Skip to Content

2. வசூலாகாத கடன்

வாங்கிய கடனைத் திரும்பத் தருவது ஒரு சாராருக்கு பெரிய பாரம். கொடுத்த பணம் வராதது அடுத்த சாராருக்குப் பிரச்சினை. இனி இப்பணம் வர வழியில்லை என்ற நிலை பல சமயம் எழும். அதன்பின் வரும் பிரச்சினை தீராத பிரச்சினை.

கடன் வாங்கியவர் திவாலாகிவிட்டால், அவருடைய சரக்கு குவிந்து மார்க்கெட் மாறிவிட்டால், ஓய்வு பெற்றவர் வாங்கிய பணத்தை மகள் திருமணத்திற்கு செலவு செய்துவிட்டால், பணம் ரேஸில் அழிந்து போயிருந்தால், நாள் அதிகமாகி வாங்கியவர் வருமானம் முழுவதும் வட்டிக்கே சரியாகப் போனால், நம்பிக்கையால் பெற்றவர் மனம் மாறி நாணயத்தை இழந்து விட்டால், கொடுத்த பணம் வர வழி தெரியாது, ஏனெனில் நமக்குத் தெரிந்து வழி ஏதும் இல்லை.

இந்த நிலையில் கடன் கொடுத்தவர் அன்னையிடம் வந்து பிரார்த்தனையை மேற்கொள்ள விரும்பினால், அவருக்குப் பலிக்குமா, அப்பணம் வருமா என்பது கேள்வி. பிரார்த்தனை பலிக்குமா என்பது எப்பொழுதும் கேள்வியில்லை. இந்தப் பிரார்த்தனை பலிக்க என்ன முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே கேள்வி.

ஒரு காரியம் கூடிவர என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். முறையாகச் செய்தால் அக்காரியம் கூடிவரும். கூடிவராமற் போனால் அதில் ஏதோ ஒரு குறையிருக்கும். குறையை நிவர்த்தி செய்தால், ஏற்கனவே கெட்டுப்போன காரியம் கூடி வராது. இது இயல்பல்ல.

பரீட்சைக்கு ஒழுங்காகப் படித்த மாணவன், பரீட்சை எழுதும் பொழுது மறதியால் பீடிக்கப்பட்டு தவறி விட்டால், மறந்து போனது நினைவுவந்தால், தவறிய பரீட்சையில் தேற முடியாது. அடுத்த பரீட்சையில் தேறலாம். அன்னை விஷயத்தில் வாழ்வில்லாத புதிய அம்சம் ஒன்றுண்டு. பரீட்சையில் மறந்தது திறமைக் குறைவு. அதையுணர்ந்து, தவறியபின், மறதி என்னும் திறமைக் குறைவை இப்பொழுது நீக்கிக் கொண்டும், இது முன்பே செய்யாதது தவறு எனவும் உணர்ந்தால், தவறிய பரீட்சை இப்பொழுது பாஸாகும் என்பது அன்னையின் சட்டம். கடந்த கால நிகழ்ச்சியின் குறையை, மனதால் இன்று பூரணமாக, உண்மையாக அழித்து விட்டால், கடந்த கால தவறு தன்னை சரிசெய்து கொண்டு, கெட்டுப்போன காரியம் கூடிவிடும் என்பது அன்னையின் சக்திக்குரியது. இதற்குரிய நிபந்தனை ஒன்றுதான். பழைய குறையை நிவர்த்தி செய்யும்பொழுது அது உதட்டளவில் இல்லாமல், முழுமையாக உண்மையாக இருக்கவேண்டும். இந்த நிபந்தனை பூர்த்தி செய்யப்பட்டு விட்டால், பிரார்த்தனை பலிக்குமா என்ற கேள்விக்கு இடம் இல்லை.

கொடுத்த பணம் வசூலாக வேண்டுமானால், அது எப்படிக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், எப்படி வாங்கப் பட்டிருக்க வேண்டும் என்ற நியதி நாம் அறிந்ததே. இந்த நியதி பின்பற்றப் பட்டிருந்தால், பணம் தானே வசூலாகும். வசூலாகவில்லை என்றால் நியதியில் குறையிருக்கிறது என்று பொருள்.

குடும்பத்திற்குள் கொடுத்த பணத்தைக் கடன் எனப் பேசுவதுண்டு. உறவு, பாசம், பிரியமுள்ள இடத்தில் பெரும்பாலும் வலியப் போய்க் கொடுத்ததாகவுமிருக்கும். இதைக் கடன், வராத பணம் என நினைப்பதுண்டு, இயல்பு அடிப் படையில் ரத்தபாசமிருப்பதால், பணம் வரவேண்டும் என்ற எண்ணமிருந்தாலும், அடுத்தவர் சிரமப்படக்கூடாது என்ற எண்ணம் ஆழமாக இருந்தால், பணம் வருவது தடைப்படும். காரமாக பணம் வந்தாக வேண்டும் என்று உடன்பிறந்தவரைக் கேட்பவருக்கும், பணம் திருப்பிக்கொடுக்க அவர் படும் சிரமத்தைப் பார்க்கும் பொழுது, "இப்படி அந்தப் பணம் வரவேண்டுமா?'' என்று பலருக்கு தோன்றும். இது பணம் வராது என்பதற்கு அறிகுறி, ஏனெனில் பணம் வேண்டும் என்ற எண்ணம், அதற்குரிய தீவிரத்துடனில்லை.

நெருங்கிய உறவு, நட்பு ஆகிய இடங்களில் கொடுத்த பணத்தை வசூலிக்க இக்கட்டுரை நேரடியாகப் பயன்படாது. அதற்குரிய சட்டமும் இங்கு கூறப்படுவதேயானாலும், கொடுத்தவருடைய உணர்ச்சியே பணம் திரும்பிவர, தடையாக இருப்பதால், மற்ற நியதிகள் பலன் தரும் வகையில் இங்கு செயல்படாது. இதற்குரிய பதிலையும் சுருக்கமாக எழுதுகிறேன்.

உதாரணமாக நெருங்கியவரிடம் வலிய பிரியத்தால் அன்று கொடுத்த பணம் இன்று திரும்பி வந்தால்தான் மகன் படிப்பு நடக்கும் என்ற நிலையில் வாங்கியவர் அதைக் கொடுக்க முழுவதும் விரும்புகிறார். ஆனால் பெருமுயற்சி செய்தால்தான் அப்பணம் புறப்படும். அவர் எடுக்கும் முயற்சி போதாது என்றால் கொடுத்தவர் மனம் எப்படி இருந்தால், பணம் திரும்ப வரும்? நடைமுறையில் நம் மனம் இப்படியிருப்பதுண்டு?

  • அவருக்குச் சிரமமில்லாமல் பணம் கிடைத்து, நம் பணம் வந்துவிட்டால் நட்புக்கோ உறவுக்கோ குந்தகமிருக்காது என்பது ஒரு நிலை.

இது இயல்பானாலும், பணத்தைத் திருப்பிக் கொடுக்க முழு முயற்சி செய்வது வழக்கமில்லை என்பதால், பணம் வரவேண்டுமென்ற தீவிரம் கொடுத்தவர்க்கேயில்லை என்றால் பெற்றவர் முயற்சி முழுமை பெறாது. பணம் வராது.

  • எனக்கு அதெல்லாம் தெரியாது. என் பணம் வந்தாக வேண்டும். எனக்கு வேறு வழியில்லை என்பது ஒரு மனநிலை.

இப்படி நட்பைப் புறக்கணித்துப் பேசினாலும், பேச்சிலுள்ள காரம் மனத்திலிருக்காது என்பதால், பணம் வராது.

எனவே நாம் பணம் கொடுத்த சந்தர்ப்பங்களை நினைவுபடுத்தி, அந்தச் சமயம் இருந்த மனநிலைகளை நினைத்துப் பார்த்தால், பணம் வருவதற்குள்ள குறைகள் தென்பட்டால், இன்று அதை மனதால் முழுமையாக விலக்கினால், புது சந்தர்ப்பம் ஏற்பட்டு பணம் வரும்.

"என் பணத்தைத் திருப்பித் தராததால் என் மகள் படிப்பு வீணாவதற்கு அவர் பொறுப்பாளியாகி அவர் அதனால் கஷ்டப்படக்கூடாது'' என்ற நினைவு நியாய உணர்ச்சியையும், பணம் வருவதற்குரிய தீவிரத்தையும் தரவல்லது. அவருக்குச் சிரமம் கூடாது என்று நாம் நினைத்தால், அவர் முயற்சி முழுமையாகாது. அவரைப்பற்றி எனக்குக் கவலையில்லை என்பது மனத்தில் அவர் மீதுள்ள பற்றை மறந்து பேசுவதாகும். இருவருக்கும் கஷ்டம் வரக்கூடாதென்று நினைக்க நம் மனம் அதிக தீவிரத்தை நாட வேண்டும். அந்த அதிக தீவிரம் அவருக்குப் பயன்படும், பணம் வர உதவும்.

மனத்தை, பிரச்சினையிலிருந்து விலக்கி, பரிதாப உணர்ச்சியிலிருந்தும் விலக்கி, நியாய மனப்பான்மையில் நிறுத்தும்பொழுது மனம் வலுவடையும். அந்த வலிமை நிலைமையை மாற்றும், அன்னை அதன்மூலம் விரைவில் செயல்பட முடியும்.

ஒரு வியாபாரியை அவர் தம்பி 10,000ரூபாய் கேட்டார். தம் இரு நண்பர்களை தம்பிக்கு வியாபாரி உதவச் சொன்னார். அவருடைய வாடிக்கைக்காரர் ஒருவர் 15,000 ரூ. பாக்கி வைத்து இருந்தார். தம்பியோ, வாடிக்கைக்காரரோ ஒரு வருஷமாக, பணத்தைத் திருப்பித்தரும் முயற்சியை எடுக்கவில்லை. தம்பிக்கு ரூ.50,000 வரிப்பிரச்சனை வந்து விட்டது. வாடிக்கைக்காரர் கணவனுக்கு ஜாயிண்ட் கையெழுத்துப் போட்ட இடத்தில் 75,000 ரூ. ஜாமீனுக்காக கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. இவை இரண்டையும் அறிந்த வியாபாரி, இருவருக்கும் பிரச்சினை பாக்கியைப் போல் 5 மடங்கு இருப்பதைக் கண்டார். தம்பியிடம் உள்ள பாசமும், வாடிக்கைக்காரரை, கடிந்து கொள்ளாத நிலையும் அவர்களுக்கு பிரச்சினையை உற்பத்தி செய்து விட்டது என்று கண்டார். தம்மால் பணத்தை இழக்க முடியும், ஆனால் தம்மால் அவர்களுக்குத் தொந்தரவு தருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. நிச்சயமாக அவர்கள் பணத்தைத் திருப்பித் தரவேண்டும் எனத் தீவிரமாக அவர் முடிவெடுத்தார். அவர்கள் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு மாதம் கொஞ்சமாக கொடுக்க ஆரம்பித்தனர். இருவருக்கும் பிரச்சினை தீர்ந்து விட்டது. கொடுத்த பணத்தைப் பற்றி நான் சொல்லக்கூடியது ஒன்று தான். "வராத பணமில்லை. வசூலிக்காத பணம் உண்டு.'' சூரியன் உதயமாவதைப்போல் பிரார்த்தனை தவறாமல் பலிக்கும்.

1936-இல் பாட்டனார் வாங்கிய கடனை பேரன் 1986-ல் கேட்காமல் கொடுத்தவர் மகனிடம் கொண்டு வந்தார், வாங்கியவர் திரும்பக் கொடுப்பது வாங்கியவருக்கு நல்லது. கொடுத்தவர் மகனால் அதைத் திரும்பப் பெறவேண்டும் என நினைக்கவும் முடியவில்லை. பணத்தை தர்ம கைங்கரியத்திற்குக் கொடுத்துவிடச் சொன்னார். அன்னையிடம் வந்தபின் செய்யாத பிரார்த்தனையும் பலிக்கும். 50 வருஷங்கள் கழித்தும் கொடுத்த பணம் மூன்றாம் தலைமுறையிலும் வரும். நண்பரிடம் மூன்று மாத சம்பளத்தைக் கடனாகக் கொடுத்து மறந்தவரைத் தேடி 12-ஆம் வருஷம் அப்பணம் வந்தது.

பெரிய சொத்தை சின்ன மனிதன் வசதி ஏற்பட்டதால் வாங்கினார். விற்றவர் விற்றபின் மேலும் கைமாத்து கேட்டார். பெரிய மனிதனுக்கு தாம் கடன் கொடுக்க முடியும் என்று பெருமைப்பட்டுக் கொடுத்தார். கோர்ட்டுக்கும் போய் டிக்ரியாகியும் பணம் வரவில்லை. பெருமைப்பட்டதாலும், கொடுக்க ஆசைப்பட்டதாலும், பெருமையும், ஆசையும், பணத்தை ஈடு செய்துவிட்டன. பணம் வரவில்லை; வராது.

இரண்டு நண்பர்கள் சேர்ந்து ஆசைப்பட்ட விஷயங்களைப் பூர்த்தி செய்து கொள்ள செலவு செய்தனர். இது வகையில் ஒருவர் மற்றவர்க்குப் பெரும் தொகை பாக்கியாகி விட்டது. கோர்ட் டிக்ரி பெற்றார் அவர். ஆனால் டிக்ரியை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. பணம் பாக்கி என்பது கணக்குப்படி உண்மையானால், மனம் இணைந்து ஈடுபட்ட விஷயங்களில், மனம் பணத்தை தீவிரமாக நாடாது. மனம் நாடாத ஒன்றை அமீனா வசூல் செய்ய முடியாது. உருப்படாத மனிதர் ஒருவர், 25 வருஷமாக தான் ஏன் உருப்படவில்லை என்று வியாக்யானம் செய்பவர். தாம் உருப்பட முடியாததற்கு, தமக்கு போதிய முதல் எப்பொழுதும் இருப்பதில்லை, அது கடனாகவும் கிடைப்பதில்லை என்று அவர் சொல்வது வழக்கம். அதனால் மனநிறைவு பெறுபவர். ஒரு சமயம் நண்பர் ஒருவர், இவரை விசாரித்து, இந்த வருஷம் முதல் கிடைத்தால் நிலைமை இனி மாறுமா எனக் கேட்டார். முதல் கொடுக்க நண்பர் சம்மதித்தார். தேவைப்பட்ட முதல் 15,000 இருக்கும் பொழுது அதை 20,000 எனப் பொய் சொன்னார். ஒவ்வொரு வருஷமும் தொழிலுக்காகக் கடன் வாங்கி அதிலொரு பகுதியை வீட்டில் செலவு செய்து மனைவியைக் குறை சொல்வது வழக்கம். எனவே நண்பர் வீட்டுச் செலவுக்காக அவர் கேட்ட ரூ. 5,000-உம் சேர்த்து ரூ. 25,000-ஆகக் கொடுத்தார். அந்த வருஷம் அவர் தொழிலை "சிறப்பாகச்'' செய்ததாக அனைவரும் பேசினர். ஆனால் தொழில் ரூ. 5000 நஷ்டம். நஷ்டம் போக மீதிப் பணத்தை அடுத்த வருஷ முதலுக்குத் தேடினால், காணோம்! ஒரு வருஷ முடிவில் பணம் மறைந்து விட்டது. உருப்படாத மனிதர், உருப்படாதவர் என்ற பெயரை நிரந்தரமாக்கிக்கொண்டார். பணம் கொடுத்தவர் கேட்கவில்லை. வாங்கியவர் மட்டும் தானே அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சந்தர்ப்பம் வரும்பொழுதெல்லாம் சொல்லுவார். அவருக்குக் கொடுக்கப் பணமுமில்லை, உண்மையான எண்ணமுமில்லை.

சில ஆண்டுகள் கழித்து எதிர்பாராமல் மிகப் பெரும் தொகை கிடைத்தது. அந்தச் சமயம் இந்த 25,000 ரூபாயை திருப்பித் தரவேண்டும் என்று வாங்கியவர் பேசினார். கொடுத்தவர் கேட்கவில்லை. கடனாகக் கொடுத்தாலும், நிலைமையை அனுசரித்துக் கேட்கவில்லை. வாங்கியவர் கையில் பெரும் தொகையை வைத்துக்கொண்டு சிறு கடனை, கொடுக்காமலிருப்பது எப்படி என்று ஒரு புதுக் கருத்தை வெளியிட்டார். நான் கொடுக்க நினைக்கிறேன். நான் திரும்பக் கொடுத்தால் பெற்றுக்கொள்ள அவர் கூச்சப்படுவார். அதனால் தான் தயங்குகிறேன் என்று விளக்கம் அளித்தார். செய்தி, கொடுத்தவர் காதிற்குப் போயிற்று.

"நான் கடனாகக் கொடுத்தேன். அது என் பணம், திரும்பத் தருவதில் எனக்கு ஆட்சேபணையோ, பெற்றுக் கொள்ளத் தயக்கமோ இல்லை'' என்று பதில் வந்தது. ஆனால் வாங்கியவர் கொடுக்கவில்லை.

கொடுத்தவருக்குப் பணம் திரும்பிவரவேண்டும் என்ற நினைவோ, விருப்பமோ இல்லை என்றால், பணம் அருகில் வந்தாலும் திரும்பி வர எல்லாச் சந்தர்ப்பமும் இருந்தாலும், அது வராது.

வெளியூரிலிருந்து வந்து இங்குத் தொழில் செய்பவர் சரக்கு சப்ளைக்காக உள்ளூர் வியாபாரிக்கு, வியாபாரியின் ஒரு வருஷ செலவாணியை- 85,000த்தை முன் பணமாகக் கொடுத்தார். 65,000 சரக்கு சப்ளை செய்தபின் வியாபாரி மனதை மாற்றிக் கொண்டு விலையைச் சற்று உயர்த்தி கணக்குப் பார்த்தால் 85,000 அடைந்து விட்டது என்று பேசினார். வியாபாரி நாணயமானவர் எனப் பேர் வாங்கியவர். தொகைக்கு, பிராமிசரி நோட்டிருக்கிறது. கோர்ட்டுக்குப் போகும் நிலை கொடுத்தவர்க் கில்லை. நாள் கழிந்தது. நாணயமானவர் பேச்சை மாற்றி, தாம் பாக்கி கொடுக்க வேண்டியதில்லை எனப் பேசினார். பணத்தைக் கொடுத்தவர் தம் மனதை சோதனை செய்ததில் அவருக்குப் புரிந்தவை.

  • கோர்ட்டுக்கு போகாமல் இப்பணம் வராது.
  • உள்ளூர் வியாபாரிக்கு வெளியூர்க்காரர் பணம் கொடுத்தால் நடைமுறையில் உள்ளூர்க்காரர் கட்டுப்படமாட்டார்.
  • தாம் செய்த காரியம் தவறில்லை என்றாலும், பிடி நடைமுறையில் தம்மிடமில்லை.
  • தவறில்லை என்பதால் பிரார்த்தனைக்குக் கட்டுப்படும்.
  • பிரார்த்தனையை நம்பினாலும், காலாவதி ஆகுமுன் கோர்ட்டுக்குப் போவதே அன்னை முறை.
  • கோர்ட்டுக்குப் போகாமல் அன்னையை நம்ப அதிக நம்பிக்கை வேண்டும்.

அதிக நம்பிக்கை மேற்கொள்ள முடிவு செய்து பிரார்த்தனையை மேற்கொள்வது சரி. சுமார் 6 மாதங்கள் வரை தினமும் பணம் நினைவு வரும் பொழுதெல்லாம் அன்னையை நினைக்க முயன்று, சிறிது சிறிதாக ஒரு முறை தவறாமல் அன்னையை நினைக்கும் கட்டத்தை எட்டிப் பிடிக்கும் நிலையில் ஒரு நாள் அந்த வியாபாரி பணம் கொடுத்தவரை, தேடி வந்திருப்பதாகச் செய்தி வந்தது. அவர்கள் சந்தித்தனர். கொடுக்கல், வாங்கல், காரமில்லாமலும், பழைய இனிய உறவு இல்லாமலும் (business like) காரியத்தைப் பேசி முழுப் பணத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டார். இது பிரார்த்தனையின் பலன். நடைமுறையில் நம்பமுடியாத ஒன்று.

வெகுநாள் கழித்து இது எப்படி நடந்தது என்று தெரிய வந்தது. பணத்தைக் கேட்டு அனுப்பும் வரை இல்லை என்று பதில் சொன்னவர், பணத்தைக் கேட்பதை நிறுத்தியபின், கோர்ட் நோட்டீஸ் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது குடும்பத்தில் வேறு பிரச்சினைகள் பேசப்படும்பொழுது, நாணயமான நம் நல்ல பெயரை இப்பொழுது கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று முடிவு செய்து, அவரை மாற்றிச் செயல்பட வைத்திருக்கிறார்கள் எனத் தெரிய வந்தது.

எந்தச் செயலுக்கும் ஓர் அடிப்படையுண்டு, அர்த்தமுண்டு. அதன் அம்சங்கள் எவை என நாம் அறிவோம். அதுபோல் கடமை, நன்றியுணர்வு, செயல், திறமை, உறவு, உதவி போன்ற பல நூறு காரியங்களை நாம் அறிவோம். அதுபோல் கடன் என்றால் என்ன? யாருக்கு யார் கொடுப்பது? என்பதை நாம் மனதில் தெளிவுபடுத்திக் கொண்டால், அந்த விளக்கப்படி நாம் கொடுத்த பணம் கடன்' என்ற தலைப்பில் வந்தால், அது திரும்பி வராமலிருக்காது. இருந்தால் அதனுள் உள்ள gap இடைவெளியைக் கண்டு நிரப்பினால் அது வந்துவிடும்.

கடன் வாங்குதல் என்றால் செய்யும் காரியத்திற்குரிய தகுதியிருந்து, தொகை உரிய காலத்தில் கைக்கு வராவிட்டால், ஆனால் வரும் என்ற உறுதியிருந்தால், அத்தொகை வரும்வரை காரியம் காத்திருக்காது எனில், அந்த இடைவெளியில் பயன்படுவது கடன். P.F. வர இன்னும் 6 மாதங்களோ, ஒரு வருஷமோ ஆகலாம். நல்ல வரன் கூடிவந்து விட்டது. தள்ளிப் போட்டால் வரன் தவறிவிடும் என்றால் P.F. வரும் வரை அந்தத் தொகையை நமக்குரியவர் ஒருவர் கொடுத்து உதவுவது கடன். எதிர்பார்க்க எதுவுமில்லாதவருக்கு நல்ல வரன் வந்தால், அந்த கல்யாணச் செலவை கடனாக' கொடுத்து உதவ முன் வருபவர், தான் கொடுத்தது கடன் இல்லை கடன் என்ற விளக்கத்திற்கு அப்பாற்பட்டது என்று அறிய வேண்டும். நான் P.F..-ஐ நம்பி அவருக்கு உதவினேன், ஆனால் 6 வருஷங்களாக P.F. வரவில்லை என்றால், அங்கு பிரார்த்தனை தாமதமாகும் P.F.-ஐ வாங்கிக் கொடுக்கும். P.F.-ஐ எதிர்பார்த்தால், வேறு பணம் வந்து பிரார்த்தனை செய்தவருக்கு உதவும். நான் எதுவும் இல்லை என்று தெரிந்து நல்லெண்ணத்தால் உதவினேன் பணம் வரவில்லை என்றால் அது கடனில்லை. நல்லெண்ணத்தால் இனாம் கொடுக்கலாம் கடன் கொடுக்க முடியாது. இந்தத் தலைப்புக்குரிய பொருளில்லை அது. இந்தத் தலைப்பைப் பொறுத்த வரை அது கடனில்லை என்பதால் வராது. அதை எதிர்பார்க்க முடியாது.*

கடன் பொதுவாகத் தொழிலுக்குரியது. கடன் பெறுபவருக்கு ஒரு தொழிலிருக்க வேண்டும். தொழிலால் இலாபம் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையிருக்க வேண்டும். தொழிலுக்கு அடிப்படை வேண்டும். இது வரை இலாபம் சம்பாதித்த தொழிலாக இருக்க வேண்டும். இனி இலாபம் ஈட்டும் என எதிர்பார்ப்பதாக இருக்கக்கூடாது. எதிர்பார்த்து,


* அவருக்கும் அன்னையிடம் வழியுண்டு என்பதை விளக்க தனிக் கட்டுரை எழுத வேண்டும். அதன் கரு அவர் அறிவில்லாமல் செயல்பட்டிருக்கிறார். அந்த அறியாமை அவர் வாழ்வில் பல இடங்களில் பல ரூபங்களிலும் பல்வேறு வகையாக நிறைந்திருக்கும். அவற்றையெல்லாம் மாற்ற முன்வந்தபின், கடன் கொடுத்த அறியாமைக்காக மனம் வருந்தினால் அதன் பின் பிரார்த்தனை பலிக்கும்.

தாமதமாகும் பணத்தை வைத்து, குறுகிய கால கடன் வாங்கலாம். நீண்ட கால கடன் வாங்குவது, சம்பாதிக்கும் திறமையை அடிப்படையாக வைத்து வாங்கியதாக இருக்கும். கடன் ஒருவருக்குக் கொடுக்க, கொடுப்பவருக்குத் தொழில் மூலம் உறவு இருக்க வேண்டும். நட்பு, பாசம் மூலம் உறவிருந்தால் அது இரண்டாம் பட்சம். கொடுப்பவருக்கு, வாங்குபவருடைய தொழிலை அறியும் திறன் வேண்டும். உறவால் கடன் கொடுப்பதானால் தொழிலை நம்பிக் கொடுக்க முடியாது, நாணயத்தை நம்பிக் கொடுக்க வேண்டும். தொழிலுக்குக் கடன் கொடுப்பவருக்கு வாங்குபவருக்குள்ள (risk) நிலையில்லாமை, தனக்கும் உண்டு என்று தெரிய வேண்டும். நண்பனுக்கு ஆதரவாகக் கொடுப்பது கடனாகாது. அது நட்பாகும். நட்பால் கடன் கொடுத்து, அது கெட்டுப் போனபின் "என் பணம் வர வேண்டும்'' என்று பேசினால் அவர் தம்மையேயறியாதவர் என்று பொருள். ஈடு வைத்துக் கொண்டு கொடுப்பவர் தொழிலை, நாணயத்தை நம்பவில்லை என்று பொருள். அவர் கோர்ட்டிற்குப் போகத் தயாராக இருக்க வேண்டும்.

ஒரு மனநிலையில் கடன் கொடுத்துவிட்டு, மாறிய மன நிலையில் வசூலிக்க முயல்பவர்க்கே பணம் வரவில்லை என்ற பிரச்சினை. அதை உணராதவரை அவருக்கு பிரார்த்தனை பலிக்காது. அது நடந்துவிட்டால், தாம் நண்பன் என்று உதவியதை இன்று நினைவுபடுத்தி, அதற்குரிய (risk) நிலையில்லாதவற்றை மனம் ஏற்றுக் கொண்டு, தம் நிலைக்கு அதுபோல் செய்தது தவறு என்று உணர்ந்தால், அதன் பிறகு பிரார்த்தனை பலிக்கும்.

நண்பர் வியாபாரம் ஆரம்பித்தார். எல்லோரும் நல்லெண்ணத்தால் உதவினோம். கடை வியாபாரம் ஆகவில்லை. இப்படியாகும் என நாங்கள் எவரும் எதிர்பார்க்கவில்லை என்றால், இங்கு கடன்' கிடையாது. நீங்கள் எதிர்பார்த்தது, நடக்கவில்லை. அதனால் உங்களுக்கு நஷ்டம் ஏற்ப்பட்டது என்று பொருள். அதன் தலைப்பு வேறு. அது கடனில்லை. பணம் கொடுத்தால் கடன்' என நாம் நினைத்தால், அது உண்மையில் கடன் இல்லை. கடனுக்குரிய இலட்சணம் இதற்கில்லை.

கடன் என்பது ஒரு செயல். ஒரு செயலுக்குரிய அம்சங்கள் அனைத்துமிருந்தால் செயல் பூர்த்தியாகும். கடன் திரும்ப வந்தால் அது பூர்த்தியாகிறது. அது பூர்த்தியாகாவிட்டால் விடுபட்ட அம்சத்தைச் சேர்த்தால் பூர்த்தியாகும்.

பிராமிசரி நோட்டு எழுதி, அடமானப் பத்திரம் எழுதி சாட்சிக் கையெழுத்திட்டு சட்டபூர்வமாகக் கொடுத்த கடன், சட்டத்தில் செல்லுபடியாகும். சட்டத்தைத் தாண்டிய பிரச்சினை எதுவும் அதில்லை என்றால் கடன் திரும்ப வரும். சட்டத்தைத் தாண்டிய உணர்ச்சிபூர்வமான பிரச்சினையோ, வேறு பிரச்சினையோ இருந்தால், சட்டப்படி எல்லாம் சரியாக இருந்தாலும், பணம் வராது. தன் மனைவி நகைகளை அண்ணனிடம் கொடுத்து அடகு வைத்துப் பணம் வாங்கித்தரச் சொன்ன தம்பி, பணத்தைத் திருப்பிக் கொடுத்து, அண்ணனை நகையை மீட்டுக் கொடுக்கச் சொன்னார். அண்ணன் நகையை மீட்டு வந்து தம் செலவை செய்து கொண்டார். அந்தப் பணம் வரவில்லை. ஏன் அப்படி நடந்தது? அண்ணன் ஊதாரியா, பொறுப்பில்லாதவரா எனில் அண்ணன் குறையில்லாதவர். அந்தக் குடும்பத்தில் எவருக்குமில்லாத படிப்பை, தம்பி பெற அண்ணன் காரணமாக இருந்ததால், இந்த நிகழ்ச்சி மூலம் அண்ணன் தாம் பெற வேண்டியதைப் பெற்றுவிட்டார். பழையபாக்கி' நம்மையறியாதது இருந்தது. அதனால் விஷயம் தடம் மாறிப் போகிறது. இங்கு முயற்சியும் பலிக்காது. பிரார்த்தனையும் பலிக்காது. இது சட்டத்தையும், நடைமுறையையும் தாண்டிய பிரச்சினை. சட்டத்திற்குக் கட்டுப்படாது. அதே போல் உணர்ச்சியைக் கடந்து கண்ணுக்குத் தெரியாத பிரச்சினைகளிருந்தால், அது உணர்ச்சிக்குக் கட்டுப்படாது.

எதிர்காலத்தில் ஒருவனை, பல நண்பர்கள் சேர்ந்து தலைவனாக்கப் போகிறார்கள். அதற்குரிய முறையில் இன்று அவன் நடந்து கொள்ளும் தெளிவில்லாத நிலையில் இருக்கும்பொழுது, எதிர்காலத்தைப் பூர்த்தி செய்து கொள்ள நிகழ்கால நிகழ்ச்சிகள் தயாராக இருக்கும். அது போன்ற சமயத்தில் அவன் தன் நண்பர்கள் அனைவருக்கும் கடன் கொடுக்கும்படி அமைந்தால், எந்தப் பணமும் வராது. அவர்களால் கொடுக்கமுடியாத நிலை ஏற்படும். மனம் கசக்காவிட்டால், எதிர்காலத்தில் இதன் பலனாக தலைமைப் பதவியை நண்பர்கள் இவனுக்குப் பெற்றுத் தருவார்கள். இவை கடன்' என்ற தலைப்பிற்கு விலக்கு.

இருவர் பழகும்பொழுது ஒருவருக்கு அடுத்தவரால் தொடர்ந்த பலன் ஏற்படும். செல்வாக்காகவும், அறிவாகவும், நட்பாகவும், ஆதரவாகவும் அவையிருக்கலாம். அந்த உறவில் பணம் கொடுத்தால் அது கடனாகாது. வாங்குபவருக்கு அது நினைவேயிருக்காது. கொடுக்க முடியாத சந்தர்ப்பம் ஏற்படும். மறந்தேபோகும். ஏனெனில் வேறு ஒரு வகையில் இவர் கடமை பூர்த்தியாகிக் கொண்டிருக்கிறது.

அன்னையிடம் வந்தவர்க்கு, பலவிதமாக எதிர்பாராத காரியங்கள் நடந்ததுண்டு. சிறு தொகையாவது கடன் கிடைத்தால் போதும் என்ற நிலையிலுள்ளவருக்கு பெரும் தொகையை எந்தக் காரணமுமின்றி அடுத்தவர் கொடுத்து "not returnable'' என்ற சீட்டையும் கொடுத்த நிகழ்ச்சியும் நடந்ததுண்டு.

கொடுத்த பணம் திரும்பி வராதபொழுது, நாம் கடன் கொடுத்த சந்தர்ப்பத்தையும், பெற்றவர் மனநிலையையும், இன்று சோதனை செய்து பார்த்தால், அது கடன்' என்ற தலைப்பில் வந்து, ஓரிரு அம்சம் குறைவாக இருந்தால், இன்று அதைப் பூர்த்தி செய்ய முடியுமானால், அதன் பிறகு செய்யும் பிரார்த்தனைக்கு பணம் நிச்சயமாகத் திரும்பி வரும். எல்லா அம்சங்களையும், பூர்த்தி செய்து விட்டால் பணம் நிச்சயமாக வரும். எப்பொழுது என்று சொல்ல முடியாது. எல்லா அம்சங்களையும் பூரணமாக(to saturate) பூர்த்தி செய்து விட்டால் பணம் அன்றே திரும்பி விடும்.

பிரார்த்தனையை மேற்கொள்பவர் பிரார்த்தனைக்குப் புறம்பான செயலை நாடக்கூடாது. உதாரணமாக நம் பணம் திரும்ப வரவேண்டும் என்று நினைப்பது சரி. அவனை நான் சும்மாவிடப் போவதில்லை என்பது சரியில்லை. அந்த மனநிலை பிரார்த்தனைக்குத் தடையாகும்.

* * *



book | by Dr. Radut