Skip to Content

பகுதி 7

பிரின்சிபால் : இந்த ஆபீசருக்கு அன்னையைப் பற்றிச் சொன்னேன். உடனே ஆர்வமாக ஏற்றுக்கொண்டார். 10,000 ரூபாய் சம்பளம். சுத்தமானவர். இலஞ்சம் வாங்கமாட்டார். ஏராளமான கடன் தொல்லையால் அவதிப்படுகிறார்.

தாயார் : அன்னை ஆயிரம் வகைகளில் செயல்படுவார். இவர் சுத்தமானவர் என்பதால் உடனே பலிக்கும். தொல்லைகள் அற்றுப்போகும். கடன் இரு மடங்காக வளரும்.

பிரின்சிபால் : அப்படியொரு விஷயமிருப்பதாக நான் நினைக்கவில்லையே.

தாயார் : இவரே இலஞ்சம் வாங்குபவராக இருந்தால், அதிக இலஞ்சம் பெற்று கடன் உடனே தீரும்.

பிரின்சிபால் : பயமாக இருக்கிறதே.

தாயார் : நான் அவருக்குப் புரியும் வகையில் சொல்கிறேன்.

பிரின்சிபால் : அதற்குமுன் எனக்குப் புரியும்படிச் சொன்னால் தேவலை. என் மகன் விஷயத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.

தாயார் : உங்கள் மகன் உழைப்பாளி. இவர் ஊதாரி. அன்னை செயல்படும் வகைகள் அநேகம். இரண்டைச் சொல்கிறேன்.

1) அன்னையை அறிந்து, போற்றிப் பாராட்டி, மனத்தில் அவரை ஏற்றுக்கொண்டு எனக்கு அன்னை வேண்டும். அவர் தருவது போதும் என்றால், நாம் அவரை ஏற்பதால், நம்மைத் தவறு செய்ய விடமாட்டார். தவறு நம்மை அண்ட அனுமதிக்கமாட்டார். பக்தியை நம்பிக்கையாக்குவதால், அவர் நமக்குரியவற்றைப் பொறுக்கி, தேர்ந்தெடுத்துத் தருவார். பயமில்லை, பூரணப் பாதுகாப்பாயிருக்கும்.

2) அன்னை கொடுத்தால் போதும், எனக்கு என் வாழ்வை நடத்தத் தெரியும் என்பவர்க்கு, அன்னை பொருளையும், அதிர்ஷ்டத்தையும் அவரவர் பெறும் அளவுக்குக் கொடுக்கிறார். பெற்றவர் தம் இஷ்டப்படி, தான் பெற்றதை அனுபவிக்கிறார்.

பிரின்சிபால் : இவரை விடுங்கள். எனக்கு அன்னை செயல்படும் அத்தனை வகைகளும் தெரியவேண்டும். அது முக்கியம். நீங்கள் இவருக்குரிய பதிலைச் சொல்லியனுப்புங்கள். அவர் பெரிய எதிர்பார்ப்புடன் வந்திருக்கிறார்.

தாயார் : நாம் உள்ளதைச் சொல்லலாம். எவரையும் திருப்திசெய்ய முடியாது, கூடாது.

இருவரும் வந்து ஆபீசரைச் சந்தித்தனர்.

ஆபீசர் : என் கடன் தீருமா?

தாயார் : தீருமா என்பது பிரச்சினையில்லை, நிச்சயம் தீரும். தீரும் வகைகள் பல,

1) கடன் நியாயமாகச் செலவழிக்கப்பட்டிருந்தால், நியாயமான வழியில் பணம் வந்து தீரும்.

2) இலஞ்சம் வாங்குபவருக்கு அதிக இலஞ்சம் வந்து தீரும்.

3) கடனைப் பற்றிக் கவலைப்படாதவர்க்கு, மேலும் கடன் பெற்றுத் தீரும்.

ஆபீசர் : எப்படித் தீர்ந்தாலும் பரவாயில்லை, தீர்ந்தால் போதும்.

பிரின்சிபால் : அம்மா சொல்வதை சற்று நிதானமாகக் கேளுங்கள்.

தாயார் : கடன் ஏற்பட்ட மனப்பான்மை கடமை மனப்பான்மையானால், அல்லது இன்று கடமை மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால், பின்விளைவுகளிருக்காது. தற்சமயம் சிரமம் போக வேண்டுமானால், அது போய்விடும், பிறகு அதிகபட்சம் சிரமம் வரும்.

பிரின்சிபால் : அன்னையை நாம் தாயாகவோ, தெய்வமாகவோ, குருவாகவோ, மனச்சாட்சியாகவோ, கருவியாகவோ, சக்தியாகவோ, ஏற்கலாம். முதல் 4 வகைகளிலும் பின்விளைவுகளிருக்கா. ஏனெனில் பொறுப்பு அன்னையுடையது. கடைசி இரு முறைகளில் நாம் பொறுப்பை ஏற்கிறோம். அன்னை தருவது பொருள், செலவழிக்கும் பொறுப்பு நம்முடையது. இவருக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

ஆபீசர் : கடன்' கட்டுரையைப் படிக்கச் சொன்னார்கள். நன்றாக விளங்குகிறது. படித்தேன், பலனில்லை.

தாயார் : படித்தால் பலனிருக்கும் என்று எப்படிப் புரிந்துகொண்டீர்கள்?

ஆபீசர் : நானே வைத்துக்கொண்டேன்.

தாயார் : படித்தால் பிரச்சினையின் அம்சங்கள் விளங்கும். உங்களுக்கு என்ன விளங்கிற்று?

ஆபீசர் : பழைய கடன் அனுபவங்களை அன்னையிடம் கூறினால், அவை தீரும் என்று விளங்கியது.

பிரின்சிபால் : பழைய கடன் மனப்பான்மைகளை மாற்றினால் கடன் தீரும்' என்று கட்டுரை கூறுகிறது.

ஆபீசர் : மனப்பான்மை என்று என்ன இருக்கிறது? கடன் வாங்கினேன், தரமுடியவில்லை.

தாயார் : 10,000 சம்பளம் என்றால் 10 இலட்சம் 8 வருஷ வருமானம். சம்பளம் வட்டிக்கே பற்றாது.

ஆபீசர் : வட்டி 50,000 ரூபாய் மாதத்திற்கு. கடன் 7 இலட்சம், வட்டி 3 இலட்சம், சேர்ந்து 10 இலட்சம்.
பிரின்சிபால் : அப்பணத்தை என்ன செய்தீர்கள் என்று கூறவில்லையே. கல்யாணம் செய்தீர்களா, சொத்து வாங்கினீர்களா? எப்படித் திருப்பித் தருவது என்று வாங்கினீர்கள் எனக் கூறவில்லையே?

தாயார் : கொஞ்ச நாள் பொறுத்துப் பார்ப்போம்.

ஆபீசர் : நான் இங்கு வரும் வழியில் ஒரு நண்பர் வட்டியை சற்று உயர்த்தி முதலைக் கடனாகக் கொடுக்கிறேன் என்றார்.

தாயார் : நீங்களாக வாங்கினீர்களா? வேறு யாராவது தூண்டுதலால் வாங்கினீர்களா?

ஆபீசர் : மனைவிதான் பணம், பணம் என அரிப்பாள்.

தாயார் : நாம் பிறகு சந்திப்போம்.

ஆபீசர் போய்விட்டார். பிரின்சிபால் மேலும் அன்னையைப் பற்றி அறிய ஆசைப்பட்டார்.

தாயார் : நாங்கள் அடிமட்டத்திலிருந்தோம். எங்களுக்கு அதிர்ஷ்டம் வந்து உச்சாணிக்கொம்புக்குப் போக வாய்ப்பு வந்துள்ளது. எங்கள் குடும்பம் இந்த வாய்ப்பை எப்படி அனுபவிக்கப்போகிறது என்று நான் கவலைப்படுகிறேன்.

அதிருந்து பிரின்சிபால் வரும்பொழுதெல்லாம் தாயார் தம் குடும்ப விவகாரங்களைக் கணவரைக் குறிப்பிடாமல், குறையாகக் கூறாமல், சட்டமாகப் பேசுவார். பிரின்சிபால் அதை அதிகமாக ரசித்தார். ஓரிரு வாரங்கள் கழித்து, ஆபீசரும், அவர் மனைவியும் தாயாரைப் பார்க்க வந்தனர். பிரின்சிபாலும் வருவதாகக் கூறினார்கள். ஆபீசர் மனைவி வந்தவுடன் பொறுக்கமுடியாமல் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார். அவர் அழுது ஓய்வதற்குள் பிரின்சிபாலும் வந்துவிட்டார்.

பிரின்சிபால் : இவர் மனைவி படும் துயரம் சமாளிக்கமுடியவில்லை. அவருக்கு நல்ல வார்த்தை சொல்லக்கூடாதா?

தாயார் : கடன் வந்துவிட்டதே என்ற வருத்தம், இந்தத் தவற்றை செய்துவிட்டோமே என்றிருந்தால், கடன் கரைந்துவிடும்.

ஆபீசர் மனைவி: இந்தக் கடனுக்கு நானே முக்கிய காரணம். இப்பொழுது நினைத்தாலும் மனம் புழுங்குகிறது. எப்படிச் செய்தேன், என்ன செலவு செய்தேன் என்றே தெரியவில்லை. தீர வழியுள்ளது என்றால், நான் எதையும் செய்யத் தயார்.

தாயார் : அப்படியென்றால் கடன் முழுவதும் தீரும்.

ஆபீசர் மனைவி, தாயார் காலில் விழுந்து மீண்டும் அழுது தன்னைப்போல் அறிவிலிகட்கும் வழிகாட்டும் தெய்வம் உலகில் உண்டா என்று வியந்தார். அவருடைய அண்ணன் பல ஆண்டுகளுக்குமுன் குடும்பத்துடன் பேச்சுவார்த்தையில்லாமல் வெளிநாட்டிலிருப்பதாகவும், கடிதமும் எழுதுவதில்லை எனவும், இன்று காலையில் போனில் பேசி விசாரித்ததாகவும், "ஏன் வருத்தமாக இருக்கிறாய்?'' என விசாரித்துவிட்டு, கடன் சுமை என்று அறிந்து, "கவலைப்படவேண்டாம். நான் தீர்த்துவிடுகிறேன்'' என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

மனைவி : என் அண்ணன் சிக்கனம். அவர் மனைவி நல்லவர். தகப்பனார் விஷயத்தில் அண்ணன் மனம் கசந்து விலகிவிட்டார். எத்தனையோ வருஷங்களாகப் பேசவுமில்லை என்பதால், அவர் கூறியதை நான் பொருட்படுத்தவில்லை.

தாயார் : நம்பிக்கை அன்னையிடமிருந்து அண்ணனுக்குப் போனால் காரியம் நடக்காது. நம்பிக்கை அன்னை மீது மட்டுமிருக்கவேண்டும்.

மனைவி : அன்னையைத் தேடி வருவதால் அண்ணன் ஆதரவாகப் பேசுகிறார் என நினைத்தேன்.

பிரின்சிபால் : இந்த நேரம் அண்ணனை நம்பாமலிருக்க நம் நம்பிக்கை பெரிய நம்பிக்கையாக இருக்கவேண்டும். கடினம்.

தாயார் : (தம் குடும்பத்தை மனத்தில்கொண்டு) பாக்டரியை அன்னை கொடுத்தால், நம்பிக்கை அன்னையிடம் இருந்து பாக்டரிக்கு வந்தால், நம் பழைய அந்தஸ்திற்குரியது வருமே தவிர, அருளுக்குரியது வாராது.

மனைவி : நான் ஏற்கிறேன். ரொம்ப கஷ்டம்.

பிரின்சிபால் : அம்மா, நீங்கள் பேசுவதைவிட உங்கள் கணவர் பேசுவது அவசியம்.

ஆபீசர் : எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு சமயம் தீரும் என்கிறீர்கள், அடுத்த நேரம் எதிராகப் பேசுகிறீர்கள்.

மனைவி : எனக்குப் புரிகிறது. செய்தவர்களே மனம் மாறவேண்டும் என்கிறார் அம்மா.

தாயார் : அதுவே விஷயம். அது உண்மையானால் கடன் தீரும்.

மனைவி : அவரே கடன் வாங்கியிருந்தாலும், நானே முதற்காரணம் என நான் அறிவேன்.

தாயார் : கடந்ததை - மனப்பான்மையை - அன்னையிடம் சொன்னால் முழுப்பலன் இருக்கும்.

தாயார் சொல்லி முடிப்பதற்கும், ஆபீசர் மனைவிக்கு போன் வருவதற்கும் சரியாக இருந்தது. அவர் அண்ணி கொஞ்ச நாளாக சென்னையிலிருப்பதாகவும், அன்று காலை அண்ணனிடம் பேசியதாகவும், கடன் சுமையைப் பற்றியும், தங்கை தன் உதவியை ஏற்க மறுத்ததையும் தன்னிடம் கூறியதாகக் கூறி மேலும் பேசினார்,

அண்ணி : கொஞ்ச நாளாக உங்கள் அண்ணன் மனம் மாறி வருகிறது. தகப்பனாரிடம் தான் கசந்தது சரியில்லை என உணர்கிறார். இனியும் குடும்பத்தைவிட்டுத் தூர இருக்கக்கூடாது என்றும் கூறுகிறார். நான் இதை இவ்வளவு நாளாகக் கூறியதை ஏற்காதவர், இப்பொழுது மனம் மாறிப் பேசுகிறார்.

ஆபீசர் மனைவி: நான் எதுவும் அண்ணனிடம் தவறாகப் பேசவில்லையே.

அண்ணி : உங்களுக்குச் சுமை ஏற்பட்டுவிட்டது எனக் கேட்டு வருத்தப்பட்டவர், இதுவே தான் குடும்பத்திற்கு சேவை செய்யும் வாய்ப்பு என நினைத்தார். அவர் கூறியதை நீங்கள் ஏற்க மறுத்தது அவருக்கு மனம் தளர்ந்துவிட்டது. பிறகு என்னிடம் பேசினார். நான் கூறுவது இதுதான், "இனி குடும்பம் பிரிந்திருக்க நாங்கள் சம்மதிக்கவில்லை. உங்கள் கடன் குடும்பப் பொறுப்பு. நாம் மீண்டும் சேரவேண்டும்''. தீர யோசனை செய்து என்னிடம் கூறுங்கள்.

அவர் பிரின்சிபாலிடமும், அம்மாவிடமும், தான் பேசியதைக் கூறினார். மேற்கொண்டு பேசினர்.

தாயார் : நீங்கள் கூறுவது அசரீரியாக இருக்கிறது. அன்னை இப்படியே செயல்படுகிறார் என்றாலும், என்னுடைய அனுபவத்தில் இது ஆச்சரியமானது. இது நடக்கிறது என்றால் உங்கள் மனமாற்றம் உண்மையானது எனப் படுகிறது.

பிரின்சிபால் : அம்மா, இதெல்லாம் பண விஷயம். நல்ல வார்த்தை வாராது. வந்தால் செயல்பட வேண்டும். உஷாராக இருப்பது எப்படி?

மனைவி : இந்த நேரம் நம்பிக்கை தடம் மாறக்கூடாது என்று அம்மா கூறினார்களே. என் மனம் போரிடுவது எனக்குத்தான் தெரியும். அதுவும் அண்ணி பேசியபின் அன்னை மறந்துவிடும் போலிருக்கிறது. இது சரியான மனோவிரதம். நான் செய்கிறேன்.

தாயாரை பெண் வந்து அழைத்தாள். பெரியவன் கூப்பிடுவதாகக் கூறினாள். பெரியவன் விஷயத்துடன் வந்திருக்கிறான், நிலை குலைந்திருக்கிறான். பார்ட்னருடன் கலெக்டரைப் பார்க்கப் போயிருக்கிறான். அடுத்த வாரம் கவர்னர் தரும் விருந்திற்கு பார்ட்னரையும், பெரியவனையும் அழைத்திருக்கிறார்கள். "அண்ணன் அண்ணனாக இல்லை. நீங்களே வந்து பாருங்கள்'' என்றாள் பெண். பெரியவன் : அம்மா, எனக்குப் புது டிரஸ் வேண்டும். கவர்னர் மாளிகைக்குப் போகவேண்டும்.

தாயார் : அப்பாவைக் கேட்டாயா?

பெரியவன் : நீங்கள் சொல்லுங்கள்.

தாயார் : கவர்னர் மாளிகைக்குப் போக உனக்கு ஏற்கனவே வாங்கிய புது டிரஸ் இருக்கிறதே. கான்வகேஷனுக்கு வாங்கியதுதானே

பெரியவன் : பெரிய அழைப்பாயிற்றே, புது டிரஸ் வாங்கக்கூடாதா?

தாயார் : அப்பாவைக் கேட்போம்.

ஆபீசரும், அவர் மனைவியும், பிரின்சிபாலை விட்டுவிட்டு வீடு திரும்பினர். பிரின்சிபாலுடன் தாயார் பேசினார்.

தாயார் : கவர்னர் மாளிகைக்குப் போக பையன் புது டிரஸ் கேட்பது தவறன்று.

பிரின்சிபால் : அவனுக்குப் பெரிய நேரம். சின்ன பையன், ஆசைப்படுகிறான்.

தாயார் : எனக்கு ஆட்சேபணையேயில்லை. புது டிரஸ் என்றால் என்ன செய்வான் என எனக்குத் தெரியும். ஒரு செட் டிரஸ் வாங்க இன்று அவருடைய 1 மாத சம்பளத்தைப் பையன் செலவிடுவான். அவர் இன்னும் வேலையை விடவில்லை. உத்தியோகம் சிறியது. இவர் பக்தரானதால் பார்ட்னர் இவரைச் சேர்த்துக் கொண்டார். என் கணவர் ஊதாரியில்லை. ஆனால் அவருக்குப் பையன் சொல்வதும், செய்வதும் சரி எனப் படும். அன்னை நம் செயலைவிட நம் மனநிலைக்குப் பரிசு அளிப்பார்.

பிரின்சிபால் : தெளிவாக இருக்கிறது. மனநிலை ஆசை, ஊதாரித்தனம். செயல் தவறன்று.

தாயார் : பாக்டரியில் பார்ட்னராகும் தகுதி பையனுக்கில்லை. அவன் பெற்ற B.E. பட்டத்திற்கு இன்றைய மார்க்கட்டில் வேலை கிடைக்காது. கிடைத்தால் இவன் வாங்க விரும்பும் டிரஸ் விலையில் பாதி அல்லது கால் பாகம் சம்பளம் வரும். நான் எடுத்துச் சொல்லலாம், பையன் கேட்கமாட்டான். நான் மறுக்கலாம், கவர்னர் மாளிகையின் சந்தோஷம் போய்விடும்.

பிரின்சிபால் : இதற்கு என்ன வழி?

தாயார் : வழி அப்புறமிருக்கட்டும். இந்த நேரம் நமக்கு choice உண்டு. நல்ல மனநிலையை நாம் தேடினால் வந்தது நிலைக்கும், பெருகும். அல்பமாக ஆசைப்பட்டால் வந்தது போகும், அல்லது தடைப்படும்.

பிரின்சிபால் : அன்னை பெரிய சக்தி. இந்த இடத்தில் எத்தனை பேர் தேறுவார்கள்? 100இல் ஒன்றும் தேறாது. நீங்கள் ஒன்றும் செய்ய முடியாதா?

தாயார் : அவனுக்காக நான் விரதமிருந்தால், வரப்போகும் தவறு வாராது.

பிரின்சிபால் : ஓஹோ, தவிர்க்க வழியிருக்கிறதா?

தாயார் : நிச்சயமாக உலகில்லாதபடி அன்னையிடம் வழியுண்டு. ஆனால் அவன் சுபாவம் மாற நான் ஏதும் செய்ய முடியாது.

பிரின்சிபால் : புரியலை.

தாயார் : ஒரு செட்டியார் கடையை மூட இருக்கும்பொழுது பையன் அதைத் தவிர்த்தான் என்று படித்தது நினைவு வருகிறதா?

பிரின்சிபால் : விலை போகாத சரக்கை 50 நாள் வியாபாரத்திற்கு இணையான தொகைக்கு தகப்பனார் ஏமாந்து வாங்கினார். பிரார்த்தனையால் மகன் விற்றான். தகப்பனார் சரக்கு உயர்ந்தது எனப் புரிந்துகொண்டு இரு மடங்குகளாக வாங்கி, வியாபாரம் முடங்கிவிட்டது.

தாயார் : சுபாவம் மாறாதவரை, பிரச்சினை தீராது. மற்றவர் பிரார்த்தனை பிரச்சினையை ஒத்திப்போடும். ஆனால் ஒவ்வொரு முறையும் பிரச்சினை பெரியதாகும்.

பிரின்சிபால் : சாதாரண வாழ்வில் வாய்ப்பே வருவதில்லை என்பதால் பிரச்சினைக்கே வழியில்லை.

தாயார் : நான் ஆழ்ந்து மாறினால் என் மகனுடைய சுபாவமும் மாறும்.

பிரின்சிபால் : அது முடியுமா?

தாயார் : முடியும். அது பிரம்மப் பிரயத்தனம். அதுவும் ஓரளவு செய்யலாம். அவனே பொறுப்பானால் அவனது சிறு முயற்சி பலன் தரும். அதற்குப் பதிலாக நாம் முயலவேண்டுமானால் பெருமுயற்சி எடுக்கவேண்டும்.

பிரின்சிபால் : புரிகிறது. அவரவர் வேலையை அவரவர் செய்வது எளிது.

தாயார் : எனக்குத் தெரிகிறது. இன்று வாராத வாய்ப்பு வந்துள்ளது. ஏற்றுப் பாராட்டினால் முதல் நிலை குடும்பமாக வரலாம். அலட்சியமாக, சில்லரையாக இருந்தால் புஸ்வாணம்போல் போகும்.

பிரின்சிபால் : உள்ளதும் போகும்.

தாயார் : உள்ளது போகாது. அப்படியும் நம் பழைய நிலை உயர்ந்திருக்கும். துரோக மனப்பான்மைக்குத்தான் உள்ளதும் போகும்.

பிரின்சிபால் : என் மகன் இவ்வளவு பெரிய முன்னேற்றத்தைப் பார்த்துவிட்டு அன்னையை மறந்துவிட்டானே.

தாயார் : பெரும்பாலோர் முதற்பயன் வந்தவுடன் தூரப் போய்விடுகிறார்கள்.

பிரின்சிபால் : ஏன்?

தாயார் :Receptivity இருப்பதில்லை. பெறும் தகுதி வேண்டாமா?

பிரின்சிபால் : சமர்ப்பணம் செய்தேன். அற்புதமான பலன் வருகிறது. ஆனால் அடுத்தமுறை மறந்துவிடுகிறது.

தாயார் : சமர்ப்பணத்தைப் பற்றி 267 செய்திகள் - ஆங்கிலத்திலும், தமிழிலும் - வெளிவந்துள்ளன. படிக்க நன்றாக இருக்கும்.

பிரின்சிபால் : நான் அதைப் படித்துவிட்டு உங்களிடம் பேசுகிறேன். அதிலிருந்து ஏதாவது சொல்லுங்களேன்.

தாயார் : என் பையன் புது டிரஸ் வாங்குவதைப் பற்றி நான் குறைப்பட்டேன். நான் குறைப்படுகிறேன் எனில் அவன் கூறியதை நான் ஒரு விஷயமாக எடுத்துக்கொண்டேன். எடுத்துக்கொண்டவுடன் என் அறிவு செயல்படுகிறது. நான் குறை சொன்னேன். என்ன பலன் வரும்? என் அறிவுக்கேற்ற பலன் வரும். அவன் புது டிரஸ் வாங்குவான். அதற்கேற்ற சிரமம் பாக்டரியில் வரும். "அப்பவே நினைத்தேன்'' என்று எனக்குத் தோன்றும்.

பிரின்சிபால் : வேறென்ன செய்ய முடியும்?

தாயார் : அவன் சொல்லியதை நான் மனதில் வாங்குமுன் சமர்ப்பணம் செய்திருந்தால், பிரச்சினை அன்னைக்குரியதாகும். அவனால் புது டிரஸ் வாங்க முடியாது. அவன் மனம் மாறும். அது மிகச் சிரமம்.

பிரின்சிபால் : அவனையும் சேர்த்து சமர்ப்பணம் செய்வதாகும்.

தாயார் : அதற்கும் ஒரு லிமிட் உண்டு. அளவில்லாமல் செய்ய நாமே ஆண்டவனாக இருக்கவேண்டும். அதுபோல் 12 பேரிருந்தால் உலகம் தானே மாறும்.

பிரின்சிபால் : என் மகன் மனம் மாற நான் பிரார்த்தனை செய்தால்,.....

தாயார் : அவனே அன்னையை ஏற்றுக்கொள்வான். அது தொடர்ந்த முன்னேற்றம். 4 சகோதரர்களைப் பற்றி நான் சொல்லியிருக்கிறேன். வாய்ப்பு அனைவருக்கும் ஒன்றாய் வந்தது. முதல்வன் 100 கோடி வியாபாரம் செய்து அதை அழித்தான். அடுத்தவன் 3 கோடிக்கு வந்து 4 கோடி கடனானான். மூன்றாம் பையன் வியாபாரமே செய்யாமல் 10 கோடி கடன் வாங்கி மாமனார் கொடுத்தார். நான்காம் பையன் 400 கோடிக்கு விற்கிறான். எல்லாம் 10 வருஷ காலத்தில்.

பிரின்சிபால் : இவர்கள் அன்னை பக்தர்களா?

தாயார் : இல்லை. ஒருமுறை மறைமுகமான தொடர்பு, இத்தனையும் செய்தது.

பிரின்சிபால் : மறைமுகமான தொடர்புக்கு இவ்வளவு பலன் உண்டா?

தாயார் : நேரடியான தொடர்பில் குறைப்பட, பொறாமைப்பட, துரோகம் செய்ய வாய்ப்புண்டு. தொடர்பேயில்லை எனில் இவற்றிற்கெல்லாம் வழியில்லை. தவற்றிற்கு வழியில்லை எனில் நல்லவனுக்கு நல்லது நடக்கிறது. மற்றவர்க்கு சுபாவம்போல் பலன் தருகிறது. பிரின்சிபால் : தொடர்ந்த முன்னேற்றம் பெற்றவருண்டோ?

தாயார் : மறைமுகமான தொடர்பு நல்லவர்க்கேற்பட்டால் அது உண்டு. நேரடியான தொடர்பில் ஒரு சிலர் இந்தச் சகோதரர் பெற்றதைச் சிறியதாக்குவதுபோல் சம்பாதிக்கிறார்கள்.

பிரின்சிபால் : எப்படி?

தாயார் : அடக்கம் அளவுகடந்திருந்தால் அதுவும் பலிக்கும்.

பிரின்சிபால் : எனக்கு என்ன சொல்கிறீர்கள்?

தாயார் : நீங்கள் அதிகம் படித்தவர்கள். நான் உங்களைக் கேட்க வேண்டும்.

பிரின்சிபாலும், தாயாரும் தனித்து சந்தித்து தங்கள் குடும்ப விவகாரங்களை அன்னை கோட்பாடுகள்படி எப்படிச் சமாளிக்கலாம் என முடிவு செய்ய விரும்பினார்கள். இருவரும் அது சம்பந்தமான கீழ்க்கண்டவற்றைப் பற்றி, மீண்டும் ஒருமுறை அன்னை புத்தகங்களைப் பார்த்தும், சிந்தனை செய்தும் பிறகு சந்திப்பதாக முடிவு செய்தனர்.

  • பெரிய வாய்ப்பு சிறிய குடும்பத்திற்கு வந்தபின் எப்படிக் காப்பாற்றுவது?
  • பலன் வந்தபிறகு, அன்னையை மறந்த மகனை எப்படிப் புரிந்து கொள்வது?
  • சூழ்நிலையின் தன்மையைக் கணிப்பது எங்ஙனம்?
  • இவ்விஷயங்களில் பிறர் கோணத்தில் எப்படித் தெளிவு பெறுவது?
  • மேற்சொன்ன விஷயங்களில் Life Response ஏற்படுத்த என்ன செய்யலாம்?
  • தமக்குள்ள correspondenceஐ எப்படி நிர்ணயிப்பது?
  • சிறு விஷயம் சூடானால் போகும் வழி எது?
  • எந்த அளவுக்குக் குடும்ப விஷயங்களை அடுத்தவரிடம் கூறலாம்?
  • புரிந்தபின், புரிந்தவற்றை எந்த அளவுக்கு, எந்த முறையில் செயல்படுத்துவது?

அவர்கள் மீண்டும் சந்திக்கும்வரை நடக்கும் நிகழ்ச்சிகளைத் தங்கள் வாய்ப்புகளை விளக்கும் சின்னமாகக் கருதுவதாகவும் முடிவு செய்தனர். ஒருநாள் இருவரும் மலர்ந்த முகத்துடன் சந்தித்தனர்.

பிரின்சிபால் : வாழ்க்கை முழுவதும் வாய்ப்புமயமானது என்பதே என் ஆராய்ச்சியின் முடிவு.

தாயார் : நம் மனம் பற்றாக்குறையாக இருப்பதை உலகில் பொருள்களின் பற்றாக்குறையாக நாம் கருதுவது சிறுபிள்ளைத்தனம். பெறுவதை நாம் அறிந்தபடி பெறவேண்டும் என வற்புறுத்தாமல், பெறக்கூடிய முறையை நம் மனம் ஏற்றால் உலகில் பற்றாக்குறை என்பதில்லை என விளங்குகிறது.

பிரின்சிபால் : நாம் அருளைப் பெற நம் மனம் விசாலமடையவேண்டும் என்பது எந்தக் கோணத்தில் பிரச்சினையைக் கருதினாலும் புரிகிறது.

தாயார் : அகண்ட பூமியில் அலைமோதும் காற்றோட்டம் நம்மை அரவணைப்பதை நாம் மறுத்து அறைக்குள் கதவைத் தாளிட்டு, புழுங்குகிறது என்பதே மனித வாழ்வில் பற்றாக்குறை.

பிரின்சிபால் : நாம் உலகைக் குணத்தின்மூலம் அணுகினால் குணத்திற்குரியதைப் பெறுகிறோம். பற்றாக்குறை, பிரச்சினை, ஆகியவை நம் குணம் நமக்களிப்பது. உலகம் பரந்து கிடக்கிறது. இறைவன் அதனுள் சொர்க்கமாக விரிந்து மலர்கிறான். நாம் உலகிலும், இறைவனிலும், நம்மையும், நம் குணத்தையும் கண்டு, பற்றாக்குறையை உற்பத்தி செய்கிறோம். என் மகன் 8 கோடியை எப்படி எட்டினான், எப்படி 28 இலட்சம் ஒரே மூச்சில் 8 கோடியாயிற்று என்பதை மறந்துவிட்டான். என் ஆராய்ச்சியில் நான் கண்டது என் மகனுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் 30 மடங்கு முன்னேற்றம் காத்திருப்பதைக் கண்டேன். அவன் காண மறுக்கிறான்.

தாயார் : அன்னையை அற்புதம் என அறிவோம். அபரிமிதம் எனக் காண்பதில்லை. அன்னை அனந்தம் என்பது வெறுஞ் சொல்லன்று. நமக்காகக் காத்திருக்கும் அனுபவம். அழகொழுக, அன்பொழுக காத்திருப்பதை நம் குணம் காண மறுக்கிறது. பிரச்சினையாகக் காண மறுக்கிறது. நாம் பிரம்மம், உலகம் பிரம்மம், பிரச்சினையைப் பிரம்மமாகக் கண்டால், பிதிராஜ்யம் புரியும். நம் பார்வை குறுகியது. அது விசாலப்பட வேண்டும். மனநிலை மதர் நிலையாக வேண்டும். நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது.

பிரின்சிபால் : என் மகன் சரக்கை மார்க்கட் விரும்புகிறது. தேடி வருகிறது. மற்ற சரக்கைப் புறக்கணித்து இந்தச் சரக்கை மார்க்கட் தேடுகிறது என்பதைவிட அபரிமிதத்தை எப்படிப் புரிய வைக்கிறது? தேடி வருவதை நாடிப் போவது அபரிமிதமன்றோ!

தாயார் : நாம் செய்வது விவசாயமானாலும், வியாபாரமானாலும், நடத்துவது பள்ளியானாலும், நாம் நாடிப் போகவேண்டியது நம்மைத் தேடிவருவதைக் காண்கிறோம். வாய்ப்பு பெரியது, குடும்பம் சிறியது. நம் மனம் சிறியது. குறுகிய மனம் தானே விரும்பி, மலர்ந்து, விரிந்து, பரவி, பெரியதாக விழைவதே பக்தி, நம்பிக்கை.

பிரின்சிபால் : நாம் ஒரு நாள் அடக்கத்தைப் பற்றிப் பேசினோம். எனக்குப் படிக்கப் படிக்க புரிகிறது.

அன்னைக்கு அடங்குவது அதிர்ஷ்டம். அன்புக்கு அடங்குவது அருள். அடுத்தவர் அன்புக்கு அடங்குவது பேரருள். அடுத்தவர் அதிகாரத்தை அன்பாக அறிந்து அடங்குவது அன்னையின் அருள் அன்பரில் பேரருளாவது. தாயார் : நம் அளவில் அருள் சுருங்காமல் காப்பாற்றலாம். அதற்குமேல் நாம் செய்வதற்கொன்றில்லை.

பிரின்சிபால் : காப்பாற்ற வேண்டும் என்றால் பொய் சொல்லக்கூடாது.

தாயார் : அந்த ஒரு விஷயத்தில் எவரும் தேறமாட்டார்கள். நாம் தேறவேண்டும்.

பிரின்சிபால் : சத்தியம் வெளிவர சத்தம் கூடாது. சத்தமாகப் பேசினால் சத்தியம் அதன்மூலம் வெளிவாராது.

தாயார் : மனத்தில் சத்தமிருந்தால், ஒரு நாள் வாயால் வரும்.

பிரின்சிபால் : உள்ளே எரிச்சலிருந்தால், வெளியே சத்தம் கேட்கும்.

தாயார் : புரியவில்லை என்றாலும், சத்தம் அதிகமாகும். பிரின்சிபால் : பிடிக்கவில்லை என்றால் புரியாது. புரியாது எனத் தோன்றும்.

தாயார் : விஷயத்தைப் புரிந்துகொள்வதில்லை. நமக்குப் பிடித்தபடிப் புரிந்துகொள்கிறோம்.

பிரின்சிபால் : அடுத்தவர் கோணத்தில் புரிந்துகொண்டால், இக்குறைகள் வாரா.

தாயார் : என் மகன், மகள், கணவர் கோணத்தில் எனக்கு அறிவில்லை என்பார்கள்.

பிரின்சிபால் : ஏன் அவர்கள் அப்படி நினைக்கிறார்கள்? என்று புரிந்துகொண்டால்....

தாயார் : அவர்கள் அறியாமையைப் புரிய முனைந்தால்....

பிரின்சிபால் : இருவரும் ஒன்றுதானே. அவர் அறியாமை என்பது நம் அறியாமையாயிற்றே.

தாயார் : பிறர் அறியாமையை ஆராய்ச்சி செய்தால், நம் அறியாமை விளங்கும். அதன்பிறகு சத்தம் எழாது. சத்தியம் வெளிப்படும் என்கிறீர்களா?

பிரின்சிபால் : நான் அதை என் மகன் விஷயத்தில் செய்து பார்த்தேன்.

தாயார் : என்ன புரிந்தது?

பிரின்சிபால் : 30 மடங்கு வியாபாரம் பெருகிக்கொண்டேயிருந்தால் எப்படி வேலை செய்வது என்பது அவன் பிரச்சினை.

தாயார் : அதற்காக அந்த வாய்ப்பை விட்டுவிடலாமா?

பிரின்சிபால் : அவன் வேண்டாம் என்று கூறவில்லை. என்னைப் பார்த்துக்கொள்ளச் சொல்கிறான். அதற்கப்புறம்தான் எனக்குப் புரிந்தது. 30 மடங்கு தொழில் விரிவுபட்டால், அவனுடைய முயற்சிக்கு ஆதரவாக நான் 30 மடங்கு மனத்தைப் பெரிதுபடுத்தவேண்டும். அது என்னால் முடியவில்லை. அம்மா, நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறான்.

தாயார் : யோசனை செய்தால் புரிகிறது. நானும் அப்படிச் செய்தால், என் நிலைமை எனக்குத் தெரியும். என்

முயற்சி எல்லாம் குடும்பத்துடன் முடிகிறது. அன்னை வரைக்கும் போவதில்லை.

பிரின்சிபால் : அன்னையே முதல், மூலம். நாம் அங்கு லிமிட் வைத்தால், மகன் தொழில் லிமிட் வைக்கிறான்.

தாயார் : நாம் அந்த லிமிட்டை எடுத்தபின், குடும்பம் சரி வருமா?

பிரின்சிபால் : சரி வாராவிட்டால், முடிவாகச் சரி வரும். பொறுமை வேண்டும்.

தாயார் : எனக்கு மனம் பொருமுவதால், பொறுமை போய்விடுகிறது.

பிரின்சிபால் : இது புரியும்வரை இருந்த எரிச்சல், புரிந்தபிறகு குறைகிறது.

தாயார் : புரிந்தபின்னும், குறைந்தபின்னும், மனம் மற்றவர்களையே எதிர்பார்க்கும்.

பிரின்சிபால் : மூலமும், முடிவும் அன்னை. அந்த அன்னையை நம்முள் காணவேண்டும் என்று தோன்றுவதில்லை.

தாயார் : எந்தக் கட்டத்தில் எரிச்சல் வந்தாலும், காரியம் அங்குக் கெடும்.

பிரின்சிபால் : எரிச்சல் வாராவிட்டால் விரக்தி வருகிறது. எதிர்பார்ப்பு வருகிறது.

தாயார் : எரிச்சல், விரக்தி, எதிர்பார்ப்பு, என்று சுழன்று, சுழன்று வரும். நிற்காது.

பிரின்சிபால் : அத்தனையும் ஒரு நாள் செய்து பார்த்து சற்று வெற்றி கிட்டியபின் மகன் வந்து தன் இஷ்டத்தை எதிராக வலியுறுத்தினான்.

தாயார் : நான் சில சமயங்களில் அக்கட்டத்திற்கு வந்திருக்கிறேன். அப்பொழுது பொறுமையிருக்காது.

பிரின்சிபால் : முடிவுள்ளது பொறுமையன்று. முடிவில்லாத பொறுமையே பொறுமை என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் பொழுதும் எரிச்சல் ஏராளமாக எழுகிறது.

தாயார் : சரி, இப்பொழுது புரிகிறது. பிறரை எதிர்பார்ப்பதைவிட, குறை கூறுவதைவிட, முடிவில்லாததைக் கண்டுபிடிக்க வேண்டும். அதை எங்குக் கண்டுபிடித்தாலும் சரி, பொறுமையில் கண்டாலும், சத்தியத்தில் கண்டாலும், மௌனத்தில் கண்டாலும் சரி, முடிவற்றதைக் - பிரம்மத்தை - காணாமல் நாம் பேசக்கூடாது, நினைக்கக்கூடாது.

பிரின்சிபால் : முடிவற்றதைச் செயல் காண்பது அதிர்ஷ்டமான அருள்.

தாயார் : இப்படிச் சொன்னால் சரணாகதி புரிகிறது. சரணாகதியே அதை அடையும் மார்க்கம்.

பிரின்சிபால் : வேறெதற்கும் அத்திறனில்லை.

தாயார் : பிரம்மம் எல்லாப் பொருள்களிலும் உள்ளது. எல்லாப் பொருள்களும் பிரம்மத்தில் உள்ளன. எல்லாம் பிரம்மம் என்பது நடைமுறைக்கு வரவேண்டும்.

பிரின்சிபால் : அதற்குக் குறைந்து முழுமையில்லை. முழுமையில்லை எனில் ஸ்ரீ அரவிந்தமில்லை. நமக்கே நாம் காட்டாத பிரம்மத்தை நம் மகனிடம் தேடுவது அறியாமை.

தாயார் : ஸ்ரீ அரவிந்தரை Silent God மௌனமான கடவுள் என்பார்கள். நாமும் அதைப்போலாக வேண்டுமா?

பிரின்சிபால் : நம் குறை புரிகிறது? நாம் முழுமையைப் பகுதியில் தேடுகிறோம்.

தாயார் : முழுமையை முழுமையில் தேடினால் அறியாமை அறிவு எனப் புரியும்.

பிரின்சிபால் : பிறர் அறியாமையை அறிவு எனப் புரிவது அறிவு. நாம் அதை மாற்றி நம் அறியாமையை அறிவு எனக் கொண்டு தவிக்கிறோம்.

தாயார் : இதை மனமும், செயலும் ஏற்கவேண்டும்.

பிரின்சிபால் : ஒரு க்ஷணம் இதைக் கண்டேன். என் மனம் இதை ஏற்றபொழுது அந்த நேரம் என் மகன் பொருத்தமாகப் பேசுகிறான். அடுத்த நிமிஷம் மாறிவிடுகிறான். தாயார் : செயல் இதை நிரந்தரமாக ஏற்கவேண்டும் என்பது formula

பிரின்சிபால் : ஒருமுறை ஏற்றால், 99 முறை தவறுகிறது.

தாயார் : நமக்கு வேலை அந்த இடமா? அதுதான் எனக்கு இத்தனை நாளாகப் புரியவில்லையா?

கணவரும், பார்ட்னரும், பெரியவனும் வேகமாக உள்ளே வந்து பிரின்சிபால் இருக்கும்பொழுது, "கவர்னர் பாக்டரியைத் திறந்து வைக்க ஏற்றுக்கொண்டார்'' எனப் பதட்டத்துடன் ஒரே மூச்சில் கூறினர். எனக்கும், பிரின்சிபாலுக்கும் நாங்கள் செய்த ஆராய்ச்சி புரிந்தது.

பிரின்சிபால் : (தாயாரிடம்) எதுவும் நடக்கும் எனப் புரிகிறது. தாயார் : அது முதல் வெற்றி, முழுமையான வெற்றி. அது நீடிப்பது...,

பெரியவன் : அம்மா, இவர்கள் இருவரும் எல்லாம் உங்களால்தான் நடக்கிறது என்கிறார்கள் அம்மா. என்னம்மா அப்படி செய்கிறீர்கள்? எனக்கு நீங்கள் எப்பொழுதும்போலவே தெரிகிறீர்கள்.

பார்ட்னர் : இதெல்லாம் நடப்பது பெரியது. நடத்தியபின் என்றும்போல இருக்க ஒருவர் பிரம்மமாக வேண்டும்.

கணவர் : டேய், அம்மாவை நமக்குச் சரியாகப் புரியவில்லை இன்னும்.

பெரியவன் : எனக்குப் புரியும்படிச் சொல்லுங்களேன்.

கணவர் : நீ அம்மாவை வெறும் அம்மாவாக நினைக்கிறாய்.

பெரியவன் : எனக்கு வேறொன்றும் தெரியவில்லையே.

பார்ட்னர் : அம்மாதான் உங்கள் அனைவருக்கும் முக்கியம். ஏன் நம் அனைவருக்கும் முக்கியம். அம்மா அன்னையைக் கும்பிடுவதால்தான் நமக்கு பாக்டரி ஆரம்பிக்க முடிகிறது.

பெரியவன் : அம்மா என்ன இன்ஜினீயரா?

பிரின்சிபால் : இதுபோல் பேசுவது தவறு.

கணவர் : நீ இப்படிப் பேசுவதையும் மீறி நல்லது நடக்கின்றதற்கு ஒருவர் வேண்டுமன்றோ? நல்லதைச் சாதிக்கலாம், குதர்க்கத்தை வெல்ல முடியாது.

பிரின்சிபால் : குதர்க்கம் தன்னை வெல்ல முடிவு செய்யும்வரை பிறரால் குதர்க்கத்தை வெல்ல முடியாது.

பெரியவன் : அம்மாவுக்கும் பாக்டரிக்கும் என்ன சம்பந்தம்?

பார்ட்னர் : அம்மா வீட்டில் அன்னையை வணங்குவதால் அன்னை நமக்குப் பாக்டரி லைசென்ஸ் தருகிறார்.

(அனைவரும் கலைந்தனர்).

பாங்கில் பாக்டரி இன்ஜினீயரைப் பார்க்க வேண்டும் என்றனர். அவருடைய டிகிரியைப் பார்க்கவேண்டும் என்றனர். டிகிரியைக் காணோம். டிகிரியை வைத்த இடத்தில் காணோம். யூனிவர்சிட்டிக்குப் போய் நகல் வாங்கிவரப் போனான். அவன் ஏராளமாகப் பணம் கேட்கிறான். சாதாரணமாக இந்த நகல் கிடைக்க 6 மாதமாகும். பணம் கொடுத்தால் உடனே தருவதாகச் செய்தி. பெரியவன் பணம் கொடுத்து நகலைப் பெறவேண்டுமென்கிறான். பார்ட்னருக்கும், கணவருக்கும் சம்மதம். எதற்கும் அம்மாவையும், பிரின்சிபாலையும் கேட்கவேண்டும் என்றனர். பெரியவனுக்குப் பிடிக்கவில்லை. பேசாமலிருந்தான்.

அனைவரும் சந்தித்தனர். கணவர் விவரங்களைக் கூறினார்.

கணவர் : அன்னை பணம் கொடுப்பதைப் பற்றி என்ன சொல்கிறார்?

தாயார் :

  1. அது சரியில்லை.
  2. நேரம் வந்தால் கொடுப்பதும் தவறில்லை.
  3. ஒரு முறை பணம் கொடுத்தால், அடுத்தாற்போல்எல்லாவற்றிற்கும் பணம் தரவேண்டும்.
  4. தொலைப்பது unconscious கவனக்குறைவு.
  5. இனி எல்லா வேலைகளிலும் கவனம் குறைந்துவிரயம் எழும்.
  6. கவனம் குறைந்தது தவறு என்றுணர்ந்து பிரார்த்தனை செய்தால் டிகிரி கிடைக்கும்.
  7. நம்மாலியன்றவற்றை எல்லாம் செய்தபின் கிடைக்காமல் இருக்காது. அப்படியும் கிடைக்கா விட்டால், பணம் தருவது தவறு என்ற நினைவோடு பணம் கொடுத்துப் பெறலாம்.
  8. பணம் கொடுக்கக் கூடாது என முடிவு செய்தால், அன்னை நமக்குப் பணம் தரும் சந்தர்ப்பம் தரமாட்டார்.

பார்ட்னர் : இதுவரை அப்படித்தான் நடந்து வருகிறது.

தாயார் :

  1. இது நமக்கு ஒரு சந்தர்ப்பம் என அறிந்து அன்னையை நெருங்கலாம்.
  2. தவறு செய்தவன் உணர்வது சரி.

பேசிக்கொண்டிருக்கும்பொழுது யூனிவர்சிட்டியிலிருந்து ஒருவர் வந்தார். அவர் பார்ட்னருக்குத் தெரிந்தவர். பெரியவனைத் தெரிந்து, டிகிரி தொலைந்துபோனதைக் கேள்விப்பட்டுத் தாம் உதவி செய்வதாகச் சொன்னார். பணம் கொடுக்காமல் நகல் உடனே பெற்றுத் தருவதாகச் சொன்னார்.

பெரியவன் : அம்மா, இது Mother's Grace..

அம்மா : நிச்சயமாக, ஆனால் நீ உன் தவற்றை உணர்ந்து பிரார்த்திப்பதுதான் முறை.

பெரியவன் : எனக்கு அதெல்லாம் முடியாது அம்மா. நீங்களே பிரார்த்தனை செய்யுங்கள்.

பார்ட்னர் : (வந்தவரைப் பார்த்து) உங்களுக்கு இது எப்படித் தெரியும்?

வந்தவர் : எனக்குப் பக்கத்து மேஜையில் பேச்சு வந்ததாலேயே தெரியும். நானும் அன்னை பக்தனாயிற்றே. அம்மா சொல்வதே சரி. அம்மா என்னை வாங்கிக்கொடுக்கச் சொன்னால் நான் செய்கிறேன்.

பெரியவன் : என்னைத் தொந்தரவு செய்யாதே அம்மா. அவரை நகல் வாங்கிவரச் சொல்.



book | by Dr. Radut