Skip to Content

பகுதி 11

Unconscious man தன்னையறியாமல் கண்மூடி வாழ்வை வாழும் மனிதன் திருமணம் செய்து கொள்ள நினைத்தால், அதை ஆசைப்பட்ட காரியமாகச் செய்கிறான்; தன்னை ஜீவாத்மாவாக நினைத்தால், அவன் ஆசையால் செயல்படாமல், இது - திருமணம் - தன் மன வளர்ச்சிக்கு அவசியம் என்று அறிந்து (conscious man) தன்னை உணர்ந்து, தன் ஜீவனின் தேவைகளை அறிந்து செயல்படுகிறான். இந்த நிலையில் ஆசைப்பட்டு, திருமணம் செய்து கொள்பவனுடைய நிலை அவனுக்கிருக்காது. ஆசைப்பட்டுச் செய்யும் திருமணத்தில், அவன் திருமணத்திற்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும். அவன் எதிர்காலத்தைத் திருமணம் நிர்ணயிக்கும். தன்னை ஜீவாத்மாவாக அறிந்து செயல்படும்பொழுது முன்போலவே திருமணம் செய்து கொண்டாலும், திருமணம் இவனை நிர்ணயிப்பதற்குப் பதிலாக, இவன் திருமணத்தை நிர்ணயிப்பான். சர்க்கார் (quarters) வீடு கொடுத்தால், கிடைப்பதை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் வீடு கட்டினால், நம்மிஷ்டப்படி வீடு கட்டலாம்.

  • மாற்றத்தை ஏற்பவனுக்கு மாற்ற முடியாத தலைவிதி பூரணச் சுதந்திரச் செயலாக மாறி வளர உதவும்.
  • மாற்றம் தலைவிதியை மாற்றும்.

ஒன்று பல ஆனால், அவை சேர்ந்து ஒன்றாகாது :

ஒரு பாத்திரத்தினுள் ஏராளமான - சுமார் 75 - பொருள்களைப் போட்டுத் திருப்பி, எடுத்தால் அந்த 75 பொருள்களும் இருக்கும். இவை சேர்ந்தது பாத்திரம். பாத்திரம் என்பது அதனுள் உள்ள பொருள்கள். ஒரு கவிஞன் ஆயிரம் பாடல்களை எழுதினால், அந்த ஆயிரம் பாடல்களும் சேர்ந்து கவிஞனாகி விடா. தன்

படைப்புகளையும் தாண்டி கவிஞன் ஒருவன் உண்டு. பாத்திரம் ஜடம், அது போட்டது, போட்டபடியிருக்கும். The sum of all the parts does not make the whole. எல்லாப் பகுதிகளும் சேர்ந்தால் முழுமையை எட்ட முடியாது. ஏனெனில் முழுமை அவற்றை விடப் பெரியது. இது உபநிஷதத் தத்துவம். நூன் அடிப்படைகளில் ஒன்று. வீடு, குடும்பம் என்பவை ஓரளவு இக்கருத்தை விளக்கும். வீட்டிலுள்ள அத்தனைப் பொருள்களும், மனிதர்களும் சேர்ந்து வீடாகும். அதுவே குடும்பமாகாது. குடும்பம் வீட்டை விடப் பெரியது. பொறுப்பு, உறவு, பாசம், கடமை, சாதனை போன்றவை வீட்டுடன் சேர்ந்தால் குடும்பமாகும். ஆத்மா மனிதனானால், மனிதனை விட ஆத்மா பெரியது. ஆத்மா அனந்தம்; மனிதன் கண்டம், சிறிய பகுதி, ஆத்மா பெரிய முழுமை.

அன்பால், பிரியத்தால் பல பரிசுகளைக் கொடுக்கின்றோம். எல்லாப் பரிசுகளும் சேர்ந்து பிரியமாகாது. பிரியம், பரிசுகளைவிட உயர்ந்த நிலையில் உள்ளது. மனித வாழ்வு சிறியது. யோக வாழ்வு பெரியது. மனித வாழ்வின் எல்லா நிகழ்ச்சிகளும் சேர்ந்து யோக வாழ்வாகாது. மனிதவாழ்வின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அடிப்படையில் மாறி ஒன்று சேர்ந்தால் யோக வாழ்வாக மாறும். மாற்றமும், மனித வாழ்வும் சேர்ந்து யோக வாழ்வாகும்.

மூளையில் ஆயிரம் எண்ணங்கள் உற்பத்தியானாலும், மூளையின் நினைவெல்லாம் சேர்ந்து மனமாகாது. மனம் பெரியது, மூளை சிறியது.

இந்த நாட்டு மக்களும், மண்ணும், மலையும், நதியும் சேர்ந்து இந்தியா ஆகா. இந்தியாவுக்கு ஆத்மாவுண்டு (nation soul); இந்தியாவுக்கு ஜீவன் உண்டு. அதற்குப் பாரதமாதா

எனப் பெயர். நதியும், மலையும், மனிதனும் ஜடம். ஆயிரமாயிரம் ஜடப்பொருள்கள் சேர்ந்து ஆத்மாவாவதில்லை.

  • எல்லாப் பகுதிகளின் கூட்டைவிட முழுமை பெரியது.
  • தன் படைப்புகளின் தொகுப்பைவிடக் கவிஞன் பெரியவன்.
  • வீட்டிலுள்ள அனைத்தும் சேர்ந்தாலும், குடும்பமாகாது.
  • கண்டங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அகண்டமாகாது.
  • The sum of finites will not make up the infinity.
  • எல்லாப் பரிசுகளும் சேர்ந்து பிரியத்திற்குச் சமமாகாது.
  • நினைவு, சிந்தனை, கற்பனை, எல்லாம் சேர்ந்து அறிவாகாது.
  • மனித வாழ்வின் அனைத்து நிகழ்ச்சிகளும் யோகவாழ்வாகாது.
  • நாட்டிலுள்ள அனைத்தும் சேர்ந்து 'நாடு' ஆக முடியாது.
  • பல பூஜ்யங்கள் சேர்ந்து ஒரு எண்ணாக முடியாது.
  • பகுதிகளான பல சேர்ந்து முழுமையான ஒன்றாக முடியாது.

இது சிருஷ்டியின் அடிப்படைத் தத்துவம், இறைவன் சிருஷ்டியைவிடப் பெரியவன். எவ்வளவு சிருஷ்டித்தாலும், அவ்வளவும் சேர்ந்ததை விட இறைவன் பெரியவன். இறைவன் அகண்டமான அனந்தமான ஒருவன். மனிதன் கண்டமான பல ஆவான். மாற்றம் என்பது ஒரு முறையன்று; முறை ஜீவனற்றது. மாற்றம் என்பது ஆன்மீக ஜீவன். மனித வாழ்வில் ஆன்மிக ஜீவனுள் மாற்றம் சேர்ந்தால், யோக வாழ்வாகிறது.

உடல் உணர்வு : மருத்துவ கல்லூரியில் சேர்ந்து, இரத்தம், மலம் ஆகியவற்றைச் சோதனைக்காக எடுத்துக் கொண்டு பரிசோதனை செய்தாலும், வெகுநாள்வரை அவையுள்ள இடத்தில் நிற்க நேர்ந்தால், கை கூசும், கால் நகர்ந்து போகும், முகம் சுருங்கும். இதை physical sensitivity உடல் உணர்வு என்று கூறலாம். கிராமத்து மனிதர்கள் ரூ. 10,000த்தைக் கையில் வாங்கினால் கண்ணில் ஒற்றிக் கொண்டு மடியில் பத்திரமாக வைக்கும்வரை பேசமாட்டார்கள். மற்ற எதுவும் அவர்கள் மனத்தைத் தொடாது. மனம் புனிதமாக ஒன்றை அறிந்தால் அதைப் போற்றும், ஓரிரு தலைமுறையாக அப்பழக்கம் வந்தால், பின்னர் உணர்வும் மனத்தின் அறிவை ஏற்றுப் போற்றுவது வழிபாடு. மேலும் நெடுநாள் அது தொடர்ந்தால் மனமும், உணர்வும் ஏற்றதை உடல் உணர்வு ஏற்கும், உடலின் உணர்வு ஏற்றபின் அது தானே செயல்படும்.M.Phil பட்டதாரி. கம்பனியில் வேலை செய்பவர். முதலாளி போனில் கூப்பிட்டால், முதலாளியின் குரல் கேட்டவுடன் சார் என்பதற்கு முன் கம்பனியில் எழுந்து நிற்பான். முதலாளி வீட்டிருக்கிறார். ஆனால் அவன் உடல் முதலாளிக்கு மரியாதை செலுத்த, தன்னையறியாமல் எழுந்து நிற்கிறது. இதையே மனிதச் செயலாற்றும் திறனின் கடைசி கட்டமாகக் காணலாம்.

  • மரியாதை உடலில் ஊறியது.
  • பக்தி உடலோடு பிறந்ததாயிற்றே.
  • ஜாதி ரத்தத்தில் உள்ளதாயிற்றே.
  • பெற்ற வயிறல்லவா?

என்று நாம் சொல்வது தொன்றுதொட்டு வந்த பழக்கம் மனத்தைத் தாண்டி உணர்வையும், உணர்வைத் தாண்டி உடலையும் தீண்டி, உடலில் கலந்து, உடலின் உணர்வாக

மாறி தானே செயல்படும் அளவுக்கு வந்ததைக் குறிக்கின்றது. அன்னை திருவுருமாற்றத்தைப் பற்றிப் பேசும்பொழுது உடல் உணர்வும் மாற வேண்டும் என்கிறார். அதற்கடுத்த கட்டமும் உள்ளது. மாற்றம் என்பது உடல் அளவில் ஏற்படுவது சிறப்பு. இக்கட்டுரையின பலனைப் பெற மனமும், உணர்வும் மாறுவது அவசியம். உடல் மாறாவிட்டாலும் நான் சொல்லும் பலன் தெரியும். நல்ல குடும்பத்ததுப் பிள்ளை சில சமயங்களில் தறுதலைகளுடன் சேர்ந்து திருட்டுப் போன்ற காரியங்களில் ஈடுபட்டு, பலநாள் திட்டம் தீட்டி முடிவாகப் பணத்தை எடுக்கப் போகும் நிலையில் அவனுக்குக் கை வாராது. எடுக்காமல் வந்துவிடுவான். அதுவே அவன் மறந்த பண்பு, அவனை மீறிச் செயல்படுவதாகும். கலப்புத் திருமணம், விதவா விவாகம் போன்றவற்றுள் முன்னேற்றக் கருத்தை மனம் ஏற்றுச் செயல் இறங்கியபின், என்னதான் இருந்தாலும் மனம் இசையவில்லை என்ற கட்டங்கள் சாப்பாடு, மரியாதை, போன்ற பழக்கங்களில் குறுக்கிடும். எது உயர்ந்ததாக இருந்தாலும் நான் இதை ஏற்றது தவறு என்று மனம் கூறும் நிலை பலருக்கு ஏற்படுவதுண்டு. நல்ல கிருத்துவக் குடும்பத்துப் பிள்ளை அமெரிக்காவில் B.A. படிக்கும்பொழுது சகமாணவியுடன் ஒரு வருஷம் பழகினார். அவள் பிறகு வேறொருவனைக் கட்டிக் கொண்டாள். பலரும் விசாரித்தபொழுது அவள், ஒரு வருஷமாக அவர் என்னைத் தொட்டதில்லை என்று சொன்னதை எவராலும் நம்ப முடியவில்லை. அமெரிக்காவிலும் கத்தோலிக்க மதப்பயிற்சியின் சிறப்பு அது.

மழை, வெய்யில் :

எவ்வளவு நாள் அன்னையை அறிந்திருந்தாலும், எவ்வளவு அன்னை நூல்களைப் பயின்றாலும், இன்று நாம் எவரும் செய்யாத காரியத்தைச் செய்ய முற்படும்பொழுது மனம் மற்றவர்களைக் போலவே பேசும். இது இயற்கை. பல அன்பர்கள் அதைத் தாண்டி வந்திருப்பார்கள். தாண்டி வந்தவர்கள், அதைப் பேசமாட்டார்கள். எவருக்கும் அளவு என்பதுண்டு. ரூ. 50,000 விஷயத்திலுள்ள நம்பிக்கை 1 இலட்சத்தில் இருக்காது. 5 இலட்சத்தில் நிச்சயமாக இருக்காது. அந்நிலையில் நாமும் அதேபோல் பேசுவோம். பேசாதவர்கள் நினைப்பார்கள். மனம் பழையபடி நினைக்கும்வரை, பெரிய பலன் தடைப்படும்.

எத்தனையோ சோதனைகள் செய்யலாம். எந்தச் செயலும் சோதனைக்குரியதே. என்றாலும் மழை, அருள் என்பதாலும், நல்லார் உள்ள இடத்தில் பெய்வதாலும், எவருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாதது என்று தெரியுமாதலாலும், சோதனைக்கு மழை மிகவும் பொருத்தமானது. சோதனையாகச் செய்வதை விடப் பொருத்தமாகச் செய்வது நல்லது. பொருத்தம் எனில் நமக்கு மழை தேவை. நம் பயிருக்கு மழை தேவை, நம் தோட்டத்துச் செடிகளுக்கு மழை வேண்டும், வெய்யின் கடுமை குறைய மழை அவசியம் என்பதுபோல பொருத்தமான நேரத்தில் பிரார்த்தனையை மேற்கொள்ள வேண்டும். நம் மாற்றத்திற்குரியது மனமாற்றம். பிரார்த்தனை அவ்வளவு முக்கியமில்லை. நாம் மாற்றத்தைத் தேடுகிறோம். நமக்கு மாற்றம் பலிக்குமா? பலிக்கும். பக்குவம் வந்து விட்டதா? எந்த அளவிலும் சந்தேகம் இனி எழாத நிலையை எய்திவிட்டோமா என அறிய மழையை ஓர் அறிகுறியாகக் (symbol) கொண்டு பிரார்த்தனை செய்தால், மழை பொழிந்தால் நமக்குரிய பக்குவம் எழுகிறது என்று பொருள். பிரார்த்தனை பலிக்கவில்லையெனில் யோசனை மற்ற விஷயங்களைக் கருத வேண்டும்.

மனம் மாறினால் மழை பெய்யும். மனம் எண்ணத்தால் நிறைந்திருந்தால், நாம் மனத்தை உணர்வால் நிரப்ப முயல வேண்டும். உணர்வு தண்ணீர், மழைக்கு அறிகுறி என்பதால் மனம் உணர்வால் நிரம்பிய நேரம் மழை பெய்யும். வீட்டில், ஆபீசில் வேலைகளைக் கடமையாகச் செய்கிறோம். கடமையாகச் செய்வதை, உணர்ந்து உணர்வாகச் செய்வது மழையைக் கொண்டு வரும்.

மழை, அருள். அருள் செயல்படும்படி நாம் நினைத்தால், நடந்தால் மழை பொழியும். இன்று உலகில் மனிதன் தன்னிஷ்டப்படி நடக்கிறான். ஆண்டவன் இஷ்டம் அருள். நம் தொழில், நாம் சம்பந்தப்பட்ட இடங்களில் எது மனிதச் செயல், எது ஆண்டவன் இஷ்டம் என நமக்குத் தெரியும் இடங்களுண்டு. நாம் ஆஸ்பத்திரியில் வேலை செய்தால், பிச்சைக்கார விடுதியில் நிர்வாகம் செய்தால், ஜெயிலில் வேலை பார்த்தால், நாட்டில் நோய் அழிய வேண்டும். அனைவருக்கும் வயிறார உணவு தேவை, குற்றவாளி என்பவனிருக்கக் கூடாது என்று நினைத்தால், உணர்ச்சி பூர்வமாக நினைத்தால் பெருமழை பெய்வதைக் காணலாம். வெய்யிலும் அதுபோன்றதே.

மழை பிரார்த்தனைக்கோ, மனமாற்றத்திற்கோ, மற்ற எந்த ஆன்மீக முயற்சிக்கோ பதில் கூறுவதுபோல் பெய்தால், நம்மால் அருளை அழைக்க முடிகிறது எனப் பொருள். அருளை அழைக்கும் மனமாற்றம், நான் கூறும் மாற்றமாகும். ஒருமுறை சோதனை பலித்த பின், சோதனை செய்வதை அடியோடு மறந்துவிட வேண்டும். இனி மாற்றம் பலிக்கும்.

வாரிசு : பெண் பரிட்சையில் தவறிவிட்டாள். கேட்பவர்கட்கு தான் பாஸ் செய்ததாகச் சொல்கிறாள். தகப்பனாருக்கு அது வருத்தம் தந்தது. தாம் அன்னையை ஏற்றுக் கொண்டபின்

கண்ட அற்புதங்கள் அநேகம். எனினும் தம் மகள் உண்மையை மாற்றிப் பேசுவது அவருக்குப் புரியவில்லை. தம்முடைய ஆபீசில் அன்னை கோட்பாடுகளைப் பின்பற்றி மின்சார விரயத்தைத் தடுக்க முயன்றார். பெருமுயற்சி செய்தார். வெற்றி கிடைத்தது. வீட்டில் மின்சார பில் அளவுகடந்து குறைந்தது. எப்படி எனவும் தெரியவில்லை. இதுவும் அன்னை வெளிப்பாடு என ஏற்றுக் கொண்டார். சுத்தத்தை ஆபீசில் கடைப்பிடித்தார். எவ்வளவு பொருள்களைச் சுத்தம் செய்யமுடியுமோ அவ்வளவையும் செய்தார். தன் மேஜை மீதுள்ள phone போனைத் தாமே சுத்தம் செய்தார். சுத்தம் செய்வதில் ஆர்வம் கொண்டார். ஒரு நாள் தமக்குப் பிரமோஷன் வந்ததைப் போனில் ஒருவர் சொல்லக் கேட்டபொழுது, வந்த பிரமோஷனைவிட, போன் மூலம் வருவதை அவர் கவனித்தார். பொதுவாகப் பிரமோஷன் செய்தி ஆர்டராகக் கையில் வரும்வரை இரகஸ்யமாக இருப்பது வழக்கம். இதற்குமுன் வந்த பிரமோஷனை நினைத்துப் பார்த்தார். மேலதிகாரி கூப்பிட்டு வாழ்த்தி விஷயத்தைச் சொல்வது, confidential clerk நம்பிக்கைக்குரிய மேல் அதிகாரியின் குமாஸ்தா நம்பிக்கையோடு சொல்வது, ஆர்டராக வருவது போன்றவை வழக்கம். போனில் தெரிந்து கொள்வதும் உண்டு. இவருக்கு இது புதியது.

தம் கவனத்தைப் பெற்ற போன் தமக்குப் பிரமோஷனை அறிவிப்பதாக அறிந்தார்.

பெரிய tender ஏலம் விடும்பொழுது எழும் சிக்கல்கள் அதிகம். 20, 30 கோடி பணம் புழங்கும் இடம், சட்டம் ஒரு பக்கம், மேலதிகாரி ஒரு பக்கம், அரசியல் செல்வாக்கு, பணம், தொழில் அதிபர்கள் சந்திக்கும் இடம் இது ஆனதால் அடுத்த நிலை அதிகாரிகள் நிலை இக்கட்டானவை. எதையும்

தெளிவாகவோ, தைரியமாகவோ செய்ய முடியாத நிலை. நான்கு வருஷத்திற்குப் பின் கேள்வி எழுந்தால் நோட்ஸ் தயார் செய்த அதிகாரியைக் காட்டிக் கொடுக்கும் மேல் அதிகாரியும் உண்டு. அதுபோன்ற ஒரு பெரிய டெண்டரில் வழி தெரியாமல் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தார். இதுவரை இல்லாததுபோல் மேல் அதிகாரி கூப்பிட்டு நானே டெண்டரை கவனித்துக் கொள்கிறேன். உனக்குப் பொறுப்போ, வேலையோ வேண்டாம் என்றார். எவ்வளவு பெரிய பாரம், அன்னை எப்படி நிலைமையை மாற்றி விட்டார்கள்! என ஆச்சரியப்பட்டார்.

இத்தனை அனுபவங்களும், நம்பிக்கையும் பெண் விஷயத்தில் பலிக்கவில்லை. இது அவருக்கு யோசனையைக் கொடுத்தது. எப்படிப் பிரார்த்தனை செய்தால் பெண்ணின் மனதை மாற்றலாம் என அவர் பலவிதமாக ஆலோசனை செய்தபொழுது, தாம் பட்டப் பரிட்சையில் தவறியது நினைவு வந்தது. அதன்பின் தாம் பாஸ் செய்ததாகச் சொல்லிக் கொண்டிருந்ததும் நினைவு வந்தது. பிரார்த்தனை தவறாது. தவறினால், பின்னணியில் முக்கிய நிகழ்ச்சியிருக்கும்.

தம் குறை மகளின் குறையாக எழுவதை அறிந்து மாறுவது மனமாற்றம்.

மாயை, பிரகிருதி, லீலை :

உலகம் மாயை என்பது ஒரு தத்துவம். சிருஷ்டிக்கப்பட்ட உலகம் புருஷனிலிருந்து வேறுபட்ட பிரகிருதி. புருஷனும் பிரகிருதியும் சிருஷ்டி, உலகம் பிரகிருதி என்பது அடுத்தவர் கொள்கை. இறைவன் தன் லீலையாக உலகத்தை ஏற்படுத்தினான் என்பது மற்றொன்று. இவை நம் நாட்டுத் தத்துவங்கள். தம் நூலில் பகவான் கூறும் தத்துவம் இவை மூன்றையும் தன்னுட்பகுதிகளாகக் கொண்டது. வாழ்வில்

பகவான் கூறும் தத்துவம் நமக்குப் பலன் தருமா, நாம் முயலும் மாற்றத்திற்குப் பயன்படுமா என்று நாம் கருதுவோம்.

தத்துவம் ஞானத்தின் சிகரத்திலுள்ளது. நடைமுறை வாழ்வில் மனிதன் தத்துவத்தைச் சின்னாபின்னப்படுத்தி, தனக்கேற்ற முறையில் புரிந்து கொள்கிறான். அதுபோல் அவன் மாயை, பிரகிருதி, லீலை ஆகியவற்றைப் பல்வேறு வகைகளாகப் புரிந்து கொள்கிறான். அவற்றில் ஒரு வகையை மட்டும் நாம் எடுத்துக் கொள்வோம். .

மாயை:

என் கம்பனிக்கு உயிரைவிட்டு உழைத்தேன். காலமெல்லாம் கம்பனியே எனக்கு எல்லாம், நல்லதும், கெட்டதும் கம்பனியே என எல்லாவற்றையும் மறந்து இரவு பகலாக உழைத்தேன். கம்பனி வளர்ந்தது, பெரிய இலாபத்தைப் பெற்றது. எல்லா இலாபமும் முதலாளிக்குப் போயிற்று. நாங்களிருப்பதாகவே அவருக்கு நினைவில்லை. அவர் அருகில் இருந்து உயிருக்கு உயிராய் வேலை செய்த என்னையே அவர் மறந்துவிட்டார். முதலாளி, நேர்மை, விஸ்வாசம், கடமை, தர்மம் தலைகாக்கும் என்பது அத்தனையும் மாயை என்பது பலர் அனுபவம். இதுபோல் நாணயத்தை, உறவை நம்பி ஏமாந்தவர் பலர். பிறரை நம்பாமல் உழைப்பை நம்பி, பல வருஷம் உழைத்து நஷ்டத்தைக் கொடுத்தது என்று காண்பவரும் உண்டு. உலகில் இவர்கள் போன்றவர் ஏராளம். இவர்கட்கு உலகம் மாயை.

பிரகிருதி: நான் உழைக்கப் பிறந்தவன், நான் கண்டதெல்லாம் சோறுதான். எனக்கு வாழ்விலே எதுவும் கிடையாது, என்று பல்வேறு நிலைகளிலுள்ளவர்கள் உலகைப் புரிந்து கொள்பவருண்டு. பிரகிருதி எனில் இயற்கை. பிறந்தால் உழைக்க வேண்டும் என்றறிபவர்கள் உலகத்தின் இயற்கையாக அதைக் கொள்கிறார்கள்

லீலை :

சிறு குழந்தைகளுக்கு நாளெல்லாம் ஆர்ப்பாட்டம். ஆடவே நாம் பிறந்தோம் என்பது போன்றது அவர்கள் வாழ்வு. செல்வமும், வெற்றியும் பெற்றவர்களில் பலர் அதையே நினைக்கின்றனர்.

உலகத்தை, மாயை, பிரகிருதி எனக் கருதுபவன் விளையாடும் குழந்தையைக் கண்டு நாம் இது போலிருக்க முடியவில்லையே என நினைக்கிறான். பணக்கார வாழ்வு நமக்கில்லை, அதற்கு 'அ' விலாசம் வேண்டும் என்று விட்டுவிடுகிறான்.

ஸ்ரீ அரவிந்தம் :

கம்பனிக்காக உழைப்பவன், கம்பனியை நம்புவதற்குப் பதிலாக அன்னையை நம்பி, கம்பனிக்கு இன்று உழைப்பதைப் போல் உழைத்தால் வாழ்வு மாயை ஆகாது. அவனுக்குரியது தவறாது கிடைக்கும். கம்பனி நிச்சயமாகக் கொடுக்கும், தவறாது. தவறினால் அன்னை தவறமாட்டார். வாழ்வு மூலம் கொடுத்துவிடுவார். தலைவிதியே என்று உழைப்பவன் நம்பிக்கையோடு உழைத்தால் உழைப்புக்கு இன்று பலன் இல்லை என்று காண்பதற்குப் பதிலாக, உழைப்பின் முழுப் பலன் உரிய காலத்தில் உரிய முறையில் தவறாது, பிசகாமல், குறையாமல் வருவதைக் காணலாம். மாயை போன்றவற்றில் இருந்து மாறுவதே மாற்றம் என்று நான் கூறுகிறேன்.

கடவுளை நாம் சிருஷ்டியில் அறிவோம்.

கடவுளைப் பரிணாமத்தில் நாம் அறியோம்.

இந்தக் கருத்து நூலில் காணப்படுகிறது. சச்சிதானந்தம் ஜடமாக மாறுவது சிருஷ்டி. ஜடம் மனிதனாக வளர்ந்தது பரிணாமம். பரிணாமத்தில் கடவுள் என்பது மனிதன். மனிதன் கடவுளாகிறான். முந்தையதை நாம் அறிவதுபோல், பிந்தையதை அறிவதில்லை என்பது நூலின் விளக்கம். இதை ஏன் அறிய முடியவில்லை, எப்படி அறிவது என்றும் நூல் விளக்குகிறது. நமக்கு அதன் வாழ்க்கை விளக்கம் முக்கியம்.

சிருஷ்டியின் உச்சியிலும், அடிமட்டத்திலும் மனம் காண்பது இரண்டாகப் பிரிந்து நிற்கும் நிலை. மேலே சத், அசத் எனவும் கீழே நன்மை, தீமை எனவும் பிரிந்து காணப்படுகின்றன. சத்தியம் என்பது ஒன்றே (Reality is one) என்பதை நாம் ஏற்றுக் கொண்டுள்ளதால், சத்தியத்தை மேலும், கீழும் காண முடியுமா? எப்படிக் காண்பது? என்பன கேள்விகள்.

சத்தும், அசத்தும் ஒன்றின் பகுதிகள்.

நன்மையும், தீமையும் முழுமையின் பகுதிகள்.

இவற்றை முழுமையாக அறிய நாம் மேல் மனத்திலிருந்து உள் மனத்திற்குப் போக வேண்டும் என்று தத்துவம் முடிக்கின்றது.

நம்மைப் பொருத்தவரை நன்மையும், தீமையும் எதன் பகுதிகள், அதை நாம் அடைவதெப்படி? நன்மையும், தீமையும் வாழ்வின் பகுதிகள். நன்மையின் கருவான உட்கருத்தும் தீமையின் கருவான உட்கருத்தும் ஒன்றே. அவை வாழ்வின் கருவில் சந்திக்கின்றன. நன்மையை நாடும் மனிதனும், தீமையானவனும் சிறியவன் (finite) கண்டம் எனப்படுவான். நன்மை, தீமையைக் கடந்த மனிதன் பெரியவன் (infinite). சிறிய மனிதன் பெரியவனானால், கடவுளை நாம் பரிணாமத்தில் அறியமுடியும்.

அன்றாட வாழ்வில் நமக்கு அன்றாடக் காரியங்களைச் செய்யும் அளவுக்குச் சக்தியுள்ளது. இது சிறிய மனித சக்தி (finite energy). ஜீவன் மலர்ந்தால் அளவு கடந்த அன்னை சக்தி எழுகிறது (infinite energy). அளவு கடந்து அன்னை சக்தி எழுவது சிறியது, பெரியதாவதற்கு அறிகுறி. தீமையைத் தீமை எனக் கண்டித்தாலும், நன்மையை நல்லது எனப் போற்றினாலும் எழுவது சிறிய சக்தி. தீமையை ஒரு செயல் எனவும், நன்மையை வேறொரு செயல் எனவும் கருதினால் என்பது பெரிய சக்தி. பிறர் நமக்குச் செய்யும் தீமையை ஒரு செயல் எனவும், நாம் பிறருக்குச் செய்யும் நன்மையை ஒரு செயல் எனவும் கருதினால்,

  • நாம் நன்மை தீமையைக் கடக்கின்றோம்.
  • சிறிய மனித சக்தி பெரிய அன்னை சக்தியாகும்.
  • பரிணாமத்தில் அது கடவுளின் வெளிப்பாடாகும்.

மனம் பக்குவப்பட்டு அபரிமிதமான சக்தி எழுவது மாற்றம் எனப்படும். மாற்றத்தைக் காணுதல் பரிணாமத்தில் கடவுளைக் காண்பதாகும். வாழ்வில் இறைவனைக் காணுதல் என்பதை நான் அன்னை தரிசனம் எனக் குறிப்பிடுவதுண்டு. அதைப் பிரார்த்தனையால் பலனாக அடைவதை நான் அப்படி விவரிப்பதுண்டு. நூலில் பகவான் தத்துவார்த்தமாக இதை எழுதுகிறார். அகத்தில் விடுதலையும், புறத்தில் வாழ்வையும் சன்னியாசியும், கிருகஸ்தனும் அறிவார்கள். அவை ஒன்றையொன்று ஏற்றுச் சந்திப்பது இறைவனாகும் என்கிறார். உயர்ந்த ரிஷிகள் சச்சிதானந்தத்தை அடைந்தனர். அதுவே பரமாத்மாவாகும். அவரினும் உயர்ந்தவர் நிர்வாணத்தை அடைந்தனர். நிர்வாணமும், பரமாத்மாவும் உச்சகட்ட உயர்வு பெற்றவை எனினும், பிரம்மம் அதையும் கடந்த நிலை. கடந்த நிலை என்பதுடன் அவையிரண்டையும் தன்னுள் பகுதிகளாகப் பெற்ற முழு நிலை.

அன்னை இக்கருத்தை வாழ்வில் எல்லா நிலைகளிலும் பொருத்திக் காட்டுகிறார். வாய் ஓயாமல் பேசுபவன் மனிதன். மனிதன் குறைவாகவோ, அதிகமாகவோ பேசுகிறான். பேச நினைத்துவிட்டால், மனிதனால் பேசாமலிருக்க முடியாது. அதனால் அவன் பேச்சுத் துணையை நாடுகிறான். சன்னியாசி மனிதனில் உயர்ந்தவன். அவன் பேச விரும்புவதில்லை. மௌனம் என்ற உயர்ந்த நிலையை நாடுகிறான். தவம் பலித்து மௌனம் சித்திக்கிறது. பகவான் பேசவே இல்லை. silent God மௌனமான இறைவன் என அவரை வர்ணிக்கிறார்கள். அன்னை மௌனமும், பேச்சும் வாழ்வில் இறைவன் எனும் அம்சமான மையத்தில் சந்திப்பதைக் காட்டுகிறார். பேசுபவன், பேச ஆசைப்பட்டவன். மௌனி பேசாமலிருக்க ஆசைப்பட்டவன். ஒன்று தாழ்ந்தது, அடுத்தது உயர்ந்தது. எனினும் அவையிரண்டும் ஆசையாகும். மௌனி கொஞ்சம் பேசினால், அதன் மூலம் அவன் மௌனம் கலைய ஆரம்பிக்கும். பேசும் ஆசை அழியாமல், பேசாத ஆசையாக மாறியதால் மௌனம் கலைகிறது. அன்னை controlled speech அளவோடு பேசவேண்டும் என்கிறார். அன்னை ஏராளமாகப் பேசினார்.

ஆசையால் பேசாமல் அவசியத்தால் பேசலாம்.

பேச வேண்டும் என்ற முடிவோ, பேசக் கூடாது என்ற தீர்மானமோ இல்லாமல் அவசியமானால் பேச மௌனச் சித்தியை விட அதிக மனோபலம் தேவை. அங்கு இறைவன் எழுந்து தரிசனம் தருகிறார். அதையே அன்னை தரிசனம் என்கிறேன்.

ஆசையை அடக்க முடியாமல் சாப்பிடுபவர் உண்டு. ஆசையைக் கட்டுப்படுத்திச் சாப்பிட மறுப்பவர் உண்டு. ஆசையை அழித்தபின் சாப்பிடுவது உயர்ந்த கட்டுப்பாடு. ஆசையும், விரதமும் சேர்ந்து வாழ்வில் வெளிப்படும் இடம்

இறைவன் வெளிப்படும் இடம். அது தெய்வதரிசனமாகும், அன்னை தரிசனமாகும்.

  • நிர்வாணமும், பரமாத்மாவும் சந்திக்கும் இடம் பிரம்மம்.
  • பேச்சும், மௌனமும் சந்திக்கும் இடம் அளவோடுள்ள பேச்சு.
  • ஆசையும், விரதமும் சந்திக்கும் இடம் பண்பான சாப்பாட்டுப் பழக்கம்.

உயர்ந்த நிர்வாணம், மௌனம், விரதத்தை நாடுபவர் யோகி, முனிவர், சன்னியாசி. பிரம்மமும், அளவோடுள்ள பேச்சும், பண்பான ருசியும் அவற்றினும் உயர்ந்தவை. அவை இறைவன் வெளிப்படும் இடங்கள். எந்த நிலையிலும் முழுமையை நாடுபவை, பூரண யோகப் பாதையின் மைல் கற்களாகும்.

உயர்வும், தாழ்வும் ஒன்றும் இடம் உயர்விலும் சிறந்த வாழ்வின் அன்னை மையம், அன்னை தரிசனம் அளிக்கும் இடங்களாகும்.

கிராக்கி : தனக்கு இல்லாத சக்தியைப் பயன்படுத்தும் மனநிலை கிராக்கி. அந்தஸ்தில்லாதவர்க்கு நாலு பேரிடம் மதிப்பிருக்காது. அவர்களை விசேஷங்களுக்கு அழைக்க மாட்டார்கள். பொது இடங்களில் எவரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஹைக்கோர்ட்டில் பெரிய வக்கீல் பின்னால் போகும் வக்கீல் குமாஸ்தாவாக இருப்பார். இவர்களுக்கு அழைப்பு வந்தால், பிறர் பேசினால் அதைப் போற்றி ஏற்றுக் கொள்வார்கள். அவருள் சிலர் மாறுபட்டிருப்பார்கள். வாழ்க்கையிலேயே எவரும் திரும்பிப் பார்க்காதவரை, ஓர் இடத்தில் அன்பாக அழைத்தால், அழைப்பை ஏற்று மகிழ்வதைவிட, அழைப்பை மறுத்துத் தம் பெருமையைத் தம் மனதில் நிலை நாட்ட முயல்பவருண்டு, தமக்கு இல்லாத

மரியாதையை இருப்பதாகச் செயல்படுபவர் இவர். இதுவே கிராக்கி மனப்பான்மை.

இல்லாத மரியாதையை இருப்பதாகக் கருதி நடந்தால் இருப்பதும் நிரந்தரமாகப் போய்விடும்.

ரூ. 35 சம்பளம் வாங்குபவர் மகன் ரூ. 65 சம்பளம் பெற்று, தான் பெற்ற பட்டத்தின் மரியாதையைவிட தகப்பனாருக்குப் பணிவது நல்லது என்று, சம்பளத்தைத் தகப்பனார் கையில் கொடுக்க வந்தால், தகப்பனார் கிராக்கி செய்வார். கையால் வாங்காமல் அப்படி வை என்பார். வைத்தால் அங்கேயே பணம் பல மணி நேரம் இருக்கும். இந்தத் தகப்பனாருக்கு 75 வயதிற்குப் பின் தான் பெற்ற ரூ.40 பென்ஷனில் தன்னைக் காப்பாற்ற முடியாத பொழுது மகன் இலட்ச ரூபாய் வைத்திருந்தும், மகனால் உதவியில்லாமல் போய்விட்டது. மகன் தகப்பனாரை மறந்தார். தாயாரையும் மறந்தார். தகப்பனார் தம்மையும், மனைவியையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் மகனை அணுக முடியவில்லை. மகனுக்குப் பெற்றோர் நினைவேயில்லை.

கிராக்கி செய்வதையே குடும்பப் பண்பாகப் பெற்றவனுக்குத் தான் கற்பனை செய்ய முடியாத இடத்துச் சம்பந்தம் வந்தபொழுது, கிராக்கியாலும், கர்வத்தாலும், வந்த சம்பந்தத்தின் மனத்தைப் புண்படுத்தியபொழுதும் சம்பந்தம் திருமணமாயிற்று. ஆனால் சம்பந்தியின் மனம் விலகியது. மருமகனுக்கு இனி கிராக்கி செய்யவே வழியில்லை என்ற நிலை சீக்கிரம் மாமியார் வீட்டில் ஏற்பட்டது. காலம் 10, 20 வருஷமென ஓடிற்று. இல்லாத மருமகனுக்கு இருக்கும் மாமனாரிடம் ஏதாவது பெற ஆசை. இனி கிராக்கி செல்லாது. வருஷக்கணக்காக மனம் போரிட்டு, நல்ல குடும்பச் சந்தர்ப்பம்

வந்தபொழுது, கிராக்கியைவிட்டுக் கேட்டுப் பெறுவது எனத் தீர்மானித்தான். தானே போய்க் கேட்டான். குணம் அப்படியேயிருந்தாலும், இந்த நேரம் அடங்கியது. மனம் பேராசையால் நிரம்பியுள்ளது. குணம் கிராக்கியால் வழிகிறது. பேராசை முந்த, மாமனாரைக் கேட்டான். நல்ல நேரம். எனக்கு ரூ. 3000 பரிசு கொடுக்கலாம் என்றான். அவர் ஏற்றுக் கொண்டவுடன், ஆசை கட்டு மீறியது. 3000த்தை என்ன செய்வது? 5000 தேவை என்றான். அதையும் ஏற்றுக்கொண்டார். 10 நாளான பின், 5000த்தில் எதையும் வாங்க முடியாது. 30, 40 ஆயிரம் தேவை என்றான். ஒத்துக்கொண்ட மாமனார் பணம் தர தவணை கேட்டார். 35 போதும் என்றான். இரண்டு நாள் கழித்து இன்னும் சில ஆயிரம் தேவை என்றான். மாமனாரால் பணம் திரட்ட முடியவில்லை. கொஞ்ச நாள் கழித்துப் பணம் வந்தது. மாமனார் மருமகனை அழைத்தார். பணத்தைக் கொடுத்தார். பழைய கிராக்கி குணம் முழுமையாக மேலே வந்துவிட்டது. வைத்துக்கொள்ளுங்கள். பிறகு வாங்கிக் கொள்கிறேன் என்றான். இத்தனை மாறியது சரியில்லை என மாமனாருக்குப் பட்டது. அவர் மனம் மாறினார். கொடுப்பதில்லை என முடிவு செய்தார். மாமனார் பேச்சைக் கேட்டுப் பொருளை வாங்கிவிட்ட மருமகன் திணறினார். மாமனாரிடம் செய்த கிராக்கி தலைகீழ் பலனைக் கொடுத்தது. இனி என்ன செய்வது என்று தெரியாமல், மனைவியிடம் மரியாதையை விட்டு மண்டியிட்டு அந்தப் பணத்தைப் பெற அவன் பட்டபாடு, கிராக்கிக்குத்தான் தெரியும். மனைவி மாமனாருக்கு எதிரான குணம் உள்ளவள். கிராக்கியில் கணவனை மிஞ்சுபவள்.

அன்னையை அடியோடு விலக்க உதவும் குணங்களில் தலை சிறந்தது கிராக்கி மனப்பான்மை. கெஞ்ச வைப்பேன் என்ற சொல் அதன் பெரிய ஆயுதம்.

எண்ணம் :

நல்லெண்ணம் நல்லது, கெட்ட எண்ணம் கெட்டது என்பது நம் அபிப்பிராயம். எண்ணம் என்றாலே கெட்டதாக இருக்கும் என்பது அன்னை விளக்கம். பணத்தின் குணம் அடிப்படையில் நல்லதாக இல்லை என்ற நம் கருத்தைப் போன்றது அன்னையின் விளக்கம். ஒரு சிலரே இதற்கு உதாரணமாக விளங்குவார்கள். பொதுவாக எல்லோரிடமும் முக்கியமான நேரத்தில் இந்தக் குணம் வெளிப்படும்.

நல்லவர், இனியவர் என்று பெயர் வாங்கியவர்கள் பலர். அவர்களில் பலரை நாம் நண்பர்களாக, உறவினர்களாக அறிவோம். அப்படிப்பட்டவர் ஒருவர். பணத்தில் ஆசையில்லாதவர். கெஜட் பதவி ஆபீசர். உயர்ந்தவர் என்று அவர் வாழ்ந்த இடங்களில் பிரபலமானவர். பெரிய படிப்பும், அதிக வறுமையும் உள்ள நிலை மாறி நல்ல நிலைமைக்கு வந்தார். இரண்டு ஊர்களில் இரண்டு வீடுகள் கட்டினார். பிள்ளைகட்கு உயர்ந்த படிப்பைக் கொடுத்தார். அன்னையை வழிபட ஆரம்பித்தார். அவருடனிருந்த இளைஞர் தொழிலை விட்டுப் பொதுச் சேவையிலிறங்கினார். வாழ்வு புயலாகிறது. நண்பர்கள் துரோகம் செய்தனர். செய்த வேலையில்லை. சேவைக்குப் பணம் வசூல் செய்வதில்லை. சொந்த வருமானத்தில் சேவை செய்தார். வருமானம் போய்விட்டது. சேவையும், பொறுப்பும் மிஞ்சின. ஆபீசர் மாதம் ஒருமுறை இவர் வீட்டிற்கு வந்தாலும், 25 வருஷ நட்பிருந்தாலும், நிலைமை என்ன? வருமானம் ஏது? எதிர்காலம் என்னாவது என்று ஒரு முறையும் விசாரிப்பதில்லை. வருவார். ஓரிரு நாள் தங்குவார். போய்விடுவார். இவருடைய பால்ய நண்பர் அரசியலில் சேர்ந்து, அத்தனையும் இழந்து, வாழ வழியில்லாத நிலைக்குரியவர். திறமைகளைச் சேகரம் செய்து கொண்டவர் சேவை மூலம் இங்கு வந்து சேர்ந்தார். வசதியான நேரத்தில் வந்தார். வசதி சேவையை விட்டுப்

போயிற்று. வசதியான நேரத்தில் அரசியல்வாதி தம் வீட்டைச் சேவை செய்பவருக்கு விற்றார். விற்றவருக்குப் பிதிராஜ்யமான பெரிய வீடிருக்கிறது.

சேவை ஸ்தாபனம் உடையவே அரசியல்வாதி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த நினைத்தார். விற்ற வீட்டிற்குக் கிரயப்பத்திரம் எழுதவில்லை. வாங்கிய பணத்தை ரசீது மூலம் உறுதிப்படுத்தவில்லை. அரசியல்வாதி வீட்டைத் திருப்பிக் கேட்டார். பொய்க் கேஸ் போட்டார். ஊழியர் விவரங்களை ஆபீசருக்கு எழுதுவது வழக்கம். பொய்க் கேஸ் தோற்றது. மிகவும் சந்தோஷமாக அவர் ஆபீசருக்குக் கேஸ் தோற்றதை எழுதினார். பதில் வந்தது.

ஏன் அவர் கேஸ் தோற்றுப் போயிற்று? வக்கீல் வைத்து அவர் உங்கள் மீதுள்ள கேஸைச் சரியாக நடத்தவில்லையோ? என்று ஆபீசர் அரசியல்வாதி தோற்றதற்கு அனுதாபம் தெரிவித்து தம் ஊழிய நண்பருக்கு எழுதினார். ஊழியர் கடிதத்தைப் பல முறைகள் படித்தார். வீட்டிலுள்ள அனைவரிடமும் கொடுத்துப் படித்து அபிப்பிராயம் சொல்லச் சொன்னார். எவருக்கும் புரியவில்லை. நல்லவர் என்று பெயர் வாங்கியவர் அயோக்கியனுக்கு ஆதரவு தெரிவித்து எழுதியது எதனால் என எவரும் அறியவில்லை. ஊழியர் பழைய நிகழ்ச்சிகளை நினைவுபடுத்திய பொழுது சில ஆண்டுகட்கு முன் ஆபீசர் தம்மிடம் கூறியது நினைவு வந்தது. இந்த வீட்டை அரசியல்வாதிக்கே கொடுத்துவிடுதல் எனக்குச் சந்தோஷம் தரும் என்று அவர் சொன்னார். சொல்லியவருக்கு இரண்டு வீடும், அரசியல்வாதிக்கு பெரிய வீடும் உள்ளன! பொறாமை, சின்னபுத்தி, எவரிடமும், எந்தக் காரணமும் இல்லாமல் எழும் தன்மையுடையன. பொறாமை எழுந்தவுடன் அந்த உறவு விஷம் போலானது.

எண்ணம் நல்லெண்ணமாக இருந்தால் ஏற்கலாம். அதற்கும் அடிப்படை எண்ணம் என்பதால், எண்ணத்தின்

தன்மை கெட்டது என்பதால், எண்ணத்தைக் கடந்து வரும் வரை, நல்லதற்கு அஸ்திவாரம் இல்லை. கெட்டதற்கு அஸ்திவாரம் உண்டு.

நல்லவர், பழகுவதில் நேர்த்தியானவர் என்பவர் பெரிய குடும்பப் பிள்ளைக்குப் பெண் பார்க்க முன்வந்து, ஏழைக்குடும்பத்தில் விகாரமான பெண்ணைத் தேர்ந்தெடுத்து, நம் பிள்ளைக்கு ரொம்ப பொருத்தமான பெண் என்பதும், நல்ல பெண்ணுக்கு ஊனமான பிள்ளையைப் பார்க்கச் சொல்வதும், மனத்தின் உண்மை நிலையைக் காட்டுகிறது. சமூகத்தில் சிகரமானவர் என்பவர் இவர். இவர் மனம் பொறாமையாலும் கெட்ட எண்ணத்தாலும் நிரம்பியிருப்பது உண்மை. சந்தர்ப்பம் வரும்பொழுது, புதைந்துள்ள எண்ணம் வெளிப்படுகிறது. எண்ணம் என்பதே கெட்டது, கெட்ட தன்மையுடையது என்று அன்னை சொல்வது உலகுக்குப் புதியது. நாம் கவனிக்க வேண்டியதாகும்.

நல்லெண்ணத்தால் மட்டும் மனதை நிரப்பினால் கெட்ட எண்ணத்திலிருந்து தப்பிக்கலாம்.

மாற்றத்தை நாம் தேடுவதால், நாம் எண்ணத்தைக் கடந்த சமர்ப்பணத்தை நாடுதல் பலன் தரும்.

மனிதனும், வாழ்வும் : மனிதன் தனக்குப் பாதுகாப்புத் தேடி குடும்பத்தை ஏற்படுத்தினான். வெளியிலுள்ளவர் அவனுக்கு எந்த நேரமும் தொந்தரவு செய்வார்கள். குடும்பம் அதிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. வருமானம் வருவது நிலையில்லை. வருவது நின்றுவிட்டால் ஆபத்து. அதைத் தவிர்க்க சொத்து சேகரம் செய்கிறான். சமூகத்தின் ஆதரவு, வீடு, குடும்பம், சொத்து, பென்ஷன், இன்ஷுரன்ஸ் போன்ற பல்வேறு பாதுகாப்புகளை அவன் தேடிக் கொண்டாலும், எப்பொழுதும் அவன் காண்பது என்னவெனில்,

எந்த நேரமும், எந்த விஷயத்திலும், வாழ்க்கைக்கு மனிதன் கட்டுப்பட்டவன், அடிபணிய வேண்டியது அவசியம்.

எந்த உயர்ந்த மனிதனும் வாழ்க்கைக்குக் கட்டுப்பட்டாக வேண்டும் என்ற நேரம் உண்டு. இன்றுவரை உலகம் அறிந்த சட்டம் இது. இதை மீற முடியாது; மீறலாம் என நினைக்கவும் முடியாது. உயர்ந்த நிலையில் எந்தப் பிரதமரும் எந்த நாட்டிலும், அடுத்த தேர்தல் நிச்சயமாக வெற்றி பெறுவார் என்று சொல்ல முடியாது; எளிய வாழ்வில் காணாமற்போன பொருளை நிச்சயமாகக் கண்டு பிடிப்பேன் என எவரும் கூற முடியாது. வாழ்க்கை மனிதனைக் கடந்தது. அவன் வாழ்வை ஓட்டிப் போக வேண்டும். எதிர்க்கவே முடியாது. ஒட்டிப் போகும் நிலையிலேயே வாழ்வு கட்டுப்படாது. எதிர்த்தால் உடனே வாழ்வு அழிக்கும்.

யோகத்திற்கு வாழ்வு விலக்கன்று; வாழ்வனைத்தும் யோகம் எனும் பூரணயோகம், பூரண யோகிக்கு வாழ்வைக் கட்டுப்படுத்துகிறது. அன்னையை ஏற்றுக்கொண்டவர்களுக்கு வாழ்க்கைக் கட்டுப்படும். மேற்சொன்னதுபோல் அவர்களை வாழ்வு மீறிப் போகாது. இதை எளிய செயலிலிருந்து, உச்சகட்டம்வரை உறுதியாகச் சொல்லலாம். காணாமற் போன பொருள் எதுவானாலும், அன்னையிடம் முறைப்படிப் பேசினால், தவறாமல் அது கிடைக்கும். எவ்வளவு உயர்ந்த தேர்தலானாலும், அன்னையை ஏற்றுக் கொண்டு தேர்தல் நின்றால் தோற்க முடியாது. வெற்றி நிச்சயம். இக்கருத்தில் உள்ள உண்மையைப் பல்வேறு முறைகளாக அறியலாம். அவற்றுள் ஒரு முறையை நான் கூறுகிறேன். நம் வாழ்வில் பிரம்மாவே வந்தாலும் முடியாது என்ற சிறு காரியங்கள் பல உண்டு. தவறாது லேட்டாக வரும் ஆசிரியர், குறைமட்டும் சொல்லும் மாமியார், எதையும் - எவ்வளவு நல்லதானாலும் - பிரியமாக ஏற்கமுடியாத கணவன், பொய்மட்டும் சொல்லும்

குழந்தை, பேரத்திற்கே பேர்போன மனிதர் போன்றவர்களைப் பற்றி நாம் வழக்கமாகப் பேசுவதை அறிவோம்.

  • எங்கள் ஆசிரியர் நேரத்தில் வரமாட்டார், வந்தால் மழை பெய்யும்.
  • இந்த மாமியார் குறை சொல்வதைத் தடுக்கும் சக்தி இவ்வுலகில் இல்லை.
  • என் கணவர் எதையும் பாராட்டிதை யாரும் பார்த்ததில்லை.
  • இக்குழந்தை வாயில் மெய்யும் வருமா? என்பது சந்தேகம்.
  • என் நண்பர் பஸ் டிக்கெட்டையும் பேரம் பேசுவார்!

இவர்கள் எல்லாம் ஒரு முறை மாறி நடந்தாலும் அது அவர்கள் உலகம் முழுவதும் உடனே பரவும். அன்னை கோட்பாடுகளைப் பின்பற்றினால், இவர்கள் மாறுவார்கள். நிரந்தரமாகப் பின்பற்றினால், நிரந்தரமாக மாறுவார்கள். இவர்கள் மாறுவதால் ஏற்படும் பலன் பெரிதன்று. இவர்களை மாற்றும் சக்தியை அன்னை கொண்டு வந்துள்ளார். இது போன்ற மனிதர்கள் மாறினால், கட்டுப்படாத வாழ்வு கட்டுப்படும். ஒருவர் வாழ்வில் சுமார் 50 இடங்கள் இது போன்றிருந்தால், அன்னை சக்தியால் ஒவ்வொன்றாக அத்தனையையும் அவர் மாற்றிவிட்டால், அவருக்கு வாழ்வு கட்டுப்பட்டது என்று பொருள். அதன்பின் அவருக்கு வாழ்வில் தோல்வி என்பதே இல்லை.

நாம் இது போன்றவர்களுடன் பழகும்போது, நமக்கும் இவர்கட்கும் உள்ள தொடர்பில் நம்மால் விட்டுக் கொடுக்க முடியாத இடம் உண்டு. மற்றவர்கள் விஷயத்தில் விட்டுக்

கொடுக்கும் இடத்தில், இவர்கள் விஷயத்தில் விட்டுக் கொடுக்க மனம் வாராது. பொதுவாக முதலாளி, கூட்டாளி, தம்பதிகள் விஷயத்தில் மனம் விட்டுக் கொடுக்க இசையாது. அதுவே முக்கியமான இடம். என்னைத் துப்புக் கெட்டவன் என்று யார் சொன்னாலும் மன்னிக்க முடியும், முதலாளி சொன்னால், மனம் பொறுப்பதில்லை; யார் என்னைச் சந்தேகப்பட்டாலும் பொறுத்துக் கொள்வேன், கூட்டாளியே சந்தேகப்பட்டால் பொறுக்க முடியாது என்பது நம் அனுபவம். அதுவே கருவான இடம்.

முதலாளிக்கு இரவு பகலாக வேலை செய்தேன், யாரும் முடிக்காத காரியங்களை இவருக்கு முடித்துக் கொடுத்தேன். எப்படி என்னைத் துப்புக் கெட்டவன் என்று சொல்வது என மனம் பொருமும். என் திறமையை மறைத்தால்தான் முதலாளிக்கு நல்லது. அதற்குரிய சன்மானம் கொடுக்காமலிருக்கலாம். அதனால் அப்படிச் சொல்கிறார், என்று நாம் புரிந்து கொண்டு கஷ்டப்படுகிறோம்.

முதலாளி நேர்மையில்லாதவர். அதனால் சன்மானத்தை ஏமாற்ற இப்படிப் பேசுகிறார் எனில் அதைச் சிப்பந்தி மாற்ற முடியாது. முதலாளிக்கும் அவருக்கும் உள்ள உறவில் முதலாளிக்கு வலிமை அதிகம். வலிமை பலிக்கும். இதை உலக வாழ்வில் மாற்ற முடியாது. அன்னை வாழ்வில் மாற்றலாம்.

கடமையை முதலாளிக்காகச் செய்வதற்குப் பதிலாக அன்னைக்காகச் செய்தால் அன்னை சக்தி நம்முள் செயல்படும். அது முதலாளியை விட வலிமையானது. மீண்டும் வலிமை ஜெயிக்கும்; இம்முறை அன்னை மூலம் நாம் ஜெயிப்போம். முதலாளி ஜெயிக்க மாட்டார். அதுபோல் செயல்படும்பொழுது முதலாளி பாராட்டினால், கம்பனியில் அனைவரும் ஆச்சரியப்படுவார்கள். மாமியார், மருமகள், ஆசிரியர், கூட்டாளி, முதலாளி அனைவரும் வாழ்வுக்கு

உட்பட்டவர்கள். அன்னை சக்தி அவர்களை வென்று வாழ்வை நமக்குக் கட்டுப்படுத்தும். எந்த உயர்ந்த மனிதனுக்கும் கட்டுப்படாத வாழ்வு, அன்னை பக்தர்களுக்கு கட்டுப்படும். இது உலகுக்குப் புதியது. வாழ்வு நமக்குக் கட்டுப்படுகிறது என்பதை வேறு வகையாகச் சொன்னால்,

  • நாம் செய்வது அனைத்தும் வெற்றி பெறும்,
  • நியாயமான நினைப்பு அத்தனையும் நடக்கும்.

நினைத்தவையெல்லாம் நடக்குமா என்ற உலகில், நினைத்தவையெல்லாம் நடக்கும் என்று நாம் காணலாம். நான் கூறும் மாற்றத்தின் திறன் இது.

எல்லா விஷயங்களிலும் அன்னை பலிப்பதைக் கண்டவர் தம் ஆபீசில் ஒரு பெரிய ஆபீசர் விஷயத்தில் பிரார்த்தனை பலிக்கவில்லை என்றபொழுது, அவருடைய அந்தஸ்து பெரியது, அதனால் பலிக்கவில்லை என்று புரிந்துகொண்டு, மனதால் அவரை அவர் அந்தஸ்திலிருந்து விலக்கினார். அதன்பின் இவர் பிரார்த்தனை பலித்தது. எல்லா இடங்களிலும் அன்னை பலிக்கும்பொழுது, மற்றவர் அந்தஸ்தை நம் மனம் ஏற்பதால் நமக்கு வலிமை இன்றி பிரார்த்தனை தவறுகிறது. அந்தஸ்து சமூகத்திற்குரியது. சமூகத்தில் அவர் உயர்ந்தவர், நாம் தாழ்ந்தவர். நம் எண்ணம் அவரிடம் பலன் தாராது. நாம் மனத்தால் சமூகத்தைவிட அன்னை உயர்ந்தவர் என்பதை ஏற்கும் நேரம், சமூகத்தை விட்டு நாம் அகன்று விடுகிறோம். நாமும், அவரும் அன்னையில் சந்திக்கின்றோம். அன்னை முன்பு,

  • அவர் தவறு செய்வதால், அவர் சிறியவர்.
  • அவர் பக்தரில்லை என்பதால், நமக்கு வலிமை அதிகம்.

நாம் பக்தர் என்பதாலும், நம் செயல் சரி என்பதாலும், அன்னை பலிக்கின்றார். மாமியார், மருமகள், கணவன், முதலாளி ஆகிய இடங்களில், நம் மனம் இவ்வுறவை விட்டகலாது. அகலாவிட்டால் நாம் வாழ்விலிருக்கிறோம். வாழ்வில் இவர்களுக்கு நம்மைவிட வலிமையுண்டு. தவறு செய்தாலும், பலிக்கும் அளவுக்கு இவர்கட்கு வாழ்வில் வலிமை உண்டு. நாம் மனத்தால் வாழ்வை விட்டகன்றால், அன்னைக்கு வருகிறோம். அன்னையிடம் தவறு பலிக்காது. இவர்கட்கு அன்னை மீது நம்பிக்கையில்லை என்பதால் அன்னை சக்தி இவர்கள் வாழ்வில் பலிக்காது. எனவே நமக்குப் பலிக்கும்.

  • மாமியார் மாற வேண்டுமானால் நாம் வாழ்வை விட்டகல வேண்டும்.
  • வாழ்வை விட்டகல நாம் மாமியார் செய்வதால் மனம் புண்படக்கூடாது.
  • மனம் புண்படுதல் வாழ்வுக்குரியது, அன்னைக்கு உரியதன்று.
  • மனம் புண்பட்டால், மாமியார் கை வலுக்கும்.
  • மனம் புண்படாவிட்டால் நாம் வாழ்வை விட்டகன்று விட்டோம்.
  • மனம் நிதானமாக இருந்தால், நாம் அன்னைக்கு வந்துவிட்டோம்.

வாழ்வில் மாமியாருக்கும், முதலாளிக்கும் வலிமையும், வெற்றியும் உண்டு. அன்னையில் நமக்கு வெற்றி எப்பொழுதும் உண்டு.

வாழ்வை விட்டு அன்னைக்கு வருவது மாற்றம்.

காலையிலிருந்து மாலைவரை நாம் செய்யுங்காரியங்களில் பேரம் பேசாமல் நல்ல விலை கிடைத்தால், வழக்கத்திற்கு



book | by Dr. Radut