Skip to Content

23. தடுத்தாட்கொள்ளுதல்

ஆன்மிகப் பெருவாழ்வு விதிக்கப்பட்ட பெருமக்கள் வாழ்வில் இறைவன் குறுக்கிட்டு அவர்களது இல்லறவாழ்வு முழுமை பெறாவண்ணம் தடுப்பதுண்டு. அதை தடுத்து இறைவன் பக்தனை ஆட்கொண்டார் என வழங்குகிறோம்.

சுந்தரமூர்த்தி நாயனார் திருமணத்தை இறைவன் நேரடியாக வந்து தடுத்தார். பட்டினத்தாருக்கு தானே மகனாய் வந்து தவிடும், தங்கமும் ஒன்று என உணர்த்த அவரை வியாபாரத்திலிருந்து தடுத்தார். தடுத்தவர் பிறகு ஆட்கொண்டார். ஆழ்வார்கள், நாயன்மார்கள், பக்தர்கள் வாழ்வில் தீராத பிரச்சினைகள் ஏற்படும்பொழுது இறைவன் சோதனை செய்கிறார் என அறிகிறோம். அன்பருடைய பக்தி சோதனையைக் கடக்கும் சிறப்புடையதா எனக் காண இறைவன் செய்யும் சோதனைகளை உலகம் அறியும். வாழ்க்கையில் சிரமம் ஏற்படும். பொழுது நாமும் நம்மை சோதனை செய்வதாகக் கொள்கிறோம்.

இதுவரை யோகம் மோட்சத்திற்காக ஏற்பட்டது. மோட்சத்திற்குரியது ஆன்மா. ஆன்மா வாழ்வில் ஈடுபடாமல் சாட்சியாக இருக்கிறது. ஆணவ மலத்தாலும், பிரகிருதியின் பிணைப்பாலும் ஆன்மா மோட்சத் தகுதியிலிருந்து தடுக்கப்படுகிறது. மலம் கரைந்தாலும் பிணைப்பு விடுபட்டாலும் ஆன்மாவுக்கு மோட்சமுண்டு.

சிவபெருமான், மஹாவிஷ்ணு பக்தர்களுக்கு பக்குவம் வந்து பூர்த்தியாகாத நிலையில் ஆன்மா மோட்சத்தை நோக்கியும், வாழ்வு குடும்பப் பற்றிலும் உள்ளபொழுது இறைவனின் அருள், குடும்பத்திலிருந்து பக்தனை விடுவிக்கின்றது. விடுவிக்கும் செயல்கள் சோதனையாக அமைகின்றன. மேலும் பக்தன் குடும்பப் பிணைப்பை நாடும்பொழுது, இறைவன் பக்தனை தடுக்கிறார்.

பகவான் ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் மோட்சத்தை நாடவில்லை. அவர்களது பூரண யோகத்தின் குறிக்கோள் மோட்சமில்லை. வாழ்விலிருந்து பக்தன் விலக வேண்டும் என்ற நிர்ப்பந்தமில்லை; ஏனெனில் வாழ்வனைத்தும் யோகம் என்பது கொள்கை. வாழ்வை விலக்கவில்லை என்பதால், அன்னை சோதனை செய்வதில்லை. மோட்சத்தை நோக்கி அழைத்துச் செல்ல முயலவில்லை என்பதால், தடுத்தாட்கொள்ள வேண்டிய நிலையில்லை.

பூரண யோகத்திலும் ஆணவமலம் கரையவேண்டும். ஆனால் வாழ்வோடுள்ள பிணைப்பைத் துண்டிக்க வேண்டியதில்லை. தாழ்ந்த ஆசை நிறைந்த பிணைப்புக்குப் பதிலாக உயர்ந்த கடமை உணர்ச்சியுள்ள பொறுப்பாக வாழ்வை பூரணயோக சாதகன் ஏற்றுக்கொள்ள வேண்டும். பூரண யோகத்தில் சாதகன் வாழ்விலிருந்து தடுக்கப்படுவதில்லை; வாழ்வின் பொய்மையிருந்து தடுக்கப்பட வேண்டும். அதை இறைவன் செய்வதில்லை. சாதகன் தானே செய்துகொள்ள வேண்டும். தானே தன்னை தடுத்தாட் கொள்ள வேண்டும்.

மோட்சத்தை நாடும் யோகம் ஆணவத்தின் ஒரு பகுதியை கரைத்தால் போதும். பூரண யோகி ஆணவத்தின் நான்கு பகுதிகளையும் கரைக்க வேண்டும். வாழ்வை விலக்காமல் வாழ்ந்து கொண்டு, வாழ்விலுள்ள பொய்மை, சிறுமை, மடமை ஆகியவற்றிலிருந்து தன்னைத் தடுக்கும் முயற்சியை சாதனையாக மேற்கொள்ள வேண்டும். இந்தக் குறைகள் விலகும் பொழுது வாழ்வு வறண்டு போகாமல், நிறைவு பெறும். செல்வமும், சந்தோஷமும், செல்வாக்கும் பெருகும். அவற்றின் மீது பற்று கொள்ளாமல், அவை அருளின் வெப்படையாகக் கருதி ஏற்று மகிழவேண்டும்.

* * *



book | by Dr. Radut