Skip to Content

08 . பாகம் - 8

  1. வாழ்வு தன் நோக்கங்களால் உருவாகிறது. நோக்கங்களை நிர்ணயிப்பது அறிவு. மனிதனுடைய கவலைகளும், சந்தோஷமும், பிரச்சினைகளும் அவனுடைய அறிவால் நிர்ணயிக்கப்படுகின்றன.
     
  2. உயர்ந்த அறிவை ஏற்றுக்கொண்டு, அதனடிப்படையில் நோக்கங்களை மாற்றிக்கொண்டால், பிரச்சினைகள் மறையும், கவலை சந்தோஷமாகும், வெறுப்பான கசப்பும் மறையும்.
     
  3. சாதிப்பது மனமில்லை; ஆன்மா, அது விருப்பப்பட்டால் எதையும் சாதிக்கும்.
     
  4. ஒரு காரியத்தை ஆராய்ந்து, முடியாது என முடிவு செய்கிறோம். அது முடியாமற் போகிறது. அது மனத்தின் கணிப்பு.
     
  5. "ஒரு காரியம் முடியும்" என்று தெரிகிறது. அதை ஆர்வமாகப் பின்பற்றுகிறோம். அது முடிகிறது; சில சமயங்களில் முடிவதில்லை. மனம் தன் திறமைக்கேற்ப சாதிப்பதின் வழி இது.
     
  6. நிச்சயம் சாதிக்க வேண்டும் என ஆழ்ந்து விரும்பியவை நடந்து முடிவதைக் காண்கிறோம். ஆன்மா வெளிவந்து மனத்தின் அபிலாஷையைப் பூர்த்தி செய்தால், இது நடக்கும்.
     
  7. ஆன்மா உள்ளதைக் காணும் திறனுடையது. மனம் நடக்குமா, நடக்காதா என (possibility) தன் திறமைக்கேற்ப, நடக்கக்கூடியவற்றைக் கருதுகிறது. திறமையை நம்பும் மனத்தினின்று விலகி, உள்ளதைக் காணும் ஆன்மாவை அடைந்தால், நடக்காதது நடக்கும்.
     
  8. பரம்பொருளும், ஜடமும் முழுமையுடையவை. தங்கள் சக்திகளைத் திரும்பிப் பெற விழிப்பான நேரத்திலேயே அவற்றால் முடியும். (திரும்பப் பெறும் அவசியமும் அவற்றிற்கில்லை). மனமுடைய மனிதன் செலவழிந்த சக்தியைப் பெற, தூங்க வேண்டியது அவசியம். முழுமையில்லாத காரணத்தால் மனிதனுக்குத் தூக்கம் தேவை.
     
  9. நிர்ப்பந்தத்தால் மனிதன் அன்னையிடம் ஓடிவிடுகிறான். கண் மூடிய சரணாகதி இது. மனித நிலைகளுக்குரிய வாழ்வின் அம்சங்களைப் புறக்கணித்து, அன்னையை நாடுவது சரணாகதி.
     
  10. திரும்பச் செய்வது, பிரகிருதிக்கு ஆனந்தம்.அதனால் அது கற்றுக் கொள்ள விரும்பவில்லை. சைத்திய புருஷன் ஒரு முறை செய்தாலும் புரிந்து கொள்வதால், திரும்பச் செய்வதில்லை.
     
  11. எந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதும், எந்தக் காரியத்தை முடிப்பதும் பிரார்த்தனையாலோ, சமர்ப்பணத்தாலோ செய்வது திறமையின் முதற்படி. அதற்கு, ‘நம்பிக்கை' எனப் பெயர். செயல்கள் ஜட நிலையான உடலைச் சேர்ந்ததால், முதற்படியாகும்.
     
  12. அடுத்த கட்டத்தில் ஏமாற்றம், சோகம், வருத்தமான குறை இல்லாமல் இருப்பதாகும்.
     
  13. அதே திறமை மனத்தில் பூர்த்தியாக, மனத்தால் அறிய முடியாத நிகழ்ச்சி இருக்கக்கூடாது.
     
  14. ஆன்மாவில் சமத்துவம் கடைசி நிலை.எதற்கும் நிலையிழக்காத, எரிச்சல் படமுடியாத நிலை அது.
     
  15. ரசித்து அனுபவிப்பது சத்திய வாழ்வுக்கும், சிருஷ்டிக்கும் அடிப்படை. விரதம் ரசனையை உயர்த்தும். எதையும் அதிகப்படுத்துவது சரியல்ல. அதிகமாக அனுபவிப்பது அழிச்சாட்டம். விரதம் அளவுகடந்து உயர்ந்தால் உணர்வு மறத்துப்போகும்.
     
  16. பரிணாமம் தோற்றத்திற்குரிய உருவங்களைச் சார்ந்தது.பரிணாமம் ஜீவியத்திலும் நடக்கும். மனிதன் முனைந்து முயல்வது பரிணாமம். மேலிருந்து அருள் செயல்பட்டு மனித பரிணாம முயற்சியை துரிதப்படுத்துகிறது. அருளைச் செயல்பட வைக்கும் பரிணாம முயற்சி இடைவிடாத நிலையில், முயற்சி யோகமாகும். அன்னையின் அவதாரம் முயற்சியைச் சுருக்குகிறது. சரணாகதியடைந்த மனிதனின் முயற்சியை முழுவதும் அழித்து, அருள் வெளிப்பாடாக்குகிறது.
     
  17. பரிணாம சக்தியாக அன்னையை அறிந்து கொள்வது அன்னையை அறிவதாகும். அதனால் ஈர்க்கப்படுவது ஆர்வம். தன் முயற்சியை அன்னை சக்திக்குட்படுத்துதல் சமர்ப்பணம். இதை ஜடத்தின் ஆன்மாவில் அறிவது சரணாகதி.
     
  18. கண்டுபிடித்தால் சந்தோஷம்.சிக்கலாக மறைந்தால் சந்தோஷம் அதிகமாகும். தன்னை மறந்து, தனக்கெதிரான ஜீவியத்தில் விழுங்கப்படுவதே அதிகபட்சமாக மறைவதாகும் என்பதால் அங்கு தன்னைக் கண்டுகொள்வது அதிகபட்ச ஆனந்தமாகும்.
     
  19. நண்பர் இரு கட்சிகளாகப் பிரிந்து சவால் விட்டு, தங்கள் திறமையைப் பதம் பார்த்தால், உடலின் திறமை செயல்பட்டு உணர்வில் நெருக்கத்தை அளிக்கும்.
     
  20. புதியதை மனம் கண்டுபிடித்தால் சந்தோஷத்தால் சிலிர்க்கும். அதைவிட அதிக சந்தோஷத்தைப் பெற மனம் உணர்வுள்ள நட்பை நாடுகிறது. ஆழ்ந்து மறைந்ததைக் காண்பது பெரிய சந்தோஷம். உடலில் மறைந்த அறிவைக் காண்பதில் அது கிடைக்கும். அது உடலுறவாகும்.
     
  21. அதைவிட ஆழ்ந்து மறையும் இடம் ஒன்றுண்டு.ஆன்மா உடலில் புதைந்துள்ள இடம் அது. அதைக் காண்பது சத்தியஜீவிய பரிணாமம் அல்லது ஆன்மாவின் பரிணாமம் எனப்படுவது. அதுவே சிருஷ்டியின் உயர்ந்த சந்தோஷத்தை அளிக்கவல்லது. பகவான் ஸ்ரீ அரவிந்தர், அதை "ஆன்மா தன்னைத் தானே விழுங்குவதால் மறைந்து மீண்டும் காண்பதாகும்'' என்கிறார். இதுவே லீலை.
     
  22. நண்பர்கள் இரு கட்சிகளாவது நமக்கு விளையாட்டு.பிரம்மம் இரு கூறாகப் பிரிந்து தன் திறமைக்குத் தானே சவால் விடுதல், அதிகபட்ச ஆனந்தத்தைத் தருவதில் ஆச்சரியமில்லை.
     
  23. சிப்பந்தியின் நாணயம் அதிகாரியின் அதிகாரத்தைப் பொருத்தது.
     
  24. அதிகாரியின் அதிகாரமில்லாத நேரமுள்ள நாணயம் நாட்டில் வழக்கில் உள்ள நாணயம். தனிப்பட்டவனுடைய சுபாவமான நாணயம்.
     
  25. வாழ்வின் அமைப்பு முறைக்கு அஸ்திவாரம் ஜடத்தின் தூய்மையான "நாணயம்".
     
  26. பொறுக்க முடியாதவன் அவசரப்படுகிறான். பொறுமைக்குச் சிருஷ்டியின் வேகமுண்டு. அதனால் அது க்ஷணம் தரிக்காது.
     
  27. "பொறுமையில்லை" என்பதை இழந்ததால் என்னால் தாமதிக்க முடியாது.
     
  28. அதிவேகமான செயலை ஆதரிக்கும் மௌனத்தில் காத்திருப்பது பொறுமை.
     
  29. பெரிய வாய்ப்பைத் தேடிப் போனால் சமூகத்தில் பெரும் முன்னேற்றம் அடையலாம். அது அக வளர்ச்சிக்குப் பொருந்தாது.
     
  30. மன உயர்வைத் தரும் வாய்ப்புகள் உயர்ந்தவையானால், அவை தங்களுடன் உயர்ந்த சிரமங்களையும் தாங்கி வருவதால், அவற்றை விரும்பி நாட முடியாது. தானே வரும் வாய்ப்புகளே மன உயர்வைப் பெற்றுத் தரும்.
     
  31. சில்லறை ஆசைகள் உயர்ந்த இலட்சியமாக, மறுக்க முடியாதவையாக எழுவதுண்டு. நம்மில் ஒரு பகுதி - எவ்வளவு சிறியதானாலும் - சில்லறையாக இருந்தால், அப்படியிருக்கும்.
     
  32. ஜீவாத்மா சித்திக்கும் வரை ஆர்வமோ, தியாகமோ பின்பற்ற முடியும், சரணாகதியை ஆரம்பிக்க முடியாது. ஜீவாத்மா பரமாத்மாவுக்குச் சரணடைய வேண்டும் என்பதால், சரணாகதியை ஆரம்பிக்க ஜீவாத்மா நமக்குச் சித்திக்க வேண்டும்.
     
  33. நாமறிந்த தியானத்தைவிட பூரண யோகத்திற்குரிய தியானம் வேறுபடும். செயல் திறன் (skill) பொதுத்திறனைவிட வேறுபட்டது. பள்ளிப்படிப்பு விவேகத்திலிருந்து வேறுபட்டது போல் அவை வேறுபடும்.
     
  34. அழிவு நிறைந்த ஆபத்துக்கு அஸ்திவாரங்களில் ஒன்று, நிலையற்றதை நிலையானதாக நினைப்பது. உதாரணமாக அழியும் உடலை நிலையானது என நினைத்து, அது மரணமடையும் பொழுது அதை அழிவு எனக் கருதுகிறோம். தோல்வியடைந்த காதலை உலகம் - உணர்வில் - பெரிய துர்அதிர்ஷ்டமாகக் காண்கிறது. காதல் கண நேரம் நீடிக்கக்கூடியதை நிரந்தரமானது என நினைத்தால், ஏமாற்றம் பெரியதாக இருக்கும்.
     
  35. தீமை, பாவம், குறை ஆகியவற்றைக் கெட்டது என்கிறோம். அவை கெட்டவையானால் பிரம்மத்திற்கு அவை குறையாகும். அதிகாரத்தில் உள்ளவரின் குறை காணாமல் அவரை ஏற்பது போல், பிரம்மத்தின் "குறை”யை விலக்கிப் பார்க்க வேண்டும்.
     
  36. புரியாத விஷயங்களை வாயால் பேசும் பொழுது புரிந்தால், அது அறியாமையைக் குறிக்கும். இந்த அறியாமை மனத்தின் குணம். அறிவு உள்ள வரை இதுவும் இருக்கும். புத்திக்கு இக்குணம் இல்லை.
     
  37. பெற்றோர் உடலின் பகுதியாதலால் குழந்தைகட்கு ஆழ்மனப்பற்றுண்டு.
     
  38. உணர்வில் வலுவானவரும், பலஹீனமானவரும் பாசமாக இருப்பது ஆழ்மனப்பற்றாகும். உணர்வு தன்னை வலுவாக்கிக் கொள்ள முயல்வதின் பலன் இது.
     
  39. மனம் விசாலமான கருத்தை நாடுவது ஆழ்மனச் செயலாகும்.
     
  40. வளரவோ, வாழவோ தேவையானது மேல்மனத்தின் திறனைவிடப் பெரியதானால், ஆழ்மனம் அப்பொறுப்பை ஏற்கும்.
     
  41. உயர்ந்தது செயல்பட தாழ்ந்தது விலக வேண்டும். மனம் சிந்தித்தால் ஆன்மா செயல்பட முடியாது.
     
  42. அசைவு, உடலின் செயல் போல், எண்ணம், மனத்தின் செயல்.
     
  43. அருளின் செயலை அறிந்து மனம் ஏற்றால், உள்ளிருந்து எழும் உந்துதல் எதிராக இருக்கும். அது அறிவை அறியாமையாக்கும். சமூகச் சட்டத்திற்கு அதை உட்படுத்தி, சட்டத்தை எதிரான நிலைக்கும் சொல்லி, கிடைத்த அறிவைப் பாழாக்கும்.
     
  44. மனம் அறியாமையின் கருவி என்பதால் அது போல் செயல்படுவது இயல்பு. அதனால்தான் நல்ல சூழ்நிலைக்குப் பொருந்துவது, தவறான சூழ்நிலைக்கும் பொருந்தும் என நினைக்கிறது.
     
  45. பிறப்பிலிருந்து எவரும் உன் மீது அன்பு செலுத்தாவிட்டாலும், நாம் இன்று அன்பைச் செலுத்த முடியும். ஏனெனில் அன்பு, காலத்தைக் கடந்தது. அத்துடன் எவர் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் அன்பு உயர்ந்தது. இதையே, விஸ்வாசம், பிரியம், நம்பிக்கை, நாணயம், நல்ல தன்மை ஆகியவற்றிற்குச் சொல்லலாம்.
     
  46. காலத்தைக் கடந்த குணங்கள், காலத்தைக் கடந்தவன் நம்முள் இருப்பதால், நம்மிடம் குடிகொண்டுள்ளன. அநித்தியமான மனிதன் ஏற்பதால் அல்ல. அனந்தனே காலத்தைக் கடந்தவனை அறிவான்.
     
  47. உணர்வின் உண்மையைக் காணும் பொழுது, மனம் உடைகிறது. அவ்வெண்ணங்கள் சித்திக்க விழைவது, மனம் உடையும் நிலையைப் போற்றுவதாகும்.
     
  48. உணர்வின் தேவையும், உண்மையும், உணர்வில் சக்தியுள்ளவரை, உறவை நீடிக்கும். உணர்வின் சக்தி திடீரென எழுந்து மடியும். அடிக்கடியும் அப்படிச் செயல்படும். நிலையாமை அவற்றின் முத்திரை. நித்தியமான பண்பை அவற்றால் ஏற்கவோ, போற்றவோ முடியாது.
     
  49. உன் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் எவருமிலர் என்பதைக் கண்டால், அகந்தையின் வாழ்வு அநித்தியம், உயர்ந்த பண்புக்கு உதவாது என்று பொருள்.
     
  50. இதனால் உலகை வெறுக்காமல், அகந்தையினின்று சைத்திய புருஷனிடம் போக வேண்டும்.
     
  51. உள்ளொளி பூத்து நிலைக்கும் முன் எண்ணங்களையும், உணர்வுகளையும் சரணம் செய்வது நிலைக்காது.
     
  52. ஜீவாத்மாவில் நின்று, அசைவுகளைப் பிடித்து, பரமாத்மாவுக்குச் சமர்ப்பணம் செய்தால் அது பலிக்கும். அங்கு நிற்காதவரை, அது பலன் தராது.
     
  53. பொறுமைக்கு ஓர் அடையாளம் பிறர் அவசரம் நம்மை பாதிக்கக்கூடாது.
     
  54. கருத்து சத்தியக் கருத்தாக, சக்தி தன்னையறிய வேண்டும்.
     
  55. மனதின் கருத்தை, சத்தியக் கருத்தாக்குவது யோகப் பயிற்சி.
     
  56. உணர்வு எண்ணத்தை ஏற்றால், எண்ணம் வலிமை பெறும். ஆனால் அது சத்தியக் கருத்தாகாது. ஏனெனில், அதிலுள்ள சக்திக்கு முழுத் திறன் வருவதில்லை.
     
  57. உணர்வின் சத்தியக் கருத்து உற்பத்தியாக உணர்வின் சக்தி தன்னை அறிந்து உணர்வோடு இணைந்து முழுமை பெற்று, உணர்வும், சக்தியும் ஒன்றையொன்று வலியுறுத்த முடிய வேண்டும்.
     
  58. அடக்க முடியாத ஆசையுள்ளவனால் வெளியுலகை அறிய முடியாதது போல், நாம் அடக்க முடியாத ஆர்வத்தால் வெளியுலகை மறக்க வேண்டும்.
     
  59. கடந்த கால உழைப்பு இன்றைய நிலையை நமக்களித்துள்ளதற்கு நாம் நன்றியறிதலுள்ளவர்களாக இருப்பதில்லை. உண்மை அதுவாக, நாம் எப்படி பிறரை நன்றியறிதலுள்ளவரில்லை எனக் குறை கூற முடியும்?
     
  60. நம் கடந்த கால உழைப்பு இன்றைய நிலையை அளித்ததற்காக அதற்கு நாம் செலுத்தும் உணர்வு, நன்றியறிதல்.
     
  61. நம் கடந்த கால வலிமையை அறிந்தாலும், குறைகள் இன்றைய நிலையை அளித்தது என உணருவதில்லை. குறைகள் நம்மை அழித்தன, நம் தலை மீது கொடுமையைக் குவித்தன. அதுவே நம்மை இந்நிலைக்குக் கொண்டு வந்தது.
     
  62. இக்கோணத்தில், நன்றியறிதல் என்பது கடந்த கால தாழ்ந்த நிலைக்கு நாம் வருத்தப்படவில்லை என்பதாகும்.
     
  63. வேறு வகையாகச் சொன்னால், பிறர் மீது குறை கூற முடியாத நிலையே நன்றியறிதலாகும்.
     
  64. குறை கூறாமல், வருத்தப்படாமலிருந்தால் ஒவ்வொரு செயலிலும் திருவுள்ளத்தைக் காண்கிறோம். அதுவே நன்றியறிதல்.
     
  65. மனம், அன்னையை அறிவால் புரிந்து கொண்டு அழைப்பதால், நம் ஆர்வத்தில் குறை ஏற்படுகிறது.
     
  66. அறிவு வறட்சியானது. அறிவின் ஆர்வத்திற்குத் தீவிரம் வராது. அது கொஞ்ச நேரமே இருக்கும்.
     
  67. உணர்வே தீவிரமாக அழைக்கும். கொஞ்ச நாழியானாலும் தீவிரம் உச்சமாக இருக்கும்.
     
  68. உடலுக்குப் புரிந்தால் முழுவதும் ஏற்றுக்கொள்ளும். அதன் ஆர்வம் நிலையானது, உச்சமான தீவிரம் உடையது. உடல் எந்நேரமுமுள்ளது. உணர்வில் தெம்பு சேர்ந்தால் ஆர்வம் வரும். நினைவு, அன்னையைக் கொணர்ந்தால் ஆர்வம் எழும்.
     
  69. ஜீவன் முழுமையானது. அதன் அறிவு பூரணம் பெற்றது. கடந்த காலமும் அதனுட் கொண்டது. முழுமையடையும் பொழுது அது மேலும் செறிவடைகிறது. இது சைத்திய புருஷனிலிருக்கிறது; சுமுகமானது. அதனால் இனிமை அதிலிருந்து எழுகிறது.
     
  70. சைத்திய புருஷன் தானே இனிமையானவன்.சுமுகம் செறிந்து இனிமையாகிறது. கடந்த காலம் இணைவதால் மேலும் செறிவடைகிறது.
     
  71. கரணங்கள் முரண்பாடானவை.அவற்றை ஒத்துழைக்கச் செய்தால், முரண்பாடு குறைந்து தகராறாகிறது. ஒத்துழைக்க விரும்பினால் சுமுகம் எழும். ஒற்றுமை எழுந்தால், சுமுகம் உயரும். பூரண முழுமை ஒற்றுமையை இனிமை மூலம் சைத்திய புருஷனில் ஏற்படுத்துகிறது.
     
  72. உடலின் தேவை, உணர்வின் ஆசை, மனத்தின் அபிப்பிராயம் ஆகியவற்றைப் பூர்த்தி செய்தால், மனிதனுக்கு மனதில் பிணக்கு ஒழியும். கொஞ்சம் தேவைகள் குறைவதால், கொஞ்சம் சக்தி சும்மாயிருப்பதால், மனிதனுக்குப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
     
  73. அன்னை வாழ்வு சைத்திய மையத்தைக் கொண்டு மனிதனின் சக்தியில் ஒரு துளியும் விடுவதில்லை. ஏனெனில் சைத்தியம் எழ, முழு சக்தியும் தேவை.
     
  74. சைத்தியம் முன்வந்தால் ஒவ்வொரு கணமும் நிறைவாகும்.
     
  75. அடிப்படையில் மனிதன் சோம்பேறி, அதிகபட்ச முன்னேற்றத்தைப் பெறக்கூடியவனுமாகும்.
     
  76. அனுபவித்து ரசிக்கும் முன்னேற்றத்தை மட்டுமே மனிதன் விரும்புகிறான்.
     
  77. இவ்விரு உந்துதல்களையும் மனிதன் தனக்குகந்தவாறு இணைத்து, தன் வாழ்வுக்கு வழிகாட்டியாக்கியுள்ளான். இது ஆழ்ந்த நோக்கமாகிறது; தலையாய நோக்கமுமாகும்.
     
  78. நாட்டின் ஆபத்து எழும் நேரத்திலும், புதிய சரக்கு வரும் பொழுதும் அவற்றை வரவேற்பது இதுவே.
     
  79. சமூகம் மனிதனுக்கு எந்த அளவு பாதுகாப்பளிக்கிறது; அவன் ஆசைகளையும், அபிலாஷைகளையும் எந்த அளவுக்கு ஆமோதிக்கிறது; என்பவை மனிதனுடைய ஆழ்ந்த நோக்கங்களை நிர்ணயிக்கின்றன.
     
  80. திருமணம், பட்டம், கார், விஸ்வாசம், மரியாதை, தேசபக்தி ஆகியவை பெரும் முன்னேற்றத்தைக் கொண்டு வந்த சமூகப் புரட்சிகளின் சின்னங்கள்.
     
  81. இச்சின்னங்கள் எழ நூறு ஆண்டுகளும் ஆயின. இன்று ஒரே ஆண்டிலும் அவை உருவாகின்றன.
     
  82. அன்னை நினைவு மற்ற நினைவைவிட வலுவானால், அன்னையை நாடும் ஆர்வம் மற்ற ஆசைகளைவிட வலுவானால், அன்னையாக மாறுவது மற்ற செயல்களைவிட அதிக சுவையானால், ஆர்வம் உருவாகிறது எனப் பொருள்.
     
  83. எந்தத் தெய்வத்திற்குப் பிரார்த்தனை செய்கிறோமோ, அது பலன் தருகிறது. மேலும் ஓர் உண்மையுண்டு. நாம் எந்நிலையில் நம் சக்திகளைச் சேர்த்து முறைப்படுகிறோமோ அந்நிலையில் அம்முறைக்குத் தெய்வீகச் சக்தியுண்டு. அதுவும் பிரார்த்தனைக்குப் பலன் தரும். யார் பிரார்த்தனைக்குப் பதில் சொன்னார்கள் என்பது வேறுபடும்.
     
  84. இம்முறைக்குட்பட்ட பிரார்த்தனைகள், இம்முறையால் பலிக்கின்றன. மேம்பட்டவை, தெய்வத்தால், இம்முறை மூலம் பலிக்கின்றன.
     
  85. பலிக்காத பிரார்த்தனைகள் இம்முறையை எட்டுவதில்லை. அல்லது இம்முறையைத் தாண்டி தெய்வத்தை எட்டுவதில்லை.
     
  86. எவ்வளவு உயரமும் எட்டும் தீவிர பிரார்த்தனைகள் பலிக்காமலிருப்பது உண்டு. ஏனெனில் இம்முறையுள் இப்பிரார்த்தனைக்கு எதிரானது இருக்கும்.
     
  87. மேல்மனத்தின் எந்நிலையிலிருந்தும் அழைப்பது நம் முயற்சி. அதைத் தாண்டினால் அழைப்பு நிற்காது, தானே எழும்.
     
  88. உனது அதிகபட்ச கவர்ச்சியைவிட, அன்னை ஈர்த்தால், பக்தி ஜனிக்கிறது.
     
  89. ஜீவன், ஜீவியம், திறன், ஆனந்தம் ஆகியவற்றை ஜீவாத்மா பரமாத்மாவுக்குச் சமர்ப்பணம் செய்வதை, பகவான் "சரணாகதி' என்கிறார். இவை சச்சிதானந்தத்தின் சிருஷ்டி உருவங்கள். சரணாகதிக்குரிய ஜீவாத்மா இவற்றிலிருந்து விலகி நிற்கிறதெனில், சரணாகதியை ஏற்கும் பிரம்மம் சச்சிதானந்தத்திலிருந்து விலகி நிற்கிறது.
     
  90. யோக நிஷ்டை ஜீவியத்தை உடலிலிருந்தும், புலன்களிலிருந்தும் விலக்குகிறது. பூரண யோகத்தால் ஜீவியம், மனிதனை மேல் மனத்திலிருந்து விலக்கி உள் மனத்திற்கு எடுத்துச் சென்று, சமாதி நிலை தேவையில்லை என்றாக்குகிறது.
     
  91. வாழ்வை, நல்லது  கெட்டது என இரு பிரிவுகளாக அறியும் வரை கடந்த கால வாழ்வின் குறைகளை நாம் விரும்புவதில்லை. சமூகத்தையும், மண வாழ்வையும் கடந்து, வாழ்வை முழுமையாகக் காண்பவர்க்குக் கடந்த காலக் குறைகள் மிகவும் பயன் தரும் நல்ல விஷயங்கள்.
     
  92. பணம், பயம், பெண் மனிதனைப் பிடித்து ஆட்டுவதுண்டு.இவற்றின் அளவுகடந்த சக்தியால் மனிதன் ஆடவில்லை. மனிதனுக்கு இவற்றின் மீதுள்ள அளவுகடந்த கவர்ச்சியால் அவன் பீடிக்கப்படுகிறான்.
     
  93. மனம் ஒரு செய்தியை, நிகழ்ச்சியை, தானறிந்ததைக் கொண்டு புரிந்து கொண்டால், அது அபிப்பிராயமாக மாறுகிறது. அவற்றை ஆராய்ச்சி செய்தால், அதனுள் உள்ள கருத்து விளங்கும். செய்தி அல்லது நிகழ்ச்சி வந்தால், அதைச் சரணம் செய்தால், அதனுள் பொதிந்துள்ள ஒளி தெரியும்.
     
  94. அனுபவத்தின் சாரம் சமத்துவம்.சக்தி தன் வேகத்தால் சாரத்தைக் கடந்த காலத்தில், அது எதிர்பார்ப்பாகிறது.
     
  95. எதிர்காலத்தில் நடக்கக்கூடியவற்றை அறிவது கற்பனை. நடக்கக் கூடாதவற்றை எண்ணித் திருப்திபடுவது கற்பனைக்கோட்டை.
     
  96. மனத்தின் திறன் எந்த நிமிஷமும் நல்லதாகவோ, கெட்டதாகவோ, இரண்டும் இல்லாததாகவோ இருக்கும். கெட்டதையும், மற்றதையும், நல்லதாக மாற்றினால் அன்னை அதிகமாகச் செயல்படுவார்.
     
  97. நல்லெண்ணத்தின் நிறைவு மனத்தைக் கடந்து வழிந்த சமயம், வருமானம் 10 மடங்காகி அவருக்குப் புரியும் முன் மேலும் மூன்று மடங்காகியது. இடையறாத நல்லெண்ணத்தைவிட உயர்ந்தது எதுவும் இல்லை எனச் சொல்லத் தோன்றுகிறது.
     
  98. உணர்வில் நாம் நிலைத்தால், அன்னை ஜீவியம், உலகிலுள்ள உயர்ந்த உணர்வுகளையெல்லாம் உற்பத்தி செய்யும். உணர்வே அன்னையை நாடினால், அவை நிரந்தரமாகும். நம் முழு ஜீவன் அன்னையை நாடி, சொந்தமாகப் பெற்று, அன்னையால் நாம் சுவீகரிக்கப்பட வேண்டும் என்பதே நம் இலட்சியம். உணர்வில் நிலைப்பு முதல் நிலை.
     
  99. அன்னையின் ஸ்பர்சத்தை ஜீவனில் அனுபவித்தவனால் வேறெதையும் அனுபவிக்க முடியாது.
     
  100. சிருஷ்டி ஆனந்தத்தை, சிருஷ்டி, ஆனந்தமாக்குவதைப் போல், அன்னை ஜீவியம் சிருஷ்டி ஆனந்தத்தை, பரிணாம வளர்ச்சியடையும் ஆன்மாவின் சிருஷ்டி ஆனந்தமாக்குகிறது. பரமாத்மாவின் ஸ்பர்சத்தைப் பெற்றதால் இது முடிகிறது.

******



book | by Dr. Radut