Skip to Content

09 . பாகம் - 9

  1. அன்னையின் முறைகள் அனைத்தும் அற்புதப் பலன் பெற சுருக்கு வழி. உயர்ந்த நிலையிலிருந்து தாழ்ந்த நிலையில் செயல்படுவதால் இது நடக்கிறது.
     
  2. தெரிந்த விஷயம் முக்கியமான காரியத்தில் தெளிவாகும் பொழுது அதை மனம் அதிகமாக ஏற்றுக்கொள்கிறது. முதலில் அறிந்தது அறிவு; இப்பொழுது அறிவது உணர்வு.
     
  3. அருளின் அறிவை அதிகப்படுத்துவது என்ற முறையை அன்னை பின்பற்றினார். மாற விருப்பப்படாதவரின் பிரச்சினையைத் தீர்க்க அப்படிச் செய்தார். அவருக்கு அம்முறை பலித்தது.
     
  4. பிரச்சினையும், தீர்வும் ஒரே நிலையிலிருக்கும் வரை, இந்தச் சட்டம் பயன்படும். அடுத்த நிலைக்கு, சக்தி போய் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய நேரம் இது பலிக்காது.
     
  5. .ஒவ்வொரு காலத்தையும் (era) குறிப்பிடும் கருத்து, பண்பு, நோக்கம், பரவலான பழக்கம், கொள்கை, ஒரு பொழுதுபோக்கு, ஒரு கேலி, அல்லது ஒரு சரக்கு ஏற்படுகிறது. எல்லா அம்சங்களிலும் ஒரு காலம் தெளிவாகவும், குறிப்பாகவும் வெளிப்படும்.
     
  6. அடுத்த காலத்திற்குரிய ஒரு சின்னத்தை அறிந்தால், அதை முன்னமே கொண்டுவர முடியும்.
     
  7. குறித்த நேரத்தில் செயல்படுவது ஒருவர் திறமையை அதிகப்படுத்தும். நேரத்தைப் பற்றிக் கவலைப்படாத இடங்களில் குறித்த நேரத்தில் செயல்பட்டால், அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும்.
     
  8. பகவானுடைய யுகத்திற்குரிய சின்னங்கள், சைத்தியம், அகந்தையழிதல், ரஸா, அன்பு, மௌனத்தின் சக்தி, உரிமையில்லாதது, கடமையில்லாதது, சட்டமில்லாதது, அந்தஸ்தில்லாததாகும்.
     
  9. அது போன்ற எதிர்காலப் பண்பு யாரென்று தெரியாமல் செயல்படுவதாகும். எந்தச் சரக்கு நம்மிடம் இருந்தால் நாம் யாரென வெளியில் தெரிய முடியாதோ, அதுவே பகவான், அன்னை யுகத்திற்குரிய சின்னம்.
     
  10. பொற்காலத்தை அழைக்கும் சரக்கு எல்லா நிலைகளிலும் - உடல், மனம் - அக்காலத்திற்குரிய ஆன்மீகப் பண்பை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்.
     
  11. சுய நலமும், அகந்தையும் ஒன்று போன்றவை. சுயநலம் ஒரு நோக்கம், அகந்தை ஒரு சக்தி.
     
  12. அகந்தை அழிந்தால் நாம் சிருஷ்டியின் ஆன்மாவை அடைகிறோம். அறியாமை தெய்வ மனத்தில் எழுகிறது. அகந்தை இயற்கையின் சக்தி. அறியாமை, அறிவு தன்னுள் தானே மறைவதால் எழுவது.
     
  13. ஆசையில்லாதவன் ஜீவனற்றவனில்லை.

    உயர்ந்த நிலையில் உயிரோட்டமுள்ளவன்.
     
  14. பொய் தொடர்ந்து உன்னை நாடினால், அது உன்னுள் உள்ள பொய்யின் பிரதிபலிப்பாகும் அல்லது உயர்ந்த சத்தியத்திற்கு நீ உரியவனாவாய்.
     
  15. எந்நிலைக்குரிய முறையும், முன்னிலையில் சுருக்கு வழியாகும். நிலைகளின் வேறுபாடு அதிகமானால், சுருக்கம் அதிகம்.
     
  16. தாழ்ந்தவர் உயர்ந்தவரைக் கேலிசெய்வது, தாழ்ந்தது உயர, உயர்ந்ததோடு கொள்ளும் முதல் தொடர்பு.
     
  17. உயிராகத் தேடும் பொருளைக் கிடைக்கும் நேரத்தில் "மறுக்கும்” குணம் மனிதனுக்குண்டு. பிறருடன் தானும் ஒன்றே என்ற இயல்பான உணர்வும், கிராக்கி மனப்பான்மையும் முரண்படுவதால் ஏற்படும் விளைவு இது.
     
  18. வல்லுநர்கள் மட்டும் ஒரு காலத்தில் அறிவது அடுத்த தலைமுறையில் அனைவருக்கும் தெரிகிறது. ஒரு சமுதாயத்தின் நாகரீக வளர்ச்சிக்கு அஃது அறிகுறி.
     
  19. இதே சட்டப்படி ஒரு காலத்து ஆன்மீகப் பண்புகள் அடுத்த தலைமுறையில் சமூகப் பண்புகளாக மாறுவது சமுதாயத்தின் பண்பின் நிலையைக் காட்டும்.
     
  20. முரடனின் இனிமை புண்படும் சொல்லாக வெளிவரும்.
     
  21. விவரமறியாத நல்லவனின் உணர்வுகள் அறிவிலியின் வெள்ளை மனதாகும்.
     
  22. அனுபவமற்றவருடைய திறமை அசம்பாவிதமாக வெளிப்படும்.
     
  23. கசப்பான வெறுப்புள்ளதால் ஈர்க்கப்படாதது பற்றற்ற நிலை.
     
  24. அதிர்ஷ்டம் வரும் பொழுது சூழலை உயர்த்தி, நல்ல சகுனம் தெரிகிறது. அடுத்தாற்போல் ஒரு வாய்ப்பைக் கொணரும் அல்லது இழந்த சந்தர்ப்பத்திற்கு உயிரளிக்கும். சரியான முறைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தின் மூலம் அது செயல்படும். அல்லது அது போன்ற சந்தர்ப்பமில்லாவிட்டால் அதைச் சரிக்கட்ட முனையும். பலனைத் தரும். அடுத்தபடியாக மனிதன் வக்கிரமாக இருந்தால் அவனுக்கு அனுபவம் இல்லாத துறை அல்லது தெரியாத வழி மூலம் பெறக் கட்டாயப்படுத்தும்.
     
  25. தீய சக்திகள் செயல்பட்டால், அவை சூழலைத் தாழ்த்தும், வாய்ப்பைக் கெடுக்கும், சந்தர்ப்பத்தைக் கலைக்கும், மனிதனை வக்கிரமாக்கும். அல்லது அவனை "அறிவுடன்" நடக்கச் சொல்லும்.
     
  26. ஆன்மீக சக்தி வெளிப்பட்டு, தன்னை முறைப்படுத்திக் கொண்டு, பரிணாமத்தை ஆதரிக்கும் அல்லது நம்முள் முன்னேற்றத்தை வளர்க்கும். அவை புறத்தில் சூழலாக வெளிப்படும்.
     
  27. அத்தகைய சூழல் பலன் தருவது அதிர்ஷ்டம்.மனிதன் ஒத்துழைத்தும் அது நடப்பதுண்டு, ஒத்துழைக்காமலும் நடப்பதுண்டு.
     
  28. அதிர்ஷ்டம் எல்லா நிலைகளுக்கும் உண்டு: ஜடம், உணர்வு, மனம், ஆன்மீகம், சத்தியஜீவியம்.
     
  29. ஒவ்வொரு நிலை அதிர்ஷ்டத்திற்கும் வேறு பெயருண்டு.ஜடத்தில் அது அதிர்ஷ்டமாகும். உணர்வில் புகழாகும். மனதில் ஞானோதயமாகும். ஆன்மாவில் அருள் எனப்படும். சத்தியஜீவியத்தில் அதைப் பரிணாமம் என்போம்.
     
  30. பக்குவத்தால் அருளைப் பெறும் திறன் பழைய பழக்கங்களை விட்டு புதிய பழக்கங்களை ஏற்க முடிவதாலும், பெரும் நோக்கங்களை ஏற்பதாலும், உயர்ந்த கருத்தை ஏற்பதாலும், தியானத்திலுயர்வதாலும், பற்றை விடுதல், சமத்துவம் ஆகியவற்றை மேற்கொள்வதாலும் வரும்.
     
  31. ஆன்மீகக் கட்டுப்பாடெனும் தவம் பல்வேறு காரணங்களுக்காக ஒருவருடைய ஜீவியத்தை அளவுகடந்து உயர்த்துகிறது. அவ்வுயரத்தில் உடலால் உழைப்பவருடைய அறிவும், திறனும் இயல்பாக அதன் பாகமாக அமைகிறது. சில சமயங்களில் இவ்வுயர்வின் சாரம், கீழே வந்து அவர் உடலின் ஜீவியத்தைத் தொடும். தொட்ட பின் அவர் செயல்களுக்கும், சொற்களுக்கும், பார்வைக்கும் அத்திறனுண்டு. அவர் பார்வை படும் இடத்தில் வாழ்வு நிறையும்.
     
  32. இடைவிடாத அழைப்பு முடிவு.அதன் முன் படிகளான முன்னிலைகள்: அழைப்புக்குள்ள திறமை, அழைக்க விருப்பம், ஆன்மா பரமனை அறிதல், முடிவாக இறைவனின் "அழைப்பு” அவனிதயத்தை எட்டியது.
     
  33. ஜீவியத்தை அறிந்து அதை நோக்கிப் போகும் சக்தி, அழைப்பு.
     
  34. எந்த ஸ்தாபனத்திலும் உயர்ந்த சக்தியை அல்லது உயர்ந்தவர் உதவியை எளிதாகப் பெறும் திறமை மேல் மட்டத்திலிருக்கும். கீழ் மட்டத்தில் அதற்கு வேட்டு வைக்கும் மனிதர்களிருப்பார்கள்.
     
  35. எந்த உயரத்தைச் சில சமயங்களில் எட்டிப் பிடிக்க முடியும் என்பதை ஒன்று அறிவிக்கின்றது. ஸ்தாபனம் சமூகத்திற்கு எந்த அளவு கட்டுப்பட்டது என்பதை அடுத்தது அறிவிக்கின்றது.
     
  36. நிபந்தனையின்றி சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்ததைப் போற்றும் மனப்பான்மையே சேவைக்குரியது. சேவைக்கு உரிமையில்லை, பிரதி பலனில்லை.
     
  37. அது போன்ற இலட்சிய சேவை, உறவுக்கு அப்பாலுள்ள, உறவுக்கு எட்டாத இலட்சிய புருஷனுக்கு உரியதாகும்.
     
  38. அவரை எட்ட முடியாத தூரத்திற்குப் போகும் அறிவைப் பெற்று, தூர விலகிய அடக்கத்திற்கே அச்சேவை உரியது.
     
  39. மனித சேவையில் அச்சேவை நுழைந்தால் அது தெய்வீக உறவாகிறது.
     
  40. வலிந்து அச்சேவையை வழங்கினால், அதை உறிஞ்சிவிட்டுத் தூர எறிவார்கள்.
     
  41. அது போல் பயன்படும் பொருள்களை - மனிதரல்லாத மற்றதை - மறந்துவிடுவார்கள். அதைப் புண்படுத்தமாட்டார்கள்.
     
  42. மனிதர்களிடமிருந்து அது போன்ற சேவையைப் பெற்றால், மீண்டும் அவர்கள் உரிமை கொண்டாடக்கூடாது என்பதற்காக அவர்களை வெறுப்புடன், மட்டமாக, புண்படும்படி நடத்துவார்கள். அரிதான சந்தர்ப்பங்கள் - உண்மையில் அவையே பரவலானவை - பத்மாசூரன் போல் கொடுத்தவரை அழிப்பதே முதற்கடமை.
     
  43. போர், சூட்சும உலக, ஆபத்தான சூழ்நிலை ஆகியவற்றுள் திருடனால் காப்பாற்றப்படுவது போன்ற நிலையில், நம்மைக் காப்பாற்றிக்கொள்ள, உதவியவரைக் கொல்ல வேண்டும்.
     
  44. தனி மனிதனைச் சமூகம் காப்பாற்றும் அளவுக்கு நாகரீகம் வளர்ந்துள்ள இடங்களில் மனித குலம் இது போன்ற (practical security) நடைமுறை பாதுகாப்பை நாடுவதில்லை.
     
  45. எந்த க்ஷணம் இப்பாதுகாப்பிலிருந்து மனிதன் விலகுகின்றானோ, அதே கணம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மனிதன் முனைகிறான். கற்பனையான, இல்லாத இலட்சியம் இவ்விடத்தில் "நன்றியறிதலை” நினைத்துத் தன்னை அழித்துக்கொள்ளும்.
     
  46. சர்ச்சிலை யுத்தத்திற்குப் பின் தோற்கடித்தது, கார்பசேவைப் பதவியிலிருந்து நீக்கியது, மகாத்மாவைச் சுட்டுக் கொன்றது ஆகியவை இத்தத்துவத்தை விளக்கும் சரித்திர நிகழ்ச்சிகள்.
     
  47. எளிமையானதானாலும், பத்மாசூரன் கதை அனைவருக்கும் மனதைத் தொட வல்லது. உயர்ந்த முன்னேற்றத்திற்குரிய அரிய கருத்துகள் மனதைத் தொடுவது குறைவு. உலகத்தில் அனைவருக்கும் உண்மையான இக்கருத்துகளை ஷேக்ஸ்பியர் காவியமாக வடித்தார். மகாபாரதம், இராமாயணம் போல் அவர் நிலைத்திருப்பதற்கு இதுவே காரணம்.
     
  48. "நல்லாயிருக்கு” என மனிதன் சொல்லும் பொழுது, அவன் உள்ளத்தின் ஆழத்தைத் தொடுகிறது எனப் பொருள். அதை அழிக்க அவன் வெட்கப்படுகிறான்.
     
  49. மூச்சு விடுவதை ஆழ்மனம் நடத்துவது போல், யோகியின் மனம் அன்னையின் திருவுருவத்தை நிலையாக வைக்க வேண்டும்.
     
  50. நிரந்தரமான ஆபத்து நிரந்தரமாக நினைவால் விலகுவது, நிரந்தரமாக உயர்ந்த நிலைக்குயர தயாரான ஆரம்ப நிலையைக் காட்டுகிறது.
     
  51. அதன் முடிவான நிலையில், நம்மையறிந்தோ, அறியாமலோ சொல்லும் நல்லெண்ண எழுச்சியால் வெளிப்படும் சொற்கள் பலித்துவிடும்.
     
  52. ஜீவன், ஜீவியம், திறன், ஆனந்தம் ஆகியவற்றைச் சரண் செய்ய ஆன்மா விழிப்புற்று, ஜீவனை ஆளும் திறனுள்ளதாகவும், தன்னையறிவதாகவும், திறனின் தலைவராகவும் - ஆசையழிந்த நிலை - ஆனந்தத்தை நாடாததாகவுமிருக்க வேண்டும்.
     
  53. எண்ணம் உலகத்தில் பலித்தால், அது பிரபஞ்சத்தின் எண்ணமாகும். மனம் பிரபஞ்சத்தை தழுவாவிட்டாலும் எண்ணத்திற்கு அவ்வீச்சுள்ளது எனப் பொருள்.
     
  54. எதிரியின் வளர்ச்சியும், வலிமையும் நாம் ஆழ்மனதில் வளர்வதைக் காட்டும். உலகெங்கும் சோஷலிஸம், நாத்திகம் வளர்வது அவற்றின் அறிகுறி.
     
  55. தவிர்க்க முடியாத பிரச்சினைக்கு, "அன்னையை அழைக்க வேண்டும்” என்ற உபதேசம் எளிமையாகத் தோன்றுவது போல், பின்பற்ற சிரமமானதாகும்.
     
  56. தவிர்க்க முடியாத பிரச்சினையை ஒதுக்கி, அன்னையை அழைப்பது, வாழ்வுக்கெதிராக அன்னையை ஏற்பதாகும். அது யோகத்தை ஏற்கும் திருப்புமுனையாகும்.
     
  57. மனிதன் கண்மூடியாகத் தன்னை அறியாமலிருக்கிறான். அவன் ஜீவியம் உள்ளே வளருவதையும், அவனால் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அவன் கண்மூடியாக இருக்கிறான்.
     
  58. மேல்மனம் எப்படியிருந்தாலும், உள்மனம் வளரக்கூடியது என்பதால் இந்நிலை ஏற்படுகிறது.
     
  59. மேல்மனம் தன் கட்டுக்கோப்பை இழந்தால், அவன் வாழ்வு அர்த்தமற்ற அலைபாயும் நீரோட்டமாகும்.
     
  60. சிந்திக்க முடியாத மனமும், சிந்தனையை மௌனத்தால் இழந்த மனமும் எதிரெதிரானவை. இடைவிடாத அழைப்பு சிந்திக்க முடியாத மனத்தை, சிந்தனை இழந்த மனமாக்க முடியும்.
     
  61. மலையில் வாழும் ஆதி மனிதன் நாகரீகமடைய நாகரீகத்தின் எல்லா நிலைகளையும் கடந்து செல்ல வேண்டும் என்ற நியதியில்லை.
     
  62. அருளால் அணுவெல்லாம் நிறைந்த சூழலில் ஆசையை அழித்தவன் பிராணமய புருஷனைக் காண்பதற்குப் பதிலாக, அதைவிட உயர்ந்த புருஷர்களையும் காண முடியும். தங்கமயமான புருஷனையும் காணலாம்.
     
  63. சிறு நிகழ்ச்சிகளை ஊடுருவி, அவற்றின் தவிர்க்க முடியாத அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் காணும் ஜீவியம் பிரம்மத்தை எட்டக்கூடியது.
     
  64. அழிவின் கருவியான போர், ஆக்கலின் கருவியாகாவிட்டால் அதை ஒழிக்க முடியாது.
     
  65. ஆத்ம விசாரம், அகந்தை அழியும் வரை, அகவுணர்வின் தெளிவாக இருக்காது. புறவுணர்வின் ஆராய்ச்சியாகவே இருக்கும்.
     
  66. இறைவன் மனிதன் மீது அதிர்ஷ்டத்தைத் திணிக்க ஏதோ ஒரு சமயம் அவனிடமிருந்து "காணிக்கை”யைத் திருடுவதுண்டு.
     
  67. மேலெழுந்து உயருவதே யோகம் எனினும், யோகத்தில் மிகக்கடுமையான பகுதி அதுவல்ல, அதற்கு முந்தைய சரணாகதியே கடுமையானது. கீழே வரும் சக்தியை ஏற்று ‘விழுங்கி' திருவுருமாற்றமடைவது போல் மேலே போவது அவ்வளவு கடுமையில்லை.
     
  68. பகவான் எழுதியது போல் மேலெழுவதையும், கீழிறங்குவதையும் ஆன்மீக உண்மையாக உணர, நாம் மனதைக் கடக்க வேண்டும். சங்கரருடைய அத்துவைதம் முடியும் இடம் அது.
     
  69. சரணாகதியை ஏற்கும் முடிவு, சரணாகதியை நிறைவேற்றுவதைவிடச் சிரமம். சரணாகதியை நிறைவேற்றுவது சைத்தியம்; முடிவாக ஏற்பது மனம்.
     
  70. தனக்குப் பிடிப்பதைச் சிறந்த அபிப்பிராயமாகவும், உயர்ந்த ஞானமாகவும் கருதுகிறோம்.
     
  71. நேரடியாக ஒரு ஸ்தாபனம் மூலம் உலகெங்கும் ஓர் இலட்சியத்தைப் பரப்புவது அல்லது சூட்சுமமாக எண்ணத்தால் உலகத்தில் இலட்சியத்தை நிறைவேற்றுவது, உடலின் ஜீவன், பிரபஞ்சம் முழுவதும் பரவியதற்கு அறிகுறி.
     
  72. தொந்தரவை விலக்க, பிரச்சினையைத் தீர்க்க, வாய்ப்பை எழுப்ப, ஜீவியம் செறிய, திருவுருமாற்றமடைய அன்னையை அழைப்பது பல்வேறு நிலைகளிலுள்ளன. ஒவ்வொன்றும் அடுத்ததிலிருந்து வேறுபட்டது. ஆனால் அனைத்தையும் அழைப்பு என்கிறோம்.
     
  73. இனி போரில்லை என்பதால் மனிதன் அளவுகடந்து உயர்ந்த எதிர்காலத்தை அவசரமாக எதிர்பார்த்து அதற்குரிய புரட்சி மனப்பான்மையை உருவாக்கிக் கொண்டிருக்கிறான். புதிய டெக்னாலஜி, அளவுகடந்த கவர்ச்சியுள்ளவற்றை ஏராளமாக எழுப்புகிறது. இரண்டும் மனிதனை எதிர்பார்க்கும்படிச் செய்கின்றன.
     
  74. எல்லா நாகரீகங்கட்கும் பெரும் பண்புகளை உற்பத்தி செய்யும் அடிப்படை, சொத்தும், சுதந்திரமுமாகும். மாறாக, பெரிய நாகரீக உயர்வை நாட உயர்ந்த பண்புகளைத் தேட வேண்டும் என்றாகிறது.
     
  75. ஜீவியம் சக்தியானால் சத்தியமான ஜீவன் சிருஷ்டியான ஜீவனாகிறது. தன்னை உணர்ச்சியாகச் சக்தி அறிவது, ரசனை.
     
  76. தன் சக்தியை - வாழ்வின் சக்தியை - உணர்வாகவும், உடலுணர்வாகவும் மாற்றுவது ரசிப்பதாகும். உடலுறவு அதன் உச்சம்.
     
  77. இந்த உச்சத்தை உயர்த்த, பழைய செயலை, புதுச் செயலாக மாற்ற வேண்டும்.
     
  78. குழந்தை தரிக்க ஆதிநாளிலிருந்து உணர்வின் சக்தி தன்னை உடலுணர்வாக மாற்றுகிறது.
     
  79. சிருஷ்டியை உடலிலிருந்து உணர்வுக்கும், அங்கிருந்து மனம், ஆன்மாவுக்கும் உயர்த்தினால் சிருஷ்டியின் நிலையுயரும்.
     
  80. பழுத்த மனித ஆன்மாவில் தெய்வீக ஆன்மா, புதிய ஆன்மாவைச் சிருஷ்டிக்கிறது. மேலே போனால் இச்சிருஷ்டி உணர்வால் உச்சகட்ட ரசனையை அளிக்கிறது.
     
  81. கீழே வரும் பொழுது அதே ரசனையை உடல் அளவில் உடலுறவில் காணலாம். ‘குழந்தை தரிப்பதற்காக இல்லாமல், ஆன்மீக முன்னேற்றத்திற்கு இதைப் பயன்படுத்த முடியும்', என்கிறார் பகவான்.
     
  82. உடலில் ரசனையை ஏற்படுத்துவது உடலுறவு. கற்பனை, மனம் திளைப்பது, தவிர்க்க முடியாதபடி திளைப்பது, எதிர்பார்ப்பது, வேலையை ரசிப்பது, சோகம், கவலை, சிந்தனை புரிவது போன்ற மனத்தின் எல்லாச் செயல்களும், உணர்வு, உடலின் இது போன்ற மற்ற அனைத்துச் செயல்களும் செயலில்லாத, வெளிப்பாடில்லாத ரசனையாகும். இவற்றிற்கு, ‘கற்பனை ரசனை' எனப் பெயர்.
     
  83. சுயநலமியின் இரகஸ்யம் பிறரிடமிருந்து அதிகம் பெற உதவுகிறது. அது, அவன் சுயநலத் திறமையை உயர்த்தும்.
     
  84. தன்னலமற்றவரின் இரகஸ்யம் மௌனத்தை அளிக்கும், பிறருக்கு அதிகமாகக் கொடுக்க உதவும். தன்னலமற்ற திறமையை அதிகரிக்க உதவும்.
     
  85. சாதாரண மனிதன் ஒரு வருஷத்தில் சந்திக்கும் அனுபவங்களை உயர்ந்த நிலையிலுள்ளவர் ஒரு வாரத்தில் பார்க்கின்றனர். பெரிய மனிதர் வாழ்நாள் முழுவதும் காண்பதை ஆன்மீகப் பெருமக்கள் ஒரே நாளில் ஊடுருவிப் பார்க்க முடியும்.
     
  86. தவறே அறியாத நன்மக்கள் தங்கள் செயலில் பெருமிதம் அடைவார்கள். காரியங்களை முடித்தவுடன் ஓர் அசம்பாவிதம் நிகழ்வதை அவர்கள் காண்பதுண்டு.
     
  87. மனசாட்சியை மறுத்துச் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தமுள்ள வேறு பலருண்டு. அவர்கள் காரியம் முடிந்தவுடன், ஒரு நல்லது நடப்பதைக் காண்கிறார்கள்.
     
  88. தவறே அறியாத நன்மக்களாகப் பிறர் அறிவதாக நாம் மேலே சொன்னவர்கள் தீய எண்ணமுள்ள, நல்ல தோற்றமுள்ளவர்கள். அடுத்தாற்போல் சொன்னவர்கள் மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்ட நல்லவர்கள். சமூகத்திற்காக அவர்கள் மனச்சாட்சியை மீறுவதுண்டு.
     
  89. "யோகப் பயிற்சியில் சமூக, மனநிலைகளை எதிர்த்துப் போக வேண்டியிருக்கும். அகநிலை, புறநிலையிலுள்ள மாறுதல்கள் அவை” என்கிறார் பகவான்.
     
  90. மனத்தின் நோக்கத்தை உடல் ஏற்றுக்கொண்டால், பயன் தரும் வாழ்வு ஏற்படுகிறது.
     
  91. சமூக, மனநிலைகள் மாறி ஆன்மீக நோக்கம் எழுந்தால், உடல் அதை ஆமோதிக்க யோகம் காத்திருக்கிறது.
     
  92. தெரியாததாக நடிப்பதால், குழந்தையுடன் விளையாட முடிகிறது.

    பிறர் குறையை அறியாதது போல் நடந்தால், நல்ல பழக்கம் வருகிறது.

    பிறர் தீமையை அறிய முடியாத உயர்ந்த உள்ளம் படைத்தவர் பிஷப், முத்தநாதன்.

    ஆதியை மறந்த பின்னரே, ஜடத்தைச் சிருஷ்டிக்க முடியும்.
     
  93. சரணாகதியை எளிதில் புரிந்துகொள்ளலாம், பின்பற்றுவது சிரமம்.
     
  94. பெரிய ஆன்மீக அனுபவங்களைப் பெறக்கூடிய ஆத்மா பெரும் திட்டங்களை நாடினால் அனுபவம் தவறும். கடந்த கால அனுபவங்களை இன்று பூர்த்தி செய்ய முயன்றாலும், கற்பனையாக நினைத்தாலும் அனுபவம் தவறும்.
     
  95. தெய்வம் கொடுத்ததை அனுபவிக்க முனைவது, ஓர் ஆசையைப் பூர்த்தி செய்ய நாமே முயல்வதினின்று வேறுபட்டது. நாம் முனைய அனுமதி இல்லை. தெய்வம் கொடுத்ததை அனுபவிக்காமலிருக்க அனுமதியில்லை.
     
  96. அன்னையின் எந்தக் கோட்பாட்டினையும் பூரணமாகப் பின்பற்றினால் அவரையும், அவரது ஜீவியத்தையும் அடையலாம்.
     
  97. நாட்டின் செல்வம், பிதிரார்ஜிதம் ஆகியவை இருப்பதாக வைத்துக் கொள்ளாமல், இறைவன் கொடுத்ததாக அறிந்து நன்றி செலுத்தினால், நம் நன்றி நிலைமையுயரும்.
     
  98. தெய்வம் இருப்பதை உணராமல், அருளின் நித்தியச் செயலைக் காணாமலிருப்பது மனித குலம் முழுவதற்குமுண்டு.
     
  99. குடும்பம் கொடுத்தது, நாம் சுவாசிக்கும் காற்று ஆகியவற்றை நாம் அறிந்து உணர்ந்தால், நன்றியறிதல் பெருகும்.
     
  100. அவ்வுணர்வு உடலின் ஆழத்திற்குப் போனால், இறைவனின் அடிச்சுவடுகள் தெரியுந்தோறும் புல்லரிக்கும். நித்திய தரிசனம், நிதர்சனமான நன்றியுணர்வு.

*****



book | by Dr. Radut