Skip to Content

8. உள்ளத் திருக்கோயில்

அன்னையை வழிபட பல முறைகளை விவரித்து அன்பர் வழிபாடு' என்ற ஒரு கட்டுரையை வெளியிட்டோம். அந்த முறைகள் எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒரு சிறப்புண்டு. இக்கட்டுரையில் அந்தச் சிறப்பைக் குறிக்கப் பிரியப்படுகிறேன்.

முறை எதுவானாலும் அதன் பலன் தெரிய வேண்டுமானால் அம்முறை பூரணம் பெற வேண்டும் (It should be saturated with Mother's Force). முறைக்குரிய பலன் எப்பொழுதும் உண்டு. பூரணப் பலன் பெற முறை பூரணம் பெற வேண்டும். ஒரு முறையை நாம் கடைப்பிடிக்கும்பொழுது அது பூரணம் பெற்றுவிட்டதா, நாம் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டோமா என்பதற்கு ஓர் அறிகுறி எது என்பதைச் சொல்ல விரும்பியபொழுது அன்னை தாமே பின்பற்றிய வேறொரு முறை நினைவுக்கு வருகிறது. அதையும் இங்கு விளக்கப் பிரியப்படுகிறேன். அந்த முறையைக் குறிக்கவே உள்ளத் திருக்கோயில்' எனத் தலைப்பிட்டேன்.

பூசல் நாயனார் மானசீகமாக மனதில் கட்டிய சிவன் கோவிலைச் சிவபெருமான் அரசன் கட்டிய கோவிலைவிட உயர்ந்ததாகக் கருதி, அவனுடைய கும்பாபிஷேகத்தை ஒத்திப்போடச் சொன்னார். மனம் எழுப்பிய கோவில் மானசீகமானது. அது பெருமானின் மனத்தைக் கொள்ளைகொள்ளக்கூடியது. மதிலால் சூழப்பட்ட கோவிலைவிட சக்தி வாய்ந்தது. இந்த நிகழ்ச்சியில் உள்ள கருத்து இரண்டு. ஒன்று, மனோசக்திக்குப் புறவாழ்வு கட்டுப்படும். புறவாழ்வைப் புறக்கணித்து புனிதன் மனத்தை நாடுவான். மற்றொன்று, (symbolism) பக்தி

சேவைக்கு அறிகுறியானது (symbol). அந்தக் குறிப்பால் அது குறிக்கும் வாழ்வு மனிதனுக்குக் கட்டுப்படும். புற வாழ்க்கையான சேவை அக வாழ்க்கையான பக்தியால் குறிப்பாக உணர்த்தப் படுகிறது. எனவே மனத்தின் பக்திக்கு ஓர் இடம் ஏற்படுத்தினால், புற வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும் கருவூலமாக அது அமையும். அதையே உள்ளத் திருக்கோயில் என்றேன். அன்பர் வீட்டில் அப்படிப்பட்ட திருக்கோயிலை அமைப்பது எப்படி என்பதைக் குறிப்பதே இக்கட்டுரை. இதுவே ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் ஏற்பட்டதன் அடிப்படை. உலகத்தின் குறிப்பாக (symbol) ஓர் இடமாக ஆசிரமத்தை அன்னை ஏற்படுத்தினார். எனவே, ஆசிரமத்தில் நல்லது நடந்தால் அது உலகத்திற்கு நல்லது. உலக வாழ்வை ஆசிரமம் குறிப்பால் உணர்த்துவதால் உலக வாழ்க்கையை நிர்ணயிக்கும் திறன் ஆசிரம நிகழ்ச்சிகளுக்குண்டு என்பது அன்னையின் விளக்கம். உலகத்தின் போக்கை நிர்ணயிக்க அன்னை ஓர் ஆசிரமம் ஏற்படுத்தியதுபோல் நம் குடும்ப வாழ்க்கை அன்னையின் பேரொளியால் அனவரதமும் சூழப்பட்டிருக்க நாம் ஒன்று செய்ய முடியுமா என்பதே கேள்வி.

அன்பர் வழிபாட்டில் உள்ள 31 முறைகளில் ஏதாவது ஒன்றை முழுமையாகப் பின்பற்றினால் நல்லது என்று சொன்னேன். எல்லா முறைகளையும் பின்பற்றுபவர் சிறந்தவர்; யோகச் சிறப்புடையவர். அவரைப் பற்றி நாம் கருதாமல் எல்லா முறைகளின் சிறப்பும் பலன் தருமாறு (symbolic) ஒரு முறையைப் பின்பற்ற வழியுண்டா? எனில் அப்படியும் ஓர் உபாயம் உண்டு என்று கூறி, அதை விளக்குமுன் ஒவ்வொரு முறையும் முழுமை பெற்றதற்குரிய அறிகுறிகளைச் சொல்கிறேன்.

தியானம் முழுமைப்பட்டு, அதில் அன்னை பூரணம் பெற்றதற்கு அறிகுறி தானே தியானம் நம்மைத் தேடி வந்து ஆட்கொள்வது. தானே அமையும் தியானம் சிறந்தது. நம்முடைய முறை முழுமையானது என்பதற்கறிகுறி.

நாம ஜெபம் முழுமைப்பட்ட நிலையில், அதன் பலன் சித்திக்கும் நிலையில், மனம் மௌனமாகும். வாயால் எழுப்பும் ஒலி மனத்தால் மௌனத்தில் எழும். ஜெபம் என்பது ஒத்துச் சொல்வதே என்றாலும், அதற்குரிய முறை சரியானதாக இருந்து, முழுமைபெற்ற காலத்து, சொல் ஒலியை இழக்கும். மேலும் முறையை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டி, சொல்லைப் பலவந்தமாக எழுப்பினால், அந்தச் சொல்லுக்கு மந்திரசக்தி உண்டு; சூழல் அதிரும்.

அழைப்பு உச்சக்கட்டத்தை அடையும்பொழுது நாடி, நரம்புகளில் அமிர்த ஓட்டம் எழும்.

பொதுவான ஆத்ம சமர்ப்பணம் நிறைவடைந்தபின் சமர்ப்பணம் உயிர் பெற்று அதுவே நம்மை நினைவுபடுத்தும். நாம் சமர்ப்பணம் செய்வதற்கு முன்னால் நாம் செய்ய வேண்டியதை அதுவே தானே செய்ய முன்வரும். அந்நிலை நம் முறை சரியானது என்பதைக் குறிக்கும்.

குறிப்பிட்ட செயலைச் சமர்ப்பணம் செய்து நாம் செய்தது சரிதானா என்று பார்த்தால், முதலாவதாக அந்தப் பிரச்சினை முழுவதும் தீர்ந்திருக்கும். நாம் எடுத்துக்கொண்ட செயலில் 18 பாகங்கள் இருந்தால், ஏதாவது ஒரு பகுதியிலாவது அன்னையின் அதிர்ஷ்டச் சுவடு தெரியும். நாம் எடுத்துக்கொண்ட செயல் வீடு கட்டுவது என்று கொண்டால், சிமெண்ட் வாங்குவது அதில் ஒரு பகுதி. சிமெண்ட் வாங்கப் போன இடத்தில், நமக்கும் சிமெண்ட் ஏஜன்சி வேண்டுமா எனக் கேட்டால் அது அன்னையின் அதிர்ஷ்டத்தைக் குறிக்கும்.

முக்கிய பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்தால், அது பூர்த்தி ஆகும் நிலையில், அதே நிலையில் உள்ள பல பிரச்சினைகளில் ஒன்றாவது தானே தீரும் அறிகுறியைக் காட்டுவது, நம் சமர்ப்பணம் பூரணமானது என்று குறிக்கும்.

தொந்தரவான பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்ய நினைவு வந்தாலே நம் பக்தி சிறப்புடையது என்று பொருள். சமர்ப்பணத்தால் அந்தப் பிரச்சினை தீர்ந்தால் அதைவிடப் பெரிய அறிகுறி கிடையாது.

ஒரு வகையில் வாய்ப்பும், தொந்தரவான பிரச்சினைக்கு ஒப்பானது. பெரிய வாய்ப்பு வந்தால், அத்துடன் சமர்ப்பண நினைவும் வந்தால் நாம் முறையைச் சரியான அளவில் பூரணமாகக் கடைப்பிடிக்கிறோம் என்று அர்த்தம். சரியான முறையில் இந்தச் சமர்ப்பணம் பூரணமான நிலையில் புதிய வாய்ப்புகள் எழும். அவை தொடர்ந்து வந்தபடியிருக்கும். அதேபோல் தொந்தரவான பிரச்சினை தீர்ந்தால் போதும், அதுவே நம் பூரணத்தைக் காட்டும் என்றாலும், அடுத்த நிலையில் அது பெரிய வாய்ப்பாக மாறும். என் எதிரிக்குக்கூட இந்தத் தொந்தரவு வரக்கூடாது என்பது போன்ற சிரமம் வந்து நம் சமர்ப்பணம் பூரணம் பெற்ற நிலையில், இந்த மாதிரி வாய்ப்பு இதுவரை எவருக்கும் கிடைத்ததில்லை என்ற நிலை ஏற்படும்.

தரிசனப் பயணங்கள் தடையின்றி நடப்பதே அவற்றின் முழுமையைக் குறிக்கும். அதிலும் ஓர் உயர்ந்த கட்டம் உண்டு. அன்னை சிறப்பான ( special) சில தரிசனங்களுக்காகப் பால்கனியில் வந்திருக்கிறார் Public Darsan Dec. 24, Dec. 26 ஆகிய தேதிகளில் திடீரென ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டு தரிசனம் கூடியதுண்டு. வெளியூரிலிருப்பவர்கட்கு அந்தச் செய்தி கிடைப்பது கஷ்டம். சமீபத்தில் ஆகஸ்ட் 8ஆம் தேதி அத்தேதியின் விசேஷத்தை முன்னிட்டு (8.8.88) [எல்லா நம்பர்களும் 8ஆக இருப்பதால் அன்னை இந்த நாளை Double Protection, Double  manifestation என்று குறிக்கிறார். இரு மடங்கு விவேகமான சிருஷ்டியும் பாதுகாப்புமாகும்ன அன்னையின் அறையைத் திறந்தார்கள். இந்த முடிவை இரண்டு நாள் முன்னமே தெரிவித்ததால், வெளியூர் அன்பர்களுக்குப் பயன்படவில்லை. உன் தரிசனப் பயணங்களைச் சரியான முறையில் சமர்ப்பணம் செய்து, அது பூரணம் பெற்றிருந்தால், அன்றைய தினம் அன்னை உன்னை இங்குக் கொண்டுவந்து நிறுத்துவார். அதுபோல்

இரு பண்டிதர்கள் அன்று பாண்டி வந்து அன்னை அறையைத் தரிசித்தார்கள். முழுமைக்குரிய அறிகுறி அதுவே.

காணிக்கை செலுத்துவதால் நாம் கேட்ட பலனைப் பெறுதல் அதன் முழுமையைக் குறிக்கும். நாம் செலுத்தும் காணிக்கை நம்மைப் போன்ற மற்றவருக்கு அவரை அறியாமல் பலன் அளிப்பதுண்டு. அது நம் காணிக்கையின் தூய்மை நிறைவுபெற்றதைக் காட்டும். ஒரு பிரச்சினை தீர காணிக்கை செலுத்தி, அதனால் வேறொரு பிரச்சினை தீர்வதும் உண்டு. அதுவும் அப்படிப்பட்ட அறிகுறி. பிரச்சினை தீர செலுத்திய காணிக்கை பிரச்சினையைத் தீர்த்து, வாய்ப்பை அதன் மூலம் உற்பத்தி செய்தால் அதற்கும் அப்படிப்பட்ட முக்கியத்துவம் உண்டு. காணிக்கை ஆசிரமம் சென்று விரைவாகப் பிரஸாதம் வருவதும் ஒரு சின்னம். நாம் கொடுத்த காணிக்கையைத் தொடர்ந்து நம் போன்றவர் பலர் காணிக்கை செலுத்துவதும் அறிகுறி ஆகும்.

நினைவு பூரணம் பெற்றால் அது மனதில் உருவமாகத் தென்படுவதுண்டு. அப்படித் தென்பட்டால் அது சிறந்த அறிகுறி. நினைவே வழிபாடாக எடுத்துக்கொண்டபின் ஒரு பிரச்சினை ஏற்படும்பொழுது அந்த நினைவால் பிரச்சினை தீர்வதும் நினைவு பூரணம் பெற்றதற்கறிகுறி.

சுத்தம் சிறப்பாக இருப்பதை எவரும் தெரிந்துகொள்ள முடியும். எனினும் அதற்கும் ஓர் அறிகுறியைச் சொல்லலாம். புறச் சுத்தம் உயர்ந்தது. அகச் சுத்தம் இருந்து, அதன் வெளிப்பாடான புறச் சுத்தம் சிறந்தது. சுத்தம் என்பதை அதற்குரிய முறையோடு நிறைவேற்றினால் அதற்குரிய அறிகுறிகள் பல. ஒன்றைக் குறிப்பிடுகிறேன். அன்றாட அத்தியாவசியமான செலவுகளுக்குப் பணத் தட்டுப்பாடு இல்லை என்றால், சுத்தம் பூர்த்தியாகிவிட்டது என்று பொருள்.

இதற்கு விதிவிலக்கே இல்லை. சுத்தம் இருந்தால் பணத் தட்டுப்பாடு இருக்காது என்பது பூரண உண்மை. அது அன்னையின் உண்மை என்றும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாம். ஒரே ஒரு விதிவிலக்கு. என் சொந்த அனுபவத்தில் இருவரை நான் பார்த்து இருக்கின்றேன். அநேகமாக இதை யாரும் பார்த்திருக்க முடியாது. அது ஆயிரத்தில் ஒன்று என்று சொல்ல முடியாது. பதினாயிரத்தில் ஒன்றாக இருக்கலாம். அளவுகடந்த சுத்தமும், அளவுகடந்த வறுமையும் கலந்து ஒரே இடத்தில் காணப்படுவதாகும். இதற்குரிய காரணம் மிகவும் அடிப்படையானது. இங்கு நமக்குத் தேவையில்லை என்பதால் அதைச் சுட்டிக்காட்டுவதுடன் விட்டுவிடுகிறேன். மனம் அளவுகடந்த அழுக்கால் நிரப்பப்பட்டிருந்தால், நான் சொல்லும் பலனைச் சுத்தம் அப்படிப்பட்டவர்களுக்குக் கொண்டுவந்து தராது.

ஒழுங்கு, சுத்தத்தைவிட உயர்ந்தது. அது பூரணமானதால் நமக்கு வேண்டிய பெருஞ்செலவுகளுக்குப் பணம் தடையின்றிக் கிடைக்கும். சுத்தம் செல்வத்தைக் கொடுக்கும். அதிகமான அளவிலும் கொடுக்கும் என்பது உண்மை. வீடு கட்ட, கல்யாணம் செய்ய, கம்பெனியில் முதலீடு செய்ய, நகை செய்ய தேவையான பணம் அன்றாடச் செலவுகளைவிட அதிகமான தொகையாகும். ஒழுங்கைக் கடைப்பிடித்துவரும் வீட்டில் இப்படிப்பட்ட பெரிய செலவு ஒன்று வரும்பொழுது அதற்குரிய பணம் தானே புறப்பட்டு வந்து முன்னிற்கும்.

தணிவான பேச்சு பூரணமாகப் பலித்தால் எவரும் நம் கருத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கமாட்டார்கள். அதுவே அது பூர்த்தியானதற்கு அறிகுறி.

சண்டைகளைத் தவிர்க்க முனைந்து வெற்றி பெற்று, வெற்றி பெருவெற்றியானால், நாம் சம்பந்தப்பட்ட இடங்களில் ஒருவரும் சண்டையை ஆரம்பிக்கமாட்டார்கள்.

குறை கூறுவதில்லை என்ற முடிவு அன்னை அருளால்

பூர்த்தியான ஒருவர் வாழ்வில் அதற்கு அறிகுறியாகக் காண்பது சிறப்பு - ஒருவனுக்கு உள்ள குறையை நாம் கூற மறுக்கும்பொழுது அந்தக் குறையை விலக்கி அவன் நம் விஷயத்தில் செயல்பட்டு உலகத்தையே அதிரவைப்பான். ஒரு கருமி பிரசித்தி பெற்றவராயினும், அவரது கருமித்தனத்தைச் சொல்லாலும், எண்ணத்தாலும் நாம் உணராவிட்டால், நாம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தில் அவர் உதார குணத்துடன் நடந்துகொள்வார்.

அன்னையின் கருத்தைப் புரிந்துகொள்ள முயன்றால் நம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் எள்ளளவும் குழப்பமோ, சந்தேகமோ வாராது.

மற்றவர் நோக்கில் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முயன்றால், நமக்கும் மற்றவர்க்கும் உள்ள ஒரு பிரச்சினை தீரும் பொழுது, அது இருவருக்கும் இலாபமாக இருப்பதே இந்த முறை பூரணம் பெற்றதற்கு அறிகுறி.

நம் வீட்டில் அன்னையைப் பிரதிஷ்டை செய்ய முயன்றால் அது பல நிலைகளில் பலிக்கும். புதியதாக வருபவர்கள் ஆசிரமம் போலிருக்கிறது என்பார்கள். அதுவே சிறப்பு. சிறப்பு பூரணம் பெறுவதற்குரிய அறிகுறி ஒன்றுண்டு. (There will be no lapses, slips or mishaps even in material objects). வீட்டினுள் அன்னை மனிதனையும், அவன் செயல்களையும், அங்குள்ள பொருள்களையும் தாங்கிப் பிடித்துக்கொண்டு எந்தத் தவறும், குறையும் ஏற்படாமல் பாதுகாப்பது தெரியும். ஒருவர் அசம்பாவிதமாகப் பேச வாயெடுத்தால், தெருக்கதவைத் தட்டி உள்ளே வரும் விருந்தாளி அசம்பாவிதமான பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பார். கையிருந்து தவறி விழுந்த கைக் கெடிகாரம் வேஷ்டியில் சிக்கிக் கீழே விழுவது தடுக்கப்படும். ஸ்டாம்ப் ஒட்டாமல் போஸ்டாபீசுக்கு நாம் தபாலைக் கொடுத்தனுப்பினால், எடுத்துக்கொண்டு போனவர் ஸ்டாம்பை ஒட்டி போஸ்ட் செய்வார். அன்னை இருப்பதற்கு இவை அடையாளம்.

குடும்பத்தினர் மனத்தில் அன்னை பூரணமாகப் பிரதிஷ்டை ஆனதற்கு வெகுநீண்ட விளக்கம் கொடுக்கலாம். ஒரு தவறான குணமாவது மாறி, அதற்கெதிரான நல்ல குணம் ஒருவரிடம் வெளிப்பட்டால், இம்முறை பூரணம் பெற்றதற்கு அது முடிவான அறிகுறி.

பகவான் தாம் எழுதியவற்றை எவரும் புரிந்துகொள்ளவில்லை என்றார். அன்பர்கள் வழிபாட்டில்' அவர் நூல்களைப் பயிலுவதை ஒரு வழிபாட்டு முறையாக எழுதியிருக்கிறேன். அவை புரிந்தாலும், புரியாவிட்டாலும் வழிபாட்டுக்குரிய முழுப் பலன் உண்டு. அதை மட்டும் கருதியே அதை எழுதினேன். முரணான கருத்துகளைப் பல இடங்களில் பகவான் தெரிவித்திருக்கிறார். அதை நாம் அப்படியே ஏற்றுக்கொள்கிறோம்; புரிந்துகொள்ள முடிவதில்லை. முறை சரியானது ஒன்றானால் அந்தக் கருத்து புரியும்.

பகவான் நூல்களைப் பயின்றால் தியானம் வரும். அன்னை நூல்களைப் படித்தால் இனிமையான உணர்ச்சி ஏற்படும். இது பூரண சிறப்புள்ளது என்பதற்கு ஓர் அடையாளம். யாரைக் கண்டால் அளவுகடந்த எரிச்சல் ஏற்படுகிறதோ அவரும் எரிச்சலை நம் உள்ளே கிளப்பவில்லை என்றால் இம்முறை பூரணம் பெற்றது என்றாகும்.

மந்திர ஜெபம் நம் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும். மிகவும் சிறப்பாகப் பூர்த்தியானால், எந்தப் பிரச்சினையையும் தீர்க்க உதவும். நம்முடைய மந்திர ஜெபம் நம் காதில்பட்ட வேறொரு பிரச்சினையைத் தீர்க்கும்பொழுது நாம் இம்முறையைப் பூரணமாகக் கடைப்பிடித்து உள்ளோம் என்று அறியலாம்.

உள்ளுணர்வால் புற நிகழ்ச்சிகளை அறியும் முறை, நம் வாழ்வில் (In our environment) நம் உணர்வை மீறி ஒரு காரியம் நடக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தும். இந்த முறை பூரணப்படும் பொழுது நம் உணர்வோடு தொடர்புள்ள நிகழ்ச்சிகளும் நம் உணர்வு மூலம் கட்டுப்படுவது தெரியும்.

கடமையில் முழு ஆர்வம் காட்டும் முறை சந்தோஷத்தைக் கொடுக்கும். அது பூரணமானால் சந்தோஷம் தினமும் அதிகரித்தபடி இருக்கும் (ever increasing joy). புரளியை விட்டொழித்த மனத்தைப் பெற்றால் மனம் நிம்மதியாக இருக்கும். இது பூரணமடைந்தால் அருவிபோல் அமைதி உடலில் பாய்வது தெரியும்.

அன்னையை நோக்கி தினமும் ஓர் அடி எடுத்து வைத்தால் அது ஒரு பெரிய யோக சித்தி. இது பூரணமான நிலையில் நாம் வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்க முயலும்பொழுது யோக அனுபவங்கள் ஏற்படுவதைப் பார்க்கலாம். இம்முறையைக் கையாளுபவர் ஒருவர் ஒரு கமிட்டிக் கூட்டத்தில் சூடான விவாதத்திற்குப் பிரச்சினை வரும்பொழுது அப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்ல முயன்றால், அறையில் சாந்தம் பரவி அவருள் peace நிலைத்து பிரச்சினையை முழுவதுமாகக் கமிட்டி தீர்ப்பதைக் காணலாம். அன்னையின் சாந்தம் பெறுதல் யோகானுபவம்.

நன்றியறிதல் பூரணம் பெற்றால் உடல் புளகாங்கிதம் அடையும். செயல்களுக்குள்ள அர்த்தபூர்வமான தொடர்பு புரிந்து பூரணம் அடைந்தால் அரைகுறையாக உருவாகிக்கொண்டிருந்த பிரச்சினைகள் ஆரம்பத்திலேயே கரைந்துவிடும்.

சிந்தனைக்குரிய ஆராய்ச்சி முதிர்ந்த நிலையில் மனத்தைத் தேடி மௌனம் வரும்.

நமக்குத் தீர்க்க முடியாத பிரச்சினை ஒன்றில்லை என்பது பூரணம் பெற்றால், நம் மூலம் நம்மைத் தாண்டியுள்ள பிரச்சினைகள் தீரும்.

அடையாளம் ஒரு சிறு இடம்: Symbolic Corner:

31 முறைகளுக்கும் உரிய சிறப்பைக் குறிப்பிட்டேன். இத்தனை சிறப்பும் நிறையும் அளவில் நம் வாழ்வு அமைவது முழு யோக முயற்சி. அதனால் நாம் அதை ஏற்கனவே கருதவில்லை. நம் முழு வாழ்வில் எல்லாச் சிறப்புகளையும் பெற முடியவில்லை என்றாலும், எல்லாச் சிறப்புகளும் முழுவதும் நிறைந்த ஒரு பகுதியை நம் வாழ்வில் ஏற்படுத்த முடியும். உலகத்தை ஆசிரமம் குறிப்பிடுவதைப்போல் நம் முழு வாழ்வையும் நாம் எடுத்துக்கொள்ளும் ஒரு பகுதி குறிப்பிடுவதுபோல் அமைக்கலாம். Mother's corner. We create a miniature of our life in one part of life or in our portion of the house within which life will be perfect. அதையே உள்ளத் திருக்கோயில் என்றேன். அதை உள்ளத்திலும் ஏற்படுத்தலாம்; வீட்டின் ஒரு பகுதியிலும் அமைக்கலாம். வீட்டில் அமைத்தால் உள்ளத்தின் பவித்திரத்தால் அதைப் பாதுகாக்க வேண்டும். உள்ளத்தில் அமைத்தால் பவித்திரமான செயலால் அதைக் காப்பாற்ற வேண்டும்.

நம் வாழ்வில் கால் பகுதிக்குக் குறையாத பகுதி இந்த முறையின் கீழ் வர வேண்டும். ஒரு மிகச் சிறிய பகுதியை இம்முறையில் கொண்டுவந்தால் நாம் எதிர்பார்க்கும் பெரும்பலன் இருக்காது. ஒரு பகுதியை இந்த எல்லா 31 முறைகளால் சூழ்ந்து கொண்டால் கால் பகுதி பெறும் தனிச் சிறப்பால், நம் முழு வாழ்வும் முழுப் பொவு பெறும் என்பதே நாம் எதிர்பார்க்கும் பெரும்பலன். வீட்டில் ஒருவர் திறமையுடனும், பொறுப்புடனும், நுணுக்கச் சிறப்புடனும் சம்பாதித்தால், அவர் முழுக் குடும்பப் பொறுப்புள்ளவரானால், ஒருவர் வருமானத்தால் முழுக் குடும்பமும் முழுப் பலன் பெறுவதற்கொப்பாகும். வீடு, ஆபீஸ், அவற்றைத் தவிர்த்த நம் சொந்த வாழ்க்கை (personal life) ஆகிய ஒன்றை எடுத்து இந்தச் சோதனையைச் செய்யலாம். சொந்த வாழ்க்கை என்று ஒன்றில்லாதவர் அதை எடுத்துக்கொள்ள

முடியாது. பெரும்பாலோர்க்குச் சொந்த வாழ்வு என்றிருக்கும்.

வீட்டை எடுத்துக்கொண்டவரை (domestic life) இந்த 31 முறைகளில் எவை வீட்டு வாழ்க்கையில் எதிர்ப்படுகிறதோ அவற்றைப் பூரணமாகப் பின்பற்றினால் அதன் மூலம் அவர் முயற்சியின்றி அவரது முழு வாழ்வும் இந்த முழுப் பலனைப் பெறும்.

வீட்டின் ஒரு பகுதியிலும் இந்தச் சோதனையைச் செய்யலாம் என்றேன். முதலில் சொல்லியதைச் செய்ய முடியாதவர்களே இதைச் செய்யலாம். மனத்தளவில் பின்பற்றுவது சிறப்பானது. அது முடியவில்லை என்று செயல் அளவில் செய்வது பெருஞ்சிறப்புக்கு உரியதாகாது. எனினும் அதையும் விளக்கிச் சொல்கிறேன். சில வகுப்புகளில் ஒரு சிறந்த மாணவனிருப்பான். பொதுவாக மந்தமான வகுப்பாக இருக்கும். முதல் மாணவன் 100 மார்க்கும், இரண்டாம் மாணவன் 43 மார்க்கும் வாங்கினாலும், அவனை இரண்டாம் மாணவன் என்றே நாம் சொல்லுவோம். இந்த முறை அது போன்றது.

வீட்டில் ஒரு பகுதி அல்லது ஓர் அறையை இதற்காக ஒதுக்கினால் நாம் முதலில் பூஜை அறையை நினைப்போம். அது தவறில்லை என்றாலும், வாழ்க்கைக் சிறப்பைப் பூர்த்தி செய்ய முனைவதால், மற்ற அறைகளில் ஒன்றை எடுத்துக்கொள்வோம். அப்படிப்பட்ட பரிசோதனையில் தணிவான பேச்சைப் பின்பற்றுவது என்றால் அந்த அறையில் தாழ்ந்த குரலில் பேசலாம். வாய்ப்பைச் சமர்ப்பணம் செய்யும் முறையை இந்த அறையோடு சம்பந்தப்படுத்த முடியாது. எனவே நம் 31 முறைகளில் இந்த அறைக்குப் பொருந்தும் அனைத்தையும் பின்பற்றினால் போதும் என்று நாம் முடிவு செய்ய வேண்டும்.

அதனுள் எரியும் பல்ப் fuse ஆனால் வேறு பல்ப் போட அரை நிமிஷம் தாமதிக்கக்கூடாது. வேறு பல்ப் கையில் வைத்திருக்க வேண்டும். நம் கண்ணில் பட்டவுடன் புது பல்ப் போட வேண்டும்.

அங்குள்ள கடிகாரத்திற்குச் சாவி கொடுக்காமல் ஒரு மணி நேரம்கூட நிற்கக்கூடாது. எந்த நாள் சாவி கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, 5, 6 மணி முன்னதாக அடுத்த சாவியைக் கொடுக்க வேண்டும். புத்தகம் மேஜை மேலிருக்கிறது, காற்றில் அடிக்கடி திறந்து கொள்கிறது என்றால், அதன் மீது பேப்பர் வெயிட் வைக்க வேண்டும். அல்லது காற்று வாட்டம் பாதிக்கப்படாமல் புத்தகத்தை மாற்றி வைக்க வேண்டும். செயல்கள், எண்ணங்கள், உணர்ச்சிகள், கருத்துகள், அனைத்தும் நம் முறைகளின்படி 100க்கு 100 இந்த அறையில் உள்ளவற்றைப் பொருத்தவரை அன்னை முறைகளைப் பின்பற்றினால், இந்த அறையின் சூழலுக்கு ஒரு சக்தி (power) வந்துவிடும். கோயில் கர்ப்பகிரஹம்போல் அது அமையும். வீட்டு நடவடிக்கைகளையும், அங்குள்ள அனைவருடைய வாழ்க்கையையும் காப்பாற்றும் திறனுடையது அந்த அறையிலுள்ள அமைப்பு. இப்படிப்பட்ட தொடர்பு ஏற்பட்டபின், அதனுள் உள்ள அமைப்பைக் கலைக்காமல் நம்மவர் வாழ்வில் ஒரு குறை ஏற்படுத்த முடியாது. அப்படி ஒரு குறை ஏற்பட்டால், அது இந்த அறையுள் நிச்சயமாகத் தெரியும். இங்கு ஏற்பட்ட குறையை நிவர்த்தி செய்தால் வெளியில் ஏற்பட்ட நஷ்டம் விலகும். We can call this symbolic living. அன்னையின் அடையாள வாழ்க்கை எனலாம்.

வீட்டில் உள்ள அறை, பொருள்களால் (physical things) நிறைந்தது. அதற்கு இந்தச் சக்தி உண்டு. மனத்தில் உள்ள ஒரு பகுதியை இந்தக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தி, அதன் பிரதிநிதியாக வீட்டில் ஒரு பகுதியைக் கருதினால், அங்கு இம்முறைகளைப் பூரணமாகப் பின்பற்றினால் நம் முழு வாழ்வும் அன்னையின் முழுச் சிறப்புக்குரியதாகும்.

********



book | by Dr. Radut