Skip to Content

07 . பாகம் - 7

  1. நம் உணவு, உறவு, படிப்பு ஆகியவை நம் ஆர்வத்தை நிர்ணயிக்கின்றன. ஆனால் இது மேல்மனத்தைப் பற்றிய உண்மை, ஆழம் பாதிக்கப்படுவது இல்லை.
     
  2. ஒரு நிலையைக் கடக்க ஆதாயம் உதவாது, இலட்சியமே உதவும். ஒரு முறையாக நாமுள்ள நிலைக்குரிய தோற்றமாக இலட்சியம் மாறுகிறது, அடுத்த நிலைக்குரிய விஷயமாவதில்லை.
     
  3. உண்மையில் விஷயம் உயர்ந்தது. ஒரு நிலையிலிருக்கும் பொழுது அங்கு சாதிக்க நினைத்தால், தோற்றத்தைவிட விஷயம் முக்கியம்.
     
  4. மாறும் நேரத்தில் அடுத்த நிலைக்குரிய விஷயம் இந்நிலையில் பலஹீனமாக இருக்கும். இந்நிலைக்குரிய விஷயமில்லாத நேரம், இந்நிலைக்குரிய தோற்றமே சாதிக்கும்.
     
  5. இருக்கும் விஷயம், இல்லாத கற்பனையைவிட நல்லது.
     
  6. பகுத்தறிவு, தர்க்கம், நியாயம் மனத்திலிருந்து உணர்வுக்குப் போகவோ, ஆன்மாவுக்குப் போகவோ உதவா. உணர்விலுள்ளவர் வலிமையால் செயல்படுகிறார்கள். ஆன்மாவுக்குப் போக வலிமை வேண்டும். இரண்டு இடத்திலும் பகுத்தறிவு பலன் தராது, வேலைக்கு வெடி வைக்கும்.
     
  7. யோகத்திற்கு முதலாகத் தேவையானது சரியான நோக்கம், முறையல்ல. உணர்வோடு கலந்த நிலையிலிருந்து வெளிவந்து பிராணமய புருஷனைக் காணும் நோக்கம் தேவை.
     
  8. பெரிய சித்தியும் சிறிய செயலை நம்பியுள்ளது.
     
  9. எவ்வளவு பெரிய அம்சமும், திறமையும் சிறு செயலிலுள்ள பொருத்தம் இல்லாத நோக்கத்தை மீறி அருளைச் செயல்பட அனுமதிக்காது.
     
  10. பெரிய நல்லது நம் குறையை மீறி நடப்பது, நம் குறைகளைத் தாண்டி அதிகபட்சம் நடக்கக்கூடியதே. சொல்லப்போனால், நம் குறைகள் நம் கண்மூடித்தனத்தால் திசை மாறிய நேரம் நல்லவை நடக்கின்றன.
     
  11. செல்வாக்குள்ள கட்சியில் தனி மனிதன் திறனற்றவன்.சமூகத்தில் தனி மனிதன் மேலும் திறனற்றவன். மேல்மனம் மனிதனைப் பிரதிபலிக்கிறது. அடிமனம் பிரபஞ்சத்தைக் காட்டுகிறது. மலை முன் சிறு கல் போன்ற நிலை. இறைவன் முன் பிரபஞ்சம் சிறு கல் போன்றது.

    இறைவன் முன் மனிதன் தூசி என்பதை அறிவது சிரமமில்லை.
     
  12. நம்மை நல்லவர் என அடுத்தவர்க்கு நிரூபிக்க நாம் முயலுகிறோம். அடுத்தவர் மனத்தால் சிந்திப்பவர் என நினைப்பதால் அதைச் செய்கிறோம். அது சரியல்ல. பிரச்சினைகள் உணர்வாலானவை, மனத்தால் அவற்றைத் தீர்க்க முடியாது.
     
  13. பிறர் நியாயமாக இருக்க வேண்டும் என நினைப்பவன் தான் நியாயமாக இருக்கமாட்டான். வேலைக்குத் தகுந்த திறமையற்றவர், வேலை நியாயம் எனப் பேசுவார்.
     
  14. ஜடத்தின் திறன், அறியாமை.ஜடத்தன்மையை முயன்று பெற்றது போல் அறியாமையையும் முயன்று பெற்றோம்.
     
  15. குரு தன்னைப் பயன்படுத்துவதே சிஷ்யனுக்குப் பரிசு. அவனது தனி உரிமை, குரு அவனை தவறாகப் பயன்படுத்துவது, அவனுக்குத் தவறு செய்து தூர எறிவதேயாகும்.
     
  16. கண்ணுக்குத் தெரிந்த சேவை நம்மை உயர்த்தும். தெரியாமல் செய்யும் சேவை புனிதப்படுத்தும்.
     
  17. மேலே போகும் பொழுது சைத்திய புருஷன் அன்னையாகும்.

    கீழே வரும் பொழுது அன்னை சைத்திய புருஷனாகும்.
     
  18. வாழ்வின் சிறுமையை நிந்திப்பதும், பெருமையைப் போற்றுவதும் நாம் பழைய வாழ்வை விட்டகலவில்லை என அறிவிக்கும்.
     
  19. பரிணாம வளர்ச்சியை நாடுபவனுக்குப் பழைய வாழ்வில் பயன்படும் அம்சம் ஒன்றுகூட இல்லை. பழைய வாழ்வு முழுவதும் உணர்வாலானது. இன்று நம் முழு முயற்சியும் உணர்வைக் கடப்பது. எனவே பழைய வாழ்வின் அம்சங்கள் உதவா.
     
  20. சமூகத் தோற்றம், உணர்வு ஏற்கும் தோற்றம் ஆகியவை மனத்தைக் கவரும். இக்கவர்ச்சி அழிவது முதிர்ச்சி.
     
  21. முதிர்ச்சியின் உயர்ந்த புறத் தோற்றம் விவேகம்.
     
  22. அனுபவத்தின் விவரங்கள் கரைந்து ஏற்பட்ட ஞானத்தின் சுருக்கம் முதிர்ச்சி.
     
  23. மனித விவேகம் தன் தோற்றத்தை இழந்தால், தெய்வ விவேகமாகிறது.
     
  24. சக்தி ஜீவியத்துடன் சேருமிடம் விவேகம் உற்பத்தியாகிறது.
     
  25. மனிதப் பூரணம் (perfection) என்பது குறையான நிலையில், பூரணமான வெளிப்பாடு.
     
  26. பூரணமான நிலையும், அமைப்பும் உள்ள இடத்தில், வெளிப்பாடு இயற்கையாகவே பூரணமாக இருப்பது, தெய்வப் பூரணம்.
     
  27. பூரணப் பூரணம் என பகவான் சொல்வது தெய்வப் பூரணத்தை மனித வாழ்வில் கொண்டு வருவதில்லை. ஆனால் மனித ஜீவியத்தைத் தெய்வ ஜீவியத்திற்கு உயர்த்தி, பின்னர் அங்கு பூரணத்தை வெளிப்படுத்துவது ஆகும்.
     
  28. அகந்தையின்றிப் பார்த்தால் சத்தியம் சக்தியாகத் தெரியும்.
     
  29. அனந்தம் கண்டமாவது சிருஷ்டி.

    கண்டம் தன்னை அனந்தமாகத் திருவுருமாற்றுவது பரிணாமம்.
     
  30. சிறியது பெரியதிடம் முரடாக நடப்பது தானும் பெரியதாக விழைவதைத் தனக்குரிய பாணியில் தெரிவிப்பதாகும்.
     
  31. யோகம், அதன் முறைகள் எல்லாம் சுருங்கி தியானத்தில் முடிகின்றன. ஒவ்வொரு யோகமும் தியானத்தின் வகையை நிர்ணயிக்கும். பூரண யோகம் சைத்திய புருஷனில் தியானிக்கிறது.
     
  32. பிரபஞ்சம் மனிதனில் நிலைத்துச் செறிவதால் ஆன்மா உண்டாயிற்று. மனிதன் பிரபஞ்சத்தின் தியானத்தைத் தொடர்வது யோகம். எனவே யோகம் என்றால் தியானம்.
     
  33. அகவுணர்வு சுயக் கட்டுப்பாட்டைப் பெறும் முன் முன்னேற்றத்தை விழையும் பொழுது, புற உணர்வு அதை நோக்கி வந்து தீண்டும் பொழுது, வலி ஏற்படுகிறது. அக வாழ்வு வலியை வரமாகப் புற வாழ்வைக் கேட்கிறது.
     
  34. சாதகன் தீர்க்க வேண்டியது பிரச்சினையில்லை.அதன் மூலமான அகந்தையைக் கரைக்க வேண்டும்.
     
  35. புத்திசாலித்தனம் புரிந்துகொள்ள, அறிவுப்பூர்வமான விளக்கம் அளிக்கிறோம்.
     
  36. அர்த்தமற்றவருடன் அர்த்தபுஷ்டியாகப் பேசுவது அர்த்தமற்றதாகும். உணர்வுபூர்வமானவர்கள், சுயநலமிகள், புதியதைப் பழைய நோக்கில் புரிந்துகொள்பவர்கள் அர்த்தமற்றவர்கள்.
     
  37. பலஹீனமானவரை நியாயமாக நடத்தினால், அவரைத் தமக்குப் பணிய வைக்க அல்லது அழிக்க அவருடைய உதவியைக் கேட்பார்கள்.
     
  38. அவசரம் பயன்படாது எனத் தனக்கே 20, 30 வருஷமாகச் சொல்லிக் கொள்பவர், அறிவு ஏற்றுக்கொண்டதை உணர்வு ஏற்க இவ்வளவு நாளாயிற்று என்று அறிய வேண்டும்.
     
  39. "எனது நோக்கம் சரி” என்று கூறுவதற்குப் பதிலாக, "சரியான நோக்கத்தை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்பது மாறுவதற்கு அடையாளம்.
     
  40. தன்னைக் கட்டுப்படுத்த முடியாததாலோ, அல்லது சுயநலத்தாலோ உனக்குத் துரோகம் செய்தவர் மீதுள்ள வெறுப்புக்கு வெட்கப்பட்டால், உணர்வில் பிரம்மம் வெளிப்படுகிறது எனப் பொருள்.
     
  41. யாருடைய தொடர்பு அர்த்த நாசம் தருமோ அவரிடமிருந்து விலகுவது அறிவுடமை. அவனே போகும் வரை காத்திருக்கும் பொறுமை, யோகத்திற்குத் தேவை. விலக்குவது "ஆரம்ப”மாகும்.
     
  42. அபார திறமையுள்ளவரிடம் சிறு ஆசை தன்னை வலியுறுத்தி, சாதனையைத் தள்ளிப்போடும்.
     
  43. அருளால் நடந்ததைக் காரணத்தால் விளக்கினால், அருள் விலகும். எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்ய (rationalisation) காரணம் கற்பிப்பது தடை.
     
  44. ஒரு குடும்பம், ஸ்தாபனத்தில் ஒருவர் உயர்ந்த கட்டுப்பாடுடையவரானால் அது குடும்பத்தை உயர்த்தப் பயன்படாது. மாறாக, சூழலின் உயர்வு தாங்காமல் அழிச்சாட்டத்தை நாட மற்றவர்களைத் தூண்டும்.
     
  45. உயர்ந்த கட்டுப்பாடும், உயர்ந்த ஜீவியமும் உள்ள ஒருவரால் ஒரு குடும்பமோ, ஸ்தாபனமோ பலன் பெற ஒரே வழி, அனைவரும் தாங்களே விரும்பி உயர்ந்த கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வதுதான்.
     
  46. இருக்கும் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, ஏற்றுப் பணிபவருக்கு, சாதனை நாடி வரும். சூழ்நிலை தனக்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துபவருக்கு, சாதனை ஒருபொழுதும் வருவதில்லை.
     
  47. உள்ளத்தில் தயாராகி, வெளியே பலன் தருவது வேலை. அக உணர்வைவிட, புறச் செயல் நீண்ட காலத்துப் பிரச்சினையை எழுப்பும். பிரச்சினையின் அளவு செயல், உணர்வை மீறுவதால் நிர்ணயிக்கப்படும்.
     
  48. குழந்தைகள் திருந்தி ஆதரவு தருவார் என பெற்றோர்கள் எதிர்பார்ப்பார்கள். தலைவர்களும், குருமார்களும் அதே போல் எதிர்பார்ப்பதுண்டு. இவை பலஹீனத்தை வலுப்படுத்தி, பெற்றோருக்கும், தலைவருக்கும் தீங்கு செய்யும்.
     
  49. வலிமை எளிமையை ஆதரித்தால், எதிரிக்கு ஆயுதம் அளிப்பது போலாகும்.
     
  50. சுயக் கட்டுப்பாட்டால் தன்னை உயர்த்த பலஹீனம் முன்வருதல், வலிமையால் பலஹீனம் பயன்பட உதவும். இது முடியும் என்றாலும், பார்ப்பது அரிது.
     
  51. பலஹீனத்தை அது போல் செயல்பட வைக்கும் வலிமை, பலஹீனத்தின் வித்தான வலிமையை வெளிக்கொணரும் திறனுடையது.
     
  52. பலனுக்கான பிரார்த்தனை இறைவனை திசை திருப்புவதாகும்.மேலே போய் முழுமையடையும்படி வாழ்வை உயர்த்துவது பரிணாமம். குறிப்பான பிரார்த்தனை எளியவனுக்குப் பரிணாமம்.
     
  53. பிரார்த்தனை, பெரும் பலனளிக்கும் சுருக்கமான வழி, தன் பலஹீனத்தைக் கண்டு களைதல், அல்லது தன் வலிமையைச் சற்று உயர்த்துதல்.
     
  54. காலம் அகந்தைக்கு முந்தையது.அகந்தையை அழிக்கும் முன் காலத்தைக் கடக்க வேண்டும்.
     
  55. நம்மை மாற்றிக் குறைகளை நீக்கலாம்.அருளால் வரும் குறைகளை அது போல் மாற்ற முடியாது. அடுத்த, உயர்ந்த நிலையில் அவற்றைத் திருத்த வேண்டும்.
     
  56. ஆழ்ந்த பக்தன் தனக்குத் தவறு நடக்காது எனலாம். ஆனால் யோகியால் அதைச் சொல்ல முடியாது. தனக்கு நடப்பதெல்லாம் நல்லது என அவன் சொல்ல வேண்டும்.
     
  57. அருள், அழைப்பை ஏற்கிறது.மனிதனைப் பொருத்தவரை அழைப்பே அருள்.
     
  58. சிந்தித்தால், நான் எண்ணமாவேன்.சிந்தனையை நிறுத்தினால் மௌனம் வரும். தொடர்ந்தால், சைத்திய புருஷனை அடையலாம். அதுவே எண்ணத்தைச் சரண் செய்ய முடியும். எனவே மனிதன் சிந்தனையை நிறுத்த வேண்டும்.
     
  59. அகந்தையைக் கரைக்க முற்படுவதிலும் முதன்மையாக இருக்க அகந்தை விழையும்.
     
  60. சக்தி ஜீவியத்திலிருந்து பிரிந்து கண்மூடி அனுபவம் தேடுகிறது.அதன் சாரம் சைத்திய புருஷன். அது சக்தியையும், ஜீவியத்தையும் உயர்ந்த நிலையில் சேர்க்கும்.
     
  61. சக்தியின் ஜீவியம் பரிணாமத்தால் வெளிவருவது சைத்திய புருஷன்.
     
  62. அழியும் சமுதாயம் தன் வலிமையை இழந்த பின், அடுத்த பெரிய கருவியாகப் பயன்படுத்துவது கேலி.
     
  63. உலகப் பேரிலக்கியம் உயர்ந்த உணர்வின் காதலை வர்ணித்திருக்கிறது. சைத்திய அன்பை விவரித்ததில்லை. சைத்திய அன்பு தெய்வத்தை நோக்கிச் செல்லும், அடுத்தவருக்குப் போகாது.
     
  64. சைத்திய அன்பு தன்னிறைவுள்ளது.தான் வாழ அல்லது (வெளிப்பட) வளம் பெற அடுத்தவர் அதற்குத் தேவையில்லை. நிபந்தனையின்றிச் செயல்படுவது அது. குறிப்பிட்ட உறவை நாடாது, நம்பியிருக்காது.
     
  65. ரோமியோ, ஜூலியட் காதல் தீவிரமான உணர்வாலானது. டாண்டேக்கு பியாட்ரிஸ் மீதிருந்தது இதயத்தின் உணர்வு உயர்ந்த பின் எழுந்த அன்பு. அதுவே மனிதனுடைய உச்ச கட்டம்.
     
  66. ஒருவரையே நாடும் அன்பு, அதில் பூரணம் காண்பது, சைத்திய புருஷனிலிருந்து எழாது.
     
  67. சைத்திய புருஷனின் சோகம் தன் அன்பைப் பெறுபவரில்லை என எழுந்ததில்லை. சூழ்நிலையில் தன்னைப் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு வருந்துவதே அதன் சோகம்.
     
  68. உணர்வில் கலந்து, உயிரில் திளைக்க மனிதன் பெண்ணை நாடுகிறான். சமூகம் ஏற்படுத்திய இந்த ஆசை சிறு அளவில் மனத்திற்கும் உரியது. சைத்திய புருஷனுக்கும் பெண்ணாசைக்கும் சம்பந்தமில்லை.
     
  69. பக்தி மனிதனை அவனிடமிருந்து பிரித்து ஆன்மீகத்திற்கு எடுத்துச் செல்லும். சைத்திய அன்பை மனித வாழ்வில் தேடுவது பலனில்லை.
     
  70. இந்தியா, ஆன்மீக பூமி. நாடு தன் வலிமையை உணர்ந்த நேரம் அந்நியன் வெளியேறினான்.
     
  71. கண்ணுக்குத் தெரியாத சக்திகள் கடந்த நூற்றாண்டில் மூட நம்பிக்கையை ஏற்படுத்தின. "சமூகம் ஏற்காது” என்ற பயம், விஞ்ஞானிகளுக்கு, இன்று மூட நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
     
  72. பகுத்தறிவை நம்பி விஞ்ஞானிகள் மூட நம்பிக்கைகளிலிருந்து வெளியேறினர். சமூகத்தின் ஆதரவு என்பதிலிருந்து விஞ்ஞானி இப்பொழுது வெளிவர வேண்டும்.
     
  73. அன்பு குறிப்பிட்ட இடத்தில் வெளிப்படுதல் சிருஷ்டியின் ஆனந்தம். சிருஷ்டியின் ஆனந்தம் பொதுவானால் அன்பாகிறது.
     
  74. தனி மனிதனுடைய சிருஷ்டி ஆனந்தம் நன்றியறிதல்.
     
  75. ஆன்மா இறைவனை அறிவது, நம்பிக்கை.
     
  76. மனம் இறைவனைக் காணுதல், அறிவு, ஞானம்.
     
  77. உணர்வு இறைவனை ஏற்பது, வழிபாடு.
     
  78. உடலுக்கு இறைவன் பணிவாக வெளிப்படுகிறான்.
     
  79. உயர்ந்த உணர்வு இறைவனையறிந்து போற்றிப் பாராட்டுகிறது.
     
  80. சைத்திய புருஷனுக்கு இறைவன் தென்பட்டால் அர்ப்பணம் எழும்.
     
  81. அர்ப்பணத்தின் உணர்வு, சிருஷ்டி ஆனந்தம்.
     
  82. சைத்திய புருஷன் முதிர்ந்து இறைவனை ஏற்றால், அன்பெழும்.
     
  83. அன்பால் ஜீவியம் செறிந்து நிரம்பினால், பூரிப்பு எழும்.
     
  84. முதிர்ச்சியடைந்த சைத்திய புருஷன் சரணாகதிக்குத் தயாராகிறான்.
     
  85. சத்தியம் ஜீவியமாக வெளிப்படுகிறது.
     
  86. ஜீவியம் செயல்பட்டால் சக்தியுண்டாகிறது.
     
  87. சக்தி, சிருஷ்டிக்கும் பொழுது எழும் உணர்வு, ஆனந்தம்.
     
  88. சக்தி தன்னை அறிவது சத்தியக் கருத்து.
     
  89. சத்தியக் கருத்து தன் வெளிப்பாட்டை அறிவது, அறியாமை.
     
  90. அறியாமை தன்னுள் உள்ள அறிவை நாடுதல், மனம்.
     
  91. சக்தியைச் செயலிலறிவது வாழ்வு.
     
  92. உணர்வு செயலற்று, உணர்வையிழப்பது, ஜடம்.
     
  93. ஜடம் அதனுள் உள்ள ஆன்மாவை அறிவது, உயர்ந்த வாழ்வு. தன்னை அறியாமல் அதைச் செய்வது, மனித வாழ்வு.
     
  94. ஜடம் தன்னுள் உள்ள ஆன்மாவை அறிவது, பரிணாமம்.அதுவே ஜடம் உணர்வு பெறுவதாகும்.
     
  95. ஜடம் சக்தியின் உருவம்.சக்தி ஜடத்திலுள்ள ஆன்மாவை அறிவது, ஆன்மீகப் பரிணாமம்.
     
  96. ஜீவியம், சக்தியிலுள்ள ஆன்மாவை அறிவது, ஞானம்.
     
  97. அதை உணர்வது, சைத்திய புருஷன் தன்னையறிந்து, சிருஷ்டி ஆனந்தம் பெறுவதாகும்.
     
  98. அவ்வுணர்வு எழுப்பும் செயல், அர்ப்பணம்.
     
  99. ஆசை, குறிப்பாக சிறு ஆசை, சிருஷ்டியின் ஆனந்தத்தை, சைத்திய புருஷனின் சோகத்தின் மூலம் நாடுகிறது.
     
  100. சைத்திய சோகம், சைத்திய சந்தோஷமாதல், பரிணாம வளர்ச்சி அடையும் ஆன்மாவின் பற்றறுத்தலாகும்.

*****



book | by Dr. Radut