Skip to Content

பகுதி 3

பெரியவனும், பெண்ணும் அது என்ன என்று கேட்டனர்.

பெரியவன் : நான் சொல்கிறேன், என்னிடம் காட்டு.

சிறியவன் : எனக்கு உன் விளக்கம் தேவையில்லை, அம்மா விளக்கம் தேவை.

பெரியவன் புத்தகத்தைப் பிரித்து குறித்த இடத்தைப் படித்தான்.

"அருளைப் பெற்றபின் தனக்கொரு சட்டம், பிறருக்கு ஒரு சட்டம்

என மனம் நினைத்தால், அருள் பின்வாங்கும்'' என்றிருந்தது.

பெரியவன் : இதில் என்ன புரியவில்லை. நம்மைப் போல் பிறர் இருப்பார் என நாம் அறிய வேண்டும்.

பெண் : ஓர் உதாரணம்மூலம் சொல்லேன்.

பெரியவன் : என்னைப் பார்ட்னர் அதிக மரியாதையுடன் நடத்துகிறார். என் நண்பன் பழையபடி பேசுகிறான். இது தவறன்றோ?

பெண் : புரியவில்லை.

பெரியவன் : பார்ட்னர் பெரியவர். அவரே நம்மை அவருக்குச் சமமாக நடத்தும்பொழுது, இந்த நண்பனுக்குப் புத்தியிருக்கா, இவன் என்னைப் பழைய நண்பனாக நடத்த விரும்புகிறான். இது தவறு.

பெண் : உனக்குள்ள முக்கியத்துவத்தை பார்ட்னர் ஏற்கும் பொழுது நண்பனால் ஏற்கமுடியவில்லை என்கிறாயா? அது சரி.

கணவர் வெளியிலிருந்து வந்தார். அவர் ஆபீசில் ஒருவர் இவரிடம் சண்டைக்கு வந்ததாகவும், மரியாதையில்லாமல் பேசியதாகவும் வருத்தமாகச் சொன்னார். பெரியவன் விஷயத்தைக் கேட்டு மகிழ்ந்தார்.

சிறியவன் : அம்மா, அண்ணன் உளறுகிறான். நீங்கள் சொல்லுங்கள்.

அம்மா : பார்ட்னர் உன்னைச் சமமாக நடத்துவதுபோல் நீ உன் நண்பனைச் சமமாக நடத்த வேண்டும். சட்டம் இருவருக்கும் ஒன்றே.

சிறியவன் : அண்ணனை அவன் நண்பன் திட்டியது சரியாம்மா?

பெண் : எனக்குப் புரியவில்லை. அண்ணாவும் அம்மாவும் சொல்வது ஒன்றா? வெவ்வேறா?

சிறியவன் : எதிரானவை.

அப்பா : பெரியவன் சொல்வது சரிதானே.

சிறியவன் : பார்ட்னரும், நண்பனும் தன் பெருமையை ஏற்கவேண்டும் என்பது அண்ணன் சட்டம். அம்மா சொல்வது எதிரானது.

பெண் : எது சரி? எப்படிச் சரியென்று தெரியவில்லை?

கணவர் சற்று யோசித்து நிதானித்து அம்மா சொல்வது சரி, பெரியவன் செய்வது சரியில்லை என்றார். காலிங் பெல் அடித்தது. வெளியில் போனால் ஆபீசில் சண்டை போட்டவர் மகன் வந்து தகப்பனார் சார்பாக மன்னிப்புக் கேட்டான். கணவருக்கு சந்தோஷம், தாம் நியாயத்தை ஏற்றவுடன் சண்டைக்காரன் மன்னிப்புக் கேட்பது புரியவில்லை. பெரியவன் சரி என்றவுடன் சண்டை வந்ததும் புரியவில்லை. மனைவிக்கு, கணவனுக்குப் புரியாவிட்டாலும் மனம் மாறுகிறார் என்று தெரிந்தது. பெண்ணுக்குக் குழப்பம் தீரவில்லை. அம்மாவைப் பிறகு கேட்கலாம் எனப் பேசாமலிருந்துவிட்டாள்.

பெண்ணும், சிறியவனும் அன்று மாலை அம்மாவைத் தேடிவந்து பல விஷயங்களைத் தெளிவுபடுத்தும்படிக் கேட்டனர்.

சிறியவன் : அம்மா, அண்ணனை மடக்க எனக்கு வழி சொல்லுங்கள். அதற்கு அன்னை உதவுவார்களா?

பெண் : அப்படியென்ன உங்கள் இருவருக்கும் போட்டி?

சிறியவன் : உனக்கு ஓர் அக்கா இருந்தால் தெரியும். நானா அவனைச் சீண்டுகிறேன். அவன்தானே என்னிடம் வம்புக்கு வருகிறான்.

பெண் : ஏம்மா இவர்கள் இருவரும் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள்? எத்தனையோ வீடுகளில் அண்ணன் தம்பி ஒற்றுமையாக இல்லையா?

தாயார் : ஒற்றுமையாக இருந்தால் காரியம் நடக்கும், நல்லது.

சிறியவன் : இப்போ, என்ன காரியம் கெட்டுப் போயிற்று? இதெல்லாம் என்ன தத்துவம்? இதெல்லாம் ஒரு சண்டையா? சும்மா போட்டா போட்டி.

தாயார் : தத்துவப்படி போட்டி ஒற்றுமையைவிட உயர்ந்தது.

பெண் : அது எப்படியம்மா?

தாயார் : மனம் மாறித் திருவுருமாறினால் போட்டி பெரிய ஒத்துழைப்பாகும். அதனால் பெரிய பலன் தரும்.

பெண் : நாமிருந்த இடம் புல் முளைத்துப் போயிருக்கும் என்பதற்கு நம்மூர் ரைட்டரை உதாரணமாகச் சொல்லலாமா?

தாயார் : இதே வார்த்தையை அவர் வாயாலே சொன்னார். அது அப்பொழுது. இப்பொழுது நிலைமை மாறிவிட்டது, மாறிப் பேசுகிறார்.

பெண் : எனக்கு அவர்கள் விஷயம் தெரியும். இருந்தாலும் ஒரு முறை கேட்கலாம் என நினைக்கிறேன்.

தாயார் : அவர்கள் கேஸ் தோற்றுப் போயிருந்தால், கல்யாணம் நின்று போயிருக்கும். அடுத்த மூன்று கல்யாணமும் நடந்திருக்குமா? ரைட்டர் சண்டைக்குப் போனார். தடுக்காவிட்டால் வேலை போயிருக்கும். அவரே ராஜினாமா செய்கிறேன் என்றார். அவையெல்லாம் நடந்திருந்தால், அப்புறம் என்ன இருக்கு?

பெண் : அவரா இன்று இப்படித் துரோகம் செய்கிறார்? ஏன் அது?

தாயார் : நமக்கே துரோகம் செய்தாலும், நாம் அதில் மனதாலும் கலந்துகொள்ள வேண்டாம். அவர்கள் செய்வது அவர்களுடன்.

பெண் : பையனுக்கு polio வந்தது, மனைவி இறந்துபோனாள், இவருக்குப் பாரிச வாயு வந்தது. அன்னை தண்டித்தாரா?

தாயார் : அன்னை தண்டிப்பதில்லை. ஊரில் காலரா உள்ளபொழுது வீட்டில் எல்லாப் பாதுகாப்புகளும் தந்தால், பெற்றுக்கொள்ள மாட்டேன் என வெளியில் போய் சாப்பிட்டுவிட்டு காலரா வந்தால் அன்னை தண்டித்ததாக அர்த்தமில்லை. அன்னைப் பாதுகாப்பிலிருந்து வெளியேறி அவதிப்படுவதாக அர்த்தம்.

பெண் : ஏன் அப்படி ரைட்டர் செய்தார்? நல்லவராச்சே.

தாயார் : நாமே வலியப் போய் உதவி செய்தால் திரும்ப அவர்கள் துரோகம் செய்யவேண்டும் என்பது வாழ்வின் சட்டம். அனுபவசாலிகளை அதற்கு விதிவிலக்குண்டா எனக் கேட்கலாம்.

பெண் : அன்னை என்ன சொல்கிறார்?

தாயார் : அவரவருக்கு ஒரு போக்குண்டு. அது சக்தி வாய்ந்தது. நாம் அதைக் கர்மம் என்போம். அதை அவரே மாற்றலாம். பிறர் மாற்றக்கூடாது, மாற்ற முடியாது. அவர்கள் கேட்டால் செய்யலாம்.

பெண் : நல்லவர் எப்படித் துரோகம் செய்வார்கள்?

தாயார் : நல்லவர் என்பதற்கு அளவுண்டு. அளவை மீறினால் நல்லவர் கெட்டவராவார்.

பெண் : புரியவில்லை.

தாயார் : கர்மம் கடுமையானது. ஒருவர் கர்மத்தின் பாதையை நாம் திருப்ப முயன்றால், அது நம்மைக் கடுமையாகத் தாக்கும். உனக்குப் புரியவில்லை என்றால், உனக்கு உதவி செய்தவர்க்கு நீ என்ன செய்திருக்கிறாய் என்று பார்.

பெண் : அத்தனை பேருடனும் சண்டை.

தாயார் : நீ உதவி செய்தவர்கள்.....?

பெண் : அவ்வளவு பேரும் விலகிவிட்டனர்.

தாயார் : நட்பு என்பது சமூக உறவு. கர்மம் என்பது சமூகத்தைக் கடந்தது. நட்பு சமூகத்தின் வரையறைக்குள்ளிருந்தால் நீடிக்கும்.

பெண் : நம் குடும்பத்தைப் பற்றிப் பேசுவோம்.

தாயார் : அது பேசக்கூடாது.

பெண் : அது தானே எனக்குப் புரியும்.

தாயார் : நான் அதைச் சொல்லக்கூடாது.

பெண் : பின், நானெப்படி அதைப் புரிந்துகொள்ள முடியும்?

தாயார் : அனுபவம் காட்டும்.

பெண் : இந்த ரைட்டர் விஷயத்தில் புரிகிற மாதிரி சொல்லக் கூடாதா?

தாயார் : அவரிடம் நமக்குப் பிரச்சினை என்பதேயில்லை. அவரே தம்மை நமக்கு எதிரியாகக் கருதி, எதிரியாக நடந்தார். நாமே அவருக்கு வலிய செய்த உதவி நமக்குப் பாதகமாகிவிட்டது.

பெண் : நினைக்கவே பயமாகயிருக்கே. அண்ணன், தம்பிக்கும் அதே சட்டமா?

தாயார் : சட்டம் அனைவருக்கும் ஒன்றே.

பெண் : எனக்குக் கல்யாணமானால் நான் அவரிடம் எப்படிப் பழகுவது?

தாயார் : நியாயப்படி, கடமையைச் செய்தால் தவறு வாராது.

பெண் : நாமே பிரியப்பட்டு நல்லது செய்யக்கூடாதா?

தாயார் : பிரியத்தைப் பிரியமாக ஏற்றுக்கொண்டால் தவறு வாராது. அல்லது நாம் செய்கிறோம் என அவர்களுக்கு புரியாவிட்டால் கஷ்டம் வாராது.

பெண் : நம்மை' அழித்துச் செயல்பட்டால் தவறு வாராதோ?

தாயார் : சட்டத்தின் மையமே "நாம்''தானே.

பெண் : பார்ட்னர் நமக்கு இவ்வளவு பெரிய விஷயத்தைச் செய்கிறாரே.

தாயார் : நாம் நன்றியோடு பெற்றால் நாம் அவர்கட்குத் தவறு செய்யமாட்டோம்.

பெண் : அப்படி ஒன்றிருப்பதாக யாருக்கும் தெரியவில்லையே.

தாயார் தம் மனத்தோடு போராடுவதில் பலன் தெரியவில்லை. மனத்தில் பலன் தெரியாவிட்டாலும், வெளியில் பெரும் பலன் வருவது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. கணவனும், பெரிய மகனும் வெளியில் போய் வந்தவர்கள் முகம் ஜொலிக்கின்றது. ஏதோ பெரிய காரியம் நடந்தது போலிருக்கிறது. தாயார் தாமே கேட்கக் கூடாது என்றிருந்தாலும், மனம் கேட்கிறது. மனத்தை அடக்கிக்கொள்கிறார். பிள்ளையோ கணவனோ பேசும் நிலையில்லை. பேசக்கூடாது என்றில்லை. அவர்களால் பேசமுடியவில்லை என்று தெரிந்து, உள்ளே போய்விடுகிறார். பெண் தன் தோழியுடன் வந்து அவளுடைய அக்கா வாழ்வில் புது மலர் பூத்திருப்பதாகக் கூறினாள். விவரம் கூறவில்லை. விபரம் கூற வந்ததாகத் தெரிகிறது. பேசும்பொழுது மற்றவர்கள் வந்துவிடுவார்கள் என்ற அச்சம். பேசப் பிரியப்படுகிறாள், ஆனால் பேசவில்லை. ஏதோ ஒரு புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தார்.

எல்லை வரைக்கும் வருவது கடினம். எல்லையைக் கடப்பது அதனினும் கடினம் என்றிருந்தது. தன் மனநிலையைச் சரியாகப் பிரதிபலிப்பதாக அறிந்தார். உள்ளே நிதானமேயில்லை. வெளியில் முழு நிதானத்துடன் செயல்படுகிறார். பூஜை அறையில் தியானத்திற்குப் போனால் தியானம் கூடவில்லை. அடுத்த பல நாட்களில் வழக்கமான தடையுள்ள இடங்களில் சூழல் தலை கீழே மாறிச் சாதகமாக இருக்கிறது.

1. Gas முடிந்துவிட்டால் போய் சொல்லி கேட்டு மெனக்கெட்டு காத்திருந்து வாங்கி வருவது வழக்கம். இன்று gas தீர்ந்தது. வெளியில் gas சிலிண்டர் சத்தம் கேட்கிறது. எப்படி நடந்தது எனப் புரியவில்லை.

2. போன் ரிப்பேரானால் 10 நாட்களாவது காத்திருப்பது வழக்கம். ரிப்பேர் கம்ப்ளெயிண்ட் கொடுக்கப் போனபொழுது எதிரில் போன் ஆட்கள் வருகிறார்கள். ரிப்பேர் செய்துவிட்டுப் போகிறார்கள்.

3. T.V.. அடிக்கடி ரிப்பேராவது 10 நாட்களாக எந்தக் குறையுமில்லாமல் வேலை செய்கிறது.

4. சிறியவன் வாரத்தில் 2 அல்லது 3 முறைகள் எதையாவது தொலைத்துவிட்டுத் தேடுவான். 10 நாட்களாக அதுவுமில்லை.

5. கரண்ட் தினமும் 2 மணி இருக்காது. 10 நாட்களாக 1/2 மணி இருப்பதில்லை. முக்கிய நேரத்தில் கரண்ட் தவறுவதில்லை.

6. 3 நாட்கள் தொடர்ந்து மாத்திரை தேடாமலிருந்ததில்லை. 10 நாட்களாக மாத்திரை என்ற பேச்சேயில்லை.

7. பெரியவன், சிறியவன், கணவர், பெண், வீடு ஆகிய இடங்களிலிருந்து சிறு சிறு நல்ல விஷயங்கள் தொடர்ந்து வருகின்றன.

மனைவிக்கு பாக்டரிதான் முக்கியம். மேற்சொன்னவை மனத்திற்கு அபாரதிருப்தி. விஷயம் பாக்டரியிலில்லை,

மனத்திலுள்ளது என்பவை மேற்சொன்ன சிறிய விஷயங்கள் காட்டுகின்றன. மனத்தை பாக்டரியிலிருந்து திருப்பி நடைமுறைக் காரியங்களில் நாம் செய்ய வேண்டியதை நாம் நிறைவாக - குறைவற - செய்தால் பாக்டரி விஷயம் தானே பூர்த்தியாகும் என்று மனம் மணியடித்தாற்போல் கூறுகிறது. இந்தத் தெளிவு அவர் மனப்பாரத்தை இறக்கி வைத்தது. பெண்ணோடு இதர பக்தர்கள் விஷயங்களைப் பேசும்பொழுது தெளிவு ஏற்படுவதையும், மனத்தால் எரிச்சல், குறைபடாமலிருந்தால் சூழல் மாறுவதையும் பார்த்தபின் பிள்ளைகளுடன், கணவருடன் மேற்சொன்ன விஷயங்களைப் பேசுவது என முடிவு செய்து முடிவைச் சமர்ப்பணம் செய்தார், சமர்ப்பணமாயிற்று.

தாமே போய் அதைச் செய்யக் கூடாது. அவர்கள் வந்து கேட்கும்வரைக் காத்திருப்போம் என்பது முடிவு. இம்முடிவு சற்று சந்தோஷம் தருவதையும் கண்டார். இம்முடிவை எடுத்தவுடன், கணவனும், பெரியவனும் பார்ட்னர் விஷயங்களைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டனர். பெண் அன்னையைப் பற்றி மேலும் அறிய விரும்பி அகம் - புறத்தைப் பற்றிக் கேட்டாள். தாயார் அவளுக்கு ஓர் அமெரிக்கப் பெண்மணியின் அனுபவத்தை எடுத்துக் கூறினார். காதரீன் என்ற இப்பெண் பெரிய சம்பளம் பெறுபவர். விவாகரத்து செய்து இரு மகன்களுடன் வசிக்கிறார். இரு பிள்ளைகளும் மதுவாலும், போதையாலும் பாதிக்கப்பட்டவர்கள். அன்னையை அறிந்தபின் பிள்ளைகள் வாழ்வில் தொந்தரவு குறைந்து நல்ல முன்னேற்றம் தெரிந்தது. அளவுகடந்து குடித்த காதரீன் குடிப்பதைக் குறைத்துவிட்டாள். நான்கு நாட்கள் ஒரு கம்பெனியில் ஆபீசராக வேலையை ஏற்று, வாரத்தில் மீதி 3 நாட்கள் தன் வியாபாரத்தை நடத்தினாள்.

வேலையில் ஆபீசராகச் சேர்ந்தார். இவர் கீழே வேலை செய்யும் பெண் ஒருத்திக்கு $85,000 சம்பளம். இது பெரிய சம்பளம். இக்கம்பெனியில் யூனியன் உண்டு. யூனியன் உள்ள கம்பெனி

தலைவலி. வேலை செய்யாவிட்டாலும் ஆட்களை அனுப்ப முடியாது. அனுப்புவதானாலும் செலவு அதிகம்; நாளாகும். $85,000 சம்பளம் பெற்று வேலை செய்யாத பெண்மணியை யூனியன் இருப்பதால் அனுப்ப முடியவில்லை. காதரீன் வேலையில் சேர்ந்தபொழுது முதலாளி அவருக்குக் கொடுத்த முதல் வேலை அப்பெண்மணியை வேலை நீக்கம் செய்வது. அந்த நிபந்தனை பேரில் காதரீன் வேலையை ஏற்றார். முதலாளி, "யூனியனிருப்பதால் எங்களால் இப்பெண்ணை வேலையிலிருந்து எடுக்க முடியவில்லை. அப்படி எடுக்க முடிந்தால், சட்டதிட்டங்களைப் பின்பற்ற 18 மாதங்கள் ஆகும். உங்களால் செய்ய முடிந்தால் நன்றியுடனிருப்பேன்'' என்றார். காதரீன் ஒத்துக்கொண்டார்.

காதரீன் அப்பெண்மணியுடன் பேசினார். ரொம்ப நாள் யோசனை செய்தபின் புறத்தை அகத்தால் வெல்ல முடிவு செய்தார். அப்பெண்ணின் குணங்கள் தனக்கிருப்பதைக் கண்டார். அவற்றை விலக்க முடிவு செய்து உள்ளே வேலையை மேற்கொண்டார். 3, 4 வாரங்கள் கழித்து அப்பெண் காதரீனிடம் வந்து தானே வேலையை விட்டுப்போகிறேன் என்றாள். அதை முதலாளியிடம் காதரீன் கூறியபொழுது அவரால் நம்பமுடியவில்லை.

புறவெற்றி அகக்கட்டுப்பாட்டில் உள்ளது.

  இதைக்கேட்ட பெண் தாயாரை வியந்தாள். மேலும் மேலும் அன்னையைப் பற்றி அறிய விரும்பினாள். அதுபோல் தம் வீட்டில் எவற்றைச் செய்யலாம் எனக் கேட்டாள். பெண் ஆர்வமாகக் கேட்பது தாயாருக்குச் சந்தோஷம். பெரியவன் பார்ட்னருக்கு ஒரு சட்டம், நண்பனுக்கு ஒரு சட்டம் - இரண்டும் தனக்கு சாதகமானவை - எனப் பேசுகிறான். அறிவில்லாதவனில்லை. சுயநலத்தைச் சரி எனப் பேச அறிவைப் பயன்படுத்துகிறான். இவனுக்கு எதைச் சொல்ல முடியும்? அது சரி என அப்பா பேசுகிறார். மனமாற்றத்திற்கு இங்கு வழி ஏது? என்பது தாயாரின் சிந்தனை. அந்த அளவுக்குத் தாயார் மனம் மாற வேண்டுமானால், அது முழு யோகமாகிறது. யோகமும்,

யோக வாழ்வும் ஒரே மாதிரியானவை. ஒரு டிபார்ட்மெண்டில் கிளார்க் கடைசி வேலை. செக்ரடரி, இலாக்கா தலைவர் என்றாலும் ஊழியருக்குண்டான சட்டம் இருவருக்கும் பொது. இரண்டு பேருக்கும் வருஷத்தில் 12 நாட்கள் casual leave. தலைவருக்கு அதிக நாளும், குமாஸ்தாவுக்கு குறைந்த நாளும் இல்லை. நிலை மாறுபட்டாலும் செக்ரடரியும், குமாஸ்தாவும் சர்க்கார் ஊழியர்களே. அதேபோல் மனித வாழ்விலிருந்து விலகி அன்னை வாழ்வுக்கு வந்தால் - பிரைவேட் கம்பெனி வேலையிலிருந்து சர்க்கார் வேலைக்கு வந்தால் - வாழ்வின் தரம் மாறும். யோக வாழ்வு என்பது கிளார்க் வேலை போன்றது. யோகம் செக்ரடரி வேலை போன்றது. வாழ்விலிருந்து அடிப்படையில் மாறாமல் அன்னை வாழ்வுக்கு வர முடியாது. தாயார் யோக வாழ்வை அடியில் ஏற்கத் தயார், சிகரத்தில் ஏற்பது சிரமம்.

சிறியவன் தாயாரிடம் வந்து நம்மூருக்கு ஜனாதிபதி வரப்போகிறார் என்று கூறினான். ஜனாதிபதி இங்கு வருவது இதுவே முதல் முறை. தாயாருக்கு "அன்னை நமக்கு அதிர்ஷ்டமாக வருவதை, ஜனாதிபதி நம்மூருக்கு வருவது காட்டுகிறது'' என்று புரிந்தது. எவரிடம் இதைக் கூறினாலும் சிரித்துவிடுவார்கள்.

  • சூட்சுமச் செயலை சூட்சும உடலின் நன்றியால் வரவேற்று,
  • செயலால் ஆதரவு அளித்து,
  • மனத்தின் உணர்வால் போற்றினால்

வருவது பலிக்கும், நிலைக்கும்.

  • பராமுகமாக இருந்தால் வந்தது சொல்லாமல் போய்விடும்.
  • கடுமையாகப் பேசினால் அதன்மீது அடி விழும்.
  • கேள்வி எழுப்பினால், பதில் சொல்லாமல் போய்விடும், அந்தக் கேள்வியை நம்மிடம் ஆயிரம் பேர் அடுத்த 10 ஆண்டிற்குக் கேட்பார்கள்.
  • அவசரப்பட்டால், தள்ளிப்போகும்.

  • கேலி செய்தால், நாம் கேலிக்குரியவராவோம்.

அதனால் இந்த அற்புதமான எண்ணத்தை வெளியிட நம் வீட்டில் எவரும் இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கும்பொழுது கணவர் வந்து இதே செய்தியை மீண்டும் கூறி, இது நமக்கு எதைக் காட்டுகிறது என்றார். மனைவிக்கு ஆச்சரியம், சந்தோஷம். அதுவே நல்ல நேரம் எனப் பேச ஆரம்பித்தால் அடுத்தாற்போல் கணவர் என்ன சொல்வார் என்று தெரியாது என்பதால், "ஊருக்கு அதிர்ஷ்டம்'' என்பதுடன் நிறுத்த முயன்றார். அதைக் கேட்கவில்லை, நமக்கு என்ன சொல்கிறது எனக் கேட்கிறேன்' என்றார். நமக்கும் அதிர்ஷ்டம்' என்று பதில் கூறினாள். ஊர் அதிர்ஷ்டம் நமக்கு வருகிறதா? நம் அதிர்ஷ்டம் ஊருக்கும் வருகிறதா?' என்று கணவர் கேட்டபொழுது இவருக்குப் புரிய ஆரம்பிக்கிறது என்று நினைத்து, அன்னை விஷயம் பெரியதன்றோ?' என்றாள். அதன்பின் அவரிடம் இதுவரை சொல்லாத செய்தியைச் சொல்ல முயன்றார்.

கணவர் : பார்ட்னர் என்னையும், பெரியவனையும் அவர் நண்பர் ஒருவர் வீட்டிற்கு அழைத்துப் போய் அறிமுகம் செய்தார். அங்கு மத்திய சர்க்கார் அதிகாரி ஒருவரிருந்தார். அவரையும் அறிமுகப்படுத்தினார். இருவரும், நீங்கள் எங்கள் ஊருக்கு - பம்பாய், டெல்லி - வந்தால் என்னை வந்து பாருங்கள்' என்றனர். இவையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாதன. அதன்பின் ஒரு வாரம் எனக்கு மனம் ஒரு நிலையில்லை. உன்னிடமும் என்னால் பேசமுடியவில்லை. இவையெல்லாம் பெரிய விஷயங்கள். நல்லபடியாக நடக்க நான் என்ன செய்ய வேண்டும்?

மனைவி : என்னவோ பெரிய காரியம் நடந்ததாக அறிந்தேன்.

கணவர் : நான் கேட்டதற்குப் பதில் சொல்லவில்லையே.

மனைவி : அன்னை, இதுபோன்ற நேரத்தில் நாம் நன்றியுடையவராக இருக்கவேண்டும் என்கிறார்.

இந்தச் சமயம் பெண் வந்து தாயாரை வேறு வேலையாக அழைத்துப் போய்விட்டாள். தாம் கேட்ட கேள்விக்கு மனைவி சரியான பதில் சொல்லவில்லை என கணவருக்குக் கோபம். கணவர் கேட்ட கேள்விக்குச் சரியான பதில் சொன்னால் சண்டை வரும் என்று மனைவிக்குத் தெரியும். இப்பொழுது செய்யக்கூடியது சமர்ப்பணம் மட்டுமே. அது மட்டும் தனக்குப் பிடிபடாதது என மனைவி அறிவார்.

பெண் மீண்டும் வந்து அம்மாவிடம் அன்னையைப் பற்றிக் கேட்டாள். ஏன் அப்பா கோபமாக இருக்கிறார் என்றாள். தாயார் பெண்ணிடம் பேசும்பொழுது, சிறிய கடைக்காரனை மந்திரி பெரிய மனிதனாக்கியதை விளக்கிக் கூறினார். கடைக்காரன் கொஞ்ச நாளில் பெரிய மனிதனாகி, எல்லோரையும் அதிகாரம் செய்ய ஆரம்பித்து அனைத்தையும் இழந்தது பெண்ணிற்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றாள். ஏன் இப்படி நடக்கிறது எனத் தாயாரைக் கேட்டாள். தாயார் : இது யார் விஷயத்தில் நடக்கவில்லை?

பெண் : ஏன் என்பதே என் கேள்வி.

தாயார் : அளவுக்கு மீறி அதிகாரம் வந்தால் நிலைகுலைவது இயற்கையல்லவா?

பெண் : இதுவரை வாழ்வில் உயர்ந்தவர்கள் எப்படி உயர்ந்தார்கள்?

தாயார் : 1) பரம்பரையாக வந்த அந்தஸ்து

2) பெரிய படிப்பும், பண்பும் உள்ளவர்க்குத் திடீரென உயர்ந்த அந்தஸ்து வந்தால் அப்பண்பு காப்பாற்றுகிறது.

3) அடக்கத்தின் உயர்வை எக்காரணத்தாலோ அறிந்தவர்க்கு அடக்கம் படிப்பு, பண்பு ஆகிய இரண்டும் செய்வதைச் செய்யும்.

பெண் : நமக்கு எதுவுமில்லையே. இந்த பாக்டரி நமக்கு நிலைக்குமா?

தாயார் : நமக்கு அன்னையிருக்கிறார். அவரை ஏற்றால் காப்பாற்றுவார்.

பெண் : அன்னையை ஏற்பது என்றால் என்ன?

தாயார் : அடக்கம், பணிவு, பண்பு சேர்ந்தது அன்னையாகும். நாம் நம்மை மீறிச் செயல்பட வேண்டிய நேரங்களில் அன்னை சந்தர்ப்பத்தை மாற்றிக் காப்பாற்றுவார்.

பெண் : விளக்கமாகச் சொல்லுங்களேன்.

தாயார் : அசம்பாவிதமாகப் பேசுபவர் தம் காரியத்தைத் தாமே கெடுத்துவிடுவார். அவர் பேச ஆரம்பிக்குமுன் அன்னை வேறொருவரை வரச் சொல்லி நிலைமையைக் காப்பாற்றுவார்.

பெண் : அதைவிட நாமே அடக்கமாக இருப்பது நல்லது.

தாயார் : அதை யாரிடம் சொல்ல முடியும்? பாக்டரி வருவதற்குள் நண்பனைப் பெரியவன் அதிகாரம் செய்கிறான். அது ஆபீசில் சண்டையாக வருகிறது.

பெண் : அண்ணனைக் கூப்பிட்டு கண்டிக்க வேண்டும்.

தாயார் : அவனால் முடிந்த விஷயத்தைக் கண்டித்தால் செய்வான். இது அவன் சுபாவம், அவனுடைய கட்டுப்பாட்டில்லை.

பெண் : அதற்காக பாக்டரி கெட்டுப்போனால், அப்பா சொல்லக் கூடாதா?

தாயார் : தம்மால் முடியாததைப் பிள்ளையைச் செய்யச் சொன்னால் நடக்குமா?

பெண் : அப்பாவே அண்ணாபோலத்தானிருக்கிறார்.

தாயார் : மதர்கிட்டேதான் சொல்லணும்.

பெண் : நீங்கள் சொல்வதைப் பார்த்தால், அதிர்ஷ்டம் வர பண்புதான் முக்கியமா?

தாயார் : உழைப்பு, சாமர்த்தியம், சாதுர்யம், உஷார் இருந்தால் பணம் வந்துவிடும். அதைக் காப்பாற்ற பதம், பக்குவம், அடக்கம், பண்பு வேண்டும்.

பெண் : இவையெல்லாம் இல்லாதவர்க்குப் பணம் ஏராளமாக வருகிறதே.

தாயார் : வந்த காலத்தில் இந்த அடக்கம் இருந்திருக்கும். பணம் வந்தபின் அடக்கம் போய்விடும். அது போனால், பின்னாலேயே பணமும் போகும்.

பெண் : அதனால்தான் 30 ஆண்டு வாழ்ந்தவனில்லை என்றார்களோ? எப்படி ஒருவர் மட்டும் 100 கோடிக்கு மேல் சம்பாதித்தார்?

தாயார் : இந்தக் குடும்பம் பரம்பரையாகச் சில நல்ல குணங்களை உடையது. 1) எவரையும் மறுத்துப் பேசாத பழக்கம் பரம்பரையானது.

2) அவர்கள் ஊர் சற்று பண்பான ஊர். சுயநலம் குறைவான மக்கள். பிறரை உதவி

கேட்கமாட்டார்கள். திறமையான உழைப்பாளிகள். மலர்ந்த முகம் உடையவர்கள்.

3) அக்குடும்பம் 100 காணி நிலம் உடைய குடும்பம்.

4) இரவு பகலாக உழைப்பவர்கள்.

5) முக்கியமாக தமக்குரிய உரிமையைக் கேட்டுப் பெறமாட்டார்கள். தானே வந்தால் பெற்றுக் கொள்வார்கள்.

முதற்குணம் அடக்கம், பரம்பரையில் பண்புள்ளது, சொத்துள்ளது, உழைப்பு. எல்லாவற்றிற்கும் மேலாக உரிமையைக் கேட்பதில்லை என்றால் உரிமையில்லாதது எல்லாம் வரும்.

பெண் : நம் வீட்டிலுள்ள நல்ல குணம் ஏதாவது கூறமுடியுமா?

தாயார் : அன்னை வருவதை முயன்று எதிர்க்கமாட்டார்கள்.

பெண் : அப்படியும் மனிதர்கள் உண்டா?

தாயார் : ஏராளம். "இந்த மதர் எனக்கு வேண்டாம்'' என்பது மந்திரம்போல் ஒலிப்பது.

பெண் : எனக்குத் தெரியாதே.

தாயார் : ஜெர்மனியில் பயிற்சியான தொழில் அதிபர் 11 இலட்ச வியாபாரம் 50 இலட்சமானபின், வண்ணான் மனையை எடுத்துக்கொண்டு போனது திரும்பிவந்தபின், இரண்டு கண்களும் பார்வையிழந்து டாக்டர் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றபின் பார்வை வந்தபின், அன்னை disciplineகளைக் கேட்டு, "இப்படித் தெரிந்திருந்தால் நான் வந்திருக்க மாட்டேன்'' என்று போனவர்தான்.

பெண் : என்னால் நம்பமுடியவில்லை.

தாயார் : மதரிடம் வந்து ஆபத்து விலகியபின் அல்லது 5 மடங்கு சொத்து பெருகியபின், நடக்காதது நடந்தபின், "இந்த மதர் வேண்டாம்'' என்று சொல்லாதவரில்லை.

பெண் : ஏன்?

தாயார் : அன்னைச் சூழல் மனிதர் மாறாமல் ஓர் அளவுக்குச் சாதிக்கும். பொதுவாக இது இரண்டு முதல் 10 மடங்காக இருக்கும். படிப்பு, பண்பு, அடக்கத்தைப் பொருத்து ஒரு கட்டத்தில் மேலும் அருள் பெற அல்லது வந்ததைக் காப்பாற்ற மனிதன் மாற வேண்டும். அக்கட்டத்தில் இதைச் சொல்லாதவர் இல்லை.

பெண் : அப்போ, மனிதன் மாற சம்மதிக்க மாட்டான் என்றாகிறது.

தாயார் : ஆமாம்.

பெண் : இதற்கு வழி என்ன?

தாயார் : 100 வருஷத்திற்கு முன் படிப்பு வந்தபொழுது உடனே ஏற்ற ஏழைக் குடும்பங்கள் அனைத்தும் இன்று டெல்லி

 வாஷிங்டன், சென்னையில் முதல் வரிசையில் உள்ளனர். அன்று படிப்பை ஏற்காதவர்கள் இன்று கடை வியாபாரி, விவசாயி, குமாஸ்தா என உள்ளூரில் இருக்கின்றனர்.

பெண் : காலம் மாறும்பொழுது, மாற மறுப்பவருக்குக் காலத்தால் பயனில்லை.

தாயார் : அன்னை யுகத்தை மாற்றிவிட்டார்.

பெண் : அதற்கேற்ப மாற முடியவில்லை.

தாயார் : வரப்போகும் பலனுக்காக இன்று மாறுவது சுபாவமில்லை.

பெண் : நம் வீடு எப்படி?

தாயார் : விலக்கன்று.

பெண் : எதுவும் செய்ய முடியாதா?

தாயார் : தங்கம் கட்டியாக வழியில் விழுந்தபின், கண்ணை மூடிக்கொண்டால் என்ன செய்வது?

பெண் : ஏதாவது செய்யாமலிருக்கக் கூடாது.

தாயார் : எது செய்வதானாலும் உள்ளே - அகத்தில் - செய்ய வேண்டும்.

பெண் : இதில் ஏதோ பெரிய சிரமம் உண்டு போலிருக்கிறது. அதைச் சொல்லுங்களேன்.

தாயார் : அடக்கம், படிப்பு, பண்பு எல்லாம் சத்தியத்தில் அடங்கும்.

பெண் : நாமெல்லாம் பொய் சொல்கிறோமா?

தாயார் : நாம் சொல்லும் மெய் எல்லாம் பொய்.

பெண் : புதிர்.

தாயார் : திருட்டுக் கும்பலில் உண்மை என்றால் என்ன?

பெண் : எவரையும் காட்டிக் கொடுக்காமலிருப்பது.

தாயார் : திருடர்கள் ஒருவருக்கொருவர் உண்மையாயிருப்பது திருட்டைக் - பொய்யை - காப்பாற்ற.

பெண் : நாம் என்ன அப்படித் தவறு செய்கிறோம்?

தாயார் : சிறிய விஷயத்திலும், மிகச் சிறிய விஷயத்தில் அது வெளிப்படாமலிருக்காது. ஆனால் அங்கு அது புரியாது. மிகைப்படுத்திக் கூறினால் புரியும்.

பெண் : இரண்டையும் சொல்லுங்க.

தாயார் : ஒரு கத்தரிக்கோலை எடுத்து பேப்பரில் ஒரு துண்டு வெட்டியபின் அண்ணன் என்ன செய்வான்?

பெண் : வெட்டியதை எடுத்துக் கொண்டு மீதிப் பேப்பரை அங்கேயே கத்தரிக்கோலுடன் வைத்துவிட்டுப் போய்விடுவார்.

தாயார் : மனிதனுக்கு choice எந்த நேரமும் உண்டு. அண்ணன் செய்வது பொய். கத்தரிக்கோலுக்கு, பேப்பருக்கு, வேலைக்கு, தனக்குப் பொய். பேப்பரை மடித்து இடத்தில் வைத்துவிட்டு, கத்தரிக்கோலை எடுத்த இடத்தில் வைப்பது தனக்கும், பொருள்கட்கும் மெய்.

பெண் : இதுதான் choice என்பதா?

தாயார் : 1 இலட்சத்திற்கு வாங்கிய சொத்து, 6 வருஷத்தில் 9 இலட்சமாயிற்று.

பெண் : அது அருளால் நடந்ததா?

தாயார் : நான் பேசுவன எல்லாம் அருளின் செயல்கள்தாமே. அவசரப்பட்டு 3 3/4 லட்சத்திற்கு விற்றார். எந்த நிர்ப்பந்தமுமில்லாதபொழுது அவசரம் உள்ளிருந்து வருகிறது. உலகமே தடுத்தது. விற்றார். அடுத்த 11 வருஷத்தில் 76 இலட்சமாயிற்று. உழைத்தவர்

 

பெறவில்லை. ஏன்? அவர் குடும்பத்தில் உழைப்பின் பலன் பிறருக்குப் போகும் என்ற சாபம். சாபத்தை மாற்றும் அன்னை வந்தபின் அவசரம் செயல்பட்டது.

பெண் : யோகக் காரணம் உண்டா?

தாயார் : இவருக்குப் பணத்தைவிட மனைவி தம்மைப் பணக்காரர் என நினைக்கவேண்டும் என்பது முக்கியம்.

பெண் : எந்தப் பெண்ணும் அந்தப் பெருமையைக் கணவனுக்குத் தரமாட்டாள்.

தாயார் : இந்தப் பெண்ணும் தரவில்லை. நீ ஏழை எனச் சுட்டிக் காட்டினாள்.

பெண் : இது அருள் செயல்படும் வகையா?

தாயார் : இது அருள் வந்தபின் அகந்தை செயல்படும் வகை. பெண் : மிகைப்படுத்திக் கூற உதாரணம்.

தாயார் : வீட்டில் பையன் ஓடி ஒளிந்துகொள்கிறான். அவன் எறிந்த கல் குழந்தைமீது பட்டுப் பெரிய காயமாகி துரத்தி வருகிறார்கள். உன் பேச்சை அவர்கள் நம்புவார்கள் எனில் நீ தம்பியைக் காட்டிக் கொடுப்பாயா? பொய் சொல்வாயா?

பெண் : பெரிய ஆபத்தாயிற்றே. ஆபத்திற்குத் தோஷம் இல்லையே.

தாயார் : இங்கு ஒரு பெரிய யோக ரகசியம் உண்டு. நீ பொய் சொன்னால் உன்னைக் கடந்து அவனைப் பிடித்து விடுவார்கள். உண்மை சொல்ல முடிவு செய்தால்

உன் உண்மை தம்பியைக் காப்பாற்றும். உண்மையின் சக்தியைத் தெரிந்தவரே இதைப் புரிந்துகொள்வார்.

பெண் : உதாரணம்.

தாயார் : இன்டர்வியூவில் தான் அனுப்பிய சர்ட்டிபிகேட் பொய் என்று கூறிய பையனுக்கு அட்மிஷன் கிடைத்தது.

பெண் : நம் வீட்டு விஷயத்தில் சொன்னால் புரியும்.

தாயார் : வரும்பொழுது சொல்கிறேன்.

பெண் : மிகச்சிறிய விஷயம் மிகப்பெரிய விஷயத்தை நிர்ணயிக்கிறது.

தாயார் : கார் வாங்கிப் பரிசு கொடுத்தவர் 3 நாள் உபயோகத்திற்குக் கார் கேட்டபொழுது கொடுக்க மனமில்லாமல் மறுத்தவனுக்கு அச்செயலால் எவ்வளவு பெரிய வாய்ப்பு - பிரபலம் பெறும் வாய்ப்பு - அதே நேரம் ரத்தானது கண்ணில் படவில்லை.

பெண் : அப்படியானால் தெரிவது முக்கியமில்லையா?

தாயார் : தெரியாமல் எதுவும் செய்ய முடியாது. தெரிந்தாலும் செய்வது முக்கியம்.

பெண் : செய்வது மனம் மாறுவதா?

தாயார் : ஆமாம். மனம் மாறினால், மாற முடிவு செய்துவிட்டால், பிறகு கண்ணில்படும், மனதில்படும். இல்லையேல் இல்லை.

பெண் : இதற்கு மேலும் உண்டா?

தாயார் : உண்டு. இதுவேதான், நமக்கு வரும் அதிர்ஷ்டம் எல்லாம் ஆபத்தாக வரும் என்று அறியவேண்டும்.

பெண் : இதுவரை அப்படி நீங்கள் பேசியதில்லையே.

தாயார் : தடைகளெல்லாம் வாய்ப்புகள்.

பெண் : அதைச் சொல்கிறீர்களா?

தாயார் : தடையை வாய்ப்பாக அறிபவன் அன்னை பக்தன்.

பெண் : கேட்க பயமாயிருக்கு.

தாயார் : இந்த பாக்டரி வருமுன் அப்படி ஒரு விஷயம் நடந்தது. அப்பாவுக்கு அளவுகடந்த கோபம். என் தகப்பனார்மீது கோபம். காரணமேயில்லை. நான் இதைப் புரிந்து கொண்டேன். நான் கோபப்படக்கூடாது என முடிவு செய்தேன். முடியவேயில்லை. ஒரு மாத மனப்போராட்டம் வென்றது. ஒரு நாள் அப்பாவுக்கு நடந்த உண்மை தானே தெரியவந்தது. நான் எடுத்துச் சொல் இருந்தால் ஏற்றிருக்கமாட்டார். இவருடைய அர்த்தமற்ற கோபத்தை என்னால் பொறுக்க முடியவில்லை. பொறுத்துக்கொள்ள முயன்றால் மேலும் மேலும் கோபத்தைக் கிளறுகிறார். நான் பேசிக்கொண்டே இருக்கிறேன், பதில் சொல்ல மாட்டாயா? எனவும் கிளறுகிறார். 4 கட்டங்கள் பொறுத்தேன். 5ஆம் கட்டம் பொறுக்க முடியவில்லை. அன்று விஷயத்தை வெளிப்படையாகப் பேசுவது என்று முடிவு செய்தேன். அன்று ஊருக்குப் போய்விட்டார். நான் அடுத்தாற்போல் படித்தவையெல்லாம் தடை சோதனை', Difficulties are opportunities, உள்ளே பார், உள்ளே மட்டும் பார்' என்றே வந்ததால் சற்று மனம் மாறினேன். ஊரிலிருந்து வரும்பொழுது பார்ட்னர் விஷயத்துடன் அப்பா வந்தார்.

பெண் : ஆச்சரியமாக இருக்கிறது. அப்பாவும் உங்களைப் போலிருந்தால் நல்லது.

தாயார் : பருத்தி புடவையாகக் காய்க்கும்.

பெண் : அப்பாவிடம் இப்பொழுது சொல்லக்கூடாதா?

தாயார் : நடந்ததும் கெட்டுப் போகும். பிரச்சினை என்பது வாய்ப்பு என்பதை முதன்முறையாக அனுபவத்தால் நான் கண்டது இது.

பெண் : இந்த நிகழ்ச்சிமூலம் பிரச்சினை எப்படி வாய்ப்பாகிறது என்று சொல்லம்மா.

தாயார் : பிரச்சினை என்பது மனம் கட்டுப்படாத உணர்ச்சி. கட்டுப்படுவதற்குப் போதுமான தெம்பு மனத்தில் இல்லை என்பது புறத்தில் பிரச்சினையாக உருவாகிறது.

பெண் : அகம் கட்டுப்படாவிட்டால் புறம் பிரச்சினை என்று கூறலாம்.

தாயார் : அதுவே சரி. கட்டுப்படாத அகம் கட்டுப்படுவது வெற்றி.

பெண் : அது அகத்தின் வெற்றி. அப்படியானால் அது புறத்தில் வாய்ப்பு.

தாயார் : எப்படி பிரச்சினை வாய்ப்பாக மாறுகிறது எனப் புரிகிறதா?

பெண் : சொல்வது புரிகிறது. மேலும் ஏதேனும் உண்டா?

தாயார் : நம்மால் தீர்க்க முடியாத பிரச்சினை நமக்கு வாராது.

பெண் : அது என்ன?

தாயார் : நம்மூரில் இல்லாத பொருளை நாம் அறிய முடியுமா? நாம் அறிவோம் என்றால் அது நம்மூரில் உள்ளது எனப் பொருள்.

பெண் : சரி, பிரச்சினை வந்துவிட்டது. நாம் தீர்க்கலாமா?

தாயார் : தீர்க்கலாமா, வேண்டாமா என்பது choice. வேண்டாம் என்பவன் வெறும் மனிதன். வந்த பிரச்சினையை அவசியம் தீர்க்கவேண்டும் என்பது அன்னை பக்தன்.

பெண் : தீர்த்தால் அது வாய்ப்பாகுமா?

தாயார் : என் மனக்குமுறலை நான் தீர்க்க முடியவில்லை. வெடிப்பது என முடிவு செய்தேன். நான் தீர்க்காவிட்டாலும், அன்னை தீர்த்துவிட்டார். அது சூழலின் வலிமை.

பெண் : சூழலுக்கே அவ்வலிமையுண்டென்றால், நீங்களே அதை மனத்தில் தீர்த்திருந்தால்,

தாயார் : அது பெரியது.

பெண் : அன்னையைப் பற்றி அனைத்தையும் தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறது.

பெரியவனுடைய நண்பன் ஒருவன் வீட்டிற்கு வந்து சிலநாள் தங்கினான். மிகவும் நல்லவன். இவனுக்கு நெருங்கிய நண்பன். டேய்' எனக் கூப்பிட்டுக்கொள்வார்கள். பெரிய குடும்பத்துப் பையன். மிகவும் உயர்ந்த குடும்பத்துப் பையன். ஒரு நாள் இருவரும் தனியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

நண்பன் : நான் உன்னிடம் சில விஷயங்களைப் பற்றிப் பேசச் சந்தர்ப்பம் எதிர்பார்த்தேன். அது இப்பொழுது

கிடைத்துவிட்டது. இன்றும் அவற்றையெல்லாம் நான் எழுப்பமாட்டேன். உன்னுடைய புதிய பார்ட்னரைப் பற்றி நீ பேசியபிறகு நான் அவரைப் பார்த்தேன்.

பெரியவன் : நீ எங்கே அவரைப் பார்த்தாய்? பேசவில்லையே. ஒரு ஐந்து நிமிஷம்கூட பார்த்திருக்கமாட்டாயே.

நண்பன் : பார்த்தால் தெரியலியா? அவர் சொந்த ஊரைப் பற்றிச் சொன்னாய். நான் அந்த ஊருக்குப் போயிருக்கிறேன். நல்ல ஊர், நல்ல மனிதர்கள். நான் உரிமையோடு சொல்கிறேன். அதுவும் இந்த பாக்டரியில்லாவிட்டால், இந்தப் பிரச்சினையை எழுப்பமாட்டேன்.

பெரியவன் : நீ எது சொன்னாலும் எனக்குக் கோபம் வாராது. சொல், கேட்டுக்கொள்கிறேன்.

நண்பன் : இது உனக்குப் பெரிய வாய்ப்பு. மிகமிகப் பெரிய வாய்ப்பு. பார்ட்னர் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். நீ உன் பழக்கங்களை மாற்றிக்கொள்ளுதல் அவசியம். இந்த பார்ட்னர்ஷிப் நீடிக்க அது அவசியம்.

பெரியவன் : நீ என்ன எங்க அம்மா மாதிரி பேசுகிறாய். ஏன் எல்லோரிடமும் நீ உன் adviceஐச் சொல்லக்கூடாது? எல்லோருக்கும் தேவை என்று அம்மா சொல்கிறார்களே.

நண்பன் : நான் உன்னிடம் பேசுவதைப்போல் எல்லோர் எதிரேயும் பேசமுடியுமா?

பெரியவன் : அப்படி என்ன சொல்லப்போறே? திட்டப்போகிறாயா? நீ திட்டினால் நான் குறையமாட்டேன். எல்லோர் எதிரேயும் திட்டேன்.

நண்பன் : சுருக்கமாகச் சொல்கிறேன். உன் பார்ட்னர் மாதிரி பேசக் கற்றுக்கொள் போதும். உன் சொந்தப் பழக்கம், பேச்சு எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிடு.

பெரியவன் : சொல்லு, கேட்டுக்கொள்கிறேன்.

நண்பன் : குறுக்கே பேசாதே. பார்ட்னர் எது சொன்னாலும் மறுத்துப் பேசாதே, உனக்குப் பெரிய வேலை செய்திருக்கிறார். அவர் பேசும்பொழுது மனதில் சந்தேகம் எழக்கூடாது. மனத்தில் சந்தேகமிருந்தால், ஒரு சமயம் வெளியே வந்துவிடும். அவர் சொல்வதே உண்மை என்று நம்பினால், சந்தேகம் எழாது. உனக்கு கிண்டல் பிடிக்கும். இனி அதை மறந்துவிடவேண்டும்.

பெரியவன் : என்னை அடியோடு மாறச் சொல்றே நீ.

நண்பன் : உன் பார்ட்னர் பெரிய குடும்பம். அவர்களைத் தெரியாதவர்களே அந்தப் பக்கம் எவருமில்லை. எப்படி இது உனக்குக் கிடைத்தது எனத் தெரியவில்லை. விட்டுவிட்டால் தவறு, நீ மடையன். நீ பேசும்பொழுது சற்று நிதானித்து இந்தப் பதிலைச் சொன்னால், என்ன பதில் வரும் என யோசனை செய்து, அவர்கள் சந்தோஷப்படும்படிப் பேசக் கற்றுக்கொள்.

பெரியவன் : அடுத்த முறை நாம் சந்திக்கும்பொழுது எனக்கு மார்க் போடு, எவ்வளவு மாறியிருக்கிறேன் என்று. நீ சொல்வனவற்றை எல்லாம் அப்படியே செய்கிறேன். எனக்கென்னமோ நான் சரியாக இருப்பதாகப் படுகிறது. இருக்கட்டும், நீ சொல்றே. நான் மாறிக்கொள்கிறேன்.

நண்பன் போனபிறகு எல்லோரிடமும் அவன் சொல்லியதைப் பெரியவன் கூறினான்.



book | by Dr. Radut