மறுக்க முடியாது. இங்கு நாம் அந்த அம்சத்தைக் கருதவில்லை. தெய்வீக ஜீவியத்திற்கு பொதுவாக மனமான சத்தியம் உண்டு. அதையே நாம் இங்குக் கருதுகிறோம். இந்த அம்சத்தை விரிவாகக் கருதி தெளிவாக வரையறுப்பது நம் நோக்கம்.

சமூகம், சர்க்கார் என்பவற்றைக் கருதினால் ஓரளவு சச்சிதானந்தம், சத்தியஜீவியம் புரியும். சர்க்கார் சமூகத்தின் சுபாவம் எனக் கொள்ளலாம். சர்க்காருக்கு அரசியல், நிர்வாகம் என இரு அம்சங்கள் உள்ளன. நிர்வாகம் சக்தி வாய்ந்தது. ஆனால் நாம் கருதுவது சர்க்காரின் அரசியல் அம்சம். அரசியல் என்பது கட்சிகளிடையே குறிப்பாகிறது. கட்சிகளைக் கடந்து சர்க்காரின் அரசியல் அதிகாரத்தை நாம் பிரித்துக் காணலாம். அதையே இங்கு நாம் செய்கிறோம்.

சமூகம் - சச்சிதானந்தம்.

சர்க்கார் - சத்தியஜீவியம்

  1. அரசியல்,
  2. நிர்வாகம்

அரசியலும் பொதுவானது, குறிப்பானது என்பவையுண்டு. நாம் பொதுவான அம்சத்தைக் கருதுகிறோம்.

Page 132 / Para 2:

சத்தியஜீவியம் பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ளது. அது ஞானம்; சுயமாகப் பெற்ற ஞானம். அந்த ஞானத்திற்குச் சக்தியுண்டு. பிரபஞ்சத்தை அது ஓர் ஒழுங்குக்குள் கொண்டுவரும் திறமை படைத்தது. ஏகன் (One) என்ற புருஷன் அநேகன் (the  Many) என்ற வாய்ப்பை தன்னுள் அனந்தமான வித்தாகப் பெற்றுள்ளது. ஒன்று பலவாகும்பொழுது அவற்றிடையே சுமுகமான உறவை - ஒழுங்கை - ஏற்படுத்தும் திறன் சத்திய ஜீவியத்துடையது. இந்த ஒழுங்கை நிலைநாட்டும் சக்தி இல்லாவிட்டால், அதுவும் சுயமான ஞானமாக இல்லாவிட்டால் பிரபஞ்சம் குழப்பம் நிறைந்த அலைகள் புரளுமிடமாகும். அதன் வித்தான சக்தி அனந்தம். அதனுடைய லீலை கட்டுக்கடங்காத, கட்டுப்படுத்த முடியாத (Chance) சந்தர்ப்பம் இக்குழப்பத்தை விளைவிக்கும். புதைந்துள்ள சக்தி அனந்தமானால், வழிநடத்தும் சட்டமில்லையெனில், அத்தகைய சத்தியம் இல்லையெனில் குழப்பம் விளை-

யும். நிலையற்ற நிலை, குழப்பத்திற்கு வித்து. உருவம் பெறாத பொங்கிவரும் சக்தி குழப்பத்தில் முடியும். சத்திய ஜீவியத்திற்கு சுயதிருஷ்டியுண்டு; சுமுகம் உண்டு; முன்கூட்டி முடிவு பெறும் எண்ணம் உண்டு. அவை பரிணாமத்திற்கு உரிய வித்தாக உள்ளே புதைந்து இருப்பதால், குழப்பம் தவிர்க்கப்பட்டு, சுமுகம் எழுகிறது. சிருஷ்டிக்கும் ஞானம் ரூபங்களையும் சக்திகளையும் கட்டவிழ்க்கிறது. அந்த ரூபங்கள் சத்தியஜீவியத்துடையவை. அந்த சக்திகள் சத்தியஜீவியத்துடையவை. அதைத் தவிர வேறில்லை. அவ்விடத்தை ஆட்சி செய்யும் சட்டமும், சத்தியமும் தன் ஜீவனின் திருஷ்டி. அதனுடன் பிறந்தவை பல உண்டு. மற்ற வித்தான சக்திகளைத் தொடர்புகொள்ளும்பொழுது சுமுகத்தை நிலைநாட்டும் திறன் அதற்குண்டு. தன் சுயகருத்தில் சத்திய ஜீவியம் மற்றவற்றுடன் தொடர்புகொள்ளும்பொழுது அங்கு ஓர் சுமுகமாக அசைவு வேண்டும் என்பதையறியும். அச்சுமுகத்தை நிலைநிறுத்த தேவைப்பட்ட சத்தியம் ஏற்கனவே அதனுள் உள்ளது. உலகின் சட்டம் எழ, அதை நடைமுறையில் நிலைநிறுத்த சத்தியஜீவியம் உற்பத்தி ஸ்தானம். அது கண்மூடித்தனமான சட்டமல்ல. அது சுயசுபாவத்தை வெளிப்படுத்துவது. முழு எண்ணத்தால் அது கட்டாயப்படுத்தப்படுகிறது. பிறப்பில் அவை அமைந்த விதம் முக்கியம் என்பது கொள்கை. எனவே ஆரம்பத்திலிருந்து முழு வெளிப்பாடும் நிர்ணயிக்கப்பட்டது. அதுவே அதன் சுயஞானம். ஒவ்வொரு நிமிஷமும் அதுவே அது செயல்படும் வகை. அதன் பிறப்பிலுள்ள சத்தியப்படி, ஆதியில் எழுந்த அமைப்பின்படி சத்தியஜீவியம் அப்படி அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தது என்ன என்பதை நிர்ணயிக்கும்படி அது நகருகிறது. அதுவும் பிறப்பில் அமைந்ததே. முடிவாக அது ஆரம்பத்தில் விதையில் உள்ளபடி மலரும்; வெளிப்படும்.

நாடகத்தில் நடிகன் நடிப்பது, பேசுவது, அவன் போட்டுள்ள உடை, அவனது உணர்ச்சிகள் ஆரம்பத்திலேயே - கதையில் - எப்படியிருக்க வேண்டும் என கதை நிர்ணயித்துள்ளது. அதுபோல் சத்தியஜீவியம் பிரபஞ்ச சிருஷ்டியை நிர்ணயித்துள்ளது.

Page 133 /Para 3:

உலகம், பிரபஞ்சம் என்பவை ஆதியான பிரம்ம சத்திய வெளிப்பாடானவைஎனில், அவை வெளிப்பட காலமும், இடமும் அவசியம். காலமின்றி சலனமில்லை. காலம் இல்லாவிட்டால், சலனமற்ற சுமுகம் நிலவும். காலத்தின் நிகழ்ச்சிகளைத் தாங்க இடம் தேவை. எனவே காலத்தால் நடப்பவை இடத்தால் தாங்கப்படும்பொழுது, காலமும் இடமும் தொடர்புகொள்கின்றன. இத்தொடர்பை (Casuality) காரணத்தால் ஏற்பட்ட காரியம் என்கிறோம். சுருக்கமாக காரண காரியமெனலாம். தத்துவம் பேசுபவர்க்கு காலமும், இடமும் வாதத்திற்குரிய கருத்துகள். உண்மையில் காலம், இடம் என்பவை இல்லை என்பது அவர் கொள்கை. நம் கொள்கைப்படி பரம்பொருள் ( Conscious Being) உலகமாயிற்று. ரூபம் பரம்பொருள், சக்தியும் பரம்பொருள். எனவே நமக்கு காலமும், இடமும் பரம்பொருளின் திருவுருவம். தத்துவம் நமக்குப் பயனற்றது. பரம்பொருள் தன் அசைவுகளைக் காணுதல் காலம். அவற்றைப் புறத்தில் தாங்கிப் பிடிப்பது இடம் என்பது பகவான் ஸ்ரீ அரவிந்தர் விளக்கம். காலம் பரம்பொருளின் அகநிகழ்ச்சி. இடம் பரம்பொருளின் புறநீட்சி. மனம் காலத்தையும், இடத்தையும் தன் பாகுபடுத்தும் சுபாவப்படி காண்கிறது.

  • பரம்பொருளான ஆத்மாவின் அகமும், புறமும் பரம்பொருளே.
  • அகநிகழ்ச்சி காலம்; புறநீட்சி இடம்எனில், இவையிரண்டும் ஆத்மாவின் பரம்பொருளின் - அசைவுகள். மனம் காலத்தை இடத்தினின்று பிரித்து வெவ்வேறாகக் காண்கிறது.

வீட்டில் வருமானம் செலவாகிறது. உள்ளே வருவது வெளியே போகிறது. உள்ளே வருவதும், வெளியே போவதும் ஒன்றே. கணவனுக்கு தான் சம்பாதிப்பது தெரியும். மனைவிக்கு தான் செலவு செய்வது தெரியும். பிணக்கு இதனால் ஏற்படுகிறது; பிரித்துப்பார்த்தால் பிணக்கெழும்; சேர்த்துப் பார்த்தால் பிரச்சினை தீரும்.

கடந்தது, நிகழ்வது, வருவது என்ற பிரிவுகளுள்ள அசைவின் தொடர்பு காலம். மனம் குறிப்பிட்ட இடத்தினின்று முன்னும், பின்னும் காலத்தைக் கண்டு அறியும். இடம் என்பது நிலையான வீட்சி. பொருளைப் பிரிப்பதால் ஏற்படுவது இடம். பிரிந்து நிற்கும் பொருளின் பரப்பில் மனம் தன்னை ஓரிடத்தில் நிறுத்தி முன்னும், பின்னும், சுற்றியும் கண்டு இடத்தை அறிகிறது. கட்டடம் கட்டுகிறோம். கட்டடம் ஆதி, முதல், முழுமையான செயல். இதன் அம்சங்கள் பல. அவற்றுள் பணம் ஒன்று. செங்கல், சிமெண்ட் போன்றவை அடுத்தவை. பணம் அகம்; கல், சிமெண்ட் புறம். எவ்வளவு பணம் செலவாகியுள்ளது, எதற்கு செலவாகியுள்ளது எனக் கணக்குப் பார்த்து எவ்வளவு கட்டடம் முடிந்துள்ளது என அறியலாம். எவ்வளவு கல், சிமெண்ட் செலவாகியுள்ளது என்பதும் அதைக் காட்டும். வாழ்வெனும் கட்டடத்தை காலம், இடத்தால் மனம் அறியும். இடம் இல்லாவிட்டால் கட்டடமில்லை. மனம் திட்டமிடாவிட்டால், காலத்தால் நினைவைச் செப்பனிட்டு திட்டமிடாவிட்டால், கட்டடம் எழுந்திருக்கப்போவதில்லை.

Page 133 /Para 4:

நல்லது, கெட்டதைக் கடந்து முழு நல்லதுண்டு. ஒளி, இருளைக் கடந்து இருளற்ற ஒளியுண்டு. இதை Self -existent good சுயமான நல்லது என்கிறோம். பிரம்மம் என்பது ஆதி. ஆனாலும் நாம் ஆனந்த பிரம்மம், ஜடப் பிரம்மம் என எல்லா நிலைக்கும் பிரம்மம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். அதேபோல் அனந்தம் என்பது அந்தம் (முடிவு) என்பதற்கு எதிரானது. பிரம்மம் அனந்தமானது. உலகம் அந்தமானது. என்றாலும் உலகத்திற்கும் அனந்தம் உண்டு என்பது ஸ்ரீ அரவிந்தம். காலத்தைக் கடந்தது அனந்தமெனில், காலம் முடிவில்லாமல் தொடர்ந்து வருவதால் அதற்கும் அனந்தமுண்டு. எல்லா நிலைக்கும் பிரம்மம் உண்டு என்பதைப் போல், எல்லா நிலைக்கும் அனந்தமுண்டு. இவை ஸ்ரீ அரவிந்தத்திற்கேயுரிய அடிப்படைக் கருத்துகள். பிரம்மமே உலகம் ஆனதால் எல்லா நிலைகளிலும்

பிரம்மம் உண்டு. பிரம்மம் அனந்தம் ஆனதால், எல்லா நிலைகட்கும் அனந்தம் உண்டு.

  • பெரியது, சிறியதனுள் வந்தால் பெரிய அம்சம் தவறாது தன்னை வெளிப்படுத்தும்.
  • அழியாத ஆத்மா அழியும் உடல் ஜனித்தால், அழியும் உடல் அனந்தமாகத் தொடர்ந்து அழியாத அம்சத்தை நிலைநிறுத்துகிறது.

நடைமுறையில் மனம் காலத்தை நிகழ்ச்சியால் அளக்கிறது. பட்டம் பெற ஐந்து ஆண்டு ஆனால் காலத்தை நாம் பட்டத்தால் அளக்கிறோம். இடத்தைப் பொருளால் அளக்கிறோம். காலம் கண்ணுக்குத் தெரியாது; பட்டம் தெரியும். இடம் கண்ணுக்குத் தெரியாது; நிலம், மனை கண்ணுக்குத் தெரியும். நிலத்தால் இடத்தை மனம் அளக்கிறது. சித்-சக்தி என்பது காலமும், இடமுமாகும். அது தூய மனப்பான்மை; அறியாமை கலப்பற்றது. அறியாமை கலந்த மனம் காலத்தை நிகழ்ச்சியாலும், இடத்தைப் பொருளாலும் அளக்கிறது. தூயமனத்திற்கு அந்த நிர்ப்பந்தமில்லை. தூயமனம் நிகழ்ச்சிகளையும் பொருளையும் புறக்கணித்து காலத்தையும் இடத்தையும் அறியவல்லது. துணியில் குறுக்கிழை, நெடுக்கிழை உள்ளது போல் காலமும், இடமும் பிரபஞ்ச சக்தியின் ஜீவியத்தில் இரு அம்சங்கள். தூயமனம் மனத்தைவிட உயர்ந்தது. அது முக்காலத்தை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. மனம் காலத்திற்குட்பட்டது. காலம் தூய மனத்திற்குட்பட்டது. அகண்ட, முடிவற்ற, அனந்தமான முக்காலம் தூய மனத்தின் பார்வையில் அடங்கும் ஒரு புள்ளி. அதே மனம் இடத்தையும் அதேபோல் உட்கொண்டது. மனிதமனம் இடத்திற்குட்பட்டது. மனித மனத்திற்கு இடம் பரந்து, விரிந்த, அகண்டமான அனந்தம்; தூயமனத்திற்கு இடமும் ஓர் புள்ளி. காலம் தூயமனத்தின் அகம் என்பதுபோல் இடமும் அதற்கு அகமே. எதுவும் தூயமனத்திற்குப் புறமில்லை. 50 கோடி கம்பனி 1000 ஏக்கரில் அகண்டு, கட்டடமாக விரிந்து, நாடு முழுவதும் மார்க்கட்டாகப் பரவியிருந்தாலும் பணம் என்ற நோக்கில் ஒரு செக்கில் 50 கோடி ரூபாய் அடங்கும். பணம் பெரியது; கம்பனி சிறியது. பிரபஞ்சம் தன்னையறியும் ஐக்கியமுடையது. அது

அழிவற்றது. ஏதோ ஒரு சமயம் நாம் அதை உணருகிறோம். அந்த நோக்கில் காலமும், இடமும் எப்படித் தெரியும் என இப்பொழுது கேட்க முடியாது. ஏனெனில் நமக்குத் தெரியாததை இல்லையெனக் கூறும் அறிவு நமக்குண்டு.

Page 134 / Para 5:

சத்தியஜீவியம் அனைத்தையும் தழுவுவது. அது முக்காலத்தையும் ஒரே பார்வையில் காணவல்லது என நாம் அறிவது இங்கு அவசியம். எழுதும் பொழுதும், டைப் அடிக்கும்பொழுதும் ஒரு எழுத்தாகத்தான் அடிக்க வேண்டும். வேகம் அதிகமானாலும் பல எழுத்துக்களை ஒரே சமயத்தில் எழுத முடியாது; அடிக்க முடியாது. மனம் காலத்தில் நிகழ்ச்சிகளை அப்படிக் காண்கிறது. அச்சடிக்கும்பொழுது ஒரு பக்கம் முழுவதும் ஒரே சமயத்தில் அடிக்க முடியும். ஜெராக்ஸ் செய்வதும் அப்படியே. சத்தியஜீவியம் ஜெராக்ஸ் போலவும், அச்சடிப்பது போலவும் செயல்படுகிறது. காலம் என்பது இல்லை எனில் அசைவு இல்லை. அசைவில்லாவிட்டால் முன்னேற்றம், அபிவிருத்தி இல்லை. சிலைபோல, சித்திரம்போல நிரந்தர அழகிருக்கும். காலம் வீடியோபோல் தொடர் நிகழ்ச்சியாகும். உலகில் நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. ஒரு நிகழ்ச்சியினின்று அடுத்த நிகழ்ச்சி சுமுகமாக எழுவதைக் காண்கிறோம். தனக்கு முன் போன நிகழ்ச்சி இந்நிகழ்ச்சியுள் மறைந்து உள்ளதையும் காண்கிறோம். காலத்தின் அசைவே இதற்குக் காரணம். சென்றதை தன்னுள் மறைத்து, வருவதை தன்னுள் புதைத்து, இரண்டையும் சுமுகமாகத் தாங்குவது காலம். பகுக்கப்பட்ட இடமில்லாவிட்டால் என்ன ஆகும்? நிகழ்ச்சிகட்குள் தொடர்பிருக்காது; மோதலிருக்காது - அனைத்தும் இருக்கும்; அசைவிருக்காது; அசைவால் ஏற்படும் அபிவிருத்தி இருக்காது. கவியின் மனத்துள் காவியம் புதைந்துள்ளதைப்போல் இடமற்ற சுயஜீவியம் முழுமையாக அகத்திற்குரியது. கனவுலகமாக மனத்துள் மறைந்திருக்கும். கவியோ, காவியமோ வெளிப்படாது. வெளிப்பட்டு அனைவரும் காண முடியாது. காலம் மட்டுமே உண்மையானால், சங்கீதம் போல் ஓர் ஸ்வரத்தைத் தொடர்ந்து அடுத்தது வருவதுபோல் அகத்துள் இயல்பாக கவியின் மனம் திரைபோல் காட்சிகள் உள்ளேயெழும். ஆனால் நாம் காண்பது ரூபமும்

சக்தியும் இணைந்த ஒன்று. தொடர்ந்து சக்தி ரூபமாக, நிகழ்ச்சியாக எழுகின்றது. இடமின்றி இது நிகழாது.

Page 135 / Para 6:

காலம் மாறும்பொழுது கொடுமையழிகிறது, வசதி வருகிறது, பணம் பெருகுகிறது, அடிமைத்தனம் அழிந்து சுதந்திரம் வருகிறது, இருள் நீங்கி ஒளி பெருகுகிறது, பிணக்கொழிந்து சுமுகம் மலர்கிறது. கடந்த ஆயிரமாயிரம் ஆண்டுகளில் வந்த மாற்றங்கள் காலம் இடத்தில் உண்டு பண்ணிய மாற்றங்களாகும். மனம் அவற்றை மோதல்களாக அறியும். இயல்பான சுமுகமாக அறியாது. உண்மையில் அகத்துள் இயல்பான சுமுகம் இடைவிடாது எழுந்து கனிகிறது. புறத்தோற்றமான காலத்தின் பார்வைக்கு சுமுகம் பிணக்காகத் தோன்றுகிறது. அகத்தின் சட்டம் முழுமைக்குரிய சுமுகம். புறத்தின் போக்கு பகுதிகளின் தொடர் நிகழ்ச்சி. அகநிகழ்ச்சியின் சுமுகம் புறப்பார்வையின் தோற்றத்திற்குப் பிணக்கு. சத்தியஜீவியப் பார்வை அகத்திற்குரியது. புறத்தையும் தன்னுட் கொண்ட அகத்திற்குரியது. புறத்தில் மனம் பகுதிகளின் அசைவை பகுதிகளின் நோக்கில் பிணக்காகக் காண்கிறது. அகம் சத்தியஜீவியம். அது முக்காலத்தையும் தன்னுட் கொண்ட வளரும் சுமுக இயல்பு. அது பல கோணத்தில் பகுதிகள் முழுமையை நாடுவதைக் காண்பதால் அதன் சுமுகம் இயல்பானது; பிறப்பில் உள்ளது. மேலும் மனம் பகுதியைப் பார்ப்பதால் பல வகையாக மோதல் எழுவது மனத்திற்கு இயற்கையாகத் தோன்றுகிறது. அது குழப்பத்தைக் காண்கிறது. சத்தியஜீவியம் தெய்வீகமானது. காலத்தையும், இடத்தையும், மனத்திற்குத் தோன்றும் எல்லா வாய்ப்புகளையும், மனம் அறியமுடியாத மற்ற நிலைகளையும் சத்தியஜீவியம் குழப்பமின்றி, தவறின்றி, தடுமாற்றம் இன்றி காணமுடியும். ஏனெனில் சத்தியஜீவியத்திற்கு அடிப்படையான சரியான தொடர்பு தெரியும்; முறையான சக்தி தெரியும்; அடிப்படை அவசியம் தெரியும்; படிப்படியாக எழும் நிலைகளும், முடிவான கட்டமும் தெரியுமாத- லால் அதன் பார்வை சுமுகமானது. முழுமையாகப் பார்க்கவோ, நிதான-

மாகப் பார்க்கவோ மனத்தால் முடியாது. ஆனால் பிரபஞ்சத்தைக் கடந்த சத்தியஜீவியத்தின் இயல்பே அது.

Page 135 /Para 7:

சத்தியஜீவியத்திற்கு திருஷ்டியுண்டு. மனம்போலன்றி அது தன்னை அறியவல்லது. அதனுடைய சக்தியும் அதையறியும். நாம் நமக்குத் தெரிந்த கதையைச் சொல்லும்பொழுது ஒவ்வொரு கட்டத்தையும் நாம் முன்பே அறிவோம். ஆனால் கதையை 50 முறை சொன்னால் ஒவ்வொரு முறையும் சொல்லும் பாணி சற்று மாறும். அது நம்மையறியாமல், நம்மை மீறி எழுவது. அது தன்னையறியாத நிலை. கதை தன்னையறிந்த நிலை. மனம் ஒரு வீடு கட்டப் போனால் வீட்டின் திட்டம் பல முறை மாறும். ஏனெனில் மனம் தன்னையறியாது. சத்தியஜீவியம் வீடு கட்டப் போனால், என்ன இனி வரப்போகிறது என்பதை விவரமாக முன்கூட்டியறியும். முன்கூட்டியறிவது, தன்னையறிவது. தன்னையறிவது ஒளியாக உள்ளே உறைகிறது. அதன் சக்தி சிருஷ்டிக்கிறது. சக்தி சிருஷ்டிப்பது ரூபம். ரூபத்துள் ஒளி வதிகிறது. அது சுயம்பிரகாசமுள்ளது. பிரபஞ்சத்திலுள்ள எல்லா சக்திகளிலும், ரூபங்களிலும் இவ்வொளி புதைந்துள்ளது. நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. நம் செல்ல் குரோமஸோம் உள்ளன; ஜீன்கள் இருக்கின்றன. முடியின் நிறம், நீளம், பல்லமைப்பு, குரல், இருதயத்தின் பரிமாணம், நகத்தின் தடிப்பு என உடல் ஆயிரம் பகுதிகட்கு ஆயிரமாயிரம் குணங்கள் உள. இவை ஒவ்வொன்றும் ஒரு குரோமஸோமால் நிர்ணயிக்கப்படுகிறது. அதன் பின் உள்ளது இந்த சத்தியஜீவியப் பிரகாசம். ரூபம், சக்தி, செயல் ஆகியவை இவற்றால் சுதந்திரமாக, முடிவாக நிர்ணயிக்கப்படுகின்றன. ரூபம் மாற வேண்டும் என இது வற்புறுத்தும். மாறும் ரூபத்தின் அளவை அது நிர்ணயிக்கும். தன் செயலுக்கு வேண்டிய சக்தியை இது சேர்க்கிறது, விநியோகம் செய்கிறது, அடிக்கடி மாற்றியமைக்கிறது. இத்தனையும் அதன் முதற் சட்டப்படி நடக்கின்றன. இந்த சக்தி எழும்பொழுதே, இந்த ரூபம் பிறக்கும்பொழுதே இதன் சுயஞானம் அவற்றை முடிவுசெய்துவிடுகிறது. ஈஸ்வரனாக பிரபஞ்ச வாழ்வில் அனைத்தின் இதயத்துள் இது வீற்றிருக்-

கிறது. ஒரு இயந்திரத்தை இயக்குவதுபோல் மாயை இவற்றைச் செலுத்துகிறது. தெய்வ திருஷ்டியாக உள்ளிருந்து அவற்றைத் தழுவுகிறது. தம் பொருள்களை பல்வகையாக அமைத்து, ஒவ்வொன்றும் தானெப்படி சரியாக அமையவேண்டுமோ அப்படி யுகாந்த காலமாக அமைக்கிறது.**

Page 136 / Para 8:

உலகில் உயிருள்ள ஜீவராசிகளுண்டு, உயிரற்றவையுண்டு; மனம் தெளிவானவருண்டு, மனத்தில் தெளிவற்றவருண்டு. அவர்களுடைய ஜீவன் அவற்றுள் உள்ள ஜோதியால் ஆளப்படும். அவற்றின் செயல்களும் அப்படியே. நமக்கு அவை தெரிவதில்லை. எனினும் அவை பிரபஞ்சத்தையறியும். அவை ஜடமல்ல; அவை தம்மை அதிகமாக ஆழ்ந்தறியும். அறிவற்ற பலவும் அறிவால் செயல்படுவது தெரியும். தாவரம் ஆழ்மனத்தாலும், விலங்கும் மனிதனும் அரைகுறை மனத்தாலும் செயல்படுகின்றார்கள். அது முழு எண்ணத்தால் நடக்கிறது. பொருள்களையும், ஜீவன்களையும் நடத்துவது மனத்தின் அறிவல்ல; தன்னையறியும் ஜீவனின் சத்தியம் அப்படிச் செயல்படுகிறது. சுயஞானம் சுயவாழ்விலிருந்து பிரியாத இடத்தில் அப்படிச் செயல்படுகிறது. என்ன செய்வது என நினைத்து திட்டமிட்டு சத்தியஜீவியம் செயல்பட வேண்டாம். தன் மாசுபடாத சுயதிருஷ்டியால் செயல்படும். தன்னைப் பூர்த்தி செய்துகொள்ளும் பிரபஞ்ச வாழ்வு தவிர்க்கமுடியாத ஒரே சக்தி. அதனால் அது அப்படிச் செயல்படும். மனத்தின் அறிவு ஜீவியத்தின் பிரதிபலிப்பு. அது அறியாது; அறிய முனைகிறது. அதனால் அது நினைத்து, அறிந்து, செயல்படவேண்டும். காலத்துள் அது படிப்படியாக உயர்ந்தஞானத்தைப்பின்பற்றுகிறது. அந்த ஞானம் என்றும் உண்டு. அது முழுமையான ஞானம். அது காலத்தைத் தன் பிடியில் வைத்துள்ளது. முக்காலத்தை ஒரே பார்வையில் காணவல்லது


** கோர்ட்டுக்குப் போனால் அங்கு நடப்பவை அனைத்தும் சட்டப்படி நடக்கும். என்று கேஸ் எடுப்பது என்பது நம் இஷ்டப்படி முடியாது. கோர்ட் சட்டப்படி வாய்தா போடுவார்கள். யார் பேசுவது என்பதை கோர்ட் தீர்மானிக்கும். எந்த வக்கீல் எது சொன்னாலும், அதெல்லாம் செல்லாது. ஜட்ஜ் சொல்வதே சட்டம். ஜட்ஜ் பேசுவதும் சட்டத்திற்குட்பட்டது. அவரிஷ்டப்படி பேசமுடியாது. கேஸ் எடுப்பது, விசாரணை செய்வது, வாதம் செய்வது, தீர்ப்பு சொல்வது, டிக்ரி செய்வது, ஜப்தி செய்வது, அப்பீல் செய்வது, தஸ்தாவேஜூ தருவது, எடுப்பது அனைத்தும் சட்டப்படியே நடக்கும். செயலுக்குள் ஏற்கனவே உட்கார்ந்துள்ள சட்டம், அதன் பார்வைப்படி அனைத்தையும் நடத்திச் செல்லும்.

.

Page 136 /Para 9:

தெய்வீக சத்தியஜீவியத்தின் முதற் சட்டம் இதுவே: அனைத்தையும் தழுவும், அனைத்தையும் ஊடுருவும், அனைத்துள்ளும் உறையும், பிரபஞ்ச திருஷ்டி அது. அசையாத சுயஉணர்வில் ஜீவன் அகத்துள் காலத்தையும், இடத்தையும் கடந்து அனைத்தையும் தழுவுகிறது. எனவே புறத்துள் செயல் திறனில், சுயஉடல் காலத்திலும் இடத்திலும் சத்தியஜீவியம் அனைத்தையும் அறியும்.

Page 137 /Para 10:

இந்த ஜீவியத்தில் அறிபவன், அறிவு, அறியப்படுபவன் ஆகிய மூன்றும் தனித்தனியில்லை; அடிப்படையில் ஒன்றே. நம் மனப்போக்கு இம்மூன்றையும் பிரித்தறியும். பிரிக்காவிட்டால் மனம் அறிய முடியாது. பிரிவினை அதற்குரிய முறை; அடிப்படையான சட்டம். அவையின்றி மனம் செயலற்றுப்போகும், அசைவற்று நிற்கும். நான் என்னையறியவேண்டுமானாலும் இதுபோல் நான் என்னை மூன்றாகப் பிரித்துப்பார்க்கவேண்டும்: நானிருக்கிறேன், நான் அறிபவன், நான் என்னில் எதைக் காண்கிறேனோ அதை நான் என அறிகிறேன். இது நான்; இருப்பினும் இது நானில்லை. என்னையும் நான் அறிவதையும் இணைப்பது அறிவு. இது செயற்கையான செயல். நடைமுறையில் பயன் தரும் சுபாவமுள்ள செயல் என்பது தெளிவு. அடிப்படையான உண்மையை இது பிரதிபக்கவில்லை என்பது தெளிவு. உண்மையில் அறியும் நான் அறியும் ஜீவியமாகும்; அறிவு அந்த ஜீவியம்; அது நான்; நான் செயல்படுகிறேன்; அறியப்படுவதும் நானே; அதே ஜீவியத்தின் ஒரு ரூபம் அல்லது சலனம். இம்மூன்றும் ஒரே வாழ்வு என்பது தெளிவு; ஒரே சலனமும்கூட. பகுக்கப்பட்டுத் தெரிந்தாலும் பகுக்கப்படாத ஒன்றே.

அதனுடைய ரூபங்களால் பிரிக்கப்பட்டு விநியோகிக்கப்படாதது. அதனுடைய ரூபங்களுக்கு அது விநியோகிக்கப்பட்டதாகத் தோன்றினாலும், அப்படி உண்மையில் விநியோகிக்கப்படாதது. பகுக்கப்படுவதால், ஒவ்வொன்றும் தனித்து நின்று செயல்படுகிறது. இது மனம் பெறும் அறிவு. இதைப் பகுத்தறிவால் அறியலாம், உணரலாம், ஆனால் பலன் தரும் செயலுக்கு நடைமுறை அடிப்படையாகக் கொள்ள முடியாது. இதுவரை அகத்தில் உள்ளவற்றைப் பேசினோம்; புறத்திலுள்ளவை உண்டு. அவற்றைப் பொருத்தவரை இந்த சிரமம் தாண்டிவர முடியாதது ஆகிறது. புறப் பொருளோடு ஐக்கியத்தை உணருவது முடியாத காரியம். நம் எதிரில் உள்ள சுவற்றைப் பார்த்து, இந்த சுவரும் நானும் ஒன்று' என்று எப்படிக் கருத முடியும்? அதனடிப்படையில் நடப்பது மனம் அறியாத செயல். சூரியனை உலகம் சுற்றிவருகிறது என்பதை நம் மனம் ஏற்றுக் கொண்டாலும், அதை உணர்வு ஏற்பதில்லை. அதுபோல் புறத்திலுள்ள மரம், மனிதன், கட்டிடம், மாடு நம்முள் உள்ளவை என ஏற்கலாம்; உணருவது சிரமம்.

Page 137 / Para 11:

இது ஐக்கியத்தின் சத்தியம். சத்தியஜீவியம் எப்பொழுதும் அடிப்படையாக இந்த சத்தியப்படி நடக்கிறது. மனத்திற்கு இந்த சத்தியம் இரண்டாம்- பட்சம். அல்லது தான் முயன்று பெற்ற திறன், பிறப்பில் ஏற்பட்டதில்லை. மனத்திற்கு இச்சத்தியம் சொந்த திருஷ்டியில்லை. சத்திய ஜீவியம் உலகையும், அதிலுள்ளவற்றையும் ஒரு பகுக்கமுடியாத ஞானத்தின் செயலாகக் காண்கிறது. அப்பார்வையில் வாழ்வு பிரபஞ்ச சுயவாழ்வின் பிறவி அம்சமாக இருக்கும். அமெரிக்காவைப் பற்றி ஏராளமாகப் படித்தவரும், எதுவும் படிக்காதவரும் அங்கு போனால், மனம் அமெரிக்காவை படிக்காதவர்போல் பார்க்கும். படித்தவர்க்கு அங்கு காணும் ஒவ்வொரு அம்சமும் தான் படித்ததை நினைவுகூர்ந்து அறிவை அனுபவமாக்கி ஆனந்தத்தை எழுப்பும். இது சத்தியஜீவிய திருஷ்டி. இது பூரணமான தெய்வீக ஜீவியம். இதற்கு உறுதி (will) உண்டு. இது பிரபஞ்ச வாழ்வை வழிநடத்துகிறது; ஆள்கிறது. மேலும் தன் சக்திவாய்ந்த செயலால் பூர்த்திசெய்து பூரணம் பெறச்

செய்கிறது. அப்படி பூரணம் செய்யும்பொழுது அதன் ஜோதியின்படி செய்கிறது. இவ்வுறுதி அதன் ஞானத்திலிருந்து வேறுபட்டதில்லை. அத்துடன் ஒன்றியது. அதன் சுயவாழ்வினின்றும் வேறுபட்டதில்லை. ஞானமும், உறுதியும், சுயவாழ்வும் ஒன்றே. பிரபஞ்ச சக்தியும், பிரபஞ்ச ஜீவியமும் ஒன்றே எனக் கண்டோம். பிரபஞ்ச சக்தி என்பது பிரபஞ்ச ஜீவியத்தின் செயலாகும். அதேபோல் தெய்வீக ஞானமும், தெய்வீக உறுதியும் ஒன்றே. இரண்டும் ஒரே அளவு; இரண்டும் ஒரே செயல் - வாழ்வின் செயல்.

Page 138/Para 12:

நாம் பிரபஞ்சத்தில் வாழ்கிறோம். பிரபஞ்சத்தை மனத்தால் காண்கிறோம். இது பச்சைக்கண்ணாடியால் உலகைக் காண்பதுபோலாகும். உண்மை தெரிய அக்கண்ணாடியைக் களையவேண்டும். மனம் ஆராயும். பொருள்களைப் பகுதியாய்க் காணும். பகுதியை முழுமையாகக் கொள்ளும். இது நம் வாழ்வில் அடிப்படைத் தவறு. இத்தவறு விலக்கப்படவேண்டுமானால் நாம் சத்தியஜீவியம் முழுமையானது, பகுக்கமுடியாதது, அனைத்தையும் தழுவக்கூடியது என்பதை வலியுறுத்தவேண்டும். இம்முழுமைக்கு எந்த குந்தகமும் விளைவிக்காமல் அனைத்தையும் தன்னுட் கொள்ளும் சத்தியம் என்பதை ஏற்கவேண்டும். சர்க்கார் ஊழியர் மக்களுக்கு ஊழியர். மக்கள் அதிகாரி, ஆபீசர் ஊழியர். ஆபீசர்கள் பொதுமக்களை விரட்டுகின்றனர். மக்கள் ஆபீசரைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். தங்களுக்கு வேண்டியதைக் கெஞ்சிக் கேட்கின்றனர். மக்கள் தங்கள் உரிமையைப் பெற வேண்டுமானால் அஞ்சி நடுங்குவதை நிறுத்தவேண்டும். மக்கள் அதிகாரி, ஆபீசர் ஊழியர் என்ற கருத்தை ஏற்கவேண்டும். அதுபோல் பிரபஞ்சம் நமக்கு அதன் உண்மையை வெளியிடவேண்டுமானால், நாம் சத்திய ஜீவியத்தின் முழுமையை அறியவேண்டும். மரத்தினின்று விதை எழுகிறது. மரம் விதையிலிருந்து முளைக்கிறது. ஏற்கனவே மரம் விதையுள் உள்ளது. இது ஒரு தவிர்க்கமுடியாத சட்டம். மரம் என்ற ரூபத்தில் இத்தவிர்க்க முடியாத சட்டம் நிரந்தரமாக வெளிப்படுவதை நாம் ஏற்கிறோம். இந்நிகழ்ச்சியை மனம் நிலையாக ஏற்கிறது. மரம் பிறக்கிறது. வாழ்வு அதன் வழி

மலர்கிறது. மரம் மீண்டும் உற்பத்தியாகிறது. இவ்வடிப்படையில் மனம் பகுத்து, தொகுத்து, ஆராய்ந்து விளங்கிக்கொள்கிறது. மரத்தின் மூலம் விதையையும், விதையின் மூலம் மரத்தையும் இயற்கை சட்டமாக நாம் ஏற்கிறோம். இதனால் நாம் எந்த விளக்கமும் பெறவில்லை.

கல்லூரியில் பட்டம் தருகிறார்கள். பட்டம் வேலை பெற்றுத் தரும். இதை நாம் அறிவோம். இதன் பயனை அனைவரும் அடைகிறோம். ஆனால் அடிப்படையில் நாம் முக்கிய விஷயத்தை விட்டுவிட்டோம். தாகூர் பள்ளியில் இருக்கும்பொழுது ஏன் நான் இங்கிருக்கிறேன் என்று தன்னைக் கேட்டார். அறிவு பெற என்று அவர் பெற்ற பதில் அவருக்குச் சரியாகத் தோன்றவில்லை. ஏனெனில் அவர் அங்கு பாடம் படித்தார்; அறிவு பெறவில்லை. அதே கேள்வியை பெர்னார்ட் ஷாவும் கேட்டார். அவர் போன்ற மேதைகள் பட்டத்தை நாடவில்லை; அறிவை நாடினர். பள்ளியை விட்டு விலகினர். அறிவு பெற்று மேதையாயினர். உலகம் பெரியது. சமூகம் அதன் பகுதி. கல்வியை சமூகம் நமக்களிக்கிறது. அதற்குக் கல்லூரியும், பட்டமும் கருவிகள். பட்டம் அறிவில்லை. நாம் பட்டத்தை உலகினின்று பிரித்து வேலை செய்கிறோம். சமூகம் என்ற முழுமையினின்று நாம் நம்மைப் பிரித்து விலக்கி ஒரு சிறு பயனையடைகிறோம். அப்படிப் பிரிக்காவிட்டால் நாம் உலகம் என்ற முழுமையை அடைவோம். ஷாவைப்போல், தாகூர்போல் நாமும் மேதைகள் ஆவோம். எப்படி காலேஜில் சேருவது, பட்டம் பெறுவது, வேலை பெறுவது என்பவை எவ்வளவு உபயோககரமானதானாலும், அவை வாழ்க்கையை விளக்கப் பயன்படாது. மரமும், விதையும் பிரபஞ்சத்தையும், கடவுளையும் அறியப் பயன்படா.

இரகஸ்யமான, தன்னையறியும் சக்தியை ஆத்மா எனக் கண்டு கொண்டால், அதுவே இந்த ரூபத்தில் உண்மை என்று நினைத்தால், மற்றவை வழக்கமான செயல்களாகத் தெரியும். அப்பொழுது இந்த ரூபத்தை - மரம், விதை - பிரபஞ்சத்திலிருந்து பிரித்துவிடுகிறோம். விலங்கு தன்னை அறியாது. மனிதன் தன்னை அரைகுறையாக அறிவான். விலங்கு தன்னை தனித்த ஜீவனாக நினைக்கிறது. மனிதனும் அப்படியே நினைக்கிறான். இது

ஒரு சௌகரியமான ஏற்பாடு. மனம் இதையே முடிவாகக் கொள்கிறது. அதனின்று எல்லா தவறுகளும் எழுகின்றன. வீட்டில் யாரும் இல்லாத நாளில் ஹோட்டல் சாப்பிடுகிறோம். ஒரு முறை அப்படி சாப்பிட்டபின் அதுவே முறை, சௌகரியம் என தினமும் ஹோட்டல் சாப்பிட்டால் சரி வருமா? வீட்டில் அனைவரும் அப்படிச் செய்தால் என்ன ஆகும்? ஒரு அவசியத்திற்கு செய்ததை முறையாக ஏற்பது வாழ்வை தடம்புரளச் செய்யும். பிரித்துப் பார்த்தால்தான் மனம் புரிந்துகொள்ளும் என பல சமயங்களில் பிரித்துப் பார்த்தால், அதையே வாழ்வின் முறையாகக் கொண்டால், நாம் உண்மையி- ருந்து விலகுவோம்.

Page 138 / Para 13:

சத்தியஜீவியம் வேலை செய்வது வேறு மாதிரி. மரம் உலகினின்று பிரிந்து தனித்திருந்தால், அதுவே உண்மையானால், மரம் எழுந்திருந்து இருக்காது. நாம் பட்டத்தை முக்கியமாகக் கருதிப் பெறுகிறோம். பட்டம் தனித்த உண்மையானால், நாம் பட்டம் பெற கல்லூரி ஏற்பட்டிருக்காது. நாட்டில் ஞானம் வளர ஏற்பட்டது கல்லூரி. இன்று (training) பயிற்சி அளிக்கப்பட்டால் இலட்சக்கணக்கானவர்க்கு வேலை கிடைக்கும். அதை 1947 முதல் 1967 வரை எவரும் செய்யவில்லை; செய்ய நினைக்கவில்லை. ஒருவருக்கு வேலை பெற பயிற்சி தேவையானால் அவர் அத்தொழிலை நாடி, பஸ் டிரைவர் கிளீனராக ஆரம்பிப்பது போல், பயிற்சி பெறவேண்டும். நாடு, மக்கள் ஞானம் பெற ஏற்படுத்திய கல்லூரியை நாம், பட்டம் பெறப் பயன்படுத்துவது நம் வாழ்வை நாமே சுருக்கிக்கொள்வதாகும். ரூபம் என்பது பிரபஞ்ச வாழ்வின் சக்தியைப் பொருத்தது. ரூபம் என்பது பிரபஞ்ச வாழ்வின் சக்தியைப் பொருத்து, மற்ற பொருட்களுடன் உள்ள தொடர்பால்

நிர்ணயிக்கப்படுகின்றன. ஒரு கல்லூரியின் தரம் அது உள்ள ஊரால் நிர்ணயிக்கப்படுகிறது. ரூபத்திற்கு தனிச்சட்டம் உண்டு எனில், அது பொதுச்சட்டத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. ஏனெனில் குறிப்பிட்ட சட்டம், பொதுச்சட்டத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு கல்லூரியின் தரம் அது எந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தது என்பதால் நிர்ணயிக்கப்படுகிறது. மரம் விதையை விளக்கவில்லை. விதை மரத்தை விளக்காது. பிரபஞ்சம் இரண்டையும் விளக்கும். கடவுள் பிரபஞ்சத்தை விளக்குவார். சத்தியஜீவியம் மரத்தையும், விதையையும் ஊடுருவி பிரபஞ்சத்தின் முழுஞானத்தில் வாழ்கிறது. அதன் ஐக்கியம் முழுமையானது; பகுக்கமுடியாதது; ஆனால் சந்தர்ப்பத்திற்கேற்ப மாறக்கூடியது. இந்த பூரண ஞானத்தில் தனி மையமில்லை, தனி அகந்தையில்லை. நாம் இன்று அகந்தையெனும் தனித்த மையத்தில் வாழ்கிறோம். அதன் முழுமை அதன் சுயஞானத்திற்கு சமமான வீட்சி. முழுமையில் ஒருமை; பலவாகப் பிரிந்ததிலும் ஒருமையுண்டு. எல்லா இடங்களிலும், எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒருமை நிலைக்கும். இதில் எல்லாம் என்பதும், ஒன்று என்பதும் ஒன்றே. தனிமனிதன் தான் அனைத்துடனும் இணைந்தவன், சத்புருஷனுடன் இணைந்தவன் என்பதை இழப்பதில்லை. ஏனெனில் சத்தியஜீவிய அறிவில் இந்த இரண்டறக் கலக்கும் உணர்வு பிறப்பில் ஏற்பட்டது. சத்தியஜீவிய சுய நிரூபணத்தின் பகுதியது. 50 பேருள்ள கூட்டுக்குடும்பத்தில் பிறந்தவன் தனிமனிதன் எனத் தன்னை அறிவான். என்றாலும் குடும்பத்துடன் அவன் இரண்டறக் கலந்தவன். ஊர் விஷயங்களில் ஊருடன் அப்படிக் கலந்தவன். இருப்பினும் தான் ஓர் மனிதன் என்ற உணர்வை இழக்காதவன். அங்கு ஒருமை எப்பொழுதும் அழிவதில்லை. ஏனெனில் அவ்வொருமை அவன் ஊருடன் இரண்டறக்கலந்ததில் பிறந்தது. இன்று தனிக்குடித்தனம் சென்றவர் ஊருக்குத் திரும்புவதில்லை; உற்றார், உறவினரை அறியார்; அவர்கள் அக்குடும்பம் ஒன்றிருந்தது என்பதை மறந்துவிட்டனர். எனவே அவர்கள் வாழ்க்கை சுருங்கிவிட்டது. ஊரின் ஆதரவு அவர்கட்கில்லை.

Page 139/Para 14:

தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியில் பாயிட் என்ற பிரின்ஸ்பால் ஓய்வு பெறும்பொழுது அவருடைய பழைய மாணவர்கள் ஹைதராபாத், டெல்லி, பம்பாய், இலண்டனிருந்து வந்து விழா கொண்டாடினர். அனைவரும் அகில இந்திய உத்தியோகம் வகிப்பவர். எவ்வளவு நாளானாலும், எங்கிருந்தாலும்

 

பழைய பேராசிரியர், பழைய கல்லூரி அவர்கள் மனத்தில் உள்ளது. அவர்கள் அந்த ஒற்றுமையை, ஒருமையை இழக்கவில்லை. அவர்கள் அனைவரும் பெரிய அந்தஸ்திருப்பதற்கு அவ்வொற்றுமை காரணம். அதில்லாத கல்லூரி மாணவர்கள் அப்படி வாழ்வில் உயர்வது இல்லை; அதுபோன்ற விழா கொண்டாடுவதில்லை. அது வெறும் ஒற்றுமை இல்லை; ஒருமையின் அடிப்படையில் ஏற்பட்ட ஒற்றுமை. இந்த ஒருமை காலத்திற்கும், இடத்திற்கும் உரியது. ஜீவன் இவற்றை ஊடுருவுவது, உள்ளுறைவது என்பது அடிப்படையான பூரண ஐக்கியத்தைப் பற்றியது. ஏனெனில் அதிலிருந்துதான் இது வருகிறது. அங்கு மையமோ, எல்லையான பரிதியோ இல்லை. காலத்தையும், இடத்தையும் கடந்த ஒன்று மட்டுமே உள்ளது. தமிழர்கள் டெல்லியிலிருந்தால், அங்கு ஒருவர் வீட்டு விசேஷத்தில் அவர்கள் குழுமியுள்ள பொழுது ஜாதி, மதம், ஊர், ஜில்லா, தொழில் பேதம் இல்லாமல் தமிழர் என்ற அடிப்படை ஒற்றுமை முழுவதும் நிலவியிருப்பதைக் காணலாம். அது தீவிரமாக, ஆழமாக, அர்த்தபுஷ்டியுள்ளதாக, அமிர்த சுவையுடன் அமையும். சத்தியஜீவிய ஒருமையும், ஒற்றுமையும் அத்தகையது. ஹிந்து, முஸ்லீம் வேற்றுமையோ, தீண்டாதவன் என்ற வேற்றுமையோ, பியூன், ஆபீஸர் என்ற வேற்றுமையோ அக்கூட்டத்தில் இருக்காது. சிருஷ்டிக்கு முன் உள்ள பிரம்மம் கனத்தது. கனம் ஒருமையைக் காட்டும். சிருஷ்டியில் அது பல பொருள்களை ஊடுருவும் கனத்த சூழலாக, சமமான சூழலாகத் தெரியும். பகுக்கப்படாத ஞானம், பிரபஞ்சத்தில் வெளிப்படாத பிறப்பிலுள்ள ஞானமாக மாறும். எந்த லீலையும், எந்த பாகுபாடும் இந்த அடிப்படை ஒருமையை, ஒருமையின் அடிப்படையில் ஏற்பட்ட ஒற்றுமையைக் குறைக்கவோ, குலைக்கவோ முடியாது. நம் நாட்டில் ஜாதிக்குள்ள உயர்வு, இங்கிலாந்தில் (aristocracy) உயர்தர மக்களுக்குண்டு. சொத்து அழிந்தாலும்,100தலைமுறையானாலும், தன் பூர்வீக பெருமையை ஆங்கிலேயன் மறக்க மாட்டான். பேங்க்கை கொள்ளையடிக்க சுரங்கம் வழியாக வரும் திருடனை போலீஸ் பிடித்துவிட்டது. திருடன் ஆக்ஸ்போர்ட் பட்டதாரி; பெரிய குடும்பத்துப் பையன். போலீஸ்காரன் அவன் கையைப் பற்றியபொழுது, "என்னை உன் அழுக்கான கைகளால் தொடாதே. என் உடல் ராஜவம்ச இரத்தம்

ஓடுகிறது. என்னை Sir எனக் கூப்பிடு; please என்று பேச ஆரம்பி'' எனத் திருடன் போலீஸ்காரனிடம் கூறினான். கடுகு சிறுத்தாலும் காரம் போகாது. ஸ்ரீ அரவிந்த சூத்திரம் "எல்லாம் பிரம்மத்துள்ளிருக்கிறது. பிரம்மம் எல்லாவற்றிலுமிருக்கிறது. எல்லாம் பிரம்மம்'' என்பது. சுயசிருஷ்டியின் ஒரு சத்தியம், பிரிக்கமுடியாதபடி சேர்த்துப் பிடித்துவைத்துள்ளது. இந்த சுய-நோக்கம் அடிப்படை ஞானம். இதிலிருந்தே பிரபஞ்ச லீலை வெளிப்படுகிறது.

Page 139 /Para 15:

மனம், உயிர், ஜடம் ஆன உலகு எப்படி ஏற்பட்டது? இது தாழ்ந்த ஜீவியம், மனித மனப்போக்கு. பிரபஞ்சத்தைப் பற்றிய நம் கொள்கைப்படி இதை எப்படிக் கூறுவது? உலகில் உள்ளவையெல்லாம் பூரணத் திறமை வாய்ந்த சத்திய ஜீவியத்தினின்று வருவது சரியானால், எது இவற்றை உற்பத்தி செய்தது? சத், சித்-சக்தி, ஆனந்தம் என்பவை செயல்படுவதில் சத்தியஜீவியம் ஆரம்பிக்கிறது. இந்தத் திறமை சச்சிதானந்தத்தின் மூன்று அம்சங்களை அதன் தாழ்ந்த பிரதிநிதிகளான மனம், உயிர், உடலாக மாற்றுகிறது. சிருஷ்டி ஞானத்தின் இரண்டாம்பட்சத் திறமையிது. அது தன்னை முன்வைத்து, முகமாக்கி, புரிந்துகொள்ளும் ஜீவியம். அதில் ஞானம் மையமாகி பின்னோக்கிச் சென்று தன் செயலை கவனிக்கிறது. மையம் என நாம் கூறும்பொழுது சமமான செயல்திறன் சமமில்லாத மூன்று அம்சங்களாகப் பிரிவதை நாம் குறிக்கிறோம். சமமில்லாத திறனெழும் பொழுது தன்னை பிரிப்பது எழுகிறது; அல்லது நிகழ்ச்சி தோற்றமாகிறது.

Page 140 /Para 16:

முதல் அறிபவன் தன்னை அறிவில் சேகரம் செய்து அகமாகிறான். தன் ஜீவிய சக்தியை தன்னிடமிருந்து வெளிப்பட்டு தன் ரூபமாகப் போவதாகக் கொள்கிறான். தொடர்ந்து அப்படிச் செயல்படுகிறான். தொடர்ந்து தன்னுள் பின்வாங்கி மறைகிறான். தொடர்ந்து மீண்டும்

வெளிப்படுகிறான். இது தன்னைத் தானே சுயமாக மாற்றிக்கொள்வதாகும். இந்த ஒரு மாற்றத்திலிருந்து பிரபஞ்ச நோக்கங்கள், பிரபஞ்ச செயல்கள், அவற்றிற்குள்ள நடைமுறை வேறுபாடுகள் அனைத்தும் எழுகின்றன. அறிபவன், அறிவு, அறியப்படுவது என்பவற்றிடையே ஒரு யதார்த்த வேறுபாடு எழுந்தது. ஈஸ்வரன், அவன் சக்தி, அவனது சிருஷ்டி என்பதும் அதுவே. அனுபவிப்பவன், அனுபவம், அனுபவிக்கப்படுவது; பிரம்மம், மாயை, மாயையின் சிருஷ்டி என்பவையும் அவையே.

Page 140 /Para 17:

சத்புருஷன் ஞானத்தில் தன்னை நிறுத்தியுள்ளான். இது புருஷன் சக்தியை கவனிப்பதாகும்; ஆள்வதாகும். இந்த சக்தி புருஷனிலிருந்து வெளிப்பட்டது. புருஷன் தன் சக்தியை - ஜீவிய சக்தியை தொடர்கிறான்.அதுவேலை செய்யுமிடத்தையடைகிறான். அங்கு பகுக்கும் செயலை மீண்டும் செய்கிறான். பிரஞ்ஞா பிறந்தது அந்த பிரிவினையில். இப்புருஷன் ஒவ்வொரு ரூபத்திலும் இருக்கிறான். தன்னை மற்ற ரூபங்களில் காண்கிறான். நடைமுறை, செயற்கை மையத்தினின்று அவன் சக்தியால் காண்கிறான். எங்கும் அது ஒரே புருஷனே; ஒரே தெய்வீக ஜீவனே. பல மையங்கள், லீலை ஏற்பட ஏற்படுத்தப்பட்ட வித்தியாசம். அடிப்படையான ஐக்கியத்தின் பேரில் பரஸ்பர ஞானம், பரஸ்பரம், பரஸ்பர மோதல், பரஸ்பர அனுபவம் ஆகியவை ஏற்பட்டன.

Page 141 / Para 18:

எல்லாவற்றையும் ஊடுருவும் சத்தியஜீவியம் புது நிலையை ஏற்றது. இது ஐக்கியத்தினின்று மேலும் விலகிய நிலையாகும். பிரபஞ்சம் நிலைபெற அவசியமான பகுக்கமுடியாத ஜீவியம், விலக்கமுடியாத ஒற்றுமை ஆகியவற்றிலிருந்து இப்படி விலகிற்று. சற்று மேலும் இதைத் தொடர்ந்தால், இது அவித்தையாகும். அடிப்படை சத்தியம் ஆயிரம் பாகங்களானபொழுது இப்பெரிய அஞ்ஞானம் உற்பத்தியாயிற்று. மீண்டும் அவ்வைக்கியத்தை

அடைய பொய்யான ஐக்கியமான அகந்தையில் ஆரம்பிக்கவேண்டும். தனி மனித மையத்தை நாம் ஏற்றவுடன், மனஉணர்ச்சி, மனஅறிவு, மனச்செயல், அவற்றைத் தொடர்வன அத்தனையும் அவசியமாக எழும். சத்தியஜீவியத்தில் ஆத்மா செயல்படும்வரை அஞ்ஞானமில்லை. செயலுக்கும், அறிவுக்கும் உள்ள அரங்கம் சத்தியஜீவியம், அடிப்படை ஒற்றுமை.

Page 141 / Para 19:

பிரம்மம் தன்னை அனைவரிலும் உள்ள புருஷனாகக் கருதுகிறது. அனைத்தும் தன் சிருஷ்டி, அனைத்தும் தானே என அறிகிறது. ஈஸ்வரன் செயல் உள்ள சக்தி தான் என அறிவார். ஒவ்வொரு ஜீவனும், ஆத்மாவில் தான் என்றும் அறிவார்; ரூபத்திலும் தானே. ஆயிரம் ஜீவன்களிலும் அனுபவிப்பவன் அனுபவிப்பது தன்னையே எனவும் அறிவார். ஒரு மாற்றம்; பல மையங்கள் ஏற்பட்டுள்ளன. சக்தியை ஆயிரமிடத்தில் விநியோகித்துவிட்டோம். நடைமுறையில் ஜீவியம் மாறும். அடிப்படையான சாரத்தில் பிரிவினை இல்லை; மாற்றமில்லை. நம் மனப்போக்கைத் தயார் செய்ய சத்தியஜீவியம் வருகிறது. இன்னும் தயார் செய்யவில்லை. மனத்தை அதன் ஆதியில் அறிய இவ்விஷயத்தை - சத்தியஜீவியம் நம்மைத் தயார் செய்வதை - ஆராய வேண்டும். அகன்று, பரந்த சத்தியஜீவியம் பிரிவினையான அஞ்ஞானத்துள் வழுக்கிவிழுந்த இடத்தை நாம் காணவேண்டும். இந்த பிரக்ஞா நம்மருகில் இருப்பதால், நமக்கு சத்தியஜீவியத்தைவிட எளிதில் புரியும். இதுவரை சத்தியஜீவியத்தைப் பற்றி பிடிபடாதவற்றைப் பேசினோம். மனத்தின் செயல்பாடுகள் எளிமையானவை. அறிவால் செயல்பட்டால் சத்தியஜீவியம் சிரமமாக இருக்கும். நாம் கடக்கவேண்டிய எல்லையான தடை அவ்வளவு சிரமமானதல்ல.

The Supreme Truth Consciousness

 

உயர்ந்த சத்தியஜீவியம்

ஒவ்வொரு பாராவில் உள்ள கருத்தின் சுருக்கம்:

132/1: சத்தியஜீவியம் சச்சிதானந்தத்தின் சுபாவம். சத்தியஜீவியத்தின் பொதுவான மனோதத்துவ சத்தியம் இங்கு கருதப்படுகிறது.

132/2: சத்தியஜீவியம் பிரபஞ்சத்தில் லீலையில் ஒழுங்கை நிலைநாட்டும் சக்தி. இது சுமுகத்தாலும், முழுஎண்ணத்தாலும் இதைச் சாதிக்கிறது.

133/3: இதற்கு காலமும், இடமும் தேவை. காலமும், இடமும் தொடர்பு கொள்வது (causality) காரணகாரியம்.

134/4: காலம், இடத்தை கணிப்பது மனம். மனத்தைவிட உயர்ந்த ஜீவியத்திற்கு காலமும், இடமும் ஒரு புள்ளி.

134/5: காலமில்லாவிட்டால் முன்னேற்றமிருக்காது; சலனமற்ற சுமுகம் இருக்கும்.

135/6: அகத்தில் காலத்தில் உருவாகும் நிகழ்ச்சிகள் புறத்தில் இடத்தில் பரிணமிப்பது மனத்திற்குப் பிணக்காகவும், சிக்கலாகவும் தோன்றுகிறது. சத்தியஜீவியப் பார்வைக்கு அவை இயல்பான பிரம்ம சுமுகம்.

135/7: இச்சுமுகம் பிறப்பில், அடிப்படையில், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், உள்ளிலிருந்து அவற்றை இயக்குகிறது.

 

 

 

136/8: சத்தியஜீவியம் முக்காலத்தையும் தன் முழுப்பார்வையில் கொண்டு வரும்.

136/9: சத்தியஜீவியத்தின் முதற்சட்டம் பிரபஞ்ச சிருஷ்டி.

137/10: நாம் நம்மையறிதல், நான், அறிவு, அறிவால் அறியப்படும் நான் எனப் பிரியவேண்டியிருக்கிறது. மனத்திற்குத் தேவையான இந்த தற்காக ஏற்பாட்டை மனம் முடிவாகக் கொள்ளுதல் தவறு.

137/11: சத்தியஜீவியத்திற்கு மனத்திற்குள்ள இக்குறையில்லை.

138/12: மரம் விதையிலிருந்து வருவதை ஆராய்வது பயன் தராது. மனிதன் மனத்தால் உலகிலிருந்து பிரிந்து சுருங்குகிறான்.

138/13: மரத்தையும், விதையையும் பிரபஞ்சம் விளக்கும். பிரபஞ்சத்தை கடவுள் விளக்குவார்.

139/14: "பிரம்மத்தில் அனைத்தும் உள்ளன. பிரம்மம் அனைத்திலும் உள்ளது. அனைத்தும் பிரம்மம்".

139/15: (Apprehending Supermind) பிரக்ஞா மனம், உயிர், உடல் என்ற முதல் பிரிவினையை ஏற்படுத்துகிறது.

140/16: அறிபவன், அறிவு, அறியப்படுபவன் என்ற பிரிவினை ஏற்படுகிறது.

140/17: புருஷன் பிரகிருதியுள் சென்று பிரிவினையுள் ஒற்றுமையாகிறான்.

141/18: ஆத்மா சத்தியஜீவியத்திலிருக்கும்வரை அஞ்ஞானம் ஏற்படுவது இல்லை.

141/19: புருஷன் சிருஷ்டியில் பிரிந்த ஆயிரம் பொருள்களில் தன்னை வெளிப்படுத்துவதில் தன் ஒருமையையோ, ஒற்றுமையையோ இழப்பதில்லை. அடுத்துவரும் - பிரக்ஞா - அத்தியாயங்கள் எளிதானவை.

******



book | by Dr. Radut