Skip to Content

08 . பாகம் - 8

  1. யோகியாவதும், கிருகஸ்தனாவதும் பலராலும் முடியக்கூடியதாகும். குடும்ப வாழ்விலிருந்துகொண்டு, யோகம் செய்வது சிரமம். யோகி, ஞானத்தை மனத்தின் மூலம் தேடுகிறான் - அல்லது இதயத்தின் மூலம் பக்தியைத் தேடுகிறான். குடும்பஸ்தன் ஆசையின் பிடியில் வாழ்கிறான். இவற்றைச் சேர்ப்பதற்கு, வாழ்வு மையம் மனத்தையும் பிராணனையும் விட்டகன்று, சைத்திய புருஷனை வந்தடைய வேண்டும்.
     
  2. ஸ்ரீ அரவிந்தர் நெப்போலியனாக இருந்தார், அன்னை எலிசபெத் மகாராணியாக இருந்தார் என்பதை அன்னை விவரிக்கின்றார். அவர்கள் தாங்கி வரும் சக்தி நெப்போலியனில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கிருந்தது, வாழ்நாள் முழுவதும் அல்ல என்கிறார் அன்னை. காதரீன், லூயி, எலிசபெத் இவர்களில் ஒரு குறுகிய காலமே அன்னை சக்தியிருந்தது. சக்தி தன் காரியத்திற்கு உரியவரைத் தேர்ந்தெடுத்து, அவர் மூலம் வந்த வேலையைப் பூர்த்தி செய்து விலகுகிறது. அந்தச் சக்தியுள்ள காலம், அவர்கள் வாழ்வில் பொற்காலமாகும்.

    கருவியின் வாழ்வில் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்படுவதை சமூகக் கண்ணோட்டத்தினாலோ, மனத்தின் பார்வையாலோ நாம் கணிக்க முடியாது. பொதுவாக, அவற்றிற்கு எதிராகவும் இருக்கும். பரிணாம வளர்ச்சிக்குதவும் காரியங்கள் அவை. (E.g. Louise of France played such a role in the life of Louis XIV).
     
  3. நம் ஜீவனின் பகுதிகள் வளரும் பொழுது அடியிலிருந்து ஆரம்பித்து, நுனிவரை செல்கின்றன. ஒரு பகுதியின் வளர்ச்சி முடிந்த பிறகே அதைத் தாண்ட முடியும். மனம், உடலின் உதவியால் வளர்ந்து அது தீர்ந்த பின், உணர்வால் வளர்கிறது.
     
  4. ஆன்மா, உடல், உணர்வு, மனத்தின் உதவியால் வளர்ந்து அவை தீர்ந்த பின், சொந்தமாக வளர ஆரம்பிக்கின்றது. இதை, பகவான், "ஆன்மா தன் பிரச்சினைகளை மறப்பது'' என வர்ணிக்கின்றார்.
     
  5. ஒவ்வொரு பகுதியின் வளர்ச்சிக்கும் இரு பிரிவுகளுண்டு. ஒன்று ஜீவாத்மாவின் வளர்ச்சி, அடுத்தது பிரபஞ்சத்தைச் சேர்ந்தது.
     
  6. ஆன்மா (soul) வளரும்பொழுது (Soul) பரமாத்மாவின் துணையை நாடுகிறது. இதிலும் இரு பகுதிகளுண்டு (immutable and involved souls) அழியாத ஆத்மா, வளரும் ஆத்மா என அவை இரண்டாக இருக்கின்றன.
     
  7. அகம் புறத்தை நிர்ணயிப்பதை ஆன்மா தன் பிரச்சினைகளை மறப்பதென்கிறோம். ஆன்மா பிரச்சினையால் பீடிக்கப்பட்டது, புறம் அகத்தை ஆளும் நிலையாகும்.
     
  8. உலகத்தின் செயலை நிர்ணயிக்கும் அமைப்பொன்றுண்டு (physical organisation). மூன்று துப்பாக்கி வீரர்கள் போன்றவர்கள் (The Three Musketeers) இதற்கடுத்த நிலையிலுள்ள அமைப்பை (life knowledge, emotional organisation) அறிவார்கள்.
     
  9. அடுத்த உணர்வு நிலையை அறிபவர்களுக்கு, வாழ்வு எப்பொழுதும் முழுவதுமாக ஒத்துழைத்து, வெற்றியை மட்டும் தரும்.
     
  10. பிறப்பில் தாயை விட்டுப் பிரிக்கும் இனம் போலவோ, செடியைப் போலவோ மனிதன் வளருவதில்லை. உணர்வால் குடும்பமும், வாழ்வால் சமூகமும், அதன் ஸ்தாபனங்களும், மனிதனுக்கு உயிரையும், உதவியையும் அளிக்கின்றன.

    ஏதோ ஒரு சமயம் ஒரு சமூகத்தினருக்கு அல்லது ஒரு ஊரிலிருப்பவருக்கு உலகிலில்லாத ஆதரவு வரும். தனி மனிதரோ, ஸ்தாபனமோ முன்வந்து உதவுவதுண்டு.

    தம்மை நாடி வருபவர்க்கு, அன்னை இந்த விசேஷ ஸ்தாபனங்கள் போல் உதவுகிறார். தாமே அவர்களுடைய இஷ்ட தேவதையாகி, அன்பையும், ஆதரவையும் வழங்குகிறார்.
     
  11. அகந்தையின் ஆயுள் முடிந்துவிட்டது. அது கரைய வேண்டும். அகந்தையின் வளர்ந்த நிலையான குடும்பம் கரைவதும் அவசியமே ஆகும்.
     
  12. தேசத்தின் ஆத்மா வளர்ந்து பிரபஞ்சத்தின் ஆத்மாவாக இருக்கும் நிலையில் குடும்பம் அழிய வேண்டும் என்பது முரணானது. குடும்பம் கரைந்தாலன்றி அகந்தை கரையாது என்பதே உண்மை. முரணாகத் தெரிந்தாலும், முரண்பாடில்லை.
     
  13. சரணாகதியை அளவுக்கு மீறிச் செய்ய முடியாது. ஏனெனில் உள்ளிருந்து எழும் சரணாகதியின் வீச்சு வளர்ந்தபடியிருக்கும். முயற்சி முடியும் பொழுது அதுவும் முடிகிறது.
     
  14. ஒரு சந்தர்ப்பப்படி, அடுத்த சந்தர்ப்பத்தை புரிந்துகொள்ள முயன்றால் மடமை, அறியாமை, அறிவீனம் ஆகியவை எழுகின்றன. முதியவர்கள் இளைஞர்களைத் தங்கள் இளமைப் பருவத்தைக் கொண்டு புரிந்து கொள்ள முயல்கின்றனர்.
     
  15. சமூகப் பழக்கங்களை மாற்றுவது போல், மனம் ஏற்ற பழக்கங்களை மாற்ற முடியாது. உடையை மாற்றுவது போல், நல்லது-கெட்டது, உயர்வு-தாழ்வு என்பவற்றை மாற்ற முடியாது.
     
  16. இழந்த உரிமை, உடமை, சந்தோஷத்தை அன்னை மீட்டுத் தருகிறார்கள். உடைந்த கண்ணாடி பாட்டிலை உருக்கி மீண்டும் பாட்டிலாக வார்க்க முடியுமென்றாலும், நடைமுறையில் அது சாத்தியம் இல்லை. இழந்த உரிமையைப் பெறச் சட்டமும், நாட்டின் வழக்கும் மாற வேண்டும். கண்ணாடி மீண்டும் உருகி அதன் முதல் நிலையை அடைய வேண்டும் என்பது போல, உணர்ச்சி மீண்டும் அதன் ஆரம்ப நிலையை அடைந்தால்தான் அதற்கெதிரானதாக உருமாற்றமடைய முடியும்.
     
  17. சர்வ ஆரம்பப் பரித்தியாகி எனில் எவ்வளவு சிறியதானாலும் அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடாது. (E.g.) ஓர் அபிப்பிராயத்தைச் சொல்வது, அல்லது நோக்கத்தை வெளியிடுவது, சௌகரியத்திற்காக ஒரு பழக்கப்பட்ட காரியத்தைச் செய்வதும் அது போலாகும். அடக்க முடியாத ஆசையை அடக்க முயல்வது ஆரம்பமாகும்.
     
  18. பிறருக்கு உபதேசம் செய்தபின் ஒவ்வொரு முறையும், அது நமக்கே எந்த அளவுக்குப் பயன்படும் என்று கருதுவது நல்லது. இதைப் பின்பற்றினால் அளவுகடந்து முன்னேறலாம்.
     
  19. வாய் விட்டுப் பேசினால் புரியக்கூடியதுண்டு. மௌனமாகப் படிப்பதால் புரியக்கூடிய உயர்ந்த கருத்துண்டு. முனிவர் மனம், எண்ணத்தின் உதவி இல்லாமல் அறியும். ரிஷியின் மனம், காட்சியாகவே காணும். புரிவது என்பதே அங்கில்லை. யோகிக்கு ஜோதியும் தேவையில்லை, தானே புரியும். சத்தியஜீவியத்திற்கு ஞானமே தேவையில்லை.
     
  20. ஸ்ரீ அரவிந்தர் எழுதியவை சத்தியஜீவிய ஞானத்தைத் தருகின்றன. அதைப் பெற, மனம் சிந்தனையை நிறுத்த வேண்டும், காட்சிகளைக் காணும் திறனையும் இழக்க வேண்டும். எண்ணம், காட்சி உதவியின்றி நேரடியாக ஞானத்தைப் பெற முடிய வேண்டும். அகத்திலுள்ளதே புறத்திலிருந்து வருகிறது எனத் தெரியும் நேரம், அந்த ஞானம் பூர்த்தி பெறுகிறது.
     
  21. பிரபஞ்சம் மனிதனில் தன்னை ஒருநிலைப்படுத்தி, மனோமய புருஷனை உற்பத்தி செய்தது. மனோமய புருஷன் பிரகிருதியில் வெளிப்பட்டு, சைத்திய புருஷனாகி, பிரபஞ்சம் முழுவதும் வியாபிப்பது மனிதன் தன்னைப் பிரபஞ்சத்தில் பூர்த்தி செய்துகொள்வதாகும். பிரபஞ்சம், பிரகிருதி, சைத்திய புருஷன் இயற்கையின் ஆன்மா.
     
  22. மனிதன் முன்னேற, தானுள்ள நிலையில் தன் அனுபவத்தைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். அதாவது அந்நிலைக்குரிய அறிவு, நுகர்வு, பலனிருக்க வேண்டும். தானுள்ள நிலையில் பூர்த்தியாகாத மனிதன் முன்னேற முடியாது. ஏதாவது ஒரு பலத்தால் முன்னேறுவதுண்டு. முன்நிலையில் ஓர் அம்சம் குறைவாக இருக்கும் வரை, புது நிலையில் வேலை பூர்த்தியாகாது.

    ஆசையைப் பூர்த்தி செய்ய விழைபவன், அதைப் பூர்த்தி செய்யாமல் மேலே போக முடியாது. அனுபவிப்பது அவசியம். ஆனால் அது முறையானதாக மட்டும் இருக்க வேண்டும். ஆசை பூர்த்தியாகாமல் அடுத்த நிலையில்லை.
     
  23. புறக்கணிக்க முடியாத ஞானம் என நான் இன்று அறிந்தது, நான் 30 வருஷங்களுக்கு முன் எண்ணங்களாக அறிந்தது. மனம் அன்று புரிந்து கொண்டதை, உணர்வு ஏற்க 30 வருஷமாயிற்று.
     
  24. ஒரு நிலையில் அன்னையை ஏற்றுக்கொண்டால் அந்நிலையிலுள்ள அறிவு, பூரணம் பெற்று ஞானமாகும். அடுத்த நிலைகளில் (உயர்ந்தது, அல்லது தாழ்ந்தது) உனக்குள்ள தெளிவுபடுத்தும். அறிவையும் இந்நிலையில்
     
  25. பிறர் சுயநலத்தை வளர்ப்பது பலஹீனம், பாவம். அதைச் செய்தால் பிறகு உன் சுயநலத்தை அழிக்க அது உதவும். முடிவாக உலகத்தின் சுயநலத்தை அழிக்கவும் உதவும். அகந்தை உள்ளவரை இந்தச் சட்டங்கள் செல்லும். அகந்தை அழிந்தபின் சுயநலம் என்பதும் பரநலம் என்பதும் மற்ற குணங்களைப் போன்று ஒரு குணமாகும்.
     
  26. சிந்தனை எழுமிடத்தைக் கண்டு அதைச் சரண் செய்தால், எண்ணம் அழியும். எண்ணத்தின் அமைப்பைக் (structure) கண்டு, அதிலிருந்து மன எழுச்சியின் சக்தியை அகற்றினால், அமைப்பு கரையும். அடுத்த நிலையில் அதே போல் மனம் கரையும்.
     
  27. மனம் விழிப்பானதென்பதால் இதைச் செய்வது முடியும். உணர்வும், உடலும் விழிப்பற்றவை என்பதால் அங்கு இது போல் எளிமையாகச் செயல்பட முடியாது.
     
  28. இது போன்ற தவ முயற்சியை மேற்கொள்ளும் முன், அந்நிலைக்குரிய அகந்தையை அழிப்பது அவசியம்.
     
  29. நாம் கண்மூடியாக விழிப்பற்ற நிலையில் இருந்தாலும் ஜீவியம் வளர்ந்தபடியிருக்கிறது. நாம் அறியாத நிலையிலும் பின்னணியில் ஆன்மீக அனுபவங்கள் நிகழும். மேல்மனம் அறியாத நிலையில் சைத்திய புருஷன் வளரும், அனுபவம் சேரும், ஜீவியம் மலரும். அதற்கெல்லாம் ஒரு வரையறை உண்டு. இதுவே பொதுவான அல்லது முடிவான சட்டமாகாது.
     
  30. சமூக மாறுதல், மனநிலை மாறுதல், ஜீவியம் மாறுதல் ஆகியவற்றை மேல்மனம் ஏற்றுக்கொள்ள விரும்பினால் உடனே ஏற்றுக்கொள்ளும். ஆழ்ந்த மனம் அதுபோல் எளிதில் ஏற்றுக்கொள்ளாது.
     
  31. சமூகப் பழக்கங்கள் ஒரே தலைமுறையில் மாறும். சமூகத்தின் நம்பிக்கைகள் மாற ஒரு நூற்றாண்டாகும். சமூகத்தின் அமைப்பு மாற அதன் ஆரம்ப நிலை அமைப்புகள் அழிந்து புதுப்பிக்கப்பட வேண்டும். குடும்பம், இன்று அது போன்ற மாற்றத்தைப் பெற்று வருகிறது.
     
  32. கடந்த 5000 ஆண்டுகளில் மனிதன் தன் மன நம்பிக்கைகளை (psychological change) மேல்மனத்தில் மாற்றியுள்ளான்.
     
  33. மனிதன் பிறந்த பொழுது கடைசி முறையாக ஜீவியம் மாறியது.
     
  34. உடல் மனத்தை நிர்ணயிப்பது சிறிய உண்மை. மனம் உடலை நிர்ணயிப்பது பெரிய உண்மை.
     
  35. உடல் அசைவுகளே நாம் என இருந்தால், உடல், மனத்தைக் கட்டுப்படுத்தும். மனத்தின் எண்ணங்களே நாமாவோம் என்றால், மனம் உடலை நிர்ணயிக்கும்.
     
  36. சிந்தனை, மூளையின் செயல். சிந்தனைக்குரியவன் (மூளையின்) ஜடத்தின் செயலால் நிர்ணயிக்கப்படுபவன்.
     
  37. மனத்தின் தலையாய செயல், சிந்தனையில்லை, புரிந்துகொள்வது. சிந்தனையின்றிப் புரிந்தால் மனம் உடலை நிர்ணயிக்கும்.
     
  38. சகுனம் போன்ற பல்வேறு அறிகுறிகள் ஒரு திட்டத்திலெழும். அவை வெற்றிக்கு அளவுகோல். அறிகுறிகள் வெற்றியாகப் பூர்த்தியானால், திட்டம் வெற்றியாகும். இது சட்டம், விலக்குண்டு.
     
  39. விலக்கான சில இடங்களில் அறிகுறிகள் தோற்பது திட்டத்தின் வெற்றியைக் குறிக்கும்.
     
  40. சட்டத்திற்கும், விலக்குக்கும் இவை புறம்பானவை. அன்னை செயல்படும் இடங்கள் பொதுவாக அப்படிப்பட்டவை. இத்திட்டங்கள் அறிகுறிகள் வென்றாலும், தோற்றாலும் வெற்றி பெறும். மேலும் ஒரு நிலையுண்டு. திட்டமே தோற்றாலும் "வெற்றி" நிச்சயமாக உண்டு.
     
  41. ஞானம் முழுமை பெற்று, கூர்மையானால், செயலை நிர்ணயிப்பது எது எனத் தெரியும். ஹாம்லெட், சிம்ப்போசியம் எப்படி எழுந்தன எனத் தெரிந்தால் ஞானம் கூர்மை பெறும்.
     
  42. பரம்பொருளே (absolute) நிர்ணயிக்கிறான் என்பதால், ஹாம்லெட் எழுதியபோது பரம்பொருளின் நிலை எது என நாம் அறிய வேண்டும்.
     
  43. உடலுணர்வே நிர்ணயித்தால் நாம் ஜடத்தில் உடலில் வாழ்கிறோம்.

    விருப்பு, வெறுப்புகள் உணர்வு நிலைக்குரியன.

    நல்லது, கெட்டது மனத்திற்குரியன.

    தீமையற்ற நல்லதை மனம் அறிவது சத்தியஜீவியம்.
     
  44. மனம் தன்னைக் கடந்து செல்ல, சத்தியம், நன்மை, அழகு, அனந்தம் ஆகியவற்றை நாடி அங்கு நிலைக்க வேண்டும்.
     
  45. உடலாலானவன், உணர்வாலானவன் மனமுடையவனல்லன். அவனால் மனத்தைப் பயன்படுத்த முடியாது. மனத்தால் சிந்திக்க அவன் முதலில் மனத்தைப் பெற வேண்டும். அதே போல் நன்மையைக் (good) கருதும் நிலை அவனுள் இல்லை. அதைச் செய்ய, சத்தியஜீவியத்தைப் பெற வேண்டும். ஜீவனின் பகுதிகளான ஒரு புருஷனை (உ.ம். மனோமய புருஷன்) நாடுவதால் இதைப் பெற முடியாது. சைத்திய புருஷனை நாடினால் இது முடியும். பகவான் பத்து வருஷமாகத் தேடிய சூட்சும இரகஸ்யம் இது.
     
  46. ‘இறைவன்' என்ற புதிருக்கு, அவனே விடை. வாழ்வில் இறைவன், புதிர். அவனை அடைந்தால் விடை எழும்.
     
  47. இதையே மற்ற எதற்கும் சொல்லலாம். "அன்பின் பிரச்சினைகட்கு அன்பே விடை'' எனலாம். தன் குறையால் அன்பு, பிரச்சினையை எழுப்புகிறது. குறையை நிவர்த்தி செய்தால், பிரச்சினை மறையும்.
     
  48. பரம்பொருள் நம்மைத் தீண்டாமல் நமக்குப் பரம்பொருள் சித்திக்காது. அவனால் முடியாததைச் சாதிக்க, சமூகம் உதவாமல் மனிதனால் சாதிக்க முடியாது. தனி மனிதனுடைய ஆர்வமே வளர்ந்து சமூகத்தின் மூலம் அவனிடம் மீண்டும் வருகிறது. மனிதனே ஆரம்பம்.
     
  49. அவதாரம், கண்டத்தில் அகண்டம்.
     
  50. மனிதன் விழிப்புற்று இருப்பதால், அவன் முன்னேற்றமும் அப்படியே இருக்கிறது. உள்மனம் பெறும் ஆன்மீக அனுபவங்களை மனிதன் அறியாமலிருப்பதுண்டு.
     
  51. நல்லவனாக இருப்பது அகந்தையற்ற நிலை. நல்லவன் எனப் பெயரெடுக்க விரும்புவது அகந்தை.
     
  52. நிகழ்கால நினைவு சந்தோஷத்தை அளிக்கும். கடந்த காலத்தையோ, எதிர்காலத்தையோ நினைப்பது ஏமாற்றம் தரும். ஏமாற்றமெல்லாம் சந்தோஷத்தை உற்பத்தி செய்பவை. கட்டுப்பாட்டிற்குரிய கல்லூரிப் படிப்பு, பட்டத்தில் முடியும். ஆஸ்பத்திரி வாழ்வு, உடல் நலத்தைத் தரும். சிறந்த எதிர்காலத்திற்காக அவற்றைப் பொறுத்துக்கொள்ளலாம். அதற்கு அடுத்த நிலையுண்டு. படிப்பில் ஊன்றி நிலைத்து அளவுகடந்த சந்தோஷத்தைக் காணலாம். ஆபரேஷனுக்குப் பின் படும் வேதனையில் அதே சந்தோஷத்தைக் காண்பது முடியாது. எனினும் அங்கும் அஃது உண்டு. துரோகத்தால் வதையும் மனிதன், துரோகியின் கண்ணோட்டத்தில் பிரச்சினையை அறிய முயன்றால், துரோகத்திலும், துரோக மனப்பான்மையிலும் அதே பெருஞ்சந்தோஷத்தைக் காண முடியும்.
     
  53. இறைவனுக்குப் பிரச்சினையில்லை. சிருஷ்டி மலர்வதை அனுபவிக்கும் இறைவன், அதைத் துரிதப்படுத்தி அனுபவிக்கிறான்.
     
  54. புரியாதவரையில் மனிதனுக்குப் பிரச்சினையுண்டு. புரிந்தால் பிரச்சினையிருப்பதில்லை. புரியாதவரையில் பிரச்சினையாக இருந்தது, புரிந்தவுடன் பிரச்சினையாக இருப்பதில்லை. பார்வை மாறினால் பிரச்சினை கரைகிறது.
     
  55. மாறிய பார்வை, மனத்தின் பிரச்சினைகளைக் கரைக்கிறது.

    உணர்வில் மாறிய நோக்கம் உள்ளத்தைப் பூரிக்கச் செய்யும்.

    உடல் உணர்வு (physical sensitivities) மாறினால் உள்ளும் புறமும் திருவுருமாற்றம் உண்டு.
     
  56. புறத்தே ஏற்படக்கூடிய இத்திருவுருமாற்றத்தை மனம் அறிந்தால் பிரச்சினை, வாய்ப்பாக மாறும்.
     
  57. புற நிகழ்ச்சியால் உடலைத் தீண்டும் இவ்வனுபவம் கழுத்தை நெறிக்கும் கைகளை இறைவன் ஸ்பர்சமாக அறியும்.
     
  58. ஒன்றை நாடினாலும், விழைந்தாலும் கழுத்தை நெறிக்கும் கைகளாகக் கடவுள் உன்னைத் தீண்டுகிறார்.
     
  59. நாடுவதை நிறுத்தி, பார்வை உள்ளே சென்றால், வாழ்வு அற்புத உணர்வாக அணைக்கும்.
     
  60. உள்ளே போவதைவிட உள்ளே அன்னையைத் தேடுவது நன்று. ஆன்மா அன்னையை உள்ளே தேடுவது ஆனந்தம் (bliss). அறிவாலும் செயலாலும் அன்னையை அகத்தில் தேடுவது சிருஷ்டியின் ஆனந்தம் ஆகும் (delight).
     
  61. இது ஓர் முயற்சி. முடிவில் சிருஷ்டி ஆனந்தமாகும் (delight). இடையில் ஆனந்தம் ஏற்படும்.
     
  62. இன்று நாம் பிரகிருதியால் சூழப்பட்ட அகந்தையர்.அகந்தை கரைந்த பின் நாம் பரிணாம வளர்ச்சிக்குரிய சைத்திய புருஷனாவோம். பிரபஞ்சத்தில் ஆன்மாவின் பரிணாம வளர்ச்சிக்குரிய மையம் சைத்திய புருஷன். அதனால் பிரகிருதியிலுள்ள அன்னை, நம் சைத்திய புருஷனை நோக்கி வருவார்கள். மனமும் ஜீவனும் தன்னிறைவால் நிரம்புவது அன்னை நம்மை நோக்கி வருவதன் அறிகுறி.
     
  63. சாட்சி புருஷனான மனோமய புருஷன் சாட்சி நிலையை விட்டு ஈஸ்வரனாக மாற ஆரம்பித்து, பிரபஞ்சமெங்கும் பரவி, தன்னை, பிரபஞ்சத்தின் ஆத்மாவாக்குவது அதன் முடிவான கட்டம்.
     
  64. மனம் அனந்தனை நினைக்கின்றது.உணர்வு அனந்தனை சக்தியாக உணர்ந்தாலும், உடல் அனந்தனை உலகெங்கும் வியாபிக்கும் பொருளாக (substance) அறிந்தாலும், பரம்பொருளைச் சிருஷ்டியாகவும், சிருஷ்டியைப் பரம்பொருளாகவும் அறிய உதவும்.
     
  65. அக்ஷய பாத்திரத்தில் அனந்தன் ஜடமாக வெளிப்படுகிறான்.எதிரியின் பலத்தில் பாதி தனக்கு வேண்டும் என்று கேட்டவனுக்குக் கொடுக்கும் வரம், உணர்வில் அனந்தமாகும்.
     
  66. Life Divine நூலில் மேலே போகப் போக கருத்தின் கம்பீரத்தை, பகவான் உயர்த்துகிறார். ஆரம்பத்தில் பகுத்தறிவுக்கு விளக்கம் அளிக்கிறார். அடுத்தாற்போல் அறிவு ஞானமாவதைக் காட்டுகிறார். பின் பகுதியில் பரம்பொருளை விளக்குகிறார். அறிவு பரம்பொருளை எட்ட முடியாது. போகப் போக நூல், கருத்தின் நிலையை உயர்த்துவதால், வாசகரும் தம் அறிவு நிலையை உயர்த்த வேண்டும். இல்லை எனில் நூல் விளங்காது.
     
  67. கடைசி அத்தியாயங்களைப் புரிந்து கொள்ளும் திறனையும் நூலின் பல பகுதிகளில் பகவான் கொஞ்சம் கொஞ்சமாக அளிக்கின்றார்.
     
  68. பகுத்தறிவிலிருந்து பரம்பொருளுக்கும், அதிலிருந்து ஆன்மீக மனம் பரம்பொருளை அறியும் நிலைக்கும் நம்மை, பகவான் அழைத்துச் செல்கிறார்.
     
  69. இதைச் சாதிக்க அவர் கையாளும் முறைகள் மூன்று:

    1. வாசகருக்குத் தேவையான புது அறிவுத் திறனை அளிக்கிறார்.
       
    2. மொழிக்கு புதுத் திறனை அளிக்கும் வகையில் முரணான சொற்றொடர்கள்,

      பரந்த கருத்தைத் தழுவும் சொற்கள் ஆகியவற்றை ஏற்படுத்துகிறார்.

      மனம், ஜீவியத்தை மாற்றிப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்.
       
    3. யோக மரபுக்குப் புதிய (சமஸ்கிருதத்திலும் சொல்ல முடியாத) உயர்ந்த ஆன்மீக உண்மைகளை அறிமுகப்படுத்துகிறார்.

     
  70. ஆன்மீகத்தை, அறிவுக்கு பகவான் விளக்கும் வகையில் எழுதினார்.

    மொழியின், உரை நடையின், தரத்தையே இதற்காக உயர்த்தினார்.

    எழுத்தின் பாணியின் தரத்தை உயர்த்தினார்.
     
  71. கணிதத்தில் (infinity) அனந்தத்தை அறிவது (intellect) அறிவில்லை. பரம்பொருள் சிந்தனைக்குரிய மனத்தைத் (thinking mind) தொடுவதால் ஏற்படுவது அது. அறிவின் பிரகாசம் Life Divineஐப் புரிந்துகொள்ளாது. சிந்திக்கும் மனம் அளவுகடந்து (infinite expansion) விசாலமடைந்தால் Life Divine புரியும்.
     
  72. சோம்பேறி, சுறுசுறுப்பானவன், பூரணயோகி ஆகியவர்கள் பல நிலைகளில் உடல் திருவுருமாற்றத்தைப் பெறும் தெய்வங்கள். சிருஷ்டியின் முடிவான நிலைக்குரியது ஒன்று. பரிணாம வளர்ச்சிக்குரிய உணர்வு அடுத்தது. பரிணாமத்தில் வளரும் தெய்வம், யோகி.
     
  73. வேதனையால் துரோகத்தின் மூலம் விஸ்வாசம் எழுகிறது (பத்ரகிரியின் மனைவி). இந்திரனை விரும்பிய அகல்யா கற்புக்கரசியாக, கல்லாக மாறினாள். ஆயிரமாண்டு அனுபவித்த பின் 5 கணவரைப் பெற்று திரௌபதி பத்தினியானாள். தாரை சந்திரனுக்குக் குழந்தை பெற்றாள்.
     
  74. நோயாலும், வேதனையாலும் உடல் திருவுருமாற்றமடைகிறது.
     
  75. தாங்க முடியாத, தணியாத பூரிப்பு (intolerable ecstasy) மனிதனுக்கு வேதனையாக எழுகிறது.
     
  76. கொள்ளை, சூறை, போர் மூலம் நாகரீகம் எழுகிறது.
     
  77. மனம் தெளிவு பெறும் முன் பைத்தியம் போன்ற மனநிலை வரும்.
     
  78. பைத்தியம், குழப்பம், துரோகம், வேதனை, கொடுமை ஆகியவை மனம், உணர்வு, உடல் திருவுருமாற்றமடைய தவிர்க்க முடியாத பாதைகள்.
     
  79. தனக்குத் துரோகமிழைக்கும் சக்திகளை அழைத்து, வேதனை தரும் வாழ்வை ஏற்படுத்தி, அதையே எதிர்கால உலகின் கருவாக அன்னை நியமித்தார்.
     
  80. ஆஸ்ரமத்தை "வேறு காரணத்திற்காக" ஏற்படுத்தினேன் என்று பகவான் கூறும் வேறு காரணம் இதுவே.
     
  81. பெருங்குழப்பம், செய்வதறியாது திகைத்த மனநிலை, நம்பிக்கைத் துரோகம், தாள முடியாத மன வேதனை, நோய், மிருகத்தனமான கொடுமை ஆகியவை தவிர்க்க முடியாத திருவுருமாற்றத்தின் தேவைகளாகும்.
     
  82. Life Divineஐப் படிக்கும் பொழுது "விசாரத்தை" பல்வேறு கோணங்களில் மேற்கொள்ளலாம்.

    (உ.ம்.) "ஆதி மனிதனின் ஆர்வமே இன்றும் நம் அபிலாஷையாக இருக்கிறது".
     
  83. பல தத்துவங்களாலான ஸ்தாபனம், ஒரு தத்துவத்தால் செயல்பட்டால், மற்றவை, பின் பரிணாம வளர்ச்சியாக எழக்கூடும்.
     
  84. எண்ணத்திலிருந்து ஜீவியத்திற்குப் போனால், அவிழாத சிக்கல்கள் அவிழும்.
     
  85. அரை குறையாக விட்டவற்றை மீண்டும் அதிதீவிரத்தோடு பின்பற்ற முன்வருவது மனதின் சுபாவம்.
     
  86. உள்மனதின் ஆழத்தைத் தொடுவதே, பகவான் தேடிய சூட்சும இரகஸ்யம்.
     
  87. புலன்களிலிருந்து விடுபட்ட அறிவு ஞானமாகிறது.
     
  88. ஜடத்தையும் சச்சிதானந்தத்தையும் இணைப்பது மனிதன் கடமை.
     
  89. சிருஷ்டிக்கு முன்னுள்ள ஆனந்தத்தை, சிருஷ்டியின் ஜடப் பொருளில் வெளியிட சச்சிதானந்தம் முயல்கிறது.
     
  90. பகுதி, முழுமையைவிடப் பெரியது. முழுமையிலிருந்து முழுமையை எடுத்தால் மிஞ்சுவது முழுமை என்பது ஜடத்திலும் பொருந்தும்.
     
  91. அறியாமை, அறிவைவிடப் பெரியது.
     
  92. காலத்தைக் கடந்த அனந்தன் கருதுவதை எல்லாம், முடிவில்லாத காலம் சிருஷ்டிக்கிறது.
     
  93. ஜடத்திலிருந்து ஜீவியம் எழுகிறது.
     
  94. சத்தியம் அசத்திலுள்ளது.
     
  95. ஜீவாத்மா பிரபஞ்சத்தின் ஆத்மாவின் பகுதி. அது பரமாத்மாவின் பகுதி.
     
  96. சச்சிதானந்தத்தின் பிரகிருதி, சத்தியஜீவியம்.
     
  97. பரம்பொருளும் சிருஷ்டியும் ஒன்றில் மற்றதாக உறைகின்றன.
     
  98. ஜீவியம் வளர்வதானால் உள்மனத்திலே வளர வேண்டும்.
     
  99. ஆத்மா, ஜடத்தை ஆட்சி செய்கிறது.
     
  100. மேற்சொன்ன கண்ணோட்டத்தில் சொந்த வாழ்வைப் பரிசீலனை செய்தல் நன்று.

*****



book | by Dr. Radut