Skip to Content

03 . பாகம் - 3

  1. அக்னி எழுந்தால் வளர்ந்து முழுமையை எட்டும்போது மோட்சம் அடைகிறது. திருவுருமாற்றத்திற்குப் பயன்படுத்தினால் உடனே மறைந்து விடுகிறது. திருவுருமாற்றத்தில், அக்னி வளர்ந்து, தன் முழுமையை எட்ட ஜீவன் முழுவதும் ஆர்வத்தைப் பெற வேண்டும்.
     
  2. ஒரு ஜென்மத்தில் அறிந்து பெற்ற விவேகம், சாதாரண மனிதனுக்குப் பழமொழியாகக் கேட்கிறது. இது சூத்திரம் போல், விவேகத்தின் வெளியுறையாக, வழக்குச்சொல்லாக மாறுகிறது. விவேகி, தன் முழு முயற்சியால், அறிவில்லாதவனுக்கோ, மற்ற எவருக்கோ, இதற்கு மேல் சொல்ல முடியாது.
     
  3. நமது கரணங்கள் வீறு கொண்ட தன்மை வாய்ந்தவை. சுமுகமாகச் செயல்படவோ, விட்டுக்கொடுக்கவோ அவற்றால் முடியாது. தானே ஒன்று சேர்ந்திணைவது இயலாத ஒன்று.
     
  4. எந்தக் கரணமும் தன்னைத் தானே அடக்க முடியாது. உயர்ந்த கரணம் எளிதில் அதை அடக்கும். சுயக்கட்டுப்பாடு தன்னையறியும் அளவைப் பொருத்தது.
     
  5. இக்கரணங்கள் மாறுபட்டால் பிணக்கெழும். வலிமையுள்ளது வெல்லும். ஆனால் படபடப்பு எழும்.
     
  6. விட்டுக்கொடுப்பது என்பது அளவைப் பொருத்தது. வலுவானது; அடுத்ததை அடக்கும்
     
  7. சுமுகம் என்பது வலுவானது தன் தாழ்ந்த பகுதியில் உள்ள விழிப்பின் அளவைப் பொருத்தது.
     
  8. பூரணம் மேல்மனதிலில்லை. விட்டுக்கொடுத்து சுமுகம் பெறுவதே அதற்குள்ளது.
     
  9. பூரணம் ஆழத்தில் பிறந்து மேல் வரும்.அதற்கு ஆன்மாவையும், இயற்கையையும் மேலும், உள்ளும் காண வேண்டும்.
     
  10. பூரணம் அனுபவ சாரத்தால் பெறுவது, அனுபவத்தாலில்லை. அனுபவம் விலகி, சாரம் முன்வந்தால் பூரணம் எழும்.
     
  11. சாரத்தைச் சேர்ப்பது சைத்திய புருஷன். எனவே பூரணம் அவனில் ஆரம்பிக்கின்றது. எல்லாப் பகுதிகளின் சைத்திய புருஷன் வெளிவந்தால் பூரணம் முதிர்கிறது; முதிர்ந்து சேருகின்றது. சத்தியஜீவியம் முதிர்ச்சி அடைந்தால் (psychic substance) ஜடத்தின் திடத்தன்மையை அடைந்து சத்தியஜீவனாகிறது.
     
  12. கடைசிக் கட்டத்தில் சைத்திய புருஷன் சத்தியஜீவனாகி, உடல் திருவுருமாற்றம் முடிந்து பூரணம் முடிவடைகிறது.
     
  13. விட்டுக்கொடுப்பது, சுமுகம், பூரணம், திருவுருமாற்றம் ஆகியவை அடுத்தடுத்த நிலைகளில் வற்புறுத்தல் குறைந்து, சுதந்திரம் எழுகிறது.
     
  14. பகவான் யோகம் சுதந்திரத்திலாரம்பித்து, சுதந்திரத்தால் வளர்ந்து, சுதந்திரத்தில் பூரணம் பெறுகிறது.
     
  15. பிரம்மம் லீலையைச் சுதந்திரமாக ஆரம்பித்ததால், அது பூரண சுதந்திரத்தில் பூர்த்தியாகிறது.
     
  16. அதிகாரம், கட்டாயம், தண்டனை ஆகியவை பகவான் யோகத்திற்கு விலக்கு. எந்த நிலைக்குரிய கட்டுப்பாடும் சுயக்கட்டுப்பாடாகவே இருக்க வேண்டும்.
     
  17. தோற்றம் எழுந்து உள்ளுறை விஷயமில்லாவிட்டால் பிணக்கு எழும். அகம் தயாரில்லாமல் அல்லது சாதனையில்லாமல் உற்சாகமாக எழுந்த செயல், பிணக்கில் முடியும். தோற்றமும், விஷயமும் நிறைவானால், பிணக்கு மறையும்.
     
  18. அக்னி எழுந்தால், பசி, வலி போன்ற உணரக்கூடிய வகையில் எழும்.
     
  19. பழைய குறைகளை முனைந்து பாராட்டினால், அது பழைய நிலையை வலிந்தழைப்பதாகும்.
     
  20. மேலும் மேலும் அறிவதைவிட கையிலுள்ள வேலையைப் பூரணமாகப் பூர்த்தி செய்வது முன்னேற்றம்.
     
  21. 100% புதிய அறிவு பெறுவதைவிட 10% ஏற்கனவே தெரிந்து பின்பற்றாததைப் பின்பற்றினால் பலன் அதிகம்.
     
  22. ஆன்மீக சித்தி, அதிர்ஷ்டம், தனக்கோ நாட்டுக்கோ பெரிய சாதனை ஆகியவை தனி நபரின் ஆர்வத்தால் இரு வகைகளாக நிகழ்வதுண்டு.

    1. திடீரென நிலைமை மாறிப் பலன் வருதல்,
       
    2. கொஞ்சம் கொஞ்சமாக அறிகுறிகளாக ஆரம்பித்து, சிறு பலன், பெருஞ்சாதனையாவது.

     
  23. சூழல் அளவுகடந்து கனிந்துள்ள பொழுது - கடைசி நிபந்தனை பூர்த்தியாகக் காத்திருக்கும் சமயத்தில் - பலன் உடனே தெரியும்.
     
  24. சூழல் பெறுவதற்குத் தயாரான நிலையில், சாதனை கொஞ்சம் கொஞ்சமாக வளரும்.
     
  25. பெரிய பலனானாலும் ஒரு முறை வருவது திடீரென வரும்.
     
  26. நிரந்தர சாதனை மெதுவாக ஆரம்பித்து, நிதானமாக வளர்ந்து, சிறு முதற்பலன் தெரிவித்து, தொடர்ந்து பூர்த்தியாகும்.
     
  27. ஒரு மேதை உலகம் கண்டிராததைச் சாதிக்க வழி கண்டுபிடித்தால், அதை நம்பமாட்டார்கள் அல்லது தந்திரம் என்பார்கள். இரண்டும் இல்லை. சாதனை மிகக்கடினம், ஆனால் முடியும். உள்மனத்தில் சைத்திய புருஷன் உறைவதைக் காணுதல் பூரண யோகப் பாதை. அது போன்ற யுக இரகஸ்யம் அது.
     
  28. ஜீவியம் தலைகீழே மாறுதல் என்பது எந்த நிலையிலும் தாங்க முடியாத தவறாகத் தெரியும். உள்ளத்தால் மனச்சாட்சிக்கு எதிராகச் செயல்பட வேண்டியிருக்கும். சமூகத்தில் புனிதப் பண்புகளை எதிர்க்க வேண்டியிருக்கும். உடலின் சொரணை மறத்தாற் போன்றவற்றைச் செய்ய வேண்டும்.
     
  29. உடலின் சொரணையை எதிர்க்க தானே தனக்கு அவமானத்தை நாடுவது போன்றும், உடல் தன்னால் செய்ய முடியாத காரியத்தை வற்புறுத்திச் செய்ய வைப்பது போன்றுமிருக்கும்.
     
  30. உள்ளிருந்து எழும் அக்னி மனச்சாட்சி, அவமானம், சொரணை ஆகியவற்றை எரித்துப் பொசுக்குவது ஒன்றே வழி.
     
  31. அனிச்சைச் செயல், பிறவிப் பழக்கம், பிடித்தம் ஆகியவை கரணங்கள் தாமே செயல்பட உதவுகின்றன. அதுபோல் ஆன்மாவுக்கு, அக்னி கருவியாகச் சேவை செய்கிறது. அக்னியே ஆன்மாவுக்கு ஆதாரம்.
     
  32. அக்னி, திருவுருமாற்ற சக்தி. அதற்கு வழி தெரியாது. சைத்திய புருஷன் அதைப் பயன்படுத்த வேண்டும்.
     
  33. அக்னியை எழுப்பி, சைத்திய புருஷனைச் செயல்பட வைப்பது ஆத்ம சமர்ப்பணம்.
     
  34. அக்னி ஜ்வாலை அனலாய் மனிதனைத் தகிப்பது. ஆத்ம சமர்ப்பணம் சாந்தியால் அமைதியாய் சாதிப்பது.
     
  35. சரணாகதி பெருகி வரும் சுதந்திர உணர்வைத் தரும்.
     
  36. அக்னி நரம்பில் உணர்வாகத் தெரியும். சமர்ப்பணம் மனதில் பூர்த்தியாவது தெரியும். சரணாகதி ஆன்மாவுக்குச் சுதந்திரம் வரும் உணர்வைத் தரும்.
     
  37. ஸ்ரீ அரவிந்தருடைய யோகம் அறிவுக்கேற்றது என்றால், அதற்குப் பலன் உண்டு, உணர்வில் சந்தோஷமுண்டு, பகுத்தறிவுக்குப் பொருத்தமானது, சாந்தியும் மௌனமும் சேர்க்கவல்லது.
     
  38. பிரம்மம் ஒரே ஒரு லீலையை மேற்கொண்டதால், அதற்கு உதாரணம் சொல்ல ஒன்றில்லை.
     
  39. பிரம்மத்திற்கு லீலை ஆனந்தம் தரவல்லது.தானே ஆரம்பித்தது என்றாலும் அஃது உண்மை. தன்னிடமிருந்தே பிரம்மம் தன்னை மறைத்துக் கொள்ள முடியும் என்பதால் ஆனந்தம் எழுகிறது. நம்மால் அது முடியாது.
     
  40. படைப்பான ஒவ்வொரு செயலிலும் நாம் ஆரம்பித்ததிலிருந்து நாமே மறைந்து, செயலை வெளியிலிருந்து இரண்டாம் பேர்வழியாகப் பார்க்கலாம். அது பேரானந்தம் தரவல்லது.
     
  41. இதைச் சாதிக்க, நம் செயல் நாமுள்ள நிலைக்கு ஒரு நிலை தாழ்ந்திருக்க வேண்டும்.
     
  42. லீலை எனும் படைப்பான காரியங்களில் ஆரம்பிப்பது, அவன் (இறைவனை நாடுபவனை இறைவன் தேர்ந்தெடுத்திருக்கின்றான்).
     
  43. உயர்ந்த நிலையில் அகத்தில் ஆரம்பிப்பது அவன். புறத்தில் ஆரம்பிப்பது மனிதன்.
     
  44. பெண் தானே மௌனமாக ஆணை நாடி, அவன் தன்னைத் தேடி வரும் வரை காத்திருப்பது போன்றது அது.
     
  45. சக்தி, ஈஸ்வரனை நாடும்பொழுதும், முதலில் மனத்தால் ஆரம்பிப்பது சக்தி. பின்னர் ஈஸ்வரனுக்காகக் காத்திருக்கிறார்.
     
  46. அகத்தில் ஆரம்பித்து, புறத்தில் காத்திருப்பது பிரம்மத்தினளவில் சிருஷ்டியாகும். இதை மாற்றினால், மீண்டும் மாறும் வரை பலன் வராது.
     
  47. அகத்தில் ஆரம்பிப்பதும் (unconscious) தன்னையறியாமலிருக்கலாம்.
     
  48. ஒரு காலத்திய பரிணாம வளர்ச்சி, அடுத்த காலத்தில் கல்வியால் போதிக்கப்படும்.
     
  49. பரிணாம சாரத்தை முழுவதும் போதிக்கும் கல்வியே, கல்வி எனப்படும்.
     
  50. பரிணாம முயற்சி ஜடத்திற்குரியது. தான் பகுதியாயுள்ள வாழ்வு அமைப்பின் மூலம் அது தெரிந்துகொள்ள முயல்கிறது.
     
  51. செய்து பார்த்து ஜடம் புரிந்துகொள்வதை மனம் புரிந்துகொள்ள நாளாகும். மனத்தின் அறிவை, உடல் திறனாகப் பெற அதிக நாளாவது போன்றது இது.
     
  52. மனத்திடமிருந்து உடல் அறிய அதிக நாளாவதில்லை. ஏனெனில் அது மேலிருந்து கீழே வருவது. உடலிலிருந்து மனம் அறிய பல நூற்றாண்டுகளாகும். அது மேலே போவதால் நாள் அதிகமாகும்.
     
  53. கல்வி, பரிணாம வளர்ச்சியின் கருத்தை மட்டும் கொடுத்தால், பெறுபவர் மேலும் “பரிணாம முயற்சி”யை எடுத்து, மீதிப் பலனைப் பெற வேண்டும்.
     
  54. பரிணாம சாரத்தை முழுமையாகப் போதிக்கும் கல்வி முறை இதுவரை உற்பத்தியாகவில்லை.
     
  55. மேலே போகும் பொழுது அனுபவம் நின்றால் அறிவு ஆரம்பிக்கும். கீழே வரும் பொழுது அனுபவம் பூர்த்தியானால் கல்வி பூர்த்தியாகும்.
     
  56. மேலே போகும் பொழுது சிந்தனை நின்றால் அறிவு வரும். கீழே வரும் பொழுது சிந்தனை பூர்த்தியானால் அறிவு பூர்த்தியாகும்.
     
  57. அறிவும் திருஷ்டியும் நின்றால் திருஷ்டியும் ஞானமும் மேலே போகும் பொழுது பூர்த்தியாகும்.

    அறிவும் திருஷ்டியும் கீழே வரும் பொழுது பூர்த்தியானால் திருஷ்டியும் ஞானமும் பூர்த்தியாகும்.
     
  58. "நான், தனி” என்பதைத் தாண்டினால் மேலே போகும் பொழுது, எல்லாம் ஒன்றிலும், ஒன்று எல்லாவற்றிலும் எனத் தெரியும். நான் பரிணாம மனிதனல்லன், ஆன்மீக மனிதன் என அறிந்தால் கீழே வரும் பொழுது, எல்லாம் ஒன்றிலும், ஒன்று எல்லாவற்றிலும் தெரியும்.
     
  59. சத்தியத்தை உணராவிட்டால், பிரம்மமாகலாம்.

    சத்தியத்தை ஏற்றால், உன்னுள் உள்ள பிரம்மம் பரிணாமத்தில் பூர்த்தியாகும்.
     
  60. கீழே வரும்பொழுது ஆசை, மேலே போகும்பொழுது அன்பாகும்.

    கீழே வரும்பொழுது ஆனந்தம், மேலே எழும்பொழுது சிருஷ்டியின் ஆனந்தமாகும்.

    கீழே வரும்பொழுது ஜீவியமாக இருப்பது, மேலே போகும்பொழுது சித் - சக்தியாகிறது.

    சத்தியமாக (நிலைத்த சத்தியம்) கீழே வருவது மேலே போகும்பொழுது (active truth of ordered being) முறையான ஜீவனின் பரிணாம சத்தியமாகும்.
     
  61. செய்திகளையும், கருத்துகளையும், கடந்தகாலச் சரித்திர நிகழ்ச்சிகளையும் கல்வி போதிக்கிறது. இன்று குடும்பமும், சமூகமும் கல்வி சேர்த்துக் கொடுக்கலாம். (i.e.) இன்று சமூகத்தில் திறம்படச் செயல்படும் உணர்வுக்குரிய கல்வியை அளிக்க முடியும்.
     
  62. வாழ்வின் அமைப்பு முறையைப் போதிக்கும் கல்வி முறையை ஏற்படுத்த முடியும்.
     
  63. சத்தியஜீவியத்தை நேரடியாகச் சாதகர்கட்கு அளிக்க ஆசிரமம் ஏற்பட்டது. தாமே சாதகர்கள் பெறுவது தடையின்றி நடந்தது. விரும்பி ஏற்பது படித்தறியும் கருத்தோடு நின்றுவிட்டது.
     
  64. "12 சிஷ்யர்கள் உலகை மாற்றுவர்” என்றார் பகவான்.
     
  65. நேரடியாக ஜீவியத்தை அளிப்பதற்கும், செய்திகளையும் கருத்தையும் போதிக்கும் கல்விக்கும் இடையே ஒரு முறை உண்டா?
     
  66. சாதித்தவரே அக்கல்வியை அளிக்க முடியும். பகவான் அளித்த ஞானத்தை மனம், உணர்வு, உடலில் பெற்றவர் பிறருக்குத் தனிப்பட்ட முறையில் அதை அளிக்க முடியும்.
     
  67. உணர்வின் அறிவு என்பது, சக்திக்குத் திசையை நிர்ணயிப்பதாகும்.

    உடலின் அறிவு, காரியத்தைப் பூர்த்தி செய்யும் திறனாகும்.
     
  68. உணர்வின் அறிவு, வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும்.

    உடலின் அறிவு, சாதனையைப் பலனாக அளிக்கும்.
     
  69. பகவானுடைய உடல், உணர்வு ஞானத்தைப் பெற்றவர் சிலர், உலகுக்கு அதை அளிக்கும் கல்வி முறையை உருவாக்கலாம்.
     
  70. உலகம் அக்கல்விக்குத் தயாராக இருக்கும் போலிருக்கிறது.
     
  71. ஜீவியத்தை முறைப்படுத்த முடியாது. ஞானத்தை முறைப்படுத்தலாம்.
     
  72. முறை அதிகபட்சம் மனம் வரை, வரும். அதைத் தாண்டிய சட்டம், சுதந்திரம்.

    அறிவை அடிப்படையாகக் கொண்ட வேலையே அதிகபட்ச முறைக்கு அளவீடு.

    இன்றுள்ள வாழ்வின் அமைப்பு முறை, மனம் வரை, வரும்.
     
  73. முறை எனில் சட்டம், ஒழுங்கு, அமைப்பு ஆகும். அதற்கு நிலையான மையம் தேவை. இன்று அகந்தையும், தனித்தன்மையும் மையங்களாக இருக்கின்றன.
     
  74. எல்லாம் ஒன்றில், ஒன்றில் எல்லாம் என்று ஆயிரம் மையங்கள் ஏற்பட்டால், முறை போய் சுதந்திரம் வரும்.
     
  75. சமுதாய முறையை ஒருவாறு ஏற்படுத்தலாம். மனத்தால் ஆளப்படும்வரை - ஆன்மீக மனம் உள்பட - சமூகம் முறையை அனுமதிக்கும்.
     
  76. எதைச் சிந்திக்கிறோமோ அதன் வலிமை, சிந்தனை அதிகரிக்கும். பிரச்சினையை நினைத்தால் பிரச்சினை வலுக்கும். அழைப்பு, அன்னையை வலுப்படுத்தி, பிரச்சினையை அழிக்கும்.
     
  77. பிறரை ஆளப் போராடும் மனிதன், பல ஆண்டுகள் உலகில் செயல்படுகிறான். அகத்துள் சென்று எண்ணத்தையும், ஆசையையும் அடக்கப் பாடுபட்டால், சுலபமாகச் சீக்கிரம் அவன் எண்ணம் நிறைவேறும்.
     
  78. பிறர் சொத்தில் தலையிடுவதில்லை; பிறர் மனைவியை நாடுவதில்லை; பிறர் நாணயத்தைச் சந்தேகிப்பதில்லை என்பவை நாகரீகத்தின் சின்னங்கள். பிறரிடமிருந்து காப்பாற்றப் போரிட்டால்தான் இவற்றின் உயர்வு தெரியும்.
     
  79. நீக்க முடியாத தடை, பிடித்தமான குணத்தின் பிரதிநிதி.
     
  80. காலத்தைக் கடந்தவன், நின்று நிலைக்கும் நிகழ்காலமாவான். கடந்ததை இழந்து நிகழ்ந்ததில் தன்னை இழக்கும் மனம், காலத்தைக் கடக்கும்.
     
  81. அருள், உன்னை வலிய திருவுருமாற்ற முயன்றால், திரும்பத் திரும்ப கசப்பானவற்றின் மூலமே உன்னை நாடும்.
     
  82. அருளால் நடந்ததைக் காரணத்தால் விளக்குபவர், நடப்பதற்கு முன் அது போன்ற விளக்கமளிக்க முன்வருவதில்லை.
     
  83. புதிய விஞ்ஞான அறிவு, ஆராய்ச்சி நிலையங்களுக்கு வரும்பொழுது, நாடே கொண்டாடுகிறது. அடுத்தாற்போல் அதை அனைவருக்கும் பயன்படும்படி மாற்றி, இராணுவத்திற்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள். இரகஸ்யம், செலவு ஆகிய காரணங்களால் அது செய்யப்படுகிறது. 1960இல் கம்ப்யூட்டர்கள் போல், அடுத்த கட்டத்தில், பெரிய கம்பனிகளால் அதைப் பயன்படுத்த முடிகிறது. முடிவாக அனைவருக்கும் கிடைக்கிறது.

    ஆன்மா பிரம்மத்தை எட்டுவது ஆராய்ச்சி நிலையத்தின் வெற்றி. பயன்படும் அறிவாக மனம் அதை எட்டி மாற்றுவது இராணுவம் பெறுவதைப் போன்றது. பெரிய கம்பனி பெறுவது பிரம்மம் உணர்வைத் தொடுவது. உடல் எழுந்து பிரம்மத்தை அறிவது, பொதுமக்கள் பெறுவது போன்றதாகும்.
     
  84. அகந்தையிலிருந்து சைத்திய புருஷனுக்கு மாறுவது, தன்னை நினைக்கும் சுயநலம் பிரபஞ்சத்தை நாடும் பரநலமாவது, ஜீவாத்மாவை நாடுவதற்குப் பதிலாக பிரபஞ்சத்தின் ஆத்மாவை நாடுவது, ஆழ்ந்து போய் எண்ணமற்ற அறிவை நாடுவது, மனத்தில் அக்னியை எழுப்புவது ஆகியவை ஒன்று போன்றவை. ஒரே மாதிரி பலன் தரக்கூடியவை. அத்துடன் யோக முதற்படி.
     
  85. ஆன்மாவின் அக்னி மோட்சம் தரும்.சைத்திய புருஷனின் அக்னி திருவுருமாற்றம்.
     
  86. பிரகிருதியிலிருந்து விடுபட்ட ஆன்மா சுதந்திரம் தேடும். சைத்திய புருஷன் பிரகிருதியைச் சேர்ந்தது. அதனால் சுதந்திரத்தை நாட முடியாது. குறிப்பாக முயன்றால் அதுவும் முடியும்.
     
  87. எவன் ஒரு முறையைப் பின்பற்ற வேண்டுமோ, அவனுக்கு அதை விளக்குவதால் அதைப் பின்பற்றி அவன் பலனடைய முடியாது.
     
  88. ஒரு காரியத்தை முடிக்க அதைப் பூர்த்தி செய்யும் முழு அறிவு பயன்படுவதைவிட, அதைக் கெடுக்கக்கூடிய சக்திகளை அடக்கி விரட்டும் திறன் பயன்படும்.
     
  89. மனிதனுக்கு எது பயத்தை அளிக்கிறதோ, மனித உணர்வு தூய்மையாக இருந்தால், அதுவே ஞானத்தை அளிக்கும். அது பிராணமய புருஷனுக்கு விடுதலையையும் அளிக்கவல்லது.
     
  90. திரும்பத் திரும்ப வரும் செயல்கள் தங்கள் முத்திரைகளைத் தாங்கிவரும். அவற்றின் உருவங்களும் தெளிவாகத் தெரியும். அன்னையிடமும் திரும்பத் திரும்ப வரும். அதன் குணம் வேறு.
     
  91. சர்வ ஆரம்பப் பரித்தியாகியும் ஆர்வம் பெற முனைய வேண்டும்.
     
  92. ஆர்வம் தேவையில்லை என்ற நிலை மனிதனுக்கில்லை; இரண்டறக் கலந்தவனுக்கும் இல்லை. ஏனெனில் இரண்டறக் கலப்பதிலும் பல நிலைகளுண்டு.
     
  93. அகந்தை அழிந்தால் அன்னை செயல்படுகிறார்கள். அகந்தை அழிந்தால் திருவுருமாற்றம் முடிவதில்லை; ஆரம்பமாகிறது.
     
  94. ராமனின் ஏகபத்னி விரதம், கிருஷ்ணனின் ஜலக்கிரீடையாயிற்று.
     
  95. கல்யாணம் என்பது சமூகம் ஏற்படுத்தியது.ஏகபத்னி விரதம் அதன் சிறப்பான நிலை. அதில் ஆன்மீகமில்லை. அவதார புருஷனுக்கு அடுத்த அவதாரத்தில் அது பயன்படவில்லை.
     
  96. அடுத்த தலைமுறை நம் ஆசைகளைப் பூர்த்தி செய்வது போல், ஆன்மீக வளர்ச்சியையும் பூர்த்தி செய்கிறது.
     
  97. ஆசையைப் பூர்த்தி செய்வது, கடந்த கால வளர்ச்சி. ஆன்மீக வளர்ச்சி கடந்த காலத்தைக் கரைப்பது.
     
  98. அடுத்த தலைமுறையின் ‘அறியாமை’யை விவேகமாக உணர்ந்தால், ஆன்மா விழிப்புற்று வளரும்.
     
  99. ஒரு கட்சி தன் பரமவைரியைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது, அன்னையின் சக்தி செயல்படுவதாகும். அது போன்ற செயல்கள் அன்னையின் ஆட்சியில் ஆன்மீக உண்மையைச் சுட்டிக்காட்டும் அறிகுறியாகும்.
     
  100. ஆன்மீகம் மதவழிபாட்டுக்கு அடுத்த ‘தலை முறை’யாகும்.

*****



book | by Dr. Radut