Skip to Content

12. நோயற்ற வாழ்வு

உடல் தெய்வம் உறையும் இடம். திடகாத்திரமும், ஆரோக்கியமுமே அதன் இயல்பு, பிறப்புரிமை. நோயுறுதல் உடலுக்கு இயற்கையில்லை. இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த முன்னோர்களும், இன்றும் அதுபோல் வாழும் மலைவாசிகளும் மிக ஆரோக்கியமாக வாழ்தல் அதற்கு சான்று. உடல் தன் இயற்கையை மறந்து மனித அறிவுக்குத் தன்னை உட்படுத்தி, மனத்தின் அடிமையாக இருப்பதால், மனத்தில் ஏற்படும் பயம், சஞ்சலம், சபலம், சந்தேகங்கள் உடலையும் பாதிக்கின்றது; அதனால் நோய் ஏற்படுகிறது என்கிறார் அன்னை. ஆயிரத்தில் ஒன்றே உண்மையான உடலைப் பற்றிய நோய். அதற்குத்தான் வைத்தியம் தேவை. மற்றவை மனத்தால் உடலில் உற்பத்தியான குறைகளாகும் என்கிறார் அன்னை.

உடல் இருளின் கருவி; பொய்யின் உறைவிடம்; புறக்கணிக்கப் படவேண்டியது என்பது இந்திய மரபு. உடலைப் பெற்றிருப்பதே மனிதனுடையச் சிறப்பு. உடல் இல்லையானால் அவனது ஆன்மீகம் உச்சக்கட்டங்களை எட்ட முடியாது. உடல் தெய்வம்; தெய்வம் உறையுமிடம்; உடலில் புதைந்துள்ள ஆன்மீகம் வெளிப்பட்டால் உடல் திருவுருமாற்றம் அடைகிறது; அடைந்து, தெய்வங்களைக் கடந்த நிலையான சத்தியஜீவனாகிறது (Supramental being) என்கிறார் அன்னை. துர்க்கை ஒவ்வோர் ஆண்டும் துர்க்கா பூஜைக்கு ஒரு நாள் முன்னதாக வந்து அன்னையைச் சந்தித்து, பூஜை முடியும்வரை இருப்பது வழக்கம். அன்னை தியானம் நடத்தும்பொழுது தவறாது வந்து தியான மண்டபக் கொரனாசில் இருந்து தியானத்தில் பங்கு

கொள்வது வழக்கம். அன்னை துர்க்கையிடம் சரணாகதியைப் பற்றி பிரஸ்தாபித்தபொழுது துர்க்கை, அதைத் தான் கருதுவதே இல்லை என்றார். தானே தெய்வம் என்பதால், இறைவனுக்குச் சரணடைய வேண்டும் என்று துர்க்கைக்குத் தோன்றவில்லை என்று சொன்னார். அன்னை துர்க்கையிடம் சரணாகதியின் பெருமையைப் பற்றிச் சொல்லி, அதை ஏற்றுக்கொள்ளுதல் சிறப்பு என்றார். துர்க்கை அதை ஏற்று, அந்தச் சிறப்பை உணர்ந்ததாக அன்னையிடம் பின்னர் விளக்கினார். அச்சமயம் (constant presence) இடைவிடாமல் இறைவன் நம்முள் உறைவதைப் பற்றி அன்னை சொல்லியபொழுது, அந்தப் பாக்கியம் உடல் இருந்தால்தான் பெற முடியும் என்று துர்க்கை சொன்னார். சூட்சும உடல் உள்ள தெய்வங்களுக்கு அந்தப் பேறு கிடையாது. ஸ்தூல உடலைப் பெற்ற மனிதனுக்கு மட்டுமே இறைவனைத் தன்னுள் நீக்கமற நிறுத்தி வைக்க முடியும் என்றார். அத்தகைய உயர்வு உடையது மனித உடல்.

அன்னை ஜபம், பாராயணம், ஆசனம், தியானம், இவற்றை இரண்டாம்பட்சமாகக் கருதுவார். பக்தி, பவித்திரம், தெய்வ நினைவு, சமர்ப்பணம் ஆகியவற்றை முக்கியமாகக் கருதுவார். என்றாலும் ஜபத்தின் தன்மையை விளக்கும்பொழுது உடலைத் தெய்வீகமயமாகச் செய்யும் திறனுடையது ஜபம் என்று அன்னை கூறுகிறார்.

உடலினது தெய்வத் தன்மையின் சிறப்பைக் கூறும்பொழுது, இறைவனிடம் தொடர்புகொள்ள ஆன்மா மூலமும், அறிவின் மூலமும், உணர்ச்சியின் மூலமும் உடல் செயல்படுகிறது என்றாலும், உடலுக்கு ஒரு பெருஞ்சிறப்புண்டு. நேரடியாக இறைவனிடம் தொடர்புகொள்ளும் திறனுடையது உடல் என்று அன்னை கூறுகிறார். சிறிதளவு அல்லது பெரிய அளவு ஆன்மீகத்தைப் பெற உடல் மற்ற கரணங்கள் வழியாக இறைவனுடன் தொடர்புகொள்கிறது. முழுமையாக இறைவனைப் பெற உடல் முடிவு செய்துவிட்டால் நேரடியாகத் தொடர்புகொள்கிறது என்று அன்னை விளக்கம் அளிக்கின்றார்.

சரணாகதியை மற்ற கரணங்களைப் போல்லாமல் பூரணமாக ஏற்றுக்கொள்ளும் திறனுடையது என்றும், எதை உடல் ஏற்றுக் கொண்டாலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் பாங்குடையது என்றும் அன்னை உடலின் தன்மையைச் சொல்கிறார். "எனது ஹிருதயம் நின்றுவிட்டது. ஆனால் உயிர் போகவில்லை'' என்ற ஸ்ரீ அரவிந்தருடைய வாக்கியத்தை விளக்கவந்த அன்னை சத்தியஜீவ நிலையை (Super mind) அடைய வேண்டி நாம் முயலும்பொழுது கடைசிக் கட்டத்தில் உடலின் ஹிருதயத் துடிப்பு நின்றபின்னரே மனிதன் சத்தியஜீவனாகிறான் என்கிறார். ஹிருதயம் நின்றுபோவது சத்தியஜீவ நிலைக்குப் போக வேண்டிய வாயிற்கதவு என்கிறார்.

அன்னை யோகத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் உடலைப் பற்றியே அதிகமாகப் பேசுவார். இதுவரை வந்த அவதாரங்கள் உலகுக்கு உண்மையை உணர்த்த வந்தன. ஸ்ரீ அரவிந்தருடைய அவதாரத்தில் இறைவன் அவதார புருஷனையே இந்த யோகத்தைச் செய்யச் சொல்லி உத்திரவிட்டிருக்கிறார் என்று அன்னை கூறுகிறார். அவதாரங்கள் எடுத்துக்காட்டாக அமைந்ததே பூவுலகச் சரித்திரம். அவதாரங்களையே யோகத்தைச் செய்யும் சாதகராக இறைவன் இம்முறை பணித்தது பூரண யோகத்தின் சிறப்பு என்கிறார் அன்னை.

இறைவன் அன்னை உடலை அடிக்கடி தொடுவதுண்டு. அந்த ஆத்மீக அனுபவம் முற்றி, பூரணமாகி, அன்னையின் உடல் ஒரு சமயம் முழுவதுமாக ஒரு கணம் இறைவனாகவே மாறியது. அதன்பின் அடிக்கடி அந்நிலை ஏற்பட்டு, ஒரு கணமாக இருந்தது நீடிக்க ஆரம்பித்தது. ஒரு சமயம் 15 நிமிஷம் அன்னையின் முழு உடலும் பூரணமாக இறைவனாக மாறி நிலைத்திருந்தது என்கிறார். இறைவனாக மாறும் தனிப்பெருஞ் சிறப்பை உடையது மனித உடல் என்பது அன்னையின் சித்தாந்தம். அந்த நிலையை அன்னையின் உடல் பெற்றதால், அவருடைய உடலைத் தீண்டிய எந்த உணர்வும் தன் தன்மையை நீடித்துப் பெற்றிருக்க முடியாது என்கிறார்.

மனிதனுடைய குறை அன்னையின் சூழலை அடைந்து அவருடலைத் தீண்டினால், குறை என்ற உணர்வே பிரபஞ்சத்தில் தன் வலுவை இழந்துவிடும். பொறாமைக்காரன் அன்னையைத் தரிசனம் செய்தால் அவனது பொறாமை வலுவை இழக்கும். உலகில் பொறாமைக்கே வலு ஓரிழை குறையும். தம் முன்னால் நிற்பவர்களுடைய உடலுடன் அன்னை இரண்டறக் கலந்து, தம்மையே மற்றவர்களாக உணர்வது உண்டு என்கிறார். குள்ளமான மனிதன் அவரைத் தரிசித்தால் தாமே குள்ளமாக இருப்பதைப்போல் அன்னைக்குத் தோன்றும்.

உடலின் பெருமையை இடையறாது பேசியவர் அன்னை. தெய்வங்களுக்கும் அதன் பெருமையை வலியுறுத்திக் கூறினார் அன்னை.

அன்னையை வணங்க ஆரம்பித்தபின் நோய் குறைவது வழக்கம். ஓரிரு ஆண்டுகளுக்குப்பின் (medical bill) டாக்டர் செலவு இப்பொழுது இல்லை என்று பலரும் சொல்வதுண்டு.

பிரார்த்தனையால் நோயைக் குணப்படுத்துவது ஒரு பழக்கம். நமக்கு நோய் என்று ஏற்பட்டால் மருந்து சாப்பிடுவதுண்டு, பிரார்த்தனை செய்வதுண்டு. மருந்தையும், பிரார்த்தனையையும் ஏற்றுக்கொள்வதுண்டு. அன்னையின் சக்தி நோயைக் குணப்படுத்த பிரார்த்தனை மூலம் செயல்படுவதுபோல், நம்பிக்கை மூலமும் செயல்படும். ஒளியாகப் பரவி நோயை அழிப்பதுண்டு; சாந்தியாகப் பொழிந்து நோயைக் கரைப்பது ஒரு வகை. சக்தியாக உடலில் நுழைந்து விரட்டுவதும் வழக்கம். நோயின் மூலமான பயத்தை அழித்து, அதன் மூலமாக குணம் ஏற்படும். நோயின் காரணமான கர்மத்தை விலக்கி, குணம் ஏற்படும். தவறான நம்பிக்கையால் நோய் ஏற்பட்டிருந்தால், அன்னையின் சக்தி அந்தத் தவற்றை விலக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி நோயை அகற்றுவதுண்டு. பலருடைய பிரார்த்தனை ஒருவரைக் காப்பாற்றியதுண்டு. பிறருடைய பிரார்த்தனை பலித்ததுண்டு. பூவின் சிறப்பை உணர்ந்தால், அதன்

மூலம் சிரமம் விலகும். Blessing packetஇன் மகிமையால் குணம் ஏற்படுகிறது. (Heart attack) ஹிருதய நோய் என்று ஏற்பட்டது, அதில்லை என்றாகி, வேறொரு சிறிய கோளாறு என்று மாறி விலகுவதுண்டு.

தொடர்ந்து ஆசிரமம் வருவதால் உடல் திறம் பெற்று நெடுநாட்களாக இருந்த தீராத வியாதி முயற்சியின்றி தானே மறைந்தது உண்டு. ஆப்பரேஷனுக்கு நாள் குறித்தபின் அன்னை பிரசாதம், ஆப்பரேஷன் தேவையில்லை என்ற நிலைமையைப் பலருக்கு ஏற்படுத்தியதுண்டு. எந்த மருந்துக்கும், எந்த டாக்டருக்கும் கட்டுப்படாத வியாதி அன்னையின் பிரசாதத்திற்கும் கட்டுப்படாத நிலையில், எந்தக் குணத்தால் அது ஏற்பட்டதோ அதை மாற்றிக் கொள்ள முன்வந்தவுடன் பிரசாதத்திற்குப் பலனாகக் குணமாவது உண்டு. உடலில் வியாதி எதுவும் இல்லாமல், தெம்பும் திறனும் நாளாவட்டத்தில் அழிந்து வந்து, இனி அதிக நாள் உயிருடன் இருக்க முடியாது என்ற நிலையில் அன்னைக்கு பிரார்த்தனை செய்தால், அன்னையின் சக்தி உடலுள் பாய்ந்து, 3ஆம் நாள் முழுப் பலமும் வந்ததுண்டு. குழந்தையின் தீராத வயிற்றுப்போக்கு பிரசாதம் வந்ததால் நின்று, பின் தொடர்ந்தபோது, பிரசாதப் பாக்கெட்டைக் குழந்தை மீது வைத்தவுடன் முழுமையாக நின்றதுண்டு. ஆக்ஸிஜன் (oxygen) கொடுத்த நிலையில் ரிடையர் ஆன கடைநிலை ஊழியரின் எலும்பும், தோலுமான உடல் அன்னையின் சக்தியை மறைமுகமாகப் பெற்று, 3 மணி நேரத்தில் ஆஸ்பத்திரியிலிருந்து வெளிவந்து, அதன்பின் 25 வருஷம் உயிரோடிருந்ததுண்டு. இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட பெரிய ஆஸ்பத்திரியில் இளம்பிள்ளை வாத வார்டில் மிகக் கடினமான கேஸாகச் சேர்க்கப்பட்ட 3 வயது குழந்தை, வார்டிருந்து 3 நாளில் முதல் கேஸாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது உண்டு. 8 வருஷமாக சித்த சுவாதீனமிழந்து எல்லா வைத்தியங்- களுக்குப்பின் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த மனநோயாளி, உறவினரால் சமாதி அருகில் தினமும் ஒரு முறையாவது 30 நாள்

பிரார்த்தனை செய்ததின் பலனாக, இந்தப் பெண்ணை இப்போது பார்த்தால் ஒரு காலத்தில் சுவாதீனம் இழந்தவர் என்று சொல்ல முடியாது' என்ற அளவுக்கு குணமாகி, தீபாவளிப் பண்டிகையை முறையாகக் கொண்டாடியதுண்டு. நூறு கோடிக்கு அதிபதியான ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அரை மணி நேரத்தில் மருந்து கொடுக்காவிட்டால் ஆபத்து என்ற நிலை வந்து, அவருடைய சொந்த ஆஸ்பத்திரியாலும் குணப்படுத்த முடியாத ஆபத்தான அந்த வியாதியை நீண்டநாள் அனுபவித்தவர், 5 மணிக்குச் சமாதி அருகில் உட்கார்ந்து பிரார்த்தனை செய்து 5 3/4 மணிக்கு எழுந்து முழு விடுதலை பெற்றதுண்டு. முதுகில் உள்ள கட்டியை ஆப்பரேஷன் செய்யுமுன் சமாதிக்கு வர வேண்டுமென வந்து, வீட்டுக்குப் போனவுடன் 10 வருஷமாக இருந்த கட்டி (cyst) தானே உடைந்தது உண்டு. ஒரு மாதமாகச் சாப்பிடும்பொழுதெல்லாம் புரையேறிக் கொண்டிருந்த குழந்தைக்கு அன்னை பெயரைத் தாயார் சொல்ல ஆரம்பித்தபின் 15 தரம் புரை ஏறியது 2 தரமாகக் குறைந்ததுண்டு. 15 வருஷமான முதுகுவலி அன்னையைத் தரிசித்தபின் பிரார்த்தனை செய்யாமலே மறைந்ததுண்டு.

உடல் நோயை மருந்தால் குணப்படுத்துவதே உலக வழக்கு. மந்திரத்தால் குணப்படுத்துவதும் உண்டு. ஜெர்மனியில் ஒருவர் அசாதாரணமான திறமையுடன் பிறந்திருந்தார். வியாதியுள்ளவர் மீது அவர் கையை வைத்தால், வியாதி குணமாகிறது என்று அறிந்த 5 இலட்சம் பேர்வரை அவரிடம் வந்து குணமாகிப்போனார்கள். அந்நாட்டு சர்க்கார் அவருக்கு டாக்டர் பட்டம் இல்லை, அதனால் அவர் வியாதியை குணப்படுத்த லைசென்ஸ் பெற்றவர் இல்லை என்று ஜெயிலில் தள்ளியது. பிரான்சில் ஒரு தொழிலாளி (healer), வியாதிகளைக் குணப்படுத்துபவர் என்று பெயர் பெற்றவர், அன்னையைப் பற்றி கேள்விப்பட்டு தரிசனத்திற்கு வந்தார். (Supramental force) சத்தியஜீவ சக்தியால் குணமான நோய் மீண்டும் வர முடியாது என்பதை இங்கு அறிந்து, ஆசிரமத்திலுள்ள

அனைவரையும் ஞானம் பெற்றவரெனப் போற்றினார்.

உடலுக்குச் சொந்தமாக அபரிமிதமான சக்தியுண்டு. ஆபத்துக் காலங்களில் உடல் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதைப் பார்த்தால் அது தெரியும். கணக்கில்லாத திறமைகளைப் பயன்படுத்தி தன்னை மனிதன் ஆபத்துச் சமயங்களில் காத்துக்கொள்கிறான். ஆபத்து விலகியபின் என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது என்று சொல்வதுண்டு. அறிவு, உடல் விஷயத்தில் குறிக்கிட்டு வம்பு செய்யவில்லை என்றால் உடலுக்கு நோய் வருவது குறைவு என்பது ஸ்ரீ அரவிந்தர் கூற்று. ஸ்ரீ அரவிந்தரே ஓர் உதாரணம் கொடுக்கின்றார். ஒரு பெண்ணுக்குக் கான்சர் முற்றியபின் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் டாக்டர்கள் அப்பெண்ணிடம் கேன்சர் குணமாகிவிட்டது என்று பொய் சொல்லிவிட்டனர். அதை அவர் நம்பினார். கான்சரும் விலகியது. மனதின் குறுக்கீடு விலகினால், உடல் தன்னை குணம் செய்துகொள்ளும் திறனுடையது. டாக்டர்களும் இந்த முடிவுக்கு வந்துவிட்டார்கள். உடல் தன்னைக் குணப்படுத்த முடிவு செய்தால் மட்டுமே நோய் தீரும் என்பதை மருத்துவ உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

உடலின் விசித்திர விசேஷத்தை விளக்க ஸ்ரீ அரவிந்தர் வேறோர் உதாரணம் கொடுக்கிறார். மலையில் உள்ள காட்டுவாசி ஜுரம் வந்தால் பனியைப்போல் சில் என்றிருக்கும் மலை அருவியில் அரை மணி அல்லது ஒரு மணி நேரம் தண்ணீரில் உட்கார்ந்திருப்பான். அத்துடன் ஜுரம் விட்டுவிடும். இது மலைவாசிகளுடைய பழக்கம். இது அவர்களுடைய வைத்தியம். பனி (snow) பெய்ய ஆரம்பித்தால், நாம் முதல் மழை என்பதுபோல முதலில் விழும் பனியை தரையில் விழுமுன் கையில் வாங்கி வயிறு நிறையச் சாப்பிட்டால், அந்த சீசன் முழுவதும் எந்த வியாதியும் வாராது என்பது அவர்கள் நம்பிக்கை. எந்தக் காரியங்கள் நம்மைப் போன்றவர்களுக்கு நிச்சயமாக மரணத்தைக் கொடுக்குமோ, அது அவர்களுக்கு உயிரைக் காப்பாற்றுகிறது. இதுவே உடலின் விசித்திரம்.

சத்தியஜீவசக்தி (Supermind) 1956இல் பூமியில் இறங்கி வந்து நாளுக்கு நாள் அதிகமாகச் செயல்படுகிறது எனவும், அதைப் பற்றி எதுவும் தெரியாதவர்களுக்கும் அது பலன் தருகிறது எனவும் அன்னை கூறுகிறார்.

Life என்ற பத்திரிகையில் ஒருவருக்குப் பென்சின் இன்ஜெக்ஷன் கொடுத்து (reaction) அது ஒத்துக்கொள்ளாமல் அதிர்ச்சி (shock) ஏற்பட்டு உயிர் போய்விட்டது பற்றி ஒரு கட்டுரை வந்தது. டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக முடிவு செய்தபின், அவர் சிறிது சிறிதாக உயிர் பெற்று எழுந்தார். எனக்கு உடல் ஒவ்வொரு பாகமாகச் செத்துப்போவதை உணர முடிந்தது. ஆனால் மரணத்தை எதிர்த்துப் போராட முடிவு செய்தேன். ஹிருதயத்தை மரணம் தொடும் வரை என் போராட்டம் பயனற்றதாக இருந்தது. ஹிருதயத்தைத் தொட்ட க்ஷணம் கொஞ்சம் உயிர் வந்தது. அது பரவி முழுவதும் உயிர் பிழைத்தேன் என்று அவர் சொல்கிறார். பூமியில் புதிதாக உள்ள சத்தியஜீவ சக்தி அவருடைய மரணப் போராட்டத்தை ஏற்று அவரைப் பிழைப்பித்ததாக அன்னை சொல்கிறார். முழு மூச்சுடன் இயற்கையை எதிர்த்து நிற்கும் திறன் அந்தச் சக்தியை ஈர்க்க வல்லது என்கிறார் அன்னை.

ஒரு பெண்ணின் தகப்பனாருக்கு கான்சர் முற்றிவிட்டது. டாக்டர்கள் கைவிட்டனர். அப்பெண் பிரார்த்தனையைக் கைவிட- வில்லை. நம்பிக்கையை இழக்கவில்லை. தகப்பனார் பூரண குணம் அடைந்துவிட்டார்.

தீராத வியாதியால் ஜெர்மனியப் பெண்ணின் கணவர் வாடும் பொழுது, அவள் அன்னைக்குச் செய்த பிரார்த்தனையால் அவர் பிழைத்தெழுந்தார்; எழுந்தவர் மனைவியைச் சண்டைக்கு இழுத்தார், அளவுகடந்து தொந்தரவு செய்தார். தகுதியில்லாதவருக்குப் பிரியத்தால் அடுத்தவர் பிரார்த்தனை செய்து அது பலித்தால், எவரால்

பலன் ஏற்பட்டதோ அவர்களுக்குத் தீங்கிழைக்க பலன் பெற்றவர் மனம் விழையும் என்கிறார் அன்னை.

நோய் எதுவானாலும் பொதுவான பிரார்த்தனை தீவிரமாக இருந்தால், வேறெந்த முறையும் தேவையில்லை. அந்தப் பிரார்த்தனை- யின் தீவிரம் எந்த நோயையும் பூரணமாகக் குணப்படுத்தும்.

தலை மீது அன்னையின் சாந்தி ( Mother's Force) மழையாகப் பொழிவது போல கற்பனை செய்தால், அதனால் உடல் நிறைவதாகவும், நோயுற்ற இடத்தில் சாந்தி அதிகமாகச் சேர்வதாகவும் கற்பனை செய்தால் நோய் குணமடையும். மூச்சுத்திணறல் உள்ளவர் இம்முறையைக் கையாண்டு வியாதி போனபின், அருவிபோல் தன் முயற்சி இல்லாமல் சாந்தம் தலைமேல் நிற்காமல் கொட்டி ஒரு சித்தி ஆகிவிட்டது. (Arthritis) சுமார் 60 வயதில் மூட்டுக்கு மூட்டு வலி எடுத்து அளவுகடந்து தொந்தரவு வந்தபின், டாக்டர் கொடுத்த மருந்துடன் இந்த முறையையும் பின்பற்றியவர் முழுவதுமாகச் சில மாதங்களில் குணமானார். மயக்கம், வலிப்பு ( fits) வந்த இளைஞருக்கு 5 ஆண்டுகளுக்கு டாக்டர் மருந்து எழுதிக் கொடுத்த பின் இந்த முறை பூரண குணம் அளித்ததால், மருந்தை விட்டு விடலாமா, தொடருவதா என்ற ஐயம் ஏற்பட்டது. குணம் மருந்தால் வரவில்லை; சாந்தியால் வந்தது. மருந்து அவருடைய நம்பிக்கைக்- காகச் சாப்பிட்டது. மருந்து குறுக்கே வந்திராவிட்டால் இன்னும் சீக்கிரமாகக் குணமாகியிருக்கும். மருந்தின் மீது நம்பிக்கையிருக்கும் வரை அதை விட வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னேன். உள்ளே வந்த சாந்தி, வியாதியைக் குணப்படுத்தியதுடன் அவர் தேட முனையாத நேரத்தில் ஒரு நல்ல வேலையையும் வாங்கிக் கொடுத்தது.

ஆசிரமத்தில் 2 மாதமாக தங்கியிருந்த அமெரிக்கர் தம் முதுகில் சுளுக்குப்போல் (sprain) வலிக்கிறதென்றார். தலை மீது சாந்தம் விழுந்து, அது உடலின் வழியாக வலியிருக்கும் இடத்தை

அடைந்து, அங்கே சேர்வது போல் நினைத்தால் வலி கரையும் என்று சொன்னேன். அவர் மறுநாள் திரும்பி வந்து நீங்கள் சொன்னபடியே செய்தேன்; சாந்தம் வரவில்லை; விட்டுவிட்டேன். தானே, பிறகு கொஞ்சம் சாந்தம் வந்தது போலிருந்தது. ஆனால் வலி குறைய- வில்லை என்றார். அப்படியானால் மருந்து சாப்பிடுங்கள் என்றேன். மறுநாள் வந்தார். நான் மருந்து சாப்பிடவில்லை. ஆசிரமத்தில் சினிமா பார்க்கப் போனேன். பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது தலை சில் என்றிருந்தது; புரியவில்லை. உடல் எல்லாம் சில்' என்று குளிர்வதைப் போலிருந்தது. முதுகில் எதுவோ ஓடுவதைப்போல் உணர்வு ஏற்பட்டது. வலி இருக்கும் இடத்திற்குள் ஏதோ சென்று நிரம்புவதைப் போல் இருந்தது; மடுக்' என்ற சப்தம் கேட்டது. வலி திடீரென மறைந்து விட்டது என்றார். அவருக்கு சாந்தியை அழைக்கும் திறன் இல்லை. அவர் அழைத்தார், அது வரவில்லை. தன்னை மறந்திருந்த நேரம் அதுவாக வந்து வலியை விலக்கிவிட்டது.

எந்தப் பாகத்தில் வியாதி இருக்கின்றதோ அங்கு சாந்தி சேர்வதைப் போல் நினைத்தால், அது சேர்வது தெரியும். சாந்திக்கு வியாதியைக் கரைக்கும் திறன் உண்டு. அதேபோல் ஒளிக்கும் அதே திறன் உண்டு. ஒளி தலைக்கு மேலிருந்து வருவதுபோல் நினைக்கலாம். ஹிருதயத்திருந்து வருவதுபோல் நினைப்பது சிறப்பு. எங்கிருந்து வந்தாலும் ஒளிக்கு நோயைக் குணப்படுத்தும் திறனுண்டு. தலை, கண், காது, வயிறு, கால், எலும்பு, எங்கு வியாதி இருந்தாலும் அவ்விடம் ஒளியால் நிரப்பப்படுவதாக நினைக்கும்பொழுது அது நினைவில் பலித்துவிட்டால், பிறகு நிஜமாகவே பலிக்கும். நோயின் அஸ்திவாரம் இருள். ஒளி இருளைப் போக்கும். அதனால் நோயைப் போக்கும். நோயின் அஸ்திவாரம் படபடப்பு. சாந்தம் படபடப்பைப் போக்கும். ஆகவே நோயை அழிக்கும் திறனுடையது.

மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், பிராணனுக்குரிய சக்கரம் (chakra) முதுகெலும்பில் நாபிக்கு பின்புறம் உள்ள இடத்தை ஒளியால் நிரப்பினால் (அல்லது சாந்தத்தால் நிரப்பினால்) அந்தச் சூட்சுமச் சக்கரம் நோயின் பிடியிலிருந்து விடுபடும். சக்கரம் பிராணனுக்கு மையமான இடம். அதற்கு விடுதலை கிடைத்தபின், நோய் கரைந்துவிடும்.

மஞ்சள்காமாலை ஏற்படுவது, கல்லீரல் சரியாக வேலை செய்யாததால். கல்லீரலில் ஒளி அபரிமிதமாகச் சேருவதாக நினைத்தால் நாளுக்கு நாள் வியாதி குறைவது தெரியும். ஈரல் உணர்ச்சிக்குக் கட்டுப்பட்டதென்பதால், உணர்ச்சிமயமான சக்கரம் ஹிருதயத்தின் பின் இருப்பதால், அதை ஒளியால் கற்பனையில் நிரப்பினால் ஈரல் சரியாகி, நோய் ஒழியும்.

நோயுள்ள இடத்திலோ, அதற்குரிய சக்கரத்திலோ ஒளி அல்லது சாந்தத்தை நிரப்பினால் நோயின் வேர் அற்றுப்போகும். அன்னையின் உருவம், ஸ்ரீ அரவிந்தர் உருவம் அங்குத் தென்பட்டால் நோய் முற்றிலும் குணமானதாக அர்த்தம்.

சூட்சும லோகம், ஸ்தூல உலகம் என இரு பிரிவுகள் இருப்பதால், செயல்கள் சூட்சுமத்தில் உற்பத்தியாகி, பின்னர் நம் கண்ணுக்குத் தெரியும் உலகில் நிகழ்கின்றன. சூட்சும லோகத்தில் கான்சர், காசநோய் இரண்டையும் அன்னை அழித்துவிட்டதாகச் சொல்கிறார். அதனால் சீக்கிரத்தில் மருத்துவ ஆராய்ச்சியில் இந்த நோய்களை அழிக்கும் மருந்துகள் கண்டுபிடிப்பார்கள். அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனை இந்த நோய் விஷயத்தில் அபரிமிதமாகப் பலிப்பதற்குக் காரணம் அவற்றின் சூட்சும வேர் அறுந்துபோனதே.

கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகள் மூலம் நோயைத் தீர்க்க அன்னை செயல்படும் முறைகளை விளக்க முயல்கிறேன்.

ஒரு 19 வயது பையனுக்குக் கான்சர் வந்து மோசமான நிலையை அடைந்து, டாக்டர்கள் இன்னும் எத்தனை மாதம் என்று அறுதியிட்டபின், அவன் படுக்கையாக இருந்தபொழுது அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டனர். இனி எதுவும் இல்லை என்ற நிலை வந்தபின்,

பையனை ஆசிரமம் அழைத்து வந்தால் ஒருவேளை நல்லது நடக்காதா என்ற எண்ணம் தோன்றியபொழுது, பையன் எழுந்து நடமாட முடியாத நிலையில் இருப்பதால் அதைக் கைவிட்டனர். ஆனால் பையன் பிடிவாதமாக எப்படியாவது தன்னை அழைத்துப் போக வேண்டும் என்றதன்பேரில் நாற்காயில் உட்கார வைத்துத் தூக்கி வந்து பஸ்ஸில் ஏற்றி பாண்டிச்சேரி கொண்டுவந்தனர். பாண்டி பஸ் ஸ்டாண்டில் நாற்காலி தேடிப்போன தகப்பனார் திரும்புவதற்குள் பையன் இறங்கி ரிக்க்ஷா வரை மெதுவாக நடந்து வந்தான். சந்தோஷப்பட்ட பெற்றோர்கள் அவனை அன்று ஆசிரம (Jan. 1) Q வரிசைக்கு கொண்டுவந்தனர். அன்று சுமார் 1 1/2 மைல் அவனால் நடக்க முடிந்தது. இதுவே பொதுவான பலன். ஆசிரமச் சூழலுக்கு உள்ள திறன். அந்தச் சூழல் புதுவையிருந்து 7 1/2 மைல் அளவுக்குப் பரவியிருக்கிறது.

ஒருவர் பெரிய ஆஸ்பத்திரிக்கு வந்து, அவருக்கு சிகிச்சைக்குப் பதிலாக ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்றனர். அவர் ஆடிட்டர். ஆப்பரேஷன் ஆயிற்று. வியாதி போகவில்லை. வேலூர் சென்று காண்பித்தார். அவர் வியாதியை நிர்ணயித்து மாத்திரை கொடுத்தனர். உடனே குணம் தெரிய ஆரம்பித்தது. முதல் ஆஸ்பத்திரியில் செய்த ஆப்பரேஷன் தவறு, இல்லாத வியாதிக்காகச் செய்த ஆப்பரேஷன் என்றும் தெரியவந்தது. வீடு திரும்பினார். ஆனால் ஒரு நாளைக்கு 8, 10 மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என்ற நிலையும், வாழ்க்கையே மாத்திரையால் நிர்ணயிக்கப்படுகிறது என்ற நிலையும் இரண்டு வருஷங்கள் நீடித்தபின் ஆசிரமம் வந்தார். புதுவை வந்தாலே புத்துணர்வு வருகிறது என்று கண்டார். Blessing Packet பெற்றார். வியாதியே முழுமையாகப் போய்விட்டதுபோல் உணர்ந்தார். 20, 25 நாட்கள் வரை இந்தப் புதிய தெம்பு இருப்பது வழக்கம். கடைசி 5, 10 நாளில் ஓரிரு மாத்திரை சாப்பிடி வேண்டி இருக்கும். அடுத்த Blessing Packet புதிய தெம்பை மீண்டும் அளிக்கும். வியாதியின் வேர் அற்று வருகிறது. தம்பியின் வாழ்வில்,

தங்கைக்கு அமைந்த வாழ்வில், கிராமத்திலுள்ள நிலத்தின் வருமானம், செய்யும் தொழில், நட்பு, உறவு ஆகிய அனைத்து இடத்திலும் புதிய வாழ்வு ஏற்பட்டது. 7, 8 மாதங்களில் வியாதியே மறந்துபோய்விட்டது. மீண்டும் அவர் காணிக்கை அனுப்பிக்கொண்டு இருந்தார். இனி காணிக்கை அனுப்பத் தேவையில்லை என்று மற்றவர்கள் கருதினர். கடந்த 12 வருஷங்களாக அவர் காணிக்கையைத் தொடர்ந்து அனுப்புகிறார். அதை நிறுத்த மனம் இல்லை என்று சொல்வது வழக்கம்.

17 ஆண்டுகளாக உள்ளங்கையில் பொறுக்க முடியாத வலி உடைய ஒருவர் கையெழுத்துப் போட்டால் கை வலிக்கிறது என்பார். நண்பர்களுடன் சமாதிக்கு வந்தவர் கை சமாதியில் பட்டவுடன் வலி குறைவதைப் பார்த்தார். அது என்ன இடம் என்று கேட்டார். தெய்வ நம்பிக்கை இல்லாதவர், கை வலிக்காக அடிக்கடி புதுவை வந்து சமாதியைத் தொட விரும்பினார். இரு முறை வந்தார். கை வலி முழுவதுமாக விலகியது. தொடர்ந்து வர வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.

60 வயதைத் தாண்டிய பெண்ணுக்குச் சர்க்கரை வியாதிக்காக கடந்த 12 வருஷமாக சிகிச்சை செய்து, தினமும் 3 ஊசி போட ஏற்பாடாயிருந்தது. மகன்கள் படித்தவர்கள்; தாயார் கிராமத்தில் இருக்கிறார். தினமும் ஊசி போட்டுக்கொள்ள பிரியப்படாததால் தாயார் அதை நிறுத்திவிட்டார். கால் கட்டி வந்து சீழ் நிரம்பி வலி தாங்காமல் பெரிய ஆஸ்பத்திரிக்கு 12 வருஷமாகப் பார்த்துவந்த டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டார்கள். டாக்டருக்கு நம்பிக்கையில்லை. ஆஸ்பத்திரியிலுள்ள மற்றவர்கள் காலை எடுக்க வேண்டும் என்று பேசுவது மகனுக்குத் தெரிந்தது. மற்ற டாக்டர்களை விசாரித்தார். காலை எடுத்தால் மட்டும் உயிர் பிழைக்கும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியுமா என்ற கேள்வியை எழுப்பினார்கள். மகன் பதறிப்போய் டாக்டரிடம் ஓடினார். டாக்டருக்குக் கோபம். "படித்தவர்கள் இப்படி அலட்சியமாக

இருந்து காலம் கடந்த நேரத்தில் வந்தால் நான் என்ன செய்ய முடியும்? முடிந்ததைச் செய்கிறேன். ஒன்றும் கேட்க வேண்டாம்'' என்றார். இதுவரை கோயிலுக்கே போகாதவர், சாமி கும்பிட நினைத்தார். என்னிடம் வந்து, "ஏதாவது செய்ய முடியுமா?'' என்று கேட்டார். "தாயாருக்கு நம்பிக்கை இருக்கிறதா?'' என்றேன். "அவர்களுக்கு எதுவும் தெரியாது'' என்றார். "நம்பிக்கை முழுமையாக இருந்தால் நல்லது'' என்ற கருத்தை ஏற்றுக்கொண்டார். தானே நம்பிக்கையுடன் பிரார்த்திப்பதாகச் சொல்ல விரும்பினார். ஆனால் நாத்திகவாதத்தை விட்டுவிட மனமில்லாமல் போராடினார். ஒருவழியாகப் பிரார்த்தனை செய்ய ஒத்துக்கொண்டார். "அரைகுறையான பிரார்த்தனைக்கு முழுப் பலன் எதிர்பார்க்க முடியாது. முழு நம்பிக்கையுடனும், முழு மனதுடனும் பிரார்த்தனை செய்தால்தான் இந்த விஷயம் பிடிபடும். மேலும் இது மற்றவர் செய்யும் பிரார்த்தனையாக இருப்பதால் தீவிரமாக இருக்க வேண்டும்'' என்றேன். மேலும் சில முறைகளைப் பின்பற்ற வேண்டியிருப்பதால், நாத்திகத்திற்கும், வறட்டுப் பிடிவாதத்திற்கும் இடமில்லை என்பது புரியும்படி விளக்கமாகச் சொல்லியபின், தாமே தாயாருக்காகப் பூரணமாகப் பிரார்த்தனை செய்ய முன்வந்தார். தாயார் நினைவு வரும்பொழுதெல்லாம் அதை ஒதுக்கி, அன்னையை நெகிழ்ந்த உணர்வோடு நினைவுகூர்தல் வேண்டும் என்பதை மட்டும் முக்கியமாகச் சொன்னேன். சாமந்திக்கு (life energy) சக்தி என்ற பெயர். அவருடைய கம்பெனி பாண்டியிலிருப்பதால் அதன் மூலம் தினமும் ஒரு கிலோ சாமந்தி வாங்கி சமாதிக்கு வைக்கும்படியும் சொன்னேன். கால் குணமாகும் வேகம் ஆஸ்பத்திரியிலுள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தோலை (skin graft) காயத்தின் மீது தைக்க வேண்டும் என்றார்கள். பிறகு அதுவும் தேவையில்லை என்றார்கள். கால் குணமாகி ஆஸ்பத்திரியை விட்டு அந்த அம்மாள் வரும்பொழுது, அவரைப் பலரும் சூழ்ந்து அதிர்ஷ்டக்காரர்' என்று பாராட்டியபோது, ஒரே ஒரு டாக்டர் மட்டும்

மகனைத் தனியே அழைத்து "உங்கள் தாயார் காலோடு நடப்பதை என்னால் பார்த்தும் நம்ப முடியவில்லை'' என்றார்.

ஒரு நாள் காலையில் 10, 11 மணியிருக்கும். ஒரு டெலக்ஸ் செய்தியை அவசரமாகக் கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார்கள். அமெரிக்காவில் ஒரு சாதகரை இரண்டு நாள் முன்னதாக ஜுரம் என்று ஆஸ்பத்திரியில் சேர்த்ததாகவும், அன்று காலையில் டாக்டர் ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்பதாகவும், ஒரு முக்கிய உறுப்பை அகற்ற வேண்டும்; இருபத்திநாலு மணிக்குள் செய்ய வேண்டும்' என்றும் செய்தி சொல்லியது. டாக்டர் சொல்லியபடியே செய்ய வேண்டும் என்று பதில் செய்தி அனுப்பிவிட்டு, அவரைச் சேர்ந்தவர் 6 பேரை அழைத்து, "ஒன்றாகச் சேர்ந்து தியானம் செய்தால் நல்லது'' என்றேன். 15, 20 நிமிஷம் தியானம் செய்து கலைந்தனர். அனைவரும் சோகமாக இருக்கும்பொழுது 2 மணி நேரத்திற்குப்பின் அடுத்த டெலக்ஸ் (telex) வந்தது. நோயுற்ற பாகம் வழக்கத்தைவிட 5 மடங்கு வீங்கியிருந்தது. கடந்த 1 மணி நேரத்தில் வீக்கம் குறைந்துள்ளது. இப்பொழுது வீக்கம் குறைந்திருப்பதால், டாக்டர் ஆப்பரேஷன் தேவை இல்லை எனக் கருதுகிறார் என்றது செய்தி.

வடநாட்டில் ஒரு ரயில்வே ஊழியர். 35 ஆண்டுகட்குமுன் அவருக்கு ஒரு வகையான காசநோய். 40, 50 நாட்களுக்கு ஒரு முறை இரத்தம் வாந்தியாக வரும். படுக்கையாக இருந்து மருந்து சாப்பிட்டு, சில நாளில் குணமாகும். அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டு ஆசிரமம் வந்தார். பாண்டிக்குப் போக இரயிலில் உட்கார்ந்ததும் தெம்பாக இருந்தது. சமாதி அருகே புதிய பலம் வருவதைப் பார்த்தார். ஊருக்குப் போய் உத்தியோகத்தை ராஜினாமா செய்துவிட்டு, ஒரே சகோதரியை அழைத்துக்கொண்டு, பாண்டி- யிலேயே வந்து தங்கிவிட்டார். வாந்தி 45 நாட்களுக்கு ஒரு முறை வருவது 7, 8 மாதத்தில் ஒரு முறையாகி, பிறகு நின்றுவிட்டது. 40, 50 அடிக்குமேல் நடக்க முடியாது. மற்றபடி எந்தத் தொந்திரவும்

இல்லை. சில ஆண்டுகள் இங்கேயே தங்கியிருந்தபின் அன்னையின் பெயரை உச்சரிப்பது, மலர்களின் விசேஷம் ஆகியவற்றைக் கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டு, தாமும் அது போல் ஏதாவது செய்ய வேண்டும் என்று அபிப்பிராயப்பட்டார். அதன்படி ஒரு நாள் அவர் முடிவு செய்து, (1) நினைவை அன்னையின் பக்கம் முழுமையாகத் திருப்புவது, (2) சாமந்தி மலரை வைத்துத் தியானம் செய்வது, (3) ஒரு மணிக்கு ஒரு முறை - அதாவது மணி அடிக்கும் நேரத்தில் - தவறாமல் அன்னையை நினைவுகூர்வது என்ற 3 முறைகளையும் ஏற்றுக்கொண்டு, அரை மணி தியானம் செய்துவிட்டுப் போனார். மறுநாள் வந்தார். "நேற்றைய தினம் எனக்குப் புத்துயிரும், புதுத் தெம்பும் வந்தது. ரிக்ஷாவில் வந்தவன், ரிக்ஷாவை அனுப்பிவிட்டு, 6 பர்லாங் நடந்து வீட்டுக்குப் போனேன். என் வாழ்க்கையில் இது ஓர் அற்புதம்'' என்றார்.

தோளில் வலியிருக்கிறது என்று டாக்டரிடம் காண்பித்த 25 வயதுப் பெண்ணிடம் உள்ளூர் டாக்டர் தோள் எலும்பு வளர்கிறது, ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்றார். பயந்துபோய் பெரிய ஊரில், பெரிய ஆஸ்பத்திரியில் காண்பிக்கவே, அதையே அந்த டாக்டர் சொன்னார். ஆப்பரேஷனுக்குத் தேதி குறித்துவிட்டு, ஆசிரமம் வந்து நல்ல முறையில் ஆப்பரேஷன் முடிய வேண்டி (Blessing Packet) பிளெஸிங் பாக்கெட் பெற்றுக்கொண்டு ஊர் திரும்புமுன் என்னை வந்து குடும்பத்துடன் பார்த்தார்கள். ஆப்பரேஷன் அவசியம் என்று கருதினால், அன்னை ஆப்பரேஷனை நல்லபடியாக முடிப்பார். ஆப்பரேஷன் கூடாது என்று உறுதியாக நம்பினால் நல்லது என்றேன். ஆப்பரேஷனைத் தவிர்க்க ஒரு வழி இருக்கும்போலிருக்கிறது என்றதில் அவர்கள் அனைவருக்கும் சந்தோஷம். ஒரு வாரம் வரை பிரார்த்தனை செய்யுங்கள். டாக்டரிடம் சொல்லி தேதியைத் தள்ளிப் போடச் சொல்லுங்கள். எதுவும் உங்கள் நம்பிக்கையைப் பொருத்தது என்று சொல்லி அனுப்பினேன். அடுத்த வாரம் அனைவரும் வந்தார்கள். ஒரே நாளில் வலி முழுவதும் போய்விட்டதாகவும், ஆப்படிரேஷனை

மறந்துவிட்டதாகவும் சொன்னார்கள். பெண் மிகவும் தீவிர பக்தை ஆகிவிட்டாள்.

ரிடையரான பேராசிரியருக்கு ஒரு மகன் டாக்டர். ஒரு மகள் டாக்டர். மருமகன் டாக்டர். இவர் சுமார் 50 வருஷத்திற்குமன் ஸ்ரீ அரவிந்தர் அன்னை தரிசனம் செய்து, பின்னால் மறந்துவிட்டவர். 20 வருஷத்திற்கு முன்னால் மீண்டும் ஆசிரமம் வர ஆரம்பித்து, 7 வருஷமாக தீவிரமாக வந்தவர், பின்னர் இங்கு வருவதை நிறுத்தி விட்டார். அத்துடனில்லாமல், அன்னை லோகமாதா பாண்டிச்சேரியில் மட்டும் இல்லை; எங்கள் ஊரிலும் இருக்கிறார். இங்கிருந்தே வழிபடலாம்' என தமக்கே விளக்கம் கொடுத்துக்கொண்டார். அன்னையை எந்த ஒரு சிறு விஷயத்திற்கும் அழைத்துச் செயல்படுபவர். (Eczema) தோல் சம்பந்தமான வியாதி வந்து உடல் ழுவதும் கறுத்துவிட்டது. சென்னையில் தம் மகன் மூலம் ஸ்பெஷலிஸ்ட்களிடம் காட்டி 3 மாதமாக மருந்து சாப்பிடுகிறார். மருந்துக்கு ஓரளவு வியாதி கட்டுப்படுகிறது. பூரண குணம் ஆகவில்லை. இந்த வியாதி பூரணமாகக் குணமாகாது என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். அன்னையை இடைவிடாது நினைப்பதால் தான் உபத்திரவம் குறைவாக இருக்கிறது என்று மற்றவர்களிடம் சொல்வந்தார். ஆசிரமம் போகக்கூடாது என்ற பிடிவாதத்தை விட மனமில்லை. அன்னை அருளால் வியாதி பூரண குணம் அடையும். பிடிவாதம் குறுக்கே நிற்கிறது. அத்துடன் வியாதி குணமாகாது என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. அவர் மீது அளவு கடந்த அன்புடையவர் ஒருவர், அவர் முழுமையாகக் குணமடைய வேண்டும் என விரும்பிப் பிரசாதத்தை அவருக்கு அனுப்பி, தாமும் பிரார்த்தனை செய்தார். ஓரிரு நாள் பிரசாதம் வந்தவுடன் பேராரிசியருக்கு அதுவரை இல்லாத குணம் தெரிய ஆரம்பித்தது. தினமும் பிரசாதம் அனுப்பும்படிக் கேட்டார். 7ஆம் நாள் உடல் கருமை முழுமையாக விலகி, பூரண குணம் தெரிந்தது. கையில் மட்டும் 1/2 அங்குலத்திற்குக் கறுப்புக் குறையவில்லை. வியாதி போய் விட்டது. பேராசிரியர் தம்

அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ளவில்லை.

40 வயதுள்ள அம்மாள் ஒருவர் வாழ்க்கையில் பெரும் பகுதியை ஆஸ்பத்திரியில் கழித்தவர், கண் பார்வை, வயிற்று வலி, நெஞ்சு வலி, கை வீக்கம், முதுகு வலி, ஆப்பரேஷன் என்று பல வகையான வியாதிகள். அவருக்கு வசதி வந்தபின் பிரைவேட் டாக்டர்களிடம் காட்ட ஆரம்பித்தார். ஒரு வியாதி தீர்ந்தால், அடுத்தது வரும். ஏற்கனவே கவர்மெண்ட் ஆஸ்பத்திரி, இப்பொழுது பிரைவேட் நர்சிங் ஹோம்; மாற்றம் அந்த அளவில்தான் இருந்தது. என்னிடம் வந்து அவர் கணவர் இது விஷயமாகக் கேட்டார். அவருக்கு உடல்நலம் பாதிக்கப்படுவது குணவிசேஷத்தால்தான். அதை மாற்றிக்கொள்ள ன்வந்தால் பலன் இருக்கும் என்று அபிப்பிராயம் சொன்னேன். அதன் பிறகு இரண்டு வருஷம் கழித்து கை வீக்கம் அதிகமாகி, டாக்டர்களுக்குப் பிடிபடாத நிலை ஏற்பட்டபின் மீண்டும் கணவர் வந்தார். மீண்டும் அதே அபிப்பிராயம் சொன்னேன். மனைவி சம்மதிப்பதாகச் சொல்லி, என்ன செய்யலாம் என்று கேட்டார். "எனது வியாதி தீரும் அளவுக்கு என் குணத்தை மாற்றிக்கொள்கிறேன்'' என்று தினமும் ஜெபம் போல் சொன்னால் போதும். பிரார்த்தனை தேவையில்லை என்றேன். மருந்துகூட சாப்பிடாமல் 3 நாளில் பாதி வீக்கமும், 7ஆம் நாள் முழு வீக்கமும் தானே வாடிவிட்டது.

நோய் ஏற்பட்டால் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தல்; ஆசிரமத்திற்கு எழுதிப் பிரசாதம் பெறுதல்; ஒளியை, சாந்தியை அழைத்து உடலையும், நோயுற்ற பாகத்தையும் நிரப்புதல்; அன்னையின் கையால் நோயுற்ற பாகத்தைத் தடவிக் கொடுப்பதாக நினைப்பது போன்றவை பலன் தரும். இவ்வளவு செய்தும் நோய் போதிய அளவு குணமாகாவிட்டால் என்ன செய்யலாம் என்ற கேள்வியைக் கேட்க வேண்டிய சந்தர்ப்பத்தை அன்னை கொடுத்ததில்லை.

அன்னையை ஏற்றுக்கொண்டவர்களுக்குத் திடமான உடல் நலம் ஏற்பட ஒரு சுருக்கமான வழியைச் சொல்லலாம். உடல் அன்னையை

நினைவில் வைத்துக்கொண்டால் உடல் நலம் பெருகி, உடல் வெண்கலம் போல் அமையும். உடல் அன்னையை நினைப்பது என்றால் என்ன என்று கேள்வி எழும். அப்பைய தீக்ஷிதர் தமக்குச் சுவாதீனம் இல்லாத நேரத்திலும் சிவனை நினைக்க வேண்டும் என்று விரும்பினார் என்று ஒரு செய்தியுண்டு. நமக்குச் சுவாதீனம் இல்லாத நேரத்தில் நினைவு இருந்தால், அது உடல் நினைவு வைத்திருப்பதாக அர்த்தம். குளிர்காலத்தில் பக்கத்தில் போர்வையை வைத்துவிட்டுப் தூங்கப்போனால் இரவில் குளிர் அதிகமாகும் நேரம் போர்வையை எடுத்து நாம் போர்த்திக்கொள்கிறோம். காலையில் பார்த்தால் போர்த்தியிருப்பது தெரியும். எப்பொழுது போர்த்திக்கொண்டோம் என்றுத் தெரியாது. உடலே தன் தேவையை உணர்ந்து, நமக்குத் தெரியாமல் செய்த செயல் அது. உடலுக்கு நோய் என்று வந்தவுடன், மாத்திரை நினைவு வராமல், டாக்டர் நினைவு வராமல், பயம் ஏற்படாமல், கவலையுண்டாகாமல், அன்னை நினைவு வந்தால் அன்னையை உடல் நினைவு வைத்திருக்கிறதாகக்கொள்ளலாம்.

********



book | by Dr. Radut