Skip to Content

பகுதி 4

 

பெண் : அண்ணா, அதை அப்படியே எடுத்துக்கொள்.

தாயார் : இந்தப் பையன் எந்த ஊர்?

பெரியவன் : என் புரொபசர் ஊர்க்காரன்.

தாயார் : அது நல்ல ஊராயிற்றே. அதனால்தான் அப்படிப் பேசுகிறான்.

பெண் : நீங்கள் சொல்லியபடி நடப்பது ரங்கன்தான்.

பெரியவன் : ஆமாம், ரங்கன் நீங்கள் சொல்வனவற்றை எல்லாம் நுணுக்கமாகக் கேட்டுக்கொள்கிறான்

பெண் : அவன் என்ன சாதிப்பான்? வீட்டு வேலை செய்பவனாச்சே.

தாயார் : உனக்குத் தெரியாது. அன்னை பின்னால் செயல்பட்டபடியிருப்பார். ஒரு நாள் அது பலிக்கும்.

பெண் : அப்படி என்ன பலிக்கும்?

தாயார் : இன்று உழைத்துப் பெறுவது, நாளை உழைக்காமல் வரும்.

பெண் : அது சௌகரியம், ஆனால் பெரிதன்று.

பெரியவன் : நமக்குப் பார்ட்னர் வந்தபிறகு, நமக்கு மட்டும் உயர்வு வரவில்லை. ரங்கனுக்கும் வந்துவிட்டது

தாயார் : எதுமூலம் வரும் என்று தெரியாது, வரும்.

பெண் : இன்று அவனுக்கு 900 ரூபாய் சம்பளம். இது உழைக்காமல் 9000 ரூபாய் ஆனால் அது அருள்.

பெரியவன் : ஏதோ அதுபோல் அவனுக்கு நடந்த மாதிரி தோன்றுகிறது.

பெண் : திருடமாட்டான்.

தாயார் : திருடுபவனுக்குத் திருட்டுமூலம் வரும், திருடாதவனுக்கு நல்ல முறையில் வரும்.

பெரியவன் : திருட்டுமூலம் வந்தால் அது சரியாகுமா?

தாயார் : அவனைக் கேளேன், "எது மூலமா வந்தால் எனக்கென்ன, வந்தால் சரிதான்'' என்பான். அது நமக்குச் சரியில்லை. அவனுக்குச் சரி. அவனுக்குச் சரி என்றால், அன்னைக்கும் சரி.

பெண் : திருடு தவறில்லையா?

தாயார் : திருடுபவனுக்கு அது தொழிலாயிற்றே. அன்னை அவன் தொழில்மூலம் அவனிடம் செயல்படுகிறார்.

பெண் : அன்னைக்குத் திருடு சரியாகுமா?

தாயார் : நமக்குத் தொழில் சரி. அதனால் அன்னைக்கு யோகத்தைவிடத் தொழில் சரி என்றாகுமா? நமக்குரியது நமக்கு. அவரவர்கட்குரியது அவரவர்கட்குச் சரி.

பெண் : சரியாகப் புரியவில்லை, பிடிக்கவில்லை.

தாயார் : அன்னைக்குப் பிடிக்காததில்லை. திருடனையும் அவருக்குப் பிடிக்கும். அவனுக்காகத் திருட்டையும் பிடிக்கும். அதனால் அன்னை திருட்டை ஏற்கிறார் என்றாகாது.

பெண் : ரங்கன் திருடமாட்டான். அவனுக்கு என்ன வரும்?

தாயார் : அன்னைச் சட்டப்படி, அவனுக்கு நம்முடைய அந்தஸ்து வரும்.

பெண் : என்ன அநியாயம்?

தாயார் : நமக்கு பாக்டரி வருவது நியாயம், ரங்கனுக்கு நமது அந்தஸ்து வருவது அநியாயம்!

பெண் : அவனுக்கு வருமா?

பெரியவன் : வருபவரெல்லாம் நிறைய பணம் தருகிறார்கள். அது சம்பளத்தைவிட அதிகமாகவுமிருக்கலாம்.

தாயார் : அவனுக்கு நம்பிக்கையிருக்கிறது. அதிகமாகப் புரியும். கர்வம் அதிகம். கர்வம் அடக்கமானால் அவனுக்கு எதுவும் பலிக்கும்.

பெரியவன் : என்ன MLA, மந்திரியாவானா?

பெண் : எதிர்வீட்டிற்கு வரும் பாக்டரி பையன் MLA ஆனானே, அது போலவா?

தாயார் : வாழ்வில் வாராது, அன்னையிடம் வரும். நான் மீண்டும் மீண்டும் சொல்வது வாராதது வரும். காப்பாற்றுவது கடினம்.

பெண் : அதிலென்ன பிரயோஜனம். எப்படிக் காப்பாற்றுவது?

தாயார் : எந்த மனிதனுக்கும் வந்ததை எப்படிக் காப்பாற்றுவது எனக் கூற முடியும்.

பெரியவன் : யார் எடுத்துக்கொள்வார்?

பெண் : நான் எடுத்துக்கொள்கிறேன், சொல்லுங்க.

தாயார் : எரிச்சல் வாராமலிருப்பது கஷ்டம். அதுவே ஆரம்பம்.

பெண் : சரி, வரக்கூடாது என்றால் அடக்கிக்கொள்கிறேன்.

தாயார் : முடியுமா?

பெண் : அதுதான் சரியென்றால், முடியும்.

தாயார் : அப்படி நினைத்தால் முடியும், ஆனால் அது பெரிய காரியம். எரிச்சலைக் காட்டாமலிருக்கலாம், வாராமலிருக்காது.

பெண் : கஷ்டம்தான், அதுவே அன்னைக்குச் சரி என்றால் கொஞ்சம் கொஞ்சமாக வரும்.

தாயார் : சரணாகதியே சட்டம். அது முடியாதபொழுது அழைப்பு அவசியம். அதுவும் முடியாதபொழுது அமைதி வேண்டும்.

பெண் : அமைதியாக இருந்து, அழைப்பை மேற்கொண்டு, சரணாகதியை எட்டுவது அதிர்ஷ்டம் எனக் கூறலாமா?

தாயார் : இதை இடைவிடாமல் செய்தால் அதுதான் அதிர்ஷ்டம்.

பெரியவன் : பயித்தியம் பிடித்துவிடும்.

சிறியவன் : என்ன நான் வரும்பொழுது பயித்தியத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்?

கணவர் : யாருக்குப் பயித்தியம்?

தாயார் : ரங்கனைப் பற்றிப் பேசுகிறோம்.

கணவர் : என்ன ரங்கன் MLA ஆயிட்டானா? மந்திரி ஆயிட்டானா?

பெண் : அம்மா, அப்பாவுக்கு நாம் பேசியது எப்படித் தெரியும்?

தாயார் : அப்போ, நாம் பேசியதில் ஜீவனிருக்கிறது எனப் பொருள்.

பெரியவன் : நான் ரங்கனிடம் போய் நீ மந்திரியாகப் போகிறாய் எனச் சொல்லவா?

பெண் : நீ அவனிடம் அப்படிச் சொன்னால், உன் வாய் முகூர்த்தம் அவன் மந்திரியாவான்.

பெரியவன் : அப்படியானால், அந்த பாவத்தை நான் செய்யமாட்டேன்.

சிறியவன் : உன்மூலமாக ரங்கனுக்குப் பெரியது வந்தால் அதன்மூலமாக உனக்குரிய பெரியது வரும்.

பெரியவன் : அப்போ, நான் போய் சொல்லட்டுமா?

எல்லோரும் சிரிக்கிறார்கள். பெரியவனின் சுயநலம், சின்ன புத்தி வெளிவருகிறது. பெண்ணுக்குத் தாயார்போல் விஷயம் புரிய ஆரம்பிக்கின்றது. கம்பனி வந்துவிட்டதால் கணவர் தம் வேலையை ராஜினாமா செய்ய நினைக்கிறார். ஆனால் தயங்குகிறார். பெண்ணுக்கு அன்னைமீது நம்பிக்கை வருகிறது. தாயாரிடம் சமர்ப்பணத்தைப் பற்றிக் கேட்கிறாள்.

பெண் : சமர்ப்பணம், சரணாகதி, என்ன வித்தியாசம்?

தாயார் : ஒன்று ஆரம்பம், அடுத்தது முடிவு.

பெண் : சமர்ப்பணம் செய்தால் எதுவும் கூடிவருமா? நான் என் தோழியின் அக்கா வாழ்வை சமர்ப்பணம் செய்யலாமா?

தாயார் : நம் சொந்தப் பிரச்சினைகளைச் சமர்ப்பணம் செய்யலாம். பிறர் பிரச்சினையில் அவர்கள் மனமும், போக்கும் கலந்திருக்கும். அது நமக்குப் பிடிபடாது.

அந்நேரம் பெண்ணின் தோழியும், அக்காவும் வருகிறார்கள். பெண்ணுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நினைத்தமாத்திரம் அவர்கள் வருவது புரியவில்லை. அக்கா ஊருக்குப் போவதைச் சொல்ல வந்தனர். அக்கா முகம் மலர்ந்திருந்தது. அவர் கணவரைப் பற்றிப் பேச முடியவில்லை. சமர்ப்பணம் செய்ய நினைத்தாள். "அவர் நடப்பதை நம்பமுடியவில்லை. வாழ்வு திரும்பிவிட்டது'' என்றுமட்டும் கூறினாள். பெண்ணிற்கு அன்னைமீது நம்பிக்கை அதிகமாகிறது. அவர்கள் போனபின் பெண் ஏதாவது செய்யவேண்டும் எனத் தாயாரைக் கேட்டாள்.

தாயார் : நீ கேட்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிய விஷயங்களில் perfectஆக இருக்க முயன்றால் நல்லது.

பெண் : எதைச் சிறியது என்கிறீர்கள்?

தாயார் : நீ எப்பொழுதும் வெளியில் போனாலும், வந்தாலும் கேட்டைத் திறந்து போட்டுவிடுவாய். போன் பேசினால் மீண்டும் சரியாக வைப்பதில்லை. மேஜை அலங்கோலமாக இருக்கும். உன் அலமாரி ஒழுங்காக இருக்காது. இவையெல்லாம் சரியில்லாமல் சமர்ப்பணம் ஆரம்பிக்க முடியாது.

பெண் : இவையெல்லாம் எனக்குத் தெரியாதே.

தாயார் : அன்னை நம்மை unconscious என்கிறார்.

பெண் : நான் தோழியைப் பற்றிப் பேசினேன். உடனே அவள் வந்தது ஆச்சரியமாக இருக்கிறது.

தாயார் : அது சூழல், நாமில்லை.

பெண் : அதனால்தான் நானே சரியாக இருக்க ஆசைப்படுகிறேன்.

தாயார் : சமர்ப்பணம் செய்யவேண்டும் என்ற முடிவை எடுத்து பூரணமாக்கு.

பெண் : அந்த முடிவை, சமர்ப்பணம் செய்யலாமா?

தாயார் : அது செய்வது பெரிய விஷயம்.

பெண் : எதனால்?

தாயார் : சமர்ப்பணம் நினைவு வாராது. அந்த முடிவைச் சமர்ப்பணம் செய்ய ஆத்மா விழிப்பாக இருக்க வேண்டும்.

பெண் : நான் போய் நீங்கள் சொன்னவற்றையெல்லாம் செய்துவிட்டு வருகிறேன்.

கணவர் கம்பனியில் ஓராண்டு லீவு கேட்டதற்கு ஒத்துக்கொண்டதாக வந்து சொன்னார். அவர் முதலாளியுடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது சர்க்குலர் ஒன்று வந்தது. அதைப் படித்துவிட்டு முதலாளி சிரித்தார். "நீங்கள் ஓராண்டு லீவு கேட்கிறீர்கள். அதைக் கொடுக்க சட்டமில்லை. இதுவரைப் பழக்கமில்லை. நானே அதை உங்களுக்குக் கொடுக்க முடிவு செய்தேன். இந்த சர்க்குலர்படி இனி எவரும் ஓராண்டு லீவு பெறலாம் எனக் கூறுகிறது''. "நான் எதை முதலாளியின் தயவால் பெற்றேனோ, அதை, சர்க்குலர் என் உரிமையாக்கிவிட்டது'' என்று கூறி மகிழ்ந்தார். இவற்றையெல்லாம் கேட்ட பெண்ணிற்கு ஆர்வம் அதிகமாகி உள்ளே போய் 1 மணி நேரம் கழித்து வந்து, "நீங்கள் சொல்வனவெல்லாம் அவ்வளவு சுலபமில்லை போலிருக்கிறதே. செய்ய ஆரம்பித்தால் எரிச்சல் வருகிறது. நான் வேலை செய்யும்பொழுது போன் வந்தது. பேசிவிட்டு வைத்தேன். அப்பொழுதுதான் நான் சரியாக வைக்கவில்லை எனக் கண்டேன். இது என்னால் முடியாதா?''

தாயார் : முடியாது என்பதில்லை. முயற்சியால் செய்யலாம். சமர்ப்பணத்தால் செய்யலாம்.

பெண் : நான் இரண்டையும் மேற்கொள்கிறேன்.

தாயார் : பெரியவன் வாய் முகூர்த்தம் ரங்கன் மந்திரியாவான் என்றவுடன் அவன் உஷாராகிவிட்டான் கவனித்தாயா?

பெண் : மனம் பொறுக்கவில்லை. எனக்கும் அப்படித்தான் இருந்தது.

தாயார் : வாயால் நல்ல வார்த்தை கேலியாகவும் சொல்ல முடியாத அளவு மனம் சுயநலமாக இருந்தால் அன்னை எப்படி உள்ளே வருவார்?

அப்பொழுது பெரியவன் வந்து ஆச்சரியமாக, "என்னம்மா, அன்னை மின்னல் வேகத்தில் செயல்படுகிறார்? நம் நகரில் ஒரு அரசியல் கூட்டம் போட்டார்கள். என்னை ஏரியா கமிட்டியில் போடுவார்கள் என நானும் போயிருந்தேன். அங்குப் பேசியவர்களில் நான்தான் சிறப்பாகப் பேசினேன். இன்றைய கூட்டத்திற்கு நானே தலைமை தாங்கினேன். என்ன ஆச்சரியம்! ரங்கன் அங்கிருந்தான். மந்திரி அவனுடன் சந்தோஷமாகப் பேசினார். போகும்பொழுது உடன் அழைத்துப் போனார். எனக்குப் பயமாக இருக்கிறது'' என்றான்.

பெண் : ரங்கன் MLA ஆகணும் என்ற மனம் உனக்கு வேண்டும் என்று அன்னையை வேண்டிக்கொள்.

பெரியவன் : வாயால் மந்திரி எனவும் வரமாட்டேங்கிறது. அப்பொழுது கணவர் வந்தார்.

கணவர் : நம்ம ரங்கன் ஒரு பெரிய வீட்டுப் பையன் போலிருக்கிறது. உள்ளூர் மந்திரிக்கு அந்த விஷயம் தெரிந்திருக்கு. அவனைக் கவனிக்கிறார். ஊர்பூரா அதுவே பேச்சு.

பெரியவன் : இந்திரா காந்தி டிரைவரை மந்திரியாக்கியது போலிருக்கிறது.

கணவர் : பார்ப்போம், என்ன நடக்கிறது என்று. அவசரப்பட வேண்டாம்.

தாயாரும், பெண்ணும் பிறகு ரங்கனுக்கு அதிர்ஷ்டம் வரவேண்டும் என்ற மனம் நமக்கெல்லாம் இல்லை. பயமாக இருக்கிறது. பொறாமையாக இருக்கிறது. வந்துவிட்டால் என்ன செய்வது என மனம் துணுக்குறுகிறது. இதுவே உண்மை. Good Will ஏது இடம் எனப் பேசினர். ரங்கன் வந்தான். சந்தோஷமாக இருந்தான். நடந்ததை நடந்தபடிக் கூறினான். நமக்கு அவன்மீது முழு நல்லெண்ணம் இருப்பதாக நினைத்துப் பேசினான். அவனுக்கு நம்மீது நல்லபிப்பிராயம். எதுவும் நடக்கவில்லை. மந்திரி கவனித்தார், அதுதான்.

அம்மாவும் பெண்ணும் பேசுவதும், பெண்ணின் நடைமுறை மாறுவதையும் அனைவரும் கவனித்தனர். பெண் தன் முடிவைச் சமர்ப்பணம் செய்தாள். அது சமர்ப்பணமாயிற்று. மனம் மலைபோலக் கனத்தது. இன்பமாகக் கனத்தது. அண்ணன், தம்பி, அப்பா, மூவரும் அவளைத் தேடி வந்தனர். வெகு நேரம் அவளுடன் அமைதியாக, அன்பாக, நெருக்கமாக இருந்தனர். அனைவர் முகமும் மலர்ந்தன. வீடே மாறிற்று. உலகமே மாறியது போலிருந்தது. அப்படியே பெண் தூங்கிவிட்டாள். தூங்கி எழுந்தாள். போன் வந்தது. மந்திரி ரங்கனை வரச் சொன்னாராம். அடுத்த போனில் பார்ட்னர் அப்பாவைக் கூப்பிட்டவர் பெண்ணுடன் நெடுநேரம் பிரியமாகப் பேசி போனை வைத்துவிட்டார். பெண் தாயாரிடம் வந்து இதுபோல் என்னிடம் பிரியமாக இதுவரை எவரும் பேசியதில்லை. பார்ட்னரும் அப்படிப் பேசியதில்லை என்றாள். தன் முடிவு சமர்ப்பணமானதால் பார்ட்னர் அப்படிப் பேசினார் என அவளுக்குத் தெரியவில்லை. ஏதோ பெரிய விஷயம் நடந்துவிட்டது என்று தாயாருக்குப் பெண் முகம் விளக்கியது. பெண்ணை விசாரித்து, சமர்ப்பணத்தைத் தாயார் அறிந்தார்.

பெண் : நான் உங்களைவிட்டுப் போய் கொஞ்சம் எழுதினேன். புது பால்பாயிண்ட் பேனா இங்க் வரவில்லை.

கொஞ்சம் வருகிறது. நின்றுவிடுகிறது. உதறிப் பார்த்தேன். சில சமயம் இங்க் வரும், மற்ற நேரம் வாராது. எரிச்சல் படக்கூடாது என்ற முடிவை நினைவுபடுத்தி அலமாரியை அடுக்கிவிட்டு, மீண்டும் எழுத ஆரம்பித்தேன். பேனா நன்றாக எழுதியது.

தாயார் : அது சமர்ப்பணம் செய்வது. எந்தக் காரியமானாலும் அன்னைமூலம் மட்டுமே செய்வது என்பது பெரிய முடிவு. அதை நம்மால் செய்ய முடிவதில்லை.

தெருவில் ஒரே அமர்க்களம். ஓடிப்போய் பார்த்தனர். யாரோ குழந்தை வாயில் எதையோ போட்டுக்கொண்டது. தொண்டையில் மாட்டிக்கொண்டு திணறுகிறது. தாயாருக்கு அழுகை வருகிறது. கூட்டம் கூடிவிட்டது. அந்த வழி வந்த காரில் ஒரு டாக்டரிருந்தார். தாமே தம் ஹாஸ்பிடல் அழைத்துப் போய்ப் பார்க்கிறேன் என்றார். அதுவே தெய்வச் செயல் என்று எல்லோரும் நினைத்தனர். பெண் உள்ளே ஓடி அன்னை படத்தின்முன் மண்டியிட்டு வணங்கி எழுந்து தியானத்தில் உட்கார்ந்து, "அம்மா, இந்தக் குழந்தையைக் காப்பாற்று'' எனக் கதறினார். அக்குழந்தையும் அதன் தாயாரும் காரில் ஏறினர். உடனே குழந்தை திணறி சத்தம் போட்டதால் காரை எடுக்க முயன்ற டாக்டர் குழந்தையிடம் வந்தார். வாயிலிருந்த பொருளை குழந்தை கக்கிவிட்டது. ஒரே ஆரவாரம். ஆரவாரம் கேட்டு பெண் பூஜை அறையிலிருந்து வெளிவந்து நடந்ததைக் கேட்டு ஆச்சரியப்பட்டாள். தாயாரிடம், "அன்னை ஒருபொழுதும் தவறுவதேயில்லை'' என்று நெகிழ்ந்து கூறினாள். அவளுடைய பக்தி நம்பிக்கையாக மலர்ந்தது.

இனி அவள் பழைய மனுஷியில்லை. அவளுக்குப் புனர்ஜென்மம். தாயாருக்கு மட்டும் விஷயம் தெரியும். மற்றவர்கள் பெண் சந்தோஷமாக இருப்பதாக நினைத்தார்கள். அவள் மனம் வேலை செய்யவில்லை. ரங்கன் - பார்ட்னர் - மந்திரி - பேனா - சமர்ப்பணம் - தெருவில் குழந்தை - எல்லாம் நினைவுக்குப் பின்னணியில் இருக்கின்றன. எண்ணம் ஓடவில்லை. அன்னை முன்னணியில் இருக்கிறார். வாழ்வே Legend of Brahman. பிரம்மம் என்ற கதை

போலிருக்கிறது. இனி வேலை உள்ளேயிருப்பதையும், அது மிகக் கடினமானது என்பதும் பெண்ணுக்குப் புரிந்தது. அம்மா மீது இதுவரை இல்லாத பாசம் எழுந்தது. அன்னை, நெஞ்சை நிரப்பியவர்கள், அதையும் கடந்து பரவுவதை ஆனந்தமாக உணர்ந்தாள். மனமும், உடலும் கனத்தன. பிற சமயங்களில் உடல் லேசாகிக் காற்றில் பறப்பது போன்றிருந்தது. என்ன என்று புரியவில்லை. கனப்பதும், லேசாக இருப்பதும் இன்பமான உணர்வுகள் என்பதுமட்டும் திட்டவட்டமாகப் புரிந்தது.

தாயாருக்குத் தம்பியிடமிருந்து மனைவிக்குக் கான்சர் என்று செய்தி வந்தது. தம்பி பதறினார். "இந்தச் செய்தியை நம்பாமல், மனத்தை அமைதிப்படுத்திக்கொண்டு புறப்பட்டு வா'' என அமைதியாகக் கூறினார். செய்தி அவரைப் பதட்டப்படச் செய்யவில்லை. தம்பி மனைவிமீது பாசம் இல்லாவிட்டாலும், செய்தியின் முடிவு அன்னை முடிவாக இருக்கப்போவது என்றாலும் பதட்டமிருக்காது என அவர் அறிவார். பிரார்த்தனை செய்ய முயன்றார். பிரார்த்திக்கும் அவசியமில்லை எனத் தோன்றியது. சமர்ப்பணம் செய்ய முயன்றார். சமர்ப்பணமாயிற்று. மேலும் அமைதியானார்.

அன்று மாலை தம்பி வந்தார். காலையில் பேசிய படபடப்பில்லை. ஆனால் அமைதியாக இல்லை.

தாயார் : தம்பி, நீ பயப்பட ஒன்றும் இல்லை. பூஜை அறைக்குப் போய், "நான் இந்தச் செய்தியை நம்ப விரும்பவில்லை'' என முடிவு செய்து, முடிவைச் சமர்ப்பணம் செய்.

தம்பி சுமார் ஒரு மணிக்குமேல் தியானத்தில் லயித்துவிட்டார். அவர் எழுந்து வெளியில் வந்ததும் கணவர் அவருக்காகக் காத்திருக்கிறேன் என்று சொல் "உங்கள் மனைவியிடம் போனில் பேசினேன். அவர் ஒரு முக்கியச் சேதியை உங்களிடம் சொல்லச் சொன்னார். நீங்கள் ஒருவேளை அவர் சொன்ன செய்தியைத் தவறாகப் புரிந்துகொண்டீர்களோ எனச் சந்தேகம்'' என்றார். தம்பி உடனே மனைவிக்குப் போன் செய்தார்.

தம்பி : என்ன தவறாகப் புரிந்துகொண்டேன்?

தம்பி மனைவி : ஒருவேளை எனக்குக் கான்சர் என நினைத்துக் கொண்டீர்களோ என எனக்குச் சந்தேகம்.

தம்பி : (ஆச்சரியமாக) உனக்கில்லையா?

தம்பி மனைவி : என்னுடன் வந்தவருக்கு, எனக்கில்லை.

தாயார் : என்ன சொல்கிறாள், உன் மனைவி?

தம்பி : கான்சர் அவளுக்கில்லை, அவளுடன் வந்தவருக்கு.

தம்பி, கணவர், தாயார், மூவரும் சந்தித்து நடந்ததை விவரமாகப் பேசி மகிழ்ந்தனர்.

கணவர் : ரொம்ப சந்தோஷம். வந்த ஆபத்து போய்விட்டது. Mother's Grace. நீ ஏதாவது செய்தாயா?

மனைவி : செய்தி வந்ததும் நான் அதை நம்பவில்லை. அதைச் சமர்ப்பணம் செய்தேன். சமர்ப்பணமாயிற்று. நான் அமைதியானேன். தம்பியை நம்பவேண்டாம் என்றேன். சமர்ப்பணம் செய்யச் சொன்னேன்.

தம்பி : நான் தியானத்தில் உட்கார்ந்தவுடன் தியானமே என்னை ஆட்கொண்டது. எழுந்துவந்தேன். நீங்கள் இந்தச் செய்தியைச் சொன்னீர்கள்.

கணவர் : என்ன நடந்தது என எனக்கு விளக்கமாகக் கூறுவாயா?

இந்த நேரம் பேசாமலிருப்பது நல்லது எனத் தாயார் அறிவார். கணவருக்கு என்ன பதில் சொல்வது என்று யோசனை

செய்தபொழுது, அவர் ஆபீஸ் நண்பர் வந்ததால் எழுந்து போய்விட்டார். அவருடைய தம்பி அவருக்கு நமஸ்காரம் செய்தார்.

தம்பி : மதர் காப்பாற்றினார். நீதான் எனக்கு மதர்.

கணவர் திரும்பிவந்து எனக்கு விவரமாகச் சொன்னால் நானும் சமர்ப்பணத்தை ஏற்பேன் என்றார்.

தாயார்: சமர்ப்பணம் பெரியது. பெரியவனுக்கு அவன் நண்பன் கூறியதை நாம் அனைவரும் கடைப்பிடித்தால் பின்னால் சமர்ப்பணம் செய்ய முடியும்.

கணவர்: சொல்லக்கூடாது என்று சட்டம் உண்டா?

தாயார்: உடனே பேசாமலிருப்பது நல்லது.

தம்பி : அதனால்தான் நான் விவரம் கேட்கவில்லை.

கணவர் : நான் கேட்கவில்லை.

சில வாரங்கள் வீடு சற்று ஆர்ப்பாட்டம் குறைவாக இருந்தது. பெரியவனுக்கு அவனுடைய நண்பன் கூறியதை அனைவரும் மனதில் ஓரளவு ஏற்றது போலிருந்தது அனைவருடைய போக்கும். பெண் மீண்டும் தாயாருடன் அன்னையைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள். அவள் வரும்பொழுதெல்லாம் ஒரு பையன் உடன்வருவது வழக்கம். சிலசமயம் இரண்டு பேரும் வருவார்கள். ஒரேயொரு முறை கணவரும் வந்தார். அதுபோன்ற உரையாடல் ஒன்றில்,

பெண்: எனக்கு அன்னை நினைவாகவேயிருக்கிறது. என் நண்பர்கள் எல்லாம் நான் ஏதோ புது மேக்கப் செய்வதாக நினைக்கிறார்கள்.

கணவர்: முகம் பளிச்சென்றிருக்கிறது.

தாயார்: The Life Divine படித்தாலும், சமர்ப்பணம் செய்தாலும், அன்னை நினைவிருந்தாலும் முகம் இப்படியிருக்கும்.

சிறியவன் : அம்மா, இவையெல்லாம் எப்படித் தெரியும் உங்களுக்கு?

பெரியவன் : அம்மா எப்பொழுதும் படிப்பார்கள். எத்தனைப் புத்தகம் படித்திருக்கிறார்கள்?

கணவர்: நீ படிக்கும் அன்னைப் புத்தகங்களைச் சொல்கிறாயா? நானும் படிக்கிறேன்.

தாயார் : என்னிடம் எல்லாப் புத்தகங்களும் இருக்கின்றன.

பெண்: ஏம்மா, எங்களை எல்லாம் படிக்கச் சொல்லவில்லை?

பெரியவன் : சொல்லியிருந்தால், நான் படித்திருக்கமாட்டேன்.

சிறியவன் : நான் இரண்டு பக்கம் படித்தேன். அப்புறம் மறந்துவிட்டேன்.

கணவர் படிக்க ஆரம்பித்தார். அவருக்கு மனம் புத்தகத்தில் இல்லை. பெண் தீவிரமாகப் புத்தங்களைப் படிப்பதும், தாயாருடன் அவற்றைப் பற்றிப் பேசுவதுமாக இருந்தாள். பிள்ளைகள் முன்போல இல்லை. ஆனால் அவர்கள் மனம் அன்னையிலோ, வேலையிலோ, படிப்பிலோ, ஒழுங்கிலோ பதியவில்லை. ஒருநாள் பெரியவனும், சிறியவனும் பந்தயம் போட்டார்கள்.

பெரியவன் : உன் காலேஜிலே வாலிபால் டீம் பலமானது. மற்றவையெல்லாம் சொத்தைகள்.

சிறியவன் : ஓர் உதாரணம் சொல்லேன்.

பெரியவன் : பாட்மிட்டன் டீம் இந்த ஆண்டு முதல் ரவுண்டில் தோற்றுவிடும்.

சிறியவன் : இல்லை semi-finals வரை வரும். நான் அன்னைக்குப் பிரார்த்தனை செய்கிறேன்.

பெரியவன் : பிரார்த்தனை செய்தால் விளையாட வேண்டாமா?

சிறியவன் : Semi-finals எங்கள் டீம் வந்தால் அதற்கப்புறம் என்னைக் கேலி செய்யமாட்டேன் என ஒத்துக்கொள்வாயா?

பெரியவன் : ஊம்.

சிறியவன் பைத்தியம் பிடித்ததுபோல் Mother,Mother என எந்த வேலை செய்தாலும் மனதால் சொல்ல ஆரம்பித்தான். டீம் முதல் ரவுண்டு ஜெயித்தது. அவன் டீமை மறந்தான். பந்தயத்தை முக்கியமாக நினைத்து அன்னையில் லயித்துப் போனான். டீம் semi-finals வந்து ஜெயித்தது. அண்ணனைத் தேடினான். அவன் ஊரிலில்லை. அன்னையில் கரைந்துபோக முடிவு செய்தான். Finalsஇல் டீம் ஜெயித்துவிட்டது. பந்தயம் ஜெயித்துவிட்டது. அண்ணன் வரவில்லை. மறுநாள் பெரியவன் வந்து சேர்ந்தான்.

சிறியவன் : நீ தோற்றாய்.

பெரியவன் : நானா, உன் டீமா?

சிறியவன் : என் டீம் semi-finals வந்துவிட்டது. பெரியவன் : என்னைக் கேலி  செய்கிறாயா? நான் உன்னை நம்பமாட்டேன்.

தன் நண்பன் ஒருவனுக்குப் போன் செய்து விசாரித்தான். டீம் finalsஇல் ஜெயித்துவிட்டது எனக் கேட்டு ஆச்சரியப்பட்டான். எப்படி என விசாரித்தான். First ரவுண்டில் எதிர் டீமில் சண்டை. அதனால் இவர்கள் ஜெயித்துவிட்டார்கள். இரண்டாம் ரவுண்டில் எதிர் கேப்டனுக்கு ஜுரம். செமி - பைனல்ஸில் காற்று இவர்கட்கு சௌகரியமாயிருந்தது. இத்தனை வெற்றியும் உற்சாகப்படுத்தியதால் பைனல்ஸில் ஆர்வமாக விளையாடி 2 பாயிண்டில் ஜெயித்துவிட்டனர் எனக் கேள்விப்பட்டான்.

பெரியவன் போனில் பேசி முடித்தவுடன், சிறியவனிடம் சொல்லாமல் போய்விட்டான். அம்மாவிடம் வந்து நடந்தவற்றை எல்லாம் சொல்,

சிறியவன் : அண்ணன் தோற்றான். அதை ஒத்துக்கொள்ள மனமில்லை.

தாயார்: நீ ஜெயித்துவிட்டாயில்லையா? இனி கிண்டல் செய்யமாட்டான்.

பெண் : ஏன் அண்ணா, தோல்வியை ஏற்கக் கூடாதா? நீ என்ன செய்தாய்? எப்படி உங்கள் காலேஜ் டீம் எப்பொழுதும் ஜெயிக்காதது, ஜெயித்தது?

சிறியவன் : ஒவ்வொரு சமயமும் ஒரு விஷயம் வந்து ஒத்துக்கொண்டது. நான் அவர்கள் செமிபைனல்ஸில் ஜெயிப்பார்கள் என நினைக்கவில்லை. பைனல்ஸில் எதிர்பாராதவிதமாகச் சிரமத்துடன் ஜெயித்தனர்.

 

பெண்: அம்மா, இதெல்லாம் எப்படி நடந்தது என்று சொல்லேன்.

சிறியவன் : பந்தயம் போட்டதிலிருந்து நான் விடாமல் மதர் பெயரைச் சொன்னேன்.

பெண்: அப்படிச் சொன்னால் அம்மா இப்படி நடக்குமா? ஆச்சரியமாக இருக்கிறதே.

தாயார் : மதர் பெயர் மந்திரம். சக்தி வாய்ந்தது. இவன் முகம் எப்படியிருக்கிறது பாரேன்.

பெண்: அண்ணாவிடம் சண்டை போடாமல் வந்திருக்கிறானே அதுவே பெரிய விஷயமில்லையா?

பெரியவன் சிறியவனிடம் தோற்றது, ஜபம் செய்து டீம் ஜெயித்தது வீட்டில் ஆச்சரியமான செய்தியாகவும், சிறியவனைக்

கேலி செய்யும் சந்தர்ப்பமாகவும் கொஞ்ச நாளிருந்தது. வீடு லேசாக நல்லபடியாக மாறிவருகிறது. இவையெல்லாம் காரியம் கூடிவரப் போதாது எனத் தாயாருக்குத் தெரியும். தன்னால் முடியாத சமர்ப்பணத்தை முடிக்க வேண்டும் என்று, ஏற்கனவே படித்தது, சிந்தனை செய்துவந்த முடிவுகளை ஆராய்ச்சி செய்தார். சமர்ப்பணமே முடியவில்லை எனில் சரணாகதிக்கு வழியில்லை. ஏன் சமர்ப்பணம் முடியவில்லை? தமக்குக் குடும்பம் உயரவேண்டும் என்பது மட்டுமே இலட்சியம் என்பதால், சமர்ப்பணம் செய்ய முடியவில்லையா என நினைத்தார். எவ்வளவு சிறிய எண்ணமானாலும், அதுவும் சமர்ப்பணமாக வேண்டுமன்றோ? ஏன் முடியவில்லை என்று தம்மையே கேட்டுக்கொண்டார். மனதைச் சோதனை செய்தார். தம் வேலை, தம் கடமைகளைச் சரிவரச் செய்வதில் தனக்குத் திருப்தி, மனம் லயித்திருப்பது அதில்தான் என்றால் நான்' என்பது என் கடமைகள்' எனப் புரிந்தது. என் personality என்பது என்னுடைய கடமைகட்குள் அடங்கிவிடுகிறது. அதைத்தாண்டி பர்சனாலிட்டி உருவம் பெறவில்லை என்று விளங்கியது. இனி உருவாகாத பர்சனாலிட்டியை உருவாக்கி, அதைச் சரணம் செய்யவேண்டும் என நினைத்தார். சரணாகதியை எந்த நிலையில் செய்தாலும் பலன் ஒன்றே என்று அகந்தை உருவாகாதவரைப் பற்றிப் படித்தபோது தெரியவந்தது நினைவு வந்தது.

அகந்தையுள்ளவர் அகந்தையைச் சரணம் செய்கிறார். அகந்தையே உருவாகாதவர் அவருக்குக் கீழேயுள்ளவர். அவர் என்ன செய்வது என்ற கேள்விக்குப் பதிலாக இனி அகந்தையை உற்பத்தி செய்து பிறகு சரணம் செய்யவேண்டுமா என்ற பதில் கேள்வி எழுந்தபொழுது, அது தேவையில்லை. எந்த நிலையில் நாமிருந்தாலும் அந்த நிலையில் செய்யும் சரணாகதிக்குப் பூரணப் பலன் உண்டு என்று படித்திருக்கிறார். ஆனால் அக்கருத்து விளங்கவில்லை என்று கேட்டபொழுது ஒருவர் ராஜாஜியை உதாரணமாகக் காட்டிப் பேசியது நினைவுக்கு வந்தது. மணியக்காரர் சம்பளம் மாதம் 5/- ரூபாயிருந்த பொழுது ராஜாஜி தினமும் வக்கீலாக 1000/- ரூபாய் சம்பாதித்ததைத்

தியாகம் செய்து காங்கிரஸில் சேர்ந்தார். வேலையே இல்லாதவன் காங்கிரஸில் சேர்வதும், ராஜாஜி சேர்வதும் ஒன்றாகுமா? இவனும் பெரிய சம்பாத்தியம் பெற்றபின் தியாகம் செய்வது முறையா? என்பது ஐயம். தியாகம் இருவருக்கும் ஒன்றே. பலன் வேறு. ராஜாஜி வைஸ்ராயானார். வேலையில்லாதவன் தியாகம் கடைசி காலத்தில் உள்ளூர் காங்கிரஸ் கமிட்டித் தலைவரானான். தியாகம் ஒன்றே. பலன் பர்சனாலிட்டிக்குத் தகுந்தாற்போல் வரும். இது வாழ்வுக்குரிய சட்டமானால், அன்னையிடமும் அதுவே சட்டமா என அவர் மனம் கேள்வியை எழுப்பியது. ஏதாவது உதாரணமுண்டா என மனம் தேடியது. அடிமட்டத்திலிருந்து உச்சாணிக்கு வெகு சீக்கிரம் போன சிலர் வாழ்வு நினைவு வந்தது. அவர்கள் வாழ்க்கை விபரம் தெரியாததால், மேலும் சிந்திக்க முடியவில்லை.

  • பக்தன் எந்த நிலையிலிருந்தாலும், அவன் மனம் பூரணமானால், அவன் சரணாகதி அவனைப் பொருத்தவரைப் பூரணமானால் அன்னை செயல்படுவார்.
  • அது நடந்தால் காரியம் க்ஷணத்தில் முடியும்.
  • அடி மட்டம் உச்சாணியாகும்,

என அவர் மனம் கூறியதை ஊர்ஜிதப்படுத்த வழியென்ன? அவருக்குத் தெரிந்த உதாரணங்கள், படித்தவையும், அவர் கருத்து சரி என்று கூறுகிறது. இருந்தாலும் இதனுள் ஏதோ ஓர் தத்துவமிருப்பதாகப்பட்டது. பல நாள் சிந்தனைக்குப்பின் கீழ்க்கண்ட தெளிவு எழுந்தது.

  • வாழ்வின் பர்சனாலிட்டிக்குரிய பலன் உண்டு என்பது சரி.
  • பர்சனாலிட்டி என்பது finite சிறியது. அதற்குரிய பலனே அதற்கு வரும்.
  • பர்சனாலிட்டியை நம்பினால் பர்சனாலிட்டியின் பலன் வரும்.
  • அன்னையை நம்புவது Infinite பெரியதை நம்புவது.
  • சொல்லால் நம்புவதற்கு ஜீவனிருக்காது.

  • ஜீவனால் நம்பினால் அது Infinite பெரியதை நம்புவதாகும்.பர்சனாலிட்டியைக் கடந்து அன்னையை நம்புவதாகும்.
  • எதை நம்பினாலும் நம்மால் முடிந்தவரைதான் செயல்படமுடியும்.
  • முடிந்ததை முடித்தால் முடியாதது முடியும்.
  • நாம் உள்ள நிலையில் முயற்சியை முடிப்பது அன்னையை Infinite பெரியதாக நம்புவதாகும்.
  • இந்தக் கட்டத்தில் சிறியது பெரியதாகிறது.

தமக்கு இந்த பாக்டரி வந்ததே இப்படி வந்ததுதான் என அவருக்கு விளங்கியது. முடியாத சரணாகதியை முடிக்க சரணாகதியை நாடலாம் எனவும் படித்திருக்கிறார். அதைச் செய்வது என்றால் மனத்திலிருந்து, உள் மனம் கடந்து, ஆழ்மனம் செல்வதாகும். அதைக் கீழ்க்கண்டவாறு சாதிக்கலாம் என முடிவு செய்தார்.

  • எண்ண ஓட்டமிருந்தால், நாம் எண்ணத்தை ரசிக்கிறோம் எனப் பொருள்.
  • நாம் சரணாகதியைவிட எண்ணத்தை ரசித்தால் எண்ணம், எண்ண ஓட்டம் நிற்காது.
  • எண்ண ஓட்டத்தை, சரணாகதியைவிட ரசிக்கிறோம் என்று மனம் அறிவது உண்மை yogic sincerity ஆகும்.
  • மனத்தில் அந்த அறிவு மௌனம் தரும். அது சரணாகதி பலிக்கும் அறிகுறியாகும்.
  • அந்த மௌனம் உதயமானால், அதைத் தொடர்ந்து சமர்ப்பணம், சரணாகதியைப் பூர்த்திசெய்ய முயலவேண்டும்.
  • அது முழு முயற்சி, பெரு முயற்சி, 30,40 ஆண்டுகளில் பலித்தால் அதிர்ஷ்டம். அன்னைச் சூழல் 3,4 மாதங்களில் பலிக்கும் என அன்னை கூறுகிறார். அதற்கு மௌனம் வந்து நிலைக்க வேண்டும். நிலைத்தது வளர வேண்டும் என்று மனம் தெளிவு பெற்றது.

அத்துடன் மனம் நிறைவடைந்தது.

தாயார் மனம் குழப்பத்தைவிட்டுச் சரணாகதியை நாடியது. கடமைகளைச் செய்வதைத் தவிர, அவர் மனம் மேற்கண்ட கருத்தில் லயித்தது. அதன்பிறகு வந்தவை அநேகச் செய்திகள். பாக்டரியிலிருந்து, சிறியவன் டீம் வரை தினமும் செய்தி வாராத நாளில்லை. வந்தனவெல்லாம் நம்பமுடியாத பெரிய செய்திகள். தாயாரிடம் சில செய்திகள் வரும், சில பேச்சுவாக்கில் வரும், பல வாரா. தம் சமர்ப்பணம் பூர்த்தியாகாமல் வந்த செய்திகள் பலிக்கா எனத் தாயாருக்குத் தெரியுமாதலால், செய்திகளை அலட்சியம் செய்யாமல், மனத்தை அவற்றில் ஓடவிடாமல், சமர்ப்பணத்தைப் பூர்த்தி செய்வது சரி என அவர் முடிவு செய்தார். வீடு மாறிவிட்டதை அனைவரும் கவனித்தனர். அனைவரும் அன்னையைப் பற்றிப் பேசினர், பேச விரும்பினர், அறிய விரும்புவதாகக் கூறினர். தாயார் அனைத்தையும் காதால் கேட்டுக்கொண்டார். மனத்தில் வாங்கிக்கொள்ளவில்லை. உள்ளே வேலையைக் கவனித்தார். அது சுலபமானதாக இல்லை.

சமர்ப்பணத்தைப் பூர்த்தி செய்ய முனைந்ததிலிருந்து,

  1. மனத்தின் அமைதி அதிகமாகிறது.On the surface of surface mind .
  2. அமைதி இதுவரையில்லாததானாலும் இது மேல் மனத்தின் அமைதி, அதிலும் மேலெழுந்தவாரியான அமைதி எனத் தெரிகிறது.
  3. வழக்கமாக எழும் ஆசைகள் எழவில்லை. ஆசை எழுந்து அடக்குவது வழக்கம். இப்பொழுது எழவில்லை.
  4. அதே ஆசையை வாழ்க்கை பிறர்மூலம் கொடுக்கிறது.
  5. தான் ஆரம்பிக்கவில்லை என்பதால் பிறர் தருவதை ஏற்கிறார்.
  6. தான் இதுவரை யோகத்தைக் கருதாது வாழ்வை நடத்தியதாக நினைத்திருந்தபோதிலும், ஏதோவொரு வகையில் தம் வாழ்வு யோகம் என்று புரிந்தது.

  1. யோகத்தை வாழ்விலிருந்து பிரிக்க முடியாது. உலக வாழ்வுடன் யோகம் சேர முடியாது. அன்னையை ஏற்க வாழ்வு யோகமாவது அவசியம். மாற்றம் தீவிரத்திலிருக்கும். சர்க்கார் வேலை என்பது உயர்ந்தது. அனைவருக்கும் உரியதன்று. எவ்வளவு பெரிய கம்பனியில் வேலை செய்தாலும், அது சர்க்கார் வேலையாகாது. சர்க்காரில் வேலை செய்யும் எவர்க்கும் சர்க்காரின் முழு அதிகாரம் உண்டு. அது வேறு எவர்க்குமில்லாதது. வேலையில் உயர்வு, தாழ்வுண்டு. ஆனால் தரம் எல்லா ஊழியர்க்கும் ஒன்று என்பதுபோல் அன்னை வாழ்வு, மனித வாழ்விலில்லாத உயர்வு பெற்றது. அதன் அடிமட்டம் குடும்ப வாழ்வு. உயர்ந்த நிலை யோகம் என்று தெளிவு ஏற்பட்டது.

இது பெரிய தெளிவு. முதன்முறையாக ஏற்பட்டது. இத்தெளிவை செயல்படுத்த ஏராளமாக வேலை செய்யவேண்டும். ஹைகோர்ட்டில் வக்கீலாகப் பதிவு செய்வது பெரிது. ஆனால் அது ஆரம்பம். பிரபலமாக ஏராளமாக வேலை செய்ய வேண்டும் என்பதைப்போல் தாம் உயர்ந்த நிலையில் தம்மைப் பதிவு செய்துகொண்டதை உணர்ந்தார். இந்த வேலை வெளியில் செய்யப்படக் கூடியதன்று.

வேலை உள்ளேயிருக்கிறது,

என்ற ஞானம் உதயமாயிற்று. இது மனத்தாலும், ஆத்மாவாலும், வளரும் ஆன்மாவாலும், மௌனத்தில், நிதானமாக, பொறுமையாகச் செய்ய வேண்டியது எனப் புரிந்தது.

ஓர் அரசியல் கட்சி எலக்ஷனில் ஜெயித்து பதவிக்கு வந்தால் அங்கு என்ன மாற்றம் ஏற்படுமோ அதுபோன்ற மாற்றம் தாயார் மனத்திலும், வீட்டின் சூழலிலும் ஏற்பட்டன. MLA, MP, மந்திரிகள், சேவையை மட்டும் ஏற்றால் சம்பளம் மட்டுமே வருமானம். 20 ஆண்டுகட்குமுன் மந்திரியாயிருந்து கட்சிப் பதவியை இழந்த மந்திரி ஒருவர் அப்பொழுது சொன்னார். "எனக்குச் சம்பளமாக வரி பிடித்தம் போக மாதம் ரூ.1462/- வருகிறது. வீட்டில் ஒருவருக்கு சாப்பாட்டிற்கு

ஒரு நாளைக்கு ரூ.100/- செலவாகிறது. இது இன்று ஒரு பியூன் சம்பளம். இப்பொழுது அதுவுமில்லை. வருமானத்திற்கு என்ன செய்யலாம் என யோசனையாக இருக்கிறது'' என்றார்.

அன்னை வீட்டிற்குள் வந்தபின் கட்சி, பதவி ஏற்றது போலிருக்கும். சேவையை மட்டும் கருதுபவர்க்கு சேவை ஆத்ம வளர்ச்சியைத் தரும். தினம் 1462/- ரூபாய் சம்பளம் வாங்குவது போலிருக்கும். வெண்மையான உடையுடுத்தி, டைனிங் ரூமில் சாப்பிட்டு, நண்பர் என எவரிடமும் பேசாமல், செய்யும் வேலையை அன்னை வேலையாகச் செய்யலாம். ருசி' இருக்காது.

அன்னை வாழ்வின் உயர்வை சுயநலமாகக் கருதினால், அரசியல்வாதி சொத்து சேர்ப்பது போலிருக்கும். எட்டுகண் விட்டெறியும், செல்வாக்கு, பறக்கும். அநேகம் பேர் ஊழியம் செய்யக் காத்திருப்பார். அது அன்னையின் அருளை அகந்தைக்குச் சேவை செய்யச் சொல்வதாகும். அந்த வாழ்வு நீடிக்காது. ஆர்ப்பாட்டம் அதிகமானால், உள்ளதும் சேர்ந்து போகும் என்று தாயார் அறிவார்.

வீட்டில் நிலை மாறி,

  1. எந்த நேரமும் ஊரில் முக்கியஸ்தர் வீட்டிற்கு வந்தபடியிருக்கிறார்கள்.
  2. மாதம் 15,000 ரூபாய் வருமானமுள்ள இந்த வீட்டில் 2 கோடி, 3 கோடி ஆர்டர் பேசப்படுகிறது.
  3. மார்க்கட்டிலுள்ள அத்தனைப் புது மாடல் கார்களும் வீட்டிற்கு வந்து போகின்றன.
  4. நகரத்தில் பெரியவர்கள் எனக் கருதப்படுபவர்கள் மத்தியில் நம் வீடும், கணவர், பெரியவன் பெயரும் அடிபட்டபடியிருக்கிறது.
  5. இவையெல்லாம் ஆரம்பமானால், முடிவு எது என மனம் வியக்கிறது.
  6. அனைவரும் காரணமின்றி அளவுகடந்து சந்தோஷமாகப் (ஆனால் பழையபடி மட்டமான பழக்கத்தில் ஊறியபடி) பேசுகின்றனர்.

  1. எவருக்கும் நடப்பது புரியவில்லை, பிடிக்கின்றது.

இந்த நேரம் நிதானம் தவறினால் விரிசல் விழும். வந்தது போக ஆரம்பிக்கும். அதை எவரிடமும் சொல்ல முடியவில்லை. பெரிய விஷயங்கள் நடக்கின்றன. பெரிய இடத்து அழைப்பு, அனைவருக்கும் வருகிறது. ஏற்காமலிருப்பது தவறு. ஏற்று எவரை எங்கு அனுப்பினாலும் மானம் போகும்படி நடந்துகொள்வார். வசதிகள் அளவுகடந்து - உரிமையேயில்லாத இடத்தில் - வருகின்றன. ஏற்றால், குடும்பம் அவற்றை அனுபவிக்கும்பொழுது அத்தனையும் ரத்தாகும் வகையில் நடந்துகொள்வார்கள் என்பதால் தாயார், சாட்சிப்புருஷனாக எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். எதிலும் கலந்துகொள்வதில்லை. எதையும் மனதால் மறுப்பதில்லை. எதையும் ஏற்பதில்லை. தாமரையிலையில் நீர்த்துளியாக வாழ்ந்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணிக்கு வயிறு கனப்பதுபோல் நெஞ்சம் நிறைந்து உள்ளே மனம் கனத்தது. மேற்கொண்டு என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்ற அறிவு இருந்தாலும் போதுமானதாக இல்லை. 4,5 பூனைகளிடையே எலிக்குஞ்சுகளைக் காப்பாற்றுபவர் போல இருந்தது தாயாரின் மருட்சி.

  • பிள்ளைகட்கோ, கணவனுக்கோ தங்கள் செயலின் குறைபாடு தெரியவில்லை. மாறாகப் பெருமைப்படுகிறார்கள். அவர்களோடு வாழவேண்டிய நிலை.
  • உள் மனம் தமக்கு அவர்கள் போலிருப்பதை அறிவு கூறினாலும், சொரணையில்லை.

வீட்டின் அந்தஸ்து உயர்ந்தபடியிருக்கிறது. கணவனும், பிள்ளைகளும் நிலையில்லாமல் இருக்கிறார்கள். இந்த நிலையில் கம்பனியில் பெரியவனுக்குக் கார் கொடுக்கப் போகிறார்கள். பிள்ளைக்கோ, கணவருக்கோ தகுதியில்லை. கார் வந்தால் 3 பேரும் தங்கள் கட்டுப்பாட்டிலிருக்கமாட்டார்கள். என்ன நினைப்பது எனத் தெரியவில்லை. கம்பனி கார் வந்தது. புதிய சௌகரியத்தை

அனுபவிப்பவர் நடைமுறை அத்தனையும் வெளிப்பட்டன. எவரும் தலைகால் புரியாததுபோல் நடக்கும்பொழுது தத்துவம் பேசும் நேரம் அதுவன்று. வெகு சீக்கிரம் எங்குப் போக வேண்டுமானாலும், யார் போக வேண்டும் என்றாலும் காரில்லாமல் போக மனமில்லை. போகமாட்டேன் என்று சொல்கிறார்கள் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

அனுபவிப்பவர் நடைமுறை அத்தனையும் வெளிப்பட்டன. எவரும் தலைகால் புரியாததுபோல் நடக்கும்பொழுது தத்துவம் பேசும் நேரம் அதுவன்று. வெகு சீக்கிரம் எங்குப் போக வேண்டுமானாலும், யார் போக வேண்டும் என்றாலும் காரில்லாமல் போக மனமில்லை. போகமாட்டேன் என்று சொல்கிறார்கள் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

பெண் : அம்மா, அண்ணன் சொல்வது சரியில்லையே.

தாயார் : அவன் கோயமுத்தூருக்குக் காரில்லாமல் போகமாட்டேன் என்கிறான். அந்தச் செலவு நமக்குத் தாங்காது.

பெண் : அது சரியா? காரிலே பிறந்து காரிலே வளர்ந்தவன் போலப் பேசுகிறானே.

தாயார் : பெரியவன் சொல்கிறான். மற்றவர்கள் சொல்வதில்லை. அவர்கள் மனதில் இருப்பதும் அதுவே. காரிலிருக்கிறது, பயன்படுத்துகிறோம் என்பது வேறு, எங்குப் போனாலும், யார் போனாலும் காரில்தான் போவேன் என்பது ரொம்பப் பெரிய நிலை. நாம் அப்படி நினைப்பதே தவறு.

பெண் : நீங்கள் பயப்பட்டது இதற்குத்தானா? அண்ணனிடம் பேசவே முடியவில்லையே. பேச்சை எடுக்கவே விடமாட்டேன் என்றால் என்ன செய்வது?

தாயார் : இந்த ஆபத்தைத் தாண்டியவரில்லை. நமக்கு உடனேயே வந்துவிட்டது.

பெண் : பார்ட்னர் பரம்பரையாகப் பெரிய குடும்பம். அவர் மகன் அரக்கோணம் பஸ்ஸில் போய்வந்தார். கார் ரிப்பேரானதால் பஸ்ஸில் போனார். அவர்களுக்கு மூன்று தலைமுறையாகக் கார் உள்ளது. எனக்கே மனம் ஒப்பவில்லை.



book | by Dr. Radut