Skip to Content

வாழ்வு

வாழ்வையும் யோகத்தையும் முதல் இணைத்துப் பார்த்தவர் பகவான் ஸ்ரீ அரவிந்தர். வாழ்வே யோகம் என்று அவர் கூறினார். அவர் கூறியது உலகத்திற்குப் புதிராக அமைந்தது. அவர் வாழ்வு என்று கூறுவதும், நாம் வாழ்வு என்று அறிவதும் வேறுபட்டவை. நாம் வாழ்வு என்று அறிவது நமது வாழ்வு. நம் குடும்ப வாழ்வு, சமூக வாழ்வு, இந்தச் சொற்களை நாம் அறிவோம் என்றாலும் இவற்றிற்குரிய பொருளில் இவற்றை நாம் பயன்படுத்துவது இல்லை. சமூக வாழ்வு என்று சொன்னால் சமூகத்தில் நாம் வாழும் வாழ்வு என்று எடுத்துக்கொள்கிறோம். சமூகத்தில் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்வு எல்லாம் சேர்ந்தது சமூக வாழ்வு என்பது நமது கருத்து. சமூக வாழ்வு என்பது நம் கருத்தைக் கடந்த ஒன்று.

நாம் மூச்சு விடுகிறோம் என்றால் உலகத்திலுள்ள காற்று நம்முள் சென்று வெளிவருகிறது. வாயு மண்டலம் என்று ஒன்று உண்டு. எங்கும் இடைவிடாது பரவி உள்ளது. அவற்றுள் நாம் விடும் மூச்சு ஒரு புள்ளி. ஒரு பெரிய செல்வந்தர் உள்ள ஊருக்குப் போனால் அந்த ஊரில் நுழைந்தவுடன் அவருடைய செல்வாக்கு இல்லாத இடம் இல்லை என்று தெரியும். அப்படி ஒருவர் இருக்கிறார் என்று தெரியாமலேயே அந்த ஊருக்கு நாம் போனால் அந்த ஊரில் நுழைந்தவுடன் நம்மையறியாமல் ஒரு பவ்யம் வரும். அப்படி ஒருவர் இருக்கிறார் என்று நமக்குத் தெரியவில்லை என்றாலும் அவருடைய செல்வாக்கு அந்த ஊர் காற்றில் இருக்கும். நாம் அதைச் சூழல், atmosphere என்று சொல்கிறோம். வாழ்வு என்று பகவான் கூறுவது நம்முடைய வாழ்வு, ஊருடைய வாழ்வு, பல மனிதர்களுடைய வாழ்வு என்று மட்டும் ஆகாது. அது பூமியைக் காற்று சூழ்ந்து இருப்பதைப் போல் சூழ்ந்துள்ளது. அதை நாம் ஒரு லோகம் என்று கூறுகிறோம். தெய்வ லோகம், ஆனந்த லோகம், சிவலோகம் என்பதைப்போல் வாழ்வும் ஒரு லோகம். இந்த லோகத்திற்கு உயிர் உண்டு, உயிர்ப்பு உண்டு. கட்டாந்தரையாக இருந்த இடத்தில் மழை பெய்து 10 நாட்களுக்குப்பின் ஏராளமாகப் புல் முளைக்கிறது. அளவுகடந்த பூச்சிகளை நாம் பார்க்கிறோம். இது எல்லாம் எங்கு இருந்தன, எப்படி வந்தன என்று நமக்குப் புரிவது இல்லை. திடீரென உற்பத்தியானதுபோல் தோன்றுகின்றன. ஒருவகையில் அது உண்மை. வாழ்விற்கு உயிர் இருப்பதால் அது புல், பூண்டு, பூச்சி, புழு, ஆகியவற்றிற்கு உரிய நேரம் வரும்பொழுது உயிர் கொடுக்கிறது. புவியில் அப்படிப் பிறந்தவன்தான் மனிதன்.

இந்த வாழ்வு பிரபஞ்சம் ஏற்பட்டதற்குமுன் ஏற்பட்டது என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். பிரபஞ்சமே அழிந்தாலும் வாழ்வு உயிரோடு இருக்கும். அதனால் புதுப் பிரபஞ்சத்தை ஏற்படுத்த முடியும். மனம் என்ற லோகத்திற்கும், ஜட லோகத்திற்கும் இடையே இந்த வாழ்வு லோகம் இருப்பதாக பகவான் கூறுகிறார். மனத்திற்கு ஞானமும், உறுதியும் உண்டு. ஞானம் உறுதிக்கு உயிர் கொடுக்கும். ஞானம் உறுதிக்கு உயிர் கொடுப்பதால் எழுந்தது வாழ்வு லோகம். மைசூர் போகலாம் என்று ஒரு எண்ணம் வருகிறது. எண்ணம் எண்ணமாகவே மறைந்துவிடுவது உண்டு. நம் எண்ணத்தை நான்கு பேர் ஏற்றுக்கொண்டால் நாமும் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஏற்றுக் கொண்டவுடன் ஒரு சுறுசுறுப்பு வருகிறது. அடுத்த மாதம் 10ஆம் தேதி போகவேண்டும் என்று குறிப்பிட்டால் இப்பொழுதே, இன்றே கிளம்புவது போல் மனம் பரவசம் அடைகிறது, அது பரபரப்பு. மைசூர் போகவேண்டும் என்ற எண்ணம் நம் மன உறுதிக்கு உயிர் கொடுத்துவிடும். 10ஆம் தேதி வரும்வரை உடலும், மனமும் சுறுசுறுப்பாக இருக்கும். அது நமது எண்ணம். பிரயாணம் செய்ய வேண்டும் என்ற நமது எண்ணம். சிருஷ்டியில் மனம் என்று ஏற்பட்டபிறகு அது பிரபஞ்சத்திற்கு உரிய மனம். பிரபஞ்சத்திற்குரிய ஞானம் பிரபஞ்சத்திற்குரிய உறுதிக்கு உயிர் கொடுத்தால் ஏற்படுவது வாழ்வு என்ற லோகம். அதைப் புவி வாழ்வு, பிரபஞ்ச வாழ்வு என்று கூறுகிறோம். இந்த வாழ்விற்கு நமக்கு இருப்பதைப்போல் குணம் உண்டு; அறிவு உண்டு; உதவி செய்யும் மனப்பான்மை உண்டு; பழிவாங்கும் திறன் உண்டு. வாழ்க்கையை ஒட்டிப்போனால் வாழ்க்கை நமக்கு ஆதரவு தரும். வாழக்கையைவிட்டு விலகிப்போனால் நமக்கு ஜீவன் இருக்காது. வாழ்க்கையை எதிர்த்தால் நாம் பாதாளத்தில் வீழ்ந்துவிடுவோம். Verdict என்று ஒரு படம். Verdict என்றால் தீர்ப்பு என்று பொருள். Frank என்ற வக்கீல் தன் பார்ட்னர்கள் ஊழல் செய்வதை எதிர்த்தார். பார்ட்னர்கள் ஒன்றுசேர்ந்துகொண்டு ஊழல் செய்தது Frank என்று கூறி அவரை சிறைப்படுத்தினர். தன்னால் முடியாமல் Frank தணிந்துபோய் எதிர்ப்பை வாபீஸ் செய்து விடுதலை பெற்றார். Frank குடித்து வாழ்வை நாசமாக்கிக்கொண்டார். மனைவி அவரைவிட்டுப் போய்விட்டாள். மிக் என்ற நண்பர் Frank மீது பரிதாபப்பட்டு ஒரு நல்ல கேஸை கொண்டுவந்தார். பெரிய டாக்டர்கள் அலட்சியமாகப் பிரசவத்திற்கு வந்த ஒரு பெண்ணை மூன்று வருடம் கோமாவில் இருக்கும் நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டனர். அப்பெண் சார்பாக கேஸ் நடத்தவேண்டும். அது பிரபலமான ஆஸ்பத்திரி என்பதால் கோர்ட்டிற்கு கேஸ் போனால் ஆஸ்பத்திரியின் பெயர் கெட்டுவிடும். கேஸ் எடுக்காமல் இருக்க ஆஸ்பத்திரி நிர்வாகம் அப்பெண்ணிற்கு 1 கோடி ரூபாய் கொடுக்க முன்வருகின்றனர். அப்பெண் சார்பாக Frank கேட்டது 3 கோடி ரூபாய். வக்கீல் 1 கோடியைப் பெற மறுக்கிறார். இந்த ஒரு கோடியில் 1/3 பாகம் வக்கீல் fees. கேஸ் கோர்ட்டிற்குப் போகவில்லை. எதிரி வக்கீல் பிரபலமானவர். அவரிடம் 12 வக்கீல்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுள் லாரா என்று ஒரு பெண். வேவு பார்ப்பதற்காக அவளை Frankகிடம் அனுப்புகிறார்கள். Frank விபரம் தெரியாமல் அவள் மீது பிரியம் கொண்டு தம் வீட்டிற்கு அழைத்துப் போகிறார். லாரா மூலம் எல்லாச் செய்திகளும் எதிரிக்குத் தெரிவதால் திறம்பட Frank செய்யும் ஏற்பாடுகள் முறியடிக்கப்படுகின்றன. கோமாவில் உள்ளவளுடைய சகோதரியும், அவள் கணவனும் வாதிகள். Frank ஒரு கோடியை மறுத்ததால் வாதி கோபப்பட்டு Frankஐ அடித்துவிடுகிறான். Frank பக்கம் சாட்சி சொல்லப் பெரிய டாக்டர் வருகிறார். எதிரி அவரைக் கலைத்துவிடுகிறான். மனமொடிந்து Frank மறுபடியும் எதிரியிடமிருந்து ஒரு கோடியைப் பெற முனைகிறார். அவர்கள் மறுத்துவிடுகின்றனர். ஆப்பரேஷனுக்கு உடன் இருந்த நர்ஸ் தவிர அனைவரும் வாக்குமூலம் கொடுக்கின்றனர். விட்டுப்போன நர்ஸை சந்திக்க Frank முனைகிறார். அவள் நியூயார்க் போய்விட்டாள். அவளுடைய phone நம்பரைக் கண்டுபிடிக்க Frank செய்த யுக்தி பக்கிறது. Frank நியூயார்க்கில் நர்ஸைப் பார்க்கப்போன சமயம் Frankன் நண்பர் மிக் லாரா எதிர்க்கட்சி வக்கீலிடம் பணம் பெற்றுக்கொண்டதை கண்டுபிடித்துவிட்டார். அவரும் நியூயார்க் போய் Frank ஐ எச்சரிக்கிறார். Frank லாராவை சந்தித்து கன்னத்தில் அறைகிறார். Frank நர்ஸை கோர்ட்டிற்கு வரவழைக்கிறார். கோமாவில் இருந்த பெண் ஆப்பரேஷனுக்கு 1 மணிக்கு முன்னால் வயிறு நிரம்ப சாப்பிட்டதாக நர்ஸ் வாக்குமூலம் தருகிறார். Fileஇல் 9 மணிக்குமுன் சாப்பிட்டதாக எழுதியுள்ளது. டாக்டர் 1 மணி என்பதை 9 மணி என்று திருத்தியதாக நர்ஸ் கூறுகிறாள். நர்ஸ் அந்த பைலுக்கு ஜிராக்ஸ் காப்பி வைத்து இருக்கிறாள். ஜிராக்ஸ் செல்லாது என்று ஜட்ஜ் கூறுகிறார். அப்பெண்ணின் வாக்குமூலமே செல்லாது என்று எதிரி வக்கீல் கூறுகிறார். ஜுரி Frank பக்கம் தீர்ப்பு அளித்து 3 கோடியைவிட அதிகமாகத் தர முன்வருகிறார்கள். லாரா Frank ஐ சந்திக்க முயல்கிறாள். லாரா மனம் மாறி இனி Frankற்கு உண்மையாக இருக்கவேண்டும் என்று எண்ணுகிறாள். Frankற்கு லாரா மனம் மாறியது தெரியாது. அவளுடன் பேச மறுக்கிறார். 

  • உலகில் பொய்யின் பலமும், மெய்யின் பலகீனமும் விளக்கும் கதை இது.
     
  • மெய் தடுமாறுகிறது. விழுந்து எழுந்திருக்கிறது. முடிவில் சிரமப்பட்டு ஜெயிக்கிறது. நடுவில் மனம் உடைகிறது.
     
  • மிக் கொண்டுவந்த உதவி மனித உதவி. அதுவே அன்னை உதவியாக இருந்திருந்தால் எப்படி இருக்கும்? அன்னை உதவியை Frank அதிகபட்சம் பெற்று இருந்தால் கோமாவில் இருந்த பெண் பிழைத்துக்கொண்டு இருப்பாள். முதலில் Frankஐ விலக்கிய வக்கீல் ஆபீஸ் அவரைத் திரும்ப சேர்த்துக்கொண்டு இருக்கும்.
     
  • அதிகபட்சமும், குறைந்தபட்சமும் இல்லாமல் பொதுவாக Frank அன்னை உதவியைப் பெற்று இருந்தால் உதவி வருமுன் Frank குடிப்பதை நிறுத்தி இருப்பார்.
     
  • தற்சமயம் ஊழலான ஜட்ஜ் இருக்கிறார். அன்னை உதவி வந்து இருந்தால் உண்மையான ஜட்ஜ் ஒருவர் இருப்பார்.
     
  • பெரிய டாக்டர் எதிரியிடம் பணம் பெற்று மறைந்துவிட்டார். அன்னை உதவி அதைத் தடுத்திருக்கும்.
    அவரே மறைந்தாலும் அந்த இடத்திற்கு வந்த டாக்டர் உண்மையான திறமைசாலியாக இருப்பார்.
     
  • வாதி Frankஐ அடிக்கவந்தவர் சந்தர்ப்பம்மாறி லாராவை அடித்திருப்பார்.
     
  • ஒன்று என்பதை 9 என திருத்தியது லென்ஸ்மூலம் தெளிவாகத் தெரியும்
     
  • எதிரி வக்கீல் ஆபீஸிலுள்ள ஒரு வக்கீல் மோசடிப் பழக்கங்களை எதிர்த்து இருப்பார்.
     
  • இவை எல்லாம் நம் வாழ்வில் அன்றாடம் நடப்பதை நாம் அருளின் செயல் என்பதை அறியாமல் ஏதோ நடந்தது எனக் கொள்கிறோம்.
     
  • கோமாவில் இருந்த பெண் பிழைத்து பெரும் பெணம் பெற்று இருந்தால் அவள் வாழ்வே மாறி இருக்கும்.
     
  • Frank தானே தெளிந்து தம் வீட்டை சுத்தம் செய்து இருப்பார். சுத்தம் செய்தவுடன் மிக் என்பவரின் உதவி வரும்.
     
  • எதிரி வக்கீல் லாராவிற்கு கொடுத்த செக் மிக் கண்ணில்பட்டு குட்டை உடைத்தது. அன்னை உதவி இருந்தால் வேவு பார்க்க வந்த லாரா மனம் மாறி Frankமீது பிரியம் கொண்டு எதிரி செய்யும் அத்தனை மோசடிகளையும் Frankற்குச் சொல்லி இருப்பார்.
     
  • Frankகே அன்னை பக்தனாக இருந்தால் பெரிய ஆபீஸிலிருந்து வெளியேற்றப்பட்டவுடன் அதைவிடப் பெரிய ஆபீஸ் அவரை ஏற்று இருக்கும்.
     
  • அன்னை சக்தி யார்மூலம் வெளிப்படுகிறதோ, அதற்கேற்ப செயல்படும்.
     
  • அன்னை சக்தி இக்கதையில் Frank, மிக், லாரா, டாக்டர், ஆஸ்பத்திரி, கோமாவில் உள்ள பெண், அவள் சகோதரி, அவள் கணவன், நர்ஸ், என வெவ்வேறு நபர்மூலம் வந்திருந்தால் கதையின் போக்கு எப்படி மாறி இருக்கும் எனக் கற்பனை செய்வது அன்னையை அறிய உதவும். 

வாழ்வில் அறிவு ஒளிந்து இருக்கும் என்பது இந்த அத்தியாயங்களுடைய தத்துவம். வாழ்விற்கு சக்தி உள்ள அளவு, அறிவு இருப்பது இல்லை. தனிப்பட்டவருக்கு மட்டும் அது இல்லாமல் இல்லை. வாழ்வின் அமைப்பே அது. Frank லாராவை (bar) பாரில் சந்திக்கிறார். லாரா வேவு பார்க்க வந்து இருக்கிறாள். Frankற்கு லாராமேல் சந்தேகம் வர வழி இல்லை. அந்த வழி வாழ்வில் எவருக்கும் இல்லை. அவருக்கு அவள் மீது பிரியம் ஏற்பட்டது. அவள் வந்த காரியத்தை உணரும் பிரியம் அறிவு. அந்த அறிவு மூளைக்கு உரிய அறிவு இல்லை. உணர்ச்சிக்கு உரிய அறிவு. குடிப்பதால் இவருடைய உணர்ச்சி மங்கிவிட்டது. உணர்ச்சி விழிப்பாக இருந்து இருந்தால் தம்மையறியாமல் அவருக்கு அவள் மீது சந்தேகம் ஏற்பட்டு இருக்கும். அவளே அவரிடம் நெருங்கிப் பழகி இருந்தாலும் அவர் உஷாராக இருந்து இருப்பார். பெரிய நிர்வாகத்தில் உள்ளவர்கள், அதிகப் பணம் உடையவர்கள், ஆகியவர்களுக்கு அனுபவத்தால் அந்த உணர்ச்சிக்குரிய அறிவு உண்டு. சிலருக்கு இயல்பாகவே உணர்ச்சிகளில் அறிவு உண்டு (vital mind). உணர்ச்சியில் அறிவு என்றால் லாரா வேவு பார்க்க வந்து இரக்கிறாள் என்பதை அது அறியும். கம்ப்யூட்டரில் டைப் செய்யும்பொழுது ஒரு சொல்லைத் தப்பாக பயன்படுத்தினால் உடனே கம்ப்யூட்டர் அதைக் கோடிட்டு காட்டும். சிறு குழந்தைகளிடம் பீச்சிற்குப் போகலாம் என்று அழைத்துக்கொண்டு போனால் குழந்தை நம்மை நம்புகிறது. ஆனால் நாம் டாக்டரிடம் போகிறோம். ஒருமுறை குழந்தையை ஏமாற்றலாம். அடுத்த முறை ஏமாற்ற முடியாது. வாழ்வில் அறிவு ஒளிந்து இருக்கிறது. அனுபவத்தால் வெளியில் வருகிறது. அதைக் குழந்தைகளிடம் நாம் பார்க்கிறோம். ஜடத்துள் அறிவு ஆழ்ந்து மறைந்துள்ளது. மறைந்துள்ள அறிவு ஒளியால் வெளிவருகிறது. லாரா எதிரி வக்கீடம் பணம் பெற்றுவிட்டாள். அந்தப் பணம் அவள் பையில் இருப்பது அவளுக்கே தெரியாது. எதிரி வக்கீல் அவளுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது அவள் டீ குடித்துக்கொண்டு இருந்தாள். வக்கீல் பணத்தைப் பையில் வைக்கிறார். அவர் பணத்தை வைத்ததை அவள் பார்க்கவில்லை. Frank வீட்டில் அவள் phone பேசிக்கொண்டு இருக்கும் போது மிக் அவளை சிகரெட் கேட்கிறார். அவள் பேசிக்கொண்டு இருப்பதால் பதில் சொல்லவில்லை. அவள் பையில் சிகரெட் இருக்கிறதா என்று பார்க்கிறார். அவர் கண்ணில் எதிரி வக்கீல் கொடுத்த பணம் (செக்) படுகிறது. அவளின் குட்டு உடைந்தது. வாழ்க்கைத் தத்துவப்படி இது எப்படி நடந்தது எனப் பார்ப்போம். பணம் என்பது ஜடப்பொருள். அதனுள் அறிவு ஆழ்ந்து ஒளிந்துள்ளது. அது Frankன் அறிவிற்கு எட்டாது. Frankமீது அதிக நல்லெண்ணம் கொண்டவர் மிக். நல்லெண்ணம் ஆன்மீக ஒளியைத் தாங்கி வருவது. நல்லெண்ணத்தின் ஒளிமுன் துரோகம் செய்யும் எண்ணம் தப்பிக்க முடியாது. அதனால் மிக் கண்ணில் பட்டது. பெரிய டாக்டர் சாட்சி சொல்ல முன்வருகிறார். அவர் பிரபலமானவர். கடைசி நிமிஷத்தில் லஞ்சம் வாங்கிக்கொண்டு மறைந்துவிடுகிறார். டாக்டர் திறமை பெரியது. நாணயம் சிறியது. திறமை என்பது சக்தி, நாணயம் என்பது ஒளி. நாணயத்தைவிடத் திறமை அதிகமாக இருப்பதால் நாணயம் மறைகிறது. மறைந்த நாணயத்தை வெளிக்கொணரும் திறமை Frankன் நாணயத்திற்கு இல்லை. நாணயம் என்பது மனம். சொல்லப்போனால் ஆன்மா. திறமை என்பது வாழ்விற்குரிய சக்தி. ஒளிந்துள்ள ஒளி வெளியே வருவது பரிணாமம். நாட்டின் வாழ்வில் பொய் ஆட்சி செலுத்துவதால் டாக்டருடைய பொய்யிற்கு அது ஆதரவாக அமைந்தது.

வாழ்வின் பரிணாமத்தால் சக்தியும், ஜீவனும் ஒன்றுசேரவேண்டும். கதையில் Frankக்கிடம் ஜீவியம் தத்தளிப்பதைப் பார்க்கிறோம். நியூயார்க் ஹோட்டல் லாராவை Frank அறைந்தபிறகு அவர்க்குத் தெம்பு வருகிறது. அந்தத் தெம்புதான் நர்ஸ் உண்மை வாக்குமூலம் கொடுக்க உதவுகிறது. எதிரிக்கு ஆள் பலம், பண பலம், பக்கபலம் இருப்பது ஏராளம். அந்த பலத்திற்கு உதவியாக சட்டம் நர்ஸுடைய வாக்குமூலம் செல்லாது என்று சொல்கிறது. இந்த நேரம் ஜெயிப்பது வாழ்வின் பொய். அதற்கு உதவியானது சட்டம், ஜட்ஜ், பணம். Frankற்கு அவை எதுவும் இல்லை. ஆனால் துரோகம் செய்ய லாரா பக்கத்தில் இல்லை. அவருக்கு இருந்தது கொஞ்சம் பலம். நர்ஸின் வாக்குமூலத்தைக் கோர்ட் ஏற்காவிட்டாலும், ஓரளவு Frankற்குத் தெம்பு வருகிறது. இந்தத் தெம்பு சட்டத்திலோ, சமூக வாழ்விலோ செல்லாது. அதனால் அவருக்கு கேஸ் தோற்றுவிட்டது என்று தெரியும். ஆனாலும் அவர் மனம் உடையவில்லை. மனம் உடையவில்லை என்பது ஆன்மீக பலம். ஆன்மீக பலம் ஜெயிக்கும்வரை அவர் வேலை செய்யவேண்டும். அதனால் அவர் ஜுரிகளுடைய ஆத்மாவை விளித்து, "நியாயம் என்பது சட்டத்தில் இல்லை. தர்மம் என்பது எழுத்தில் இல்லை. நியாயமும், தர்மமும் நம் மனத்தில் உள்ளன. நாமே நியாயம், தர்மம். இதற்குமேல் வழக்காட என்னிடம் பணம் இல்லை. நாமே நியாயம், நாமே தர்மம். அதை நிலைநிறுத்தும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று பேசினார். சட்டத்தையும், வாழ்வையும் மீறி தர்மமும், நியாயமும் சட்டத்தின் வாயிலாகவே அவளுக்குத் தீர்ப்பு வழங்கின. அது finiteருந்து infinite வெளிப்படுவது ஆகும்.

குளம், ஏரி, கடல் ஆகியவற்றில் தண்ணீர் உள்ளது. தண்ணீருக்கு ஜீவன் உண்டு. ஆற்றில் ஓடும் தண்ணீருக்கு ஜீவன் குறைவு. தேங்கி உள்ள நீரில் பாசி படர்வதைப் பார்க்கிறோம். தாமரை மலர்கிறது. மீன் நடமாடுகிறது. கழனி என்ற சொல்ற்கு கழல் + நீர் என்று பெயர். கழல் என்றால் மீன். மீன் நிறைந்த நீர் என்று பெயர். நிலத்தில் தண்ணீர் தேங்கினால் அங்கு மீன் உற்பத்தியாகிறது. நீருக்கு ஜீவன் உண்டு. ஜீவரை ஆதரிக்கும் திறன் உண்டு. அதேபோல் காற்றிற்கு ஜீவன் உண்டு. ஒளிக்கு ஜீவன் உண்டு. ஒளி இல்லாமல் உயிர் வாழது. ஒளிக்கு உயிர் உண்டு. நெருப்பிற்கும் உயிர் உண்டு. அது உயிரை அழிப்பதை நாம் பார்க்கலாம். அரிசி, பருப்பு, உப்புக்கு நெருப்பு உயிர் கொடுத்து சாதமாக்குகிறது. அதேபோல் வாழ்விற்கும் உயிர் உண்டு. உயிர் உண்டு என்பதுடன், அதற்கு ரூபம் உண்டு, குணம் உண்டு. அதை நாம் சொரூபம், சுபாவம் என்கிறோம். வாழ்விற்கு தர்மம், நியாயம் கிடையாது. அது தர்ம, நியாயங்களைக் கடந்தது. தர்மத்தை ஆதரிப்பதுபோல், அது அதர்மத்தையும் ஆதரிக்கும். இதைப் புலவர்கள் வாழ்வின் வண்ணங்கள் என்கிறார்கள். அதை எதிர்க்க மனிதனால் முடியாது. அதை எதிர்த்தால் வாளாக மாறி நம்முடன் போர்த் தொடுக்கும். ஆத்மாவை அறிந்தவனை ஞானி என்பதுபோல், வாழ்வை அறிந்தவனை விவேகி என்கிறோம். உடலை அறிந்தவனை வைத்தியர் என்பர். ஜடத்தை அறிந்தவனை விஞ்ஞானி என்பர். இந்தக் கதையில் (Verdict) Frank உண்மைக்காக போராடி ஜெயிலுக்குப் போனார். உண்மை பேசமாட்டேன் என்று கூறி ஜெயிலைவிட்டு வெளி வந்தார். வாழ்வு அவரை ஆதரிக்கவில்லை. உண்மை பேசியவராயிற்றே என்று வேறு வக்கீல் officeகள் அவரைச் சேர்த்துக்கொள்ளவில்லை. நான்கு வருடத்தில் மூன்று கேஸ்கள் வந்தன. வாழ்வு அவருக்கு காட்டியது மது. அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றது. ஈவு, இரக்கம் இன்றி செயல்படுவதாக தோன்றுகிறது. நிலைமை சற்று மாறி கேஸ் ஜெயிக்கும்போல் தோன்றியபொழுது Frank பல இடங்களில் பொய்ச் சொல்கிறார். வாழ்வு அவர் சொல்ய பொய்களை எல்லாம் புறக்கணித்து அவருக்கு வெற்றியைத் தருகிறது. எந்த வாழ்வு அவருக்கு மதுவைக் காட்டியதோ, அதே வாழ்வு அவருக்கு வெற்றியை அளித்தது. அதனால் வாழ்வை சரி என்று சொல்லமுடியாது. தவறு என்றும் சொல்லமுடியாது. ஏன் இப்படி வாழ்வு நடக்கிறது என்று நாம் கேட்கலாம். நுனி மரத்தில் உட்கார்ந்து அடி மரத்தை வெட்டுபவனை நாம் மடையன் என்கிறோம். அவன் விழுந்து காலை உடைத்துக்கொண்டு கற்றுக்கொள்கிறான். தான் வேலை செய்யும் வக்கீல் office ஊழல்களை அம்பலப்படுத்தும் கடமை அவருக்கு இல்லை. அதை அம்பலப்படுத்தும் திறமையும் அவருக்கு இல்லை. கடமையும், திறமையும் இல்லாத இடத்தில் காரியம் செய்ய முயல்வது மடமை என்று அவர் அறியவில்லை. இந்தக் கேஸ் நடந்து வெற்றி பெற்றபிறகு எதிரி நம் சாட்சியை கலைப்பார், ஜட்ஜ் தவறானவரை ஆதரிப்பார், எதிரி வக்கீல் வேவு பார்ப்பார், என்றெல்லாம் அவர் தெரிந்துகொண்டார். அதாவது வக்கீல் தொழில் நேர்மையாக நடக்கவில்லை என்பது அவருக்குப் புரிகிறது. அது புரிந்தவுடன், அவருடைய கேஸ் இறங்குமுகமாக இருந்தது மாறி ஜெயிக்கும் பாதையில் போகிறது. மனிதனுக்கு அறிவு வர வாழ்க்கை மேற்கொள்ளும் பாதை இது. இதை நாம் புரிந்துகொள்ளாமல் “ஏன் இப்படி எனக்கு நடக்கிறது?” என்று கேட்காதவர்கள் இல்லை.

ஏற்கனவே இயலாமையிலுள்ள இரு சக்திகள் மோதி அதன் வழியே அன்பு பிறக்கிறது என்று நாம் கண்டோம். வேவு பார்க்கவந்த லாரா மனம் மாறி Frankமீது பிரியம்கொள்வது அப்படிப்பட்ட மாற்றம். ஒரு கோடி ரூபாயை ஏன் மறுத்தாய் என்று வாதி கோபப்பட்டு Frankஐ அடித்துவிட்டான். அடித்தவனுக்கும், அடிபட்டவனுக்கும் ஒரு கோடிக்குப் பதிலாக 3 கோடி வருகிறது. வாழ்க்கைத் தத்துவங்கள் கதையில் வெளிப்படாத இடங்கள் இல்லை. ஒரு வழக்கு என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ரிப்பேர் ஆன T.V.யை சரி செய்து திரும்ப வைக்கும்பொழுது, அது ஒரு சிறு காரியம். அதனுள் இவ்வளவு தத்துவங்களும் அடங்கி இருக்கின்றன. பார்வை கூர்மையானால் ஒன்றினுள் பல இருக்கும். சிறியதில் பெரியதைக் காண்பது ஞானதிருஷ்டி.

வாழ்வு என்பது ஒரு சக்தி. தண்ணீரிலுள்ள சக்தி உயிர் கொடுக்கும். நெருப்பிலுள்ள சக்தி அழிக்கும். மண்ணிலுள்ள சக்தி விதை, முட்டை வளர உதவும். அதுபோல் வாழ்விற்கு சக்தி உண்டு. இந்த சக்திக்கு சில குணங்கள் உண்டு. அவற்றுள் சில:

  1. ஒரு காரியம் நடந்தால், அது திரும்ப நடக்கும்.
     
  2. ஒரு காரியம் கூடிவந்தால், பல காரியங்கள் கூடிவரும்.
     
  3. வாழ்வின் அமைப்பைத் தொந்தரவு செய்தால் விபரீதமான விளைவு ஏற்படும்.
     
  4. வாழ்வு வளரும் முனைகளில் நாம் வாழ்வுடன் ஈடுபட்டால் வாய்ப்புகள் குவியும்.

 

1. திரும்பத் திரும்ப நடக்கும் என்பதைக் கவனிப்போம்.

1000 ஆண்டுகளுக்குமுன் கஜனி முகமது இந்தியாவின்மீது படை எடுத்தான். பலமுறை படை எடுத்தான். ஒவ்வொரு முறையும் தோற்றுவிட்டான். 17 முறை அவன் படை எடுத்தான். 1947ல் காஷ்மீர் இந்தியாவுடன் சேரும்பொழுது ஆப்கானிஸ்தானத்திலிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து காஷ்மீரின் தென் பகுதியை ஆக்ரமித்துக்கொண்டார்கள். 50 ஆண்டுகளாக இந்த ஆக்கிரமிப்பு தொடர்ந்தது. இந்த ஆக்கிரமிப்பை ஆராய்ச்சி செய்தவர்கள் இவர்கள் புறப்பட்ட இடத்தை கண்டுபிடித்தனர். அது கஜனிமுகமது பிறந்த இடம். கஜனி முகமது செய்த வேலை 1000 ஆண்டுகள் கழித்து திரும்பவும் வருகிறது. செயல்கள் பல தரப்பட்டவை. இன்று தேதி 18. ஆனால் நாளைய தேதி வேறு. ஒவ்வொரு நாளும் தேதி மாறும். அச்சாபீஸ் அச்சு கோர்த்து ஒரு பேப்பரைக் கொடுத்து அச்சிட்டால் அதில் நாம் எழுதிய விஷயம் அச்சாகும். அடுத்த பேப்பரைக் கொடுத்து அச்சிட்டால் அதே விஷயம் அச்சாகும். 1000 பேப்பர் ஆனாலும் விஷயம் மாறாது. காலம் ஓடுகிறது. அதனால் தேதி மாறுகிறது. காலத்திற்குச் சலனம் உண்டு. அதனால் மாற்றம் உண்டு. அச்சு கோர்ப்பது ஜடப்பொருள், அது மாறாது. செய்ததைத் திரும்பத் திரும்பச் செய்யும். பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் முதல் நாள் ஒருவன் ஆசிரியரிடம் ஏதோ காரணத்திற்காக அடி வாங்கினால், அடுத்த ஆண்டு பள்ளிக்கூடம் போகும்போது அதே பையனுக்கு ஆசிரியரிடம் அடி விழும். வசதியான வீட்டில் நல்ல சமையல் செய்துபோட தாயாரால் முடியவில்லை. பையன் திருமணம் செய்துகொண்டான். இனி நல்ல சாப்பாடு சாப்பிடலாம் என்று நினைத்தான். மனைவிக்குச் சமைக்கத் தெரியவில்லை. நல்ல சாப்பாடு கிடைக்கவில்லை என்பது தொடர்கிறது. திரும்பத் திரும்ப வருகிறது.

ஒரு செயல் செய்யப்பட்டால் அதற்குத் திரும்பத் திரும்ப வரும் குணம் உண்டு. Frank என்பவர் 21 வயது பெரும்பணக்காரர். அவர் மிக ஏழையான மேரி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார். குடும்பத்தில் அனைவரும் எதிர்க்கிறார்கள். தாயார், தகப்பனாருக்கு மட்டும் பெண்ணின் பூர்வோத்திரம் தெரியும். தாயாருக்குப் பெண் ஏழை என்பதில் ஆட்சேபணை. தகப்பனாருக்கு அது அவ்வளவு ஆட்சேபணை இல்லை. அவள் பிறப்பு தகப்பனார் மனதில் உறுத்துகிறது. பெண்ணின் தாயார் ஒரு கொத்தனாருடைய தங்கை. பேரழகி. அவ்வூரில் வேறொரு மிகப்பெரிய குடும்பம். பரம்பரையான பெரிய குடும்பம் என்றாலும் அவர்களுக்கு சொத்து எதுவும் இல்லை. அவர்கள் அண்ணன், தம்பி இருவர். அவ்விருவரில் அண்ணன் மேரியை மிகவும் விரும்புகிறார். திருமணம் செய்துகொள்வதாக வாக்குக் கொடுத்துப் பழகுகிறார்கள். பெண் கர்ப்பவதி ஆகிவிடுகிறாள். அவரால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை. பெண்ணின் அண்ணன் கொத்தனாருக்கு விஷயம் தெரியவருகிறது. குடித்துவிட்டுப் போய் அவனைக் கொலை செய்துவிடுகிறான். ஜெயிலுக்குப் போய்விடுகிறான். இறந்தவருடைய தம்பி டாக்டர். அவருக்கு அண்ணன் செய்த தவறு மனத்தை உறுத்துகிறது. அண்ணனைக் கொலை செய்தவருக்காக வழக்காடுகிறார். வழக்கு பல ஆண்டுகள் நடக்கிறது. அந்த ஊர் வியாபாரி அவளை மிகவும் விரும்பியவன். அவளை இப்போது திருமணம் செய்துகொள்ள முன்வருகிறான். ஆனால் அவள் வயிற்றில் பிறந்த குழந்தையை ஏற்க மறுக்கிறான். குழந்தை பிறக்கிறது. டாக்டர் குழந்தையை எடுத்து வளர்க்க சம்மதிக்கிறார். வியாபாரி திருமணம் செய்துகொண்டு அவளை அமெரிக்காவிற்கு அழைத்துக்கொண்டு செல்கிறான். பெண், டாக்டரிம் வளர்கிறாள். கொத்தனார் விடுதலையாகி, பிரபலமாகி, இரயில்வே கான்டிராக்டராகி, பெரும்பணம் சம்பாதித்துவிடுகிறார். கொத்தனாருடைய மகன் சிறு வயதிலேயே ஏராளமாக குடித்துப் பழகிவிடுகிறான். கொத்தனார் இறக்கும் தருவாயில் சொத்தை மகனுக்கு எழுதிவைக்கிறார். மகனுக்கு வாரிசு இல்லாவிட்டால் அந்த சொத்து, தன் தங்கையின் மகளை சேரவேண்டும் என்று எழுதிவைத்துவிடுகிறார். இதனிடையில் Frank மேரியை திருமணம் செய்துகொள்வதை உறுதிசெய்துவிட்டான். ஏழை என்பதால் தாயாரும், பிறப்பு சரியில்லை என்பதால் தகப்பனாரும் கதிகலங்கி நிற்கின்றனர். Frankன் தகப்பனாரின் முழு சொத்தும் கொத்தனாரிடம் அடகு வைக்கப்பட்டிருக்கிறது. கொத்தனார் மகன் சொத்தை ஏலம்போட விரும்புகிறான். கொத்தனார் மகனுக்கு டாக்டர் கார்டியன். டாக்டர் ஏலத்தைத் தடுக்கிறார். கொத்தனாரும், அவரைத் தொடர்ந்து மகனும் இறந்துவிடுகிறார்கள். அளவுகடந்த சொத்து மேரியை நாடி வருகிறது. Frank திருமணம் முடிகிறது.

அரபு நாட்டில் ஏராளமாக சம்பாதித்தவருடைய பெண் 30 வயதைக் கடந்தவள், அவளிடம் பெரிய சொத்து இருக்கிறது. Frankகினுடைய தாயார் மகனுக்கு 21 வயது என்றாலும் அந்தப் பெண்ணை பணத்திற்காக மகன் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார். பெண் Frankயைக் கேலி செய்து அனுப்பிவிடுகிறாள். Frankற்கு திருமணம் ஆனபிறகு Frankகினுடைய மனைவியும், அந்தப் பணக்கார பெண்ணும் அன்னியோன்யமாக நண்பர்களாகிவிடுகிறார்கள். டாக்டர் little மேரிக்காகத் திருமணம் செய்துகொள்ளவில்லை. 50 வயது கடந்தவர் இந்தப் பணக்கார பெண் 30 வயதைக் கடந்தவள். தனக்காக சித்தப்பா திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதால் மேரி முன்னின்று டாக்டருக்கு அந்தப் பணக்கார பெண்ணைத் திருமணம் முடிக்கிறாள். எப்படி மேரிக்கு எதிர்பாராத சொத்து வந்ததோ, அதே அளவு சொத்து எதிர்பாராமல் டாக்டருக்கு வருகிறது. நடந்தது திரும்ப நடக்கும்.

2. ஒரு காரியம் கூடிவந்தால் பல காரியங்கள் கூடிவரும்.

ஷேக்ஸ்பியருடைய கதையில் ஷைலக் பிரபலமான பாத்திரம். ஷைலக் வட்டிக்கடைக்காரன். அவனுடைய நேர் எதிரி அன்டோனியோ. அவனிடம் கடன் வாங்க வரும்போது தவணை தவறியதால் 1 பவுண்ட் தசை தரவேண்டும் என்று எழுதி வாங்கிக்கொள்கிறான். தவணை தவறிவிடுகிறது. ஷைலக் கோர்ட்டிற்குப் போகிறான். அன்டோனியோவுடைய வக்கீல் தசை தருவதாக ஒத்துக்கொள்கிறார். அனைவரும் திகைத்துப் போகின்றனர். வாதத்தை மாற்றி ஒரு சொட்டு ரத்தம் விழாமல் தசையை எடுத்துக்கொள் என்கிறார். வழக்குத் தலைகீழே மாறிவிடுகிறது. ஷைலக் கதிகலங்கி நிற்கிறான். அன்டோனியோவை கொலை செய்ய விரும்பியதால் ஷைலக்கினுடைய சொத்து பறிமுதல் செய்யப்படும் என்று ஜட்ஜ் தீர்ப்பு அளிக்கிறார். நிலைகுலைந்து ஷைலக் நிற்கும்போது, அவன் மகள் ஜெசிகா ஒரு இளைஞனுடன் ஓடிவிட்டாள் என்ற செய்தி வருகிறது. ஷைலக் யூதன். ஜெசிகாவுடன் ஓடிய இளைஞன் கிறுஸ்துவன். இருவரும் பரம வைரி. ஷைலக் கேஸ் தோற்றது, சொத்து பறிமுதல் ஆனது, மகள் வீட்டைவிட்டு ஓடியது, கிறுஸ்துவனை மணந்தது, அடுக்கடுக்காக நடந்தவையே நடந்ததாகும். அன்டோனியோ ஷைலக்கிடம் கடன் வாங்கியது தன் நண்பனுடைய திருமணத்திற்காக. திருமணம், ஒரு பெரிய பணக்கார அழகியினால் நடத்தப்படும் போட்டியினால் நிர்ணயிக்கப்படவேண்டியது. போட்டியில் வெற்றிபெற்று அவளைத் திருமணம் செய்துகொள்கிறான். அவளே வக்கீல் உடையில் வந்து அன்டோனியோவினுடைய உயிரைக் காப்பாற்றுகிறாள். கோர்ட்டிலிருந்து வெளியே வந்தவுடன் கடலில் மூழ்கிவிட்டது என்று கைவிட்ட அன்டோனியோவின் கப்பல் திரும்பிவந்துவிட்டதாகச் செய்தி வருகிறது. திருமணம், வழக்கில் ஜெயம், இழந்த சொத்து வந்தது, ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக நடந்தவை. ஒன்று நடந்தால், பல தொடர்ந்து நடக்கும்.

3. வாழ்வின் அமைப்பை தொந்தரவு செய்தால் விபரீதமான விளைவுகள் ஏற்படும்:

கடலில் கப்பல் போகும்போது தண்ணீரை ஆழ்ந்து விலக்குகிறது. கப்பல் நகர்ந்தவுடன் தண்ணீர் பழைய நிலைக்கு வந்துவிடுகிறது. இது தண்ணீருடைய குணம். தொட்டியில் நிரம்ப தண்ணீர் இருந்தால் நாம் குடத்தை அதில் போட்டுத் தண்ணீர் முகக்க முயன்றால் தண்ணீர் வடியும். வாழ்வு அதன்போக்கில் போய்க்கொண்டு இருக்கிறது. அதன் நல்லது, கெட்டது, உயர்ந்தது, தாழந்தது, ஒன்றுக்கொன்று ஈடுகட்டிக்கொள்கின்றன. அதில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் தன் நிலைக்கு வாழ்வு வரமுயலும்போது வாழ்வு சம்மந்தப்பட்ட அனைவரையும் ஒரு ஆட்டம் ஆட்டிவிடும். இது நல்லதாகவும் இருக்கும், கெட்டதாகவும் இருக்கும். நல்லது குறைவு, கெட்டது அதிகம். பருவம் மாறும்போது வெட்ப, தட்ப நிலைகள் மாறுகின்றன. வசந்தம் வரும்போது தாவரங்கள் மலர்கின்றன. மூன்றாவது ஜார்ஜ் மன்னன் 15 குழந்தைகளுக்கு தகப்பனார். அரச பரம்பரையில் இல்லாததுபோல் அவர் மனைவியைத் தவிர மற்றவர்களை நாடியது இல்லை. 3 ஆண்டு அவருக்குப் பைத்தியம் பிடித்துத் தெளிந்தது. சித்தப்பிரமை இருந்தாலும் அரண்மனை என்றும்போல் அரசரை மரியாதையுடன் நடத்தியது. அரசன் முழு குணமானவுடன் இராணி அவனிடம் “நீங்கள் மற்ற ஆண்களைப்போல பல பெண்களை நாடாததால் உங்களுக்கு இந்த சிரமம் வந்தது. மற்றவர்களைப்போல் நீங்களும் இருக்கவேண்டும்” என்று உபதேசம் செய்தாள். வழக்கத்திற்கு மாறாக இருந்தால், வழக்கதிற்கு மாறாக வாழ்க்கை இருக்கும். கடமையில்லாத சிறிய நல்லது செய்தவர்க்கு வாழ்க்கை அனுபவத்திலில்லாத பெரிய நல்லதை செய்துவிடும். வாழ்க்கை சிருஷ்டிக்கும் திறமை உடையது. மனித மனத்திலுள்ள நல்லெண்ணம் சிருஷ்டித் திறன் உடையது. ஒருவருடைய சிருஷ்டித்திறனால் தீண்டப்பட்ட வாழ்க்கை தன் சிருஷ்டித்திறனால் அதற்குப் பரிசு அளிக்கும். கேட்டதையே கொடுக்காத உலகம் உள்ள உண்மையை மறுக்கும். உலகம் கேட்காததையும் கேட்கத் தெரியாததையும் அன்னையை ஏற்றவர்க்கு கிடைக்கும்படி செய்கிறது. வாழ்வு ஒரு பேய். அது இருளால் நிரம்பியது. தவம் செய்பவர் வாழ்வைவிட்டு விலகவேண்டும் என்பது உலக வழக்கு. வாழ்வு ஒரு அமுதசுரபி, அமிர்த ஊற்று. நம்முள் ஊறும் அமிர்தத்தால் அது தீண்டப்பட்டால் தன் அமுதவாரியை அளிக்கும்.

4. வாழ்வு வளரும் முனைகளில் நாம் வாழ்வுடன் ஈடுபட்டால் வாய்ப்புகள் குவியும்:

மரம் பெரியதாக இருந்தாலும் கிளையில் சில இடங்களில்தான் துளிர் வருகிறது. அங்குதான் இலையும், பூவும், காயும், உற்பத்தியாகும். அடிமரம்தான் முழு மரத்தையும் தாங்குகிறது என்றாலும் அடிமரத்தில் துளிரோ, இலையோ, பூவோ, காயோ, பழமோ வாராது. அடிமரம், மரம் வளரும் முனை இல்லை. Gone with the Wind என்ற கதையில் ஸ்கார்லட் என்ற இளம்பெண்ணை பலர் மணக்க விரும்புகிறார்கள். அவள் ஆஷ்லி என்பவனை மணக்க விரும்புகிறாள். ஸ்கார்லட் பெரிய தனவந்தருடைய மகள். ஆஷ்லி, தனவந்தருடைய மகன். பட்லர் என்பவன் சாதாரண மனிதன், புதியதாக சம்பாதிக்க முயல்பவன். எல்லோரும் ஸ்கார்லட்டை மணக்க விரும்பினாலும் அவன், அவளை அதிதீவிரத்துடன் விரும்புகிறான். இவளின் குடும்பமும், ஆஷ்லியின் குடும்பமும் அன்று பெரும்செல்வந்தர்களாக இருந்தாலும், எதிர்காலம் அவர்களுக்கு உரியது அல்ல. விடுதலை பெற்ற நீக்ரோக்களுக்கும், தொழில் (Industry) செய்கின்ற இளைஞர்களுக்கும், வியாபாரம் செய்கின்றவர்களுக்கும் எதிர்காலம் உரியது. ஸ்கார்லட்டுடைய தகப்பனாரிடம் 10 நீக்ரோ அடிமைகள் வேலை செய்கிறார்கள். ஆஷ்லியின் தகப்பனாரும் அவர் போன்றவர். அவர்களுடைய காலம் முடிந்துவிட்டது என்று அவர்களுக்குத் தெரியாது. எவருக்கும் தெரியாத அந்த எதிர்கால உண்மை சிறு பெண்ணான ஸ்கார்லட்டிற்குத் தெரிய முடியாது. அவள் மனம் ஆஷ்லி மீது இருக்கிறது. ஆஷ்லிக்கு அவளிடம் எந்த விருப்பமும் இல்லை. அவன் வேறு ஒரு பெண்ணை (மெலோனி) திருமணம் செய்துகொள்கிறான். அவனுக்குப் போட்டியாக ஸ்கார்லட் சார்லஸ் என்பவனை திருமணம் செய்துகொள்கிறாள். நீக்ரோக்களுக்கு விடுதலை கொடுக்கவேண்டும் என்ற பிரச்சினையின்பேரில் உள்நாட்டுப் போர் மூள்கிறது. போரில் ஸ்கார்லட், ஆஷ்லியினுடைய எஸ்டேட்டுகள் கொளுத்தப்படுகின்றன. சார்லஸ், ஆஷ்லி ஊருக்குப் போனார்கள். சார்லஸ் போரில் இறந்து விடுகிறான். சேதமான எஸ்டேட்டை நடத்த ஸ்கார்லட் மிகவும் சிரமப்படுகிறாள். வரி கட்டும் நேரம் வருகிறது. பெரும்பணம் தேவைப்படுகிறது. அவளுக்குப் பணம் கிடைக்கவில்லை. பட்லர், இவளையே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறான். சார்லஸ் இறந்துபோனதால் இவளை மணக்கப் பட்லர் விரும்புகிறான். இவளுக்குப் பணம் தேவைபட்ட நேரம் பட்லர் ஜெயிலில் இருக்கிறான். அவனிடமும் போய் கேட்கிறாள். ஜெயிலில் இருப்பதால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வரி கட்டப் பணம் தேவைப்படுவதால் ஏற்கனவே தன்னை விரும்பிய ஒருவனை அவள் அவசரமாக திருமணம் செய்துகொள்கிறாள். அவன் ஒரு மர வியாபாரி. பெருமுயற்சி செய்து பட்லர் ஜெயிலிலிருந்து வெளிவருகிறான். முதல் காரியமாக இவளை தேடி வருகிறான். இவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்று பெரிதும் ஏமாற்றம் அடைகிறான். போர் நடக்கும் சமயத்தில் பலவிதமான வியாபாரம் செய்து ஏராளமாகச் சம்பாதித்துவிடுகிறான். ஸ்கார்லட் பலவிதமான கஷ்டங்களுக்கு ஆட்படுகிறாள். திரைமறைவிலிருந்து அவளுக்குப் பலவகையில் உதவி செய்கிறான் பட்லர். ஸ்கார்லட்டின் கணவன் நீக்ரோக்களை பழிவாங்கப்போய் அவனே பலியாகிறான். அவன் உடல் அடக்கத்திற்காக வீட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. கணவன் இறந்துபோய்விட்டதால் பட்லருக்கு ஸ்கார்லட்டை மணக்கும் வாய்ப்பு வருகிறது. கணவன் உடல் அடக்கம் செய்யப்படுமுன் அவளைச் சந்தித்து வற்புறுத்தி தன்னை மணக்கும்படிக் கேட்கிறான். அவள் சம்மதித்து மணக்கிறாள். அந்த நிமிஷத்திலிருந்து அவள் வாழ்வு என்றுமே இல்லாததுபோல் சிறப்பாக மலர்கிறது.

ஸ்கார்லட்டும், ஆஷ்லியும் பெரும் எஸ்டேட் முதலாளிகளாக இருந்தாலும், வாழ்வின் போக்கைவிட்டு விலகியவர்கள் அவர்கள். அந்தஸ்த்தில்லாத அனாதியான பட்லர் வளரும் முனை, எதிர்கால பிரதிநிதி. வாழ்வு மலரும் சக்தி அவனிடம் உள்ளது. பட்லர் பல ஆண்டுகள் அவளைப் பின்தொடர்ந்து வரும்போது அவள் பராமுகமாக இருக்கிறாள். அவள் மனதில் அவன் இல்லை. அவன் மனதில் அவள் மட்டுமே இருக்கிறாள். இரண்டு முறை விதவையானபின்னும் அவள் மனம் அவனை நாடவில்லை. சந்தர்ப்ப விசேஷத்தால் அவனை, அவள் ஏற்றுக்கொண்டவுடன், அவள் வாழ்வு அளவுகடந்து சிறப்படைகிறது. வளரும் முனைகளில் மட்டுமே வாழ்வு மலரும்.

நல்லவேளை என்பதை சுபமுகூர்த்தம் என்று சொல்கிறோம். இது காலத்தைப் பற்றியது. வாழ்வு காலத்தில் இயங்குகிறது. காலத்தினுடைய குணம் வாழ்விற்கு உண்டு. உலகத்தில் சிகரமாக விளங்குபவர்கள் நல்லவர்கள். நல்லவர்கள் நல்லதைச் செய்வார்கள். நல்லவர்கள் கையால் நல்லது நடக்கும். நல்லவர் ஒருவர் இருப்பதால் உலகத்திற்கு மழை பெய்யும். "நான் செய்வதை நல்லவர்கள் செய்யமாட்டார்கள்", இது காலத்தின் குணம். அதுவே வாழ்க்கையின் சுபாவம். நாயாகப் பிறந்தாலும் நல்லவேளையில் பிறக்கவேண்டும் என்பது பழமொழி. அதைச் சற்று மாற்றி மிருகமாக பிறந்தாலும் வசதியான நாட்டில் பிறக்கவேண்டும் என்று சொல்லலாம். "மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்" என்ற பாட்டு பக்தர்களுடைய மனநிலை. நம்மூரில் ஒரு நாளைக்கு கூலிக்காரனுக்கு 6 பைசா கூலி இருந்த நாளில், இங்கிலாந்தில் 40 பைசா கூலி இருந்தது. இங்கிலாந்து செழிப்பாக இருந்தது. அந்த நாளில் தாசில்தாராக இருப்பவர் ஒரு குட்டி ராஜா. அவருக்கு மாதம் 60 ரூபாய் சம்பளம். அதே சமயம் இங்கிலாந்தில் இராணுவத்திலிருந்த குதிரைகளுக்கு மாதம் 70 ரூபாய் செலவு செய்தார்கள். குதிரையாகப் பிறந்தாலும் இலண்டனில் பிறக்கவேண்டும்.

வாழ்க்கைக்குச் சில குணங்கள் உண்டு என்று நாம் சொல்லும்போது அவற்றில் ஒன்று நாம் பிறருக்கு செய்தது தவறாமல் நமக்கு வரும். எரின் என்ற பெண் ஒரு வக்கீல் ஆபீசில் குமாஸ்தாவாக வேலை செய்தாள். வக்கீலிடம் வந்த ஒரு கேஸை, வக்கீல், அதன் நுணுக்கத்தை அறிந்துகொள்ளாமல் அலட்சியமாக நடத்தினார். எரினுக்கு அந்த நுணுக்கம் புரிந்தவுடன் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்த அதனால் பாதிக்கப்பட்ட அனைவரையும் பார்த்து ஒரு யூனியன் வைத்து 320 மில்லியன் டாலர் அந்த கம்பெனியிலிருந்து நஷ்டஈடு பெறுகிறாள். இவளுக்கு மாசம் 2000 டாலர் சம்பளம். இவள் செய்த வேலைக்கு வக்கீலிடம் ஒரு மில்லியன் டாலர் கமிஷனாகக் கேட்டு இருந்தாள். அது, இவளுடைய மாத சம்பளத்தைப்போல் 500 மடங்கு. கேஸ் ஜெயித்தவுடன் வக்கீல் இவளுக்கு 2 மில்லியன் டாலர் கொடுக்கிறார். இப்படி அவள் பெற்ற போனஸ், அவள் சம்பளத்தைப்போல் 1000 மடங்கு. அவள் நாட்டில் பிரபலமாகி அவளுடைய வாழ்க்கையைப் படம்பிடித்தார்கள். அவள் ¾ மில்லியனுக்கு (7 இலட்சம் டாலருக்கு) ஒரு வீடு வாங்கினாள். வாங்கிய பிறகு, அந்த வீட்டில் பல இடங்களிலும் பாசி பிடித்து இருப்பதைக் கண்டாள். அந்த பாசி விஷமான பாசி. அதைச் சுத்தம் செய்வதற்கு அவள் ¾ மில்லியன் டாலர் செலவு செய்தாள். எரின் அவளுடைய கட்சிக்காரருடைய தண்ணீர் விஷமானது என்று பணம் வாங்கினாள். இவள் வீடு வாங்கும்பொழுது அதே பணத்தை விஷத்தை விலக்குவதற்கு செலவு செய்யும்படியாக இருந்தது. இது வாழ்விற்கு உள்ள குணம். அன்னையிடம் கெட்டது செய்யக்கூடாது. தெரியாமல் செய்துவிட்டால், உணர்ந்து மாறினால், கெட்டது செய்ததற்கு நல்ல பலன் வரும்.

விஜயலஷ்மி பண்டிட் இங்கிலாந்து பரம்பரையில் வீட்டிலேயே வெள்ளைக்கார ஆசிரியரிடம் பயின்றவர். இவர் உத்திரப்பிரதேசத்தில் முதல் மந்திரியாக இருந்தார். அமெரிக்காவில் அம்பாசிடராக இருந்தார். ஐ.நா.வில் ஜ.நா. தலைவராக இருந்தார். அதைவிடப் பெரிய பதவிகள் இல்லை. அவர் வீட்டிலேயே படித்ததால் கல்லூரிப் பட்டம் பெறவில்லை. கல்லூரிப் பட்டம் என்பது தோற்றம். படிப்புத் திறமை என்பது விஷயம். விஷயம் முழுவதும் இருந்தும் விஜயலஷ்மி பண்டிட்டிற்கு வெகுநாள்வரை தனக்குக் கல்லூரிப் பட்டம் இல்லை என்ற உணர்வு உண்டு. பட்டம் என்பது சமூகத்தில் நாம் ஏற்படுத்தியது. நாமே ஏற்பத்தியதற்கு நாம் நம்மைவிட அதிக மரியாதை தருகிறோம். பணம் நாமே ஏற்படுத்தியது. மனிதனுக்கு இல்லாத மரியாதை பணத்திற்கு உண்டு. பணம் என்பது மனித சக்திக்கு வாழ்வு கொடுத்த ரூபம். மனிதன் என்பது அதைப்போலவே வாழ்வு அளித்த ரூபம். நாம் ஏற்படுத்திய ரூபத்திற்கு நம்மைவிட மரியாதை உண்டு. இந்த மரியாதையைக் கொடுக்கும் திறமை வாழ்விற்கு உண்டு. ரூபத்திற்கு விஷயத்தைவிட அதிக மரியாதை தரும் திறமை வாழ்விற்கு உண்டு.

வாழ்வு காலத்தில் ஏற்பட்டது மனித வாழ்வின் காலம் என்பது வயது, ஆயுள். நம் நாட்டில் வயதானவர்களுக்கு என்றும் மரியாதை உண்டு. அது எல்லா நாட்டிலும் ஒரு காலத்தில் இருந்தது. இப்பொழுது குறைந்துவருகிறது. உலக யுத்தத்திற்குமுன் மாணவர்கள் அரசியலில் கலந்துகொள்ள ஆரம்பித்தார்கள். நாட்டின் தலைமை கொஞ்சம், கொஞ்சமாக இளைஞர்களிடம் வர ஆரம்பித்தது. ஹிப்பிகள் தலையெடுத்தபோது சமூகத்தின் தலைமை மாணவர்களிடம் வந்தது. இன்று அந்தத் தலைமை இளம் சிறுவர்களிடம் போகிறது. வயது என்பது அறிவு என உலகில் வழங்கியது. வயதானவன் என்றால் அறிவுடையவன் என்று பொருள். சர்ச்சில் ஸ்டாலினைச் சந்தித்தபோது தமக்கு 74 வயது என்று கூறினார். இதில் பெருமைப்பட ஒன்றும் இல்லை, எனக்கும் 70 வயதாகிறது என்றார் ஸ்டாலின். பொதுவாக எந்தக் கட்சியிலும் தலைவர் வயதானவர்களாக இருப்பார்கள். தலைவனைவிட வயதானவர்கள் தலைவனுக்குக் கட்டுப்படமாட்டார்கள். காந்திஜியின் தலைமையை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள் என்றால் அனைவரும் அவரைவிட வயதில் சிறியவர்கள். காந்திக்கு பிறகு நேரு தலைவரானது விதிவிலக்கு. ஸ்ரீ அரவிந்தரை சுற்றி இருந்தவர்களும் அவரைவிட வயதில் குறைவானவர்கள். ஆன்மீகத்தில் வயதிற்கு முக்கியம் இல்லை என்றாலும் அதுவே உண்மை. சர்ச்சிலுக்கு பிறப்பிலேயே தலைமைப் பதவி உண்டு என்றாலும் 69 வயது ஆகும்வரை அது அவருக்குக் கிடைக்கவில்லை. இந்திரா பிரதம மந்திரி ஆனபிறகு கொஞ்ச நாள் கழித்து கட்சி இரண்டாகப் பிரிந்தது. இந்திராவை விட்டுப்போன அனைவரும் அவரைவிட வயதில் பெரியவர்கள். வயதானவர்கள், வயது குறைவானவர்களுக்கு கட்டுப்படமாட்டார்கள். இது வாழ்விற்குரிய ஒரு அம்சம். Old is Gold, பழம்பெருமை என்பது வாழ்விற்குரிய ஒரு கருத்து. புதியது என்றால் வாழ்வு அதை எளிதில் ஏற்காது. டேங்க் வந்தபோது அதற்கு எதிர்ப்பு வந்தது. 54 சதுர மைலைப் பிடிக்க 84 மில்லியன் பவுன் செலவு செய்து 3 இலட்சம் பேர் இறந்தனர். டேங்க்கை இராணுவம் பயன்படுத்தியபிறகு 42 சதுர மைல் பிடிக்க 7 மில்லியன் பவுன் செலவு செய்து 10 ஆயிரம் பேர் இறந்தனர். இவ்வளவு பெரிய சௌகரியம் இருந்தபிறகும் ஆரம்பத்தில் டேங்க்கைப் பயன்படுத்த ஏராளமான எதிர்ப்பு இருந்தது. கப்பல்கள் பாய்மரத்தால் செலுத்தப்பட்டன. அப்போது ஒருவர் நீராவி இன்ஜினைப் பயன்படுத்தி ஒரு கப்பலைக் கட்டி சர்க்காரிடம் காண்பித்தார். மந்திரிகளும், அதிகாரிகளும் அதைப் பார்க்க மறுத்தனர். இரயில் முதல் வந்தபோது அதைப் பிசாசு என்று கல்லைவிட்டு எரிந்தனர். புதியதை வாழ்வு ஏற்க மறுக்கும். சத்தியாகிரஹத்தை மஹாத்மா கொண்டுவந்தபோது ஒருவர்கூட அவரை நம்பவில்லை. பலித்த பிறகு கொஞ்சம் பேர் ஆதரவு கொடுத்தனர். அன்னையும், அவருடைய சக்தியும் உலகத்திற்குப் புதியது என்பதால் உலகம் அவரை ஏற்கவில்லை. ஏற்றவர் அறியவில்லை. பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்று பழமொழி. பணம் வந்தபோது உலகம் அதை ஏற்கவில்லை, எதிர்ப்பு தெரிவித்தது. இது வாழ்விற்குரிய அம்சம். வயதானவர் தலைமையை ஏற்கும் உலகம் மாறி இளைஞர்கள் தலைமையை ஏற்கவேண்டும், சிறுவர்கள் தலைமையை ஏற்கவேண்டும் என்பது கசப்பான விஷயம். முறை என்பது வாழ்க்கை அறியாதது. வாழ்க்கையின் சக்திகள் பல திசைகளிலும் வரும். வாழ்க்கை முன்னேறுவது முறையானால்தான் (organisation). எந்த நாட்டிலும் மத குருமார்கள் முறையான வாழ்க்கையை நடத்துபவர்கள். அவர்களே கல்வியிலும், பண்பிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். ஐரோப்பாவில் போப் ஆண்டவர் எல்லா நாடுகளையும் வெகு காலம் ஆண்டார். சர்ச் வாழ்க்கை, முறைப்படுத்தப்பட்டது என்பதால் அந்த முறைக்கு வாழ்வு கட்டுப்பட்டது, நாடு கட்டுப்படுகிறது. புரோகிதர் ஒரு முறையைப் பின்பற்றுகிறார். எந்த புரோகிதரும் மந்திரம் சொல்ல ஆரம்பித்தபோது தான் எதையும் மறந்துவிட்டேன் என்று சொல்லமாட்டார். அந்த பயிற்சி எல்லா புரோகிதர்களுக்கும் உண்டு. அது முறையின் சக்தி. முறை குறைந்தால் மந்திரம் பலிக்காது. அந்தளவு முறை அவர் பயின்றதனால், கல்வியிலும், பண்பிலும், அறிவிலும் அவர்கள் என்றும் முன்னோடியாக இருந்தனர். கம்பெனி என்று ஆரம்பித்த காலத்தில் வாழ்க்கையில் முறை என்பது வெகு குறைவு. கிழக்கிந்திய கம்பெனி இலண்டனில் ஆரம்பித்த காலத்தில் அது மிகச்சிறிய கம்பெனி. ஆனால் அவர்களுடைய முதல் 72 ஆயிரம் பவுண்ட். கம்பெனி சிறியதாக இருந்தாலும் முறை என்பது இருந்ததால் அன்றைய இங்கிலாந்து சர்க்காரின் வருமானத்தில் இந்த மூலதனம் 1/3 பகுதி. அந்த மூலதனமே இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை நிலைநிறுத்தியது. முறைக்கு அளவுகடந்து சக்தி உண்டு 1/3, ஒரு பங்கு பணம் முறையைப் பயன்படுத்தி இங்கிலாந்து தன்னைப்போல் 20, 30 மடங்கு பெரிய நாட்டை அடிமைப்படுத்திவிட்டது. அமெரிக்காவை முன்னேற்ற முயன்றபோது மக்கள் பெரும்கூட்டமாக இருந்தனர். முறைப்படுத்தப்பட்ட கம்பெனிகள் குறைவு. அப்படி இரண்டு கம்பெனிகளுக்கு சர்க்கார் 10 இலட்சம் ஏக்கரை இனாமாகக் கொடுத்தது. இலட்சக்கணக்கான மக்கள் ஆயிரக்கணக்கான இராணுவத்தை எதிர்க்கமுடியாது. ஏனெனில் இராணுவத்திற்கு முறை உண்டு. பணம் இந்த முறையின்கீழ் வந்துவட்டதால் இன்று பணம் உலகை ஆள்கிறது. பணம் தன்னைத்தானே பெருக்கிக்கொள்ளும் சக்தியும் பெற்றுவிட்டது. வாழ்வு ஜீவியத்தால் முன்னேறுகிறது என்றும், ஜீவியம் முறையால் முன்னேறுகிறது என்றும் பகவான் கூறுகிறார். வாழ்வை முன்னேற்றும் ஜீவியத்தை முன்னேற்றும் திறமை உடையது முறை. அன்னையை அறிந்தவர்கள் இதன் பலனைப் பெறுகிறார்களே தவிர இந்த முறையை அன்னையிடம் இருந்து பெறுவது இல்லை. பிறப்பிலேயே இதைப் பெற்றவர் உண்டு. முறை மனத்தில் தெளிவாகக் காணப்படும் (mental clarity). அவர்கள் அன்னையிடமிருந்து எதையும் முழுமையாகப் பெறமுடியும். அவ்வளவு பெரும் அம்சம் உள்ளவர்களுக்கு அதற்கு நேர் எதிரானதின்மேல் விருப்பம் இருக்கும். அவர்களுக்கு கதிமோட்சம் இல்லை. அன்னையிடமிருந்து அனைத்தையும் பெற அவர்கள் எதையும் செய்யவேண்டியது இல்லை. சத்தியத்தைப் பூரணமாக ஏற்றுக்கொண்டால்போதும். தூய்மை அவர்களைத் துலங்க வைக்கும். அவர்கள் கேளாமல் அனைத்தையும் பெறலாம். பொய், தீயசக்திகள், தரித்திரமான அம்சம், மந்தமான குணம், இவற்றைவிட்டு அவர்களே விலகவேண்டும்.

மிரட்டினால் பயப்படுவார்கள் என்பது உண்டு. அதனால் வலுவானவர்கள் ஏமாந்தவனை விரட்டுவார்கள். Pride and Prejudice என்ற கதையில் எலிசபெத் பியானோ வாசிக்கிறாள். வில்லியம் அருகில் உட்கார்ந்து இருக்கிறான். டார்சி சற்று தூரத்தில் அமர்ந்து இருக்கிறான். அவளையே பார்த்தபடி இருக்கிறான். என்னையே உற்றுப்பார்த்தால் என்ன அர்த்தம் என்று அவள் வில்லியத்தைக் கேட்கிறாள். அதைக் கேட்டவுடன் அவன் எழுந்து அவள் எதிரில் வந்து நிற்கிறான். அருகில் வந்து என்னை மிரட்டலாம் என்று நினைத்தீர்களா? என் சுபாவம் சற்று மாறுபட்டது. ஆபத்து அதிகமானால் எனக்குத் தைரியம் அதிகமாகும் என்று கூறுகிறாள். வாழ்வில் ஆபத்து பயத்தைத் தரும். ஆனால் தைரியமானவர்களுக்கு ஆபத்து தைரியத்தை வளர்க்கும். இது வாழ்வு செயல்படும் வகை. உலகப்போர் நடக்கும்பொழுது ஹிட்லர் இலண்டன்மீது குண்டு மாரி பொழிந்தான். இலண்டன் மக்கள் அதற்காகப் பயப்படக் கூடாது என்று ஒரு முடிவு எடுத்தனர். குண்டு போடும் விமானம் வந்தால், சங்கு ஊதும், மக்கள் பூமிக்கு அடியில் போய் ஒளிந்துகொள்வார்கள். எந்த நேரம் ஆபத்து வரும் என்று தெரியாது. 500 விமானமும் ஒரே சமயத்தில் வந்து குண்டு மாரி பொழிந்தது உண்டு. அதனால் இலண்டன் மாநகரில் வாழ்க்கைப் பாதிக்கப்படவில்லை, என்றும் போல் நடந்தது. வீதியில் என்றும் போல் மக்கள் உலவினர். சினிமா தியேட்டர்கள் நிரம்பி இருந்தன. ஹோட்டல்களில் கூட்டம் குறையவில்லை. மக்கள் தைரியமாக இருந்தனர். தைரியம் என்பது ஆன்ம விழிப்பு. ஏராளமான குண்டுகள் விழும்போது சாக்கடைகள் உடைப்பட்டு அடைப்பட்டன. அதனால் குடிநீர் பாதிக்கப்படும். எல்லாவிதமான வியாதியும் வரும். இதை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று சர்ச்சில் கவலையில் மூழ்கி இருந்தார். வழக்கத்திற்கு மாறாக இலண்டன் மக்களுடைய ஆரோக்யம் ஓரளவு சிறய்பாகவே இருந்தது. ஏனெனில் அவர்களுடைய தைரியம் ஆன்ம விழிப்பைக் கொடுத்துவிட்டது. ஆன்ம விழிப்பு ஏற்பட்டால் உடல் நலம் பெருகும். வாழ்க்கைக்கு ஒரு சட்டம் உண்டு. ஆன்மா விழித்தால் சட்டம் எதிராச் செயல்படும். இது வாழ்க்கையின் சுபாவம். ஆன்மீக சுபாவம் என்றும் கூறலாம். வாழ்க்கை கண்மூடித்தனமாகவும் இருக்கும். அளவுகடந்தும் கண்மூடித்தனமாக இருக்கும். சைனாவில் குத்துச்சண்டை (boxing) பிரபலமானது. அவர்கள் அதில் வல்லுனர். தங்களை எவரும் குத்துச் சண்டையில் வெல்லமுடியாது என்று அவர்களுக்குத் தெரியும். எவ்வளவு உடல் நலம் சிறப்பாக இருந்தாலும் துப்பாக்கிக் குண்டிற்குமுன் மனித உடல் என்ன செய்யும்? எதிரி படையில் அனைவரும் துப்பாக்கி எடுத்து வரும்போது குத்துச்சண்டை போடுபவர்கள் வெறுங்கையுடன் அவர்களை எதிர்த்தார்கள். குத்துச்சண்டை போடுபவர்கள் தங்களைத் துப்பாக்கி குண்டு பாதிக்காது என்று நம்பினார்கள். அது மூடநம்பிக்கை. துப்பாக்கிக்குண்டு பக்கத்திலேயே சென்றாலும் மேலேபடாமல் இருப்பது உண்டு. துப்பாக்கிக்குண்டு சரமாறியாக பொழியும் போர்முனையில் நெப்போலியன் நடந்து செல்வான். அவன்மீது அந்த குண்டு பட்டது இல்லை. அது எப்படி என்று கேட்டவர்களுக்கு ஆண்டவன் தன்னை ஒரு காரியத்திற்காக அனுப்பி இருக்கிறார். அந்த காரியம் முடியும்வரை என்மீது குண்டு படாது என்று அவன் சொல்வான். சர்ச்சில் மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு போர்முனையில் சென்று வேலை செய்தார். அவர் இருந்த இடங்களில் அவர் அருகே குண்டு விழுவது உண்டு. ஒரு சமயம் அவர் தோள்பட்டைக்கு அருகாமையில் அரை அடி தூரத்தில் குண்டு பறந்தது. ஒரு முறையும் குண்டு அவரைப் பாதித்தது இல்லை. ஹிட்லரை அவருடைய சேனாதிபதிகள் கைது செய்யப் பலமுறை திட்டமிட்டனர். ஒவ்வொரு முறையும் எதிர்பாராதவிதமாக ஹிட்லர் அவரைச் சந்திக்கும்போது சற்றுநேரம் முன்னதாகவே அங்கு வந்துவிடுவார். தெய்வம் தன்னைக் காப்பாற்றும் என்பது ஹிட்லருடைய நம்பிக்கை. தெய்வம் வாழ்வுமூலம் செயல்படுகிறது. இது வாழ்வினுடைய குணம், இது வாழ்வினுடைய சுபாவம், இது வாழ்வினுடைய இராசி.

வாழ்க்கைக்கு நியாயம் என்பது கிடையாது. நாம் அறிந்த நியாயம் நல்லவர்களுக்கு உதவவேண்டும், கெட்டவர்களை ஆதரிக்கக்கூடாது. வாழ்க்கைக்கு தர்மம் உண்டு, நியாயம் கிடையாது. அது நம்முடைய தர்மமாக இருக்காது. வாழ்க்கையினுடைய தர்மமாக இருக்கும். நிலைமை மாறினால் தர்மம் எதிராக இருக்கும். பயந்தவர்களுக்கு உதவுவது தர்மம். வாழ்க்கை பயந்தவர்களை மிரட்டும், தைரியசாலியை ஆதரிக்கும். பயத்திலிருந்து தைரியத்திற்கு மாறும்போது பெரிய தைரியசாலிக்கு தைரியம் ஊற்றாக எழும். தன்னை மீறி செயல்படுபவன் செயலற்றுப் போவான்.

இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்கா பிரிட்டனுக்கு ஆதரவாக போரில் சென்றது. ஜெர்மனி ஆயிரக்கணக்கான விமானங்களை வைத்து இருக்கிறான். இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இல்லை, எப்படிப் போரிடுவது? இந்தச் சூழ்நிலையை கதையாக அமைத்து படம் எடுத்து இருக்கிறார்கள். நிலைமை மோசமாக இருப்பதால் விமானிகள் இனி தங்களால் முடியாது என்ற முடீவிற்கு வந்துவிட்டனர். அவர்களுடைய தலைவன் ஆதரித்து அனுதாபப்படுகிறான். இது ஆபத்தான நிலைமை. இனி விமானிகளால் முடியாது என்று தலைவனே கூறும்போது மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றும் இல்லை. தலைவனுக்கு மேலதிகாரி பெயர் சாவேஜ். அவனுக்கும் மேல் உள்ளவர்தான் முடிவான அதிகாரி, அவர் சேனாதிபதி. தலைவர் பெயர் கீத். அவர் சாவேஜிடம் விமானிகளை இதற்குமேல் கட்டாயப்படுத்த முடியாது என்று கூறிவருகிறார். அவர் நேரடியாக சேனாதிபதியிடமே பேசுகிறார். சேனாதிபதி, கீத் சொல்வது சரியில்லை என்று வாதாடுகிறார். கீத் அசையவில்லை. "நான் என் விமானிகளை விட்டுக்கொடுக்க முடியாது'' என்று கூறுகிறார். சேனாதிபதி கீத்தை பதவியிலிருந்து விலக்கி அவரிடத்தில் சாவேஜை நியமிக்கிறார். உன்னால் இது முடியுமா என்று கேட்கிறார். "உன்னால் இது முடியுமா?'' என்று கேட்கிறார். சாவேஜ் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு விமானிகளிடம் வீராவேசமாகப் பேசுகிறார். எவரும் தம்முடைய முடிவிலிருந்து அசையவில்லை. விமானிகளில் பிஷப் என்று ஒருவரைமட்டும் நம்பலாம் என்று சாவேஜ் நினைக்கிறார். அதனால் பிஷப்பிற்குச் சொல்லிஅனுப்புகிறார். பிஷப்பை உற்சாகப்படுத்த முயல்கிறார். சாவேஜ் பேசிமுடித்தவுடன், "நான் நீங்கள் கூப்பிட்டு அனுப்பியதற்காக வரவில்லை. விமானிகளின் பிரதிநிதியாக வந்து இருக்கிறேன்'' என்று பிஷப் கூறுகிறார். விமானிகள் அனைவரும் வேறு பட்டாளத்திற்கு மாற்றவேண்டும் என்று கேட்கிறார்கள் என்று பிஷப் கூறுகிறார். சாவேஜிற்கு ஏமாற்றமாக இருக்கிறது. எந்த ஒரு மனிதனை நம்பினாரோ அவன் எதிராகப் பேசுகிறான். சாவேஜ் பிஷப்பை நோக்கி மற்றவர்கள் இருக்கட்டும், உன் அபிப்பிராயம் என்ன? என்கிறார். பிஷப், தானும் மாற்றலாகிப் போகவேண்டும் என்று நினைப்பதாகக் கூறுகிறார். சாவேஜ் வீராவேசமாக அவனிடம் பேசுகிறார். ஒரு இலாக்காவில் இருந்து மற்றொரு இலாக்காவிற்கு மாற்றலாகலாம். கடமைகளிலிருந்து மாற்றலாகலாமா என்று கேட்கிறார். பிஷப் பிடிகொடுக்காமல் எழுந்துபோகிறார். அதன்பிறகு, மேஜர் ஒருவரிடமும், இராணுவ கேப்டனிடமும், இன்னொரு விமானியிடமும், டாக்டரிடமும், நடந்தவை சாவேஜிற்கு நம்பிக்கையை இழக்கச்செய்கின்றன. முடிவாக அவர் இனி தன்னால் முடியாது என திரும்பிப்போக தன் பெட்டியை அடுக்கிக்கொண்டு இருக்கும்பொழுது மேஜர் வந்து பிஷப் மனம் மாறியதாகக் கூறுகிறார். அதிலிருந்து விஷயங்கள் ஒவ்வொன்றாக மாற ஆரம்பிக்கின்றன. ஒரு விமானியை சாவேஜ் கண்டித்துத் தண்டிக்கிறார். தண்டித்தவர் அந்த விமானத்திற்கு தானே தலைவராகப் போகிறார். நிலைமை முற்றிலும் மாறிவிடுகிறது. இவருடைய டிரைவர், இவர் ஆபீஸ் மானேஜர் வயதானவர். சட்டத்தை மீறி திருட்டுத்தனமாக விமானத்தில் புகுந்து எதிரியை நாசப்படுத்தினர். சட்டத்தை மீறியதற்கு தண்டிப்பதற்குப் பதிலாக, சாவேஜ் அவர்களுக்குப் பரிசு கொடுக்கும்படியாக முடிகிறது. இந்த நேரம் எல்லா ஜெர்மன் factoryகளுக்கும் மையமான பாக்டரியைக் கண்டுபிடித்துவிட்டனர். அதை அழித்துவிட்டால் ஜெர்மன் படை நிலைகுலையும். இருப்பது 20 விமானம். இதைப் பகல் எடுத்துப்போவது ஆபத்து, எதிரி படை 20 விமானங்களும் இலக்கை அடையும்முன் சுட்டுவீழ்த்தும் நிலையில் இருக்கிறது. எண்ணிக்கையை நம்பமுடியாது, தைரியத்தை நம்பலாம், தேசபக்தியை நம்பலாம், பொறுப்பை நம்பலாம், வீராவேசத்தை நம்பலாம். இந்த நிலையில் சாவேஜ் அந்த 20 விமானங்களுக்கு தானே தலைவனாக புறப்படுகிறார். நிலைமையை மீறி நெறியாக இருக்கவேண்டுமானால் உடல் ஒத்துழைக்காது. ஷாக் வந்து அவர் சிலையாக உட்கார்ந்து இருக்கிறார். 20 விமானங்களும் அவர் இல்லாமலே புறப்பட்டுப் போயின. பிஷப்பினுடைய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இலக்கு சுக்குநூறாகச் சிதரடிக்கப்பட்டது. 19 விமானங்கள் திரும்பிவந்துவிட்டன என்ற செய்தி வர ஆரம்பித்தபிறகு சாவேஜ், ஷாக்கிலிருந்து விடுபட்டார். அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஜெயித்துவிட்டன.

பயந்தவனை வாழ்க்கை மிரட்டும், நசுக்கும், அழிக்கும். தைரியசாலியை ஆதரிக்கும், வெற்றி தரும், வீரத்தை உற்பத்திபண்ணும். அவனுக்கும் ஒரு எல்லை உண்டு. எல்லையை மீறினால் மனிதன் செயலற்றுப் போவான். செயலற்ற நிலையிலும் மனத்தில் உண்மை இருந்தால் பூரண வெற்றியும், பூரண உடல் நலமும் திரும்பிவரும் என்பது இக்கதையிலிருந்து நாம் காண்பது. சாவேஜ் அன்பராக இருந்து இருந்தால் உயிரைவிட்டு ஜீவன் மலர்ந்து பெறலாம்.

வாழ்க்கையில் காலத்தின் அம்சம்:

ஜோஸ்யர், ஜாதகனுக்கு உரிய தேதி, கிழமை ஆகியவற்றை சொல்வார். அதற்கடிப்படையான தத்துவம் என்னவென்றால், பிறந்த தேதி, நட்சத்திரம், கிழமை, ஜாதகனுக்கு நல்லது. அது மீண்டும் வரும்போது அவனுக்கு நல்லது நடக்கும். அது அடுத்த ஜென்மத்திலும் தொடரும். பகவான், ஆகஸ்ட் 15 பிறந்த தினம். முன் ஜென்மத்தில் அவர் நெப்போலியனாக இருந்தபோது நெப்போலியன் பிறந்த தினம் ஆகஸ்ட் 15. உலகப்போர் அவர் நடத்தியது. ஜப்பான், ஆகஸ்ட் 15ஆம் தேதி சரண் அடைந்தது. இந்திய சுதந்திரம், அவர் பெற்றுக்கொடுத்தது, ஆகஸ்ட் 15ஆம் தேதி வந்தது. டிசம்பர் 5ஆம் தேதி பகவான் உடலை நீத்தார். நெப்போலியன் பிரான்ஸில் சக்கரவர்த்தியாகி, பெல்ஜியம், ஹாலண்ட், ஆகிய நாடுகளைப் பிடித்தான். ஸ்பெயின், போர்ச்சுகல்ல் அவன் ஆட்சியை நிலைநிறுத்தினான். ஆஸ்த்திரிய சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்தினான். ஜெர்மனி அவனுடைய ஆட்சிக்கு வந்தது. போலந்தை வென்றான். தன் சாம்ராஜ்ஜியத்தை கிழக்கில் விரிவுபடுத்த ரஷ்யாவின்மீது போர் தொடுத்தான். மாஸ்க்கோவை வென்றான். அதற்குமேல் கிழக்கே போக குளிர் இடம் கொடுக்கவில்லை. சாம்ராஜ்யம் அவனது உடல். ஐந்து இலட்சம் சிப்பாய்களோடு போனவன், 10 ஆயிரம் பேரோடு திரும்பினான். அவன் தன் உடல் போன்ற சாம்ராஜ்ஜியத்தை விட்ட தேதி டிசம்பர் 5ஆம் தேதி. தேதிகள், கிழமைகள், நேரங்கள், நிகழ்ச்சிகள், எண்ணங்கள், சொற்கள், இவற்றிற்கு வாழ்வு உயிர் கொடுக்கும் தன்மை உடையது.

நேரு பிரதமராக இருந்தபொழுது சமஸ்தானங்களுக்கு உரிய இலாக்கா பட்டேலிடம் இருந்தது. சமஸ்தானங்களுடைய எண்ணிக்கை 565. 564 சமஸ்தானங்களை பட்டேல் இந்தியாவுடன் சேர்த்தார். காஷ்மீரை மட்டும் பட்டேலிடமிருந்து நேரு வாங்கிவிட்டார். அது பட்டேலுடைய உரிமையை அவர் பறித்தது ஆகும். பட்டேலுடைய உரிமையை அவர் பறித்ததால் இந்தியாவின் உரிமையை பாக்கிஸ்தான் பறித்தது. செயல் மீண்டும் வரும்.

உலகப்போர் மூண்டவுடன் காங்கிரஸ் பிரிட்டனுக்கு அனுதாபம் தெரிவித்தது. ஹிட்லர் இராட்சசன், ஏகாதிபத்ய கொள்ளை உடையவன், பிற்போக்குவாதி, மதவெறியன், தான் தூய்மையான ஆர்ய வம்சத்தை சேர்ந்தவன் என்பது அவன் அபிப்பிராயம். 60 இலட்சம் யூதர்களைக் கொலை செய்ய factory கட்டிக் கொலை செய்தான். அவன் உலகை ஆளத் திட்டமிட்டான். ஐரோப்பாவைப் பிடித்துவிட்டான். அவனுடன் ஜப்பான் சேர்ந்து வந்தது. இத்தாலியும் சேர்ந்து வந்தது. ஐரோப்பாவில் எல்லா நாடுகளும் சரண் அடைந்துவிட்டன. ஆரம்பத்தில் ரஷ்யாவும் அவனுக்கு ஆதரவாக இருந்தது. அந்த நாளில் ஐரோப்பா என்பது உலகம். உலகமே அவன் பக்கம் இருந்தது. அமெரிக்கா 3000 மைல் தள்ளி இருந்தது. முதல் யுத்தத்தில் அமெரிக்கா கலந்துகொள்ளவில்லை. போருக்கு ஆயுதங்கள் சப்ளை செய்து இலாபம் பெற்றது அமெரிக்காவின் பங்கு. அமெரிக்கா இரண்டாம் யுத்தத்தில் கலந்துகொள்ள விரும்பவில்லை. ஏராளமான ஆயுதங்களை நேச நாடுகளுக்குச் சப்ளை செய்து அமெரிக்க தொழில் வளர்ந்தது. அமெரிக்கா போரில் பங்குகொள்ளாமல் போரைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. ஹிட்லருக்கு எதிராக, தனியாக நிற்பது பிரிட்டன் மட்டுமே. பிரிட்டன் கதிகலங்கி நிற்கிறது. அந்த நேரம் உலகத்திற்கே உரிய பெரிய நேரம். காங்கிரஸ் போராட்டத்தை ஆரம்பித்தது. உலக சுதந்திரத்திற்கு இந்தியா செய்த துரோகம் அது. சுதந்திரத்தைக் காக்கப் போரிடும் ஒரே நாடான பிரிட்டனை அது தத்தளிக்கும்போது புறமுதுகில் குத்தியது. அது மன்னிக்கமுடியாத குற்றம். ஐந்து ஆண்டு கழித்து இந்தியாவிற்கு சுதந்திரம் வரும்போது பாக்கிஸ்தான் இந்தியாவை புறமுதுகில் குத்தி துரோகம் செய்தது. செய்த காரியம் திரும்ப வரும்.

பெனிடிக்ட் என்பவர் ஒரு குதிரை வாங்க வாஷிங்டன்னிற்கு வருகிறார். அது விலை உயர்ந்த குதிரை, 10,000 டாலர் பெறுமானமானது. வாங்கவந்த இடத்தில் அவனுடைய எஸ்டேட் 6 இலட்சம் ஏக்கர் என்று தெரிந்தவுடன் குதிரை விற்பவர் மகள், அவன்மீது ஆசைப்பட்டு அவனை மணக்கிறாள். அவள் ஒரு எஸ்டேட் முதலாளியின் மகளாக இருந்தாலும், நகர்புறத்தைச் சேர்ந்தவள், நாகரீகமானவள். இவன் டெக்ஸாஸ் என்ற மாநிலத்தில் பிறந்து மாடு வளர்ப்பவன். அவனை கௌபாய், cow boy என்று சொல்வார்கள். நமது பாஷையில் அவனை இடையன் என்போம். திருமணமாகி கணவர் வீட்டிற்கு வந்தவுடன் நாகரிகம் இல்லாத இடம் என்று புரிந்துகொண்டாள். மீண்டும் அவனை விட்டுவிட்டு தகப்பனாரிடம் போகப் பிரியப்படுகிறாள். போனவள் மனம் மாறி கணவனிடம் வருகிறாள். அவனுக்கும், அவளுக்கும் பழக்கவழக்கங்கள் நேர் எதிரானவை. பிணக்கு மனதிலும், செயலிலும் ஆயிரம் இடங்களில் வெளிப்படுகின்றன. பைனிடிக்ட்டிற்குத் தன் மாட்டுப்பட்டியில் பெருமை அதிகம். தானும், தனக்குமுன் தகப்பனாரும், அதற்குமுன் பாட்டனாரும் நிர்வாகம் செய்த பட்டியை மகன் பெருமையுடன் நடத்துவான் என்று எதிர்பார்க்கிறான். மகன் டாக்டருக்கு படிக்கிறான். டாக்டருக்குப் படித்தாலும் மகன் பட்டியை நிர்வாகம் செய்வான் என்று தகப்பனார் எதிர்பார்க்கிறார். மகனுக்கு அங்கு இருக்க இஷ்டம் இல்லை. தாயார், மகன் கட்சி. அடுத்த மகன் மெக்ஸிகோவில் பிறந்த பெண்ணை மணக்கிறான். மாட்டுப்பட்டியை சேர்ந்தவர்கள் அவனை நீக்ரோபோல் ஒதுக்குகிறார்கள். பெனிடிக்டிற்கு டிரைவராக இருந்தவன் அவர் சகோதரியிடமிருந்து கொஞ்சம் நிலம் இனாமாகப் பெறுகிறான். அந்த நிலத்தில் பெட்ரோல் கிடைத்து, பணக்காரன் ஆகிறான். பெனிடிக்ட்டும், அவனும் பரம வைரிகள் ஆகின்றனர். டிரைவர் ஏராளமாகச் சொத்து சேர்த்து சொந்தமாக ஏர்போர்ட் கட்டுகிறான். பெனிடிக்ட்டின் மகள் டிரைவரைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்புகிறாள். அதற்கும் தாயார் ஆதரவு. பெனிடிக்ட் வாழ்ந்த வாழ்வு வேறு. அவன் மக்கள் வாழும் வாழ்வு வேறு. இது வாழ்வினுடைய பாதை. மனிதன் வாழ்வை அறிவது இல்லை. அறியாத மனிதனுக்கு வரவேண்டிய அறிவு அவன் மக்களுக்கு வரும். விவரம் தெரியாமல் பெற்றோர் மக்களை அனுசரித்து ஆதரித்தால் பிள்ளைகள், பெற்றோருக்கு நேர் எதிராகச் செயல்படுவார்கள். வாழ்வை அறியமுடியாத மக்களுக்கு வாழ்வு அறிவு புகட்டும் முறை இது.

முன்னேரும் உலகத்தைப் பின்பற்றும் மக்கள், முன்னேற முடியாத பெற்றோர்களுக்கு எதிராக இருப்பார்கள். இதற்கு எதிரானதும் உண்டு. பெற்றோர் அன்னையை ஏற்று முன்னேற்றப் பாதையில் சென்றால் பிள்ளைகள் பழைய வாழ்வை ஏற்றுப் பிற்போக்காக இருப்பார்கள். பழைய வாழ்க்கைக்கும், லாயக்கில்லாதவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட அன்னை பக்தர்களுக்கு எது முறை என்பது கேள்வி. மக்களைத் தான் பெற்று எடுத்த பிள்ளைகளாகக் கருதினால் பெற்றோரின் ஆதரவு பிள்ளைகள் அன்னையை ஏற்பதைத் தடுக்கும். மக்களை அன்னையின் குழந்தைகளாகக் கருதினால் அவர்கள் பொய்யிலிருந்து விடுபட்டு அன்னையின் மெய்யை நாட வழி உண்டு. அன்னையின் சத்தியத்தை பிள்ளைகள் நாடவேண்டுமானால் பெற்றோரின் சத்தியம் பூரணமாக இருக்கவேண்டும். பிள்ளைப்பாசம் மாறி அன்னை பக்தி எழுவது முறை. பிள்ளைப்பாசம் என்ற உருவத்தில் பெற்றோர் பழைய வாழ்வையும், அதன் பொய்யையும் வலுவாகப் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். பென்டிக்ட் வாழ்வில் நடந்ததுபோல் பாசத்தை விடமுடியாத பெற்றோர்களைப் பிள்ளைகள் அறவே மறந்து அதிக தூரம் போய் விலகுவது வாழ்வு பரம்பரையாக ஏற்றுக்கொண்ட பாதை. வாழ்வின் பாதையை மக்கள் அறிவது இல்லை. அனேகமாக எவரும் அறிவது இல்லை. நெருக்கடி எழுந்தால் பாதை புரியும். மக்களுக்கு வாழ்வு தன் பாதையை புரியவைக்க பல்வேறு உபாயங்களைக் கடைபிடிக்கும். அவற்றுள் தலைசிறந்தது காதல் திருமணம். அடிமட்டமானது மது, போதை மருந்தால் தன்னை அழித்துக்கொள்வது. இவற்றிடையே உள்ள நிலைகள் பல. அவை நம்மை வாழ்வில் எதிர்கொள்ளா நேரம் வந்தால் நெருக்கடி எழும். நெருக்கடி எழுந்தபோது பிள்ளைகளும், பெற்றோரும் எதிர்க்கட்சியில் இருப்பார்கள். எதிர்கட்சி என்பது பெற்றவர்க்கும், பிள்ளைக்கும் உண்டானது அல்ல. வாழ்வை அறிந்து மாறுபவர்கள், வாழ்வை அறிய மறுப்பவர்கள் என்று இரு கட்சியாகும். இந்த மாறுதல்கள் என்றால் என்ன? கரும்பு உலகத்தில் எல்லோரும் பயிரிடுவது. யாரும் ஒரு கிராமத்தில் கரும்பு பயிரிடாவிட்டால் ஒருவர் பயிரிடப் பிரியப்பட்டால் அவர் அனைவருக்கும் எதிரியாகிவிடுவார். தகப்பனார் முதல் தலைமுறையில் படித்தவர் என்றால் குழந்தையை வாய்விட்டுப் படிக்கச் சொல்வார். வாய்விட்டுப் படிப்பது முதல் தலைமுறையில் படித்தவர்களுக்கு உள்ள பழக்கம். அடுத்த தலைமுறையில் மௌனமாகப் படிப்பார்கள். இது பிரச்சினையாகி சண்டை வரும். வாழ்க்கையின் பாதைகள் ஆயிரம். ஒரு பாதையில் போகின்றவர்களுக்கு அடுத்த பாதையில் போகின்றவர்கள் ஒத்துவாராது. பாதைகள் ஆயிரமானாலும், அத்தனையும் பிற்போக்குப் பாதையாக இருக்கும். அவற்றில் சில முற்போக்குப் பாதையாக இருந்தால் உலகமே அவர்களை எதிர்க்கும், அழிக்கும். அது குடும்பத்திற்குள்ளும் வரும். அதிர்ஷ்டம் இல்லாதவருக்கு அருள் வந்தால் எதிர்ப்பு அவருள்ளே இருக்கும். அவரே தன்னை அழித்துக்கொள்வார். தன்னை அழிக்கும் முறைகளை நாடுவார். எவர் தம்மை நிச்சயமாக அழிப்பாரோ, அவரை விரும்பி நாடி ஆதரிப்பார். எவரால் தமக்கு முன்னேற்றம் உண்டோ, அவரை வந்து ஒதுக்குவார். சாவித்திரியில் ஒரு வரி. We make of our enemies our guests. நம் எதிரியை நாம் வருந்தி அழைக்கிறோம் என்று ஒரு வரி உண்டு.

நெருக்கடி என்பது மனிதனை இந்தக் கட்டத்திற்கு கொண்டுவருவது. இந்த கட்டத்திற்கு வந்த மனிதன், இடது பக்கம் திரும்பி இருளைப் பார்க்கலாம், அல்லது வலது பக்கம் திரும்பி அருளைப் பார்க்கலாம். அது அவன் இஷ்டம். அருளைப் பார்ப்பவன் அன்னைக்கு உகந்தவன், உலகத்திற்கு வேண்டாதவன், உற்றாருக்கு எதிரி, உடையவர் அழிக்க முயல்வர். அருள் வந்தபிறகு இருளைப் பார்ப்பவன் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், நியாயமாகப் பேசமாட்டான். அர்த்தமில்லாமல் உளருவான், அபாண்டமான பொய்யை அனுதினமும் சொல்வான், அப்படிப் பொய் சொல்பவர்களை நம்புவான். அதற்குச் சிறந்த உதாரணங்கள் உள்ளன. அமெரிக்காவில் படிக்காதவர் இல்லை. அந்த நாட்டின் படிப்பு உயர்ந்த படிப்பு. உலகத்து விஷயங்களை உடனே அறிபவர். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா இரஷ்யாவுடன் சேர்ந்து ஹிட்லரை எதிர்த்தனர். போர் முடிந்தபிறகு அமெரிக்காவும், இரஷ்யாவும் எதிரிகளாகிவிட்டனர். ஒரு சர்வேயில் 100க்கு 50 பேர் அமெரிக்கா, இரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டது என்று சொன்னார்கள். ஹிட்லர் 60 இலட்சம் யூதர்களை பாக்ட்டரி வைத்து கொலை செய்தான் என்பது உலகம் அறிந்தது. அப்படி நடக்கவில்லை என்பது இன்று ஒரு கட்சி. அது அறிஞர்கள் நிறைந்த கட்சி. அதை நிரூபிப்பதற்காக பெரிய ஆராய்ச்சி நடக்கிறது.

வாழ்க்கைக்கு பல அம்சங்கள் உண்டு என்பதுபோல் ஏராளமான சிறப்புகள் உண்டு. அவற்றுள் சிலவற்றைத்தான் நாம் அறிவோம். இன்ஷுரன்ஸ், அவற்றுள் தலைசிறந்தது. ஒருவருக்கு வந்த கஷ்டத்தை உலகம் உவந்து ஏற்பது இன்ஷுரன்ஸ். சமீபத்தில் ஐரோப்பாவில் சிடி பஸ் இனாமாக விடவேண்டும் என்று ஒரு பிரச்சினை எழுந்தது. அது உலகத்தில் 7வது பணக்கார நாடு. எவ்வளவு பணக்கார நாடாக இருந்தாலும், பஸ்ஸில் இனாமாக போகலாம் என்றவுடன் பிரயாணிகளின் எண்ணிக்கை 8 மடங்கு உயர்ந்தது. இந்த சோதனைக்குப்பிறகு இனாமாக பஸ் ஓட்டவேண்டும் என்றால் நாட்டில் தலைக்கு 15 டாலர் வரி என்று கணக்கிட்டனர். சிறிய தொகையை வரியாகக் கட்டினால் 8 மடங்கு பிரயாணம் எல்லோருக்கும் இனாமாகும். மனம் இருளை நோக்கிப் போகாமல் அருளை நோக்கிப் போனால் வாழ்வு அட்சயபாத்திரமாகும்.

நாடு எதுவானாலும், நம்பிக்கை ஒன்று. 100 ஆண்டுகளுக்குமுன் விதவைகளை ஒதுக்கி வைத்தோம். மேல்நாட்டில் விதவையானால் நம் நாட்டைப்போலவே ஒரு ஆண்டு கறுப்பு உடை உடுக்கவேண்டும். விசேஷங்களில் கலந்துகொள்ளக்கூடாது. ஓராண்டு திருமணம் செய்துகொள்ளக் கூடாது. நாடு மாறலாம், மனம் எல்லா இடங்களிலும் ஒன்று. நம்பிக்கை மனத்திற்கு உரியது, நம்பிக்கை மாறாது.

கடலூரில் தாமோதரன் என்பவர் முக்கியஸ்தர். அவரைத் தெரியாதவர்கள் இல்லை. ஒரு அமெரிக்கர் அவரைச் சந்திக்கவேண்டி இருந்தது. ஊரில் வேறொரு பகுதியிலிருந்து, தாமோதரனைப் போனில் கூப்பிட்டார். அவர் வீட்டிற்கு வழி என்ன? என்று கேட்டார். வாழ்க்கையின் இரகசியங்கள் பல. அனுபவப்பட்டவர்களுக்கு அது தெரியும். தாமோதரன் ஓரளவு விபரம் தெரிந்த மனிதன். ஊருக்குப் புதிய அமெரிக்கருக்கு வழி சொல்வது சிரமம். தமிழ் தெரியாத அமெரிக்கர் இங்கிலீஷ் தெரியாத அவருடைய டிரைவருக்கு விளக்கவேண்டும். ஒரு க்ஷணம் யோசனை செய்து உங்கள் டிரைவர் உள்ளூர்க்காரரா, வெளியூர்க்காரரா என்று கேட்டார். உள்ளூர்க்காரர் என்று சொன்னவுடன் அவருக்கு என் வீடு தெரியும் என்றார். இது ஒரு சிறு நிகழ்ச்சி. வாழ்வின் சூட்சுமம் வெளிப்படும் இடம். வாழ்வின் சட்டங்களில் ஒன்று உதவி செய்தவனை எதிரியாகக் கருதுவது. சதாம் ஹுசேன் குவைத்தை பிடித்தபின் அமெரிக்காவின் தலைமையில் உலகம் ஒன்றுசேர்ந்து பெரும்போரை ஆரம்பித்து குவைத்தை விடுதலை செய்தனர். விடுதலை செய்த அமெரிக்கர்களுக்கு குவைத் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது. இன்று குவைத் மக்கள் அமெரிக்காவை முதல் எதிரியாகக் கருதுகிறார்கள். உதவி செய்தால் உபத்திரவம் வரும் என்பது பழமொழி.

ஒரு எலக்ட்டிரிக் டிப்பார்ட்மெண்ட் சூப்பர்வைசர் மின்சார கம்பத்திலிருந்து விழுந்து மூக்கு உடைந்து தரையில் விழுந்துவிட்டது. அதை மீண்டும் வைத்துத் தைத்துவிட்டார்கள். முகம் விகாரமாக ஆகிவிட்டது. அவர் மனைவிக்கு அது பெரிய விஷயம். யாராவது அவர் மூக்கைப் பற்றி கேட்டால் அவர் கோபித்துக்கொள்வார். அதிருந்து கணவருடைய உடல்நலம் பற்றிய விஷயங்களில் அவர் வெகு உஷாராக இருப்பார். ஒரு சமயம் அவர் மனைவி பரபரப்பாகப் பதட்டத்துடன் இருந்தார். எல்லா விஷயங்களிலும் கலகலப்பாக இருக்கும் அந்தப் பெண் கணவனின் உடல்நலம் விஷயத்தில் இரகசியமாகவும், பதட்டமாகவும் இருப்பார். இவருடைய பதட்டம் அக்கம்பக்கத்திலுள்ளவர்களுக்கு ஏதோ அவர்களுக்கு பேரிடி விழுந்துவிட்டது என்பதைத் தெரிவித்தது. அனைவரும் விஷயம் என்ன? என்று தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். முடிந்தால் உதவ ஆசைப்படுகின்றனர். அவரோ அந்த பேச்சை எடுக்க அனுமதிக்கவில்லை. அவர் வீட்டிற்கு எதிரே இருந்த வயதான பெண் அவளிடம் நெருங்கி அந்தரங்கமாகப் பேசினாள். சூப்பர்வைசர் மனைவி நெகிழ்ந்துபோய் "ஓ"வென்று அழுது, "அவர் உயிர்க்கு ஆபத்து வந்துவிட்டது. ஹாஸ்பிடலுக்குப் போகவேண்டும்'' என்றார். ஆப்பரேஷன் செய்யவேண்டும் என்றார். வாயினுள் பெரிய கொப்பளம் இருப்பதாகவும், அதை ஆப்பரேஷன் செய்ய சென்னைக்குப் போவதாகவும் சொன்னாள். கேட்டவருக்கு விபரம் புரிந்துவிட்டது. இதை நம்மவர்கள் அட்சரம் என்று சொல்வார்கள், அது வேர்க்குருபோல. அதில் எந்த ஆபத்தும் இல்லை. விபரத்தைச் சரியாக தெரிந்துகொண்டு, அவருடைய கணவனுக்கு எந்த ஆபத்தும் இல்லை, இது எளிமையான விஷயம் என்று ஆறுதல் கூறி அப்பெண்ணைத் தேற்றி அட்சரத்தைப் பார்க்க விரும்பினார். ஒருவாராக அவர் வாயைத் திறந்து காண்பித்தார். அது அட்சரம். இது எங்களுக்கெல்லாம் வருவது உண்டு. முருங்கப்பட்டை சாற்றை வாயில் வைத்துக்கொண்டால் கொப்பளம் அமுங்கிவிடும் என்று கூறினார். இரண்டு நாட்களில் அவர்களின் பிரச்சினை தீர்ந்தது. வாழ்க்கை பூதமாக மாறி பயமுறுத்தும். அதற்குரிய மந்திரத்தைச் சொன்னால் க்ஷணத்தில் மறைந்து போகும். இந்த இரண்டு அம்சமும் வாழ்க்கைக்கு உண்டு.

தனக்குள்ள திறமையைக் கருதாதவரை அனைவரும் திறமைசாலி என்று போற்றுவர். திறமை ஏராளமான பேருக்கு உண்டு. உலகம் சில பேருடைய திறமையைத்தான் ஏற்றுக்கொள்ளும். சில பேருடைய திறமையை இல்லை என்று பேசும். சிலர் திறமையைப் போற்றும். மற்றவர் திறமையைப் பாராட்டும். தன் திறமையை தான் கருதினால் பிறர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். பேரழகியாக உள்ளவர் தன் அழகை நினைக்காவிட்டால் உலகம் அவர் அழகைப் பாராட்டும். எவ்வளவு அழகு உண்மையாக இருந்தாலும் தான் அழகி என்பவருடைய அழகை உலகம் நேரடியாகப் பாராட்டாது. ஒரே விஷயம் பலவகையாகப் பலிக்கும். என்னுடைய திறமையை எவரும் பாராட்டுவது இல்லை என்பவர் அறியவேண்டியது என்னவென்றால் அவர் தன் பெருமையைப் பாராட்டுவதால் உலகம் பாராட்டவில்லை என்பதாகும்.

ஒரு பிரபலமான ஆங்கில நாவல் ஒரு சிறு பெண் தாயார், தகப்பனார் இல்லாமல் இரு வயதான பெண்களின் பாதுகாப்பில் இருக்கிறாள். எது பெரிய சொத்து என்று இங்கிலாந்தில் கருதப்படுமோ அந்தத் தொகை அவளுக்கு ஆண்டு வருமானமாக வருகிறது. அவள் அர்த்தமற்ற பெண். பிரதம மந்திரியாக இருந்தவருடைய தம்பி மகன் பேரழகன். அவனுக்கு சொத்து இல்லை. ஆனால் சீட்டாட்டத்திலும், அதுபோன்ற மற்ற விஷயத்திலும் ஏராளமாகச் செலவு செய்யக் கற்றுக்கொண்டான். அதிக வட்டிக்கு ஏராளமாகக் கடன் வாங்கிவிட்டான். அவன் நல்லவன், ஆனால் கெட்ட பழக்கம் உள்ள நல்லவன். அவன் பெயர் பர்கோ. இவள் பெயர் கிளன்கோரா. அவளுக்கு அவன்மீது அளவுகடந்த காதல். இவளுடைய கார்டியன்கள், "உன் சொத்தை எல்லாம் அவன் வெகுசீக்கிரம் அழித்துவிடுவான். அதன்பின் உன்னை அடிப்பான்" என்று கூறி அவளைத் தடுக்க முயல்கின்றனர். காதன் வேகம் உச்சகட்டத்தில் உள்ள நேரம் பெண் தவிக்கிறாள். "என் சொத்தை அவன் செலவு செய்தால், நான் சந்தோஷப்படுவேன். அவன் என்னை அடித்தால், நான் ஆனந்தப்படுவேன். என்னை இன்னொருவர் முத்தமிடுவதைவிட, பர்கோவின் பூட்ஸ் என்னை முத்தமிட ஆசைப்படுகிறேன்" என்றாள். அரசனுக்குச் சமமான சொத்துடைய பிரபு ஒருவர் உண்டு. அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவருடைய சொத்துக்கு வாரிசாக அவருடைய தம்பி மகன் நியமிக்கப்பட்டு உள்ளான். அவன் பிற்காலத்தில் பிரதம மந்திரியானான். அவன் பெயர் பாலீசர் (Pallisar). அவனை இவள் திருமணம் செய்துகொள்ள ஏற்பாடாகிறது. கிளன்கோராவையும், பாலீசரையும் சந்திக்க ஏற்பாடு செய்கிறார்கள். இவள் அவனிடம் நான் வேறொருவனை காதலிக்கிறேன் என்று கூறுகிறாள். தனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை என்று பாலீசர் கூறுகிறான். திருமணம் ஆகிறது. திருமணம் ஆனபின் பர்கோ அவளை கடத்திச் செல்ல முயல்கிறான். ஒரு முறை பாலீசர் அவர் வீட்டைவிட்டு வந்தபோது, பர்கோ அவரை வழியில் சந்தித்து உன் மனைவி வீட்டில் இருக்கிறாளா என்று கேட்கிறான். போய் வீட்டில் விசாரித்துப் பார் என்று பாலீசர் மேலே சென்றுவிடுகிறான். அவன் உள்ளே போய் அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு ஓடிவிடலாம் என்று கூறுகிறான். அவனோடு ஓடிப்போக அவள் உடல் துடிக்கிறது, மறுத்துவிடுகிறாள். அவன் போனபிறகு ஓடிப்போகவில்லை என்று வருத்தப்படுகிறாள். மூன்று முறை அவனைவிட்டு ஓட அவள் முயன்றாள். சந்தர்ப்பமும், மனமும் ஓத்துவரவில்லை என்பதால் தவறிவிடுகிறது. கணவரிடம் தான் ஓடிப்போக முயன்றதை கூறுகிறாள். அவன் திடுக்கிட்டுப் போகிறான். ஒரு மாற்றம் வேண்டும் என்று சுவிஸ்சர்லேண்டிற்கு அழைத்துப் போகிறான். அங்கே அவள் பர்கோவை சந்திக்கிறாள். கையிலிருந்த காசெல்லாம் பர்கோ சூதாட்டத்தில் விட்டுவிட்டு நிர்க்கதியாக நிற்கிறான். அவளைப் போய்ப் பார்த்து, பணம் கொடுக்கும்படி, மனைவி, கணவனை வற்புறுத்துகிறாள். கணவனும் அதைச் செய்கிறான். பர்கோ பணம் வாங்க மறுத்துவிடுகிறான். அத்துடன் கணவனும், மனைவியும் இங்கிலாந்து திரும்பிவிடுகிறார்கள்.

கணவனுக்கும், மனைவிக்கும், அரசனுக்குச் சமமான சொத்து உண்ட. சொத்திற்கு இராசி உண்டு. நல்ல முறையில் சம்பாதித்த சொத்து கெட்டது நடப்பதைத் தடுக்கும். கிளன்கோரா அறிவில்லாமல் பிடிவாதமாக தன்னை அழித்துக்கொள்ளப் பெருமுயற்சி செய்தும், பல முறை முயன்றும், அவளால் தன் வாழ்க்கைக்குத் தீங்கு செய்ய முடியவில்லை. அது சொத்தினுடைய இராசியின் அம்சம். அது வாழ்வின் அம்சம்.



book | by Dr. Radut