Skip to Content

04 . பாகம் - 4

  1. நம்மைத் தேடிவரும் அருளை வரவேற்பதற்குப் பதிலாக, நாலு பேர் என்ன சொல்வார்கள் என யோசனை செய்தால், அருள் விலகுகிறது.
     
  2. முடிவெடுக்கும் திறன், முழு வாழ்வின் திறமையாகும்.
     
  3. மனித குல மாணிக்கங்களைப் பவித்திரமான மாசற்ற பெரியவர்கள் எனவும், நல்ல மனமுடைய, ஆனால் ஒரு விஷயத்தில் அடக்க முடியாத உணர்வையும் கொண்ட இலட்சியவாதிகள் எனவும் பிரித்தால், யோகத்திற்கு, முந்தையவர் உயிரற்ற ஜடம், பிந்தையவர் யோக வாழ்வின் எல்லாப் பரிசுகளையும் பெறுபவர் எனக் காணலாம். இவர்களும் யோகத்திற்குத் தகுதியற்றவராவார்.
     
  4. யோக சித்தி பெறுபவர்கள் மனித குல உத்தமர்களல்லர், கனிந்த ஆத்மாக்கள்.
     
  5. கனிந்த ஆத்மாக்கள் வாழத் தெரியாதவர்கள், புரட்சி வீரர்கள், வக்ர புத்தியுடையவர்களாக இருப்பதுண்டு. சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் அம்சமாவது உள்ளவர்கள் இவர்கள்.
     
  6. சமூகத்தில் தகுதியற்ற நிலையே ஆன்மீக சித்திக்குத் திறவுகோல்.
     
  7. தன்னையழிக்கும்படி, உன்னை நாடுவதை அழிக்காமல், அதன் வேதனையைக் குறைக்க அன்னையை அழைத்தால், உனக்கு வேதனை வரும், வளரும்.
     
  8. சமர்ப்பணம் பலிக்க, வேலையில் நமது கண்ணோட்டம் மாற வேண்டும். நம் வேலைகளை நாம் செய்வதாகக் கருதுகிறோம். நம்மை மீறி, அவை சென்ற காலத்து "தெய்வச் செயல்” என்கிறோம். அதை மாற்றி, நாம் செய்வதையும் தெய்வச் செயலில் சேர்க்க வேண்டும்.
     
  9. தெய்வத்தின் கருவியாக இறைவன் மனிதனைச் சிருஷ்டித்தான். ஆனால் அகந்தை அவனை அவனுடைய கருவியாக்கிற்று. மனிதனை மீண்டும் கருவியாக்க, யோகம், சமர்ப்பணத்தை நாடுகிறது.
     
  10. மனிதனுடைய தோல்விகள் இறைவனுடைய தோல்விகள் அல்ல. அவை அகந்தையின் தோல்விகள். மனிதனுடைய தோல்விகள், இறைவனின் வெற்றி.
     
  11. தோற்க மறுக்கும் அளவுக்கு மனிதன் இறைவனாகிறான்.
     
  12. சமர்ப்பணம், அகந்தைக்குத் தோல்வியைப் பரிசாக அளிக்கிறது.
     
  13. அகந்தையின் வளர்ச்சி மூலம், தான் வளரும் காலத்து, அகந்தை வெல்கிறது.
     
  14. உலகை அற்புதமாகக் காணும் முன் உலகில் செயல்படுபவன் இறைவன், மனிதனல்லன் என அறிய வேண்டும். எண்ணமாகவும், கருத்தாகவும் இதை நாம் அறிவோம். உணர்வாகவும், உண்மையாகவும் நாம் இதை அறிய வேண்டும்.
     
  15. நம் வியாதியுடன் ‘இரண்டறக் கலந்து', அது போக எத்தனித்தால், மனம் புழுங்குகிறோம். ஆழ்மனதில் நம் தரித்திரத்துடன் ஐக்கியமாகி, அதை விட்டுப் பிரிய மனமில்லாமலிருக்கிறோம்.
     
  16. தரித்திரமோ, வியாதியோ அதன் வேலையை முடித்த பின் அல்லது வியாதியும், உடல்நலமும் ஒன்றே என்ற ஞானம் வந்தபொழுது, அல்லது தரித்திரம், அதிர்ஷ்டத்தைப் போன்ற வரம் எனத் தெளிவு பெற்றபின், அவை நம்மை விட்டகலும்.
     
  17. தரித்திரத்தை, வியாதியை விட மறுப்பவர்கள், அதற்குத் துணையாக ஓர் இலட்சியத்தை அழைப்பார்கள். ஒரு கடமை, விஸ்வாசம், ஓர் இதமான இலட்சியத்தை எவருக்காவது அல்லது ஏதாவது ஒரு விஷயத்திற்கு ஏற்றுக் கொண்டு, தங்கள் செயலை நியாயம் என நம்புவர். பிரபஞ்சம் பண்பாக நம்மை வந்தடைவது இது போன்ற நிகழ்ச்சிகளில் வெளிவரும்.
     
  18. யோகத்தை மேற்கொண்ட பின் ஒரு பழக்கம், ஒரு பண்பு, ஒரு மனிதரைக் கைவிட நேர்ந்தால், அதற்குச் சில சட்டம், முறை, கட்டுப்பாடுகள் ஆகியவற்றைப் பின்பற்றுகிறோம். வேறு சில பழக்கம், பண்புகள், மனிதர்களை இன்று ஏற்றுக்கொள்ள அதே சட்டம், முறை, கட்டுப்பாடுகளை அனுசரிப்பதில்லை. ஏற்கனவே நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட - மனிதர், பண்பு, பழக்கம் ஆகியவற்றிற்கு - அவற்றை - சட்டம், முறை, கட்டுப்பாடு - பின்பற்றுவதில்லை.
     
  19. உடலில் பிரம்மத்தைச் சித்திப்பது என்றால், உடல் பழக்கத்தாலும், உணர்வாலும் செயல்படுவதை விடவேண்டும். அதற்கு முன் உணர்வு, எண்ணம், எண்ணமற்ற அறிவு, ஜோதி, நேரடி ஞானம், ஆனந்தம், ஜீவியம் ஆகியவற்றாலும் செயல்படுவதை நிறுத்த வேண்டும். முடிவை எட்டும் முன், உடல் சத்தியத்தையும் விட்டுக்கொடுக்க வேண்டும். சத்தியத்தால் செயல்பட மறுக்க வேண்டும்.
     
  20. சிருஷ்டிக்கப்பட்ட பொருளில் சத்தியத்தாலும் செயல்பட மறுத்த பின்னரே பிரம்மம் சித்திக்கும். சத்தியம் முதல் உணர்வு வரை 12 கட்டங்களுள், ஒவ்வொரு கட்டத்தையும் அததற்குரிய கருவி நிர்ணயிக்கிறது. அவற்றுள் எதுவும் தேவைப்படாமல், பிரம்மம் நேரடியாக உடலை நிர்ணயித்தால் உடலில் பிரம்மம் வெளிப்படும்.
     
  21. சிருஷ்டியின் 12 நிலைகளைத் தெளிவாக அறிவது, அடுத்த உயர்ந்த நிலையை அது எப்படி எட்டுகிறது என்றறிவது முக்கியம்.
     
  22. அத்துடன் சிருஷ்டியின் ஒவ்வொரு நிலையும் இறைவனின் 12 அம்சங்களை- மௌனம், சாந்தி, இறவாமை, அனந்தம், நன்மை, சத்தியம், அழகு, ஆனந்தம், ஜோதி, அன்பு, திறன், காலம் கடந்த நிலை - எப்படி அடைகிறது எனவும் தெரிவது முக்கியம்.
     
  23. ஆசையை அன்பாகத் திருவுருமாற்றம் செய்வதற்குப் பதிலாக, உணர்வுக்கு அன்பு சித்தித்தால், அனைவரையும் நம்மில் காணும்.
     
  24. உடலுக்கு ஜோதி சித்தித்தால் பிரகாசிக்கும். தன்னை அறியாமல் செயல்படுவது தானறிந்த செயலாகும்.
     
  25. தெய்வ மனம் நம்மை மற்ற அனைவரிலும் காண்கிறது. அதற்கு, சத்தியஜீவியம் சித்தித்தால், அனைவரையும் நம்மில் காணும்.
     
  26. தெய்வ மனம் அனைவரையும் நம்மில் காண்பது ஆன்மீக மனத்தின் பார்வை, மனத்தின் உருவகமாகப் பிறரை நம்முள் காண்பது அது.
     
  27. உடல் அனைவரையும் தன்னுள் காண்பது - சத்தியஜீவியம் சித்திப்பது - எதிரே இருப்பவரை நாம் நம்மையே அறிவது போல் அறிவதாகும். அடுத்தவரை நம்முள் அறிவோம்.
     
  28. மனத்திற்கு மௌனம் சித்திப்பது மௌனத்தின் ஆன்மீக அம்சம் சித்திப்பதாகும். அது மனம் சலனமற்றிருப்பதைக் காட்டும். அதை, “ஆன்மீக மௌனம்” மனத்தில் குடிகொண்டது என்பர்.
     
  29. மனம் புரிந்துகொள்ளும் திறனை அழித்து இழப்பதற்கு, ‘மனத்தின் மௌனம்’ எனப் பெயர்.
     
  30. மனம் தன் அமைப்பை இழந்து ஜீவனை விட்டகல்வது - பிரிவினை நிற்பது - மனம் அழிவதாகும். மனத்தின் கடமையைப் பிறகு உணர்வு எடுத்துக்கொள்ளும்.
     
  31. மனமும், உணர்வும் கரைந்து அழிந்தால், உடல் உணரவும், சிந்திக்கவும் ஆரம்பித்து, மனம், உணர்வின் கடமைகளைச் செய்ய முனையும்.
     
  32. உடலின் ஜடப்பொருள் சத்தியஜீவிய ஜடப்பொருளாகி, அது மற்ற எல்லா நிலைகளுடைய திறமைகளையும் பெற்று, மற்ற கரணங்களை அவற்றின் ஆரம்ப உருவத்தில் தேவைப்படாத நிலையை எய்துவது உடல் அழிவதாகும்.
     
  33. மனத்தால் உறவை ஏற்படுத்தும் முன் புறத் தொடர்பை நாடுவது ஆரம்பம் என நான் கூறுவது, அதுவே எல்லா பிரச்சினைகளுக்கும் அஸ்திவாரம்.
     
  34. இனிமையான (புற) உறவிலும், மனதால் வெறுப்பவரின் உதவியால் பலன் பெற நினைப்பது எதிரான பலன் தரும்.
     
  35. ஒரு மனிதரோ, ஒரு விஷயமோ பலன் தர வேண்டுமானாலும், ஆன்மீக ஆசி வழங்க வேண்டுமானாலும், அதற்குரிய போற்றும் மனநிலை அவரிடமோ, அப்பொருளிடமோ இருக்க வேண்டும்.
     
  36. சமூகத்தில் மேல்மட்டத்திலுள்ளவர், சமூகத்தில் தாழ்ந்தவரிடம் ஆன்மீகப் பலன் பெற விரும்பினால், தாம் ஆன்மீகத்தில் தாழ்ந்தவர் என அறிய வேண்டும்.
     
  37. பெரிய மனதுடன் இறங்கி வந்து தாழ்ந்தவரிடம் பலன் பெறச் சம்மதிக்கும் மனதுடன் இதைப் பெற்றுக்கொண்டால் (condescension) அது அவர்களுடைய தாழ்ந்த ஆன்மீக நிலையை மேலும் தாழ்த்துமாதலால், பலன் எதிர்மாறாக இருக்கும்.
     
  38. பெறும் நிலைகள் அனைத்திலும், தான் தாழ்ந்த நிலையிலிருப்பதை உணர்வதே (sincerity) உண்மை நோக்கமாகும்.
     
  39. தகுதியில்லாதவர் பெற்றுப் பலனடையும் வகையிலும், பெறுவதால் அவர் மனம் புண்படாத நிலையிலும் கொடுக்க, ஆன்மாவில் வலிமை நிறைந்திருக்க வேண்டும். அது மனிதச் செயலில் வெளிப்படுவது கருணை.
     
  40. வீணாகும் பொருள்களை சூழ்நிலை எப்படிப் பயன்படுத்தியது என்று அறிவது, ஜடமான சூழ்நிலையை முழுவதும் அறியும் பூரண ஞானமாகும்.
     
  41. செல்வாக்கால் உயர்ந்தவர் தாழ்ந்த நிலையிலுள்ளவரிடமிருந்து ஆன்மீகப் பலன், விவேகம் பெறும் நிலையில் இருப்பார்கள். சமூகத்தில் தங்களுக்குத் தேவையான உதவியையும் அவர்களிடமிருந்து பெறும் நேரமுண்டு. பொருளாகவும் அவ்வுதவியை நாடும் நிலையும் ஏற்படும். இந்நிலைகள், உயர்ந்தவனை, தாழ்ந்தவனைவிடத் தாழ்ந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது என்ற உண்மையை அறிந்து ஏற்றுக்கொள்வது உண்மையான அடக்கம்.
     
  42. சமூகத்திலும், வாழ்விலும், ஒவ்வொருவருக்கும் பிறருடைய சேவை, உதவி, ஆசீர்வாதம் தேவைப்படுகின்றன. சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் உள்ளவரிடமிருந்தும் அவை தேவைப்படுகின்றன. எந்த விஷயத்தில் எவரிடம் உதவி தேவையோ அந்த விஷயத்தில் அவரை நம்பியுள்ளவராவோம். பிறரை நம்பி இருப்பது, தாழ்ந்த நிலையிலுள்ளவன் கீழ்ப்படிதலாகும்.
     
  43. நாம் சமூகத்தை முழுமையாக நம்பியிருக்கிறோம் என்ற பூரண சமூக அறிவைப் பெறுதல், சமூகத்தில் உயர்ந்த அடக்கம் பெறுவதாகும்.
     
  44. ஆன்மீகச் செயலுக்கு, சூழ்நிலையைப் பூரணமாக நம்பியிருக்க வேண்டும். அதை முழுமையாக அறிவது ஆன்மீக ஞானமான அடக்கம் பெறுவதாகும்.
     
  45. தன்னை வந்து சூழ்ந்து வெள்ளமாகக் கவிழ்ந்து கொள்ளும் மனிதச் சூழலை, அன்னை க்ஷணத்தில் விலக்கியிருக்க முடியும். அன்னை, அதனைச் செயல்பட அனுமதித்தார். ஆன்மீக அடக்கத்தின் உச்சம் அது.
     
  46. சுயநலமியால் கொடுக்க முடியாது.தன்னலமற்றவனாக அவன் மாறினால், மாறி கொடுக்க விரும்பினால், பெறத் தகுதியுள்ளவர் கிடைப்பது அரிது. தன்னலமற்றவன் தன்னை பிறருக்குக் கொடுப்பது அர்த்தமற்ற செயல்போல் அடிக்கடி தோன்றும்.
     
  47. ஆர்வத்திற்கு எல்லையுண்டு. விரதத்திற்கும் எல்லையுண்டு.
     
  48. விரதத்தின் தீவிரம் ஆர்வத்தின் வேகத்தை நிர்ணயிக்கும்.
     
  49. விரதமில்லாவிட்டால், ஆர்வம் ஜீவனை இழக்கும். விரதமின்றி ஆர்வம் எழுந்தால், ஆர்வத்தின் பலனை விலக்க வேண்டியவை பெற்றுக் கொள்ளும்.
     
  50. தானே தேர்ந்தெடுத்த கட்டுப்பாட்டிலும் மனிதன் தன்னை இதமாகவே நடத்துவான். தன்னைக் கடுமைப்படுத்துவது குறைவு. இது குருட்டுத்தனமான அறியாமை, உண்மையை அறியாததால் எழுவது.
     
  51. கடுமையான கட்டுப்பாடு, விரதத்தை ஒருவன் ஏற்றுக்கொண்டால், கயவர்களுக்கு அது பெரிய சௌகரியமாகி, வெட்கமில்லாமல் அவனை அழிக்க முயல்வார்கள். அவர்களை விலக்குதல் முறை. பதிலாக நல்ல மனிதன் தன் கடுமையை அதிகப்படுத்துவது வேதனையை விரும்பி ஏற்றுக்கொள்வதாகும்.
     
  52. அந்த நிதானமில்லாதபோது, பொதுவாக நல்லதை அடிப்படையாகக் கொண்டு செய்யும் செயல்கள் அவைகளை அழிக்கும்.
     
  53. பண்பான செயலை, பக்குவமான உணர்வோடு இணைத்தால், வீணர்கள் விலகுவார்கள்.
     
  54. ஆசையைத் திருவுருமாற்றம் செய்ய, ஆசை முதலில் தீவிரமானதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அங்கு அதிக சக்தி வெளிப்படும். திருவுருமாற்றத்திற்கு அதிகபட்ச சக்தி தேவைப்படுவதால், அது வலிமையற்ற ஆசைக்கு இல்லாததால், அதை மாற்ற முடியாது.
     
  55. ஆசையைத் திருவுருமாற்ற சிறந்த நேரம் அடக்க முடியாத ஆசை பீறிட்டெழும் இளமையாகும்.
     
  56. "வாழ்நாள் முழுவதும் ஓர் இலட்சியத்திற்காகச் சேவை செய்தேன்" என்பவர்கள் மனித குலத்திற்கான சாதனையைச் செய்தவர்கள்.
     
  57. அனுபவித்தல் அவசியம், விலக்க வேண்டிய அநியாய ஆசை என்பவற்றைப் பிரித்துப் பார்க்க அவை நம்மை நாடுகின்றனவா, நாம் அவற்றைத் தேடிப் போகிறோமா என்று பார்த்தால் தெரியும்.
     
  58. திருப்திக்கும், நிறைவுக்கும் மனதிலுள்ள வித்தியாசம் அது.
     
  59. திருப்தி களைப்பில் முடியும். நிறைவு புதிய தெம்பை அளவில்லாமல் எழுப்பும்.
     
  60. திருப்தி, செயல்படும் பகுதிக்கு மட்டும். நிறைவு, ஜீவன் முழுவதற்கும் உரியது.
     
  61. தண்டனைக்குரியவனிடம் இதமாக நடப்பது, தன் பலஹீனத்தை வருடிக் கொடுப்பதாகும்.
     
  62. உணர்வின் பெருந்தன்மை தன் தேவைகளைத் தாராளமாகப் பூர்த்தி செய்யும். ஆன்மீகப் பெருந்தன்மை அடுத்தவர் மீது அன்புமழை பொழியும்.
     
  63. பகவானுடைய இலக்கணப்படி, "அதுவும் தன்னையே தான் பிறரில் பாராட்டிக்கொள்வதாகும். பரம்பொருள் முழு சுயநலமி'' என்கிறார்.
     
  64. இனாம் கேட்டறியாத நாகரீக மனிதன், அழையாத விருந்திற்குப் போய் அறியாதவன், பிறர் உரிமையைப் பறித்துத் திருட்டுத்தனமாகச் சுவையை நாடத் தயங்குவதில்லை. உரிமையில்லாத ருசியை விரும்ப முடியாதவனே நாகரீகமானவன்.
     
  65. நியாயமான சுவைகளுக்கும் திருட்டுத்தனமான சாயலிருந்தால் பண்புள்ளத்தின் உணர்வு பதைபதைக்கும்.
     
  66. புகழை நாடுதலே உத்தமனுக்குள்ள குறையானால், பண்புள்ளத்தின் உணர்வு திருவுருமாற்றத்திற்குக் கடைசி விலங்கு.
     
  67. நாமுள்ள நிலையில் அருளின் வருகை நமக்குத் தெரிவதில்லை. சரணாகதி பூர்த்தியானால் அருள் கண்ணுக்குத் தெரியும்.
     
  68. அருளை அறிந்து பெறுதல், யோகம் பலிக்கும் நிபந்தனை.
     
  69. வக்கிரம், பொய் ஆகியவை மனித பாக்டீரியா. அவற்றை இரக்கமின்றி அழிப்பது சேவை. தங்களை அழித்துக்கொள்ள அவை உன்னை நாடுவதும் உண்டு. அவற்றை அழிப்பது வக்கிரத்திற்கும், பொய்மைக்கும் நாம் செய்யும் சேவையாகும்.
     
  70. அன்னையின் அன்பு அலைகள் பரவுவது நிச்சயம். எதிர்ப்பில்லாத, ஏற்புத்திறனுடையவரையே அவை விரும்புகின்றன.
     
  71. பொதுவான சூட்சும உலகம் எதிர்ப்பதில்லை. குறிப்பிட்ட மனிதனுக்கு எதிர்ப்பு அதிகம்.
     
  72. லீலை, மறைதல், காணுதல், லீலாவினோதம், உலகத்தைச் சிருஷ்டித்த பிரம்மத்திற்கு மட்டுமல்ல, அடுத்த கட்டத்தை அடையும் பொழுது ஏராளமாக இவ்வாய்ப்பு நமக்குண்டு.
     
  73. கீழே போனால் திருடனுக்கு வெற்றி. மேலே போனால் உடலுறவை விட்டு அன்பை நாடும் வாய்ப்பெழுகிறது. இரண்டும் மறைவில் நடக்க வேண்டியவை.
     
  74. ஆண், பெண்ணை மறைவாக நாடுவதே "உலகக் காதல் இலக்கியம்". திருமணமான பின்னும் மனிதன் தன்னை உயர்த்தி, தூய அன்பை மட்டும் நாடினால், வழக்கமான பண்புகளை விட்டகன்று, மறைவாக மனத்துள் செயல்பட வேண்டும்.
     
  75. அதிர்ஷ்டத்தால் திகைப்பது, அருள் மனதில் செயல்படுவதாகும். மழை, ஜடத்தில் அருள் போல். திகைப்பு, மனதில் அருளின் அடையாளமாகும்.
     
  76. ஓடும் எண்ணம் ஒன்று போதும் அருளை விலக்க. மனதில் ஆயிரம் எண்ணமிருந்தால், திகைத்து நிற்பதே அருளைப் பெறும் வழி.
     
  77. தன்னையறியாமல் சுபாவத்திற்கெதிராக மனிதன் செயல்பட்டால் - கருமியின் தாராளம் - உணர்வு அருளைப் பெறத் தயாராக இருக்கிறது எனப் பொருள்.
     
  78. குசேலருடைய திகைப்பு, கிராமத்தாரின் நாணயம், என்னை பகவான் அறைக்கு அனுப்பியது, அரை கோடிச் சொத்தை நிராகரித்தது, ஆபாசம் காணிக்கையை நிறுத்தியது, தீய சக்திகள் விலக முன்வந்தது ஆகியவை அருளின் செயல்கள்.
     
  79. பொழியும் அருள், மலை போன்ற சக்தியை அளித்து, தீய சக்திகளை நாசம் செய்ய உதவுகிறது.
     
  80. பெற்றோரும், குழந்தைகளும் எதிரான அமைப்புள்ளவர்கள், ஆழ்மனதில் எதிரான உணர்வுள்ளவர்கள்.
     
  81. அருளுக்குப் பாத்திரமானதை, முடிவான அருளுக்குப் பாத்திரமானதை, அறிவது முடியாது.
     
  82. அதைத் தெரிந்து பெற்ற பின் அருள் நிலைக்கத் தேவையான அடக்கம், இலட்சத்தில் ஒருவருக்குண்டு.
     
  83. அருளின் எதிர்காலச் செயலை, அதுவும் பிறர் வாழ்விலறிவது, அருளுடன் தொடர்புள்ளதாகும்.
     
  84. அருள் செயல்படும் நேரத்தில் மனதில் ஆயிரம் எண்ணம் ஏற்பட்டுச் சிறப்பதுண்டு.
     
  85. சுமுகமும், சுதந்திரமும் அனுபவத்தின் தூண்கள். அத்துடன் கடந்த காலத்திலிருந்து மறைவதற்கு அது உனக்குச் சுதந்திரம் அளிக்கிறது.
     
  86. காரியம் முடிந்து வெகுநாளான பின், எப்படி முடிந்தது என்று தெரிவது இல்லை. ஆனால் காரியம் ஆரம்பிக்கும் முன் எப்படி முடியும் என்றறிய அவா எழும்.
     
  87. சில சமயங்களில் அறிவுக்கு அதுவும் புலப்பட முடியும் என்பது தத்துவம். அப்படி நடந்தால், எதிர்கால நினைவு என்பதைப் போல் அது எதிர்கால அறிவாக இருக்கும்.
     
  88. உயர்ந்த அன்பு, அன்பான நன்றியறிதல், ஆன்மீகச் சட்டத்திற்கு எதிராக இருக்கும். அவை உணர்வின் சட்டம் என்பதால், ஆன்மீகச் சட்டமில்லை என்பதால், அதற்குட்படாது.
     
  89. வீட்டில் சூழலை நிரப்பும் வக்ர புத்தியை அழிக்க எடுத்த சிறு முயற்சி 40 வருஷமாக அறியாத அருள் மழையைக் கொணர்ந்தது.
     
  90. திருவுருமாற்றம் குறைந்த தெம்பை, உயர்ந்ததாக்கி, அளவில் பெரிதாக்கக் கூடியது. கண்டம் அகண்டமாகும் சட்டமிது.
     
  91. மாறாக, உயர்ந்த வாய்ப்பை, சிறிய பலனுக்குப் பயன்படுத்தினால் பெருஞ்சக்தி சுருங்கும்.
     
  92. உயர விரும்புபவனுக்கு, தெம்புக்குப் பஞ்சமில்லை.விருப்பம் தேவையான தெம்பை உற்பத்தி செய்யவல்லது.
     
  93. ஊறிப்போன சுபாவம் முரண்டு செய்தால், அதைக் கிளறி மேலே போகச் செய்ய அபரிமிதமான சக்தி தேவை.
     
  94. அளவுகடந்த தெய்வீகச் சந்தோஷத்தின் அபரிமிதமான சக்திகளை மனிதன் வெட்கத்திலும், மானத்திலும் புதைத்து வைத்திருக்கிறான். உடலுக்குரியது வெட்கம், உணர்வுக்குரியது மானம்.
     
  95. வெட்கத்தைக் கடந்தால், உணர்வு விரிந்து சிருஷ்டியின் ஆனந்தமாகும்.
     
  96. இறைவனின் சுதந்திரத்தை நாடி, மனம் மானத்தைக் கடந்தால், எண்ணமற்ற ஞானத்தின் அனந்தம் மனத்தை பிரபஞ்சம் முழுவதும் வியாபிக்கச் செய்யும்.
     
  97. எண்ணமற்ற ஞானமே, விபசாரியின், திருடனின் ஆன்மீகப் பெருமையை அறிய முடியும்.
     
  98. மலரும் மனத்தின் எண்ணங்களும், உணர்வுகளும் அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அளவுகடந்து உற்பத்தி செய்ய முடியும். உயர்ந்த மனம் கீழே வந்து தாழ்ந்த ஜடத்தில் சிருஷ்டிப்பதால் செயல் அபரிமிதமாக உபரியாகும்.
     
  99. மனத்தைக் கடக்கும் எண்ணங்களால் எந்த விஞ்ஞானியும் தான் உணர்வு வசப்பட்ட துறையில் புரட்சிகரமான மாறுதலை உடனே ஏற்படுத்த முடியும் (அணு, சூழ்நிலை கெடுதல்).
     
  100. உயர்ந்த நிலையைத் தாழ்ந்த நிலைக்குக் கொண்டு வருவது படைப்பு, சிருஷ்டி.

*****



book | by Dr. Radut