Skip to Content

பகுதி 16

பெரியவன் : நான் நடந்ததைச் சொல்கிறேன். அப்புறம் பேசுங்கோ. அந்த டாக்டர் ஒவ்வொரு ஜாதியா விமர்சனம் செய்தார். அவருக்கு வக்கீல் ஜாதி தெரியாது. வக்கீல் கண் சிவந்துவிட்டது. எழுந்து போய்விட்டார்.

பார்ட்னர் : அந்த வக்கீல் அவர் மைத்துனனிடம் போய் நீதான் அவர்களைக் குறைவாகப் பேசியதாகக் கூறிவிட்டார்.

தாயார் : அது ஆபத்தாயிற்றே.

பார்ட்னர் : பெரிய ஆபத்து வந்து விலகியது. Mother's Grace. அந்த ஆட்கள் பெரியவனை 4 நாட்களாகத் தேடுகிறார்கள். அவர்களில் ஒருவன் என்னுடன் பெரியவனைப் பார்த்ததால் 4 பேராக நம் வீட்டெதிரில் காத்து இருக்கிறார்கள்.

தாயார் : எனக்கு மயக்கமாக இருக்கிறது.

பெரியவன் : அவன் கொலை செய்பவனாயிற்றே.

பார்ட்னர் : ஆபத்து விலகிவிட்டது. நானும், மில் முதலாளியும் உள்ளிருந்து வருவதை அந்த ஆட்கள் பார்த்தனர். என்னிடம் பெரியவனைப் பற்றிக் கேட்டனர். முதலாளி "பெரியவன் நம்ம பையன்'' என்றார். அவர்கள் சிரித்துக் கொண்டு போய்விட்டனர். நான் முதலாளியை அனுப்பாமல் விசாரிக்கச் சொன்னேன். அவர் வக்கீல் மைத்துனரைப் போனில் விசாரித்தார். "அது நம்ம பையன் என்று தெரியாதுங்க'' என்று மைத்துனர் பேசினார்.

தாயார் : என்னடா நடந்தது?

பெரியவன் : பேசியவன் நானில்லை. வக்கீல் எனக்கு எதிரி என்பதால் டாக்டர் பேசியதை என் பேரில் சொல்லி விட்டான்.

தாயார் : பொய்யாகக் குற்றம் வந்தாலும் குற்றம் மனதில் இருக்கிறது எனப் பொருள். உனக்கு அந்தக் குணம் உண்டு.

பெரியவன் : குணம் உண்டு, நான் பேசவில்லையே.

தாயார் : ஆபத்து வந்துவிட்டதே.

பெரியவன் : அக்குணத்தை அடியோடு விலக்க முடிவு செய்கிறேன். காலிங்பெல் அடித்தது. போய்ப் பார்த்தால் அந்த வக்கீல் பெரியவனைத் தேடி வந்திருக்கிறார். விஷயம் தெரிந்தவுடன் வக்கீல் பெரியவனிடம் மன்னிப்புக் கேட்க வந்ததாகச் சொன்னார்.

தாயார் : இந்தக் குணம் எல்லாம் மற்றவர்க்குச் சரி. நமக்கு இனி சரி வாராது. இவையெல்லாம் போனால்தான் வந்தது பலிக்கும்.

பார்ட்னர் : அன்னை நம் குணத்திற்குத்தானே power plant கொடுத்திருக்கிறார். இனி குணம் அது போலிருக்க வேண்டாமா?

கணவர் : பெரியவன் மட்டுமல்லன், நாமனைவரும் இனி பழைய குணங்களை அடியோடு விட முடிவு செய்து ஜெயிப்பது அவசியம். அதற்கு விலக்கில்லை. இதுபோன்ற ஆபத்துகளிலிருந்தெல்லாம் மனிதன் எப்படித் தப்பிப்பது?

தாயார் : குணம் சுத்தமானால் தப்பிக்கலாம். வீண் பேச்சு பேசுவதைவிட்டு வேலையில் ஈடுபட்டால் இது வாராது.

கணவர் : குணமிருந்தால் அது என்றும் வெளிவரும். குணத்தை மாற்றவேண்டும். சுத்தத்திலிருந்து மனமாற்றம் வரை பிள்ளைகள், கணவர் முழு முயற்சி செய்தனர். ஓராண்டிற்குப்பின் எதற்கு, என்ன பலன்

வந்ததோ, இல்லையோ, எல்லோரும் மனத்தளவில் ஓர் அளவுக்குப் பக்குவப்பட்டுவிட்டனர். அது மயிரிழையாக இருந்தாலும் அவர்களைப் பொருத்து மலை போன்ற மாற்றம். பாக்டரி, பவர் பிளாண்ட், புதியதாக வரும் சந்தர்ப்பங்கள் அங்குலம், அங்குலமாக ஏறுவதும், சரிவதும், சரிவதைச் சரிகட்டுவதுமாக நகர்கின்றன. இந்தக் காலத்தில் நடந்த அமர்க்களங்கள் - சிறியன, பெரியன - ஏராளம், வந்த புதிய வாய்ப்புகள் ஏராளம். ஒரு நல்லது நடந்தால் பல தவறுகள் நடப்பதும், தவற்றை அனைவரும் முனைந்து சமாளிப்பதும், சமாளித்தபின் நல்லவை நடப்பதுமாக ஒரு ஆண்டு ஓடிற்று. நல்லதும், கெட்டதுமாக சுமார் 50 நிகழ்ச்சிகள் நடந்தன. வாய்ப்பு பலித்தவை பல, தவறு சரி செய்யப்பட்டவை பல. அதற்கும் மேலாக இந்த ஓராண்டில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என அனுபவ வாயிலாக அனைவரும் அறிந்தது அதிகம். இந்த விஷயத்தை வெளிப்படையாக எவரும் பேசுவதில்லை. வீடு மாறிவிட்டது என்பது தெரிகிறது. எந்த அளவுக்கு மாறவேண்டுமோ அதில் 1/100 பாகம்கூட இல்லை எனவும் தெரிகிறது. இருந்தாலும் மாற்றம் மனத்திருப்தி தருகிறது. இவையெல்லாம் நடந்தபொழுது பொறுமை சோதிக்கப்பட்டது பெரியது. பொறுக்க முடியாது என்ற நேரங்கள் அதிகம். தவறு நடக்கும்பொழுது மயிரிழையில் தப்பிப்பதைக் காண்கின்றனர். அதனால் தவற்றைக் கைவிடுவதில்லை. சமர்ப்பணம் பெரும்பலன் தருவது தெரிகிறது. அதனால் சமர்ப்பணத்தை அதிகமாக ஏற்க எவரும் விரும்பவில்லை. பார்வைக்குப் பெரிய disciplineஆன குடும்பமாகவும், 3, 4ஆம் நிலையிலிருந்து 70, 80ஆம் நிலைகளுக்கு வந்த குடும்பமாகவும் தெரிந்தாலும், எந்த முன்னேற்றமும் மனித முயற்சியால் வருவதில்லை. வரும் சிரமங்களைச் சமாளிப்பதால் நல்லது நடப்பதே வழக்கம். 70 அல்லது 80ஆம் நிலைக்கு குடும்பம் வந்துவிட்டாலும், அங்கேயே நிரந்தரமாக இருக்க ஏராளமாகத் தேவைப்படுகிறது. அதையெல்லாம் செய்ய எவரும் தயாராக இல்லை. அப்படியொரு குறையிருப்பதாகவும் தெரியவில்லை. எல்லா அன்பர்கட்கும் இதே அனுபவம் அவரவர் மனத்தளவில் நடக்கின்றது என்பது எவரும் அறியாத விஷயம். 80ஆம் நிலைக்கு வந்ததால், இதைப் பூர்த்தி செய்யவேண்டிய முயற்சியை உடல் உழைப்பாலும், குண நலனாலும், அறிவின்

தீட்சண்யத்தாலும், ஆன்ம விழிப்பாலும், பிரம்ம ஜனனத்தாலும் செய்யக்கூடியவை ஏராளம். அவற்றை எல்லாம் செய்தால், மேலும் தொடர்ந்தால் குடும்பம் நாட்டிலும், உலகிலும் முதன்மையாகும் என்பதை அன்பர்கள் அறியாததுபோல் இக்குடும்பமும் அறியவில்லை. தாயாருக்கு மட்டும் ஓரளவு தெரியும். ஆனால் மனத்தால் அவரும் மற்றவரைப் போலிருக்கிறாரே தவிர, செயலால் அன்னைக்குரியவராக வேண்டும் என்ற எண்ணமும் எழவில்லை. அந்த எண்ணம் இக்குடும்பத்தாருக்கு எழுவது அருள், செயல்படுத்துவது பேரருள். அன்னையிடம் வந்தபின் இக்குடும்பத்தாருக்கு நடந்தது என்ன? அன்று குடும்ப வருமானம் இருந்ததைப்போல் பல மடங்குகள் செலவு செய்ய விரும்பியவருக்கு அது பூர்த்தியாயிற்று. ஆயுள் வருமானம் அன்று குடும்பத்திற்கு அமைந்ததைத் தம் சொந்தச் சேமிப்பாகப் பெற விரும்பியவருக்கு அதுபோல் பல மடங்குகள் சேமிப்பு வந்தது. பிரபலம் நாடியவர்க்குப் பிரபலம் வந்தது, தேடி வந்தது. வாழ்க்கையை அனுபவிக்க விரும்பியவர்க்கு பத்து வகைகளில் அனுபவித்தாயிற்று. எது, எது குடும்பத்திற்குக் கிடைத்தால் போதும் என்று கனவு கண்டார்களோ, அவையெல்லாம் தமக்கே சொந்தமாக, அதிகமாகப் பூர்த்தியாயிற்று. அதாவது,

மனத்தின் ஆழ்ந்த ஆசைகளெல்லாம் அதிகமாகப் பூர்த்தியாயின.

இவ்வளவு நாள் அன்னை நாம் மறந்த ஆசைகள், நாமறியாத ஆசைகளைப் பூர்த்தி செய்ததால், இனி நாம் ஆசைகளைவிட்டு கடமைகளை ஏற்கவேண்டும். மனம் மேலும் அதே ஆசைகளை நாடக்கூடாது. ஆனால், மனம் அவற்றையே நாடுகிறது. தாயாருக்கு மட்டும் தத்துவம் தெரியும், ஆனால் பிடிக்காது. இந்தக் காலத்தில் அவர்கள் கண்ணில்பட்ட பிற அன்பர்கள் அனுபவம் ஏராளம். அவற்றுள் சில:

1. ஜடப்பிரம்மம்

ஜடமும் பிரம்மமும் என்ற ஞானம் அன்னைச் சூழலால் அன்பருக்கு லேசாக உண்டு. ஜடப்பொருள் பிரார்த்தனையைக் கேட்டு பதில் சொல்லும் என்பது தத்துவம். அதுபோன்று கடிகாரத்தில் ஓர்

அன்பர் செய்ததை நான் பல முறை குறிப்பிட்டுள்ளேன். மீண்டும் அது விஷயமாக நடந்ததை ஆரம்பத்திலிருந்து விவரமாகக் கூறுகிறேன்.

1972இல் வாங்கிய சாவி கொடுக்கும் கடிகாரம். அன்று ரூ.100/- விலை. 20 ஆண்டுகள் நன்றாக ஓடியது. பிறகு சாவி கொடுத்தால் 1 மணி ஓடி நின்றுவிடுகிறது. இது கடிகாரம் பழைய கடிகாரம் என்பதுடன் சாவி கொடுப்பவருக்கு அந்த வேலை - அது ஒன்று மட்டுமே அவர் செய்வது - எரிச்சல் தருவது. அதனால் நின்றுவிடுகிறது எனப் புரிந்துகொள்ளலாம். அவ்வேலையை மற்றொருவர் எடுத்துக்கொண்டபிறகு ஓராண்டு கடிகாரம் நிற்காமல் ஓடியது. பிறகு நிற்க ஆரம்பித்தது. ரிப்பேருக்கு அனுப்பினால் மெயின் ஸ்பிரிங் மாற்றவேண்டும், விலை 400 ரூபாய் ஆகும். அதுவும் இப்பொழுது உற்பத்தியில்லை. பழைய கடிகாரத்திலிருந்து தேடிப்பிடிக்க வேண்டும் என்றார். அதற்காக கடிகாரம் ரிப்பேர் கடையிலிருந்தபொழுது நன்றாக ஓடியது. துடைத்து எண்ணெய் போட்டு கடைக்காரர் கொடுத்துவிட்டார். இப்பொழுது சாவி கொடுப்பவருக்கு எரிச்சல் வர ஆரம்பித்தது. கடிகாரம் பழையபடி நிற்க ஆரம்பித்தது.

இந்தச் சமயம் 10 நாட்கள் அழைப்பில் உட்கார்ந்த அன்பர் ஒருவர் கடிகாரத்தை தம் பிரச்சினையின் பிரதிபலிப்பாக எடுத்துக்கொண்டார். அதே அறையில் அவர் உட்காருவதால் அவரே நிற்கும்பொழுது எல்லாம் சாவி கொடுத்தார். கடிகாரம் 3 நாட்கள் ஒரு முறையும் நிற்காமல் ஓடியது. அவர் எடுத்துக்கொண்ட பிரம்மாண்டமான பிரச்சினை கரைந்தது. இதுவரை நான் முன்பே எழுதியுள்ளேன்.

அடுத்த 2 ஆண்டுகள் கடிகாரம் ஓடுவதாகவும், நிற்பதாகவும் இருந்தது. வேறொருவர் தம் பிரச்சினையின் பிரதிபலிப்பாக கடிகாரத்தைக் கருதி தானே சாவி கொடுக்க முன்வந்தார். அவருக்கு பல பிரச்சினைகள் தீருகின்றன. ஒரு சமயம் எல்லாப் பிரச்சினைகளும்

தீர்ந்தன. ஆனால் கடிகாரம் ஓட மறுத்தது. கடிகாரம் ஓட வேண்டும் என்ற பிரார்த்தனையை மாற்றிக் கடிகாரமே அன்னை என அதை வணங்க ஆரம்பித்தார். 4 மாதம் நிற்காமல் ஓடிற்று. ஜடமான கடிகாரத்தின் பிரம்மம் நம் மாறிய மனநிலையை ஏற்றுப் பிரதிபலிக்கிறது.

2. ஓழுகும் பைப்பு:

ஒழுகும் பைப்பை இறுக மூடினால் ஒழுகுவதில்லை. அடிக்கடி கை தவறும். பைப்பு ஒழுகும். 7 முறைகள் இந்தத் தவறு வந்தபின் ஒரு பேப்பரில் பைப்பை இறுக மூடவேண்டும் என எழுதி ஞாபகத்திற்காக அதனருகில் ஒட்டியவர், பைப்பே அன்னை என வணங்கினார். 3 மாதம் பைப் ஒழுகவில்லை.

3. கார்

மொபெட் ஓட்டிக்கொண்டிருந்தவர்க்குத் தகப்பனார் கார் வாங்கிக் கொடுத்தார். அவர் காரை எவருக்கும் இரவல் தரமாட்டார். யாரையும் காரில் ஏற்றமாட்டார். ஓரிரு ஆண்டுகட்குப்பின் நிலைமை மாறியதால் தம் காரை நிரந்தரமாக வேறொருவர் உபயோகத்திற்காக 21/2 ஆண்டுகள் தந்தார். இவர் எவருக்கும், எதையும் தாராதவர். எவராலும் நம்பமுடியாதபடி மனம் மாறாமல் செயல் மாறியது. இவருடைய பொறுப்பில் வேறொரு கார் வந்தது. இவர் ஸ்தாபனம் ஒரு கார் வாங்கியது. அது இவருடைய முழு உபயோகத்திற்கு வந்தது. ஸ்தாபனம் ஒரு வேனை நிரந்தரமாக வாடகைக்கு எடுத்தது. வேறு சந்தர்ப்பத்தில் ஒரு கார் வந்தது. எந்த நேரமும் இவர் உபயோகப்படுத்தலாம் என வந்துள்ளது.

  1. மனம் மாறாமல் செயல் மாறியபொழுது ஒரு காரும் இல்லாத இடத்தில் 5 கார்கள் எந்த நேரமும் பயன்பட வந்துள்ளன.
  2. மனம் விரும்பி மாறினால் என்ன நடக்கும்?
  3. பிறருக்குப் பயன்படுவதே self-giving கொள்கை. எத்தனை பெரியது?

  1. பிறரில் உள்ள அன்னைக்குச் செய்யும் சேவை பலன் தரும். அது பெரும்பலன்.
  2. அப்பலனையும் கருதாதது அன்னை பக்தி, அன்னைக்குச் செய்யும் சேவை.

சமர்ப்பணம்:

மனம் அன்னை விஷயத்தில் கனிந்து, நெகிழ்ந்து, தானே அன்னை நினைவு வந்தபடியிருப்பவர்கட்குச் சமர்ப்பணம் உண்டு. அது இல்லாமல் நாமே முனைந்து செய்யும் சமர்ப்பணம் நடுவில் அறுந்து போகும். ஏராளமாகப் படித்தவர் எது பேசினாலும் அறிவோடிருக்கும். 4 நாட்கள் கழித்து உங்களூருக்கு வருகிறேன் என நாலு வரி ஒரு கார்டில் எழுதினாலும் அதில் நயமிருக்கும், அழகிருக்கும், ஆர்வமான ஆதரவு, அரவணைப்பு இருக்கும். எழுதுபவருடைய பிரியம் வெளிப்படும், சொல் நயமும், பொருள் நயமும் செறிந்திருக்கும். அக்கடிதத்தை விவரித்து ஒரு சொற்பொழிவு ஆற்றலாம். அது படிப்பு, பாண்டித்தியம். நாம் எழுதுவதில் விஷயம் மட்டும் மொட்டையாக இருக்கும். பகவான் எந்த விஷயத்தைப் பற்றி எழுதினாலும் - நாட்டுக்கொடி - அதில் அவருடைய சூழல் கனத்திருக்கும். செயல் எளியதாக இருந்தாலும், செய்பவர் பெரியவரானால், செயல் நேர்த்தியாக, ஆராதனையாக அமைவதை நாம் காண்கிறோம்.

ஜீவனும், ஜீவனுக்குரிய ஆத்மாவும் வாழ்விலும், மனத்திலும் ஈடுபட்டு, இரண்டறக் கலந்து இசைவாக எழுபவர் சமர்ப்பணத்தை மேற்கொள்ளலாம். அவருடைய சமர்ப்பணம் அதற்குரிய உயர்வுடன் இருக்கும். மற்றவர்க்குச் சமர்ப்பணம் தூரம். வந்து செய்தால் சமர்ப்பணம் பக்கும்பொழுது நம் ஆசையே பூர்த்தியாகும். அதாவது நாம் அன்னைக்குச் சமர்ப்பணம் எனக் கூறி நம் ஆசைக்குச் சமர்ப்பணம் செய்கிறோம். இதிலுள்ள கூறுகள்,

  1. மனம் உண்மையாக இருக்காது. மனம் தெளிவாக அன்னை வேண்டாம், என் ஆசைகள் அப்படியே பூர்த்தியாக வேண்டும் எனக் கேட்கும்.

  1. பிரார்த்தனையை வாய் எதிராகவும் மாற்றிப் பிரார்த்திக்கும்.
  2. 2, 3 வினாடிகளில் சமர்ப்பணம் முடிந்துவிடும்.
  3. வேலை நினைவு வந்தால் சமர்ப்பணம் மறந்துவிடும்.
  4. சமர்ப்பணம் நினைவு வந்தால், வேலை சமர்ப்பணத்தை ஒதுக்கிவிட்டுத் தன்னைப் பூர்த்தி செய்துகொள்ளும்.
  5. தீர்க்கமாகச் சமர்ப்பணத்தை மனம் நாடினால், "இந்த ஒருமுறை சமர்ப்பணமில்லாமல் அப்படியே தள்ளிப் போகும். அது வருஷக் கணக்காக நடக்கும்".
  6. மனம் கட்டை போட்டது போல் எதிர்க்கும்.
  7. வற்புறுத்தினால் மீண்டும் மறந்துபோகும்.
  8. நினைவுபடுத்தினால் எரிச்சல் வரும்.
  9. எரிச்சல் வந்தாலும் தொடர்புண்டு எனப் பொருள், மறந்துபோனால் தொடர்பே போய்விட்டது எனப் பொருள்.
  10. இத்தனைத் தாண்டி வந்தால் இதே கட்டங்கள் அடுத்த 3 நிலைகளிலும் எழும்.

இவற்றிற்குக் காரணம் மனம் உண்மையாக இல்லாதது. நாம் உண்மையாக இருந்தாலும் நம் மனம் உண்மையாக இல்லாவிட்டால், சமர்ப்பணம் எடுபடாது, கூடி வாராது. மனம் அடங்கி, உடல் வணங்குவது சமர்ப்பணம் பலிக்கும் அறிகுறி. Let thy will be done,Not my will"அன்னையின் திருவுள்ளம், என் அபிப்பிராயமில்லை" என்ற சொல் அகந்தையை அழிக்கும். அச்சொல்லை மனம் உதறித் தள்ளிவிடும். உதறாமல் அச்சொல் உள்ளே போனால், உலகம் நம்முள் விரிவதைக் காணலாம். அது விழிப்பு opening, உண்மை sincerity, ஏற்புத்திறன் receptivity, ஆர்வம், inspiration சமர்ப்பணம் பலன் தர அந்த அளவு ஜீவன் வழிவிடவேண்டும்.

எங்கள் வீட்டில் தாயார் ஒருவரே பக்தர். அவருக்கு சமர்ப்பணமும், யோகமும் முக்கியமல்ல, அதிர்ஷ்டம் முக்கியம்.

அனைவருக்கும் அதிர்ஷ்டம் முக்கியமானால் அது வரும். கணவர் மனைவிக்காக அன்னையை ஏற்றவர். பிள்ளைகள் விளையாட்டுத் தனமாக வாழ்க்கையிலேயே பற்றில்லாத வெறும் ஜென்மங்கள். அப்படிப்பட்டவருக்குத் தாயாரால் நல்லது நடக்கவேண்டும் என்றால் அது நம் நிலையிலிருந்து 10ஆம் நிலைக்கு வந்தபொழுதே நடந்துவிட்டது. அதற்குமேல் 80ஆம் நிலைக்கு குடும்பம் வந்துவிட்டது. இந்த நிலையில் தாயாரின் ஆதாய மனப்பான்மை பலன் தாராது. ஒருபடி உயர்ந்திருக்கவேண்டும். அது பல வகைகளானவை.

  1. ஆதாயம் போய் மனம் அருளை நாடவேண்டும்.
  2. பிள்ளைகளுடைய குறையைத் தாயார் தன் குறையாகக் கருதி கணவருடைய குறையையும் சேர்த்துத் தன்னில் திருவுருமாற்றவேண்டும். விலக்கினால் போதாது.
  3. கணவரும், பிள்ளைகளும் கைகட்டி, வாய் பொத்தி, தாயாருக்குத் தாமாக அடங்க வேண்டும். தாயார் பேச்சுக்கு மறு பேச்சில்லாமல் அவர்கள் நடக்க வேண்டும்.
  4. இதுவரை வந்தprojectஐ மானேஜ்மெண்ட் முறைகளால் முழுவதும் நிறைவேற்றவேண்டும்.
  5. அனைவருக்கும் நல்லெண்ணம் அபரிமிதமாகப் பொங்கி எழ வேண்டும்.

இதுபோன்ற ஒன்றில்லாமல் வந்ததைக் காப்பது கடினம். இந்த நிலையில்,

  1. ஒரு சிறு நல்ல செயலுக்குப் பெரிய அதிர்ஷ்டம் வரும்.
  2. ஒரு சிறு தவற்றுக்கு அத்தனையும் போய்விடும்.

இப்படியிருப்பதால் எதையும் காப்பாற்றுவது கடினம். காப்பாற்ற உயிர் போய் உயிர் வரும். தினசரி ஆபீஸ் போய் வரும்பொழுது எவரும் கல்லால் அடிக்கலாம், மோட்டாரை மேலே வந்து வேண்டுமென மோதலாம், சுடலாம், என்றால் எப்படிச் சமாளிக்க முடியும்? அதே

சமயம் கலெக்டரிலிருந்து கவர்னர்வரை ஊரில் உள்ள பெரியவர்கள் அனைவரும் ஏதாவது உதவி செய்யக் காத்திருப்பதையும் காணலாம். இது ஒரு இக்கட்டான நிலை. குடும்பம் அந்நிலைக்கு வந்துவிட்டது. அதைக் குடும்பம் அறியாது. இதற்கு தத்துவரீதியான விளக்கமுண்டு. நடைமுறையில் அத்தத்துவம் வெளிப்படும் (strategies) வழிகள் உள்ளன. தாயாருக்கு இரண்டும் தெரியும். கொஞ்சம் அனுபவமும் உண்டு. அன்பர் உயர்ந்தவரானால் (higher consciousness) அறிவுக்கு விளக்கம் இருக்கும். இம்மாதிரிக் கட்டங்களில் அன்பர் தம் உயர்ந்த நிலையை விரும்பமாட்டார். தம் அல்ப ஆசைகளில் முழு ஆர்வம் காட்டுவார். தமக்கு அறிவின் தீட்சண்யம் (mental clarity) இருப்பதால், அதைப் பயன்படுத்தி தாழ்ந்த - அல்ப - நடைமுறையை உயர்ந்த வாழ்வாக மாற்றலாம். இத்திறன் உள்ளவர் அரியர். இதுவரை அனுபவம் அவர்கள் தங்கள் உயர்ந்த திறனைத் தாழ்ந்த ஆசைக்குத் தீவிரமாகப் பயன்படுத்துவதேயாகும்.

தமக்குள்ள உயர்ந்த திறனை தாம் உயரப் பயன்படுத்துவது அதிர்ஷ்டம். அதை அன்னைக்காகச் செய்வது அருள். It is left to their choice. எவ்வழி போகலாம் என்பதற்கு மனிதனுக்குச் சுதந்திரம் உண்டு.

அன்பர் தாழ்ந்தவரானால் (lower consciousness) அவருக்குத் தாம் பெறும் பலன் மட்டுமே தெரியும். அவர் நல்லவரானால் அப்பலன் பக்தி தரும். அவர் சூட்சுமமானால் அது நம்பிக்கையும் தரும். ஆத்ம விழிப்புள்ளவரானால் நன்றியறிதல் தரும். அதுவும் உயர்ந்ததாகவோ, தாழ்ந்ததாகவோ இருக்கும்.

  • உயர்ந்ததால் தன் ஜீவியத்தை உயர்த்த முடியும். அது சிரமம்.
  • தாழ்ந்தது தன் ஆட்சிக்குள் அனைவரையும் கொண்டு வரமுடியும்.

தம் நன்றியறிதல்மூலம் தம் ஜீவியத்தை உயர்த்த முடியும் என்றாலும் இதுவரை எவரும் செய்ததில்லை. தாழ்ந்தது அன்னை

சட்டங்களைத் தன் சட்டமாக்கி தனக்கு ராஜ்ஜியம் ஏற்படுத்தும். அதற்குமேல் புரியாது. புரிந்தால் அழுகை வரும். அழுகை வருகிறது என்றால் உயர, மாற அபிப்பிராயமில்லை எனப் பொருள். தாயார் படித்தவர். அன்னை எழுதியவற்றை உணர்ந்து அறிந்தவர். தம் நிலையறிந்தவர். பகவான் ஸ்ரீ அரவிந்தர் இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற்றபின் - 1910இல் - இந்தியச் சுதந்திர இயக்கம் தடம் மாறிப் போவதைத் தடுக்க முடியவில்லை என்பதை அறிந்தவர். தாம் பிறந்த வங்காளத்தில் 1943இல் பஞ்சம் வந்தபொழுது வங்காளமோ, அங்கு பிறந்த சாதகர்களோ நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்யாததால் தாம் பஞ்சத்தைத் தடுக்க முடியவில்லை என்று பகவான் அறிவார். அதேபோல் உலகப் போரைத் தடுக்க முடியவில்லை. மூன்றாம் போரைத் தடுக்க முடிந்தது. அன்னையின் முன் பிறவிகள், பகவானின் முன் பிறவிகள், இப்பிறவியில் வந்த வகைகளையும் தாயார் ஓரளவு அறிவார். பகவானும், அன்னையும் 1872இல், 1878இல் பிறந்ததிலிருந்து 1950இல் பகவான் சமாதியடையும்வரை, 1959இல் அன்னை சூட்சும உலகில் பகவானைச் சந்தித்தது, 1956இல் சத்தியஜீவியம் பூமிக்கு வந்தது, 1967இல் உலக அரசுகள் சத்திய ஜீவியத்தின் ஆட்சிக்குள் வந்ததும், 1872 - 2002 ஆகிய 130 ஆண்டுகளில் உலகம் பெற்ற பேற்றில் பகவானுடைய பங்கையும் தாயார் தம் அறிவுக்கெட்டிய அளவு அறிவார். அவர் முன்னுள்ள பிரச்சினைகள்,

  • தமக்கும் குடும்பத்திற்கும் உள்ள தொடர்பு யோகத் தொடர்பாக இருக்கவேண்டுமா, குடும்பத் தொடர்பாக இருக்கலாமா? எது அளவு, லிமிட்?
  • பிறர் விருப்பத்தை மீறி அவர்கட்கு நல்லது செய்தால் ஆபத்து வாராமலிருக்கும் அளவு லிமிட் எது?
  • தான் எந்த அளவுக்கு மனைவி, தாயார், என்ற நிலைகளினின்று சாதகராக மாறவேண்டும்?
  • இன்று அன்னை நேரடியாகத் தமக்கு அறிவுரை கூறினால் என்ன சொல்வார்?

இவற்றைச் சிந்திப்பதற்குப் பதிலாகச் சமர்ப்பணம் செய்வது மேல் என அறிவார். அவை சமர்ப்பணமாகவில்லை. முயன்று முடியவில்லை என்பதால் நடக்கும் நல்லனவே இப்பொழுது நடக்கின்றவை.

நடந்தவரை நடக்கட்டும்:

என்பதை அறிவில்லாமல் செய்தால் குறைந்தபட்சம் நடக்கும். குழந்தை தானே கற்றவரை கற்கட்டும் என்றால் குறைந்தபட்சம் நன்றாக வளர்வான், பேசுவான், சாப்பிடுவான், பள்ளிக்கூடம் போகமாட்டான். 20ஆம் வயதில் கூலி வேலைக்கே அவன் பயன்படுவான்.

அதையே அறிவோடு செய்தால் பையன் படித்து பட்டம் பெற்று வேலைக்குப் போவான். அதில் B.A முதல் டாக்டர், Ph.D. வரைப் பல கட்டங்களுள்ளன.

அறிவையும் நம்பாமல் ஆன்மாவை நம்பி பள்ளிக்கு அனுப்பாவிட்டால் சீனுவாச ராமானுஜராக வருவான்.

நடைமுறையில் சீனுவாச ராமானுஜத்தை உற்பத்தி செய்யப்போய் பையனை உதவாக்கரை கூலியாக மாற்றுவோம். இதுவே யதார்த்தம்.

அது வாழ்வுக்குரியது. அன்னை வாழ்வில் அந்தத் தோல்வியும் பையன் பட்டம் பெற்று வாழ்வதைவிட ஏதாவது ஓர் அம்சத்தில் - பிரபலம், பணம் - சற்று அதிகமாக இருக்கும். இரட்டிப்பாக அமையும்.

அறிவில்லாமல் நடப்பது, அறிவோடு செயல்படுவது, ஆன்மாவை நம்பிச் செயல்படுவது ஆகியவற்றுள்,

  • பல கட்டங்கள் உண்டு.
  • நல்ல முறையிலும் செய்யலாம், சமூகத்திற்கு எதிராகவும் (positive, negative) செய்யலாம்.

சமர்ப்பணம் பலித்தால் நம் வாழ்வில் அன்னை பூர்த்தியாவார். அதற்கு நாம்,

  • நம்மை உணர்ந்து,
  • நம் குறைகளை, குற்றங்களை, தாழ்ந்த ஜீவியத்தை, இருளை உணர்ந்து,
  • அவற்றைச் சரணம் செய்து திருவுருமாற்ற மனம் தயாராகி,
  • அதன்பின் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

சமர்ப்பணம் பலிக்கா விட்டால், சமர்ப்பணம் செய்ய முயன்ற அளவுக்குப் பலன் உண்டு. அது,

  • நமது இலட்சியம் பூர்த்தியாவதாகும் அல்லது
  • நம் நல்ல ஆசைகள் பூர்த்தியாகும்.
  • நம் தேவைகள் பூர்த்தியாகும்.
  • நம் மட்டமான ஆசைகள் பூர்த்தியாகும்.

எந்தக் கட்டத்திலும் மனிதன் ஆசையை விட்டுச் சமர்ப்பணத்தை நாட முடியும். அதேபோல் எந்த நேரத்திலும் சமர்ப்பணத்தைக் கைவிட்டு, ஆசையை வலியுறுத்தலாம்.

  • சமர்ப்பணம் அதன் சட்டப்படி தன்னைப் பூர்த்தி செய்துகொள்ளும்.
  • ஆசைக்குரிய வழி, ஆர்ப்பாட்டம், ஆபத்து, அகங்காரம், கொக்கரிப்பு, வெற்றி, தோல்வி நாம் அறிந்தது. அதனிஷ்டப்படி நடக்கும்.
  • எது நடந்தாலும் அதற்கில்லாத தீவிரத்துடன் நடக்கும்.
  • வெற்றியானால் அபரிமிதமாகும்.
  • தோல்வியானால் அடியோடு அழியும்.

குடும்பம் உள்ளபடி மனம் மாறி தாயாருடன் ஒத்துழைத்தால் நடப்பவை சிரமத்தை மீறிப் பிரயத்தனப்பட்டு, நல்லதாகவே மட்டும் இருக்கும்.

Aim at Perfection:

நடந்தவரை நடக்கட்டும் என்பதற்கு நேர் எதிரானது perfect perfection. பூரணம் பூரணம் பெறுவது, சிறப்பின் உயர்வு என்பது. அதுவே பூரண யோகத்தின் இலட்சியம்.

  • பூரண யோகம் யோகங்களில் சிறந்து, உயர்ந்த முழுமையுள்ளது.
  • யோகம் அதிகபட்சமானால், வாழ்வு குறைந்தபட்சம்.

நடந்தவரை நடக்கட்டும் என்பது அன்னையை ஏற்ற அன்பர்கள் அன்னை வாழ்வில் குறைந்தபட்சத்தை இலட்சியமாகக் கொள்வது. பூரணமான பூரணம் அதே வாழ்வில் - யோகத்திலன்று - அதிகபட்சத்தை இலட்சியமாகக் கொள்வது. அதன் அம்சங்கள், செயல்முறை,

தீராத பிரச்சினை தீர...... என்ற கட்டுரையில் பிரச்சினை நினைவு வருந்தோறும் அதை அன்னையிடம் சமர்ப்பித்தால், சமர்ப்பணம் பூரணமாகும்பொழுது பிரச்சினை தீரும் என்று கூறியுள்ளது. சமர்ப்பணம் கடினமானாலும், ஒரு விஷயத்தை மட்டும் சமர்ப்பணம் செய்யும்பொழுது அது கூடிவரும். அதுபோல் நாம் பூரணத்தை எட்ட சமர்ப்பணம் செய்யக் கூடியவை பல. அவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாய் சமர்ப்பணம் செய்வது பூரணம் பெற உதவும். அவை,

  • பிரச்சினைகள்
  • வாய்ப்புகள்
  • கடந்த காலக் கவலைகள்
  • எரிச்சல்
  • உறுத்தல்
  • எதிர்காலப் பொறுப்புகள்

  • மனம் நம்பும் எண்ணங்கள்
  • Opinions அபிப்பிராயங்கள்
  • குணக் குறைகள்
  • சுபாவத்தின் கெட்ட அம்சங்கள்
  • Our beliefs நாம் முடியாது என நம்புபவை.
  • Impulses, உந்துதல்கள்
  • Urges, வேகங்கள்
  • Attitudes, நோக்கங்கள்
  • Motives, ஆழ்ந்த ஜீவனுடைய நோக்கங்கள் நினைவு
  • உணர்வு
  • உறுத்தல்

இவைபோன்று நம்முள் உள்ள அனைத்தும் நேரம் எழுந்தபொழுது மேலே வரும். மேலே வரும்பொழுது நாம் அதனுடன் கலந்து நம்மை இழந்துவிடுவோம். அப்படி நம்மை இழக்காமல் விலகி நின்று சமர்ப்பணம் செய்யவேண்டும். எது மேலே வந்தாலும், தவறாமல் சமர்ப்பணம் செய்ய முயன்று முயற்சியை முடித்துவிட்டால், நாளடைவில் அது சிறிது சிறிதாக இடம் கொடுக்கும். ஒரு நாள் சமர்ப்பணமாகும். அது நம் personalityக்குத் தக்கவாறு பூர்த்தியாவது வாழ்வு. உலகளவில் பூர்த்தியாவது யோகம். சமர்ப்பணம் செய்வதெனில் நம் ஆட்சிக்குட்பட்டதை அன்னையின் ஆட்சிக்குட்படுத்துதல் எனப் பொருள். நம் கட்டுப்பாட்டில்லாததை நாம் சமர்ப்பணம் செய்ய முடியாது. மனத்தில் எண்ணம் ஓடுகின்றது எனில் சிந்தனை செய்ய முடியாதவருக்கு எண்ணம் அவர் கட்டுப்பாட்டிலிருக்காது.

சிந்திப்பவன் எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்ய முடியும்.

உணர்பவனால் சிந்திக்க முடியாது. சிந்திப்பவனால் உணர்ச்சியைச் சமர்ப்பணம் செய்ய முடியும். சிந்திக்க முடியாதவனால்

எண்ணத்தையோ, உணர்ச்சியையோ சமர்ப்பணம் செய்ய முடியாது. பணம் முக்கியம் என நினைப்பவனுக்கு money value உண்டு. அவனால் பணத்தைச் சமர்ப்பணம் செய்ய முடியாது. பணம் முக்கியமில்லை என்பவன் மனத்தில் பணம் ஒட்டிக்கொண்டிருக்கும். அதுவே சமர்ப்பணத்திற்குத் தடை. முக்கியம் என நினைத்தபிறகு சமர்ப்பணத்திற்கு வழியில்லை. சமர்ப்பணம் செய்ய நாம் அந்த விஷயத்திலிருந்து விலகவேண்டும். விலகாவிட்டால் நாம் அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பதாக அர்த்தம். நாம் unconsciousஆக இருக்கும்பொழுது சமர்ப்பணம் செய்யமுடியாது. Cosecration is a conscious process. சமர்ப்பணம் விழிப்பிற்குரியது. நாம் நம் ஜாதியை உயர்வாக நினைக்கும்பொழுது ஜாதியைச் சமர்ப்பணம் செய்ய முடியாது. ஜாதி முக்கியமில்லை, நம் ஜாதி உயர்ந்தது என நாம் நினைப்பது தவறு என மனம் அறிந்தபின் மனம் ஜாதியைச் சமர்ப்பணம் செய்யும். அதேபோல் உணர்வும், உடலுணர்வும், ஜாதியிலிருந்து விலகியபின் அவை சமர்ப்பணம் செய்ய முடியும். பூரண சமர்ப்பணத்திற்கு ஜீவனே அவ்வெண்ணத்தைவிட்டு விலகவேண்டும். விலகிய பின்னரே சமர்ப்பணம் செய்ய முடியும். அதுவும் சுலபமன்று.

Let Thy will be done,Not my will என்பதில் முதற்பாகம் அன்னையை அழைப்பது. அடுத்தது நாம் விலக முடியாததால், அன்னையை நம்மை விலக்கும்படிக் கேட்பது. அதனால் இரண்டாம் பாகம் முக்கியம். இதைச் சொல்லும்பொழுது சொல் மனதில் பதிந்து தியானம் கனப்பது தெரியும். அப்படியில்லையெனில் சொல் தானாக நின்றுவிடும், தெரியாது. தியானம் மனத்தில் கனப்பதுடன் கீழிறங்கி நெஞ்சுக்குப் பின்னால் வரும். அப்படி நகர்ந்தால் சமர்ப்பணம் பலிப்பதாக அர்த்தம். இதைச் சிந்தனையாலோ, concentration நிஷ்டையாலோ செய்ய முடியாது. நாம் நம்மிலிருந்து விலகவேண்டும் என்ற உண்மையால் மட்டும் செய்ய முடியும். அதை அன்னை sincerity என்கிறார். நமக்கு நாம் வேண்டாம், அன்னை வேண்டும் என்பதே அது. நாம் தவறு, மட்டம் எனப் புரிந்தால், வேண்டாம் என்பது

பலிக்கும். நாம் சரி, உயர்வு என்றால் வேண்டாம் என்பது வெறுஞ் சொல்லாகும்.

  • சமர்ப்பணத்தை ஏற்க விரும்புபவன் தன் மனத்தையும், நம்பிக்கைகளையும், values பண்புகளையும்,sensitivities சொரணைகளையும் ஆராய்ந்து, அவற்றை அன்னை நம்பிக்கை, பண்பு, சொரணைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, நம்முடையது வேண்டாம் என முடிவு செய்தால், முடிவு உண்மையானால், சமர்ப்பணம் பலிக்க வாய்ப்புண்டு.
  • நம்மைவிட அன்னை நடைமுறையில் உயர்வு என்பதை நாம் ஏற்கவேண்டும்.
  • நம்மைவிட்டு, சமூகத்தைக் கடந்து, உலகத்தைத் துறந்து நாம் அன்னையை நாடினால் சமர்ப்பணம் வாழ்வில் இடம் பெறும்.
  • பொய் சொல்லாமல் வாழ முடியாது. பொய் சொன்னால் ஜெயிக்கும், தப்பிக்கலாம், பொய் சாமர்த்தியமாகச் சொன்னால் வலுவானது பலிக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. அவர்கள் மெய்யை நாட பொய்யைக் கைவிடவேண்டும். சமர்ப்பணம் பொய்யைக் கைவிட்டபின் எழும். பொய்யை நம்புபவரால் பொய்யைச் சமர்ப்பணம் செய்ய முடியாது.
  • எந்தக் கட்டத்தில் சமர்ப்பணம் பலிக்கவில்லையோ அந்தக் கட்டத்தில் பொய்யிருக்கும்.
  • இவற்றையெல்லாம் அறிவு விளங்கிக்கொண்டால், நம்பாவிட்டாலும்,Let Thy will be done ,Not my will ஜீவன் பெறும். தொடர்ந்து சொன்னால், உள்ளிருந்து எழுந்தால் முழுப் பலனில்லாவிட்டாலும், பொய்யிலிருந்து விடுபடும் திறன் வரும்.
  • தனக்கு வேண்டாம் என்பது பலன் தரவில்லை என்பது மனிதன். பணம் கொடுத்து மருந்து வாங்குகிறான். மருந்து சாப்பிடப் பிரியமில்லை. கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு மறந்துவிடுகிறான். மருந்து பலிக்கவில்லை என்றால், அவன் சாப்பிடாத மருந்து அவனுக்குப் பலிக்கவில்லை. சமர்ப்பணம் செய்ய வேண்டும் என அறிவு கூறுகிறது. செய்ய உணர்வுக்குப் பிடிக்கவில்லை. சமர்ப்பணம் பலிக்க வில்லை, செய்ய முடியவில்லை என்கிறான்.

வேண்டாதது பலன் தாராது. நிச்சயமாகத் தாராது. பலன் வேண்டுமானால், வேண்டாதது வேண்டியதாக வேண்டும். தாயார் முன்னுள்ள கேள்விகள் இரண்டு,

    1. தனக்குள்ள அளவு limit - எது?
    2. Limit தெரிந்தால் அதுவரை தம்மால் செல்ல முடியுமா?

யோகத்தைப் பொருத்தவரை மனிதனுக்குத் தனக்குள்ள பரிணாம வாய்ப்பு இன்று தெரியவில்லை. தெரிந்தால் அந்த எல்லைவரை சென்று வாய்ப்பால் பலனடைய மனிதன் அபிப்பிராயப்படவில்லை. அதே நிலை தமக்கு வாழ்வில் அமைந்துள்ளதைத் தாயார் கண்டார். தன்னுடைய லிமிட் தெரிந்துகொள்வது சிரமம் என்றாலும், முடியும். தாம் செய்யும் வேலைகளில் எந்த அளவு வழிவிடுகிறது, எதற்காக வழி விடுகிறது, அது நிரந்தரமான பாதையா என்பதைக் கண்டு நிர்ணயிக்க முடியும். கடையில் புதியதாக வந்த சோப்பை ஒருவர் வாங்கியபின் அவர்மூலம் இருவர் வாங்கினால், அவர்கள்மூலம் பலர் வாங்கினால் இந்த சோப்புக்கு மார்க்கட் இருக்கிறது என்பதை வியாபாரி தெரிந்துகொள்கிறான். வியாபாரத்திற்கும், யோகத்திற்கும் சட்டம் ஒன்றே, வெளிப்பாடு வேறு. இலஞ்சம் நிலவும் காலேஜில் நம் பையனின் விண்ணப்பம் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாம் நேர்மையாக செய்யும் எந்தக் காரியமும் நேர்மையுள்ளவரை கூடிவரும் என்று தெரிகிறது. இதைப்போல் நமது எல்லையை நிர்ணயிக்க ஆராய்ச்சி, ஆலோசனை தேவை.

நமக்கு லிமிட் வைத்துக்கொள்வது யோகத்திற்கோ, யோக வாழ்க்கைக்கோ சரியில்லை. லிமிட் ஏற்படுத்தும் எண்ணம் அன்னை சம்பந்தப்பட்ட எந்தத் துறைக்கும் ஒத்து வாராது. தனக்குள்ள லிமிட் தெரிந்தபின் அதை முழுவதும் அனுபவிக்கும் மனநிலையைத் தாயார் ஏற்கவேண்டும், இல்லையெனில் தாயார் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதை எப்படி ஏற்படுத்துவது என்ற கேள்வியை எழுப்பாமல் அம்முயற்சியைக் கைவிட்டுச் சமர்ப்பணத்தை அதற்காக ஏற்பது அவசியம், முறை.

கையில் ரூ.100 இல்லாதவர், காலேஜ் பீஸ் கட்ட முடியாதவர், கடன்காரன் தொந்தரவு சிம்மசொப்பனமான நிலையில் அன்னையை அழைத்தபொழுது நிதானம் வந்தது. ஒரு வாரம் கழித்து ஒரு பாங்க் ஏஜெண்ட் 3 இலட்ச ரூபாய் சாங்ஷன் செய்கிறார். தொந்தரவு வளர்கிறது. பொறுமை உடன் வளர்ந்தாலும், பொறுக்க முடியாத நிலையும் வருகிறது. கையில் பணமில்லை. ஆர்டர் வந்தபடி இருக்கிறது. இந்த நிலையில் பழைய நண்பர் தம் பெரிய கம்பெனிக்கு 5 கோடிக்கு power plantற்க்கு quotation கேட்கிறார். அன்னை இதுபோல் மட்டுமே கொடுக்கிறார் என அறிவோம். இவருக்கு quotation தயார் செய்யவும் பணமிருக்காது. பல்லைக் கடித்துக்கொண்டு, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வேலை செய்வதற்குப் பதிலாக பாரத்தை அன்னைமீது போட்டு நாம் செய்ய வேண்டியவற்றை திறமையாகக் குறைவரச் செய்தால், அந்த tender வந்து இலாபம் கிடைக்கும். அன்பருக்கு அப்பொறுமையிருக்குமா?

வருவது போகாது,

போனால் நமக்கு நம்பிக்கைக் குறைவாலேயே போகும்.

முன்னேற்றம்:

அற்புதம் நமக்காகக் காத்திருக்கிறது. நாம் தயாராக வேண்டிய அவசியமில்லை. ஏற்றுக்கொண்டால் போதும் என அன்னை அஜெண்டாவில் கூறுகிறார்கள். அது உண்மையானால் ஏன் நாம் தொடர்ந்த முன்னேற்றத்தைக் காண்பதில்லை? முதல் வாய்ப்பு வந்தவுடன் அது அடுத்த வாய்ப்புக்கு அஸ்திவாரமாக நாம் செயல்பட்டால் முன்னேற்றம் தொடர்ந்திருக்கும். உடனே அனுபவிக்க வேண்டும், ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்றாலும், தொடர்ந்த முன்னேற்றத்தைவிடச் சிறு ஆசைகளைப் பூர்த்தி செய்ய முயன்றாலும் முன்னேற்றம் தடைப்படும். இதற்கு நமது அனுபவத்தில் பார்த்தவை ஏராளம். இது அடிப்படையான discipline. அக்கட்டுப்பாடு இல்லாதவர்க்கு எதுவுமில்லை.

  • ஒரு புது வசதி வந்தால் எந்த அளவுக்கு நாம் அதை இப்பொழுது அனுபவிக்கலாம், எந்த அளவுக்கு அடுத்த முன்னேற்றத்திற்கு அது பயன்படவேண்டும் என்பது பரம்பரை ஞானம்.
  • பரம்பரையாக உள்ள ஞானமே ஒருவர் பெறவில்லை எனில்அவர் இனி அதைத்தான் பெற முடியும். அவருக்குத் தொடர்ந்தமுன்னேற்றமில்லை.
  • நாம் செய்யும் வேலையில் வேலைக்குரிய கட்டுப்பாடுண்டு. அது இல்லாதவர் முன்னேற்றத்தைப் பற்றி நினைக்க முடியாது.

இந்தக் குடும்பத்திற்கு வந்தது ஏராளம். எல்லாம் தாயார் கையிலிருக்கிறது என்பது சரி. ஆனால் அதுவே முடிவன்று. தாயாருக்குள்ள நிலைகள் பல.

  • தாமே எல்லாப் பொறுப்பையும் எடுத்துக்கொண்டு, தம்மாலியன்றதைச் செய்வது அதிகபட்சம் என்பது சரி. அப்படிச் செய்தால் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வந்ததைப் பெரும்பாடுபட்டுக் காப்பாற்றலாம், அல்லது தவறலாம்.
  • தம்மாலியன்ற அளவு வேலையின் பொறுப்பை ஏற்பதைவிட வீட்டார் மனநிலைக்குரிய பொறுப்பை ஏற்றால், மற்றவர்கள் கட்டுத்தறியிலிருந்து விடுபட்ட ஆடு, மாடுபோல் நடப்பார்கள்.

  • அது வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். பெற்றால் பலன் அதிகமாக இருக்கும்.
  • மற்றவர் தம் பிரதிபலிப்பு என்பதை ஏற்று, வேலையையும், மனிதர்களையும் தாயார் பொறுப்பேற்றால் அனைவரும் தாயார் போலாகிவிடுவார்கள். தொடர்ந்த அபரிமிதமான முன்னேற்றம் இருக்கும். அதுவே தாயார் செய்யக்கூடிய அதிகபட்சமாகும்.

அதைத் தாயார் செய்யவேண்டுமானால், குடும்பத்திற்காக, அன்னையை ஏற்பதற்குப் பதிலாக, அன்னைக்காக குடும்பத்தை ஏற்க வேண்டும். இதற்குரிய பக்குவம் அதிகம். இந்த நேரம் சிறியவன் தாயாரிடம் வந்து பேசுகிறான்.

சிறியவன் : அம்மா, என் பிறந்த நாளன்று பரீட்சை வருகிறது. எனக்குப் படிக்க முடியாது. பிறந்த நாள் கெட்டுப் போகும். நான் பரீட்சைக்குப் போகாமலிருக்கலாமா? இது அரைப் பரீட்சைத்தானே.

தாயார் : பரீட்சை முக்கியமா? பிறந்த நாள் முக்கியமா என்று நாம் முடிவு செய்ய முடியாது. நம் முடிவு இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும். இரண்டுக்கும் முக்கியத்துவம் உண்டு.

சிறியவன் : நான் என்ன செய்ய? நீங்கள் என்னைச் சமர்ப்பணம் செய்யச் சொல்லாதீர்கள்.

தாயார் : "எனக்கு இரண்டும் முக்கியம். என்ன செய்வது என எனக்குத் தெரியாது'' என்று அன்னையிடம் சொல்லி விடு.

சிறியவன் : எனக்குப் பரீட்சை முக்கியமில்லை. பிறந்த நாள் முக்கியம்.

தாயார் : அது சரியா?

சிறியவன் : சரியா, தப்பா என்றெல்லாம் பேசாதீங்கோ, பரீட்சைக்கு போக வேண்டாம் என்று சொல்லுங்க.

தாயார் : சரி, சாயந்திரம் சொல்கிறேன். 

பையன் சமர்ப்பணம் செய்யவில்லை எனில் தாம் சமர்ப்பணத்தை நம்பாமல் பையனைப் புரிந்துகொள்ளும்படிக் கேட்பது சரியில்லை எனத் தாயார், தம் மனப்போக்கைச் சமர்ப்பணம் செய்ய முனைந்தால் அது இடம் தரவில்லை. இந்த அளவுகூடப் புரியாத பையன்' என்று மனம் கூறியதைத் தனக்குப் பொருத்திப் பார்த்தார். ஓரளவு மனம் அடங்கியது. மாலை பையன் வந்தான்.

சிறியவன் : சரி, அம்மா. எப்படிச் சமர்ப்பணம் செய்யவேண்டும் என விவரமாகச் சொல்லுங்கள். நான் செய்து பார்க்கிறேன்.

தாயார் : உனக்கு அன்னைமீது நம்பிக்கை இருக்கிறதா? சிறியவனின் நண்பன் ஒருவன் அவனைத் தேடி வந்தான். அவன் வெளியே போய் நண்பனைச் சந்தித்துவிட்டு வந்தான். சிறியவன் : அம்மா, எனக்குச் சமர்ப்பணம் வேண்டாம், பரீட்சை தேதி மாறிவிட்டது என்று நண்பன் கூறுகிறான். நான் போறேன்மா.

தாயாருக்குத் தன் நிலையும், மகனுடைய நிலையும், குடும்பத்து நிலையும் புரிய ஆரம்பித்தது. தமக்குச் சமர்ப்பணம் கட்டுப்பட்ட பொழுது, பையன் சம்மதப்பட்டான், வேலை முடிந்துவிட்டது. இனி தான் செய்வதன்மூலம் அடுத்த முறை பையனே சமர்ப்பணத்தை ஏற்க முன்வரவேண்டும். அதற்குரியதைத்தான் தம் மனத்தில் செய்ய வேண்டும் என்று புரிந்தது. அந்த வாரம் வந்த வாய்ப்புகள் ஏராளம்.

  1. வடஇந்தியாவில் செய்ததுபோல் தென் இந்தியாவிலும் ஒரு power plant போடலாமா என பிரெஞ்சுக்காரர் கேட்டார்.
  2. பம்பாய் கம்பெனிக்காரன் பார்ட்னர், நம் கம்பெனி நிர்வாகம் விஷயமாக அளவுகடந்து திருப்தி அடைந்ததால், அவனாக வேறொரு plantஐ நாம் உற்பத்தி செய்வதானால் அவனே முழு உற்பத்தியையும் வாங்கிக் கொள்வதாகவும், மூலதனம் தருவதாகவும் கூறினான்.
  3. பார்ட்னரை Chennai Chamber of Commerce தலைவர் பதவிக்குப் போட்டியிட அழைத்துள்ளனர்.
  4. பெரியவனை power plant பற்றி T.V.இல் பேட்டி காண அழைத்தனர்.
  5. சிறியவனுக்கு state teamஇல் இடம் கிடைத்துள்ளது.

தாயார் இத்தனையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைவிட முக்கியம் ஏற்றுக்கொள்ளும்முன் தானும், குடும்பமும், பார்ட்னரும் மனத்தைத் தயார் செய்துகொள்ள வேண்டும் எனப் புரிந்தது.

வந்த எந்த வாய்ப்பையும் விடக்கூடாது. தகுதி பெறாமல் ஏற்கக் கூடாது

எனத் தீர்மானமாக அவர் உணர்ந்தார். அன்னை அகந்தையை அழிக்க 3 சூத்திரங்களை எழுதியுள்ளார். அவற்றைச் சில ஆண்டுகட்குமுன் சொல்ல ஆரம்பித்து சரி வாராமல் விட்டுவிட்டார்.

  1. Let Thy will be done,Not my will என்பது முதல் சூத்திரம். இதைச் சரியாகச் சொன்னால் அகந்தை கரையும் என்கிறார். இது பலிக்க துணை செய்யும் கற்பனை சாஷ்ட்டாங்கமாக அன்னை முன் நமஸ்காரம் செய்வது என்கிறார். நாம் நம் ஜீவியத்தில் ஊறிப் போயிருப்பதால் Let thy will be done என்பது போதாது. அதற்குக் குறுக்கே நிற்கும் நம் எண்ணம் கூடாது எனக் கூற Not my will எனக் கூற வேண்டும் எனவும் கூறுகிறார். மனம் அகந்தையிலிருந்து விடுபட இது உதவும். பல ஆண்டுகட்குமுன் இதைச் சொல்லிப் பார்த்தபொழுது தொடர்ந்து சொல்ல முடியவில்லை, ஜீவனோடு சொல்ல முடியவில்லை, மனக் கதவு

அடைபட்டது போலிருந்தது நினைவுக்கு வந்தது. மீண்டும் தற்சமயம் ஆரம்பித்தபொழுது முன்போலவே இருந்தாலும், தடையின் தீவிரம் குறைந்தது. அதனால் தீவிரமாகச் சொல்லும்பொழுது சொல் மனத்தைவிட்டுச் சில சமயங்களில் நகர்ந்து நெஞ்சுக்குப் பின் லேசாக வருவது தெரிகிறது. இத்தடைகட்குக் காரணம் நம் மனத்திலுள்ள அசுரன் என்பது நினைவு வந்து, I surrender my hostility என் அசுர குணத்தைச் சரணம் செய்கிறேன் என்று கூறினார். பல ஆண்டுகட்கு முன் பகவான் ஸ்ரீ அரவிந்தர் அறையில் தியானம் செய்தபொழுது நெஞ்சில் ஒரு பச்சை கையும் அதன்மீது ஒரு கறுப்புக் கையும் தெரிந்தன. இப்பொழுது அந்த கறுப்புக் கையில்லை. சைத்தியப்புருஷனுக்குரிய நிறத்தில் லேசான ஒளி பொருந்திய கை மிக அழகாக நெஞ்சில் தெரிந்தது.

இதே சமயம் பெரியவன் அவன் நண்பனிடம் கொடுத்த மோட்டார் பைக் 11/2 வருஷமாகத் திரும்பி வரவில்லை. கேட்கக் கூச்சமாக இருந்தாலும், கேட்டால் சாக்கு, பதிலாக வருகிறது. தாயார் அவனை correspondence பார்க்கச் சொன்னார். வேண்டுமென்றே ஒரு காமிராவைத் தான் அப்படி வைத்திருப்பது நினைவுக்கு வந்து அந்தக் காமிராவைத் திருப்பிக் கொடுத்தான். பைக் உடனே வந்தது ஒரு வகையில் சிறு விஷயமென்றாலும், இந்த நேரம் அது பெரிய காரியத்தைக் குறிப்பதை அறிந்தார்.

  1. Thy will,Thy will என்பது அடுத்தது. இது உணர்வுக்குரியது. உடல் இரண்டாகப் பிளந்து ஒளியை ஏற்பது உடன் வரும் கற்பனை. My will தடை போனபின் இது பயன்படும். உடல் ஒளியை ஏற்க நாம் அதை இரு கூறாகப் பிளக்க வேண்டும்.
  2. I am eternally yours என்பது உடலுக்குரியது. இறைவனின் இரு கைகளுக்குள் தன்னைக் குழந்தையாக உருவகப்படுத்துவது கற்பனை. இவை தனக்குதவும் என தாயார் நினைத்தது சற்று பலிப்பது போலிருப்பதால் தாயார் இவற்றை மேற்கொண்டு புற நிகழ்ச்சிகளையும், அகவுணர்வுகளையும் கவனிக்கலானார். நல்லதை செய்தாலும் நான் வந்துவிடுகிறது. சும்மாயிருந்தால் வேலை கெட்டுப் போகிறது. நாம் மாறினால் குடும்பம் மாறுகிறது.

அனைத்தையும் கவனிப்பதுடன் அரை நிமிஷம் விடாமல் எதையாவது அன்னையை நெருங்க செய்தபடியிருப்பதும், அதை அதிகபட்சத் தீவிரமாகச் செய்வதும் சரி எனப்பட்டு தாயார் அவற்றை மேற்கொண்டார். மேலும் ஒரு விஷயம். அநேக குடும்பங்கள் வேகமாக முன்னேறும்பொழுது பல குடும்பங்கள் ஓரடியும் எடுத்து வைக்க முடியாதபடியிருப்பார்கள். அதற்குக் காரணம் இப்பொழுது அவர்கள் உள்ள நிலைமைக்குச் சரியான அஸ்திவாரமிருக்காது. அங்கு ஒரு பலமான சிக்கலிருக்கும். அந்தச் சிக்கல் பொதுவாகக் குடும்ப இரகஸ்யமாக இருக்கும். அல்லது வீட்டில் யாரும் அதைப் பேசாமலிருக்கும் நிலையிருக்கும். நாளாவட்டத்தில் பிரச்சினை அது என்பது மறந்துபோய் மற்றவர்கள்போல முன்னுக்கு வர முயன்றால் இடம் கொடுக்காது. தீவிர முயற்சி செய்தால் ஏதாவது பெரிய விஷயம் சரியும். அதற்குண்டான காரணத்தை இன்று சரி செய்தால் மேலே போகலாம். அது மனத்தைப் பற்றியதானால் மனத்தால் அதைச் சரி செய்ய வேண்டும். அதுபோன்ற சில உதாரணங்கள்.

  1. 15 தொழில்கள் ஆரம்பித்து நஷ்டமானவர் மார்க்கட் நிலவரம் மாறியதால் சிரமமில்லாமல் வாழ்ந்தால், அவருடைய தோல்விகளின் குறை மார்க்கட்டில் ஆயிரம் வகையாக இருக்கும். அவர் மனத்தில் தோல்வி கொலுவீற்றிருக்கும்.
  2. நம்பியவரைத் துரோகம் செய்து விழுந்து எழுந்தவர்கள் செயலும், நினைவிலும் துரோகமிருக்கும், துரோகம் முன்னேறவிடாது.
  3. 4, 5 பேர்கள் சம்பாதிக்கும் குடும்பத்தில் ஒருவர் மட்டும் திறமைசாலி, மற்றவர்கள் நஷ்டம் விளைவிப்பவரெனில், அவர் மீது புதிய, பெரிய கட்டிடம் கட்ட நிலைமை இடம் தாராது. ஒருவர் பொக்கையாக இருந்தால் முன்னேற அனுமதிக்காது.



book | by Dr. Radut