Skip to Content

05 . பாகம் - 5

  1. சிறியதன் பொறுப்பைப் பெரியது நினைப்பது சோகமாகும்.
     
  2. சிறியது பெரியதை வெளிப்படுத்துவது, மேலே போவது.
     
  3. பெரியது சிறியதாக வருவது, கீழே வருவதாகும்.
     
  4. சிறியது, சிறியதை வெளிப்படுத்துவது தன்னையறியாத சக்தி சுறுசுறுப்பாகப் பரவுவது. அது சிருஷ்டியாகவோ, தன்னையழித்து அனுபவிப்பதாகவோ இருக்கும்.
     
  5. பெரியது, தூய்மையான நிலையில் மாற முடியாதது.
     
  6. அரசியல் குற்றவாளிகளால் நிறைந்துள்ளது, சக்தி ஜீவியத்தைத் தன்னை மறக்க வற்புறுத்துவதாகும்.
     
  7. அடக்கம் பலஹீனமல்ல, உத்தமனுடைய வலிமை அடக்கம். பரம்பொருளின் முன், தான் சூன்யம் என்ற ஞானம், அடக்கம்.
     
  8. ஆழத்தை எட்டும் கட்டுப்பாடு, பகுதியின் முழுமை அல்லது முழு மேல்மனத்தின் முழுமை.
     
  9. விசாரம் அறிவுக்குரியது.பூரணம் பெற்று நிறையும் பொழுது அது நம்மை ஆழத்திற்குக் கொண்டு செல்லும். அது முடியுமிடம் நிர்வாணக் கதவு.
     
  10. ஜீவனைக் கரைக்கும் விசாரம் போலல்லாமல், தியானம் எண்ணத்திலும், மனத்திலுமுள்ள சக்தியைத் திரட்டுகிறது. அது முழுமை பெற்ற நேரம், ஆழம் திறந்து மனோமய புருஷ தரிசனம் கிட்டும்.
     
  11. மேல்மனத்தின் பூரண சக்தியைத் - எண்ணம், உணர்வு - திரட்டினால் ஆழம் திறந்து கொள்ளும். அவற்றின் சாரத்தை நோக்கி அது சென்றால், சைத்திய புருஷன் வெளி வருவான்.
     
  12. மேல்மனம் நிறைந்து, செறிந்து, பூரித்தாலன்றி எந்த முறைக்கும் அது திறந்து ஆழ்மனத்திற்கு வழிவிடாது.
     
  13. இலட்சியம், தீவிரம் முழுமையானதானால், எந்த முறையும் தேவையில்லை.
     
  14. வாழ்வின் அமைப்பு முறையைச் சொல்லி, சத்தியஜீவிய அமைப்புக்கு நம்மை, பகவான் போகச் சொல்லும் பொழுது, இடையேயுள்ள அமைப்புகளை - உணர்வு, மனம் - புறக்கணிக்கிறார். ஏனெனில் உடலின் அமைப்பு, உண்மையில் மனத்தின் அமைப்பாகும். மனமே ஜடத்தை ஆள்வதால் அது உண்மையில் மனத்தின் அமைப்பாகும்.
     
  15. இறைவன் மனிதனை நினைத்தபின், மனிதன் இறைவனைத் தேடுகிறான்.

    மனிதன், மனித ஆசைகளுக்கு முழுவதும் கட்டுப்பட்டிருக்கிறான்.

    மனிதன் உயர்ந்த வகையில் செயல்பட முனைந்தால், அடுத்தவர் எட்டிப் போவார்.

    மனித இலட்சியத்தை நோக்கி மனிதன் வர, மனிதனிலுள்ள இறைவன் அவனை நாட வேண்டும்.
     
  16. முறைகள் சாதித்திடா. சூழல் தயார் செய்ததை முறை சாதித்திடும்.
     
  17. உடலாலும், மனத்தாலும் ஒரு மனிதனுடைய உலகம் குறுகியது. உள்ளத்தால் அது சில முக்கிய உணர்வுகளாலும், நபர்களாலுமானது.
     
  18. மனிதனுடைய ஆன்மாவை உள்ளத்து வாழ்வோடிணைப்பது ஆழ்ந்த நோக்கங்களாகும் (motives).
     
  19. சமர்ப்பணமும், சரணாகதியும் பூரணம் பெற, ஆழ்ந்த நோக்கங்களை அல்லது ஆழ்ந்த உணர்வுகளைச் சரண் செய்ய வேண்டும்.
     
  20. அவற்றை ஆனந்தம் அல்லது ஜீவியமாக மாற்றினால், சச்சிதானந்தத்தை எட்டலாம். இல்லாவிட்டால், அவை அகந்தை, ஆசையாக இருக்கும், அல்லது சில்லறை ஆசையாக மாறும்.
     
  21. அதிக சக்திவாய்ந்த நடைமுறை இலட்சியம், ஆர்வம் மிகுதியான வாழ்வில்தானிருக்கும். இன்று மனிதகுலம் அது போல் கருதுவது பணம்.
     
  22. கீழிருந்து நாம் பணத்தை எட்டினால் அது அசுரன்; மேலிருந்து அதை நாடினால் அது அன்னையின் சக்தி.
     
  23. சுயநலமின்றி உள்ள நிறைவோடு பின்பற்றிய உயர்ந்த இலட்சியம், தீவிர வேகம் பெற்று மனிதனை ஆட்கொள்ளும். அதையும் மனக்குறையின்றி விட்டுவிடலாம். ஏனெனில், மனக்குறை தீவிரத்தின் வகையைச் சேர்ந்தது.
     
  24. வெளித் தொடர்பைப் பத்திலொன்றாக, நூறில் ஒன்றாகக் குறைக்க முன்வந்து, மனத்தால் மாறவில்லை எனில், மீதியிருக்கும் உறவுகள், அர்த்தமற்றவையோ அர்த்தமுள்ளவையோ, பழைய தீவிரத்தை இருப்பதில் ஏற்படுத்தவல்லது. மொத்தத்தில் நிலைமை மாறாது.
     
  25. பிறருக்கு உதவி செய்யும் நிலையிலுள்ளோர், மனம் விசாலப்படுவதற்குப் பதிலாக, மனத்தால் குறுகி நலிவது, வாழ்வின் விந்தைகளில் ஒன்று. தாராள குணம் இந்தச் சட்டத்திற்குக் கட்டுப்படாது. உன்னத குணம் இந்நிலையில் மேலும் உன்னதமாகவும், அடக்கமாகவும் மாறும்.
     
  26. கட்டுப்பாட்டால் அகந்தையை எங்கு கரைத்தவரும், சமூகப் பழக்கத்தால் உறவு, வயது ஆகியவற்றைப் பாராட்டலாம். அகந்தையானவருக்கு இது போன்ற காரணத்தால் பணிந்தால், பலன் பாதாளத்தில் நம்மைத் தள்ளும்.
     
  27. கடந்த கால குறைகளைக் களைதல், எதிர்கால முன்னேற்றத்திற்கு அவசியம். இன்று மனம் உண்மையால் உயர்ந்தால், சட்டத்தை மீறி, களையாத குறைகளைப் புறக்கணித்து, எதிர்கால முன்னேற்றத்தைத் தரும்.
     
  28. இம்‘முறை’யை அன்னை, ஜீவிய முறையை உயர்த்துவது என்கிறார். எவரையும் அன்னை திருந்தும்படிச் சொல்வதில்லை. அவர்களுக்கு அருளை, தம் கவனிப்பை அதிகரித்துக் கொடுக்கிறார்.
     
  29. "மேல்மனதிலிருந்து கட்டுப்பாட்டால் உள்ளே போகலாம்” என்கிறார் பகவான்.

    அந்தக் கட்டுப்பாட்டின் பகுதிகள் :

    • கடந்த காலத்தைப் பற்றி வருந்துவதில்லை.
       
    • கடந்தது எதையும் மனம் இதமாகப் போற்றக்கூடாது.
       
    • அபிப்பிராயம், பிரியம் போன்ற மனத்தின் சிறு பகுதிகளால் எதையும் புரிந்து கொள்ள முயலக்கூடாது.

     
  30. விழிப்பில் ஒருநிலை என்பது ஒருநிலைப்படுவது ஜீவனெங்கும் பரவுவதாகும். ஒரே சமயத்தில் எல்லா இடங்களிலும் ஒருநிலைப்பட்டு இருப்பதாகும்.
     
  31. சமமானவர் உயரும் பொழுது எழும் பொறாமை, தாழ்ந்தவர் உயர்ந்து உன்னை நோக்கி வரும் பொழுதும் எழும்.
     
  32. செல்வமும், சௌகரியமும் அந்தஸ்தாகாது. உயர்ந்தவரோடு சமமாகப் பழகுவதையும், தாழ்ந்தவரினின்று விலகி உயர்ந்திருப்பதையும் பொருத்தது அந்தஸ்து.
     
  33. சச்சிதானந்தத்திலிருந்து ஜடம் வரை அமைப்பும் (constitution), அதன் சட்டமும் ஒன்றே. வெவ்வேறு நிலைகளில் அது வெவ்வேறாகக் காணப்படுகிறது. நேர் எதிராகவும் காணப்படும். ஆனால் அடிப்படை ஒன்றே.
     
  34. மனதைக் கடக்கும் முயற்சியில் அடுத்தவர் கோணத்தில் பார்ப்பது பெரிய முன்னேற்றம் என்றாலும் அது மனத்தின் எல்லைக்குள் உள்ள முன்னேற்றமாகும்.
     
  35. அறியாமை மனம், இருண்டது.உணர்வு மனம், ஓரளவு சூட்சுமமானது. சிந்தனைக்குரிய மனம், முழுவதும் சூட்சுமமானது. தன் கருமையை விட்டு, பாரபட்சத்தையும் இது விட முன்வந்தால், சத்தியஜீவியத் தொடர்பை இது மீண்டும் பெறலாம்.
     
  36. இழந்த தொடர்பை மனம் பெற, எண்ணம் ஞானமாகி, புலன்களிலிருந்து விடுபட வேண்டும். அபிப்பிராயம் போன்ற சிறு நோக்கங்களை மறக்க வேண்டும்.
     
  37. வெளிச் சக்திகள் புண்படும்படி நம்மைத் தீண்டுகின்றன.இது புறச் சக்திகளின் செயல் அல்ல. அகவுணர்வு தன்னைக் காண புறச் சக்திகளின் உதவியை நாடுவதால், புறச் சக்திகள் நம்மை நோக்கி வருகின்றன. அவற்றின் ஸ்பர்சம் நம்மைப் புண்ணாக்குகின்றது.
     
  38. எண்ணம், உணர்வு, அசைவு நின்றால் மனம் ஸ்தம்பிக்கும், உடல் அசைவிழக்கும். உள்ளுணர்வுகள் அசைவை இழந்தால் ஜீவன் ஸ்தம்பிக்கும்.
     
  39. அசத் அசத்தாக, ஜடம் ஜீவியமாக, உணர்வற்ற நிலை ஆனந்தமாக, பல இடைப்பட்ட நிலைகள் உள்ளன. அவை :

    ஜீவன் சலனமற்று இருப்பது, அக அசைவுகள் நிற்பது, தன்னை மறந்த நிலையை விட்டு வெளிவருதல், சக்தி வெளிப்பட மறுப்பது, அமைப்பு கரைவது, கீழ் நோக்கத்தை மேல் நோக்கமாக்குவது, சக்தி ஜீவியத்தை நாடுவது, உயர் அமைப்பை நாடுவது.
     
  40. பிரபலமான பீச்சில் கடலைக் கண்டால், கடல் அங்கு மட்டுமல்ல, கடற்கரை எங்கும் காணலாம். சித்தி பெற்றவரிடம் இறைவனைக் காணலாம். ஆனால் இறைவன் அவரிடமட்டுமல்ல, அனைவரிடமும் இருக்கிறான்.
     
  41. மனம் கற்பனையில் ஈடுபடுவது, உணர்வு தன்னை மறந்திருப்பது ஆகியவை சுறுசுறுப்பானவரின் சோம்பேறித்தனம்.
     
  42. அறிவைவிட உணர்வு இலட்சியத்தைப் பூர்த்தி செய்யும்.உடல் இலட்சியத்தை ஏற்றால், பூர்த்தி பூரணமாகும். ஞானம், பக்தி, கர்மத்திற்கு யோகத்தில் வித்தியாசமுண்டு. அன்னையின் யோகத்தில் அவை ஜீவியம், ஆனந்தம், சத்தியம்.
     
  43. ஒரு பகுதியோ, பகுதியின் பகுதியோ தயங்கினால், சரணாகதி பூர்த்தியாகாது. பூரண சரணாகதிக்கும் சில சமயங்களில் குறையுண்டு.
     
  44. குறையுள்ள பூரண சரணாகதி செயல்படும்; பலன் தரும்.பூரணமாகாத சரணாகதிக்கு ஆரம்பமேயில்லை.
     
  45. நிம்மதியாகச் சற்று இருக்கலாம் (relaxation) என்பது ஆழ்மனம் தன்னைத் தன் போக்கில் செலுத்த ஆசைப்படுவதாகும்.
     
  46. பூரண சரணாகதியின் பக்குவம், அன்னை சக்தியை மழையாக அழைக்கும். அம்மழை வந்தால் சரணாகதி பூரணமானதாக அர்த்தமல்ல.
     
  47. சக்தி மழையாகப் பொழிய பல காரணங்களுண்டு. முக்கியமான காரணம் அருள். பூரண சரணாகதி அவற்றுள் ஒன்று.
     
  48. நம் சிரமங்களை, சக்தி மழைக்குச் சமர்ப்பணம் செய்தால், அவை கரையும். சக்தி மழை நிரந்தரமாகும் அக அமைப்பை நாம் ஏற்படுத்தலாம்.
     
  49. புற நிகழ்ச்சிகளை அகவுணர்வாக மாற்ற, நாம் அவற்றைக் கடக்க வேண்டும். அறிவு, பற்றறுத்தல், திரும்பத் திரும்பச் செய்வது அவற்றைக் கடக்க உதவும்.
     
  50. எல்லாக் கரணங்களும், எல்லாச் செயல்களும் அனந்தம் என்பதால் அறிவு, பற்று ஆகியவற்றைக் கடக்கும் அவசியம் அவற்றிற்கில்லை.
     
  51. ஒவ்வொரு பகுதியின் ஜீவன் அப்பகுதிக்குள்ள அளவை நிர்ணயிக்கிறது. ஜீவனின் இஷ்டப்படி அளவை மாற்றலாம்.
     
  52. அழிவான அனுபவம் செயலின் பலனைக் குறைக்கும். செயல் நம் நிலையிலிருந்தால் பலன் குறையும். அடுத்த நிலைக்கு உயர முயல்பவனுக்கு அழிவான அனுபவம் அனைத்தையும் அழிக்கும்.
     
  53. சாதிப்பவர்கள் வேலையை நினைத்துக்கொண்டிருப்பார்கள். சாதிக்காதவர்கள் பலனை நினைத்துக்கொண்டிருப்பார்கள்.
     
  54. விஷயத்தை நாடுபவன், தோற்றத்தைப் போற்றுபவனைத் திருப்திப்படுத்த முயன்றால் காரியம் கெடும்.
     
  55. அப்படி திருப்திப்படுத்திவிட்டால், முயற்சி முழுமையாக வீணாகும்.
     
  56. சமூகத்திற்குத் தோற்றம் முக்கியமாகி, விஷயத்தையே கெடுத்துவிட்டது.
     
  57. நினைவு வரும் கடந்த காலம் உடலின் ஜீவியத்திற்குரியது, குறிப்பாக, அதன் அகந்தைக்குரியது.
     
  58. பூரண பலனை முறையான மனிதர்கள் பெற முடியாது. அவன் முயற்சி அவன் குறையின் அளவைக் காட்டும்.
     
  59. 5 வருஷத்தில் முடியாததை முடிக்க முயலும் திட்டத்தை 5 வாரத்தில் முடிக்க, ஆழத்தைத் தொடும் சமர்ப்பணம் உதவும்.
     
  60. முயற்சிகளில் சிறந்தது மனத்தால் எழும் முயற்சி. எனவே அதுவே கடுமையானதும்கூட.
     
  61. கெட்டது என்பது நல்லதால் வெளிப்படுத்த முடியாத முழுமையின் மற்றொரு பகுதியை வெளிப்படுத்துவது என்ற யோகக் கருத்தை சமூகம் அறிந்தால், இந்த நூற்றாண்டில் சமூக முன்னேற்றம் வளர்ந்தது.
     
  62. சிறப்பான திறன், பூரண சமர்ப்பணம், காலத்தைக் கணத்தில் காண்பது, ஆழத்தை நாடுதல் போன்ற யோக முறைகள் அனந்தனின் அளவுகடந்த சக்தியை, கண்டமான மனித வாழ்வில் கொணர்ந்து, கண்டத்தை அகண்டமாக்க முயல்கிறது.
     
  63. அனந்தனை அனந்தனே காண்பான். எனவே ஜீவாத்மாவும், சைத்திய புருஷனுமே கண்டத்தில் அகண்டத்தைக் காண முடியும்.
     
  64. ஜடத்தைக் கடந்த நிலையைப் பலாத்காரத்தைப் பயன்படுத்தாத மனநிலை காட்டும். அதன் ரூபங்களான அதிகாரம், செல்வாக்கையும் அவனால் பயன்படுத்த முடியாது.
     
  65. பொறுக்கக்கூடாததை அனுமதிப்பது, கட்டுப்பாடான பொறுமை (tolerance). ஞானத்தால் அக்காரியத்தில் இறைவன் திருவுள்ளத்தை அறிந்து அமைதியாக இருப்பது பொறுமை (patience).
     
  66. வெவ்வேறு தன்மையான மனிதர்கள் ஒரே ஸ்தாபனத்தில் வெவ்வேறு பலனுக்காக வேலை செய்தால், ஸ்தாபனம் தன் சக்திக்குக் குறைந்ததைச் சாதிக்கும். இப்படிப்பட்டவர் அதிகபட்ச சாதனை, திட்டத்தின் குறைந்தபட்சமாகும்.
     
  67. வேலையிருந்தால் உறவு நீடிக்கும். உணர்வால் நட்பு நீடிப்பதில்லை. ஏனெனில் அடுத்தவரை ஆளும் நினைப்பு எப்பொழுதும் வரலாம். அக்குறையில்லாவிட்டாலும் உணர்வின் தீவிரம் குறைந்தால் நட்பு மறையும். தீவிரம் சற்று நேரத்திற்கு மேலிருக்காது.
     
  68. உணர்வில் தீவிரம் நீடிக்க, தொடர்ந்து உயர்ந்த தீவிரத்தை நாடியபடியே இருக்க வேண்டும்.
     
  69. காரியத்தினின்று விலக விலக, தைரியம் அதிகமாகும். நடக்க முடியாத பெரிய திட்டத்தில் நெருக்கம் அதிகமானால் நம்பிக்கை உயரும்.
     
  70. அளவுகடந்த சுதந்திரம், கனவிலும் கருதாத உரிமை, அளவுக்கு மீறிய செல்வம் போன்றவற்றை அவற்றிற்கு உரிமை இல்லாதவருக்கு விரும்பி இனிமையாக வருந்திக் கொடுத்தால், அவை அவனுடைய பிதிரார்ஜிதம், பிறப்புரிமை, சொந்தத் தனியுரிமை, பிறர் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளனர் போன்ற உணர்வோடு பெற்றுக்கொள்கிறான். இவ்வகையில் அவன் ‘அனந்தனை' வெளிப்படுத்துகிறான். பிறர் பொருளை ‘அளவிறந்து' அபகரிக்கும் குணம் அது.
     
  71. வயதானதாலோ, ஓய்வு பெற்றதாலோ அகந்தை அழிந்தாலும், பணத்தின் கவர்ச்சியும், "அதிகாரமும்” இருக்கும். அதிகாரம் போனபின்னும், அகந்தையின் குணம் இருக்கும்.
     
  72. தன் குறிக்கோளுக்கு எதிராக வேலை செய்து ஆர்வமாகப் பலனை எதிர்பார்ப்பது, இலட்சிய மனம் விழிப்போடிருக்கும் பொழுது சுறுசுறுப்பான உணர்வு செயல்படுவதாகும்.
     
  73. தன்னால் முடிந்ததை எல்லாம் செய்பவன் தானுள்ள நிலையில் அதிகபட்சம் சாதிப்பான். அந்நிலையைக் கடக்க, அந்நிலையில் முடிக்கூடிய அத்தனையும் சாதிக்க வேண்டும்.
     
  74. அழிச்சாட்டம் உடலில் சக்தியை நிதானப்படுத்துகிறது.
     
  75. உயர்ந்த கட்டுப்பாட்டை ஏற்காமல் அழிச்சாட்டத்தை நிறுத்தினால், மனம் பேதலித்து நிலைமை தடுமாறும்.
     
  76. தன் நிலையை உயர்த்தாமல், அழிச்சாட்டத்திற்குரிய தெம்பு முழுவதும் செலவாகும் கட்டுப்பாட்டை ஏற்றுப் பலனடைய முடியாது.
     
  77. அழிச்சாட்டத்தை விடுவது எனில், அடுத்த நிலைக்குப் போய் உயர்ந்த கட்டுப்பாட்டை ஏற்பதாகும்.
     
  78. அடக்க முடியாத தெம்பை, அடக்க முடியாத ஆர்வமாக மாற்றுதல் அளவு கடந்த பலன் தரும், எனினும் அது யோக சக்தியாகாது.
     
  79. அடக்க முடியாததை, முழு அடக்கத்திற்குக் கொண்டு வந்தால், அது யோக சக்தியாகும்.
     
  80. அடக்க முடியாத ஆசையை தன்னையறியும் சக்தியாக மாற்றுவது, அதற்குரிய வழுவில்லாத தீர்மானம், திருவுருமாற்றமாகும்.
     
  81. அந்நிலையில் முனைந்து முன்கையெடுப்பது அகந்தை அழிந்தால்தான் முடியும். அது அன்னை நம்மில் முன்கை எடுப்பதாகும்.
     
  82. ஆரம்பம், ஆரம்பத்தின் முனை, அடக்க முடியாதது ஆகியவற்றை சரணாகதி தன்னுட்கொள்ளும்.
     
  83. பிரபஞ்சத்தின் சத்தியம், கவியின் மனதில் சொல்லின் உருவகமாகி, காவியமாகிறது.
     
  84. அன்னையின் கோட்பாடுகளை ஜீவன் ஏற்பதால் ஏற்படும் மனநிலை, அன்னையின் சக்திக்குரிய கருவி; புற ஸ்தாபனமல்ல.
     
  85. மற்ற எல்லா ஸ்தாபனங்களும் சமூகத்தில் அவர் நிலைக்கேற்றதையே அளிக்கவல்லன.
     
  86. தலைவரின் அன்னை கட்டுப்பாட்டுக்குத் தானே உடன்படும் அளவில் அன்னை ஸ்தாபனம் உருவாகிப் பலன் தரும்.
     
  87. ஒரு ஸ்தாபனத்திலுள்ளவரை, அன்னை கோட்பாடுகளை ஏற்க அழைப்பது, உழுவதன் முன் நடுவது போலாகும்.
     
  88. நடைமுறையில் சமூக ஸ்தாபனம், தலைவரின் அகவுணர்வின் உயர்வால், அன்னை ஸ்தாபனமாகும் முறை அது.
     
  89. செல்வம், அரசியல், ஸ்தாபனம் ஆகியவற்றில் இரண்டாம் தலைமுறை, அளவுகடந்த சௌகரியத்தை அனுபவிப்பது இயற்கை. அளவுகடந்த உயர்ந்த கட்டுப்பாட்டைத் தானே ஏற்பது முறை.
     
  90. அடக்க முடியாதது சக்தி, அகந்தையல்ல. அகந்தை மூலம் செயல்படுகிறது.
     
  91. அகந்தைக்குச் சக்தியில்லை. ஸ்தாபன முறையும், நோக்கமும் உண்டு.
     
  92. அகந்தையின் ஸ்தாபன முறை ஜீவனையோ, ஜீவியத்தையோ சேர்ந்தது இல்லை. அதன் சொந்த முறை.
     
  93. பழம்பெருமை மனதிற்கு இனிமையாக இருக்கலாம், இலட்சியமாகாது.
     
  94. பொறுக்க முடியாததைக் கண்டு துடிக்காதது, பாரபட்சம்.
     
  95. அதை நியாயமாகக் கருதுவது கொடுமையை வித்தாகக் கொள்ளும் அநியாயத்தின் உருவம்.
     
  96. அறியாமையின் அறிவையறிய, அறிவை ஒரு முறையாவது சுவைத்திருக்க வேண்டும்.
     
  97. தானே வணங்கி அன்பால் செய்யும் ஊழியம் சேவை.
     
  98. சம்பந்தமில்லாதவர்க்குச் சேவை செய்வது, சக்தியை விரயமாக்குவது ஆகும். உன்னைத் தாழ்வாக நினைப்பவருக்குச் சேவை செய்தால், அழிவு நிச்சயம்.
     
  99. எண்ணில் நிறைவு, முதல்; சொல்லில் நிறைவு, அடுத்தது; எண்ணத்திலும், கருத்திலும் நிறைவு, மூன்றாம் கட்ட நிறைவு.
     
  100. செயல் நிறைவு, மனித நிறைவின் முடிவான கட்டம்.

******



book | by Dr. Radut