Skip to Content

10 . பாகம் - 10

  1. தீய சக்திகள், அழிவு சக்திகள், திருவுருமாற்றமடைந்தால் பெரிய ஆக்கல் சக்திகள். ஏனெனில், ஆரம்பத்தில் அவை சிருஷ்டியின் சக்திகள். மனிதனுக்கே அவை தீய சக்திகள்.
     
  2. "பரிணாமத்தால் வெளிப்படுவது உள்ளே புதைந்திருக்க வேண்டும். உள்ளே புதைந்திருப்பது பரிணாமமாக வெளிவர வேண்டும்” என்கிறார் பகவான். பிரம்மத்தில் இரண்டும் உண்மையில்லை. நம் பகுத்தறிவுக்கேற்ப அவர் பேசுவதால், இது நமக்கு அவர் விளக்கும் முறை.
     
  3. ஒவ்வொரு மனிதனும் திருமணம் செய்து கொள்ள வேண்டும், வேலைக்குப் போக வேண்டும், வாழ வேண்டும் என்று நாம் சொன்னால், நாம் சமூகத்தின் எல்லைக்குள் மனிதனை நிறுத்துகிறோம். உயர்ந்த அல்லது பரந்த நிலைக்கு அது உண்மையாகாது.
     
  4. திறமையற்ற, தகுதியில்லாத, அகந்தையானவர்க்கு அவர்கள் குறைகளைப் புறக்கணித்து, வாழ்வின் பரிசு ஒன்றை அளிக்க முன்வருதல் உதார குணம் எனக் கருதுகிறோம்.
     
  5. இதில் வெற்றி அரிபொருள். அது முடியும் தருணத்தில் பெறுபவர் பெறுதல் தமக்குக் குறைவு என நினைத்து உதார குணத்திற்கு முடிவு கட்டுவது உண்டு.
     
  6. அன்னையின் அவதாரத்திற்கு நிரந்தரமாக உள்ள இக்கட்டான நிலை அது.
     
  7. அகந்தை அழிந்தால், மனிதன் பிரபஞ்சம் முழுவதும் பரவுவான்.

    எந்த க்ஷணம் அகந்தை மறைகிறதோ அதே நேரம் சைத்தியம் எழும்.

    அகந்தை அழிந்தால் சிருஷ்டியின் புருஷனுடைய வாயிலில் நிற்போம்.

    உடலின் அகந்தை கரைந்த பொழுது அன்னை சச்சிதானந்தத்தைத் தொடர்ந்தார்.

    இதனால், அகந்தைக்குரிய நிலைகள் பல என நாம் அறிகிறோம். அவை பரந்துள்ள நிலைகளும், உயர்ந்துள்ள உயரங்களும் பல.
     
  8. பிரபஞ்சம் உணர்வாலானது. உணர்வின் அகந்தை கரைந்தவுடன் மனிதன் பிரபஞ்சம் முழுவதும் பரவுகிறான்.
     
  9. அகந்தை கரைந்தால், அது மனத்தின் அகந்தையானால், மனத்தைக் கடக்க முடியும். எனவே சிருஷ்டி புருஷனுடைய வாயிலுக்குப் போகலாம்.
     
  10. சத்தியம், ஜடத்தின் ஆதி என்பதால் உடலின் அகந்தை கரைந்தால் சச்சிதானந்தத்தை அடைகிறோம்.
     
  11. அகந்தை இயற்கையின் சக்தி என்பதால், இயற்கை தன் ஆன்மாவிலிருந்து - சைத்திய புருஷன் - பிரிப்பதால், அது கரையும் பொழுது சைத்தியம் வெளிவருகிறது.
     
  12. பூரண முழுமை பல மையங்களில் அமையலாம். உதாரணமாக நம் ஜீவன் மனத்தையோ, உடலையோ மையமாகக் கொண்டு பூரண முழுமை அடையலாம்.
     
  13. சைத்திய மையம் கொண்டால் பூரண முழுமை, பூரணம் பெறும்.
     
  14. செய்தி உலவுவது உணர்வை மனம் பயன்படுத்துவதை உயிரோட்டம் உள்ளதாக்குகிறது. சமூகத்தில் அதன் பலன் பெரியது. குடும்பத்தை ஜீவனுள்ளதாக்க ஒவ்வொருவரும் பிரியமாகத் தம் விஷயங்களை அனைவருக்கும் சொல்கிறோம்.
     
  15. நல்ல செய்தி, கெட்ட செய்தி பரவும் வேகத்தில் பரவ ஆரம்பித்தால், சமூக உணர்வு மனத்தில் பரிணாம வளர்ச்சியை நாடும்.
     
  16. சிந்திக்கும் பொழுது மனத்தின் செயலான எண்ணத்தைக் காண்கிறோம், மனத்தையல்ல. மனத்தைக் காண அதிலிருந்து பின்னால் போய்ப் பார்க்க வேண்டும்.
     
  17. நல்லதைச் செய்து, கெட்டதை நாம் விலக்குகிறோம். இறைவன் தவறான செயலை விலக்குவதில்லை. ஆனால் நல்ல நோக்கத்துடன் அதைச் செய்வான்.
     
  18. நல்ல நோக்கத்துடன் செயல்படுவது சமர்ப்பணம்; இறைவனுக்காகச் செய்வது, நல்நோக்கம்.
     
  19. திருவுருமாற்றம் என்பது நெடுநாள் முயற்சியின் பலனாக முடிவில் வருவதல்ல. இப்பொழுதே கையிலுள்ள வேலையில் செய்யப்பட வேண்டியது.
     
  20. முடிவில் திருவுருமாற்றம் வருவதும் உண்மை. இப்பொழுது ஆரம்பிக்காவிட்டால், அதை ஆரம்பிக்கவே முடியாது. பின்னணியில் நம்மையறியாமல் அது நடந்தபடியிருக்கிறது.
     
  21. எந்த வேலைக்கும் காலம் தேவை. காலத்தால் செயல்பட்டால் அஃது உண்மை. அப்பொழுது உன் திறமைகளைச் செயல்படுத்திக் கடந்த கால குறைகளைக் கடந்து வர வேண்டும். உண்மையில் காலம் தேவை இல்லை.
     
  22. பத்து வருஷ முயற்சி பலன் தராத இடத்தில், நல்லெண்ணம் பலிக்கும்.
     
  23. அருளில் நம்பிக்கையிருந்தால் கர்மம் தானே கரையும்.நாம் கரைக்க வேண்டாம்.
     
  24. பேரருளைச் செயல்பட அனுமதித்தால் காலம் தேவையில்லை. நம் திறமைகள் பலன் தரவே காலம் தேவை.
     
  25. காலத்தால் இயற்கை செயல்பட்டு, கர்மத்தைச் சேர்க்கிறது.
     
  26. அருளில் நம்பிக்கையுள்ளவர் அருளைச் செயல்பட அனுமதித்து, கர்மத்தைக் கரைக்கிறார்.
     
  27. அருளுக்குச் சரணாவதுடனின்றி, தன் திறமைகளைச் செயல்படுத்த முன்வராவிட்டால், பேரருள் செயல்பட்டு உடனே பலன் தரும்.
     
  28. சரணாகதி, பேரருளைச் செயல்படச் செய்கிறது.

    நம்பிக்கை, அருளைச் செயல்பட அனுமதிக்கிறது.

    உழைப்பு, கர்மத்தைச் சேகரம் செய்கிறது.
     
  29. சில்லறை ஆசைகள் ஆர்வத்திற்கும், சரணாகதிக்கும் தடை.இது வாழ்வில் உண்மை. இதைவிடப் பெரிய உண்மை ஒன்றுண்டு. எவ்வளவுக்கெவ்வளவு ஆன்மீக அம்சம் உயர்ந்ததாக இருக்கிறதோ, வாழ்வில் அவ்வளவுக்கவ்வளவு தாழ்ந்ததாக அது மாறும்.
     
  30. சிருஷ்டி, பிரம்மம் என்பதால், சில்லறை ஆசை, ஆனந்தமாகும்.
     
  31. சிறு ஆசையை விலக்குதல் சரி; அடக்குவது உதவும்; திருவுருமாற்றம் உயர்ந்தது.
     
  32. திருவுருமாற்றம் நடைபெற மனதை மாற்ற வேண்டும், ஆசையை நாடக்கூடாது, ஆசையிலிருந்து செயல்பட மறுக்க வேண்டும்.
     
  33. சைத்தியத்தை அடைந்த பின்னும், சிறு ஆசைகளின் நிழல் நம்மை ஒட்டிவிடும். மீண்டும் ஆசையை நாடுவதற்குப் பதிலாக, சைத்தியத்தில் நிலையாக இருக்க வேண்டும்.
     
  34. அதுவும் சில்லறை ஆசையைப் பூர்த்தி செய்வது போலவே தெரியும். ஆனால் திருவுருமாற்றம் அடைந்ததினால், ஆனந்தம் எழும். தோற்றத்தை விட்டு விஷயத்தை ஏற்க வேண்டும்.
     
  35. சைத்தியத்திற்குப் போனால், சூழ்நிலை மாறி சில்லறை ஆசைகள் எழுவதில்லை. இது சகஜம். ஆனால் இது சிறு பலன்.
     
  36. சைத்தியத்தை அடைந்தபின் வெளியிலிருந்து சிறு ஆசை எழுவது, ஆனந்தம் சிறு ஆசையாக வருகிறது எனப் பொருள். நாம் வரவேற்பதைப் பொருத்து அது ஆனந்தமாகவோ, சிறு ஆசையாகவோ மாறுகிறது.
     
  37. மேலும் ஆன்மீக வளர்ச்சி பெற்றால், உள்ளேயுள்ள உயர்ந்த நிலையிலிருந்து - அதன் தன்மை எதுவானாலும் - செயல்பட்டால், எந்த வேலையையும் (சிறு ஆசையைப் பூர்த்தி செய்வது உள்பட) ஆனந்தமாக மாற்றும்.
     
  38. நடிகன் நடிப்பில் தன்னை மறப்பது போல், மனிதன் தன்னை வேலையில் மறப்பது போல், நாம் வாழ்வில் ('existence') நம்மை மறந்து, நம்மை வாழ்வாக அறிகிறோம்.
     
  39. ‘நாம் வேறு; நம் வாழ்வு ('existence') வேறு’ என அறிவது தன்னை அறிவதாகும்.
     
  40. நம்மை நாம் "வாழ்வில்' இழந்துவிட்டோம் என அறிவதே ஓரளவு தன்னை அறிவதாகும்; அதன் ஆரம்பமாகும்.
     
  41. இந்த ஆரம்பத்தை முடிப்பவன், ஜீவன் முக்தன்.
     
  42. உடல் அமைதியாக இருப்பதாலும், உணர்வு மேலிடுவதில்லை என்பதாலும், மனம் சிந்திக்க முடிகிறது.
     
  43. ஆன்மா செயல்பட மனம் மௌனமாக இருக்க வேண்டும் என்பது தெளிவு.
     
  44. இறைவன் நம்மில் செயல்பட ஜீவாத்மா சலனமற்றிருக்க வேண்டும். பரமாத்மாவுக்குச் சரணாக வேண்டும்.
     
  45. எந்தக் கரணம் செயல்பட வேண்டுமானாலும், அதற்குட்பட்ட கரணங்கள் தங்களை உட்படுத்திக் கொண்டு, தங்கள் திறமைகளை விட்டுக் கொடுக்க வேண்டும்.
     
  46. எழுதுவது, வயலின் வாசிப்பது போன்றவற்றுள் விரல்களே கற்றுக் கொள்வது, உடலின் ஜீவியம் கற்றுக் கொள்வதாகும்.
     
  47. கண்களை மூடிய நிலையில் தான் பார்ப்பதாகவும், திறந்தபடி பார்ப்பதாகவும் அன்னை சொல்வது - அது உடலின் பார்வை உடலின் ஜீவியத்திலுள்ள ஆன்மா பார்ப்பதாகும்.
     
  48. உடலின் ஞானம் பல நிலைகளிலுள்ளது:

    ஆன்மா, மனம், உணர்வு, உடல்.
     
  49. பிரம்மத்தில்லாதது சிருஷ்டியிலில்லை என்பது உலகிலுள்ள அனைத்தையும் சரி என்கிறது. (Interrelation) தொடர்பு தொந்தரவுக்கு முதற்காரணம். அடுத்தது ஆரம்பம் (initiation).
     
  50. எல்லாத் தொடர்புகளையும், எல்லா ஆரம்பங்களையும் பிரம்மம் ஏற்கிறது எனலாம். சிருஷ்டிக்கு அப்பாற்பட்ட பிரம்மம் ஏற்கிறது என்றால், அதை மறுத்து முரண்பாட்டை எழுப்புவது சிருஷ்டியிலுள்ள பிரம்மமாகும்.
     
  51. சிருஷ்டியின் தலைவியான அன்னை, தம்முடன் சேரும் பாக்கியத்தை உரிமையாக நமக்களிக்கிறார். நம்மிடம் வேலை செய்பவர்களை நம் நிலைக்குயர்த்த நமக்கு மனமிருக்கிறதா? அதைச் செய்யாமல் அன்னையிடமிருந்து எப்படிப் பெறுவது?
     
  52. சத்தியஜீவியம் எல்லாவற்றிலும் நம்மைக் காண்கிறது. அங்கு போகும் முன் அனைவரையும் தன்பால் ஈர்க்கும் திறனாவது வேண்டும்.
     
  53. பக்தன் நிலையிலிருந்து இரண்டாம் கட்டம் போக,

    • மேல்மனத்திற்கு நேர் எதிராகத் தானிருப்பதை ஏற்க வேண்டும்.
       
    • பலன், பணம், பெண்ணுக்குச் சாதாரணமாக ஈர்க்கப்படக் கூடாது.
       
    • மனம் மௌனமாக வேண்டும்.
       
    • தன் மனத்தில் உண்மையில்லாதவற்றை அவன் ஏற்க வேண்டும்.
       
    • சாதனையின் பேரில் சிறு ஆசைகளை நாடக்கூடாது.

     
  54. வக்கிரம், அன்னை ஜீவியமாக மாற வேண்டும் என பிரார்த்திப்பது ஆர்வம். வக்கிரமே அன்னை ஜீவியமாக முன்வருவது உண்மை (sincerity). அதுவே சரணாகதிக்குரிய முறை.
     
  55. ஆனந்தத்தை நாடுபவன், அதை வெளிப்படுத்தும் பொருள்களை நாடி, அதை நியாயம் எனக் கூறுவது உண்மையற்ற நிலையை உயர்த்தப் பாடுபடுவதாகும்.
     
  56. சாதாரண பலனுக்கென்றாலும், மனத்தின் முடிவு முழுமை பெறும் இடத்தில் அன்னை சூழல் அதை உண்மையான ஆர்வமாக மாற்றும்.
     
  57. அடுத்தவரை நம்பினாலும், ஆண்டவனை நம்பினாலும், மனிதன் தன்னையே நம்புகிறான். தன் நம்பும் திறமையை நம்புகிறான்.
     
  58. அடுத்தவரிடம் நம்பிக்கை மாறினால், அது நம்பிக்கையாகிறது (faith).
     
  59. ( Belief) புரிந்து ஏற்பது, மனத்திற்குரியது. நம்பிக்கை, ஆன்மாவுக்கு உரியது. மனிதன் நம்பிக்கை (faith) என இப்பொழுது நினைப்பது (belief) தான் புரிந்து ஏற்றுக் கொள்வதாகும்.
     
  60. புரிந்து ஏற்றுக் கொண்டது தவறலாம், நம்பிக்கை தவறாது. இடையில் மாறக்கூடியதற்கு நம்பிக்கை எனப் பெயரில்லை.
     
  61. குறுக்கிடும் எண்ணங்கள் ஆர்வத்தை வெறுஞ் சொல்லாக்கிவிடும். ஆர்வம் தன் முழுமையை இழக்கிறது.
     
  62. பகுத்தறிவைச் சாதிக்கும்படி எவரும் எதிர்பார்ப்பதில்லை. மனத்தால் செயல்படும் அறிவுடையவருக்குப் பலன் தரும். சாதிப்பது உணர்வு. அதற்கும் பகுத்தறிவுக்கும் தொடர்பில்லை.
     
  63. மனத்தைக் கடந்து மேலே போனாலும், கீழே வந்தாலும் பகுத்தறிவுக்கு வேலையில்லை. சக்தி, உள் ஜீவனை அடைந்து சாதிக்கிறது.
     
  64. லௌகீக விஷயங்களில் சாதிப்பது உணர்வு அல்லது உள் ஜீவன், பகுத்தறிவுடைய மனமில்லை.
     
  65. பக்தி எனும் மனித உணர்வுக்காக மழை பெய்கிறது. வானை நோக்கிப் போகும் உணர்வு வானை நோக்கி வளரும் மரங்களால் சித்தரிக்கப்படுகிறது.
     
  66. அன்பைக் கொலை செய்த இஸ்ரேலியர் தண்ணீரின் அருமையை உணருகின்றனர்.
     
  67. வழிபாட்டு முறைகள் எல்லாம் மனிதனைப் பழக்கத்திற்குட்படுத்துவது. வாழ்வு, இராணுவப் பயிற்சி, நகர வாழ்வு, வறுமை, காராக்கிருகச் சிறை, அகதிகள் முகாம் மனிதனின் பழக்கங்களை இழக்கச் செய்பவை. நாமே முன்வந்து பழக்கங்களை அழிப்பது சரணாகதி.
     
  68. தொடர்ந்து, இடைவிடாமல், தீவிரமாகப் பிரார்த்திப்பது, காலத்தின் கதியை நடைமுறையில் தவிர்க்க முயல்வதாகும்.
     
  69. உணர்வைத் தலைகீழாக மாற்றுதல், மனத்தின் வெறுப்பை மாற்றுதல் ஆகியவை காலத்தின் சுவட்டை உணர்விலும், மனதிலும் கரைப்பதாகும். இந்த நோக்கங்களும், வெறுப்பும் காலத்தின் பலன், காலத்தால் சேர்ந்தவை.
     
  70. திருவுருமாற்றத்திற்கான பிரார்த்தனை ஆசையிலிருந்து விடுபட முடியும். அதற்கு அது தன்னை வலியுறுத்தக்கூடாது.
     
  71. தீவிர, குறுகிய வேகத்தையும், வற்புறுத்தலையும் இழந்து அதே பிரார்த்தனையை சாந்தமாகவும், நிதானமாகவும் மாறினால், பிராணமய புருஷன் வெளிவருவான்.
     
  72. இந்தியாவின் ஆன்மீக உயர்வின்றி, பிரிட்டிஷார், அதிகாரிகள் நிலையிலும் அற்புதமான பெயர் எடுத்தனர். இந்தியர்கள், ஆன்மீக உயர்விருந்தும், சர்வதேசப் புகழ் பெற்ற பின்னரும், நாணயமில்லை எனப் பெயர் வாங்கியுள்ளனர்.
     
  73. இந்தியர்கள் ஆன்மீகத்தை வலியுறுத்தினால், நாட்டின் முன்னேற்றம் எந்த அளவுக்கு உயரும் என்பதை இது காட்டுகிறது.
     
  74. வாழ்வு அதே க்ஷணம் எதிரொலிக்கிறது. கையில் வந்ததை மனம் ஏற்றுக் கொள்ள சில சமயங்களில் பத்து நிமிஷமாகும்.
     
  75. நாட்டின் பெரிய பிரச்சினைக்கும், சொந்தமாகப் பேரதிர்ஷ்டம் பெறவும், இரகஸ்யம் - அல்லது பல இரகஸ்யங்கள் - நம் பக்கத்திலுள்ளன. அவற்றைப் பார்க்க மறுக்கும் "அபிப்பிராயம்" நம் சொந்த சொத்து.
     
  76. 300 அல்லது 3000 ஆண்டுகட்கு முன் செய்தவற்றை நூற்றிலொரு பங்கு நேரத்தில் முடிக்கும் சூட்சுமங்கள், இரகஸ்யங்கள், முறைகள் ஒரு லட்சத்தை நாம் அறிவோம்.
     
  77. 30 வருஷத்திற்கு முன், அல்லது பத்து வருஷத்திற்கு முன் இருந்தவற்றைப் பற்றியும் நாம் அது போல் பேசலாம்.
     
  78. அதே போன்ற வேறு இலட்சம் காரியங்களை இன்று முடிக்கலாம் என்பதை எவரும் ஏற்கமாட்டார்கள்; கண்மூடியாக இருப்பார்கள்.
     
  79. கண் திறந்து அவற்றைப் பார்க்க முடிவு செய்தால் 2500 A.D. இன்று வரும். 5 அல்லது 10 வருஷத்தில் வறுமை, நோய், எழுத்தறிவின்மை, படபடப்பு, தகராறு ஆகியவை உலகத்தை விட்டு அழியும்.
     
  80. "சிறு துளி மீது ஜடத்தின் திரையிருப்பது பார்வைக்குத் தெரியதேயன்றி, உண்மையல்ல” என்கிறார் பகவான்.
     
  81. நம் அபிப்பிராயம் நமது புலன்களின் அபிப்பிராயம். அதாவது ஜடத்தின் அபிப்பிராயம். நாம் புலனிலிருந்து ஜீவனுள்ள இடத்திற்கு மாறினால் நம் அபிப்பிராயம் ஜீவனின் அபிப்பிராயமாகும். திரும்பச் செய்வது இருக்காது.
     
  82. அந்நிலையிலேயே நாம் பிரபஞ்சம் சிருஷ்டிப்பதைக் காண்கிறோம். ஒவ்வொரு விநாடியும் பிரபஞ்சம் அழிந்து, உற்பத்தியாவது அதன் சிகரம்.
     
  83. கொடுப்பது அனைவருக்கும் இயல்பல்ல. தன்னை அர்ப்பணம் செய்வது அரிது. அதைவிட அரிது தன்னை, விரும்பி மலர்ந்து அர்ப்பணிப்பதை, உற்சாகமாக உவந்து ஏற்பது.
     
  84. எந்தக் குணமும் நிறைவு பெற்றால் இறைவனையடையும். நல்லெண்ணம் நிச்சயமாக அவனை அடையும்.
     
  85. சிறு அளவிலும் நல்லெண்ணம் நிறைவு பெறும் தன்மையுடையது; இறை அம்சத்தைத் தொடும் கருவியாகச் செயல்படும். (Eg.) பெரிய அதிர்ஷ்டம்.
     
  86. எண்ணம் அல்லது உணர்வைச் சரணம் செய்தால், தலையில் ‘சில்’ என இருப்பது சைத்தியம் எழுவது.
     
  87. வக்கிரம், அறியாமையைச் சரணம் செய்தால் நல்லது. ஆனால் அது முழுமையாகாது. உணர்வின் பகுதி என்பதால் முழுமையுடையதல்ல.
     
  88. சரணாகதி பூர்த்தியாக, ஜீவன், ஜீவியம், திறன், சிருஷ்டி ஆனந்தம் சரண் செய்யப்பட வேண்டும்.
     
  89. ஜீவன், ஜீவியம், திறன், சிருஷ்டி ஆனந்தம் சச்சிதானந்தத்தின் ஜீவன், ஜீவியம், சக்தி, ஆனந்தத்தைக் குறிக்கின்றன.
     
  90. சரணாகதியை மேற்கொள்ள மனம் ஆழ்ந்து ஒருநிலைப்பட வேண்டும். சிருஷ்டியில் சச்சிதானந்தத்தைத் தழுவும் தியானமே சரணாகதியை மேற்கொள்ள முடியும். ஜீவன் சச்சிதானந்தத்தை வெளிப்படுத்துவதை ஏற்கும் திறனுடையது அந்த நிலை.
     
  91. பரந்து விரியும் ஒருநிலை, அனைத்தையும் உட்கொண்டது என்பது, ‘அவனை உட்கொண்டது' எனப் பொருள்.
     
  92. இறைவன் வெட்கமே இல்லாத மனித உருவத்தைத் தாங்கி உன்னை நோக்கி வந்தால், அவன் உன்னை விடுவதாயில்லை என்று அறிய வேண்டும்.
     
  93. சமூக மனநிலையைக் கடந்தவர், உள்ளத்தின் உணர்வு நிலையைக் கடக்க வேண்டிய நிலையில், பிரம்மம், வெட்கமற்ற உருவத்தில் தொடரும்.
     
  94. சுயநலமான அன்பு, உச்சகட்டத்தில், குடும்பத்திற்காகத் தன்னைக் கரைக்கும் திறனுடையது என்ற பெருமையுடன் எழுவதுண்டு. உள்ளத்து உணர்வின் சொரணையைக் கைவிடும் முன்நிலை சுயநலப்பிரியம்.
     
  95. உணர்வின் சொரணையைக் கடந்து வந்தால், மானத்தை விட வேண்டியது அவசியம் என்பது அடுத்த நிலையாகும்.
     
  96. அடுத்த நிலை தீமை. மானம் என்பது சமூகத்தின் தீமை என்பதால், அடுத்தது தீமையாகிறது போலும். தூய்மையான தீமை நேராக எதிரில் வருகிறது.
     
  97. உணர்வின் அறியாமையைக் கடக்க, அடுத்த நிலையில் தீமையையும், தொடர்ந்து தீய சக்தியையும் எதிர்கொள்ள வேண்டும்.
     
  98. சங்கில் தொடர்கிறது. ஆனால் அதன் போக்கு தலைகீழே மாறுகிறது. இது இரண்டாம் சங்கிலி. சொந்த உணர்வில் தீய சக்திகள் வருகின்றன. அதை, திறம் மிக்க சுயநலம் தீமையை எழுப்புகிறது எனலாம்.
     
  99. அடுத்த, லேசாகத் தன்னையறியும் சிறு நல்லெண்ணம் காத்துள்ளது.
     
  100. முடிவில் நல்லெண்ணம் வரவேற்கிறது.

*****



book | by Dr. Radut